top of page
Writer's pictureKrishnapriya Narayan

TIK 33

இதயம்-33

இப்படி ஒரு நிலையை உண்மையிலேயே எதிர்பார்த்திருக்கவில்லை போலும் கோபால்!. அப்பட்டமான பயம் தெரிந்தது அவனது கண்களில்! தொண்டைக்குழி அடைக்க அவனது வாயிலிருந்து வார்த்தை வருமா என்றே புரியவில்லை அவனுக்கு! பேசுவதற்காக அவன் எடுத்துக்கொண்ட சில நொடிகளைக் கூட பொறுக்க முடியாமல் கன்டைனர் மணி, அவனை மேலும் அடிக்கக் கையை ஓங்க, கேவலுடனும் நடுக்கத்துடனும் வந்தன வார்த்தைகள், “அடிக்காதிங்க சொல்லிடறேன். தண்ணி குடுங்க ப்ளீஸ்! ப்ளீஸ்!” கெஞ்சிக் கொண்டிருந்தான். ஆதியின் கண்ணசைவில் அவனது கைகளை அவிழ்த்துவிட்டு மணி ஒரு தண்ணீர் பாட்டிலை அதில் திணிக்க, ஒரே மூச்சில் குடித்து முடித்தவன் சொல்லத் தொடங்கினான். கோபால் ஆதியின் வீட்டில் ஓட்டுநராக வேலைக்குச் சேர்ந்த பிறகு அவனுக்கு ராணியின் மகள் அன்னத்துடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அது அங்கே யாருக்குமே தெரியாத நிலையில், அம்முவின் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து சில நாட்கள் ஆகியிருந்த நிலையில்தான் அவர்கள் இருவரும் அம்முவின் கண்களில் வசமாகச் சிக்கினார். ஆனால் அதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதன் பிறகு தன் வயதையே ஒத்திருந்த அன்னத்திடம் அம்மு விசாரிக்க, கோபாலை அவள் காதலிப்பதாகவும் விரைவிலேயே அவன் தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்வதாய் சொல்லியிருப்பதாகவும் சொன்னாள் அன்னம். அதுவரை இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லவேண்டாம் என்றும் அன்னம் கேட்டுக்கொண்டதால், அதை அப்படியே விட்டுவிட்டாள் அம்மு. இதை கோபால் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அம்மு இதைப்பற்றி ஒருமுறை தன்னிடம் எதோ சொல்ல வந்தது நினைவில் வந்தது ஆதிக்கு. இதற்கிடையில் கோபாலுக்கு அவனது அம்மா சரசு, திலகாவை பெண் பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்யவும், அதுவும் நகையும் போட்டு அவன் கால் டாக்சியாக ஓட்டுவதற்கு ஒரு காரும் வாங்கிக் கொடுக்க அவர்கள் தயாராக இருக்கவே அந்த ஏற்பாட்டிற்குச் சம்மதித்துவிட்டான் கோபால். அன்னத்திற்குத் தெரியவந்தால் பிரச்சினை செய்வாள் என்பதால் சீக்கிரமாகத் திருமணத்தை முடிக்கும் எண்ணத்தில் திருமண செலவிற்கென ஆதியிடம் அட்வான்ஸாக பணம் கேட்டிருந்தான் அவன். அதன் பிறகு ஆதிக்கு விபத்து ஏற்பட்டுவிடவே, அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயம் அம்முவின் முன்னிலையிலேயே ஆதி கோபாலின் திருமணத்தைப் பற்றி பேசவும் திடுக்கிட்டுப்போனாள் அம்மு. அம்முவின் மனநிலை அறியாமல் கோபாலும் சகஜமாக இருந்துவிட கொதிநிலைக்குபோனவள் தன் அண்ணனிடம் இதைப்பற்றிச் சொல்லும் முன்பே அவன் எக்ஸ்-ரே எடுக்க அழைத்துச் செல்லப்படவே அவளால் உடனே சொல்லமுடியாமல் விதி தன் சதியை அரங்கேற்றியிருந்தது. அங்கே தனியாக தன்னிடம் மாட்டிய கோபாலை அம்மு கேள்விமேல் கேள்வி கேட்டு குடைந்து எடுக்க, அன்னத்துடன் தவறான முறையில் தான் பழகவேயில்லை எனச் சாதித்தான் கோபால். இறுதியாக, “இனிமேல் எதுவானாலும் ராஜா அண்ணா கிட்ட பேசிக்கோ நீ இங்கிருந்து போகலாம்” என அம்மு சொல்லிவிட, “ஐயோ! ஆதி சார் கிட்ட எதுவும் சொல்லிடாதீங்க பாப்பா!” என அவளிடம் கெஞ்சத் தொடங்கியவனின் மனதில், அவள் பேசுவது அனைத்துமே பணத்திமிரினால்தான் என்றும் எப்பொழுதுமே இவர்களிடம் பணத்திற்காக கையேந்தும் நிலையில் இருக்கவேண்டுமா எனவும், தான் செய்யும் தவறுக்கு நியாயம் கற்பித்துக்கொள்ள அவனது வன்மமும் வளர்ந்துகொண்டே போனது. அப்பொழுதுதான் அங்கே ஸ்ட்ரெக்சரில் தள்ளிக்கொண்டு வரப்பட்ட ராஜவேலுவைப் பார்த்து அதிர்ந்தாள் அம்மு. பின்பு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “நீ வீட்டுக்குப் போ பிறகு பேசிக்கலாம்” என்று அலட்சியமாக கோபாலிடம் சொல்லிவிட்டு வினோத்தின் அறையை நோக்கி ஓடிய அம்முவை விடாமல் பின் தொர்ந்து சென்றான் கோபால். அம்மு அந்த அறையின் கதவைத் திறக்கும் சமயத்தில் கோபாலை பார்த்தவள், “போ!” என்பதுபோல் ஜாடை செய்துவிட்டு உள்ளே நுழைந்துவிட, கதவின் அருகிலேயே நின்றிருந்தான் கோபால். அதில் இருந்த சிறிய இடைவெளி வழியாக உள்ளே பேசுவதையும் கேட்கத் தொடங்கினான். “என்ன அம்மு ஆதிக்கு எதாவது பிரச்சினையா இவ்ளோ அவசரமா வர?” என்ற வினோத்தின் கேள்வியையே காதில் வாங்காமல், “அண்ணா அந்த ஆளுக்கு என்னணா உடம்புக்கு” எனக் கேட்டாள் அம்மு. “எந்த ஆளை கேக்கற அம்மு புரியலையே” என அவன் சொல்ல, யோசித்த அம்மு, “ஆங்... அதான்ணா அந்த ராஜவேலு அவனுக்குத்தான்” எனக்கூற, “ஏய் என்னமா இப்படி மரியாதை இல்லாம பேசற. அவர் மிஸ்டர் பையன்மா” எனப் பதறினான் வினோத். “மண்ணாங்கட்டி மினிஸ்டர் பையன். அவன் ஒரு கொலைகாரன் அண்ணா பொறுக்கி!” எனக் கோபத்தில் அம்மு பொரிய, “ஏன் அம்மு நீ இப்படிலாம் பேசமாட்டியே, ஏன் இப்படி பேசற” என அவன் கேட்கவும், விடுதியில் நடந்த அனைத்தையும் அவனிடம் சொல்லி முடித்தாள் அம்மு. அவனை முழுமையாக நம்பி. அனைத்தும் அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்தான் வினோத். “அவனுக்கு என்ன ஆச்சுண்ணா?” அம்மு கேட்க, “ஹார்ட் டோட்டல் ஃபெய்லியர் அம்மு” என்றான் வினோத். “அப்ப செத்து போயிடுவானா...ணா!” மகிழ்ச்சியுடன் கேட்டாள் அம்மு. “ஏய்! லூசு மாதிரி ஏதாவது பேசாத. அந்த மினிஸ்டரும் அவரோட செகண்ட் சன் ரத்தினவேலுவும், அவரை எப்படியாவது காப்பாத்த சொல்லி எங்க சீனியரை படுத்தி எடுத்துட்டு இருக்காங்க. இந்த ஹாஸ்ப்பிடலே அவங்களோடதுதான். அவங்க பெண்ணுக்காக வாங்கியிருக்காங்க. நீ இப்படி பேசறத கேட்டாங்கன்னா உயிரையே எடுத்திடுவாங்க” என வினோத் சொல்லவும், “அண்ணா இதை ராஜா அண்ணாவிடம் என்னால சொல்ல முடியாது அதனாலதான் உங்ககிட்ட சொன்னேன். நான் மட்டும் ஒரு வார்த்தை அவங்ககிட்ட சொன்னா, இவனுங்க ஒருத்தரையும் சும்மா விடமாட்டாங்க ராஜா அண்ணா” என அவள் பெருமையுடன் சொல்லவும், “சரி சரி நீ கொஞ்ச நேரம் இங்கேயே அமைதியா இரு. நான் போய் அவரோட நிலைமையை பார்த்துட்டு வந்துடறேன். அவருக்கு வேறு ஹார்ட் வைக்கணும்னு நினைக்கிறேன். அது வேறு கிடைக்கணும். நீ கவலை படாதே” என பதட்டத்துடன் சொல்லிவிட்டு வினோத் கதவைத் திறக்க, வெலவெலத்துப்போனான் அங்கே நின்று கொண்டிருந்த கோபால். “ஏய் நீ யாரு? ஏன் இங்க நிக்கற? போ! போ!” என அவனை விரட்டிவிட்டு அங்கிருந்து சென்றான் வினோத். திக்கித் திணறி கோபால் அனைத்தையும் சொல்லிக்கொண்டிருந்தான் கன்டைனருக்குள் இருந்தவாறே. அதே நேரம் கொடுக்கப்பட்டிருந்த மாத்திரைகளின் தாக்கத்தினால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் மல்லி, அவர்களுடைய வீட்டில். “வாடி மல்லி வா! வா! நீயே வந்து பாரு!” என்றவாறு அவளது கையை பிடித்து இழுத்துச் சென்றாள் அம்மு. மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவள் போன்று மல்லி அவளுடன் செல்ல, மருத்துவமனையில் தனது அறைக்கதவைத் திறந்து வெளியில் வந்த வினோத் அங்கே நின்றுகொண்டிருந்தவனிடம் அதட்டலாக ஏதோ சொல்ல அவன் அங்கிருந்துச் சென்றான். உடனே ஆதி அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் பணியில் இருந்த அவனது உதவி மருத்துவரிடம் ஒரு மருந்தின் பெயரைச் சொல்லி விநோத் அதை ஆதிக்கு செலுத்தச் சொல்ல, “டாக்டர் அது கொஞ்சம் ஹெவி டோஸ் ஆச்சே” என்று தயங்கினார் அவர். “பரவாயில்லை. அவருக்கு வலி குறையல. அதனாலதான் சொல்றத செய்ங்க” என்று கட்டளையாக சொல்லிவிட்டு, நேராக அங்கே முக்கியஸ்தர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு பிரிவிற்குள் நுழைந்து, அங்கே ஒரு அறையில் தங்கியிருந்தவனை நோக்கி விநோத் செல்ல, “என்ன டாக்டர் இங்க என்ன செஞ்சுட்டு இருக்க. எங்க அண்ணன காப்பாத்தப்போறியா இல்ல அவனோட சேர்ந்து நீயும் உயிரை விடப்போறியா?” என அவன் மிரட்டவும், அங்கே போடப்பட்டிருந்த சோபாவில் இறுக்கமான முகத்துடன் உட்கார்ந்திருந்த தங்கவேலு, “ஏய் ரத்தினம் நீ பேசாம இரு” என அவனை அடக்கிவிட்டு, “நீங்க சொல்லுங்க டாக்டர் தம்பி, ராஜவேலுவை காப்பாத்த என்ன செய்யப் போறீங்க?” என்று கேட்க, ஒரு நொடி யோசித்தவன், “உங்க சன்னை காப்பாத்த அவருக்கு வேறு ஒருவருடைய ஹார்ட்டை பொருத்தணும். ஆனால் அதுக்கு டோனர் கிடைத்தால் தான் அவரை காப்பாத்தவே முடியும். அப்படியே ஹார்ட் கிடைச்சு அவரைக் காப்பாத்தினாலும், அவர் செஞ்ச கொலைக்கு அவருக்குத் தூக்கு தண்டனைதான் கிடைக்கும்” என அவன் கொஞ்சமும் தயங்காமல் சொல்லவும், அதிர்ந்து எழுந்து நின்ற தங்கவேலு, “என்ன டாக்டர் நக்கலா?” என்று கேட்க, அவனது உதடுகள் அலட்சியமாக வளையவும், அவனை நோக்கி ரத்தினம் கோபத்துடன் பாய அவனைத் தடுத்தார் தங்கவேலு. “உங்க மகன் மூணு வருஷத்துக்கு முன்னால, உங்க ஸ்கூல் ஹாஸ்டல்ல தங்கி படிச்சிட்டு இருந்த செல்விங்கற சின்ன பொண்ண கொலைசெஞ்சதுக்கு என்னிடம் சாட்சி இருக்கு. இப்ப நான் இதில் தலையிடலன்னா இனிமேல் நீங்க உங்க மகனை மறந்திட வேண்டியதுதான்” என வினோத் மிரட்டவும், அச்சம் மேலிட பணிந்து வந்த தங்கவேலு, “சொல்லுங்க நான் உங்களுக்கு என்ன செய்யணும்?” என்று கேட்க, “உங்க மகனை இந்த கொலை கேஸிலிருந்து காப்பாத்தவும், அவனுக்கு மாற்று இதயத்துக்கு ஏற்பாடு செய்யவும், அதாவது நேரடியா சொல்லனும்னா உங்க மகனோட உயிருக்கு எவ்வளவு விலை கொடுப்பிங்க” என பேரம்பேசினான் வினோத். பதட்டத்தில் கொஞ்சம் கூட யோசனை செய்யாமல், “நீ மட்டும் அவனைப் பிழைக்க வச்சா இந்த ஹாஸ்பிடலையே உன் பெயரில் எழுதி வைக்கிறேன்” என்றார் தங்கவேலு பட்டென. மூத்த மகன் மீது கொண்ட பாசம் அவரை அப்படி பேச வைத்தது. தங்கவேலு சொல்லிக்கொண்டிருக்கும்போதே அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத வினோத்தின் கண்கள் ஆச்சரியத்தில் பளிச்சிட்டதென்றால், ரத்தினத்தின் முகமோ பேய் அறைந்ததுபோல் ஆனது. அவர் சொன்னதை நம்ப முடியாமல், “உங்க பேச்சை நான் எப்படி நம்ப முடியும்?” என வினோத் கேட்கவும், “இப்பவே இந்த ஹாஸ்பிடல் பங்குகளை உன் பெயருக்கு மாத்தி எழுத ஏற்பாடு செய்யறேன். அந்தச் சாட்சியை அழிச்சிட்டு என் மகனைப் பிழைக்க வெச்ச அடுத்த நொடி அது உன் கைக்கு வரும்” என முடித்தார் தங்கவேலு. “அப்பா தாமரைக்காகத்தானே இந்த ஹாஸ்பிடலை வாங்கினோம்!” என்று பல்லைக் கடித்தான் ரத்தினம். “அதைப் பிறகு பார்த்துக்கலாம்” என்று முடித்துவிட்டார் தங்கவேலு. அங்கிருந்து விடைபெற்று ராஜவேலுவின் மருத்துவ அறிக்கைகளுடன் யோசனையுடன் அவனது அறைக்குள் நுழைந்த வினோத், அங்கே அம்முவைக் காணாமல் எப்படியும் அவள் தன்னைத் தேடி வருவாள் என்று அவளுக்காகக் காத்திருக்க, ஆதியைக் காண அம்மு அவன் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் வரவும் அங்கே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ஆதி. சில நிமிடங்கள் அவன் அருகில் இருந்தவள், அவனது உறக்கம் கலையாமல் இருக்கவே மறுபடியும் வினோத்தின் அறை நோக்கிச் சென்றாள் அம்மு, அவனது எண்ணைத்தைப் பொய்யாக்காமல். “அண்ணா நான் சொன்னதைப் பற்றி யோசிச்சு பார்த்தீங்களா?” என்று அவள் கேட்க, “நீதான் யோசிக்கணும் அம்மு. இப்ப உன் அண்ணன் மாதிரியே நானும் வாழ்க்கைல மேல வரதுக்கு ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு. நீ இந்த விஷயத்தை இதோட விட்டுட்டா எனக்குப் பெரிய புதையலே கிடைக்கும்!” என வினோத் சொல்ல, அவன் என்ன சொல்கிறான் என்று புரியவே சில நிமிடங்கள் ஆனது அம்முவிற்கு. “அண்ணா ராஜா அண்ணா நேர்மையா கஷ்டப்பட்டு உழைச்சு மேல வந்திருக்காங்க. அப்பாகிட்ட கூட அவங்க பணம் வாங்கல. ஆனால் நீங்கச் செய்ய நினைப்பது அநியாயம்..ணா” அம்மு நிதானமாகச் சொல்லவும், வினோத்தின் குரல் சற்று உயர்ந்தது, “என்ன நியாயம்? என்ன நேர்மை? ரொம்ப பேசற நீ! உன்னையும் உங்கண்ணன் மெடிக்கல்தானே சேர்க்கப் போறான். ஒரு வருஷத்துக்கு எவ்வளவு ஆகும்னு தெரியுமா உனக்கு? மொத்தமா நான் படிச்சிட்டு வரதுக்குள்ள ஒன்றரை கோடி காலி. அதுல எம்.எஸ் பண்ணிட்டு நான் வெளிய வரதுக்குள்ள இன்னும் கொஞ்சம் செலவாச்சு. நான் நேர்மை நியாயம்னு பேசிட்டு இருந்தா, இதுபோல ஒரு ஹாஸ்பிடலை என் வாழ் நாள்ல வாங்க முடியாது” என்று கூறி விட்டு, கதவை நன்றாக அடைத்தபடி திரும்பி வந்தவன், “நான் கூட என்னவோ அந்த மினிஸ்ட்டர்கிட்ட மொத்தமா ஒரு அஞ்சு கோடி கேட்கலாம்னு பார்த்தா, அந்த ஆளு இந்த ஹாஸ்பிடலியே என் பேர்ல எழுதறேன்னு சொல்றான்! இதை அடைய எந்த எல்லைக்கும் போகலாம்னு நான் முடிவே பண்ணிட்டேன் அம்மு. வீணா என் வாழ்க்கையோட விளையாடாதே! நீ என் ஃப்ரண்ட்டோட தங்கைங்கறதாலதான் உன்னிடம் இவ்வளவு கெஞ்சிட்டு இருக்கேன். இல்லனா பாவ புண்ணியமெல்லாம் பார்க்கும் மனநிலையில் நான் இல்லை!” என்று சொல்லி முடித்தான் வினோத். அதற்குள் கைப்பேசியில் அவனுக்கு அழைப்பு வரவும் பேசியவன், மறுமுனையில் சொன்ன செய்தி அவனுக்குச் சாதகமாக இல்லாமல் போகவே வெறுப்புடன் கைப்பேசியை அங்கே இருந்த மேஜையின் மேல் விட்டெறிந்து, இயலாமையில் தனது தலையைக் கோதிக்கொண்டான். அவனுடன் அதற்குமேல் பேச விரும்பாமல் அம்மு அங்கிருந்து செல்ல எத்தனிக்க ஒரே கையால் அவளைத் தடுத்து, “உன்னிடம் கொஞ்சம் பேசணும் போய் உட்காரு!” என்றான். அப்பொழுதுகூட அவனிடம் பயமோ சந்தேகமோ கொள்ளவில்லை அம்மு. அமைதியாக உட்கார்ந்துகொண்டாள். “கடைசியா ஒரே ஒரு சான்ஸ். நீ இதை இப்படியே விட்டுடு. இனிமேல் ஒரு பிரச்சினையும் வராது” என்று வினோத் சொல்ல, சில நொடிகள் கண்களை மூடி அம்மு யோசிக்க, அன்று அலங்கோலமாக செல்வி அங்கே கிடந்த காட்சி அவளது மனத்திரையில் வந்து மறைந்தது. ஒரு பெண்ணாக அவளால் அதைச் சகிக்கமுடியவில்லை. அதுவும் அன்று பள்ளி விழாவில் இவர்கள் நடனமாடும்பொழுது, நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வந்திருந்த ராஜவேலு செல்வியைப் பார்த்த பார்வை! அன்று அவளுக்கு அது புரியவில்லை! இன்று புரிந்தது! மனம் வலித்தது! அவனை விட்டுவிடக் கொஞ்சமும் அவளது மனம் இடங்கொடுக்கவில்லை. “முடியாது. முடியவே முடியாது!” அழுத்தமாகச் சொன்னாள் அமிர்தவல்லி. அதுவே அவளுக்கு வினையாகிப் போனது.

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page