top of page

Thookanam Kuruvikal-8 (Final)

Updated: Aug 23, 2020

கூடு-8

காவேரி தன் பங்கிற்கு நாளும் பொழுதும் பிரார்த்தனையில் ஈடுபட, ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகக் கழிந்தது அவர்களுக்கு. குறிப்பிட்ட அந்த நாளும் வர, நீதி மன்றத்திற்கு வந்தனர் அனைவரும். நிலை பொறுக்க முடியாமல் அன்று கௌதம், கலாவதி, ஈஸ்வரன் மூவரும் கூட அவர்களுடன் வந்து காத்திருக்க, அவர்கள் முறை வரவும், அனைவரும் உள்ளே சென்று நிரம்பி வழியும் கூட்டம் காரணமாக ஓரமாக நின்றனர். மாதினி தாக்கல் செய்திருந்த அந்த உயில் பத்திரம் ஒன்று மட்டுமே போதுமானதாக இருக்க, மேற்கொண்டு எந்த வாத-பிரதிவாதங்களுக்கும் அவசியம் இல்லாமல் அந்த தடை ஆணையைத் திரும்பப் பெற்றார் நீதிபதி. நிம்மதி பெருமூச்சு விட்டனர் அனைவரையும். தோல்வியும் அவமானமும் ஒரு சேர தாக்குதல் நடத்தியிருக்க, இருளடைந்த முகத்துடன் அங்கே ஓரமாக நின்றுகொண்டிருந்த சம்பந்தத்தை கடந்து கணவனின் கையை பற்றிக்கொண்டு தலை நிமிர்ந்து வெளியில் வந்தாள் சரஸ்வதி. ஆயிரம் நன்றிகளை மாதினிக்கு சொல்லிவிட்டு, அனைத்து சட்ட நடைமுறைகளையும் முடித்துக்கொண்டு எல்லோரும் வீட்டிற்குச் செல்ல, கோகுலும் கௌசிக்கும் 'கே.ஆர் அசோசியேட்ஸ்' அலுவலகம் சென்று மரியாதை நிமித்தம் வழக்குரைஞர் கோதண்டராமனைச் சந்தித்து தங்கள் நன்றிகளைச் சொல்லிக்கொண்டு, அவர்களுடைய கட்டணத்தையும் செலுத்திவிட்டு வீடு வந்து சேர்ந்தனர். பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து இனிப்புகளுடன் விருந்து சமைக்க, வீடே நிமதிக்கோலம் பூண்டது. அந்த வழக்கை தொடர்ந்து நடத்தவேண்டிய அவசியம் இருந்தாலும் அந்த தடை உத்தரவு சட்டப்படி திரும்பப் பெறப்பட்டிருந்த காரணத்தால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த புதிய வீட்டின் கட்டுமான வேலைகளை அன்றே மீண்டும் தொடங்கினர் நிம்மதியும் மகிழ்ச்சியுமாக. *** 'சீ.ஏ' பரிச்சையில் வெற்றிகரமாகத் தேறியிருந்தாள் சரசு. இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கோலாகலமாக நடந்தது அவர்கள் வீட்டுப் புதுமனை புகு விழா. அத்தனை வசதிகளையும் உள்ளடக்கியதாக நேர்த்தியுடன் அமைந்திருந்தது அந்த அழகான கூடு. அதில் அடுக்கிக் கட்டப்பட்டிருந்த ஒவ்வொரு செங்கல்லிலும் வத்சலா-கோபால் என்றே எழுதப்பட்டிருந்தது போல உணர்ந்தாள் சரசு. சம்பிரதாயப்படி அன்று இரவு அந்த புது வீட்டிலேயே அனைவரும் தங்க, மொத்த குடும்பத்தினரும் வரவேற்பறையிலேயே பாய் விரித்துப் படுத்தனர். சரஸ்வதிக்காக அனைவரும் காத்திருக்க, அங்கே இருந்த அறைக்குள் உட்கார்ந்து அவளது நாளேட்டில் எழுதிக்கொண்டிருந்தாள் சரசு. "சரசு! சரசு!" என்ற கோகுலின் அழைப்பைக் காதில் வாங்காமல் அவள் மும்முரமாக எழுதிக்கொண்டிருக்க, "ஜில்லு!" எனச் சத்தமாக அழைத்தான் அவன். அதற்கு கலாவதி ஏதோ கிண்டல் செய்வதை உணர்ந்தவள் அவசரமாக ஏதோ எழுதிவிட்டு, அந்த நாளேட்டை அலமாரியில் வைத்துவிட்டு வந்து மாமியாரின் அருகில் உட்கார, உடனே கலாவதி, "அம்மாடி ஜில்லு! உன்னோட கூகுள் உன்னை கூப்பிட்டுட்டே இருக்கு! நீ என்னடான்னா அங்கே போய் உட்காந்திருக்க?" எனக் கணவன் மனைவி இருவரையும் வாற, "மானத்தை வாங்காதீங்க அண்ணி!" என வெட்கப்பட்டாள் சரசு. "நான் ஒண்ணும் பப்ளிக்ல ரொமான்ஸ் பண்ண கூப்பிடல கலாய்வதி அண்ணி!" எனப் பதில் கொடுத்தவாறு மனைவியின் அருகில் வந்து உட்கார்ந்த கோகுல், "நம்ம மேடம் இப்ப சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட் ஆகிட்டாங்க! அதனால அவங்க பேர்ல ஒரு ஆடிட் ஃபர்ம் ஆரம்பிக்கலாம்னு நினைக்கறேன்" என அவன் சொல்ல 'ஹுர்ரே!' என துள்ளி குதித்தாள் கோமு. "லூசு இந்த நேரத்துல இப்படி குத்திக்கற!' என அவளை மென்மையாகக் கடிந்துகொண்டான் கௌசிக். அவள் தாய்மை அடைந்திருப்பதே அதற்குக் கரணம். கலாவதி கௌசிக்கை ஒரு கிண்டல் பார்வை பார்க்க, வேறு பக்கம் திரும்பினான் அவன். தொடர்ந்தான் கோகுல். "இனிமேல் இந்த டிரான்ஸ்ஃபர் விவகாரமெல்லாம் எனக்கு செட்டே ஆகாது! அதனால என் வேலையை விட்டுடலாம்னு இருக்கேன்! ஸோ என் பொண்டாட்டி கம்பெனில வேலை செய்யலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்! என்ன ஜில்லு! எனக்கு ஒரு வேலை போட்டு குடுப்பியா" என கோகுல் தீவிரமாகச் சொல்ல, ஆனந்த அழுகையுடன் சுற்றுப்புறம் மறந்து அவள் அவனை அணைத்துக்கொள்ள, 'ஓ ஹோ!' என ஆர்ப்பரித்தனர் அனைவரும். அன்பால் அமைந்த அவர்களுடைய அந்த இல்லத்துக்குள் அந்த இரவு கூட பிரகாசமாக ஒளிர்ந்தது. *** அனைவரும் உறங்கியதும் சரஸ்வதியின் மனதில் நிரம்பி வழியும் மகிழ்ச்சியை அறிந்துகொள்ளும் ஆவலுடன் நாளேட்டைத் தேடி எடுத்தவன் தன கைப்பேசி ஒளியின் துணையுடன் அன்றைய பக்கத்தைப் புரட்டினான். இப்ப இந்த சந்தோஷத்தைப் பங்கு போட்டுக்க அம்மா அப்பா இலையேங்கற குறை மட்டும்தான் இருக்கு. இருந்தாலும் அம்மாதான் பவி குட்டியா எங்கிட்ட திரும்ப வந்திருக்காங்கன்னு என்னை நானே சமாதான படுத்திக்கறேன். அதே மாதிரி கோமுவுக்கு மகன் பிறந்தா அவன்தான் அப்பான்னு நம்புவேன். வாழ்க்கை இப்படியே வாழை அடி வாழையா தொடர்ந்தால் போதும். ஏன்னா அம்மாவின் கனவைப் போலவே இப்ப எனக்கும் கனவுகள் வர தொடங்கியிருக்கு. என் மகள்/பிள்ளைகள்; கோமுவின் பிள்ளைகள்; அவங்களோட வாழ்க்கைத்துணைகள் மற்றும் அவங்க பிள்ளைகள்னு இந்த வீடு இன்னும் நூறு சொந்தங்களை பார்க்கணும். ஏன்னா இது வெறும் செங்கல்லாலும் சிமெண்டாலும் மட்டும் கட்டப்பட்ட வீடு இல்ல! எங்க அம்மா சொன்ன மாதிரி ஒரு அழகான தூக்கணாம் குருவிக்கூடு! ஒரு ஆசை; கனவு லட்சியம் இதையெல்லாம் தாண்டி இப்படி ஒரு அழகான கூடுங்கறது என்னோட பதினஞ்சு வருஷ தவம். இந்த கூட்டை எனக்கு கொடுத்ததுக்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்ல மாட்டேன். எங்க அம்மாவுக்கு இதை அவர் கொடுக்கல! அந்த கோபம் அவர் மேல எனக்கு இருக்கு! ஆனா ஆயிரம் நன்றிகளை அவருக்குச் சொல்லுவேன் கோகுலை எனக்குக் கொடுத்ததுக்கு. ஏன்னா நிம்மதியா தன்னோட கூட்டை அடைந்த சந்தோஷத்தை இந்த குருவிக்குக் கொடுத்தவன் அவன். கடைசி வரிகளை அவசரமாகக் கிறுக்கி இருந்தாள். ஆனாலும் அந்த கிறுக்கல் அவ்வளவு அழகாக இருந்தது அதைப் படித்தவனின் மனது நிறைந்துபோகும் அளவிற்கு. *** அவர்களுடைய புதிய வீட்டிற்குக் குடிவந்து கூடவே தங்கள் சொந்த நிறுவனத்தைத் தொடங்கி சில நாட்கள் கடந்திருந்தது. புதிது புதிதாக வாடிக்கையாளர்கள் அதிகரித்தவண்ணம் இருக்க மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர் சரஸ்வதி மற்றும் கோகுல் இருவரும். நாட்கள் தெளிந்த நீரோடையாக அழகாகச் சென்றுகொண்டிருந்தது. ஒரு நாள் தாம்பரத்தில் இருக்கும் அண்ணன் கௌதமுடைய வீட்டிற்குச் சென்றுவிட்டு கோகுல் தனது மனைவி மகளுடன் திரும்ப வந்துகொண்டிருந்த சமயம் ஏதோ பழுது ஏற்பட்டு அவனது இரு சக்கர வாகனம் பாதியிலேயே நின்றுவிட, இறங்கி அவன் அதை ஆராயவும், ஓரமாகப் போய் நின்றனர் சரஸ்வதியும் குழந்தை பவித்ராவும். அப்பொழுது அவர்களை நோக்கி வந்தான் ஒரு மனநலம் பிழன்றவன். உடலில் ஒரு சிறு பகுதி கூட தெரியாதவாறு துணியால் மூடி மறைத்திருந்தான் அவன். அதைப் பார்த்துப் பதறிப்போய் கோகுல் வாகனத்தை அப்படியே விட்டுவிட்டு அவர்களை நோக்கிப் போக, முன்பு ஒருமுறை பவித்ரா அந்த பைத்தியக்காரனைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொன்னது அவனது நினைவுக்கு வந்தது. வேகமாக கோகுல் மகளை இழுத்து தன்னுடன் அணைத்துக்கொள்ள, என்ன நினைத்தானோ அவன் அவசரமாக தன் கையில் சுற்றி இருந்த துணியை அவிழ்த்து தன் சட்டைப் பையைத் துழாவி ஒரு மோதிரத்தை எடுத்து பவித்ராவிடம் நீட்ட, அவனது அந்த அன்பான செய்கையில் நெகிழ்ந்தே போனார்கள் கோகுல் சரஸ்வதி இருவரும். மிரட்சியுடன் குழந்தை தகப்பனை ஏறிட, அது செம்பினால் ஆன ஒரு சாதாரண மோதிரம்தான் என்பதை உணர்ந்து 'வாங்கிக்கொள்' என்பது போல் அவன் கண் அசைக்கவும் தயக்கத்துடன் அதை வாங்கிக்கொண்டாள் அவள். முன்னே நின்றவனின் உணர்வுகளை அவனால் படிக்க முடியாமல் போனாலும் சிறு ஓட்டை வழியாகத் தெரிந்த அவனுடைய ஒற்றை கண் மட்டும் வைரமாக ஜொலிப்பது புரிந்தது. மகளை மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு ஓடியவன் சில பழங்களுடன் திரும்ப வந்து அவற்றை அந்த மன நலம் பாதிக்கப்பட்டவனிடம் கொடுக்க, மறுக்காமல் அதை வாங்கிக்கொண்டான் அவன். பின்பு மறுபடி ஒரு முறை முயன்று பார்க்கவும், வாகனம் உயிர்பெறவும் அங்கிருந்து கிளம்பினர் மூவரும். வீட்டிற்கு வந்ததும், "அப்பா இந்த ரிங்கை நான் போட்டுக்கவா?" என பவித்ரா கேட்க, அது அவனுடைய மனதிற்கு ஒவ்வாமல் போனாலும் குழந்தை மனதில் நஞ்சை விதைக்க விரும்பாமல், அவளிடமிருந்து வாங்கி அதைச் சுத்தம் செய்து கொண்டு வந்த கோகுல் அந்த மோதிரத்தை அவளுடைய விரலில் அணிவிக்க அது அவளுக்குக் கச்சிதமாகப் பொருந்தியது. "அழகா இருக்கில்லம்மா!" எனத் தாயிடம் சென்று அதைக் காண்பித்தாள் குழந்தை. அதைப் பார்த்ததும் அவளுடைய உடல் சிலிர்க்க, "கோகுல்! உங்க அப்பா சபரிமலைக்கு போயிட்டு வந்தப்ப நம்ம எல்லாருக்கும் சாமி படம் போட்ட மோதிரம் வாங்கிட்டு வந்தார் இல்ல? அதே மாதிரி இருக்கு பாருங்களேன்" என்றாள் சரஸ்வதி வியப்புடன். அதில் குழம்பியவன், "என்ன சொல்ற, உன்னோட அம்மா அப்பா இறந்த வருஷம்தான் அப்பா ஒரே ஒரு தடவ மலைக்கு மாலை போட்டார்! அதுக்கு பிறகு போகவே இல்லையே!" என அவன் சொல்ல, "ஆமாம்! அப்பத்தான் சொல்றேன்; எனக்கு மகாலக்ஷ்மி போட்டது. இதோ பவி குட்டி போட்டுட்டு இருக்கா இல்ல! அதே மாதிரி பிள்ளையார் படம் போட்ட மோதிரத்தைத் தான் மாமா கோமுவுக்கு வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க. அவளுக்குக் கொஞ்சம் லூசா இருந்ததுனு அப்பா நூல் சுத்தி குடுத்தாங்க. அச்சு அசல் அதே மாதிரியே இருக்கு!" என்றாள் அவள் வியப்பு மாறாமல். 'இதுல அதிசயப்பட என்ன இருக்கு? இது மாதிரி ஊர் மொத்தம் கிடைக்கும்' எனச் சொல்லவந்து அதை மறந்து சிறு ஒரு குழந்தையின் குதூகலத்துடன் பேசிக்கொண்டிருந்த மனைவியைக் காதலாகப் பார்த்தான் அவளுடைய அன்பு தலைவன் *** தன் தகப்பனுடன் கெஞ்சிக் கதறி சாபம் கொடுத்துவிட்டு அங்கிருந்து போன அந்த தம்பதியின் முகமும் கள்ளம் கபடமில்லாத அந்த பிஞ்சுகளின் முகமும் சாலையோரம் படுத்திருந்த அந்த பைத்தியக்காரனின் மனக்கண்ணில் தோன்றிக்கொண்டே இருந்தது. அன்று ஒரு குழந்தையின் விரலிலிருந்து தவறி விழுந்த மோதிரத்தை எடுத்து தன் சட்டைப் பையில் போட்டுக்கொண்டான் அப்பொழுது பதின்ம வயதின் விளிம்பிலிருந்தவன். அதைப் பாதுகாக்க அவன் எண்ணவில்லை என்றபோதும் கால் காசு பெறாத அந்த சிறிய மோதிரம் அவனுக்கு இவ்வளவு பெரிய பாரமாக மாறிப்போகும் என்பதை உணரவில்லை அவன், அவர்களுடைய அந்த பாவப்பட்ட பணத்தில் வாழ விரும்பாமல் ஒருத்தி அவனைத் தூக்கி எறிந்துவிட்டு போகும்வரை. அப்பன் செய்யும் பாவங்களைத் தட்டிக்கேட்கக் கூட துணிவில்லாமல், அதை எண்ணி எண்ணிக் கூனி குறுகியவன் தன் முகத்தை யாருக்கும் காண்பிக்க விரும்பாமல் தனித்து ஒதுங்கிப்போனான் அவன். ஊரில் உள்ள குடும்பத்தின் நிம்மதியையெல்லாம் கெடுத்து அந்த சம்பந்தம் சேர்க்கும் பணத்தில் ஒரு வேளை உணவைக் கூட உண்ணாமல் தெருவோரம் இருக்கும் கடைகளிலெல்லாம் கை ஏந்தி உயிர் வாழ்கிறான் அவனுடைய சொத்துக்கெல்லாம் ஒரே வாரிசாக இருப்பவன். இதை என்றேனும் அறிந்து கொள்ள நேர்ந்தால் அப்பொழுதாவது தன் பாவங்களை உணர்வானா அந்த சம்பந்தம்? ஆனால் அதைப் பற்றிய கவலையெல்லாம் கடந்த நிலையில் முற்பிறவியைப் போன்று தோன்றிய என்றோ ஒரு நாள் பார்த்த அந்த தாயையும் மகளையும் மறுபடியும் நேரில் கண்டதாகவே நம்பியவன், ஒரு பொருளை அதன் உரியவரிடம் சேர்த்த திருப்தியுடன் பட்டினத்தார் பாடல் ஒன்றைக் கத்தி பாடத் தொடங்கினான் அந்த பொல்லாத தகப்பனுடைய பாவங்களை தன் தலையில் தூக்கிச் சுமப்பவன். அந்த இரவு நேரத்தில் கூட பேரிரைச்சலாக ஓடிக்கொண்டிருக்கும் வனங்களின் ஒலியும் ரயிலின் இரைச்சலும் கூட அவனது உள்ளது அமைதியைக் குலைக்கவில்லை. பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்; தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்; பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்; உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்; புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்; அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்; உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்; என்றிவை அனைத்தும் உணர்ந்தனை; அன்றியும்; பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும் கொன்றனை அனைத்தும், அனைத்து நினைக்கொன்றன. தின்றனை அனைத்தும், அனைத்து நினைக் கொன்றன; பெற்றனை அனைத்தும், அனைத்து நினைப் பெற்றன; ஓம்பினை அனைத்தும், அனைத்து நினை ஓம்பின; [இந்த உலகத்தில் பிறந்தவை யாவும் ஒரு காலத்தில் இறந்துவிடும்; இறந்தவை யாவும் மறுபடி பிறக்கும். உலகத்தில் காணப்படும் யாவும் மறையும்; மறைந்தவை யாவும் மீண்டும் தோன்றும். பெரிய பொருள்கள் யாவும் சிறியனவாகும்; சிறியவை யாவும் பெரியனவாகும். அறிந்துகொள்ளப்பட்ட பொருள்கள் மறந்துபோகும்; மறந்துவிட்ட பொருள்கள் மீண்டும் அறிந்துகொள்ளப்படும். சேர்ந்தவை யாவும் நீங்கிப்போகும்; பிரிந்த பொருள் யாவும் மீண்டும் வந்து சேரும். விரும்பி உண்ணப்பட்டவை யாவும் வெறுக்கப்படும் மலமாக மாறிப்போகும். விரும்பி அணியும் ஆடை கூட வெறுப்பை அளிக்கும் அழுக்காய் மாறும். விரும்பும் பொருள்கள் யாவும் பின்னால் ஒரு நாள் வெறுப்பை அளிக்கும். வெறுப்பை அளிக்கும் பொருட்கள் ஒருநாள் விருப்பத்தை அளிக்கும்; இப்படிக் கூறப்படும் இத்தகைய பொருளின் இயல்புகள் எல்லாவற்றையும், நீ உணர்ந்தாயோ இல்லையோ! இவையே அல்லாமலும் மனமே! இதுகாறும் நீ பிறந்து வருந்திய எண்ணிலா பிறவிகள் தோறும் நீ மற்ற உயிர்களைக் கொன்றாய். நீ செய்த அந்த தீவினை காரணமாக அவையெல்லாம் உன்னையும் கொன்றுள்ளன. நீ கொன்று தின்ற அனைத்தும் உன் தீவினை பயனாக உன்னைக் கொன்று தின்றும் உள்ளன. நீ பல உயிர்களுக்கு தாயாகி அவற்றைப் பெற்றும் உள்ளாய்; உன்னால் பெறப்பட்ட உயிர்கள் எல்லாம் உனக்குத் தாயாகி உன்னைப் பெற்றும் உள்ளன. மனமே எல்லா உயிர்களையும் நீ பாதுகாத்துள்ளாய்; உன்னால் பாதுகாக்கப்பட்டவையெல்லாம் உன்னைப் பாதுகாத்தும் உள்ளன (பட்டினத்தாரின் கோயில் திரு அகவலிலிருந்து)]

0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page