கூடு-4
அவளது கண்ணீரை கண்டு வருந்தியவர், "தோ பாரு ஜில்லு! அந்த வயசுக்கு நீ படக்கூடாத கஷ்டத்தையெல்லாம் பட்டு மீண்டு வந்திருக்க. கோகுல் மாதிரி ஒருத்தன் உன்னை நல்லபடியா வெச்சிருக்கும்போது உன் கண்ணுல தண்ணி வரவே கூடாது. இனிமேல் உங்களுக்கு நல்ல காலம்தான்! கவலை படாதே!" என புஷ்பா சொல்ல, கண்களை துடைத்துக்கொண்டாள் சரசு. கையில் வைத்திருந்த கட்டை பைக்குள்ளிருந்து ஒரு தட்டை எடுத்து, அதில் ஏற்கனவே வாங்கி வந்திருந்த இனிப்புகள் அடங்கிய பெட்டியை சில ஆப்பிள்களுடன் வைத்து அதில் ஒரு பத்திரிகையையும் வைத்த கோமு, "மாம்ஸ்! என மென்மையாக அழைத்து அவனிடம் கொடுக்க, "வா சரசு! நீயே குடு!" என கோகுல் சொல்லவும், முகத்தில் புன்னகை மலர, "அடுத்த மாசம் நம்ம கோமுக்கு கல்யாணம் வெச்சிருக்கோம் கவிதாம்மா! நீங்க அவசியம் வரணும்!" என்று சொல்லி அந்த தட்டை அவரிடம் கொடுத்தாள் சரசு. முகத்தில் மகிழ்ச்சி பொங்க, "பாத்தியா! இந்த பொண்ணு நேத்து போன் பண்ணப்ப இந்த சமாச்சாரத்தை பத்தி மூச்சு கூட விடல. கௌதம் அம்மா போன்ல இருந்து கால் பண்ணி, 'நாளைக்கு உங்க வீட்டுக்கு வறோம்! முக்கியமான விஷயம். முடிஞ்சா அந்த மனை பத்திரத்தை எடுத்து வைங்கன்னு' மட்டும்தான் சொல்லிச்சு" என அவர் குறைபட்டுக்கொள்ள, "அப்படி இல்ல கவிதாம்மா! மாமா நேத்துதான் மும்பையில இருந்து வந்தாங்க! இந்த விஷயத்தை நேரில் சொல்லிக்கலாம்னுதான்!" என கோமு விளக்கம் கொடுக்க, "முதல் பத்திரிகை உங்களுக்குத்தான் வெச்சிருக்கோம் கவிதாம்மா" என்றான் கோகுல். "இவங்க இப்படி நல்லபடியா இருக்க நீயும் உங்க அம்மா அப்பாவும்தான் காரணம் கோகுல்!" என அவர் நெகிழ்ச்சியுடன் சொல்ல, "ஏன் கவிதா அம்மா! நீங்க இல்ல! ஒரு லட்சம் பணம் திரும்பி வரவே வராதுன்னு தெரிஞ்சும் அன்னைக்கு இவங்க ரெண்டுபேருக்கும் பக்கபலமா நின்னீங்க இல்ல! உங்களை விடவா!" என கோகுல் கேட்க, "அது கிடக்கட்டும் விடு! கோமுக்கு பார்த்திருக்கும் மாப்பிளை எந்த ஊர்! என்ன செய்யறார்!" என அக்கறையுடன் விசாரித்தார் புஷ்பா. "மாப்பிள்ளை கௌஷிக் சென்னைதான் கவிதாம்மா! கூடுவாஞ்சேரில இருக்கார்! அவரும் கோமு வேலை செய்யற கம்பனிலதான் வேலை செய்யறார்! இவளை பிடிச்சிருக்குன்னு சொன்னாராம்! எங்களை பத்தின எல்லா தகவலையும் சொல்லி பெரியவங்க கிட்ட பேசுங்கன்னு சொல்லியிருக்கா கோமு! அவங்க அம்மா அப்பாவோட வந்து பொண்ணு கேட்டார்! நல்ல மனுஷங்களா தெரியவும் உடனே நிச்சயதார்த்தத்தை சிம்ப்பிளா முடிச்சிட்டோம்! கல்யாணம் கொஞ்சம் க்ராண்டா செய்யலாம்னு ஏற்பாடு பண்ணியிருக்கோம்!" என்ற சரசு தனது கைபேசியில் அவர்களுடைய நிச்சயதார்த்தத்தின் போது எடுத்த படங்களை காண்பித்தாள். மாப்பிள்ளை நம்ம கோமுவுக்கு பொருத்தமா நல்லா இருக்காரு! ரொம்ப சந்தோஷம் கண்ணுங்களா! நீங்க நல்லா இருக்கனும்" என மனதார வாழ்த்தினார் அந்த பெண்மணி! பின்பு அவருடன் ஒரு 'செல்பீ' யை க்ளிக்கிக்கொண்டு, விடைபெற்று அங்கிருந்து கிளம்பினார் அனைவரும். *** அதன் பிறகு மாம்பலத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற கோதண்டராமர் கோவிலுக்குச் சென்றவர்கள், அவர்கள் அடமானத்திலிருந்து மீட்ட அந்த பத்திரத்தை இறைவனின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்துவிட்டு அதன் பின் வீட்டிற்குக் கிளம்பினர். பலமான போக்குவரத்துக்கு நெரிசலில் அவர்கள் பயணிக்கும் வாகனம் ஊர்ந்து செல்ல ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக அருகில் உட்கார்ந்திருந்த தமக்கையைப் பார்த்தவள், கோகுலிடம் கையை விரித்து, "இது என்ன ரியாக்ஷன்!' என ஜாடையாக கேட்டவள், அவளது மௌனத்தை உடைக்க, "பவி குட்டி! இன்னைக்கு நாம வெளியில வந்திருக்கோமே உனக்கு பிடிச்சிருக்கா?" என கேட்டாள் கோமதி. "அந்த பாட்டியை ரொம்ப பிடிச்சிருந்தது! நாம ஒரு கோவிலுக்கு போனோம் இல்ல! அந்த கோவில் ரொம்ப பிடிச்சிருந்தது! அங்க ஒரு ராக்ல செஞ்ச யானை இருந்துச்சு இல்ல; நான் கூட அதுமேல உட்கார்ந்துட்டு இருந்தேனே! அந்த யானை; அதையும் ரொம்ப பிடிச்சிருந்தது சித்தி!" என்றாள் குட்டி. "ஒரு யானை இல்ல குட்டி ரெண்டு யானை! அதில் ஒண்ணு ராம்! இன்னொண்ணு லக்ஷ்மண்! நாங்க உன்னை மாதிரி குட்டியா இருந்தப்ப, ராம் அம்மாவுக்கு; லக்ஷ்மன் சித்திக்குன்னு சொல்லி அதில் உட்காருவோமாம்! உங்க காவேரி பாட்டி சொல்லுவாங்க!" என கோமு சொல்ல, "அப்ப அப்பா எங்க உட்காருவங்க!" என பவி கேட்க, "அப்ப நான் ரொம்ப குட்டி பாப்பா இல்ல! உங்க அப்பாதான் யானை பாகன் மாதிரி எனக்கு பின்னால உகட்கார்ந்துட்டு, என்னை கீழ விழாம பார்த்துப்பாங்களாம்" என கோமு சொல்ல, "வேணாம் கோமு! அதைப் பத்தி பேசாத! அம்மா அப்பா ஞாபகம் ரொம்ப வருது" எனக் கண் கலங்கினாள் சரசு! "அக்கா அவங்களோட கடனை அடைச்சு பத்திரத்தை மீட்டத்துல உனக்கு சந்தோஷம் இல்லையா?" என கோமு கேட்க, "ரொம்ப நிம்மதியா பீல் பண்றேன் கோமு! சந்தோஷத்தை விட இந்த நிம்மதி ரொம்ப பெருசு!" என சரசு சொல்ல, "இதுக்கெல்லாம் காரணம் மாமாதான் கா!" என நெகிழ்ந்தாள் தங்கை. "லூசு! பெரிய மனுஷி மாதிரி பேசற! இன்னைக்கு அவங்ககிட்ட கொடுத்த பணம் பாதி நீ சம்பாதிச்சது! பாதி சரசுவோடது! நான் என்ன பண்ணேன்!" என கோகுல் தன்னடக்கத்துடன் சிரிக்க, "இல்ல மாமா! இப்ப கூட நாங்க கீழ விழாம எங்களை நீங்கதான் பாதுகாத்துட்டு இருக்கீங்க! பணமெல்லாம் மேட்டரே இல்ல!" என்றாள் கோமு மனதிலிருந்து. *** அடுத்து வந்த நாட்களில் கோகுல் அவனது பணியில் இணைய, சரசுவும் விடுப்பு எடுக்க இயலாத நிலையில் மகளுடன் பள்ளிக்குச் செல்ல, கூடவே கோமுவின் திருமண வேலைகள் வேறு சேர்ந்துகொள்ள அந்த வாரம் முழுவதும் பரபரப்பாகவே சென்றது. வெள்ளிக்கிழமை மாலை சரஸ்வதி பள்ளி நேரம் முடிந்து மகளுடன் வீடு திரும்ப, அவளுக்கு முன்பாகவே வீட்டிற்கு வந்திருந்தான் கோகுல். "ஜில்லு! அம்மா டிஃபன் செஞ்சு வெச்சிருக்காங்க" என்று சொல்லி ஒரு டப்பாவைச் சுட்டிக்காட்டியவன், "சீக்கிரம் ரெஃப்ரெஷ் செய்துட்டு வாங்க சாப்பிடலாம்!" என அவன் சொல்ல, வேறு உடைக்கு மாறி ஓடி வந்த பவித்ரா, அதிலிருந்த உப்புமா கொழுக்கட்டைகளில் இரண்டை எடுத்து தட்டில் வைத்துக்கொண்டு, தகப்பனின் மடியில் வந்து உட்கார்ந்துகொண்டு அதை ருசித்தவாரே, கதை சொல்ல ஆரம்பித்தாள். "ப்பா! அங்க அந்த பஸ் ஸ்டாப் பக்கத்துல ஒரு காம்பௌண்ட் வால் இருக்கில்லப்பா பெருசா!" என தன் கைகளை விரித்தவள், "அதுல மூஞ்சி ஃபுல்லா துணி போட்டு மூடிட்டு ஒரு மெண்டல் மேன் உக்காந்துட்டு இருக்கார்பா! அழுக்கா ஒரு ஃபுல் பாண்ட்; ஃபுல்கை சட்டை போட்டுட்டு, கால்ல ஷூ போட்டுட்டு, கை பிங்கர்ஸ் கூட தெரியாம துணி சுத்தி இருக்காருப்பா! ஃபேஸ் ஃபுல்லா துணி சுத்தி இருக்காருப்பா! அந்த துணியால ஒரு கண்ணைக் கூட மூடிட்டு இருக்காரு. பாக்கறதுக்காக ரைட் கண்ணுல மட்டும் ஒரு குட்டி ஓட்டை வெச்சிருக்காருப்பா! டெய்லி என்னையும் அம்மாவையும் பார்த்துட்டே இருப்பாரு; ஆனா இன்னைக்கு எங்க கிட்ட வந்து தலையை சாச்சு இப்படி பார்த்தாருப்பா! இந்த மாதிரி!" எனத் தலை சாய்த்து தந்தையைப் பார்த்தவள், "ஒரே பேட் ஸ்மெல் ப்பா அந்த பைத்தியத்து மேல! உவ்வேக்! நான் அப்படியே பயந்து போயிட்டேன்பா! அம்மாவை கட்டி பிடிச்சிகிட்டேன்! அம்மா என்னை வேகமா கூட்டிட்டு வந்துட்டாங்க" என அவள் பாவனைகளுடன் சொல்லவும், "அம்மா இருக்காங்க இல்ல! அதனால பயப்பட வேணாம் குட்டிமா! அந்த பைத்தியம் உன்னை எதுவும் செய்யாம பார்த்துப்பாங்க" என்றான் கோகுல் அவளுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுக்கும் பொருட்டு. ஆமாங்க! என்னன்னு தெரியல; அவன் டெய்லி எங்களை பார்த்துட்டே இருக்கான். எனக்கே சமயத்துல திக்குன்னு இருக்கு!” என்றாள் மகள் சொல்வதை கேட்டுக் கொண்டே அங்கே வந்த சரஸ்வதி. அதற்குள் சாப்பிட்டு முடிக்கவும் குதித்து இறங்கியவள், "நான் வருண் அண்ணா கூட சேர்ந்து விளையாடப்போறேன் பா! பை!" என்று சொல்லிவிட்டு அவளது பெரியப்பா மகனைத் தேடி ஓடிப்போனாள் பவித்ரா. இருவருக்குமாகப் பலகாரத்தை எடுத்துவந்த சரசு அவனிடம் ஒரு தட்டை நீட்டிவிட்டு, "தோளில் சுமந்திருக்கும் பொறுப்பையெல்லாம் இறக்கிவெச்சிட்டு, ஆடிட்டர் சார் இன்னைக்கு எப்படி இவ்ளோ சீக்கிரம் வந்துட்டார்!" எனக் கிண்டலாகக் கேட்க, "அதை விட பெரிய பொறுப்பையெல்லாம் தோளில் சுமந்திருக்கும்போது எப்படி வராம இருக்க முடியும்" என அவளுக்குப் பதில் கொடுத்தவன், "பவி குட்டி அண்ணா வீட்டுலயே இருக்கட்டும்! நாம இப்ப அர்ஜண்டா ஒரு இடத்துக்கு போகணும்!" என அவன் சொல்ல, அதில் கலவரமானவள், "எங்க போறோம்! அன்னைக்கு மாதிரி எனக்கு இன்னொரு ஷாக் எதாவது வெச்சிருக்கீங்களா என்ன" என அவள் தயக்கமாகக் கேட்க, அதை மறுக்காமல், "ம்ம்! அப்படித்தான்!" என்றவன், "சீக்கிரம் கிளம்பு" என அவளைத் துரிதப்படுத்த, மறுபடியும் கேள்வி கேட்டால் அவனிடம் பதில் வராது என உணர்ந்தவள், "ப்ச்! அத்தையால ஒரே நேரத்துல ரெண்டு வாலுங்களையும் சமாளிக்க முடியாது! பவியை எப்படி விட்டுட்டு வர்றது" என்ற அவளது கேள்விக்கு, "கோமுவை சீக்கிரம் வரச்சொல்லி இருக்கேன்! வந்துட்டே இருக்கா! நீ கிளம்பு" என்றான் கோகுல் விடாப்பிடியாக. அவள் உடை மாற்றிக்கொண்டு வர, ஏற்கனவே தயாராக இருந்தவன் ஏதோ பத்திரங்களைச் சரி பார்த்து எடுத்துவைத்துக்கொண்டிருந்தான். அதை பார்த்ததும் அவளது வயிற்றில் பயம் பந்தாக உருள, "எங்கங்க போகப்போறோம்!" என அவள் உள்ளே போன குரலில் கேட்க, "அடையார்ல 'கே.ஆர் அசோசியட்ஸ்'னு ஒரு லாயர் ஃபர்ம் இருக்கு. அங்கதான் போறோம்!' எனச் சொல்லவிட்டு, அவளது பதிலையும் எதிர்பார்க்காமல் அவன் வீட்டை விட்டு வெளியில் செல்ல, அவனை பின் தொடர்ந்து வந்தவள், கதவைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு மாமியரைத் தேடிப் போனாள் சரசு! சாவியை அதற்கான பதிக்கப்பட்டிருந்த கொக்கியில் மாட்டிவிட்டு பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த காவேரியை நெருங்கி, "அத்தை அவர் என்னென்னவோ செய்யராறே உங்களுக்குத் தெரியுமா!" என மெல்லிய குரலில் அவள் கேட்க, "தெரியும் மா! சொன்னான்! நீ போய்ட்டு வா! அப்பறம் இதை பத்தி பேசிக்கலாம்!" என அவர் சொல்ல, அவளது முகம் மேலும் கலவரமாக, வெளியிலிருந்து, "சரசு! லேட் ஆகுது! சீக்கிரம் வா!" என்ற கோகுலின் குரலால், அவனை நோக்கிப் போனாள் சரசு! கீழே தயாராக இருந்த ‘கால் டேக்ஸி’யில் ஏறி இருவரும் அமர, அந்த வாகனம் கிளம்பியது. மிகவும் மெல்லிய குரலில், "என்னென்னமோ செய்யறீங்க; எனக்கு ரொம்ப பயமா இருக்கு; இதெல்லாம் இப்ப தேவையா" என சரசு கேட்க, "கண்டிப்பா தேவைதான் ஜில்லு" என்றான் கோகுல். பழைய நினைவுகளில் அவளது கண்களில் கண்ணீர் திரையிட, அதை அவனிடம் காண்பிக்காமல் வேடிக்கை பார்ப்பது போல் வேறு பக்கமாக முகத்தைத் திருப்பியவள் அதன் பிறகு மௌனமாகிப் போனாள். அவளது அந்த மௌனத்தைக் கலைக்க விரும்பாமல் தானும் அமைதியாக இருந்தான் கோகுல். சில நிமிடங்களுக்குப் பிறகு அவன் குறிப்பிட்ட அந்த வழக்கறிஞரின் அலுவலகத்தை அவர்கள் அடையவும், இறங்கி உள்ளே சென்றவர்கள் தகவல் சொல்லிவிட்டுக் காத்திருக்க அவர்களுக்கு அழைப்பு வந்தது. வக்கீல் கோதண்டராமன் வயதில் சற்று முதிர்ந்தவராகத் தென்பட, "இவங்கதான் லாயர் மாதினி! என்னோட ஜூனியர்; உங்க டீடைல்ஸ் எல்லாத்தையும் இவங்ககிட்ட குடுங்க" என ஒரு பெண்மணியைச் சுட்டிக் காண்பித்தார் அவர். பின்பு, "நான் என்னன்னு பாத்துட்டு உங்களுக்கு சொல்றேன்!" எனச் சொல்லிவிட்டு, "மாதினி! அவங்க சொல்றதெல்லாம் நல்லா ஸ்டடி பண்ணிக்கோம்மா!" என்று சொல்லி அவர்களை வெளியில் அனுப்பினார் கேஆர். பின்பு ஜூனியர் வழக்கறிஞர்களுக்கு எனத் தனியாக இருந்த ‘கேபின்’க்குள் அவர்களை அழைத்துச் சென்ற வழக்கறிஞர் மாதினி அவர்களை உட்கார சொல்லிவிட்டு, அவனுடைய தேவையைக் கேட்டறிந்து பின் பொறுமையாக அவன் எடுத்துவந்திருந்த பத்திரங்களை வாசிக்கத் தொடங்கினாள். ஒவ்வொரு பக்கத்தையும் திருப்பத் திருப்ப அவளுடைய முகத்தில் ஆச்சரியமும் கோபமும் கூடிக்கொண்டே போனது. அதை மொத்தமாகப் படித்து முடித்த பிறகு, "எப்படி இந்த மாதிரியெல்லாம் செய்யறாங்கன்னு புரியல மிஸ்டர் கோகுல்" என்றவள், "இந்த மாதிரி ஒரு மோசமான மோசடி எங்குப் பார்த்தாலும் இப்ப நடந்துட்டு இருக்கு. அதுவும் கிட்டத்தட்ட பதினெட்டு வருஷத்துக்கு முன்னாடியே அப்படின்னு நினைக்கும் போதுதான் ரொம்பவே ஆச்சரியமா இருக்கு. அந்த கேஸை பத்தி நான் உங்களுக்கு விளக்கமா சொல்றேன் கவனிச்சுக்கோங்க" என்றவள் தொடர்ந்தாள். "உங்க அம்மா பேர்ல இருக்கிற இந்த டாக்குமெண்ட் ரொம்ப கிளியரா இருக்கு. அதுல எந்த பிரச்சனையும் இல்லை" என சரஸ்வதியை பார்த்து சொன்ன வழக்கறிஞர் பின்பு விளக்கத் தொடங்கினார். "ஆக்சுவலி அந்த லேண்ட் யார் யார் கைலயோ மாறி மாறி கடைசியில உங்க தாத்தா கையில வந்து இருக்கு. உங்க தாத்தா கரெக்டா செக் பண்ணி தான் பணம் கொடுத்து வாங்கி இருக்கார். அந்த பத்திரமும் சரியாதான் பதிவுசெய்யப்பட்டு இருக்கு. நீங்க கலெக்ட் பண்ணி கொடுத்திருக்கும் பேரெண்டல் டாகுமெண்ட்ஸ், என்கம்பரன்ஸ் செர்டிபிகேட் எல்லாமே அப்படித்தான் சொல்லுது! ஆனா கிட்டத்தட்ட ஒரு எழுபது என்பது வருடங்களுக்கு முன்னால; ம்ம்.. கரெக்ட்டா சொல்லனும்னா" என்றவாறே பத்திரத்தைப் பார்த்தவர், "நைன்டீன் தர்ட்டீஸ்ல அந்த சொத்து அதே ஊரை சேர்ந்த தேவு அப்படிங்கிற ஒருத்தர் பெயரில் இருந்திருக்கு. டூ தௌசண்ட் டூல அதுமேல சொந்தம் கொண்டாடி கேஸ் போட்டு இருக்கிற 'சம்பந்தம்' என்கிறவர் அந்த தேவுவோட சித்தப்பா பேரன்! நேரடியா அந்த கேஸ்ஸ அவர் உங்க அம்மா மேல போடல. உங்க அம்மாவை தேர்ட் பார்ட்டியாதான் போட்டிருக்கார். தனக்கு சேர வேண்டிய நிலத்தை அவருக்கு தெரியாம தேவு வேறு ஒருத்தருக்கு வித்துட்டதாகவும், அதுல வீடு கட்ட அவங்களுக்கு எந்த உரிமையும் இல்லன்னும் கேஸ் ஃபைல் பண்ணி பர்ஸ்ட் பார்ட்டியா இளவரசிங்கற அவரோட மனைவியையே சேர்த்திருக்கார்! அப்படிச் செய்யும் போது எல்லா லீகல் நோட்டிசும் அந்த ஃபர்ஸ்ட் பார்ட்டியா இருக்கறவங்களுக்கு மட்டும் போற மாதிரி கவனமா பார்த்துட்டு இருந்திருப்பாங்க அவரோட லாயர்ஸ். அதனால அப்படி ஒரு கேஸ் நடந்ததே உங்க அம்மாவுக்கு தெரிய வந்திருக்காது. அவங்களுக்கு எப்போ தெரிய வந்து இருக்கும் அப்படின்னா; அவங்க அந்த வீடு கட்ட ஆரம்பிச்சு; முதல் தளத்துல சுவர் எழுப்பி, லிண்டல் போட்டு, ரூஃப் போட தயார் செய்யும்போது! அந்த வீட்டைத் தொடர்ந்து கட்டக்கூடாதுன்னு அவங்களுக்கு கோர்ட்ல இருந்து இந்த ‘ஸ்டே ஆர்டர்’ அதாவது தடை உத்தரவு வந்திருக்கும். அப்பத்தான் உங்க அம்மாவுக்கு இப்படி ஒரு கேஸ்ல அவங்க இன்வால்வ் ஆகி இருப்பதே தெரிஞ்சிருக்கும்!" என்று சொல்லி நிறுத்தினார். அனைத்தையும் கேட்டு சரஸ்வதி அதிர்ந்துபோய் இருக்க, "அது எப்படி மேம்! அவங்க கோர்ட்டுக்கே போகாம அந்த ஸ்டே ஆர்டரை கொடுத்திருப்பாங்க!" என கோகுல் கேட்க, "முடியும் மிஸ்டர் கோகுல்! கோர்ட்ல இருந்து அந்த இளவரசியை நேரில் ஆஜர் ஆகச் சொல்லி சம்மன் அனுப்பி இருப்பாங்க! மூணு வாய்தா வரைக்கும் அவங்க கோர்ட்டுக்கே போகாம இருக்கும் பட்சத்தில் அந்த சூழ்நிலையை வழக்கைத் தொடுத்தவருக்குச் சாதகமாக எடுத்துட்டு ‘எக்ஸ் பார்ட்டி க்ளியரன்ஸ்’ கொடுத்துடுவாங்க! அப்படி ஒரு சூழ்நிலையில் இந்த ஸ்டே சாத்தியம்தான்! அதுவும் அது ஒரே ஒரு பக்கம் கொண்ட இன்டீரியம் ஆர்டர்தான். அதுல எந்த டீடெய்ல்ஸ்க்கும் இருக்காது. முழு விவரமும் தெரிஞ்சுக்க நாம அந்த டீடைல்ஸை கோர்ட்ல முறையா அப்ளை பண்ணி வாங்கணும். ஸோ இதை பத்தின விவரம் இல்லாதவங்க தலையும் புரியாம வாலும் புரியாம தவிப்பாங்க" என விளக்கினார் மாதினி. "இந்த கேஸை தொடர்ந்து எங்க அத்தையும் மாமாவும் நடத்தியிருந்தால் அது எல்லாம் பித்தலாட்டம்னு ப்ரூவ் பண்ணியிருக்க சான்ஸ் இருக்கு இல்ல. அப்பறம் அந்த ஸ்டே வாங்கினதால அந்த ஆளுக்கு என்ன பயன். வீண் செலவுதானே!" என கோகுல் கேட்க, அதற்குச் சிரித்த மாதினி, "ஆதாயம் இல்லாம அந்த எலி ஏரோபிளேன் ஓட்டுமா என்ன?" என்று கேட்டுவிட்டு, "அதனாலதான் அந்த ஸ்டேவை கடகால் குழி எடுக்கும்போதே அவன் வாங்கல. அப்ப அதைச் செய்திருந்தால் அவனுக்குப் பலன் இருந்திருக்காது. வீடு ரூஃப் லெவல் வந்தவுடன் செய்தால் வீடு கட்டுறவங்க பயப்படுவாங்க. கோர்ட் கேஸ்ன்னு போனா அது உடனே முடியற கதை இல்ல. சில வருஷங்கள் கூட இழுக்கும். அதுவும் ஒரு சாதாரண நடுத்தட்டுக்காரங்களால அந்த நேரத்தைக் கடக்க முடியாது. ஏற்கனவே கடன் வாங்கி நிறையச் செலவு செய்திருப்பாங்க. வீட்டை பாதியில நிறுத்தவும் முடியாது. கடன் வட்டின்னு சுமை கூடிகிட்டே போகும். அதனால கேஸ் போட்டவன்கிட்டேயே சமாதானமா போகத்தான் நினைப்பாங்க. அதை பயன்படுத்திகிட்டு ஒரு லம்ப் சம் பணத்தைக் கேட்டு ப்ளாக்மைல் செய்வாங்க. பணம் கொடுத்தால் உடனே அந்த கேஸை வாபஸ் வாங்குவாங்க. இல்லனா தொடர்ந்து தொல்லை கொடுப்பாங்க. கோர்ட் உத்தரவை மீறி வீட்டைத் தொடர்ந்து கட்டவும் முடியாது. இரு தலைக் கொள்ளி எறும்பு நிலைதான் உண்டாகும்!" என மாதினி விளக்க, என்ன நடக்கிறது என்பதே புரியாத வயதில் அவள் பட்ட பாடுகள் நினைவில் வரத் தலையை தாங்கி பிடித்துக்கொண்டாள் சரஸ்வதி. "இத்தனை வருஷமா ஏன் இதை இப்படியே விட்டுடீங்க!" என மாதினி கேட்க, "அதை நடத்த எங்க அம்மா உயிரோட இல்ல. இந்த பிரச்னைலதான் எங்க அம்மா அப்பா இறந்துபோனாங்க! அப்ப நானும் என் தங்கையும் ரொம்ப சின்ன பிள்ளைங்க!" என்றாள் சரஸ்வதி உணர்வற்ற குரலில். அதில் அதிர்ந்த மாதினி, "சாரி!" என்று சொல்லிவிட்டு, "நாளைக்கும் நாளன்னிக்கும் சாட்டர்டே அண்ட் சண்டே. கோர்ட் ஹாலிடே. ஸோ என்னால மண்டேதான் ஆக்சஸ் பண்ண முடியும். இதுல இருக்கற ஓ.எஸ் நம்பர் அதாவது ஓரினினல் சூட் நம்பர் வெச்சு செங்கல்பட் கோர்ட்ல விசாரிக்கறேன். எனக்கு ஒரு ஒன் வீக் டைம் குடுங்க. நான் இப்ப இருக்கும் நிலவரத்தை சொல்றேன்! அதுக்குள்ள அந்த இடம் எப்படி இருக்குன்னு ஒரு முறை நேர்ல போய் பார்த்துட்டு வந்துடுங்க! என்று முடித்தார். அதற்கு ஆமோதிப்பாகத் தலையை ஆட்டிவிட்டு, நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினர் கணவன் மனைவி இருவரும். வீட்டிற்கு வரும் வரையிலும், வந்த பிறகும்கூட சரஸ்வதி வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. கோமு உதவி செய்ய, காவேரி அனைவருக்கும் இரவு உணவைத் தயாரித்திருக்க, வழக்கம்போல குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து சாப்பிடவும், பெயருக்கு உணவைக் கொறித்தவள் அவர்கள் வீட்டிற்கு வர, உறங்கியிருந்த மகளைத் தோளில் சுமத்து வந்து படுக்கையில் படுக்க வைத்த கோகுல் மகளை நெஞ்சோடு பொத்திக்கொண்டு தானும் அருகில் படுத்துக்கொள்ள, தனது டைரியையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு அவனுக்கு அருகில் உட்கார்ந்தாள் சரஸ்வதி தனது மனக் குமுறல்களையெல்லாம் அதில் கொட்டித்தீர்க்க. அவள் உறங்கியதும் அவளுடைய அணைப்பிலிருந்த அந்த நாட்குறிப்பை மெதுவாக உருவி கோகுல் அதன் பக்கங்களைப் புரட்ட, 'வர வர கோகுல் ரொம்ப அடமண்டா மாறி போயிட்டான். என்னை அவனோட இஷ்டத்துக்கு இழுக்கிறான். இந்த நிலம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அன்னைக்கு எங்க அம்மா செய்த அதே தப்பை இப்ப இவனும் செய்யறானோன்னு பயமா இருக்கு!' என எழுதியிருந்தாள் சரசு. 'கோபம் வந்தா; இந்த அவன் இவன் எல்லாம் கூடவே வருது என் பொண்டாட்டிக்கு' என எண்ணியவனின் முகத்தில் புன்னகை அரும்பியது.
Comments