இதயம்-14
புகைப்படத்தில் புன்னகை முகமாக இருந்த அம்முவைப் பார்த்த மல்லி, “நீ நல்லபடியா இருக்கே ன்னு தெரிஞ்சா போதும்னு நினைச்சேனே. நீ இப்படி இல்லாமலேயே போயிட்டியேடி அம்மூ” என வேதனையுடன் கண்ணீர் வடிக்க, “மல்லிமா அம்மா வந்திடுவாங்க. அவங்க கொஞ்சம் கொஞ்சமா இந்தத் தூக்கத்திலிருந்து இப்பதான் மீண்டு வந்திருக்காங்க. நீ இப்படி இருப்பதைப் பார்த்தால் அது அவங்க மனசை ரொம்பவும் பாதிக்கும். புரிஞ்சுக்கோம்மா” என ஆதி மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, “ராஜா மல்லியை பூஜையறைக்கு அழைச்சிட்டு வாப்பா” என்ற லட்சுமியின் குரல் கேட்டது. “சரி வா போகலாம் மீதியை பிறகு பேசிக்கலாம்” என்றவன் அவள் இடையில் சொருகியிருந்த சேலை முந்தானையை பிடித்து இழுக்க, அவனைப் பார்த்து முறைத்தாள் மல்லி. “ப்சு ஓவர் சீன் போடாதடி” என்றவன் அவளது முந்தானையால் அவள் முகத்தைத் துடைத்து விட்டு, “வா இப்ப போகலாம்” என்று அவன் முன்னால் செல்ல, இதழ்களில் பூத்தப் புன்னகையுடன், “டீ யா!” என்று முணுமுணுத்தவாறே அவனைப் பின் தொடர்ந்து பூஜை அறைக்குள் சென்றாள் மல்லி. அங்கேயும் குங்குமம் வைக்கப் பட்டு, பூமாலை போடப்பட்டு, அம்முவின் சிறிய படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக ஒரு புடவை வைத்துப் படைக்கப்பட்டிருந்தது. “இது நாளை நடக்கவிருக்கும் ரிசப்ஷனுக்கு, உனக்காகப் பிரத்தியேகமாக தயாரிக்கப் பட்டிருக்கும் புடவை” என்றார் அங்கே அனைத்தையும் தயார் செய்துகொண்டிருந்த லட்சுமி. பிறகு அவர் மல்லியை விளக்கேற்றச் சொல்ல, அவளும் அந்தப் புடவையைப் பற்றியெல்லாம் ஆராயாமல் விளக்கை ஏற்றினாள். பிறகு அவசர நடையில் அலுவலக அறைக்குச் சென்ற மல்லி, அங்கே அவள் தவறவிட்ட அந்த செயினை எடுத்துவந்து, பூஜை அறையில் இருந்த அம்முவின் படத்தில் மாட்டினாள். அதை அமைதியாகப் பார்த்திருந்தான் ஆதி. “பரவாயில்லை ஓரளவிற்கு அம்முவின் நிலைமையை மல்லி ஏற்றுக் கொண்டுவிட்டாள் போலும்!” என்ற எண்ணம் தோன்ற ஒரு பெரு மூச்சு எழுந்தது லட்சுமிக்கு. இனிமேல் மல்லியை மகன் சமாளித்துக் கொள்வான் என்ற நம்பிக்கையுடன் மகனை அர்த்தம் ததும்பும் ஒரு பார்வை பார்த்துவைத்தார் அவர். அவனும் கண்களை மூடித் திறந்தான் அன்னையின் கூற்றை ஆமோதிப்பதுபோல். வீட்டில் லட்சுமியின் இளைய சகோதரன் சந்திரனும் அவரது மனைவி அருணாவும் இருந்தனர். சசியும் விநோதினியும் அப்பொழுது அங்கே வந்து சேர்ந்தனர். “வா வா விநோ! வா சசி!” அவர்களை வரவேற்ற லட்சுமி வினோவின் கையை பிடித்து, அருகில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்று, “நல்ல வேளை நீ வந்த. சீக்கிரமா மல்லிக்குக் கொஞ்சம் அலங்காரம் செய்துவிடு” என்று கூறி விட்டு, “அருணா! நீயும் கொஞ்சம் கவனிச்சுக்கோ” என்றார். அங்கேயே புடவை மற்ற நகைகளெல்லாம் எடுத்துவைக்கப் பட்டிருந்தது. அனைத்தையும் பீதியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் மல்லி. எதையும் தடுக்கும் நிலைமையும் அவளுக்கு அங்கே இல்லை. சிரிப்பும் கலாட்டாவுமாக இரவு விருந்தை அனைவரும் உண்டு முடித்தனர். பிறகு ஒரு ரோபோவைப் போன்று அவர்கள் சொல்வதை செய்து தயாராகி வெளியில் வந்தாள் மல்லி. அவர்களுடைய கேலி கிண்டல்கள் எது வும் அவளது காதுகளில் விழவேயில்லை. அவளது நடவடிக்கைகளை புது மணப்பெண்ணின் அச்சம் கலந்த நாணம் என்றே பெண்கள் இருவரும் எடுத்துக்கொண்டனர். வேறு கேள்விகள் ஏதும் எழவில்லை. சந்தன நிறத்தில் வயலட் நிற பார்டரிட்டப் பட்டுப் புடவையில், அதற்கேற்ற எளிமையான அணிகலன்கள் அணிந்து, எழிலோவியமாய் அங்கே வந்த மருமகளை மகிழ்ச்சியுடன் அணைத்துக் கொண்டார் லட்சுமி. அதே நேரம் பட்டு வேட்டிச் சட்டையில் தயாராகி வந்த மகனையும் மற்றொரு கையால் அவர் அணைத்துக் கொள்ள, அதைத் தனது கைப்பேசியில் பதிவு செய்துகொண்டான் சசிகுமார். அடுத்த நொடியே அவன் அதை தீபனுக்கு அனுப்ப, “ஐ போட்டோ சூப்பர் சசி அண்ணா! அம்மா, அப்பாவும் பார்த்துட்டாங்க” எனப் பதில் அனுப்பியிருந்தான் தீபன். அதை மல்லியிடம் காண்பிக்கவும் தவறவில்லை சசி. அனைவருமே தன்னையும் முக்கியமாகத் தனது குடும்பத்தினரையும் முழுமையாக ஏற்றுக்கொண்டது மல்லிக்கு மகிழ்ச்சியையே தந்தது. பிறகு வரதனும் அங்கே வர பூஜை அறைக்குள் சென்று மணமக்கள் பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்க திருநீறு பூசி அவர்களை ஆசிர்வதித்தனர் லட்சுமியும் வரதனும். பெரியவர்கள் இங்கிதத்துடன் சத்தமின்றி அங்கிருந்து விலகிவிட, சசி வினோ இருவரும் மல்லியின் முகம் சிவக்கச் சிவக்க கிண்டல் செய்ய அதற்கு ஆதி சளைக்காமல் பதில் கொடுக்கவென அவர்களுடன் வந்து முதல் தளத்தில் இருந்த ஆதியின் அறையில் புதுமணத் தம்பதியர் இருவரையும் வீட்டுச் சென்றனர். மிக ரசனையுடன் பார்த்துப் பார்த்து வடிவமைக்கப் பட்டிருந்த அந்த மிகப் பெரிய அறைக்குள் நுழையவும், இவ்வளவு நேரம் கிண்டல், கேலி என இருந்த இலகு நிலை மாறி உடல் விறைக்க நின்றிருந்தாள் மல்லி. அதிகாலை மூன்று மணிக்கு விழித்து எழுந்தது, அன்றைய அலைச்சல், அவை அனைத்தையும் தாண்டிய அம்முவின் நிலை என சோர்வும் கவலையும் பயமும் கலந்து வியர்வை அரும்புகள் பூத்த அவளது முகத்தைப் பார்க்கவே பாவமாக இருந்தது ஆதிக்கு. சில்லிட்டுப்போயிருந்த அவளது கரங்களை பாந்தமாக எடுத்து அவனது கைக்குள் அவன் அடக்கிக்கொள்ள, அதில் உணர்வு வரப்பெற்று, “எ... எனக்கு! உ... உங்களுக்கு!” என உளறிக்கொட்டிய மல்லியை புருவத்தைத் தூக்கி, ‘என்ன?’ என்பது போல் ஆதி ஒரு பார்வை பார்க்க, “எ… எனக்கு! எனக்கு! கொஞ்சம் டைம் வேணும். இந்தக் குழப்பங்களெல்லாம் தீர்ந்து நிம்மதியாக நம் வாழ்க்கையை தொடங்கலாம்னு” என அவள் ஒருவாறு கோர்வையாய் சொல்ல முயற்ச்சிக்க, அவளுடைய கைகளை விட்டவன், அங்கே போட்டிருந்த இருக்கையில் அவளை உட்காருமாறு ஜாடையில் கட்டவும், கால்கள் துவண்டிருக்கவே சட்டென அங்கே போய் உட்காந்தாள் மல்லி. அந்த சோஃபாவின் இரு மருங்கிகிலும் கைகளை வைத்து அவள் முகத்தின் அருகில் குனிந்த ஆதி, அவள் கண்களை நேருக்கு நேர் நோக்கி, “என்னைப் பார்த்தால் உனக்கு வில்லன் மாதிரி தோணுதா மல்லி?” என்றவன், “நான் உன்னை நிர்ப்பந்தப்படுத்தி மணந்திருக்கலாம், அது கூட உன் நன்மைக்காகத்தான் என்பதை நீ உணரணும் மல்லி! ஆனால் வேறு எந்த விதத்திலும் பலவந்தப்படுத்தும் அளவிற்கு நான் கேவலமானவன் இல்லை” என நிமிர்வாகச் சொல்லி முடித்தான் ஆதி. அதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சை மெதுவாக விட்டாள் மல்லி. “சாரி” என அவள் முணுமுணுக்க, “பரவாயில்லை மல்லி! நீ உன் நிலைமையிலிருந்து யோசிச்சிருக்க அவ்வளவுதான்” என்ற ஆதி தொடர்ந்து, “உன்னை மிரளவைக்கக் கூடாதுன்னுதான் இந்த அறையைக் கூட அலங்கரிக்க வேண்டாம்னு அம்மாவிடம் சொல்லிட்டேன் மல்லி! நீ நம்ம குடும்பத்தில் இயல்பாய் பொருந்துவதற்கு முதலில் முயற்சி செய் போதும். மற்ற விஷயங்களுக்கெல்லாம் நமக்கு இன்னும் காலம் இருக்கு” என்று அவன் முடிக்க, அப்பொழுதுதான் உணர்ந்தாள் மல்லி, அந்த அறை முதல் இரவிற்கான எந்த அலங்காரமும் செய்யப்படாமல் எளிமையுடன் இருப்பதை. சிறு சிறு செயல்களில் கூட அவளது மனநிலையை மதித்து நடக்கும் கணவனும், கூடவே அக்கறையுடன் நடந்துகொள்ளும் மாமியார், மாமனார் என அவர்களது அன்பும் அவளது மனதை தெளிவடையச் செய்தது. உலகம் முழுதும் விரிந்திருக்கும் தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, வளர்த்து, அந்தத் துறைகளில் முடி சூடா சக்கரவர்த்தியாக இருப்பவன் அவனது நிலையிலிருந்து இறங்கி வந்து இவ்வளவு அமைதியாக அவளுக்கு விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கிறான் என்றால் அது அவள் மேல் அவன் கொண்ட காதலினால் மட்டும்தான் என்பதை மனதார உணர்ந்து, தான் எந்த விதத்தில் அவனுக்குப் பொருத்தம் என அவன் தன்னை இந்த அளவிற்கு நேசிக்கிறான்! என எண்ணியவளின் கண்கள் கலங்கியது. அவன் எந்தப் புள்ளியில் முழுவதுமாக அவளிடம் தன்வசமிழந்தான் என்பதை அறியும் பொழுதுதான், அவள் ஆதியின் மனதில் எவ்வளவு உயர்ந்து நிற்கிறாள் என்பதை முழுவதுமாக உணர்வாளோ மல்லி? தான் இவ்வளவு சொன்ன பிறகும் அவளது கண்களில் பெருகும் கண்ணீரைக் கண்டு, “என்ன மல்லி இவ்ளோ சொல்றேன் உனக்கு இன்னும் என்ன பிரச்சினை?” என அவன் கேட்க, அவனது வருந்துவது தாங்காமல் அவசரமாக மல்லி, “பிரசினையெல்லாம் ஒண்ணும் இல்லை” என்று கூற, “பிறகு” என்றவரிடம். என்ன சொல்வது எனப் புரியாமல் உதடுகள் துடிக்க கண்கள் மின்ன மல்லி” ஐ! ஐ!” என்று தயங்க, அவள் சொல்ல வருவது புரிய! விஷமமாக அவளைப் பார்த்தவாறே ஆதி, “ம் ஹும்” என்று கூற, “மாம்ஸ்!” என்று முகம் சிவந்த மல்லியை. “சொல்ல வந்ததை முழுசா சொல்லிடு இல்லை!” என மிரட்டும் தொனியில் சொன்னவன், “என்னைப் பற்றி உனக்குத் தெரியும்!” என முடித்தான். அவனது குரலில் தெரிந்த குழைவில் நாணம் கொண்டவள், “ஐ! ல... வ்! யூ மா... ம்... ஸ்!” என ஒவ்வொரு வார்த்தையாக திக்கித் திணறி, முகம் சிவக்கச் சொல்லி முடித்தாள் மல்லி. அதில் மனம் லேசாகி வாய்விட்டுச் சிரித்த ஆதி, “வாவ்! இப்பவாவது உன் மனதில் இருப்பதை மறைக்காமல் சொன்னியே” என்று குனிந்து அவளது நெற்றியில் முட்டியவன் அப்படியே அவளது உச்சியில் மெல்லிய முத்தமிட்டு நிமிர, கலவரத்துடன் அவனை நோக்கிய மல்லியை, “சரி போய் தூங்கு போ!” என்று கூறி விட்டு அங்கிருந்த கட்டிலில் ஒரு புறமாகப் போய் அவன் படுத்துக் கொண்டான். எங்கே படுத்துக்கொள்வது எனச் சங்கடமாக நோக்கிய மல்லியிடம், அந்தக் கட்டிலை சுட்டிக் காட்டியவன். “இதுல நாம வந்தோமே அந்த ஆடிக்காரையே பார்க் பண்ணலாம். எந்த அக்சிடென்ட்டும் ஆகாது. அதனால நீ தைரியமா இங்கேயே படுத்துத் தூங்கு” என்று கூறி விட்டு, மல்லியைத் தனது அருகில் தனது பாதுகாப்பு வட்டத்துக்குள் கொண்டுவந்துவிட்ட நிம்மதியில், வெகு நாட்களுக்குப் பிறகு ஆழ்ந்த ஒரு தூக்கத்துக்குச் சென்றான் ஆதி. அம்முவின் மரணம் தந்த வேதனையைத் தாண்டி அதுவரை இருந்த குழப்பங்கள் நீங்கியதாலும், இனி எது வந்தாலும் ஆதி பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதியிலும், அதிகாலை முதலே ஓய்வின்றி ஓடிக் கொண்டிருந்ததால் உண்டான களைப்பிலும் மல்லியும் நன்றாகத் தூங்கிப்போனாள். *** தினசரி பழக்கத்தில், அன்றும் அதிகாலையிலேயே விழித்த மல்லி அருகில் பார்க்க ஆதி அங்கே இல்லை. அதற்குள் எழுந்து எங்கே போய்விட்டான் என யோசித்தவள் பிறகு குளித்து எளிய காட்டன் புடவை உடுத்தி தயாராகி கீழே வந்தாள். வேறு யாருமே விழித்திருக்கவில்லை போலும். அவள் சமையல் அறைக்குள் சென்று பார்க்க அங்கே சமையல் வேலை செய்யும் பெண்மணி பால் காய்ச்சுவதற்காகத் தயார் செய்து கொண்டிருந்தார். மல்லியைப் பார்த்து தடுமாறியவர், “கொஞ்சம் இருங்கம்மா இன்னும் ஐந்து நிமிடத்தில் காபி ரெடி பண்ணிடறேன்” என்று கூற, “பரவாயில்லைம்மா; காபி பவுடர் எங்கே இருக்கு சொல்லுங்க” என மல்லி கேட்கவும் முதலில் பதறியவர், பின்பு அவளது பிடிவாதத்தால் அவளுக்கு உதவி செய்தார். அவளே பால் காய்ச்சி காபியைத் தயார் செய்துவிட்டு வெளியில் வரவும் நடைப் பயிற்சிக்கு சென்றிருந்த வரதனும் ஆதியும் அங்கே வந்து சேர்ந்தனர். பிறகு அவர்களுக்கு காபியை மல்லி கொண்டுவந்து கொடுக்க வரதன் மட்டும் அதை எடுத்துக் கொண்டார். உடற்பயிற்சி முடித்து வந்து சாப்பிடுவதாகச் சொல்லி மறுத்துவிட்டான் ஆதி. காபியை ஒரு வாய் சுவைத்த வரதன் மகனை மெச்சுதலுடன் ஒரு பார்வை பார்க்க, அதற்கு, “அப்பாவிடம் பாஸ் மார்க் வாங்கிட்டியே மல்லி. காபியை கரெக்ட்டா அவர் டேஸ்டுக்கு கலந்திருக்க போல இருக்கே” என்று கூறவும், “அன்னைக்கு டி-நகர் ஷோரூம்ல சாப்பிட்ட அதே டேஸ்டில் ட்ரை பண்ணேன் மாமா” என இயல்பாய் விளக்கம் கொடுத்தாள் மல்லி. “குட் இதையல்லாம் கூட கவனிச்சு வச்சிருக்கியே” என் மருமகளை பாராட்டினார் வரதன். அதற்குள் லட்சுமியும் அங்கே வந்துசேர, காபியை அருந்திவிட்டு அவர் பங்குக்கு அவரும் மருமகளை பாராட்டித் தள்ளிவிட்டார். அவர்கள் புகழுவதைக் கேட்ட ஆதிக்கும் காபியை ருசிக்கும் எண்ணம் தோன்றவே, “ஐயோ இதற்கு மேல் இங்கே இருந்தேன் என்னோட இன்றைய எக்ஸர்சைஸ் கெட்டுப்போகும்” என அங்கிருந்து ஓடியே போனான் அவன். அடுத்து என்ன செய்வது என்பதுபோல் அவள் லட்சுமியைப் பார்க்க, அது புரிந்தது போன்று, “இங்கே எல்லா வேலைகளையும் செய்ய ஆட்கள் இருக்காங்க. நீ எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. தினமும் பூஜையறையை மட்டும் சுத்தம் செய்து விளக்கேற்றிவிடு போதும்” என்று சொன்னார் லட்சுமி. அதற்குப் புன்னகையை பதிலாக அளித்த மல்லி பூஜை அறையை நோக்கிப் போனாள். “நம்ம அம்மு மட்டும் இருந்திருத்தல் ரொம்ப சந்தோசப்பட்டிருப்பாள் இல்லையா மாமா” என லட்சுமி கணவனை நோக்கிக் கேட்க, பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவர், “ப்சு இப்ப எதற்கு இந்தப் பேச்சு” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார் வரதராஜன். அம்முவின் படமும் அதில் மாட்டப்பட்டிருந்த அவளுடைய செயினும் பூஜை அறையை சுத்தம் செய்துகொண்டிருந்த மல்லியின் கண்களில் படவே யோசனையில் அவளது நெற்றி சுருங்கியது. அவசரமாக வேலைகளை முடித்து விளக்கை ஏற்றிவிட்டு அவர்களது அறைக்குச் சென்ற மல்லி அங்கே ஆதியைக் காணாமல் லட்சுமியிடம் சென்று கேட்க, “தம்பி மூன்றாவது பிளோர்ல, ஜிம்ல இருப்பான் மா” என்றார் லட்சுமி. “நான் அங்கே போகலாமா அத்தை” என அவள் அவரிடம் அனுமதி கேட்க, அதற்குச் சிரித்துக்கொண்டே, “இங்கே வீட்டுக்குள்ளே போவதற்கெல்லாம் என்னிடம் அனுமதி கேட்பியா என்ன?” என்று கூறி விட்டு, “ராணி மல்லிக்கு லிப்ட் ஐ காண்பித்து விட்டு வா” என அங்கே சமையல் வேலை செய்யும் பெண்மணியைப் பணித்தவர் மல்லியிடம், “அப்படியே உன் வீட்டுக்காரனுக்கு காபியைக் கொடுத்துட்டு, அவனைச் சீக்கிரம் முடித்துக் கொண்டு வரச்சொல்” என்று சொல்லி மல்லியை அனுப்பினார் லட்சுமி. மூன்றாவது தளத்தில் அனைத்து உபகரணங்களுடன் ஒரு ஜிம் மை உருவாக்கி வைத்திருந்தான் ஆதி, ஜஸ்டின் பைபேரின் ‘பாய்பி பாய்பி பாய்பி ஓஒ’ என இரைந்து கொன்றிருக்க, ஸ்லீவ்லஸ் டீஷர்ட்டும் ஷார்ட்ஸும் அணிந்து புஷ் அப்ஸ் செய்துகொண்டிருந்தான் ஆதி. அவனை அப்படி கண்டவுடன் மேலே சென்று அவனிடம் பேச முடியாமல் தயக்கம் அவளைத் தொற்றிக்கொள்ள அப்படியே நின்றுவிட்டாள் மல்லி. மிக எளிய, அடர் நீல நிற பருத்திச் சேலையில், தலையின் ஈரம் காய்வதற்கென தளர்வாகப் பின்னல் இட்டு, அதில் மல்லிகைச் சரத்தை சூடி அழகோவியமாக நின்றிருந்தவளை அவனது எதிரில் இருந்த கண்ணடியில் கண்ட ஆதியின் கவனம் மொத்தமுமாகச் சிதறிப் போனது. பிறகுத் தனது உடற்பயிற்சியைக் கைவிட்டவனாக அவன் அவளின் அருகில் வரவும், அவள் எடுத்து வந்த காபியை அவனிடம் நீட்ட அதை ஒரு மிடறு பருகியவன், “வாவ்! கரெக்ட் காம்பினேஷன்!” எனச் சுட்டு விரலை இருவருக்குமாய் ஆட்டி “நம்மைப் போல!” என்றவாறு அதைப் பருகத்தொடங்கினான். அவள் கேள்வியுடன் அவனையே பார்த்துக் கொண்டிருக்கவும், “இப்ப என்ன உன் மூளையை குடையுது?” என ஆதி கேட்கவும், அவனை விழி விரிய அவள் பார்க்க, “இப்படி முழிச்சு பார்க்காமல் என்னன்னு சொல்லு” என்றான் ஆதி. மல்லி சற்று தயக்கத்துடன், “அந்த ஆள் இறந்து போனதற்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை இல்ல?” என்று கேட்க, புரை ஏறியது ஆதிக்கு. சுற்றும் முற்றும் பார்த்தவன், “லூசு மாதிரி உளறாதே. எந்த ஆளுன்னு, புரியற மாதிரி சொல்லு முதல்ல?” என அவன் வார்த்தைகளை கடித்துத் துப்ப, “அம்முவின் செயினை அன்று போட்டிருந்தாளே அந்த வனிதாவோட அப்பா” என்றாள் மல்லி. அடுத்த நொடி, உக்கிர மூர்த்தியாய் மாறியிருந்தான் ஆதி. “ஒஹ் அந்த குணாவையா” என்றவன், “அன்றைக்கு அம்முவின் நகைகளை அவனிடம் பார்த்த பொழுது எனக்கு வந்த கோபத்திற்கு அன்றே அவனைக் கொன்னுருப்பேன்! அவனுடைய குடும்பத்தை நினைத்துத்தான், நான் அன்று அவனை அப்படியே விட்டுட்டு வந்தது. பிணம் திண்ணி நாய். அவன் செய்த பாவத்திற்கு அடுத்த நாளே எதோ மினி லாரியில் அடிபட்டுச் செத்தான்” என அவன் முடிக்க, ஆதியின் கோப முகம் கண்டு பயந்துதான் போனாள் மல்லி. ‘ஒரு வேளை, அன்று அவனுக்கு நடந்ததுமே விபத்து இல்லையோ? அப்படி என்றால் அவனைக் கொன்றவன்தான் மல்லியையும் கொல்ல முயற்சி செய்கிறானா?’ என்ற சந்தேகம் எழுந்தது ஆதிக்கு. ‘அன்று மட்டும் மல்லிக்கு ஏதாவது ஆகியிருந்தால்’ என்ற எண்ணம் தோன்ற, அடுத்த நொடி உடல் நடுங்கிப் போய், மல்லியின் முகத்தை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்திருந்தான் தேவாதிராஜன். தடதடக்கும் ரயில் ஓசையைப் போன்று அதிவேகமான அவனது இதயத்தின் துடிப்பு அவள் காதுகளில் ஒலிக்க, அவனது உயிருடன் இரண்டறக் கலந்திருந்தாள் தேவாதிராஜனின் மரகதவல்லி. எந்த ஆபத்திலும் இனி உன்னைச் சிக்கவே விடமாட்டேன், எனச் சொல்லாமல் சொன்னது அவனது இறுகிய அந்த அணைப்பு!
Comments