top of page

Thookanam Kuruvikal-5

கூடு-5

அடுத்த நாளே கோமுவின் திருமண பத்திரிகை வைக்க வேண்டும் என்பதைக் காரணம் காட்டி சரஸ்வதியை அவளுடைய தாய்மாமனின் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் கோகுல். அங்கே வந்த பிறகுதான் தெரிந்தது அது வெறும் சாக்குதான் என்று. வந்தவுடன் அவர்களுக்குப் பத்திரிகை வைத்துவிட்டு, அவர்கள் வீட்டின் பக்கத்திலிருக்கும் சரசுவின் அம்மாவுடைய நிலத்தைப் பார்க்கப்போனான் கோகுல். எல்லோருக்கும் முன்பாக மறுத்துப் பேச இயலாமல் அவனுடன் சென்றாள் அவள். அன்று அவர்கள் எழுப்பி இருந்த சுவர்கள் இடிந்து புதர்மண்டி காணப்பட்டது அந்த இடம். ‘எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என அவர்கள் வாங்கி போட்டிருந்த கட்டுமான பொருட்களை யார் யாரோ களவாடி எடுத்துச் சென்றிருந்திருப்பார்கள்!’ என எண்ணிக்கொண்டாள் சரசு. "ப்ச்.. இந்த நிலத்தாலதான் என் தங்கை வத்சலா போய் சேர்ந்தாள். அவ மேல உள்ளுக்குள்ள கோபம் இருந்தாலும் அவங்க ரெண்டுபேரோட சாவு என்னை புரட்டி போட்டுடுச்சு தம்பி. குடும்ப சூழ்நிலை என்னால அந்த பிள்ளைங்கள கூடவே வெச்சுக்க முடியல. அதை நினைச்சு நான் வருத்தப்படாத நாளே இல்ல. அந்த பாவத்துக்கு என் பிள்ளைகள் எனக்கு நல்லாவே தண்டனை கொடுக்கறாங்க. பென்ஷன் மட்டும் இல்லன்னா என்னை இந்த வீட்டை விட்டே துரத்தி இருப்பாங்க" என்றார் உடன் வந்த சரசுவின் தாய்மாமா. தொடர்ந்தவர், "அந்த சம்பந்தம் இன்னும் திருந்தவே இல்ல தம்பி. இன்னும் சுத்தி இருக்கற நிலங்கள்ல வீடு கட்டிட்டு இருக்கறவங்க பேர்லயெல்லாம் கேஸ் போட்டு மிரட்டி தொல்லை கொடுத்துட்டு இருக்கான். கொஞ்ச வருஷத்து முன்னால அவனோட மருமக ஏதோ காரணத்துக்காக கோவிச்சுக்கிட்டு வீட்டை விட்டே போயிட்டா. அதுக்கு பிறகு விவாகரத்துக்காக கோர்ட்டுக்கு அலைஞ்சாங்க. அவ வேற கல்யாணமும் பண்ணிக்கிட்டா! அந்த அவமானத்தையும் வேதனையும் தாங்க முடியாம அந்த சம்பந்தத்தோட மகனுக்குப் புத்தி பேதலிச்சு போச்சு. யார்கிட்டயும் அவனோட முகத்தை காமிக்க மாட்டான். வெளியில வந்தா பச்சை சாயத்தை முகத்துல பூசிட்டுதான் வருவான். இங்க பிள்ளைங்க எல்லாம் அவனைப் பார்த்தால் 'பச்சை மூஞ்சி'னு சொல்லி பயந்து ஓடுவாங்க. நம்ம ஊர் ரயில்வே ஸ்டேஷன்ல போய் படுத்து கிடப்பான். பிடிச்சு இழுத்துட்டு வந்தது சங்கிலியால கட்டி வெப்பாங்க. ஆனாலும் தப்பிச்சு போயிடுவான். திடீர்னு ஒருநாள் அவன் எங்கேயோ காணாமலேயே போயிட்டான். அனாலும் கூட சம்பந்சம் கொஞ்சம் கூட திருத்தல" என ஒரு பெருமூச்சினூடே முடித்தார் அவர். அனைத்தையும் கேட்கக் கேட்க பயம்தான் பெருகியது சரசுவுக்கு. இத்துடன் இதையெல்லாம் விட்டுவிட மாட்டானா அவன் என்றிருந்தது அவளுக்கு. *** சொன்னதை போல சில தினங்களுக்குள்ளாகவே அவர்கள் அலுவலகத்திற்கு அழைத்த வழக்குரைஞர் மாதினி மரியாதை நிமித்த விசாரிப்புகளுக்குப் பிறகு,, "அந்த சம்பந்தம் வெர்ஸஸ் வத்சலா கோபால் கேஸ்ல, பிளைன்டிஃப் அண்ட் டிபெண்டண்ட்ஸ்; அதாவது வாதி பிரதிவாதி ரெண்டு பக்கத்துல இருந்தும் யாரும் வராமல் போனதால் சில ஹியரிங்ஸ்க்கு பிறகு அந்த கேஸை தள்ளுபடி செஞ்சுட்டாங்க. ஸோ உங்க அம்மா பேர்ல இருக்கற அந்த ப்ராப்பர்டியை லீகல் ஹையர் யாரெல்லாம் இருக்கீங்களோ அவங்க க்ளைம் பண்ணலாம்" என்றவர், "வேற என்ன லீகல் ஹெல்ப் வேணும்னாலும் கேளுங்க; செய்யறேன்" என முடித்தார். ஆனாலும் கூட கோகுலின் முகத்தில் யோசனையின் சாயல் படியவும் அருகிலிருந்த சரஸ்வதிக்கு வயிற்றில் பய அமிலம் சுரந்தது. "இப்ப அங்க வீடு கட்டலாம் இல்ல மேம்?" என அவன் கேட்க, "கட்டலாம்! பிரச்சனை இல்ல; பட் அவங்க திரும்ப வந்து பிரச்சனை செய்ய சான்சஸ் இருக்கு; பார்த்துக்கோங்க" என அவள் சொல்ல, "தாங் யூ மேம்!' என்று சொல்லிவிட்டு அவளிடமிருந்து அந்த வழக்கு சம்பந்தப்பட்ட காகிதங்களை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினர் கோகுல் சரசு இருவரும். அவனுடைய இருசக்கர வாகனம் மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருக்க, "என்னங்க! அந்த இடத்துல வீடு கட்டப்போற மாதிரி பேசறீங்க?" என சரசு கேட்க, "ம்.. அப்படி ஒரு யோசனை இருக்கு சரசு" என்றான் கோகுல். அவளுக்கு அதில் உடன்பாடில்லாமல் போனாலும் அவனுக்கு எதிராக பேச இயலாமல் மனதிற்குள் தவித்துத்தான் போனாள் சரஸ்வதி. ஆனால் அதற்குப் பின் வந்த நாட்களில் அது சம்பந்தமாக எந்த பேச்சும் எழவில்லை இருவருக்குள்ளும். கோமதியின் திருமண வேலைகளில் மூழ்கிப்போனதும் ஒரு காரணம். குறித்த முகூர்த்தத்தில் கோமதி கௌசிக் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. அம்மா அப்பா ஸ்தானத்தில் சரஸ்வதியும் கோகுலும் நின்று அந்த திருமணத்தை நடத்தி முடித்தனர். கண்கள் குளமாகத் தங்கையைப் புகுந்தவீடு அனுப்பினாள் சரஸ்வதி. அடுத்த சில தினங்களில் மறுவீடு முறைக்காக கோமு கௌசிக்குடன் அவர்கள் வீட்டிற்கு வரப் புதுமண தம்பதியினருக்கு வரவேற்பு, விருந்து என அவர்கள் வீடே அமர்க்களப்பட்டது. கோமதி கிளம்பும் சமயம், தாம்பூலத்தில் அவர்கள் இருவருக்கும் புத்தாடை வைத்துக் கொடுக்க, கூடவே பரிசு தாள்களால் போர்த்தப்பட்ட ஒரு பெட்டியைக் கொண்டுவந்த கோகுல், அதை கௌசிக்கிடம் கொடுத்து, "கௌசிக்! உங்க மனைவிக்கும் என் மனைவிக்கும் ஒரு சின்ன கிஃப்ட்; உங்க கையாலேயே குடுத்துடுங்க!" என்று சொல்ல, கௌசிக் அதைக் கொடுக்க சகோதரிகள் இருவரும் அதை வாங்கிக்கொள்ளவும் ஆர்வமாக அதை பிரித்தாள் பவித்ரா. வண்ணமயமாக எதையோ எதிர்பார்த்தவளின் முகம் ஏமாற்றத்தில் சுருங்க, "சித்தீ! இதுல கிஃப்ட் இல்ல; எதோ பேப்பர்தான் இருக்கு!" என்றவாறே அதை கோமதியுடம் கொடுத்தாள் குழந்தை. அதைப் பிரித்துப் படித்துவிட்டு, துள்ளிக் குதித்த கோமதி, "க்கா... அம்மா பேர்ல இருந்த அந்த நிலத்தை நம்ம ரெண்டுபேர் பேர்லயும் மாத்தி பத்திரம் பதிஞ்சிருக்காங்க மாமா" என்றாள் குதூகலமாக. முகம் இருண்டுபோனது சரஸ்வதிக்கு. 'அம்மா அப்பாவை என் கிட்ட இருந்து பிரிச்ச அந்த நிலம் இப்ப கோகுலையும் கோமுவையும் என் கிட்ட இருந்து பிரிச்சிடுமோன்னு ரொம்ப பயமா இருக்கு' என்று மட்டும் எழுதினாள் அவள் அன்றைய தேதியை சுமந்திருந்த அவளது நாட்குறிப்பின் பக்கத்தில். ஆதரவற்றோர் இல்லத்தில் சில காலம் வாழ்ந்ததாலோ என்னவோ அதுவும் பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கோமதிக்கு கிடைத்தாற்போன்று ஒரு குடும்பச் சூழல் அவளுக்கு வாய்க்காமல் போகவே பட்டாம்பூச்சியாக தன் வண்ண சிறகுகளை விரித்துப் பறக்கவேண்டிய தருணத்தில் கூட தங்கைக்காக கூட்டுப்புழுவாகவே சில வருடங்களை அவள் தொலைத்திருந்ததால் தன் மனதைத் திறந்து யாரிடமும் பேச அதிகம் தயங்குவாள் சரஸ்வதி. கணவனிடம் கூட தன் ஆசையையோ அல்லது கோபத்தையோ வெளிப்படுத்தும் துணிவு அவளுக்கு இவ்வளவு வருடங்கள் கடந்தபின்னும் வரவில்லை. அவன் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிவிட்டுப் போய்விடுவாள் தன் எண்ணம் வேறாக இருந்தாலும். அவள் அறியவே அவளுடைய 'டைரி'யை அவன் படிக்க தொடங்கியதே அவளுடைய மனத்திலிருப்பதை அறிந்துகொள்ளும் எண்ணத்தினால்தான். பல சந்தர்ப்பங்களில் அவளுடைய மனதைப் புண் படுத்தாமல் விட்டுக்கொடுத்துப் போக இது அவனுக்கு உறுதுணையாக இருக்கவே அந்த பழக்கம் தவறு என்றே எண்ணவில்லை கோகுல். வழக்கம் போல அந்த நாளேட்டில் அவளுடைய மனதைப் படித்தவன் கொஞ்சம் நெகிழ்ந்துபோய், "நோ நெவெர் ஜில்லு; பிரிவு அப்படிங்கற வார்த்தையையே உன் டிக்ஷ்னரியில இருந்து அழிச்சிடு; உன்னை எந்த ஒரு துன்பமும் நெருங்க விடமாட்டேன். என்னை நம்பு" என மெல்லிய குரலில் சொல்லி உறங்கிக்கொண்டிருந்த மனைவியின் நெற்றியில் முத்தமிட்டான் கோகுல். ஆழ்ந்த உறக்கத்தில் ஏதோ கனவின் தாக்கத்திலிருந்தவளுக்கு அந்த முத்தத்தின் ஈரம் அவளது அன்னையை நினைவு படுத்தியது. *** அவனுடைய பிடிவாதத்துக்கு கோமதியும் குடை பிடிக்க ஒரு நல்ல வாஸ்து நாள் பார்த்து அந்த மனையில் கட்டிட பணியைத் தொடங்கினான் கோகுல். தரை தளம் சரஸ்வதிக்கும் முதல் தளம் கோமதிக்கும் என முடிவாக, ஒரு கைதேர்ந்த கட்டுமான நிறுவனத்திடம் அந்த வீடு கட்டும் பணியை ஒப்படைத்தான் அவன். மனையை அடிப்படையாக வைத்து வீடு கட்ட வங்கி கடனுக்கு விண்ணப்பிக்க, கோமு, சரஸ்வதி இருவருக்குமே கேட்ட தொகைக்கு அந்த கடன் ஏற்பாடாகி இருந்தது. அங்கே புதிதாகப் பூஜை போட்டு அந்த கட்டிடத்தைத் தொடங்கக்கூட விரும்பவில்லை கோகுல். அவனுடைய அம்மா காவேரி கேட்டதற்குக் கூட, "அந்த இடத்துல வீடுகட்ட ஏற்கனவே பூஜை போட்டாச்சு. ஜில்லு அம்மாவும் அப்பாவும் அவங்க கையால செங்கல் எடுத்துவெச்சு ஆரம்பிச்சதாகவே இருந்துட்டு போகட்டும். அவங்க போட்ட பேஸ்மெண்ட் கூட நல்லாவே இருக்காம். அந்த கன்ஸ்ட்ரக்ஷன் எஞ்சினியர் சொல்லிட்டாரு. ஸோ அதை கொஞ்சம் ஆல்டர் பண்ணி அதுலதான் பில்டிங் எழுப்ப போறோம்!" என்றான் அவன். அவனது பிடிவாதத்தை யாராலும் அசைக்க முடியவில்லை. ஏன் அவனுடைய ஜில்லுவின் 'டைரி'யால் கூட . ***

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page