top of page
Writer's pictureKrishnapriya Narayan

TIK-32

இதயம்-32


மல்லி பார்க்கவேண்டும் என்று கேட்ட அந்தக் காணொளி பதிவை ஆதி பத்திரப்படுத்தி வைத்திருக்கவில்லை. அன்று ஒரு முறை அதைப் பார்த்ததுடன் சரி. அந்த கைப்பேசியை அதன்பின் அவன் தொடக்கூட இல்லை. சரவணனிடம் சொல்லி அந்த சிம்கார்டை மட்டும் வாங்கிக்கொண்டவன் அந்த கைப்பேசியை அழித்துவிடச் சொல்லிவிட்டான். “இல்ல மல்லி அந்த வீடியோ இப்ப இல்லை. அப்பவே அதை அந்தச் செல் போனுடன் சேர்த்து டிஸ்போஸ் செய்ய சொல்லி சரவணன் கிட்ட சொல்லிட்டேன்” என்றான் ஆதி. ஏமாற்றமாய் இருந்தது மல்லிக்கு, “ப்சு அதைப் பார்த்தால் ஏதாவது கெஸ் பண்ண முடியுமான்னு பார்த்தேன் மாம்ஸ்!” என்றவள். “சரவணன் ஒருவேளை அந்த வீடியோவை சேவ் பண்ணி வச்சிருப்பானா?” என்றாள் மல்லி. “ஸ்டாப் இட் மல்லி. அதை உன்னால முழுசா பார்க்கக்கூட முடியாது. தேவை இல்லாத வேலை. நான் தான் இப்ப உண்மையை உணர்ந்துட்டேனே… பார்த்துக்கலாம் விடு” என ஆதி கொஞ்சம் கோபத்துடன் சொல்ல, வந்த அழுகையை அடக்கியவாறு முகத்தை வேறு புறமாக திருப்பிக்கொண்டாள் மல்லி. அவளது இந்தச் செயலில் மனம் வருந்தியவன், “இப்பவே மணி மூணுடி… இப்ப அவனை டிஸ்டர்ப் பண்ண முடியாது காலையில் பார்த்துக்கலாம்” என இறங்கி வர, அதில் கொஞ்சம் தெளிந்தவள், “பரவாயில்லை அவனுக்கு ஒரு மெசேஜ் மட்டும் பண்ணுங்கப்பா ப்ளீஸ்!” என அவள் கெஞ்சிக்கேட்கவும், “ஹாய்!” என்று மட்டும் ஒரு குறுஞ்செய்தியை வாட்சப்பில் ஆதி சரவணனுக்கு அனுப்ப, அடுத்த நொடியே, “என்ன அண்ணா தூங்கலியா?” என அவனிடமிருந்து பதில் வந்தது. உடனே கைப்பேசியில் ஆதி அவனை அழைக்க எடுத்த எடுப்பில், “என்னண்ணா ஏதாவது பிரச்சினையா? இந்த நேரத்துல முழிச்சிட்டு இருக்கீங்க?” என்று அக்கறையுடன் கேட்டான் சரவணன். “ஒண்ணும் இல்லைப்பா. எனக்கு ஒரு முக்கியமான விஷயம் தெரியணும். அதுதான் உன்னை இந்த நேரதத்தில் டிஸ்டர்ப் பண்றேன் சாரி!”என்றான் ஆதி. “அண்ணா என்ன இப்படிலாம் பேசறீங்க, என்னன்னு சொல்லுங்க கண்டிப்பா செய்யறேன்” என அவன் சொல்லவும், “பை எனி சான்ஸ், அம்முவோட லாஸ்ட் வீடியோ உன்னிடம் இருக்கா?” என ஆதி கேட்க, முதலில் ஒன்றுமே புரியவில்லை சரவணனுக்கு, “என்ன வீடியோ பத்தி கேக்கறீங்க?” என அவன் குழப்பத்துடன் கேட்டான். இறுக்கத்துடன், “அம்முவோட ஸ்யூசைட் நோட்” என்றான் ஆதி. எதிர் முனையில் மௌனம் நீடிக்கவே, “ஹலோ சரவணா!” என ஆதி அழைக்க, “இருக்கு ண்ணா” என்றவன், “நான் அதை டெலீட் பண்ணல ண்ணா ப்ளீஸ்! கோவிச்சுக்காதீங்க” என அவன் சொல்லவும், அதை ஸ்பீக்கரில் கேட்டுக்கொண்டிருந்த மல்லியின் முகம் பல்ப் போட்டது போல் பிரகாசித்தது. “கோவமெல்லாம் இல்லை டா. அந்த வீடியோவை பார்க்கணும்னு இங்கே ஒருத்தி என்னை வச்சு செஞ்சிட்டு இருக்காடா. நீதான் என்னை காப்பாத்தணும்” என்று இலகுவாகவே சொன்னான் ஆதி. “இந்த நேரத்துல என்ன அண்ணா இப்படி. இப்ப இது தேவையா. உங்களை பார்த்தால் புதுசா கல்யாணம் ஆனவங்க மாதிரியே தெரியலியே” என அவன் நாசூக்காய் மறுக்க, “உன்னைப் பார்த்தால் கூடத்தான் சின்ன பையன் மாதிரியே தெரியலையே. இந்தப் பேச்சு பேசற” என மல்லி இடையில் புக, “என்னம்மா இப்படி பண்றியேம்மா! அம்மா எமரால்டு உனக்கும் எனக்கும் ஒரே வயசுதான்மா. என்ன உனக்குக் கல்யாணமே பண்ணிட்டாங்க. நான் இன்னுமே படிச்சிட்டு இருக்கேன்” என்று அவன் அவளை வாற. அவன் எமரால்ட் என மல்லியை அழைத்ததைக் கவனித்த ஆதி ஒரு நொடி திடுக்கிட்டான். அம்மு சில சமயம் அவளை அப்படிக் கூப்பிடுவது உண்டு. அதனால் அதைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை மல்லி. “சரவணா ஆஆஆ” என ஆதி அவனை அழைக்கவும், “அண்ணா நான் லீவ்லதான் இருக்கேன். நாளைக்கு மார்னிங் நம்ம வீட்டுக்கு வரேன். நேரில் பேசிக்கலாம் பை” என்று அழைப்பைத் துண்டித்தான் சரவணன். “ஐயோ இதை அவன் வாட்சப்பில் ஷேர் பண்ணியிருக்கலாமே” என மல்லி மனதிற்குள் புலம்பிக்கொண்டிருக்க, “என்ன இந்த முண்டக்கண்ணை வச்சிட்டு முழிச்சிட்டு இருக்க. போய் தூங்கு போ. அவன்தான் நேரிலேயே வரேன்னு சொல்லிட்டான் இல்ல” என மிரட்டியவன், பின்பு தணிந்த குரலில், “கொஞ்ச நேரம் தூங்கு. அவசர அவசரமா கீழே ஓட வேண்டாம் அம்மா ஒண்ணும் தப்பா நினைக்கமாட்டாங்க” என்று அவன் சொல்ல, பேசாமல் போய் படுத்துக்கொண்டாள் மல்லி. ஆனால் தூக்கம்தான் வந்தபாடில்லை. விளக்கை அணைத்துவிட்டு கைப்பேசியுடன் பால்கனி நோக்கி போனவனைப் பார்த்த மல்லி, “இந்த மிரட்டலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. ஆனா எல்லா அட்வைசும் மத்தவங்களுக்கு மட்டும்தான்” என முணுமுணுக்க, “இன்னும் நீ தூங்கலியா?” என்ற ஆதியின் குரலில். வழக்கம்போல் போர்வையால் முகத்தை மூடிக்கொண்டவள், “நான் தூங்கி அரைமணி நேரமாச்சு” என்று கூற அவளது பதிலால் சிரித்துக்கொண்டே கைப்பேசியில் கண்டைனர் மணியை அழைத்தவன். “என்ன மணி அவனை தூக்கிட்டியா?” என்று கேட்க, எதிர் முனையில் வந்த பதிலுக்கு, “குட் ஜாப்! நான் ஒரு பத்து மணிக்கு அங்கே வந்துடறேன் அதுவரை அவனை செமத்தியா கவனிச்சிடு” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான் ஆதி. உள்ளே வந்து சோபாவில் அவன் அமரவும், தூக்கமின்றி புரண்டுகொண்டே இருந்த மல்லியைப் பார்க்க அவனுக்கே பாவமாக இருந்தது. மனதிற்குள் எண்ணிக்கொண்டான், “நோ பெயின்... நோ கெயின்... மல்லி! கொஞ்சம் பொறுத்துக்கோ இதுவும் கடந்து போம்!” என்று. *** அவன் அவ்வளவு சொல்லியும் கூட வழக்கம்போலவே காலை கீழே வந்தவள் அன்றாட வேலைகளை முடிக்கவும், சரியாக அங்கே வந்து சேர்ந்தான் சரவணன். உள்ளே நுழையும்போதே இன்முகத்துடன், “லச்சு மா! என்ன பிரேக் பாஸ்ட்” என்றவாறு வந்தவனை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் மல்லி. அங்கே அவளைப் பார்த்தவன், “ஹாய் எமரால்ட்!” என்று கூறி விட்டு லட்சுமி தன்னை கவனிப்பதை உணர்ந்து நாக்கைக் கடித்துக்கொண்டான் பின்பு, “ஹாய் அண்ணி!” என்று சொல்ல, “இன்னுமே நீ இதை மறக்கலையா டா?” என்றார் லட்சுமி. பின்பு மல்லியிடம், “அம்மு ஹாஸ்டலில் இருந்து வந்தாலே, மல்லி மரகதவல்லினு உன்னைப் பற்றியே பேசிட்டு இருப்பாம்மா. “இவனுக்கு அப்படியே பொறாமை பத்திக்கும். அவளை வெறுப்பேற்றவே உன் பெயரை எமரால்ட்னு சொல்லுவான். அத்துடன் விடாமல் அங்கே இருந்த நாய்க் குட்டிக்கும் எமரால்ட்னு பெயர் வச்சு கூப்பிட ஆரம்பிச்சுட்டான். அம்மு முதலில் கோபப்பட்டாலும், பிறகு அப்படியே விட்டுட்டா” என்று அனைத்தையும் உளறிக்கொட்ட, அதில் சங்கடத்தில் நெளிந்த சரவணன் தனது காதுகளைப் பிடித்தவாறு, “சாரி அண்ணி!” என்றான். “ப்சு பரவாயில்லை விடு நீயும் எனக்கு தீபன் மாதிரித்தான் சரோ. அம்முவுக்கு ஃப்ரண்ட்னா எனக்கும் ஃப்ரண்ட்தான்” என மல்லி சொல்லவும், நெடு நாளைக்குப் பிறகு அம்முவைப் போன்றே மல்லி 'சரோ' என்று அழைத்ததைக் கேட்டு அவனது கண்களில் நீர் கோர்த்தது. அதை மற்றவர்களுக்குக் காண்பிக்காமல் மறைத்தவன், “அப்படின்னா நீ எனக்கு எமரால்ட்தான்!” எனச் சிரித்தவாறு சொல்லவும், “அடப்பாவி!” என்றாள் மல்லி. அனைத்தையும் கவனித்தவாறு அங்கே வந்த ஆதி, “அவனுக்கு பசி போலிருக்கு. என்ன பிரேக் பாஸ்டுன்னு கேட்டுட்டேதானே உள்ளே வந்தான். அதை யாருமே கவனிக்கலையா?” என்று கடிந்துக்கொண்டு, மல்லி! ராணிம்மா கிட்ட சொல்லி டிபன் எடுத்து வைக்க சொல்லு” என்றவாறு சரவணனின் தோளில் கை போட்டு, அவனை இழுத்துக்கொண்டே டைனிங் ஹால் நோக்கிச் சென்றான் ஆதி. துரிதமாக உணவை உண்டு முடித்து அவர்களுடைய அறைக்கு வந்து சேர்ந்தனர் மூவரும். “அண்ணா! ஏன்ணா திடீர்னு அந்த வீடியோவை பார்க்கணும்னு சொல்றீங்க?” என சரவணன் கேட்கவும், “இல்ல டா மல்லிக்கு நேற்றுதான் எல்லாத்தையும் சொல்லி முடிச்சேன். அவதான் அந்தக் கருமத்தை பார்க்கணும்னு அடம் பிடிக்கறா” என்றான் ஆதி. “நான் அந்த வீடியோவை டெலீட் பண்ணாமல் வைத்திருப்பதே அதை வைத்து என்றைக்காவது அம்மு தற்கொலை பண்ணிக்கலன்னு ப்ரூவ் பண்ண முடியாதா என்கிற ஆதங்கத்துலதான்” என்ற சரவணன், “ஆனால் மல்லி அதைப் பார்த்தால் நீ ரொம்பவே வேதனை படுவம்மா. அவசிமான்னு யோசிச்சிக்கோ” என்று முடித்தான். “பரவாயில்லை சரோ. அதுல எதாவது கண்டுபிடிக்க முடியுமான்னு பாக்கறேன்” என்று மறுத்துப் பேச இடமளிக்காமல் அழுத்தத்துடன் சொன்னாள் மல்லி. சரவணன் தன்னுடைய மடிக்கணினியில் அந்தக் காணொளியை ஓடவிட, முதல் முறை அதைப் பார்க்கும்போது மட்டுமே கலங்கினாள் மல்லி. இரண்டாவது முறை, மூன்றாவது முறை என அவள் அந்தக் காணொளியைக் காணவும், அவளது கண்கள் சிவந்து போனது. ஆத்திரத்துடன் கணவனது சட்டையை பிடித்தவள். “என்ன நினைச்சீங்க என்னோட அம்முவைப் பற்றி! ஏன் இந்த வீடியோவை அப்பவே நீங்க சரியான கண்ணோட்டத்துல பாக்கல?” என்று கதற, என்ன பதில் சொல்வது என்று புரியாமல் கல்லென நின்றிருந்தான் ஆதி. சரவணன்தான் அவளை கட்டுப்படுத்தி, அருகிலே இருந்த இருக்கையில் அமர வைத்தான். பின்பு அவள் பருகுவதற்குத் தண்ணீரைக் கொடுத்தவன், அவள் கொஞ்சம் தணிந்து அமைதி நிலைக்கு வந்த பிறகு, “இப்ப சொல்லு மல்லி இந்த வீடியோவைப் பார்த்ததும் உன்னால ஏதாவது கண்டுபிடிக்க முடிஞ்சிதா?” என்று கேட்டான். மறுபடியும் அந்தக் காணொளியை கணினியின் திரையில் ஓடவிட்டவள். “நான் நம்ம ட்ரைவர் கோபாலைத்தான் வி…வி…விரும்பறேன் அண்ணா. அவனிடம் எவ்வளவோ சொல்லியும் அவன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை” என்று அம்மு பேசிய இடத்தைக் குறிப்பிட்டு. அவளது கண்களின் அசைவுகளைச் சுட்டிக்காட்டியவள். “நான் அம்மு செல்வி மூணு பேரும் ஸ்கூலில் நடந்த ஒரு விழாவில் 'தாயே யசோதா' என்ற கண்ணன் யசோதா பாட்டுக்கு டான்ஸ் ஆடினோம். அப்பொழுது நான் வெண்ணையை சாப்பிடல என்று சொல்வது போல, கண்ணனாக நடித்த அம்மு பாவத்தை முகத்தில் குறிப்பாகக் கண்களில் கொண்டு வருவாள். அந்த எக்ஸ்ப்ரஷன் இப்படிதான் இருக்கும்! இது இல்லவே இல்லை என்பதைச் சொல்லும் குறிப்புதான்! அப்படின்னா அவள் அந்த நாயை விரும்பறேன்னு சொன்னாலும், அவளுடைய எக்ஸ்ப்ரஷன் இல்லவே இல்லலைனு தெளிவா சொல்லுது! அதுவும் காதலிக்கறேன்… லவ் பண்றேன்… எனும் வார்த்தைகளை அவள் உபயோகிக்கவே இல்லை. “அடுத்தது 'அவன் வேற பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுத்து விட்டதால் எனக்கு வாழ கொடுத்துவைக்கல அண்ணா' ன்னு அம்மு சொல்வது அவனுடைய கல்யாணத்தால் இவளால் வாழ முடியலன்னுதான் சொல்லியிருக்காளே தவிர, வாழ பிடிக்கலைனு சொல்லல! அடுத்ததா அவ தன்னோட உயிரைவிட மேலானவங்க, அப்படினு சொன்னது அவளோட அம்மா, அப்பா அண்ட் ராஜா அண்ணா இவங்களைத்தான். ஏன்னா என்னிடம் எப்பவுமே அவ அதை சொல்லிட்டே இருப்பா! அதனால அவளோட ராஜா அண்ணாவை அதாவது உங்களை வைத்துதான் அவளை எதோ ப்ளாக்மெயில் செஞ்சிருக்காங்க. உங்களை விட தன் உயிர் ஒண்ணும் பெருசில்லன்னுதான் அவ சொல்லியிருக்கா! கடைசியா மூக்குத்தியை விரலால் தொடுறா பாருங்க. அப்ப உங்க எமெரால்ட்னு அவள் சொன்னது” என்று சொல்லும்பொழுது உடைந்து அழத்தொடங்கிய மல்லியை தன் தோள்களில் சாய்த்துக்கொண்டவன், “உன்னைத்தான் மல்லி! அது இன்றுதான் எனக்கு புரிஞ்சுது! உன்னால் மட்டுமே அவளுடைய உணர்வுகளை புரிஞ்சிக்க முடியும் என்று அவள் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை மல்லி. உண்மையான உண்மை! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மல்லி. ரொம்ப தேங்க்ஸ். என் மனசுல இருந்த பாரமெல்லாம் இறங்கின மாதிரி இருக்கு!” என்று அவளை இறுக அணைத்துக்கொண்டான் ஆதி. தனது தொண்டையை செருமி தான் அங்கே இருப்பதை சரவணன் உணர்த்த, அவளை அவசரமாகத் தள்ளி நிறுத்தியவன், அப்பொழுதுதான் உணர்ந்தான் அவளது உடல் மறுபடியும் ஜுரத்தால் தகித்துக்கொண்டிருந்தது. அவளது முகம் வேறு வீங்கி சிவந்திருந்தது. “ஐயோ மல்லி! ஏன் இப்படி உன் உடம்பு கொதிக்குது” என அவன் பதற, உடனே அவளது நெற்றியில் கை வைத்துப் பார்த்த சரவணன் ஒரு மருத்துவனாக, “ஒண்ணும் இல்லண்ணா ராத்திரி முழுவதும் அவ தூங்கலை இல்ல, அதனால கூட இருக்கலாம் ரொம்ப அழுதிருக்கா வேற. பயப்படாதீங்க” என்றவன் அவளது ரத்த அழுத்தத்தை பரிசோதிக்க அதுவும் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அவன் சில மருந்துகளை எழுதிக்கொடுக்க, வேலை செய்பவர் மூலமாக அதை வாங்கிவரச்செய்து அவளைச் சாப்பிட வைத்தான் ஆதி. பால்கனி கூடை ஊஞ்சலில் அமர்ந்திருந்தவள் தன்னை மறந்து அப்படியே தூங்கிப்போனாள். அருகில் இருந்த சரவணன், “ஒண்ணுமில்ல பயப்படாதீங்க. அவளுக்கு ஸ்ட்ரெஸ் கொஞ்சம் அதிகமா இருக்கு. தூங்கி எழுந்தா எல்லாம் சரியாகிடும். அதனால தூங்குவதற்கு மைல்டு டோஸேஜ் மாத்திரை ஒண்ணு கொடுத்திருக்கேன்” எனக்கூற, இயல்பு நிலைக்குத் திரும்பினான் ஆதி. பின்பு அவளை தன் கைகளில் ஏந்தியவன் படுக்கையில் அவளைப் படுக்க வைத்து போர்த்திவிட, “எப்படிண்ணா சினிமா ஹீரோ மாதிரி இப்படி அசால்டா அவளை தூக்கறிங்க. அவ அவ்ளோ வீக்கா... இல்ல நீங்கதான் ர்ர்ரொம்ப ஸ்ட்ராங்கா?” என சரவணன் ஆதியைக் கலாய்க்க, அவனை முறைத்த ஆதி அப்படியே அவனைத் தூக்கவும், மிரண்டுதான் போனான் சரவணன். “ஐயோ அண்ணா நீங்க ஸ்ட்ராங்குதான். ஸ்ட்ராங்கோ ஸ்ட்ராங்கு. நம்பறேன் விட்ருங்க” என அலற அவனைக் கீழே இறக்கியவன், “அந்த பயம் இருக்கணும் தம்பி. என் பொண்டாட்டிய கலாய்ச்சியே, அப்பவே உன்னை சும்மா விட்டிருக்கக் கூடாது. இப்ப என்கிட்டயேவா?” எனக் கெத்துடன் சொல்ல, “தெரியாம சொல்லிட்டேன் தெய்வமே. நீங்க நிஜ ஹீரோதான். சூப்பர் ஹீரோ போதுமா!” என இரு கைகளையும் தூக்கி கும்பிட்டான் சரவணன். மனதிலிருந்த பாரங்கள் நீங்கி கலகலவென கம்பீரமாகச் சிரித்தான் ஆதி. *** சரவணன் மனநிறைவுடன் அங்கிருந்து சென்றதும், சுமாயாவை வரவழைத்து மல்லிக்குத் துணையாக வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச்சென்றான் ஆதி. ஆதிக்குச் சொந்தமான மிகப்பெரிய கோடௌனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அந்த கண்டைனர் லாரி. விஜித் பின்தொடர அந்த கன்டைனரின் உள்ளே சென்ற ஆதி, அதில் போடப்பட்டிருந்த இருக்கையில் தோரணையுடன் அமர, எதிரே இருந்த நாற்காலியுடன் கட்டப்பட்டு உடம்பில் அங்கங்கே ரத்தம் வழிய அரை மயக்கத்தில் தலை தொங்க உட்கார்ந்திருந்தான் அவன். அவனுடைய முகத்தில் தண்ணீரைத் தெளித்த கண்டைனர் மணி, “ஏய்! ஆதி அண்ணா வந்திருக்காரு பாரு. உன்ட்ட எதோ கேக்கணுமாம். மரியாதையா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு” என அவன் சொன்ன த்வனியில் அவனது வயிற்றில் பயப்பந்து உருள மிரண்டு அவனைப் பார்த்தான் கோபால்!. அப்பொழுது கையில் வைத்திருந்த கைப்பேசி ஸ்பீக்கரில் போடப்பட்டிருக்க அவனது அருகில் வந்த விஜித், “சொல்லும்மா உன் புருஷன் மேலே கொடுத்திருந்த கேஸை வாபஸ் வாங்க சொன்னதுக்கு அவ்வளவு வருத்தப்பட்டியே, இப்ப சொல்லு அவனை என்ன செய்யலாம்?” என்று கேட்க, மறுமுனையில், “அவனை உயிரோட விடாதீங்க அண்ணா. அவன் இந்த உலகத்திலேயே வாழத் தகுதி இல்லாதவன்!” என்றாள் கோபாலின் பாவப்பட்ட மனைவி திலகா. அதைக் கேட்கவும் பயத்தில் அவனது முகம் வெளிறிப்போக, “இப்ப சொல்லு அம்மு செத்துப்போன அன்றைக்கு உண்மையில் என்ன நடந்தது” கர்ஜனையாக ஒலித்தது தேவாதிராஜனின் குரல்.

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page