top of page

TIK-21

இதயம்-21

மகன் ரத்தினவேலிடம் ஆத்திரத்தில் குதித்துக்கொண்டிருந்தார் முன்னாள் அமைச்சர்! தங்கவேலு. “நீ வேலைக்கே ஆகமாட்ட ரத்தினம். போனைப் போட்டு மாப்பிளையை உடனே இங்கே வரச்சொல்லு” என்ற அவரது வார்த்தைகளால் ரத்தினவேலுவின் மனதில் இருந்த வன்மம் எகிறிக்கொண்டே கொண்டே போனது. “என்ன பெரிய மாப்பிள்ளையைக் கண்டீங்க. என்ன இருந்தாலும் நம்மகிட்ட சம்பளம் வாங்கிட்டு இருந்தவன் தானே. நாம இப்ப இருக்கும் நிலைமையில் அப்படி என்ன தலைபோகும் வேலைனு அமெரிக்கால போய் உட்கார்ந்து கொண்டிருக்கானாம் உங்க மாப்பிள்ளை? நம்ம ரெண்டுபேரையும் ஜெயிலுக்கு அனுப்பிட்டு மொத்த சொத்தையும் ஆட்டைய போடலாம்னு நினைக்கறானா அவன்” அவனது மனதில் இருந்த வெப்பம் வார்த்தைகளில் தகித்தது. மகனது கேள்வியில் சில நொடிகள் அமைதி காத்த தங்கவேலு, “காரணம் இல்லாமல் மாப்பிள்ளை எதையும் செய்ய மாட்டார்! நம்ம கிட்ட சம்பளம் வாங்கினவர்தான். ஆனாலும் உன்கிட்ட இல்லாத புத்திசாலித்தனம் அவரிடம்தான் இருக்கு. முதலில் வீடியோ காலில் அவரைக் கூப்பிடு” என்று அழுத்தமாகச் சொல்லவும், “இப்ப அங்க நடு சாமம் தெரியுமா? உங்க மருமகன் கூப்பிட்ட உடனே போனை எடுத்துறப்போறாரு!” எனச் சலித்தவரே, லேப்டாப்பை எடுத்து வினோத்தை வீடியோ சாட்டிங்கிற்கு அழைத்தான் ரத்தினம். அடுத்த நொடியே அழைப்பை ஏற்ற வினோத், ரத்தினம் என்ற ஒருவன் அங்கே இருப்பதையே கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், நேரடியாகத் தனது மாமனாரிடம் பேசத்தொடங்கினான். “என்ன நடக்குது மாமா அங்க? இப்பதான் டிவி நியூஸ்ல பார்த்தேன். அந்த மீடியேட்டர் கோபாலை அரெஸ்ட் பண்ணி வச்சிருக்காங்க! அவன் பொண்டாட்டியே அவன் பெயரில் போலீசில் கம்ளைண்ட் செஞ்சிருக்கா!” என அவன் பொரிந்து தள்ளவும், “அதைப் பற்றி பேசத்தான் மாப்பிள்ளை உங்களைக் கூப்பிட்டேன்” என்ற தங்கவேலு, “அந்த கோபால் நம்மை மீறி எதுவும் பேசமாட்டான்! ஆனால்” என்று இழுத்தவர். “அந்த பொண்ணுதான் ஏதாவது பிரச்சினை செஞ்சா செய்யணும். அதனால அந்த குணாவைப் போட்ட மாதிரி அந்தப் பொண்ணையும் போட்டுத் தள்ளிடலாம்ன்னு ரத்தினம் சொல்றன்! நீங்க என்ன நினைக்கறீங்க?” என்று கேட்க, சில நிமிட மௌனத்திற்குப் பிறகு, “வேண்டாம் மாமா! எதோ பெரிய சப்போர்ட்லதான் அந்த பொண்ணு துணிஞ்சு போலீஸ்க்கு போயிருக்கு. அது யாருன்னும் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு! அதைத் தெளிவு படுத்திட்டு, பிறகு என்ன செய்யலாம்னு முடிவு பண்ணுவோம்!” என்று தெளிவாகச் சொன்னான் வினோத். ஏளனமாக மகனைப் பார்த்த தங்கவேலு, “இப்ப புரிஞ்சுதா ஏன் மாப்பிளையை கூப்பிடச்சொன்னேன்னு?” என்று கூறிவிட்டு, மடிக்கணினியின் திரையில் ஒளிர்ந்த வினோத்தை நோக்கி, “நீங்க எப்ப இங்க வரீங்க மாப்பிள?” என அவர் கேட்க, “சீக்கிரம் வந்திடுவேன் மாமா. நம்ம ஹாஸ்பிடலில் முதல் முதலில் அன்னம் என்ற பெண்ணின் பெயரில், கிட்னி... கண்... லங்ஸ்... லிவர்... என நாம நாலு பேருக்கு பொருத்தினோம் நினைவிருக்கா?” என அவன் கேட்க, சில நிமிடங்கள் மெளனமாக இருந்த தங்கவேலு, “வயசாயிடுச்சில்ல மாப்பிள, யாரை சொல்றிங்கன்னு புரியல தெளிவாக சொல்லுங்க?” என அவர் சொல்லவும், “இதுக்கு மேல தெளிவா இப்ப என்னால சொல்ல முடியாது மாமா. வீடியோ சாட்டிங்ல இப்ப பேசியதே அதிகம்தான்” என்றவன் தொடர்ந்து, “முதலில் செஞ்சதுதான் மாமா!” என்றவன், “அந்த நாலு பேருக்குமே கேன்சர்னு கண்டுபிடிச்சிருக்காங்க. அதில் ஒரு லேடி இறக்கும் தருவாயில் இருக்காங்க. இது மிகப்பெரிய சிக்கலான விஷயம் மாமா. அதை சரிசெய்யத்தான் நான் இங்கே வந்திருப்பதே. இல்லன்னா நாம காம்பென்சேஷனா பல கோடிகளை இழக்க வேண்டியிருக்கும்.” என அவன் சொல்லவும் வாயடைத்துப் போனார் தங்கவேலு. ஏளன சிரிப்புடன் தந்தையை நக்கலாக ஒரு பார்வைப் பார்த்தான் ரத்தினம். “என்ன மாப்பிள இவ்ளோ கூலா சொல்றீங்க. கேன்சர் இருக்கறவங்க உடல் உறுப்பை எப்படி வேறு ஒருத்தருக்கு வெச்சீங்க?” எனச் சூடாக அவர் கேட்கவும், “இப்ப என்னால எதுவும் விளக்கமா சொல்ல முடியாது. அதனால நேரில் பேசிக்கலாம். ஓரளவிற்கு இங்கே பிரச்சினையை சரி செய்துட்டேன். இன்னும் ரெண்டு இல்லனா மூணு நாளில் நான் அங்கே வந்திடுவேன்.” என்று அழைப்பிலிருந்து விலகினான் வினோத். தனது மடிக்கணினியைத் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான் ரத்தினவேலு. அந்த நான்கைந்து நாட்களுக்குள் வரிசையாக இன்கம் டாக்ஸ் ரெய்ட்! அவர்களுடைய பள்ளி வளாகத்தில் பிணங்களைத் தோண்டி எடுத்தது! அடுத்து புதிதாகக் கிளம்பியிருக்கும் இந்தப் பிரச்சினை வேறு! மருத்துவமனையின் பெயர் வெளியில் வந்தால், ஏற்கனவே கோபத்தில் இருக்கும் மகள் மற்றும் மனைவியின் முகத்தில் இனி விழிக்கவே முடியாது. குற்றங்களில் ஈடுபடும்போது வராத பயம் இப்பொழுது வந்தத்தில் பேய் அறைந்ததுபோல் முகம் வெளிறி உட்கார்ந்திருந்தார் தங்கவேலு. ஏனோ இறந்துபோன அவரது மூத்தமகன் ராஜவேலுவின் நினைவு வந்தது அவருக்கு. ‘தன்னை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டதே அவன்தானே! அவன் மேல் தான் கொண்ட அளவுகடந்த பாசம்தானே!’ எனத் தோன்றவும் அவரது தலையே வெடித்திவிடும்போல வலிக்கத் தொடங்கியது. வினோத்தை மகளுக்குத் திருமணம் செய்து வைத்து தீராத பாவத்தை அந்த நல்ல பெண்ணுக்கு செய்துவிட்டோமோ என்ற எண்ணம் முதன் முதலாய் அவரது மனதைச் சுட, அடுத்த நொடியே, “அம்மா! தாமரை!” என்றவாறு மயங்கிச் சரிந்திருந்தார் அவர். *** இரண்டாவது மறுவீடு முறைக்காக மல்லியை அவளது தாய்வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் ஆதி. வழக்கத்தை விட அதிக உற்சாகத்துடன் அங்கே இருக்கும் குழந்தைகளுடன் தீபனையும் சேர்த்துக்கொண்டு வீட்டையே இரண்டாக ஆக்கிக்கொண்டிருநதாள் மல்லி. பரிமளாவின் கண்டிப்பு ஒன்றுமே அவளிடம் எடுபடவில்லை. அவளை எதுவும் சொல்லவேண்டாம் என்று ஆதி அவளுக்குப் பரிந்து வரவும் சிரித்துக்கொண்டே வேலையை கவனிக்கப் போய்விட்டார் அவர். காலை அவர்களுடைய வீட்டிலிருந்து கிளம்பும் சமயம் மல்லியை அழைத்தவன் தொலைக்காட்சியைச் சுட்டிக்காட்ட, அதில், ‘மூன்று ஆண்டுகளாக கருமுட்டை தானம் என்ற பெயரில் சென்னையைச் சேர்ந்த திலகா என்ற பெண்ணை வற்புறுத்தி ஈடுபடுத்தி வந்த அவரது கணவர் கோபால் கைது! கோபாலுடைய அன்னை சரசு பயத்தில் தீயிட்டுத் தற்கொலை முயற்சி! உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதி! கோபாலைத் தொடர்ந்து இன்னும் பலர் இந்தப் பிரச்சினையில் சிக்கலாம் எனக் காவல்துறை துணை ஆணையர் அறிவிப்பு’ என அன்றைய முக்கியச் செய்தியாக ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. மகிழ்ச்சியில் ஆதியின் தோளை பிடித்துக்கொண்டு, “வாவ்! உங்க வேலைதானே மாம்ஸ்! தேங்க்ஸ்! தேங்க்ஸ்!” என்று துள்ளி குதித்துக் கொண்டிருந்தாள் மல்லி. இடையோடு சேர்த்து, அவளை அணைத்தவன், திரும்பி அவளை ஒரு பார்வை பார்க்கவும் தன் நிலை உணர்ந்து அவனை விட்டு விலக்கியவள். அவனது கன்னத்தில் மெலிதாக இதழ் பதித்து, “தேங்க்ஸ்!” என்று சத்தமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடியே போனாள் மல்லி. அவனது விழிகள் மல்லியையே தொடர்ந்தவண்ணம் இருக்க, காலை நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தவனின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது. அப்பொழுது அவனது கைப்பேசி ஒலிக்கவும் அதை எடுத்துப்பார்த்தவனின் கண்கள் யோசனையில் சுருங்க, அதைக் காதில் பொருத்தியவாறு வெளியில் சென்றான் ஆதி. சில நிமிடங்களில், திரும்ப வந்தவன் மல்லியை அழைத்து. “நான், கொஞ்சம் அவசரமாக போகணும் மல்லி! எப்படியும் ஈவினிங்தான் என்னால வர முடியும். அத்தை, மாமாவிடம் சொல்லிடு” என்றவன் அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, “அம்மா ஆசையுடன் உங்களுக்காக சமைச்சிருக்காங்க. சாப்பிட்டு போங்களேன் ப்ளீஸ்!” என மல்லி சொல்லவும் மறுக்க முடியாமல் அவர்களுடன் மதிய உணவை உண்டு முடித்து, அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பிச்சென்றான் ஆதி. ஜெகன் சிறிது நேரத்திற்குள் வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு நூலகத்திற்குக் கிளம்ப, தீபனும் சில புத்தகங்கள் எடுக்கவேண்டும் என்று அவருடன் சென்றான். மல்லி மேலும் எதாவது தகவல் இருக்கிறதா என அறிய, தொலைக்காட்சியில் ஒரு செய்தி சேனலை வைத்துப் பார்த்துக் கொண்டிருக்க அதிசயமாகிப் போனது பரிமளாவிற்கு. “என்ன மல்லி நாலஞ்சு நாளுக்குள்ள மாப்பிள்ளையோட சேர்ந்து உனக்கும் மூளை கொஞ்சம் வளர்ந்துடுச்சு போலிருக்கு!” என அவளைக் கிண்டல் செய்யவும், “போம்மா! உனக்கு வேறு வேலை இல்ல” என்றவள் செய்திகளில் மூழ்க, பரிமளா அறைக்குள் சென்றார் ஓய்வெடுக்க. அனைத்து சேனல்களிலும் காலையில் காண்பித்த செய்திகளையே, திரும்பத் திரும்ப காண்பிக்கவும், அலுத்துப்போன மல்லி அப்படியே உறங்கிப்போனாள். “தேங்க்ஸ் அண்ணா! தேங்க்ஸ்! தேங்க்ஸ்!” என்று காலையில் மல்லி செய்தது போலவே, ஆதியின் தோளில் தொங்கிக்கொண்டு அம்மு குதிக்க, பக்கத்தில் நின்றுகொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்த மல்லியிடம், “நீ மட்டும்தான் இப்படி செய்வியா? என்னோட ராஜா அண்ணா! நானும் செய்வேன் போடி!” என்றவள் மல்லியின் அருகில் வந்து அவளை அணைத்துக்கொண்டு, “தேங்க்ஸ்..டி அண்ணி உன்னாலதான் என்னோட அண்ணா என்னைப் புரிந்துகொண்டார்” எனச் சொல்லி அவளது கன்னத்தில் அம்மு அழுந்த முத்தமிடவும், மல்லியின் கன்னத்தில் சிலீர் என்ற உணர்வு தோன்ற பதறி எழுந்து உட்கார்ந்தவள் கன்னத்தைத் தொட்டுப் பார்க்க, விளையாட்டாக தீபன்தான் குளிர்ந்த நீரை அவளது கன்னத்தில் தெளித்திருந்தான். பதட்டத்தில், “டேய்! தீபா! குரங்கே! பன்னி!” என அவள் திட்டத் தொடங்கவும் பரிமளாவும் அவளுடன் சேர்ந்துக்கொண்டு, “ஏய்! தூங்கற புள்ளைய இப்படியாடா தொல்லை பண்ணுவ?” எனக் கேட்க, “சாரி..க்கா எப்பவும் போல சும்மா விளையாட்டுக்கு செஞ்சேன்” என வருந்தினான் தீபன். “சரி விடு நானும் பயந்துபோய்தான் உன்னைத் திட்டிட்டேன்” என முடித்தாள் மல்லி. பிறகு ரிமோட் தீபன் கைக்கு போய்விட, நேரத்தைப் பார்த்தால் மணி நான்கைத் தாண்டி இருந்தது. ஒரு மணிக்குச் சென்ற ஆதி அதுவரை வராததால் அவனை எதிர்பார்த்து அவர்களது அறையின் பால்கனி வழியாக காம்பௌண்ட் கேட்டையே ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் மல்லி. கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்த மகள், கணவனுக்காகக் காத்திருப்பதை பார்க்கவும் பரிமளவிற்கு நிம்மதியாக இருந்தது. அதை ஜெகனிடம் சொல்லி சிரிக்கவும் செய்தார். அதே நேரம் மல்லிக்கு அன்று அவள் கண்ட கனவு நினைவில் வந்தது. எப்பொழுதுமே பதட்டத்துடனேயே ஒலிக்கும் அம்முவின் குரல் இன்று மகிழ்ச்சியுடன் ஒலித்ததும், அவளது அண்ணனைப் பற்றி அவள் சொன்னதும் மல்லியின் மனதிற்குப் புரிய, அப்பொழுதுதான் ஒன்றை உணர்ந்தாள் மல்லி. ‘ஆதி அவளுடன் இருக்கும் சந்தர்ப்பங்களில் அம்முவைப் பற்றிய கனவு வருவதில்லையோ? ஒரு வேளை அவன், அவளது அருகில் இல்லாத சமயங்களில் மட்டுமே அந்தக் கனவு வருகிறதோ?’ என அவள் சிந்தனை அதிலேயே உழன்று கொண்டிருக்க, அதைக் கலைப்பதுபோல் ஒலித்தது அவளது கைப்பேசி. அது, எதோ ஒரு புதிய எண்ணைக் காண்பிக்கவும், யாராக இருக்கும் என யோசித்தவாறு ஆன் செய்து காதில் வைக்க, சுகுணா அழைத்திருந்தார். “மல்லி! எப்படிம்மா இருக்க?” என அவர் விசாரிக்கவும், “நல்லா இருக்கேன்கா. நீங்க எப்படி இருக்கீங்க. உங்க வீட்டுக்கார் எப்படி இருக்காங்க?” என மல்லி பதிலுக்கு விசிரிக்க, “நல்ல சமாச்சாரம்தான் மல்லி அவங்களுக்கு ஹார்ட் கிடைச்சிடுச்சு. சீக்கிரமே ஆப்பரேஷன் இருக்கும். இதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன் மா. என் போன்ல பேலன்ஸ் இல்ல. அதனால பக்கத்தில இருந்தவங்க போன வாங்கி பேசிட்டு இருக்கேன். நான் பிறகு பேசறேன் மல்லி” என்று அழைப்பைத் துண்டித்தார் அவர். கனவிலும் நினைவிலுமாக நடந்த நிகழ்வுகளினால் மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தாள் மல்லி. அதைப் பகிர்ந்துகொள்ள கணவனுக்கு அழைக்கவும் ஒரே நொடியில் அழைப்பை எடுத்த ஆதி, “என்ன மல்லி அங்கே ப்ராப்ளம் ஒண்ணும் இல்லையே?” என்று கேட்க, “ஓ... மாம்ஸ்! எப்பவும் எதாவது பிரச்சினையையே எதிர்பார்த்துக் கொண்டே இருப்பீங்களா? ஒரு குட் நியூஸ் சொல்லத்தான் அழைத்தேன்!” என மல்லி சொல்லவும், “உஃப்!” என்ற ஒரு பெருமூச்சுடன், “கார் டிரைவ் பண்ணிட்டு இருக்கேன் மல்லி! இன்னும் அரை மணி நேரத்தில் அங்கே இருப்பேன் நேரில் பேசிக்கலாம்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் ஆதி. ‘ப்சு இந்த மாம்ஸ் சொல்ல வந்ததைக் கொஞ்சம் கேட்டிருக்கலாம்!’ என நினைத்தவள், ‘பரவாயில்லை நேரிலேயே சொல்லிக்கொள்ளலாம்’ என எண்ணியவாறு பரிமளாவிடம் சென்று, சுகுணா சொன்ன செய்தியை சொன்னாள் மல்லி. “திக்கற்றவர்களுக்குத் தெய்வம்தான் துணை! கடவுள்தான் அவரைக் காப்பாற்றினார் மல்லி!” என மகிழ்ச்சியுடன் சொன்னார் பரிமளா. அப்பொழுது ஆதி அங்கே வந்து சேரவும், அவனிடமும் அந்தத் தகவலைச் சொன்னாள் மல்லி. முகத்தில் எந்த உணர்ச்சியையும் காண்பிக்காமல் மௌனமாக அதைக் கேட்டுக்கொண்டவன், “நாம வீட்டிற்குக் கிளம்பலாமா மல்லி?” எனக் கேட்கவும், தெளிவில்லாமல் இருந்த அவனது முகத்தைக் கண்டு கொஞ்சம் குழம்பியபவள். “என்ன ஆச்சு மாம்ஸ்! உடம்பு சரியில்லையா?” என்றவாறு அவனது நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். அதில் அவனது முகத்தில் இருந்த இறுக்கம் தளர்த்து மெல்லிய புன்னகை வந்து சேர்ந்தது. அதற்குள் பரிமளா அவனுக்குக் காபியை கொண்டு வந்து கொடுக்கவும் அதைப் பருகியவன், மல்லியை அழைத்துக் கொண்டு கிளம்பினான். வீடு வந்து சேர்ந்து, இரவு தூங்கச் செல்லும் வரையிலும் கூட அவளிடம் ஏதும் பேசவில்லை ஆதி. கட்டிலில் கவிழ்த்தவாறு தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு படுத்திருந்தவனை நெருங்கி உட்கார்ந்தவாறு மல்லி, வருத்தம் தோய்ந்த குரலில், “மாம்ஸ்! என் மேல உங்களுக்கு ஏதாவது கோபமா? ஏன் என்னிடம் பேசமாட்டேங்கறீங்க?” என கேட்டாள். எழுந்து உட்கார்ந்தவன், அவளது கையை எடுத்து தனது கன்னத்தில் வைத்து அழுத்தியவாறு, “உன் மேல எனக்கு என்ன கோபம் மல்லி? நீ எனக்கு நன்மையை மட்டுமே செய்துட்டு இருக்க!” என்றவனின் குரல் கரகரப்பாக ஒலித்தது. “அப்படினா என்னாச்சு மாம்ஸ்! வேறு எதாவது பிரச்சினையா?” என்று மல்லி கேட்க, “தாமரையின் அப்பா தங்கவேலுவை சீரியஸ் கண்டிஷனில் அவங்களோட, ஹாஸ்பிடலிலேயே அட்மிட் செஞ்சிருக்காங்க! அவர் என்னை பார்க்கணும்னு சொன்னதாக தாமரை கால் பண்ணியிருந்தாள்! நான் போனபோது, அவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக நினைவு தவறிக் கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் 'மன்னிச்சுடு!' என்ற ஒரு வார்த்தை மட்டுமே சொன்னார் அத்துடன் முழுமையாக கோமாவிற்கு போயிட்டார் மல்லி! அவரது உடல் உறுப்புகளை தானமாகக் கொடுக்கச் சொல்லி இருக்காராம்! அதுவும் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு, அவர்களுடைய மருத்துவமனையிலேயே இலவசமாக செய்யச்சொல்லி இருக்காராம்! தாமரைக்கே அதிர்ச்சிதான் மல்லி! அவரோட இதயத்தை ஜீ ஹெச்ல இருக்கும் ஒரு இதய நோயாளிக்கு பொருத்தப்போவதாகச் சொன்னார்கள். அது சுகுணாவின் கணவர் என்பது நீ சொன்னதும்தான் எனக்குப் புரிந்தது மல்லி!” என அவன் சொல்லவும் உடல் சிலிர்த்தது மல்லிக்கு. பிறகு நினைவு வந்தவளாக, “அவர் உங்களிடம் ஏன் மன்னிப்புக் கேட்டார் மாம்ஸ்!” என மல்லி கேட்கவும், முகம் இருண்டு போக, “என்ன பாவத்தை செய்தாரோ தெரியல!” என அவன் சொல்ல, “எனக்குத் தெரியும் மாம்ஸ் அவங்கதான் அம்முவைக் கொலை செய்திருப்பாங்க!” என்றாள் மல்லி. “இருக்கலாம்!” என்றவன், “அம்மு! என்னை மன்னிப்பாளா மல்லி!” எனக் கேட்டவனின் கண்களில் கண்ணீரைக் கண்டு வருந்தியவள், “அம்மு! உங்களை நிச்சயம் மன்னிப்பாள் மாம்ஸ்” என்ற மல்லி அன்று அவள் கண்ட கனவைச் சொன்னாள். “நீங்க யாருமே நான் சொல்வதை நம்ப மாட்டீங்க. ஆனால் அம்மு என் கனவில் வந்து சொல்வது அத்தனையும் உண்மை!” என்றவளை ஆழ்ந்து பார்த்த ஆதி, அவனது லேப்டாப் பேக்கை திறந்து அதிலிருந்த ஒரு காகிதத்தையும், அவர்கள் பள்ளியில் எடுத்துக்கொண்ட க்ரூப் போட்டோவையும், மல்லியின் கையில் கொடுத்து, “நான் நம்பறேன் மல்லி!” என்றவன் மறுபடியும் போய் கண்களை மூடி படுத்துக் கொண்டான். அதைப் பிரித்துப் படித்த மல்லிதான் உடல் நடுங்கிப்போனாள். அது விடுதியிலிருந்து செல்லும் முன் அமிர்தவல்லி மரகதவல்லிக்காக எழுதியிருந்த கடிதம். அத்துடன் அந்தப் புகைப்படத்தில் மல்லிக்கு நேராக பச்சை நிறதில் “அண்ணி!” என்று எழுதியிருந்தாள் அம்மு.

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page