top of page

TIK-34

இதயம்-34

மேசையின் மீது சாய்ந்துகொண்டு ராஜவேலுவின் மருத்துவ அறிக்கைகள் அடங்கிய கோப்பை ஆராய்ந்தவாறு, “ஆதின்னா… ஐ மீன் உன்னோட ராஜா அண்ணான்னா, உனக்கு ரொம்ப பிடிக்கும் இல்ல அம்மு” அலட்டிக்கொள்ளாமல் கேட்டான் வினோத். “ஏன் அண்ணா அப்படி கேக்கறீங்க? உங்களுக்குத்தான் தெரியுமே ராஜா அண்ணாதான் என்னோட உயிர்!” என அம்மு சொல்லவும், “இப்ப உன் அண்ணன் என்னோட கண்ட்ரோல்லதான் இருக்கான் தெரியுமா? நான் நினைச்சா அவனை என்ன வேணாலும் செய்யமுடியும்?” மிரட்டலாக வினோத் சொல்ல, அதிர்ந்தாள் அம்மு, “என்ன அண்ணாவால நடக்கமுடியாதுன்னு இப்படி பேசறீங்களா வினோத் அண்ணா! அவங்கள பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும். உட்கார்ந்த இடத்துல இருந்தே என்ன வேணாலும் செய்வாங்க! என்னை இப்படி மிரட்டற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க. ஜாக்கிரதை!” எனப் பதிலுக்கு அவளும் மிரட்ட, நக்கலாக வந்தன அவனது வார்த்தைகள், “எப்படி... எதாவது செய்யணும்னா அதுக்கு கொஞ்சமாவது கான்ஷியஸ்ல இருக்கணும் இல்ல? அல்ரெடி அவனுக்கு ஹெவி டோஸேஜ் மெடிசின் கொடுத்து மயக்கத்துலதான் வச்சிருக்கேன்” என்றவன், அவனது அலைப்பேசியை ஸ்பீக்கரில் போட்டு யாரையோ அழைக்க, எதிர் முனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும், “அய்யா நான் டாக்டர் வினோத்” எனக்கூற, “சொல்லுங்க டாக்டர் தம்பி ராஜவேலுவுக்கு மாற்று இதயம் கிடைச்சிடுச்சா? மிரட்டலாக வந்தது தங்கவேலுவின் குரல். “அதுக்குதான் அலைஞ்சிட்டு இருக்கேன் அய்யா. எப்படியும் ஏற்பாடு செஞ்சுருவேன். ஆனா அதுக்கு நீங்க ஒண்ணு செய்யணுமே!” வினோத் கேட்கவும், “என்ன செய்யணும் சொல்லுங்க” என அவர் சொல்ல, “இந்த ஹாஸ்பிடல் மொத்தம் என் கண்ட்ரோல்ல இருக்குறமாதிரி செய்யணும். அப்பதான் நான் உங்க மகனை காப்பாத்த முடியும்!” என வினோத் சொல்லவும், ஒரு நீண்ட அமைதிக்குப் பிறகு, “செய்யலாம் ஒரு பிரச்சினையும் இல்ல. ஆனா என் சின்ன மகன் உங்க கூடவே இருப்பான்” என்று கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தார் தங்கவேலு. அருகில் நின்றிருந்த அம்முவை ஒரு ஏளனப் பார்வை பார்த்தவன். “நீ பயாலஜி ஸ்டூடன்ட்தான. குவாட்ரிப்லேஜிக்னா தெரியும் இல்ல? முதுகு தண்டுவடத்துல கரெக்ட்டா சொல்லனும்னா... சி ஒன் ல இருந்து சி ஃபோர் குள்ள டேமேஜ் ஆனால், கழுத்துக்கு கீழ உணர்ச்சியே இல்லாமல் போய் மொத்தமா பராலைஸ் ஆயிடுவாங்க தெரியுமா? அந்த நிலைமையில உங்க அண்ணனை நீ பாக்கணுமா? நீயே முடிவு பண்ணிக்கோ” வினோத்தின் கேள்வியில் உயிர்வரை அடிவாங்கினாள் அம்மு. “ச்ச நீயெல்லாம் ஒரு மனுஷனா? அதுவும் டாக்டரா?! கிட்டத்தட்ட நாலு வருஷமா என் மனசை உறுத்திட்டே இருந்த உண்மையை, உன்னை நம்பி வந்து சொன்னதுக்கு என் புத்திய செருப்பால அடிச்சிக்கணும். அநியாயமா செத்துப்போன அந்தச் செல்வி பொண்ணுக்கு என்னால நியாயமே செய்யமுடியதா?” அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தவாறு முழங்கால்களை மடக்கி அதில் முகத்தைப் புதைத்துக்கொண்டு இயலாமையினால் அழத்தொடங்கினாள் அம்மு. வினோத்தின் அலைப்பேசி ஒலித்தது. அதில் உடனடியாக ராஜவேலுவிற்கு மாற்று இதயம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்ற தகவல் வரவும் சரியாக அங்கே வந்து சேர்ந்தான் ரத்தினம். “என்ன டாக்டர்... அப்பா என்னடான்னா உன்னைப் பெரிய இவன் மாதிரி நெனச்சு எல்லாம் செஞ்சிட்டு இருக்காரு. நீ இங்க வெட்டியா நின்னுட்டு இருக்கியா” என எகிறத் தொடங்கவும், “ப்சு சாதாரண பிளட் க்ரூப்காரனுக்கே இங்க ஆர்கன்ஸ் ஈஸியா கிடைக்காது. உன் அண்ணன் வேற ஏபீ நெகடிவ் க்ரூப். உன் அவசரத்துக்கெல்லாம் வேலை ஆகுமா என்ன?” என்றவன் நக்கலாக, ஹேய் உன் அண்ணன்தானே உன் பிளட் க்ரூப் ஒத்துப்போனா நீ வேணா உன்னோட ஹார்ட்டை குடுக்கறியா?” நிஜமாகவே கேட்பதுபோல் வினோத் கேட்க, “ஏய்! ஏய்! என்ன திமிரா. அப்படின்னா என்னைச் சாக சொல்றியா?” எனப் பயந்துபோய் நடுக்கத்துடன் ரத்தினம் கேட்க, “பின்ன அண்ணனுக்காக இவ்ளோ குதிக்கற இல்ல. அவனுக்காக உன்னோட உயிரை குடுக்கமாட்டியா என்ன?” நக்கலுடன் வினோத் கேட்கவும், “அண்ணனை காப்பாத்த எவ்ளோ வேணாலும் பணம் செலவு பண்ணலாம். அதுக்காக உயிரைக் கொடுக்க முடியுமா? யாராவது அப்படி செய்வாங்களா?” கேட்டான் ரத்தினம். கொஞ்சமும் யோசிக்காமல், “இதோ உட்கார்ந்து இருக்காளே இந்த தியாகச் செம்மல். இவளோட அண்ணனுக்காக இவ உயிரையும் கொடுப்பா” என்று வினோத் சொல்ல, “ச்சை!” என முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அம்மு. அப்பொழுதுதான் அவள் அங்கே இருப்பதையே கவனித்தான் ரத்தினம். “என்னய்யா இப்படி இந்தப் பெண்ணை பக்கத்துல வெச்சிட்டே எல்லாத்தையும் பேசற. வெளியில போய் எதையாவது உளறி வச்சா பிரச்சனை” என ரத்தினம் சொல்லவும், அந்த நொடி மனதில் அந்த விபரீத எண்ணம் தோன்ற, வினோத்தின் கண்கள் வெறியுடன் கையிலிருந்த கோப்பில் படிய அதில் ராஜவேலுவின் ரத்த வகையை பார்த்தவன், “அம்மு உன்னோட பிளட் க்ரூப்பும் ஏபீ நெகடிவ் தான. நீ டெங்கு வந்து ட்ரீட்மெண்ட் எடுத்தபோது நான் பார்த்திருக்கேன்” என்று அவன் கேட்க, அம்முவின் கண்கள் பீதியில் உறைய, “அண்ணா என்ன பேசறீங்க நீங்க. நான் வெளியிலே போய் எதுவும் சொல்லவே மாட்டேன் என்னை விட்ருங்க” கிட்டத்தட்ட கெஞ்சத் தொடங்கினாள் அம்மு. “யோவ் டாக்டர் என்னய்யா பேசற நீ. ஒரு எழவும் புரியல முதலில் அந்தப் பெண்ணை வெளிய அனுப்புயா” என ரத்தினம் பொரியவும், “இவளை வெளியில் அனுப்பினால் உன் அண்ணன் நேரடியா பரலோகம் போகவேண்டியதுதான். என்ன பரவாயில்லையா. உன் அண்ணன் பண்ண கொலைக்கு இந்த பொண்ணுதான் நேரில் பார்த்த சாட்சி! அதோட போனஸா, உன் அண்ணனுக்காக... ம்ஹூம் அவளோட அண்ணனுக்காக... அவளோட இதயத்தையே தானமா கொடுக்கப்போறா! இப்ப சொல்லு இவளை வெளியிலே அனுப்பிடலாமா?” என அவன் வஞ்சகமாய் கேட்டுவிட்டு, பிறகு வினோத் அம்முவின் நிலையை ரத்தினத்திடம் விளக்க, பயத்தில் அம்முவிற்கும், மகிழ்ச்சியில் ரத்தினத்திற்கும் மூச்சடைத்து. “அண்ணா வேண்டாம்ணா ப்ளீஸ்ணா” என அம்மு அழத்தொடங்க, “நான் முதலில் சொன்னதுதான். இப்ப அமைதியா நீ இதுக்கு ஒத்துழைக்கலன்னா, உன் அண்ணன் உயிரோடவே பிணமாக இருப்பான் பரவாயில்லையா” வினோத் மிரட்டத் தொடங்கவும், “இல்ல நீங்க அப்படியெல்லாம் செய்யமாட்டீங்க. சும்மா மிரட்டறீங்க. ப்ளீஸ் அண்ணா! செல்வி கொலையை பத்தி நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். நம்புங்க அண்ணா” அம்மு கெஞ்சவும், அதற்கு வினோத், “நாலு வருஷம் கழித்து என்னிடம் சொன்னது போல், இன்னும் கொஞ்ச நாள் கழித்து நீ வேறு யாரிடமாவது சொன்னால்? அதுவும் உன் ஹார்ட் அந்த ராஜவேலுவுக்கு மேட்ச் ஆனால் எனக்கு இன்னும் லாபம்தான்!” என்று கூறி விட்டு ரத்தினத்திடம், “நீ எதுக்கும் உங்க ஆளுங்களை ஆதி அட்மிட் ஆகியிருக்கும் ரூம்லயே இருக்கும்படி செய்” என்று அவன் அறை எண்ணைச் சொன்னவன், அம்முவிடம் திரும்பி, “நீ வேணா உன் அண்ணன் இருக்கும் நிலைமையை பார்த்துட்டு வாயேன். நான் இங்கேதான் இருப்பேன். நீ அவனை பார்த்துட்டு வந்து உன் முடிவைச் சொல்லு. இன்னும் பனிரண்டு மணி நேரத்துக்குள்ள மினிஸ்டர் சன்னுக்கு ஆபரேஷன் பண்ணனும். சீக்கிரம் வந்தால் உன் அண்ணனுக்கு நல்லது” என்று முடித்தான் வினோத். அவன் அவ்வாறு சொன்னதும் சிறிதும் தாமதிக்காது, ஆதி இருந்த அறையை நோக்கி ஓடிய அம்மு, தன்னைப் பின்தொடர்ந்து யாராவது வருகிறார்களா என திரும்பித் திரும்பி பார்த்தவாறே அவனது அறைக்குள் நுழைந்தாள். அங்கே சுய நினைவே இல்லாமல் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த ஆதியின் முகத்தைப் பார்த்துக்கொண்டே நின்றவள், “அண்ணா நம்பக்கூடாதவங்களை எல்லாம் நம்பி இந்த நிலையில் வந்து நிக்கறேன் அண்ணா! ப்ளீஸ் அண்ணா! முழிச்சிக்கோங்க அண்ணா!” என்று முணுமுணுக்க, வேதனையில் அவளது மனம் ரத்தக் கண்ணீர் வடித்தது. ஆதியின் அருகில் உட்கார்ந்துகொண்டு அவனது ட்ரிப்ஸ் போடப்பட்டிருந்த வலது கையை வருடியவள் அவனது இடதுகையில் தனது முகத்தைப் பதித்துக்கொண்டாள். ஒரு சில நிமிடங்கள் அப்படியே இருக்க, அவளது கண்களில் இருந்து அவனது உள்ளங்கையில் வழிந்த கண்ணீரை உணரும் நிலையில் அவன் இல்லை. பின்பு கதவைத் தட்டும் சத்தம் கேட்கவும் பதறியவளாக அவன் முகத்தைத் திரும்பி பார்த்தவாறே, அங்கிருந்து வேகமாகச் சென்றாள் அம்மு. அவை எதையும் அறியாமல் உணர்வற்ற ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தான் ஆதி. வெளியில் வினோத் தங்கவேலுவின் அடியாட்களுடன் நிற்கவும், ஆதியை நினைத்து பயத்தில் அவளது உடல் நடுங்கியது. பின்பு அவளை வெளியில் செல்வதுபோல் சென்று மருத்துவமனையின் கார் பார்க்கிங் பகுதியில் போய் நிற்கச் சொன்னான் வினோத். அவள் ஆதியைக் காண வந்த சில நிமிடங்களில், அவர்கள் பக்காவாக ஏதோ திட்டம் வகுத்திருப்பது நன்றாகவே புரிந்தது அம்முவிற்கு. அவன் சொன்னதைப் போலவே வெளியில் சென்று வேறு வழியாக கார் பார்க்கிங் பகுதியை சில நிமிடங்களில் அடைந்தாள் அம்மு. ஆதி மல்லியிடம் அவனது இதயத்தைத் தொலைத்த அதே இடம்! அங்கேதான் நின்றிருந்தான் ரத்தினம். அவள் அங்கே வரவும் அம்மு பதட்டத்தில் வினோத்தின் அறையிலேயே விட்டுவிட்டு வந்திருந்த ஆதியின் கைப்பேசியை அம்முவிடம் கொடுத்தவன், “நீ ‘எங்க வீட்டு ட்ரைவர் கோபாலைத்தான் காதலிக்கறேன் அவனுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆனதால் தற்கொலை பண்ணிக்கறே’ன்னு எல்லாரும் நம்புற மாதிரி இதுல வீடியோ ரெக்கார்ட் பண்ணிக் கொடு” என மிரட்டலாகச் சொல்ல, “ஐயோ இதெல்லாம் அநியாயம். நான் அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். எங்க குடும்பத்தில் எல்லாரும் மனசு ஒடிஞ்சு போயிடுவாங்க. அந்த கோபாலை உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனப் பதறினாள் அம்மு. “வேண்டாம் விடு. உன் அண்ணனும் நீயும் ஒரே பிளட் க்ரூப்பாமே! அந்த வினோத் சொன்னான். உன் அண்ணன் ஹார்ட்டை எடுத்துட்டு, உங்க ரெண்டு பேரையும் போட்டுதள்ளிட்டு நான் போயிட்டே இருப்பேன். எதுவுமே வெளிய வராம எங்கப்பா பாத்துப்பாரு. பிறகு உன் இஷ்டம்” என இரக்கமில்லாமல் ரத்தினம் சொல்லவும், வேறு வழியில்லாமல் அந்த காணொளியைப் பதிவு செய்தாள் அம்மு. அவள் பதிவுசெய்து முடிக்கவும், அங்கே வந்தான் குணா. அந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் வார்டுபாய் வினோத்தின் ஜால்ராவாக இருப்பவன். ஆதி அங்கே அனுமதிக்கப்பட்டபிறகு வினோத்துடன் அவனை பார்த்திருக்கிறாள் அம்மு. பயப்பந்து அவளது மனதில் உருள அந்த நொடி ஏனோ மல்லியின் ஞாபகம் வந்தது அம்முவிற்கு. “மல்லி நீ எங்கடி இருக்க. இது மாதிரி உனக்கும் எதாவது ஆபத்து வந்தால், உன்னை யாரு காப்பாத்துவாங்க? அந்த கொலையை பத்தி உனக்கு நான் தெரியப்படுத்தாமலேயே இருந்திருக்கலாமே! நான் சொல்றவங்களைத் தான் நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு உன்னிடம் சத்தியம் வேறு வாங்கிட்டேனே! என்னோட ராஜா அண்ணாவுக்கே உன்னை கட்டிவச்சு வாழ்நாள் முழுசும் உங்க கூடவே இருக்கணும்னு ஆசைபட்டேனே! எல்லாமே முடிஞ்சுபோச்சே! நீ எங்க இருந்தாலும் நல்லபடியா இருக்கனும் மல்லி!” மனதார நினைத்தவள் அங்கே இருந்த தூணில் சாய்ந்து நிற்க, அவளது கையைப்பிடித்து வா என இழுத்தான் குணா. பயத்தில் கண்களை மூடி அந்தத் தூணை இருக்கமாகப் பற்றிக்கொண்டாள் அம்மு, “எல்லாம் முடிந்தது” என்ற எண்ணம் முற்றிலும் அவளை ஆட்கொள்ள ஒரு மாய நிலைக்குப் போய்க்கொண்டிருந்தாள் அம்மு. மல்லி! மல்லி! அம்முவின் மனது அவளது பெயரையே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தது. கனவின் தாக்கத்தில் இருந்த மல்லியை அம்முவின் உணர்வுகள் இழுக்க, என்னை விடு என கத்தியபடி அம்மு ஓடிவந்து மல்லியின் கையை இறுகப் பற்றிக்கொள்ள, அந்த குணா விடாமல் அவளை இழுக்கவும், ஒரு நிலையில் அவளது பிடி தளர்ந்து போக, அவன் அம்முவை எங்கோ இழுத்துச் சென்றான். “அம்மு! அம்மு! எங்கடி இருக்க?” எனக் கதறியவாறே மல்லி இருள் சூழ்ந்த அந்தப் பகுதியில் அம்முவைத் தேடிச் செல்ல, ஒரு மிகப்பெரிய கதவில் போய் இடித்துக் கொண்டு அவள் நிற்கவும், ‘க்ளக் க்ளக் சளக் சளக்’ என்ற வினோத ஒலிகள் கேட்டுக் கொண்டிருக்க, அம்மு ஸ்ட்ரெக்சரில் மயக்க நிலையில் படுக்கவைக்கப் பட்டிருக்க, அவளது வலது கரம் கழுத்தில் அணிந்திருந்த அவளது செயினை இறுக்கப் பற்றியிருந்தது. அவளது கையை பிடித்து வலியப் பிய்த்து அந்த செயினை விடுவித்தவன், அதையும் அவளது கைகளில் போட்டிருந்த வளையல் மோதிரம் பின்பு சிறிய ஜிமிக்கி என ஒவொன்றாக அவன் கழற்றிக்கொண்டிருக்க, சீக்கிரம் உள்ளே கொண்டு வா குணா! என்ற அழைப்பில் அவசரமாக கடைசியாக அவளது கால்களில் போட்டிருந்த கனத்த கொலுசைக் கழற்ற, அது கீறி அவளது காலில் ரத்தம் வருவதையும் பொருட்படுத்தாமல் அந்த ஸ்ட்ரெக்ச்சரை தள்ளிக்கொண்டு அந்த ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தான் குணா. அங்கே கதவினில் பொருத்தப் பட்டிருந்த சிறிய கண்ணாடி மூலம் உள்ளே பார்க்க மங்கலான வெளிச்சத்தில் அவள் கண்ட காட்சி அவளது ரத்தத்தை உறைய வைத்தது. அங்கே இருந்த ஒரு மேடையில் அம்மு கிடத்தி வைக்கப்பட்டிருக்க கூர்மையான கத்தியைக் கொண்டு அவளது உடலைக் கிழித்தவன், அவளது ஒவ்வொரு உறுப்பாகப் பிய்த்து வெளியே ஏறிய, கடைசியாக அவளது இதயத்தை எடுத்து அங்கே இருந்த ஒரு கண்ணாடி குடுவையில் வைக்கவும், வெறியுடன் அதை எதிர்பார்த்துக்கொண்டிருந்த மிகப் பெரிய கழுகு ஒன்று அதைக் கொத்திக்கொண்டு பறந்து போனது. உடனே அந்தக் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தவன் அங்கே நின்றிருந்த மல்லியை வெறித்த ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அங்கிருந்து செல்ல, அப்பொழுதுதான் அவனது முகத்தைப் பார்த்தவள் பயத்தில் உடல் நடுங்கிப் போனாள். “வினோத்!” என்ற அலறலுடன் எழுத்து உட்கார்ந்தாள் மரகதவல்லி.

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page