top of page

TIK-22

இதயம்-22

அம்முவின் கடிதத்தை முழுவதுமாகப் படித்து முடித்ததும் மல்லியின் முகம் இருண்டு போனது. அதுவும் அந்த படத்தைப் பார்த்த்தும், அவள் மனதில் அம்முவை நினைத்து சொல்லொணா துயர் எழுந்தது. மனதின் கனம் தாங்காமல் ஆதியின் அருகில் வந்து உட்கார்ந்தவள், அவனது மார்பினில் முகத்தைப் புதைத்துக்கொள்ள கண்களில் கண்ணீர் அருவியாய் வழிந்து கொண்டிருந்தது. அவளின் அந்த நிலை மனதை உறுத்த எழுந்து உட்கார்ந்தவன், ஆதுரமாக அவளது முகத்தைப் பற்றி கண்ணீரைத் துடைத்து, “போதும் இனிமேல் இந்த விஷயத்தில் அழ புதுசா எதுவும் இல்லை. அம்மா வேறு நாளைக்குச் சுமங்கலி பூஜைக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. வேலை இருக்கும் நீ போய் தூங்கு” என்று சொல்லவும் பேசாமல் போய் படுத்துக்கொண்டாள் மல்லி. சிறிது நேரத்தில் தூங்கியும் போனாள். “மல்லி! மல்லி!” என்று அழைத்தவாறு அவளை வந்து அணைத்துக்கொண்ட அம்மு, “ராஜா அண்ணா என்னை நம்பறாங்க மல்லி! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!”. “இப்ப எனக்கு அவங்கமேல கொஞ்சம் கூட கோவமே இல்ல மல்லி!” “இனிமேல் அண்ணா இருக்கும்போது கூட உன்னைத் தேடி வருவேன்!” என அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவளை ஒருவன் வந்து இழுக்க, என்னை விடு எனக் கத்தியவள் மல்லியின் கையை இருகப் பற்றிக்கொண்டாள். ஒரு நிலையில் அவளது பிடி தளர்ந்து போக, அவன் அம்முவை எங்கோ இழுத்துச் சென்றான். “அம்மு! அம்மு! எங்கடி இருக்க?” எனக் கதறியவாறே, மல்லி இருள் சூழ்ந்த அந்தப் பகுதியில் அம்முவைத் தேடிச் செல்ல ஒரு மிகப்பெரிய கதவில் போய் இடித்துக் கொண்டு அவள் நிற்கவும், அதில் பொருத்தப் பட்டிருந்த சிறிய கண்ணாடி மூலம் உள்ளே பார்க்க, மங்கலான வெளிச்சத்தில் அவள் கண்ட காட்சி அவளது ரத்தத்தை உறைய வைத்தது. அங்கே இருந்த ஒரு மேடையில் அம்மு கிடத்தி வைக்கப்பட்டிருக்க கூர்மையான கத்தியைக் கொண்டு அவளது உடலைக் கிழித்தவன், அவளது ஒவ்வொரு உறுப்பாகப் பிய்த்து வெளியே ஏறிய, கடைசியாக அவளது இதயத்தை எடுத்து அங்கே இருந்த ஒரு கண்ணாடி குடுவையில் வைத்தான். வெறியுடன் அதை எதிர்பார்த்துக்கொண்டிருந்த மிகப் பெரிய கழுகு ஒன்று அதைக் கொத்திக்கொண்டு பறந்து போனது. உடனே அந்தக் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தவன், அங்கே நின்றிருந்த மல்லியை வெறித்த ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அங்கிருந்து செல்ல, அப்பொழுதுதான் அவனது முகத்தைப் பார்த்தவள், பயத்தில் உடல் நடுங்கிப் போனாள். “வினோத்!” என்ற அலறலுடன் எழுத்து உட்கார்ந்தாள் மல்லி. அவளுடைய அலறல் கேட்டு, அவளை நெருங்கி உட்கார்ந்த ஆதி அவளை அணைத்தவாறு “மல்லி! மல்லிமா! என்னப்பா ஆச்சு” என்று பதறியபடி கேட்க, முதலில் உறுத்து விழித்து, “அம்மு! அம்மு!” என்றவள், “அந்த வினோத்!” என்றாள் உளறலாக. அவள் பேசுவது புரியாமல், “அம்மு கனவில் வந்தாளா?” என்று கேட்டான் ஆதி. சில நொடிகள் யோசித்தவள், “ஆமாம்!” என்பதுபோல் தலை ஆட்ட, “முதலில் தண்ணியைக் குடி” என்று தண்ணீர் பாட்டிலை அவளிடம் கொடுத்தான் ஆதி. அவள் அதை வாங்கிப் பருகும் வரை பொறுத்தவன், “இப்ப சொல்லு என்ன கனவு?” என்று கேட்க, அந்தக் கனவின் தாக்கத்தில் அவள் உடல் நடுங்கியது. பரிவுடன் அவளது உச்சியை வருடியவாறு, “பரவாயில்லை மல்லி! சொல்ல முடியலைன்னா விட்டுடு” என ஆதி சொல்லவும், “இல்ல! நான் சொல்றேன்!” என்றவள் அவள் கண்ட கனவை விவரிக்கவும், முகத்தில் எந்த வித உணர்ச்சியையும் காண்பிக்காமல் அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆதி, “சரி! நீ தூங்கு! இல்லன்னா மறுபடியும் உடம்பு சரியில்லாமல் போயிடும்!” என்று கூறி விட்டு கைப்பேசியை எடுத்துக்கொண்டு பால்கனி நோக்கிப் போனான். அவனிடம் கனவைப் பற்றி சொன்ன பிறகு மனதின் அழுத்தம் குறையவும் கண்மூடி படுத்துக்கொண்டாள் மல்லி. அடுத்த நாள் சுமங்கலி பூஜை காரணமாக மிகவும் பரபரப்பாகவே விடிந்தது மல்லிக்கு. தினசரி காலை வேலைகளினோடே, பூஜைக்கான வேலைகளையும் செய்துகொண்டிருந்தாள் மல்லி. உடற்பயிற்சி முடித்து குளித்துவிட்டு, வெளியே செல்லத் தயாராக ஆதி அங்கே வரவும் அவனைப் பார்த்த லட்சுமி, “பூஜை வைத்திருக்கும்போது நீ இங்கே இருக்க வேண்டாமா ராஜா! நீ அமெரிக்கால இருந்ததுனாலதானே கல்யாணத்திற்கு முன்பே செய்ய வேண்டிய இந்த பூஜையை இப்ப செய்யறோம்” என மகனைக் கடிந்துகொள்ளவும், “நான் இன்னைக்கு ஆபீஸ் போக வேண்டாம்னுதான் நினைச்சேன்மா. ஆனால் அவசரமாக அமிர்தாஸ் போக வேண்டியதாக இருக்கு. எப்படியும் புடவை வைத்துப் படைக்க ஒரு மணியாவது ஆகும்தானே? அதுக்குள்ள வந்திடுவேன் மா!” என்றவன், “பூஜைன்னு எல்லாரையும் கூப்பிட்டிருக்கீங்க. எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க. இந்தக் கயல் அத்தையும் சுலோச்சனா சித்தியும் எதாவது ஏழரையை இழுத்து விடப் போறாங்க” என ஆதி முடிக்கவும், “அவங்க இப்பல்லாம் உனக்குப் பயந்து எதுவும் பிரச்சினை செய்வதில்லை ராஜா!” என்றார் லட்சுமி. “இருந்தாலும் கவனமாக இருங்கம்மா” என்று கூறி விட்டு அங்கே பூக்களைத் தொடுத்துக் கொண்டிருந்த மல்லியிடம் பை என்பதுபோல் கை காட்டிவிட்டுச் சென்றான் ஆதி. மல்லியின் கைப்பேசி மெசேஜ் வந்ததற்கான ஒலியை எழுப்பவும் அவள் அதை எடுத்துப் பார்க்க, “அங்கே இருக்கும் பூக்களில் எனக்குப் பிடித்த பூ இருக்கா?” என ஆதிதான் அனுப்பியிருந்தான். “ஐயோ! அவருக்கு என்ன பூ பிடிக்கும்னு தெரியலியே” என நினைத்த மல்லி, அருகில் இருந்த மாமியாரிடம். “அத்தை! அவங்களுக்கு என்ன பூ பிடிக்கும்?” என கேட்க, “யாருக்கு ராஜாவுக்கா?” என்றவர், “அவனுக்கு ரோஜா தான் பிடிக்கும். அம்மு இருந்தவரைக்கும், அடிக்கடி அவளுக்கு கலர் காலரா ரோஸ்த்தான் வாங்கிட்டு வருவான்” என்றார் லட்சுமி. பிறகு, “திடீர்னு நீ ஏன் இதை கேக்கற?” என அவர் கேள்வி எழுப்பவும், என்ன சொல்வது என ஒரு நொடி திகைத்தவள், “சும்மாதான் அ...த்தை” என்றவளை விசித்திரமாகப் பார்த்துக்கொண்டே அங்கிருந்து சென்றார் லட்சுமி. உடனே ரோஜா பூக்களின் படம் ஒன்றை அவனுக்கு அனுப்பிவைத்தாள் மல்லி. “இல்லை” என அவன் பதில் அனுப்பவும், “அத்தை அப்படித்தானே சொன்னாங்க!” என அவள் டெக்ஸ்ட் செய்யவும், “லூசு” என மனதில் நினைத்தவன். “உனக்குத் தெரியலைனா என்னிடம்தானே கேட்கணும். உனக்கு இன்னும் ஒரு சான்ஸ் தரேன். எனக்கு பிடிச்ச பூ அங்கே இருக்கா? என அவன் மறுபடியும் மெசேஜில் கேட்கவும், “ஒருவேளை மல்லிகையாய் இருக்குமோ?” என நினைத்தவள் மல்லிகைப் பூவின் படம் ஒன்றை அனுப்ப, “எனக்கு மல்லிகையைப் பிடிக்காது. இந்த மல்லியைத்தான் பிடிக்கும்” என்ற குறுஞ்செய்தியைத் தொடர்ந்து, அவர்களது வரவேற்பன்று எடுக்கப்பட்டிருந்த மல்லியின் டிஜிட்டல் படத்தை அனுப்பியிருந்தான் ஆதி. அதைக் கண்டவுடன் நாணத்தில் முகம் சிவக்க, அடக்கப்பட்ட சிரிப்புடன் சுற்றிலும் யாராவது தன்னை கவனிக்கிறார்களா எனப் பார்த்த மல்லி, அங்கே யாரும் இல்லாமல் இருக்கவும் நிம்மதியுடன், “இதுதான் உங்களுடைய முக்கியமான வேலையா?” எனக் கேட்க, “இல்லையா பின்ன!” எனப் பதில் வந்தது ஆதியிடமிருந்து. அதற்குள் அங்கே ஆதியின் அத்தையும், மாமாவும் அங்கே வரவும், “பை” என்று முடித்துக்கொண்டாள் மல்லி. முந்தைய இரவில் அவளது அழுகை அவனுக்கு நினைவில் வரவும், அவளைச் சிரிக்க வைத்துப் பார்க்கவே அவன் மல்லிக்கு வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் செய்தது. அவளைக் கண்காணிப்பு கேமராவில் பார்த்துக் கொண்டேதான் அவன் சாட் செய்துகொண்டிருந்தான். அவளது பாவனையை நினைத்து, சிரித்துக்கொண்டே, தன் வேலையில் மூழ்கிப்போனான் ஆதி. சிறிது நேரத்திற்கெல்லாம் வரதனின் தம்பி செல்வேந்திரனும், அவனது மனைவி சுலோச்சனா, மகன்கள் மற்றும் மருமகள்களும் அங்கே வந்து சேர்ந்தனர். அந்தப் பூஜையில் பங்காளிகள் மட்டுமே பங்கெடுக்கும் வழக்கம் அவர்கள் குடும்பத்தில் உள்ளதால், மல்லியின் வீட்டினர் அதற்கு அழைக்கப்படவில்லை. தடபுடலாக உணவு வகைகள் சமைக்கப்பட்டு, இலையில் படையல் போட்டிருந்தனர். பருத்தி நூல் புடவை மஞ்சள் நீரில் அலசி காயவைக்கப்பட்டு, அம்மன் முகம் போல் செய்து பூஜையில் வைக்கப்பட்டிருந்தது. ஆதி, சொன்னதுபோல் சரியாக படையல் போடும் நேரத்திற்கு அவன் வந்து சேரவும், நல்லபடியாக பூஜையை முடித்து அவர்கள் வீட்டுப் பெண்ணான ஆதியின் அத்தை கயல்விழிக்கு தாம்பூலத்துடன், அந்தப் புடவையை வைத்துக் கொடுத்தனர். பின்பு அனைவரும் உணவு உண்டு முடித்து, கயல் அந்தப் புடவையை உடுத்தி வரவும் சிறியவர்கள் அனைவரும், அவர்களது துணையுடன் அவரது கால்களில் விழுந்து, ஆசி பெற்றனர். மனதிற்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அன்னைக்காக ஆதியும், மல்லியுடன் சேர்ந்தது ஆசி பெற்றான். சிறிது நேரத்தில் செல்வேந்திரனுடைய பிள்ளைகள் கிளம்பிவிட பெரியவர்கள் மட்டுமே அங்கே இருந்தனர். மல்லியைச் சீக்கிரமாக அவர்களது அறைக்கு அனுப்புமாறு அத்தை மற்றும் சித்தியை குறிப்பிட்டு, அன்னையிடம் சைகை காட்டியவாறு ஓய்வெடுக்கலாம் என்று அவனது அறைக்குள் நுழைந்தான் ஆதி. அதே நேரம் அவனது கைப்பேசி இசைக்கவும் புதிய எண்ணாக இருக்க யோசனையுடன் அந்த அழைப்பை ஏற்றான். கோபாலை விசாரிக்கும் காவல்துறை ஆய்வாளர் அழைத்திருந்தார். ஆதியின் உயரம் தெரிந்திருந்ததால் மிகவும் பணிவுடனேயே பேசினார் அவர். “தவறாக நினைக்காதீங்க சார்! அந்த கோபால் உங்களை நன்றாகத் தெரியும்னு சொல்றான். உங்களை ஒரு முறை நேரில் பார்க்கணும்னு, அனுமதி கேட்கிறான் என்ன செய்யலாம்?” என்று அவர் கேட்கவும், மேலும் யோசனையில் அவனது புருவங்கள் சுருங்கியது. “யாரோ ஒரு கிரிமினல் என்னைத் தெரியும்னு சொன்னால் நீங்க அதை நம்புவீர்களா?” என்று ஆதி கேட்கவும், “இல்லை சார்! அவன் நான்கு வருடங்களுக்கு முன்பாக உங்களிடம் ட்ரைவராக வேலைப் பார்த்ததாகச் சொல்றான்!” என்றார் அவர். அதிர்ந்த ஆதி, “ஓ! அவனா?” என்றவாறு, சிறிது நேரத்தில் அங்கே வருவதாகச் சொல்லி அழைப்பைத் துண்டித்தான். அதே நேரம் மல்லி அவர்களது அறைக்குள் நுழையவும், “மல்லி! நான் கொஞ்சம் அவசர வேலையா போகணும். திரும்பி வரக் கொஞ்சம் நேரம் ஆகலாம்” என்றவன், “நீ இப்ப கீழே போக வேண்டாம் இங்கேயே இருந்து ரெஸ்ட் எடு. சாரி! இன்று ஒரு நாள் மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ மல்லி!” என்று சொல்லிவிட்டு, வேகமாக அங்கிருந்து கிளம்பிச்சென்றான் ஆதி. அவன் எது நடக்கக்கூடாது என்று நினைத்து அவளை அங்கே இருக்கச்சொன்னானோ, இறுதியில் அதுதான் நடந்தது மல்லி அங்கே இருந்ததனால்! யார் தடுத்தாலும் நடப்பது நடந்தே தீரும் என்பதுபோல்!. *** ஓட்டுநர் காரைச் செலுத்த பின்னால் உட்கார்ந்திருந்தான் ஆதி முன் பக்க இருக்கையில் விஜித். கோபால் என்ற பெயரைக் கேட்டதும், அவனுடைய பழைய ஓட்டுநர் நினைவே வரவில்லை ஆதிக்கு. தொலைக்காட்சியில் கூட அவனது முகம், தெளிவாகக் காண்பிக்கப்படவில்லை. ஆதியுமே அன்று அதிகாலைத் தொட்டு, அவனுடைய பழைய ஓட்டுநர் கோபாலை, சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருந்தான். மணியிடம் சொல்லி அவனைப்பற்றி விசாரிக்க எண்ணியிருந்தான். அதற்கான நேரம்தான் அவனுக்கு அமையவில்லை. ஆனால் இந்த கோபால்தான், அவனது பழைய ஓட்டுநர் என்பது தெரியவும் கொஞ்சம் அதிர்ந்துதான் போனான் ஆதி. முன்பே தெரிந்திருந்தால் வேறு மாதிரி இந்தச் சூழ்நிலையை கையாண்டு இருந்திருப்பான். விஜித் பின் தொடர போலீஸ் காவலில், லாக்கப்பில் இருந்த கோபாலை சந்தித்தான் ஆதி. ‘முன்பு ஒல்லியாக அப்பாவி போன்ற தோற்றத்தில் இருந்தவனா இவன்?’ என்ற எண்ணம் தோன்றியது ஆதிக்கு. இப்பொழுது அவனைப் பார்ப்பதற்கு ரத்தத்தை குடிக்கும், கொழுத்த ஓநாய் போன்றே தோன்றினான் அவன். உள்ளுக்குள்ளே பொங்கிக்கொண்டிருக்கும் ஆத்திரத்தை வெளியில் காண்பிக்காமல், “சொல்லு கோபால்! எதுக்காக என்னை பார்க்கணும்னு சொன்ன?” என ஆதி கேட்க, விஜித்தை பார்த்துக்கொண்டே கோபால், ஆதியிடம், “நான் உங்களுடன் தனியா பேசணும்!” என்றான் ஆணவமாக. கோபத்தில் விஜித்தின் கண்கள் சிவந்து அவனை அடிப்பதற்குத் தயாராக கை முஷ்டி இறுகியது. அதைக் கவனித்த ஆதி புன்னகையுடனே, “பரவாயில்ல ஜித்... நீங்க கார்ல வெயிட் பண்ணுங்க நான் பேசிட்டு வரேன்” என்று சொல்லிவிட, கோபாலை முறைத்தவாறே சென்றான் விஜித். அடக்கப்பட்ட கோபத்துடன், “இப்ப சொல்லு என்ன விஷயம்” என ஆதி கேட்க, “நான் இப்ப இருக்கும் நிலைமையில் உங்களால மட்டும்தான் என்னை வெளிய எடுக்க முடியும். நீங்க அதை செஞ்சுதான் ஆகணும்!” என மிரட்டுவது போல் சொன்னான் கோபால், அவனைச் சிக்க வைத்ததே ஆதிதான் என்பதை அறியாமல். “என்ன கோபால்! என்னையே மிரட்டி பாக்கறியா?” என ஆதி கேட்கவும், “அப்படித்தான்னு வச்சுக்கோங்க. நீங்க என்னை வெளிய எடுக்கலேன்னா நான் பழசையெல்லாம் பேச வேண்டியிருக்கும். அனாவசியமா, செத்துப் போன அம்முவின் பெயர் எல்லா சானலிலும் சந்தி சிரிக்கும் பரவாயில்லையா?” என அவன் கேவலமாக மிரட்டவும், சலனமின்றி, “என் தங்கைக்காக கட்டாயம் இந்த கேசிலிருந்து நான் உன்னை வெளியில் கொண்டு வரேன்” என ஆதி சொல்ல, கோபாலால் நம்பவே முடியவில்லை. ஆதி இதைச் செய்ய உடனே சம்மதிப்பான் என்று அவன் கொஞ்சமும் நினைக்கவில்லை! அவனது திகைத்த முகத்தைப் பார்க்கவும் ஆதியின் உதடுகள், “என்னிடமேவா?” என்பதுபோல் ஏளனமாக வளைந்தது. அவன் செய்த செயல்களும், அம்முவைப் பேசிய வார்த்தைகளும், மிகக்கூர்மையான கத்திகளாக மாறி அவனையே தாக்கத் தயாராக இருப்பதை அறியவில்லை கோபால். திலகாவிடம் சொல்லி, கோபாலின் மேல் அவள் கொடுத்த புகாரை, உடனே திரும்பப் பெற வைத்திருந்தான் ஆதி. திலகாவின் இருப்பிடமோ, அதில் ஆதியின் தலையீடு இருப்பதோ எதுவுமே வெளியில் தெரியாமல் அனைத்தையும் செய்து முடித்திருந்தான். இதற்கிடையில் மருத்துவமனையில் கோபாலின் அம்மா சரசு இறந்துவிடவும், நேரடியாக அங்கே சென்றுவிட்டான் கோபால். அனைத்தும் முடிந்து ஆதி வீடு வந்து சேரவுமே இரவு, மணி பத்தை கடந்திருந்தது. வழக்கம் போல் தலை வரை போர்த்திக்கொண்டு மல்லி படுத்திருக்க அவள் உறங்குகிறாள் என்று எண்ணிய ஆதி குளித்து உடை மாற்றி வந்து அவள் அருகே உட்காரவும், மல்லியிடமிருந்து மெல்லிய விசும்பல் கேட்டது! அழுகையில் அவளது உடல் குலுங்கிக்கொண்டிருந்தது!

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page