top of page

TIK-18

இதயம்-18

காலைப் பூஜை முடித்துவிட்டு மல்லி வெளியில் வரவும் குளித்து, வெகு, எளிமையுடன் வேட்டி, டி-ஷர்டில், ஹால் சோபாவில் வந்து அமர்ந்திருந்தான் ஆதி. தொலைக்காட்சியில், எதோ செய்தி சானல் முந்தைய நாள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தது. புதிதாக எந்தத் தகவலும் இல்லை. இரவு இருந்த இறுக்கங்கள் அனைத்தும் நீங்கி தெளிவாகவே இருந்தது அவன் முகம். அந்த நேரத்தில் காலைநேர பரபரப்பு ஏதும் இன்றி தொலைக்காட்சி முன் ஓய்வாக அமர்ந்திருந்த மகனைக் காண ஆச்சரியமாகிப்போனது லட்சுமிக்கு. “என்ன மல்லி ஒருநாளும் இல்லாத திருநாளா இவன் இப்படி உட்கார்ந்திருக்கான்! அதிசமாயில்ல இருக்கு!” என அவர் மருமகள் காதில் கிசுகிசுக்க அவளும், உதடுகளை வளைத்து தனக்கு ஒன்றும் தெரியாது என்றாள். மகனிடமே சென்றவர், “ராஜா! என்ன அதிசயமா இப்படி உட்கார்ந்திருக்க?” எனக் கேட்க, அதற்குள் அவன் அருகில் வந்து உட்கார்ந்த வரதன், “அவனே மறந்து போய் இங்க வந்து உட்கார்ந்து இருக்கான் நீயே அவனை விரட்டி விடாதே” என லட்சுமியை கிண்டலடிக்க, கழுத்தை நொடித்துக் கொண்டவர், “எதோ மகனை பார்த்ததாலதான் நீங்களே இங்கே வந்து உட்கார்ந்திருக்கிங்க. இல்லைனா வண்டி இந்த நேரம் எந்தக் கடைக்கு போயிருக்குமோ!” என்று கூற சிரித்தேவிட்டார் வரதன். அப்பொழுதுதான் ஆதியைக் கவனித்தாள் மல்லி. அவர்கள் பேசிய எதையுமே அவன் கவனிக்கவில்லை போலும்!. அவன் கண்கள்தான் தொலைக்காட்சியில் பதிந்திருந்ததே தவிர அவன் யோசனையெல்லாம் எங்கேயோ இருப்பது போல் தோன்றியது மல்லிக்கு. அதேநேரம், சரியாக அங்கே வந்தனர் விஜித்தும் சுமாயாவும். அவர்களைப் பார்த்த லட்சுமி, “சுமதி வா! வா! வாப்பா விஜி” என அவர்களை வரவேற்க, சுமதி என்ற பெயரை எங்கோ கேள்விப்பட்டது போல் தோன்றவும், ‘என்ன சுமாயாவை சுமதின்னு கூப்பிடறாங்களே?’ என யோசித்த மல்லி அதை ரகசியமாக அவரிடம் கேட்கவும், “அவ முழுப் பெயர் சுமாயா திவாரி! இல்ல! நான் சுருக்கி சுமதின்னுதான் கூப்பிடுவேன்” என்றார் லட்சுமி. அந்தச் செய்தி, அவளுக்கு புதியது யோசனையுடன், “ஓஹோ” என்ற மல்லியை, “ராணியிடம் டிபன் எடுத்து வைக்கச் சொல்லு” என்று, அவளை அங்கிருந்து அனுப்பிவிட்டு மற்ற அனைவரையும் சாப்பிட அழைத்தார். உணவு முடிந்ததும் சில கோப்புகளில் ஆதி கையெழுத்திட்டு முடித்து, “சுமா! ஒன் ஆர் டூ டேஸ் மேனேஜ் பண்ணிக்கோங்க. ஏதாவது முக்கியமான விசயம்னா சசிகுமாரை கேட்டுக்கோங்க” என்று கூறி விட்டு, “ஜித் நீங்க சுமாவை, ராயல் அமிர்தாசில் விட்டுவிட்டு த்ரீ ஓ கிளாக் சசி வீட்டுக்கு வந்துடுங்க போதும். ஆனால்! உங்கள் டீமை எப்பவும் அலெர்ட்டாகவே இருக்க சொல்லுங்க” என அவனைப் பணித்தான். கிளம்பும் நேரம் சுமாயா ஒரு பார்சலை அவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றாள். அதை எடுத்துக்கொண்டு அவன் மேலே சென்றுவிடவும் லட்சுமியைப் பின்தொடர்ந்து சென்றாள் மல்லி. அதை எண்ணி மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்ட லட்சுமி, அங்கே வெடித்துக்கொண்டிருக்கும் பூகம்பம் எதையும் அறியாமல் மல்லிக்காகத்தான் அவன் வீட்டில் இருக்கிறான் என்று எண்ணிக்கொண்டு, மருமகளை மகனுடன் இருக்குமாறு அனுப்பினார். பால்கனியில் அமர்த்தவாறு அந்த பார்சலை பிரித்துக்கொண்டிருந்தான் ஆதி. அதில் விலையுயர்ந்த கைப்பேசி ஒன்று இருந்தது. அவன் அருகில் போய், உட்காரலாமா வேண்டாமா என்று தயங்கிய மல்லியை இழுத்து தன் அருகில் அமரவைத்தவன், அந்தப் போனை அவளிடம் கொடுத்து, “உனக்குத்தான் வாங்கச்சொன்னேன் பிடிச்சிருக்கா?” என்று கேட்க, பிடித்திருக்கிறது என்பதுபோல் தலை ஆட்டியவள், “ஆனால் என் போன் ரிப்பெயரெல்லாம் இல்லை” என்று கூற, அவனது முகத்தில் புன்னகைத் தோன்ற, “ரிப்பெயர் ஆனால்தான் புது போன் வாங்கணும்னு இல்லை மல்லி. அதில் சார்ஜ் நிக்கலைத்தானே?” என்றவன், அவளது பழைய போனை எடுத்து அதிலிருந்த சிம் கார்ட் மெமரி கார்ட் அனைத்தையும், புதிய போனுக்கு இடமாற்றம் செய்தான். அதை, அவனே கான்பிகர் செய்யவும் அவளது மின்னஞ்சல் முகவரியைப் பதிவுசெய்து அதன் பாஸ்வார்டை போடச்சொல்லி அவளிடம் நீட்டினான். அதைக் கையில் வாங்காமல், “இதுல என்ன ரகசியம் இருக்கு” என்றவள், “L O V E P A R I” என்று ஒவ்வொரு எழுத்தாகப் பிரித்துப் பிரித்து சொல்லவும், அவன் முகம் ஒரு மாதிரியாக மாறிப்போய், “அது யாரு பாஆஆஆ ரி?” என்றான் ஆதி. அவனுடைய முகம் மாறியதன் காரணமும் புரியாமல் திடீரென்று, “பாரி யார்?” என்ற அவனது கேள்வியும் புரியாமல் விழித்தாள் மல்லி. தயக்கத்துடனேயே, “எந்தப் பா..ரி” என அவள் கேட்கவும், “பாஸ்வேர்டா வச்சிருக்கியே! அந்தப் பா..ரி!” என அவன் பதில் சொல்லவும், அப்பொழுதுதான் உணர்ந்தாள் மல்லி, ‘பார்றா பொசசிவ்னஸ்ஸ!’ என மனதிற்குள் நினைத்தவளுக்குச் சிரிப்பு வரவும், “மாம்ஸ்! அது பாஆஆஆ ரி இல்ல, பரி! என்னோட அம்மா!” என்று கூற, அவள் சொன்ன பாவனையில், “அவள் தன்னை கண்டுகொண்டாளோ?” என வெட்கமாகிப் போனது ஆதிக்கு. ஆனாலும் அதை அவளிடம் காட்டாமல் கெத்தாக, “பாஸ்வேர்டெல்லாம் நல்லாத்தான் வச்சிருக்க. ஆனால் போனைத்தான் தேவையான நேரத்தில் கைல வச்சுக்கமாட்ட!” என்றவாறே அதை செட் செய்து அவளிடம் நீட்டியவன். “இதில் அதிக நேரம் சார்ஜ் நிற்கும். அந்த பார்சலில் ஒரு பவர் பேங்க் ஒண்ணு இருக்கு. அதையும் உபயோகப்படுத்திக்கோ. ஆனால் போன் எப்பவும் கையிலேயே இருக்கணும் சரியா?” என அழுத்தமாகச் சொல்லிவிட்டு, “இன்னும் ஒரு ஒன் ஹவர்ல நன்றாக டிரஸ் பண்ணிட்டு, ரெடியா இரு. நாம வெளியில போகணும்” என்றவன் அவளது பதிலுக்குக் கூட காத்திருக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டான். “எங்கே போறோம்னு எதையாவது சொல்றாங்களா பார்!” என்று மனதிற்குள் நொடித்துகொண்டே அவளுக்குப் பிடித்த விதமாக ஆதி எடுத்து வந்திருந்த அழகான பிரௌனில் ஆரஞ்சு நிறம் கலந்த, விலை உயர்ந்த பருத்திப் புடவையில் அதற்கேற்ற, எளிய நகைகள் அணிந்து தயாராகி கீழே வந்தாள் மல்லி. மருமகளின் அழகில் மனம் நிறைந்தவராக அவளது கூந்தலில் மல்லிகை சரத்தை சூட்டி விரல்களை நெட்டி முறித்து அவளுக்கு த்ருஷ்டி கழித்தார் லட்சுமி. அதை பார்த்துக் கொண்டே வந்த ஆதி விசமமாக சிரித்துக்கொண்டே, “பார்த்து! உங்க மருமகளோட மொத்த அழகையும் துடைத்து எடுத்துடாதீங்க” என்று அன்னையை வாற. “அதுல உனக்கு என்னப்பா! அவ்ளோ பொறாமை?” என்று மகனது முதுகில் ஒரு தட்டு தட்டினார் லட்சுமி. பிறகு அவரிடம் விடைபெற்று, இருவரும் வீட்டை விட்டு வெளியில் வர, வீட்டைச் சுற்றிலும் ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அவள் கேட்பதற்கு முன்பே, “இங்கே, ஏற்கனவே சில இடத்துல சர்வைலன்ஸ் கேமரா பிக்ஸ் பண்ணி இருக்கு. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் அதிகமா, மாட்ட சொல்லியிருக்கேன்” என்ற ஆதி, “எங்கிருந்து வேணாலும் மொபைல் போனிலிருந்து பார்த்துக் கொள்வதுபோல்தான் செய்து வச்சிருக்கேன். நேற்று அது வழியாகத்தான் நீ தனியாக சீ ஷோருக்கு போவதைப் பார்த்தேன். நேரம் ஆக ஆக எதுக்கும் இருக்கட்டுமேன்னுதான் விஜித்தை அனுப்பினேன். இங்கேயே உன்னைக் கொல்ல ஆளை அனுப்புவாங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல!” சொல்லும்போதே ஒரு பெருமூச்சு எழுந்தது அவனிடம். அதற்குள் ஓட்டுநர் கரை ஓட்டி வரவும், அவரைத் தவிர்த்துவிட்டு அவனே வண்டியைக் கிளப்பினான். அப்பொழுதுதான் அவனைக் கவனித்தாள் மல்லி. அடர்நீல ஜீன்சும், சிவப்பு நிறத்தில் டீ-ஷர்ட்டும் அணிந்திருந்தான் ஆதி. உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்புடன் வைத்திருந்த அவனது தோற்றத்திற்கு அந்த உடை அவ்வளவு பொருத்தமாக இருந்தது. அதுவரை பெரும்பாலும் அவனது தொழில் நிமித்தமான உடையிலேயே அவனைப் பார்த்திருந்தவளுக்கு, அவனது இந்தத் தோற்றம் புதிதாக இருக்கவும் கண் இமைக்காமல் அவனையே பார்த்திருந்தாள் அவள். அவள் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவன் தனது புருவத்தை ஏற்றி என்னவென்று கேட்க, வெட்கத்துடன் இமைகளைத் தழைத்து, தனது கைகளை பார்த்துக் கொண்டாள் மல்லி. அவளது அந்த நாணம் அவனை ஏதோ செய்ய, கிளவ் பாக்சில் இருந்த தன் கூலிங் கிளாஸை எடுப்பதுபோல் குனித்தவன் சட்டென அவள் கன்னத்தில் இதழ் பதித்து பின் ஒன்றும் நடவாததுபோல் சாலையில் பார்வையைப் பதிக்க, தன் கன்னத்தில் கை வைத்து அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள் மல்லி. அவன் அவளைத் திரும்பியும் பார்க்காமல் தீவிர பாவத்தில் வாகனத்தைச் செலுத்த, சில நிமிடங்களில் இயல்புக்குத் திரும்பியவள் பிறகு நினைவு வந்தவளாக, “நாம எங்கே போறோம்னு நீங்கச் சொல்லவே இல்லையே!” என்று கூற, “எவ்ளோ சீக்கிரமா கேட்டுட்ட?” என்று நக்கலடித்தவனை, “ஆமாம்! கேக்கறதுக்கு நீங்க அப்படியே பக்கத்திலேயே இருந்த மாதிரிதான் பேசறீங்க?” என அவள் பதில் கொடுக்கவும் அவளை ஒரு பார்வை பார்த்தவன், “பக்கத்திலேயே இருந்து பார்த்துக்கணும்னுதான் நானும் இரண்டு நாள் லீவ் எடுத்திருக்கேன்!” என கிறக்கமாகச் சொல்ல, அவன் சொன்ன விதத்தில் முகம் சிவந்து, “ஐயோ! போதுமே!” என்றவள், “சொல்லுங்க மாம்ஸ் எங்கே போறோம்?” என்று கூற, “விநோ லஞ்சுக்கு கூப்பிட்டிருக்கா! அவங்க வீட்டுக்குத்தான் போகிறோம்” என்றான் ஆதி. “ஓ! சசி அண்ணா வீட்டுக்கா?” என்று மல்லி கேட்க, “ஆமாம்! இரண்டுபேரும் ஒரே வீட்டுலதான் இருக்காங்க!” என அவன் நக்கலுடன் பதில் கொடுக்க, “மாம்ஸ்! முடில விட்டுடுங்க; அழுத்துடுவேன்!” வடிவேலு பாணியில் மல்லி சொல்ல, சிரித்தான் ஆதி. அவன் கன்னத்தில் விழும் குழிக்குள் அவள் மனது புதைந்துதான் போனது. இருவருமாக சசியின் வீட்டை அடைய மகிழ்வுடன் அவர்களை, வரவேற்றனர் சசியும் விநோதினியும். “என்னடா எங்களை விருந்துக்கு அழைக்கும் சாக்கில் நீ லீவு விட்டுட்டியா?” என சசியை ஆதி வம்புக்கு இழுக்க, “இப்பதான்...ணா வந்தார்” என்ற வினோ, “ஆனாலும் உங்க மிரட்டலையெல்லாம் இங்கே வச்சுக்காதீங்க!” என கணவனுக்குப் பரிந்துகொண்டு வரவும், கைகளைத் தூக்கியவாறு, “தாயே ஆளை விடு. உன் வீட்டுக்காரனை ஏதாவது சொல்லிட்டு நான் முழுசா வீடு போய் சேர முடியுமா?” எனப் பயப்படுவதுபோல் ஆதி சொல்ல, “அது! அந்த பயம் இருக்கணும்” என முடித்தாள் வினோ. அவர்களுடைய உரையாடலைப் பார்த்து அடக்கப்பட்ட சிரிப்புடன் நின்றிருந்தாள் மல்லி. “இதுங்க ரெண்டும் காலேஜ் படிக்கும் போதிலிருந்தே இப்படித்தான்மா! நீ ஒண்ணும் பயந்துடாத!” என்ற சசி அவர்களுக்குப் பின்னால் பார்த்து சைகை செய்ய, “சர்ப்ரைஸ்” என்றவாறு அங்கே வந்து குதித்தான் தீபன். அவனைக் கண்டதும் முகம் விகசிக்க, “ஹேய்! நீ எப்படிடா, இங்கே?” என மல்லி அதிசயிக்க, “சசி அண்ணாகூடத்தான் வந்தேன் கா. நீ இங்கே வரேன்னு சொல்லி என்னையும் கூப்பிட்டாங்க” என அவன் சொல்லவும் அவர்களுடைய அன்பை நினைத்து நெகிழ்ந்துதான்போனாள் மல்லி. கிண்டலும் சிரிப்பும் என மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு முடித்தனர். பிறகு தொலைக்காட்சியில் செய்திகளில் ஆழ்ந்தான் ஆதி. அப்பொழுது விநோதினியுடன் பேசிக்கொண்டிருந்த மல்லி, “அண்ணி! நீங்க அவங்க கூட காலேஜ்ல ஒண்ணா படிச்சீங்களா என்ன?” என்று கேட்க, “ம் ஆதி அண்ணா ஃபைனல் இயர் படிக்கும்போது, நான் அங்கே பர்ஸ்ட் இயர்ல சேர்ந்தேன். உன் சசி அண்ணா என்னோட மாமா மகன்தான். அதனால நாங்க எல்லாரும் ஒரு கேங்க்” என்றாள் வினோ. “அதுவும் இப்ப இவ்ளோ அமைதியா ரொம்ப நல்லவர் மாதிரி இருக்காரே உன் ஆளு, அப்பல்லாம் சரியான டெரர் பீசு. கோவம் வந்தா முதலில் கைதான் பேசும். மார்ஷல் ஆர்ட்ஸ் எல்லாம் வேற இந்த அய்யா கத்து வச்சிருக்காரா ஓவர் சீனுதான்! பொண்ணுங்கலாம் ஆதி அண்ணா இருக்கற திசைக்குப் போகவே பயப்படுவாங்க! பசங்ககூட அவங்ககிட்ட யோசிச்சுதான் பேசுவாங்க!” என ஆதியின் புகழ் பாடிக்கொண்டிருந்தாள் வினோ. அதே நேரம் அங்கே வந்த சசி, “இவ மட்டும் என்னவாம்? இவளுக்குமே அவனைப் பார்த்தால் பயம்தான். ஒரு சமயம் சீனியர் பையன் ஒருத்தன் இவளைக் கலாட்டா செஞ்சான்னு, அவனை அடிச்சு வெளுத்துட்டான் ஆதி” என்று கூற, “ஐயோ!” என்றாள் மல்லி. “இதுக்கே ஐய்யோன்னா! அடுத்த நாளே அந்தப் பையன் ஒரு கேங்கொட வந்து ஆதி வீட்டுக்கு வரும்போது, வழியில் நிறுத்தி கத்தியால குத்த ட்ரை பண்ணான்! நூலிழையில் சமாளிச்சான் ஆதி. ஆனாலும், கத்தி கைல லேசா கிழித்துவிட்டது. அப்படியும் அவங்க நாலு போரையும் செம வாங்கு வாங்கிட்டான். வலது கைல பாரு இன்னும்கூட தழும்பு இருக்கும்!” என அவன் முடிக்கவும், முந்தைய தின நிகழ்வுகள் நினைவுக்கு வர அரண்டுபோனாள் மல்லி. “ஐயோ கொஞ்சம் அதிகமா சொல்லி அவளை இப்படி பயப்படுத்திட்டீங்களே!” எனக் கணவனை கடிந்தாள் வினோ. “அதெல்லாம் நாலு அஞ்சு வருசத்துக்கு முன்னடிம்மா. அம்மு போனதுக்கு அப்பறம் ரொம்பவே மாறிட்டான்” என நண்பனைப் பற்றிய ஆதங்கத்துடன் சொன்னவன், “இப்பத்தான்மா கொஞ்ச நாளாக ரோபோ மாதிரி இருந்தவன், கொஞ்சம் மனுஷனா மாறியிருக்கான். அவனை இப்படியே பார்த்துக்கோ!” என முடித்தான் சசி. அதற்குள் தீபன் அங்கே வரவும், “தீபா! நீ எதோ மெடிக்கல் புக்ஸ் சொல்லியிருந்த இல்ல, வந்து எடுத்துக்கோ” என அவனை அழைத்துச் சென்றான் சசி. “என்ன புக்ஸ்!” எனக் கேட்ட மல்லியிடம், “இல்ல இவங்க தம்பி சரவணன் இப்ப ஹவுஸ் சர்ஜனா இருக்கான்ல. அவனோட புக்ஸ்லாம் இருக்கு. அதுதான் தீபனுக்கு உபயோகப்படுமேன்னு எடுத்துக்க சொன்னாங்க” என விளக்கினாள் வினோ. இருவருமாக ஹாலுக்கு வரவும் கைப்பேசியை காதில் பொருத்தியவாறு அங்கிருந்து வெளியேறிச் சென்றான் ஆதி. வீட்டிற்கு முன்புறம் இருந்த தோட்டத்திற்கு வந்தவன் சுற்றிலும் யாரும் இருக்கிறார்களா என்று ஆராய்ந்துவிட்டு. “சொல்லு மணி! யாருனு தெரிஞ்சுதா?” ““ “ம்ஹும் நெனச்சேன்” ““ “ம்ம்” சில நொடிகள் யோசித்தவன் சிரித்துக்கொண்டே, “இல்ல அவனை நன்றாக உயிர் பயத்தைக் காட்டி விட்டுடு! ஆனால் அவனை அனுப்பினானே அந்த நாய் அவனை முடிச்சிடு” ““ “எவ்வளவு சீக்கிரம், முடியுமோ அவ்வளவு சீக்கிரம்” பேசிக்கொண்டிருந்த ஆதியின் கண்களில் தீப்பொறி பறந்துகொண்டிருந்தது.

0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page