இதயம்-10
ஜாதகத்தைப் பார்த்ததும் உண்மையிலேயே உள்ளுக்குள்ளே குளிரெடுத்தது ஜெகனுக்கு. ஆதியின் வயதைப் பார்த்தால் முப்பதைத் தாண்டியிருந்தது. ஆதிக்கும் மல்லிக்கும் இடையில் கிட்டத்தட்ட ஒன்பது வயது வித்தியாசம். அவர்கள் பக்கம் இது சகஜம்தான். அதைப் பற்றி அவர்களுக்கு ஒன்றுமில்லைதான். ஆனால் அவர்களது அந்தஸ்து! அதுதான் மிரட்டியது அவரை. தி. நகர் கிளைத் தொடங்கி, சென்னையில் பல முக்கியப் பகுதிகளிலும், தமிழ்நாட்டின் பல இடங்களிலும், கேரளா ஆந்திரா எனத் தென்னிந்தியா முழுதும், அவர்களது துணிக் கடைகள் இருக்கிறது. கூடவே உணவகங்களும்! மகளை நன்றாக வைத்துக் கொள்ளும் அளவிற்கு வருமானமும், நல்ல குடும்ப பின்னணியும் இருந்தால் போதும், அப்படிப்பட்ட இடமாகத்தான் அவளைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தனர். ஆனால் இது அவர்கள் கனவிலும் எதிர்பார்க்காதது. அவர்கள் நிலைமைக்கு இது கை மீறிய சம்பந்தம். அவர்கள் முறைப்படி திருமணம் மணமகன் வீட்டில்தான் செய்வார்கள். நன்றாகச் சீர் செய்து பெண்ணை அவர்கள் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். நில புலன்களை விற்ற பணத்தில் ஐந்து லட்சம் மீதம் இருக்கிறது. அதை வங்கியில் போட்டு வைத்திருக்கின்றனர். ஜெகன் இப்பொழுது இருக்கும் நிலையில் அதை வைத்து எளிமையாகச் செய்வதென்றால் மட்டுமே அவர்களால் திருமணம் பேச முடியும். மகனின் மேற்படிப்பு வேறு அவர்களை மிரட்டியது. முத்துராமனுக்கு அவர்கள் நிலை நன்றாகவேத் தெரியும்தான். இருந்தாலும் விளக்கினார் பரிமளா. அதை ஆமோதிப்பது போல் மௌனமாக இருந்தார் ஜெகன். “சரி நான் அவர்களிடம் பேசிவிடுகிறேன். ஏப்ரல் முப்பது சித்திரா பௌர்ணமியன்று நடவாவி உத்சவத்திற்காக அவர்கள் ஐயங்கார்குளம் வருகிறார்கள். நீங்களும் அங்கே வந்து விடுங்கள். நேரிலேயே பேசிக் கொள்ளலாம்” என முடித்துக் கொண்டார் முத்துராமன். அவர்களும், குடும்பத்தின் மூத்தவரான, அவரது சொல்லைத் தட்ட முடியாமல் அரை மனதாய் அதற்குச் சம்மதித்தனர். தீர்மானமாக ஒரு முடிவுக்கு வரும் வரை, இந்த சம்பந்தம் பற்றி மல்லியிடம் ஏதும் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தனர் பெரியவர்கள் மூவரும். தீபன் பரிட்சைகள் முடிந்த மகிழ்ச்சியில் இருந்தான். விடுமுறை தொடங்கியிருந்ததால் அவர்கள் குடியிருப்பில் இருக்கும் குட்டீஸ்களால் மல்லியின் வீடு நிரம்பி வழிந்தது. அவள் வெளியே எங்கும் செல்ல முடியாத நிலையில் இருந்ததால் தொலைக்காட்சியில், ஷின்சானும் சோட்டாபீமும் நாள் முழுதும் அலறிக் கொண்டிருந்தனர். மகள் மட்டும் நன்றாக இருந்திருந்தால் பரிமளா அவளை வறுத்து எடுத்திருப்பார். மல்லியின் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு முழுதும் சரியாகாமல் முடக்கப்பட்ட நிலையில் மேலும் வேலையிழந்து மிகுந்த மன அழுத்தத்தில் அவள் இருக்கவே, குழந்தைகளுடன் இருக்கும் பொழுது அவள் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றவும், போனால் போகிறது என்று விட்டுவிட்டார் அவர். வெளித்தோற்றத்திற்கு மகிழ்ச்சியாகக் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள்ளே அவள் தேவாவின் நினைவில் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பது அந்தத் தாய்க்கு தெரிந்திருக்க ஞாயமில்லை. *** காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள ஐயங்கார்குளத்தில் வற்றாத ஊற்றினால் எப்பொழுதும் தண்ணீர் நிறைந்து காணப்படும் நடவாவி எனப்படும் ஒருவகைக் கிணறு ஒன்று உள்ளது. திருவிழா சமயம் தவிர மற்ற நேரத்தில் கனத்த இரும்பினால் ஆன கதவினால் அக்கிணறு பூட்டப்பட்டிருக்கும். சித்திராபௌர்ணமி சமயத்தில் அதில் உள்ள நீரையெல்லாம் வெளியேற்றி திருவிழாவிற்காக அந்த இடம் சுத்தம் செய்யப்படும். கருங்கல்லினால் ஆன முகப்புத் தோற்றம் கம்பீரமாகக் காட்சியளிக்க, அதைத் தாண்டி அமைக்கப் பட்டிருக்கும் படிக்கட்டுகளில், கீழே இறங்கி உள்ளே சென்றால், சுரங்கம் போல் பூமிக்கு அடியில் உள்ள கிணற்றைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் பன்னிரு கால் மண்டபம் அனைவரையும் அதிசயிக்க வைக்கும். சித்திராபௌர்ணமி தினத்தில் நடவாவி உத்சவத்திற்காக காஞ்சியிலிருந்து புறப்பட்டு, கிட்டத்தட்ட இரவு ஒன்பது மணி அளவில் அங்கே வரதராஜ பெருமாள் எழுந்தருளுவார். பிறகு அங்கே சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்பின் பாலாற்றில் இறங்கி அங்கே அமைக்கப் பட்டிருக்கும் பந்தலில் எழுந்தருளச்செய்து பூஜைகள் நடைபெறும். அந்த வைபவத்திற்கு, ‘ஊறல் உத்சவம்’ என்று பெயர். அனைத்தும் முடிய நள்ளிரவு ஆகிவிடும். வருடந்தோறும் நடக்கும் இந்த உத்சவத்திற்கு ஜெகன் தன் குடும்பத்துடன் செல்வது வழக்கம்தான். அவர்கள் ஊரிலிருந்து மக்களெல்லாம் திருக்கச்சி வரதரை தரிசிக்க தவறாமல் அங்கே வந்துவிடுவார்கள். அந்த வருடம் மல்லி பேருந்தில் பயணம் செய்யும் நிலையில் இல்லாததால், அவளைத் தனியே விட்டு அங்கே செல்ல பரிமளா விரும்ப வில்லை. ஆனால் இப்பொழுது அங்கே சென்றாகவேண்டிய நிலை ஏற்பட்டு விடவே, தீபனை மல்லிக்குத் துணையாக வைத்துவிட்டு மதியமே ஜெகனும் பரிமளாவும் ஐயங்கார்குளம் கிளம்பினார்கள். “அம்மா சாயங்காலம் கிளம்பினாலே போதுமே நீங்க ஏன் இவ்வளவு சீக்கிரமா அதுவும் இந்த வேகாத வெயிலில் கிளம்பிப் போறீங்க?” என்ற மல்லியின் கேள்விக்கு, “முத்து பெரியப்பா எங்களை அங்கே சீக்கிரம் வரசொல்லியிருக்கார்மா. எதாவது முக்கியமான விஷயமாக இருக்கும் அதனால்தான் போகிறோம்.” என்று பாதி உண்மையை மட்டும் மகளிடம் சொல்லிவிட்டு மகனிடம் ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டுக் கிளம்பினர் ஜெகனும் பரிமளாவும், *** அடுத்த நாள் காலை ஏழு மணிக்கு வீடு திரும்பியிருந்தனர் மல்லியின் பெற்றோர். மகிழ்ச்சிபொங்க உள்ளே நுழைத்த பெற்றோரை அதிசயமாகப் பார்த்தான் ஹாலில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த தீபன். அவர்கள் சுத்தம் செய்துகொண்டு வருவதற்குள் அவர்களுக்குக் காபியை தயாரித்து எடுத்து வந்தவன், “என்னம்மா இவ்ளோ ஹாப்பியா வந்திருக்கீங்க. அந்த வரதராஜ பெருமாள் உங்களுக்கு ஸ்பெஷலா எதாவது வரம் கொடுத்து அனுப்பியிருக்காரா?” என்று கிண்டல் குரலில் கேட்க, பரிமளாவோ, “சரியாத்தான் சொன்னடா தீபா. பெருமாள் நம்ம குடும்பத்திற்கு வரம்தான் கொடுத்திருக்கார்” என்று கூற, “என்னமா சொல்றீங்க?” என்று புரியாமல் தீபன் கேட்கவும், அவர்கள் பேச்சு குரல் கேட்டு தூக்கம் கலையவே, ரெப்பிரேஷ் செய்துகொண்டு அங்கே வந்தாள் மல்லி. “என்னம்மா இவளவு சீக்கிரமா வந்துட்டீங்க சாப்பிடாமல் பெரியம்மா உங்களைக் கிளம்ப விட்டிருக்க மாட்டங்களே? அப்படினா பூவரசந்தாங்கல் போகலையா? இரவு எங்கே தங்கினீங்க?” என்று கேள்விமேல் கேள்வியாகக் கேட்ட மல்லியிடம், “கொஞ்சம் மூச்சு விடுடி மல்லி” என்றார் பரிமளா. அதற்குள், “அம்மா! உங்க மகிழ்ச்சிக்கான காரணத்தை நீங்க இன்னும் சொல்லவே இல்லை” என இடை புகுந்தான் தீபன். தன் மகளின் தலையில் இடியை இறக்குகிறோம் என்று தெரியாமலேயே சந்தோஷமாகவே சொன்னார் பரிமளா, “அக்காவுக்கு சம்பந்தம் பேசி முடிச்சிட்டோம்டா தீபா!” என்று. “என்னம்மா சொல்றீங்க!?” என்று ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் தீபனும். “என்னம்மா சொல்றீங்க?!” என்று பயம் கலந்த அதிர்ச்சியுடன் மல்லியும் ஒரே நேரத்தில் கேட்க, ஜெகன், “மாப்பிள்ளை மல்லியை முன்பே பார்த்திருக்கிறாராம். அவருக்கு நம்ம மல்லியை பிடித்து விட்டதாம். அவரோட போட்டோ கூட பார்த்தோம்டா தீபா! பார்க்க ராஜா மாதிரி நன்றாக இருக்கார் டா.” என்று கூற முகத்தில் இருந்த மகிழ்ச்சி பேச்சிலிருந்த குளறலையும் தாண்டி அவர் குரலில் தெரிந்தது. மல்லி நடப்பது எதுவும் புரியாமல் பேச்சற்று நின்றிருந்தாள். தீபன்தான் கேட்டான், “என்ன சொல்றீங்கப்பா அவங்க நம்ம சொந்தமா என்ன? இல்ல நம்ம ஊர் பக்கமா?” என்று. “பெரிய மனுஷன் மாதிரி பேசறான் பாருங்களேன்” என்ற பரிமளா, “சொந்தம் இல்லப்பா ஆனால் நம்ம ஊர் பக்கம்தான்” என்று கூற, “நாம அவரை இதற்கு முன்பு பார்த்திருக்கிறோமா? அக்காவை நன்றாக பார்த்துப்பாங்களா?” என்று அவன் அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்க, “ரொம்ப கேள்வி கேட்கற தீபா! மாப்பிள்ளை யார் தெரியுமா?” என்று கூறி விட்டு, “ஆதி டெக்ஸ்டைல்ஸ், ‘தேவாதிராஜன்’ பா, ‘ஆதி’ என்றால் எல்லாருக்கும் தெரியுமாமே” என்று பரிமளா முடிக்க, திகைத்துப் போனான் தீபன். அவனைப் பொறுத்தவரை அக்காவிற்கு அமையவிருப்பது, அவர்களால் கனவில் கூட அவளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க முடியாத வளமான ஒரு வாழ்க்கை. அவன் வயதிற்கு அதற்குமேல் அவனால் யோசிக்க முடியவில்லை. பெற்றோரின் மகிழ்ச்சி அவனையும் தொற்றிக்கொண்டது. ஆதி என்ற பெயரைக் கேட்டவுடன்தான் உணர்வே வந்தது மல்லிக்கு, “என்ன ஆதியா? அவன் தேவாவின் ப்ஃரெண்ட் வேற ஆச்சே” உள்ளுக்குள்ளேயே அதிர்ந்தாள் மல்லி. “என்.. ன.. ம்மா.. சொல்றீங்க அவங்க எப்படி” குரலே வெளிவரவில்லை மல்லிக்கு. “நீ ஒண்ணும் பயப்படாதே மல்லி! முத்து பெரியப்பா சொன்ன பொழுது எங்களுக்கும் இப்படித்தான் இருந்தது. ஆனால் வரதன் அண்ணாவையும் லட்சுமி அண்ணியையும் நேரில் பார்த்து பேசிய பிறகுதான், அதுவும் முத்து பெரியப்பா கொடுத்த தைரியத்தில்தான் நாங்கள் இந்த முடிவுக்கே வந்தோம்மா. நம்ம ஊர் தலைவர் வேறு அவர்களைப் பற்றி அந்த அளவிற்கு உயர்வாகச் சொல்றார். அப்பாவுக்கும் வரதன் அண்ணா முன்பே அறிமுகம்தான்” என்ற அன்னையிடம் என்ன சொல்வதென்றே புரியவில்லை மல்லிக்கு. கடமையே எனச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர்களது முகத்தில் தெளிவையும் மகிச்சியும் பார்க்கிறாள் அவள். அவர்கள் மனதை நோகச் செய்யாமல் என்ன சொல்வது என யோசித்தவளின் மனதில் தீபனின் நினைவு வர, “அம்மா! எனக்கு இப்ப கல்யாணம்லாம் வேண்டாம். இப்போதைக்கு தீபனின் படிப்புதான் முக்கியம் அவனை மெடிக்கல் சேர்க்கணும். என் உடல் நிலை சரியான உடன் நான் ஒரு வேலையைத் தேடிப்பேன். அவன் படித்து முடித்த பிறகு என் கல்யாணத்தை பற்றிப் பேசலாம்” என ஒருவழியாகக் கோர்வையாய் சொல்லி முடித்தாள் மல்லி. “நீ தீபனைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படாதே. அவன் நீட் தேர்வை நல்ல படியாக முடித்தால் போதும். நம்ம ஊர் தலைவர் ஏதோ ஒரு டிரஸ்ட் மூலம் அவனுடைய படிப்புக்கு உதவி செய்கிறேன்னு சொல்லிட்டார்” என அதற்கும் பதில் வைத்திருந்தார் பரிமளா. பிறகு மல்லி என்ன மறுப்புக் கூறியும், அவர்கள் இருந்த பரவச நிலையில் அவை எதுவும் அவர்களின் செவிகளுக்குள் நுழையக்கூட இல்லை. *** முதல் நாள் மாலை ஜெகனும் பரிமளாவும் ஐயங்கார்குளத்தை அடைந்து, பேருந்திலிருந்து இறங்க அவர்களுக்காக அங்கே காத்திருந்தார் முத்துராமன். நேராக அவர் அந்த ஊரிலேயே இருந்த வரதராஜனுடைய வீட்டிற்குத் தம்பியை அழைத்துச் சென்றார். இது அவர்கள் இருவருமே எதிர்பார்க்காத ஒன்று. உள்ளே நுழைந்தவுடனேயே, “வாங்க அண்ணா! வாங்க அண்ணி!” என இன்முகமாக அவர்களை வரவேற்றார், ஆதிலட்சுமி ஆதியின் அம்மா. அழகாக தூய்மையாக பராமரிக்கப் பட்டிருந்தது அந்தக் கிராமத்து வீடு. கூடத்திற்குள் அவர்களை லட்சுமி அழைத்துச் செல்ல, அவர்களைக் கண்டவுடன் அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில்அமர்ந்திருந்த வராதராஜன், எளிமையுடன் எழுந்து வந்து அவர்களை வரவேற்றார். ஆண்கள் மூவரும் அங்கே உட்கார்ந்து ஒருவரை ஒருவர் நலம் விசாரிக்க, பரிமளா லட்சுமியுடன் வந்து நின்றுகொண்டார். அதே நேரம் பூவரசந்தாங்கலின் பஞ்சாயத்து போர்டு தலைவரான பலராமனும் அங்கே வந்து சேர்த்தார். அங்கே வேலை செய்பவர் அவர்களுக்கான பலகாரங்களை எடுத்துவந்து வைக்க, “பரவாயில்லை அண்ணி! சம்பந்தம் முடிந்த பிறகு கை நனைப்பது தானே நம்ம பக்கத்து வழக்கம்” என்று பரிமளா தயக்கத்துடன் மறுக்க, ஜெகனும் அதையே சொல்லவும், “இல்ல அண்ணி! இன்றைக்கு இங்கே உற்சவம் நடப்பதால் மாடியில் பந்தல் போட்டு இன்று முழுவதும் சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். அறிந்தவர் தெரிந்தவர், என எல்லோரும் இங்கே சாப்பிடுவார்கள். சம்மந்தத்திற்காக கை நனைப்பது என நினைக்காமல், திருவிழாவிற்கென நினைத்துச் சாப்பிடுங்கள். ஒன்றும் தவறில்லை” என அவர் முடித்துவிட அங்கே இது நடைமுறையில் இருப்பதுதான் அதை உணர்ந்து, மறுக்க முடியாமல் அவர்கள் சாப்பிட்டு முடித்தனர். பின்பு வரதராஜன் தெளிவாக ஜெகனை நோக்கி, “என் மகனைப் பற்றி நானே சொல்லக்கூடாது, மிகவும் சுத்தமான பழக்கவழக்கங்கள் உள்ளவன். கேட்டரிங் படித்துவிட்டு, அது சம்பந்தமான தொழிலைத்தான் முதலில் செய்து கொண்டிருந்தான். பிறகு ஒரு சூழ்நிலையில் அவன் அம்மாவிற்காகவே அவள் பெயரில் இந்த ஆதி டெஸ்டைல்ஸை தொடங்கி இரண்டையுமே வெற்றிகரமாகச் செய்து கொண்டிருக்கிறான். நிறைய சம்பந்தம் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் திருமணம் செய்துகொள்ளவே மாட்டேன் என்று மறுத்துக் கொண்டிருந்தவன், மல்லியைப் பிடித்திருப்பதாகவும், அவளைத் திருமணம் செய்து கொள்வதாகவும் சொல்லிவிட்டான். அவன் ஒரு முடிவு எடுத்தால் மிகவும் தெளிவாக இருக்கும். அவன் அதில் உறுதியாகவும் இருப்பான். எங்களுக்கும் மறுக்க எந்த அவசியமும் இல்லை. லட்சுமிக்கும் இந்த முடிவில் மிகவும் மகிழ்ச்சியே. இனி நீங்கள்தான் முடிவு சொல்ல வேண்டும்” எனச் சொல்லிவிட்டார். லட்சுமியும், “தம்பி இப்பொழுது நியூ ஜெர்சி போயிருக்கான். அங்கே ஒரு கடை திறக்கப் போறாங்க. எப்படியும் இன்னும் பத்து நாளில் வந்து விடுவான். நீங்கள் பேசி ஒரு முடிவு செய்தால் அவன் வந்தவுடன் திருமணம் வைத்துக் கொள்ளலாம்” என அவர் பங்குக்குச் சொல்லி முடித்தார். அவர்களைத் தனிமையில் அழைத்துச் சென்ற பலராமன், “அவர்கள் பல வருடங்களாய் நம்ம குடும்பத்துக்குப் பழக்கம்தான். அவரோட தம்பியும் தங்கையும் நடந்து கொண்ட விதத்திற்கு, வேறு ஒருவராய் இருந்திருந்தால் அவரைகளை விட்டு விலகி இருப்பார்கள். இப்படி உரிமையாய் அவர்களால் வர முடியாது” என உள்ளே நுழைந்து கொண்டிருந்தவர்களை தூரத்திலிருந்து சுட்டிக்காட்டியவர், தொடர்ந்து, “லட்சுமியும் ரொம்ப நல்ல மாதிரி. நீங்கள் கவலையே படவேண்டாம். நல்ல முடிவை எடுங்கள்” என்று கூறவும், முத்துராமனும் அவரது மனைவியும் கூட அதையே சொல்ல, திருவிழாவிற்காக வந்திருந்த மற்ற உறவினர்களும் ஊக்கம் கொடுத்தனர். அவர்களுக்கும், வரதராஜன் மற்றும் லட்சுமியின் போலித்தனமில்லாத நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவே ஒரு வழியாக இந்தத் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர் ஜெகனும் பரிமளாவும், “மல்லியிடம் சம்மதம் கேட்கவேண்டுமே!” என லட்சுமி சொன்னதற்கு, “தேவை இல்லை அண்ணி எங்கள் பேச்சை என்றுமே எங்கள் மகள் மீற மாட்டாள்!” என முடித்துக் கொண்டார் பரிமளா. உறவினர்கள் அனைவரும் அங்கேயே கூடியிருக்க எளிமையாக ஒப்புத் தாம்பூலம் செய்துகொண்டு திருமண நாளையும் குறித்துவிட்டே, நடவாவி உத்சவத்திற்குக் கிளம்பிச்சென்றனர் அனைவரும். திருவிழா முடிந்து இரவு அங்கேயே தங்கிவிட்டு விடியற்காலை முதல் பேருந்தில் கிளம்பிவிட்டனர் மல்லியின் அம்மாவும் அப்பாவும், பிள்ளைகளிடம் அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள. *** சமையல் செய்து கொண்டே மகனிடம் நடந்த அனைத்தையும் சொல்லிக்கொண்டிருந்தார் பரிமளா. “அங்கே சுற்றுவட்டாரத்தில் நிறைய விவசாய நிலங்களை வாங்கிப் போட்டிருக்காங்களாம் டா. அந்த வீடு கூட அங்கே போனால் வந்தால் தங்குவதற்காகவாம். இது இல்லாமல் அங்கங்க வீடுகள் இருக்காம். மஹாபலிபுரம் பக்கம் மிகப்பெரிய பங்களா கட்டியிருக்காங்களாம். பலராமன் அண்ணா சொன்னாங்க. நேற்று எவ்வளவு மக்கள் அங்கே வந்து சாப்பிட்டார்கள் தெரியுமா?” சொல்லிக் கொண்டே போனார் அவர். தீபனுக்கும் சந்தோஷமாக இருந்தது தனது தமக்கையை நினைத்து. “அம்மா அத்தானோட போட்டோவை வாங்கிட்டு வந்தீங்களா?” என அவன் கேட்க, அப்பொழுதுதான் நினைவு வந்தவராக உடனே சென்று ஒரு கவரை எடுத்து வந்து, “போட்டோ கொடுத்திருக்காங்க. நீயே பாரேன் கவர் மேல் அவருடைய பர்சனல் செல் நம்பரை எழுதியிருக்காங்க. அவர் அமெரிக்காவில் இருப்பதால், மல்லியை வாட்சப் பில் தொடர்பு கொள்ளச் சொன்னாங்க. நீயே இந்த போட்டோவை அவளிடம் காட்டிவிடு. அப்படியே இந்த நம்பரையும் சேவ் செய்துகொள்ளச் சொல்லு” என்று அந்தக் கவரை மகனிடம் கொடுத்தார் பரி. அதை பிரித்துப் பார்த்தவன், “சூப்பரா இருக்காரும்மா. விக்கிப்பீடியால கூட ட்ரை பண்ணேன்மா அவருடைய போட்டோ இல்லை” என்றவனாக தமக்கையிடம் சென்றான் தீபன். இந்தத் திருமணத்தை எப்படி நிறுத்துவது என அதைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தாள் மல்லி, “ஒரே ஒரு நாளில் இப்படியெல்லாம் கூட நடக்குமா?” ஆயாசமாக இருந்தது அவளுக்கு. அறையினுள் நுழைந்த தீபன் அந்த கவரைத் தூக்கிப் பிடித்தவாறே அவளிடம் கொடுக்காமல், “இதில் என்ன இருக்கு தெரியுமா?” என ஆர்வமாய் கேட்க, “எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்” என எரிந்து விழுந்தாள் மல்லி. தீபன் சிரித்துக் கொண்டே, “ஏன் கா இப்படி கோவப்படுற... இந்தா! இதை நீயே வெச்சுக்கோ! இது அத்தானின் போட்டோ!” என்று கூற, “என்ன! அத்தானா?” என அவனை மல்லி முறைக்க, “ஆமாம்… மாமான்னு வேணா கூப்பிடட்டுமா?” என்று அவளைக் கிண்டலுடன் கேட்டவன், “அதில் அவருடைய செல் நம்பர் இருக்கு. உன்னை மெசேஜ் செய்யச் சொன்னாங்களாம் உன்னுடைய மாமியார்” என்று கூறி விட்டு அங்கிருந்து ஓடிப் போனான் தீபன். முதலில், “செல் நம்பரா?” என யோசித்தவள் பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாக அந்த எண்னை தனது கைப்பேசியில் பதிவு செய்தாள். அந்த என் முன்பே 'அனிஸ்' என அதில் பதிவாகி இருந்தது அனானிமஸ் என்பதைத்தான் சுருக்கமாக அவள் அப்படிச் சேமித்திருந்தாள். அதில் திடுக்கிட்டு, அவள் அதை ஓபன் செய்து பார்க்க, அந்த எண்ணிற்குத்தான் முன்பு ஒருமுறை தவறுதலாக கால் செய்துவிட்டு, அதற்காக மன்னிக்குமாறு மெசேஜ் செய்திருந்தாள் என்பது அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது. ‘அது ஆதியின் பர்சனல் செல் நம்பரா?’ உலகமே தட்டாமாலை சுற்றுவதுபோல் தோன்றியது மரகதவல்லிக்கு.
Comments