top of page

Thookanam Kuruvikal-3

கூடு-3

சென்னை சென்ட்ரலில் இறங்கியதும் பூங்கா ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் மூலமாகத் தாம்பரத்தை அடைந்தவன் ஒரு ஆட்டோ பிடித்து அந்த அடுக்குமாடிக் குடியிருப்பை அடைந்தான் கோகுல். மாலை சூரியனின் மிதமான சூடு மனதிற்கு ஒரு இதத்தைக் கொடுக்க, வீட்டிற்குள் அவன் நுழைய, மகனை நேரில் கண்டதும் மகிழ்ச்சியுடன் அவனை அணைத்துக்கொண்ட அன்னையை அன்புடன் அரவணைத்தவனின் பார்வை மனைவியையும் மகளையும் தேடி சுழல, “மும்பைல இருந்து வந்த சாமானையெல்லாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் இறக்கிட்டு போனாங்க. அதான் சரசு அந்த வீட்டுக்குப் போயிருக்கா பவி குட்டிய கோமு எதோ 'மால்'க்கு கூட்டிட்டு போயிருக்கா. இப்ப வந்துருவாங்கப்பா!" என்றார் அவனுடைய அம்மா காவேரி. அதற்குள் சரசுவுக்கு உதவி செய்யச் சென்றிருந்த அவளுடைய அப்பாவும் அண்ணியும் வீட்டிற்குள் நுழைய, 'எப்படி இருக்கீங்க கொழுந்தனாரே; மும்பை ஒரு வழியா உங்களை விட்டுதா?" என அவனைப் பார்த்த உற்சாகத்தில் கிண்டலுடன் கேட்க, "விட்டுது அண்ணியாரே விட்டுது. கூடவே 'உங்க வீட்டுல காலாவதி; காலாவதின்னு ஒருத்தங்க இருக்காங்களே அவங்களை இங்க அனுப்புன்னு சொல்லி என்னைச் சென்னைக்கு அனுப்பிவெச்சுது!" என அவன் சிரித்துக்கொண்டே பதில் கொடுக்க, அவன் காதை திருகியவள், "மாமா! பாருங்க உங்க பிள்ளையை; வந்ததும் வராததுமா என்னை காலாவதின்னு கிண்டல் செய்யறார்" என கலாவதி மாமனாரைத் துணைக்கு அழைக்க, "ஐயோ ராசா இப்பதான் வீட்டுக்குள்ள நுழையற; இப்பவே ஆரம்பிக்காதீங்க உங்க பஞ்சாயத்தை!" எனச் சலித்துக்கொள்வதுபோல் சொன்னார் அவனுடைய அப்பா ஈஸ்வரன்! ஆனால் அவர் குரலில் உற்சாகம்தான் நிறைந்திருந்தது. அவன் கொண்டுவந்த மடிக்கணினி பையை அங்கே இருக்கும் அலமாரியில் வைத்துவிட்டு, "அண்ணி ஒரு காஃபி குடுங்க, சாப்பிட்டுட்டு நான் போய் திங்க்ஸ் எல்லாத்தையும் எடுத்து வெக்க சரசுவுக்கு ஹெல்ப் பண்றேன்!" என அவன் எதார்த்தமாகச் சொல்ல, "ப்ச்! கோகுலா! ரொம்ப உருகாதீங்க. நாங்க இவ்வளவு நேரம் அங்க இருந்து உங்க சரசுவுக்கு உதவி செய்திட்டுதான் வந்தோம். உங்க பொண்டாட்டிய பார்க்கணும்னா போய் பாருங்க! அதுக்காக இவ்வளவு பில்ட் அப் வேணாம்!" என கலாவதி விடாமல் அவனை வார, "ரொம்ப கலாய்க்காதீங்க கலாய்வாதி அண்ணியாரே! பதிலுக்கு நானும் இறங்க வேண்டி இருக்கும். என்னோட ஆர்மி கோமுவும் வந்துட்டா அப்பறம் நீங்க தாங்க மாடீங்க!" எனக் கலாவதியை பார்த்துச் சொன்னவன், "இன்னும் டூ டேஸ்ல நான் ஜாயின் பண்ணனும்பா! அதுக்குள்ள எல்லாத்தையும் செட்டில் பண்ணனும். இந்த அண்ணி புரியாம கிண்டல் பண்ணிட்டு இருகாங்க!" என அவன் தீவிரமாகச் சொல்ல, அதற்குள் அவனுக்கான காபியையும் கூடவே குழிப்பணியாரத்தையும் கொண்டுவந்து வைத்த கலாவதி, "ஓகே கோகுல்! நம்பிட்டேன்!" என்று சொல்லிவிட்டு, "எதோ புள்ள பாவம் ரொம்ப நேரம் டிராவல் பண்ணி டயர்டா வந்திருக்கு; போனா போகுதுன்னு விடறேன்!" என்று சொல்ல, அப்பொழுது வீட்டிற்குள் நுழைந்த அவனுடைய செல்ல மகள், "அப்பாஆஆஆ!" என கத்திக்கொண்டே ஓடிவந்து அவன் மீது தாவ, அவள் பின்னாலேயே ஓடி வந்த கோமதி, "குட்டி பிசாசே! எனக்கு மூச்சே நின்னுபோச்சு! இப்படியா ஓடி வருவ!" என மூச்சுவாங்கச் சொல்ல, "ஆமாம் பெரிய பிசாசே! அப்பா வந்திருக்காங்க இல்ல!" என அவள் பதில் கொடுக்க, வாயடைத்துப்போனாள் பெரியவள். "பவி! பெரியவங்கள இப்படித்தான் மரியாதை இல்லாம பேசுவியா?" என அவளைக் கடிவதுபோல் ஆனாலும் மென்மையாகவே கோகுல் கேட்க, "அப்பா அவங்களும் என்னை மரியாதை இல்லாம குட்டி பிசாசேன்னு சொன்னாங்க இல்ல" எனச் சின்னவள் பதில் கொடுக்க, தானும் கோமதியைக் குட்டி பிசாசு என்று அழைப்பது நினைவில் வரவும் சிரித்துக்கொண்டான் கோகுல். அதைப் புறம் தள்ளிவிட்டு, "எப்படி இருக்கீங்க மாமா!" என கோமு கேட்க, "நல்லா இருக்கேன் மா! சித்தியும் மகளுமா ஊரை சுத்திட்டு இருக்கீங்களா" என கோகுல் கேட்கவும், "ப்பா! நம்ம ஊர் மாதிரி இல்ல. இங்க ட்ரெயின் எல்லாம் காலியா இருக்கு ப்பா! இங்க வெளியில போனா எல்லாருமே தமிழ்லதான் பேசறாங்க. இந்த ஊர் எனக்கு ரொம்ப பிடிசிருக்கு. நாம இனிமே இங்கதான் இருக்கப்போறோம்னு அம்மா சொன்னாங்க! நிஜமாவாப்பா?" என குட்டி பவித்ரா தன் மகிழ்ச்சியை அவனிடம் பகிர்ந்துகொள்ள, "ஆமாம்டா குட்டி! நிஜமாத்தான்!" என்றவன், "அது நம்ம ஊர் இல்ல குட்டி! இதுதான் நம்ம ஊர். இனிமே எப்பவுமே இங்கதான் இருக்க போறோம்!" என்றான் ஒரு முடிவுடன். பின் கோமதியைப் பார்த்து, "எல்லாம் ரெடியா கோமு! நாம நாளைக்கு அங்க போகலாமா?" என அவன் கேட்க, "போலாம் மாமா! அக்காவுக்கு இப்படி ஒரு சர்ப்பிரைஸ் கொடுக்கத்தான் நான் ரொம்ப நாளா காத்துட்டு இருக்கேன். ஆனா அவ ஷாக் ஆவாளா இல்ல சர்ப்ரைஸ் ஆவாளான்னுதான் புரியல!" என்றாள் கோமு. "எது எப்படி இருந்தாலும் நாம ஒரு நாள் இதை செய்துதான் ஆகணும். நான் பார்த்துக்கறேன் கவலை படாத" என்றவன் மகளிடம், "குட்டிம்மா! நீ சித்தி கூட போய் ரெஃப்ரஷ் பண்ணிக்கோ! அப்பா போய் அம்மாவுக்கு ஹெல்ப் பண்றேன்!" என சொல்லிவிட்டு, அவன் சாப்பிட்ட தட்டையும் காஃபி குவளையையும் எடுத்துக்கொண்டு சமையலறை நோக்கிப் போனான் கோகுல். *** அடிக்கடி வீடு மாறும் நிர்ப்பந்தம் இருந்ததால் அதிகமாகப் பொருட்களைச் சேர்த்துவைத்துக்கொள்ளவில்லை சரஸ்வதி. அதுவும் மும்பையில் அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் அலமாரி, 'லாஃப்ட்' என எதுவுமே இல்லாத காரணத்தால், சில பொருட்களைச் சென்னையிலேயே விட்டுச் சென்றிருந்தனர். எலெக்ட்டர்னிக் பொருட்கள் அனைத்தையும் சரியாக வைத்து அவற்றைப் பொறுத்த அவளுடைய மாமனாரும் ஓரகத்தியும் அவளுக்கு உதவி செய்துவிட, சமையலறையை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தாள் சரஸ்வதி. பூனை போல வந்த அவளுடை கணவன் பின்னாலிருந்து அவளை அப்படியே அணைத்துக்கொள்ள, முதலில் கத்த எத்தனித்தவள் பின்பு சுதாரித்துக்கொண்டு, "கோகுல்!" என நாணத்துடன் மென்மையாக அழைக்க, "சொல்லுங்க டீச்சர்!" என்றான் அவன் கிண்டலாக. "ப்ச்! இது மும்பை இல்ல! எல்லாரும் பக்கத்து பிளாட்லதான் இருகாங்க! இங்க இருந்து பேசினா அக்கா வீட்டு கிச்சன்ல நல்லா கேக்கும்! அடக்க ஒடுக்கமா நடந்துக்கோங்க!' என மெல்லிய குரலில் அவள் சொல்ல, "இது வேறயா!" என அவன் அங்கலாய்க்க, அதற்குள்ளாகவே, "கோகுலா! வேலையை ஸ்டார்ட் பண்ணிடீங்களா!" என கலா குரல் கொடுக்கவும், "ம்ம்.. அதெல்லாம் வந்த உடனே ஸ்டார்ட் பண்ணிட்டேன் அண்ணி! இதோ பாருங்க சாம்பிள்" என்றவாறு அவன் பாத்திரங்களை உருட்ட, அந்த சத்தத்தில் சரசு காதை பொத்திக்கொள்ளவே, அங்கே காலாவின் நிலையை எண்ணி சிரிப்பு வந்தது கோகுலுக்கு. "கோகுல்! ப்ளீஸ் நீங்க ரெஸ்ட் எடுங்க! நான் பார்த்துக்கறேன்!" என அவள் சொல்ல, அதற்குச் செவிமடுக்காமல் அங்கே இருந்த படுக்கை அறையைச் சீர்செய்யத் தொடங்கினான் கோகுல். அவனுடைய அம்மா காவேரியும் கலாவும் சேர்ந்து இரவு உணவைத் தயார் செய்ய, அவனுடைய அண்ணா கவுதமும் வந்துவிட அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து கலகலப்பாக இரவு உணவை உண்டுமுடித்து அவரவர் கூட்டுக்குள் போய் அடங்கினர் அனைவரும். புல்லினங்களில் சங்கீதத்துடன் அழகாக புலர்ந்தது அடுத்த நாளின் விடியல். *** கோமு காஃபியை கலந்து வந்து எல்லோருக்கும் கொடுக்க, அதை எடுத்து ஒரு மிடறு பருகிய கோகுல், அங்கே மகளுக்குப் பாலை ஆற்றி கொடுத்துக்கொண்டிருந்த சரசுவை நோக்கி, "காலையில ஒரு பத்து மணிக்கா நாம முக்கியமான ஒரு இடத்துக்கு போறோம் சரசு. குட்டிமாவையும் ரெடி பண்ணு!" என்று சொல்ல, "ஐ ஜாலி!" என துள்ளிக்குதித்தாள் குழந்தை. "வீட்டை இன்னும் சரியா ஆர்கநைஸ் பண்ணலையேப்பா. இந்த நேரத்தில் இப்ப வெளியில எப்படி போக முடியும்?" என சரசு கேட்க, "அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம். முதல்ல இன்னைக்கு இந்த முக்கியமான வேலையை முடிச்சுட்டு வந்திடலாம் நீ கிளம்பு!" என்றான் கோகுல் தீர்மானமாக. "அப்படி என்னங்க முக்கியமான வேல!" என அவள் கேட்க, "அக்கா! மாமா சொல்ராங்க இல்ல; நீ முதல்ல கிளம்பு" என கோமு இடை புக, "நீ போய்ட்டு வா சரசு! அவன் கூப்பிடறான் இல்ல!" என்றார் காவேரி. "அம்மா நீங்க வரலையா!" என கோகுல் கேட்க, "இல்லப்பா இன்னொருமுறை பார்த்துக்கலாம். நீ நினைக்கற படி எல்லாம் முடியணும்னு சஷ்டி விரதம் இருக்கேன். என்னால அலைய முடியாது!" என காவேரி சொல்ல, "ப்ச்! சொன்னா கேக்க மாடீங்க! அந்த கந்தசாமி உங்களை விரதம் இருந்து உடம்பை கெடுத்துக்க சொன்னாரா என்ன?" என்று கோபமாக கோகுல் கேட்கவே, "வேணாம்ப்பா! பழசை நினைச்சாலே எனக்கு படபடப்பா வருது; அதான் கடவுளை துணைக்கு கூப்பிடறேன்! நீ எதுவும் பேசாத!" என காவேரி சொல்ல, அமைதியாகிப்போனான் கோகுல். *** கோகுல் இணையவழி வரவழைத்திருந்த 'கால் டாக்ஸி' மூலம் அவர்கள் மாம்பலத்தை நோக்கிப் பயணப்பட, "என்னங்க ஏதாவது பர்ச்சேஸ் பண்ண போறோமா? ஜூவல்லரி ஷாப் கூட்டிட்டு போறீங்களா? குட்டிம்மாவுக்கு எதாவது வாங்க போறோமா?" எனக் கேள்விகளாக அடுக்கிக் கொண்டே போனாள் சரஸ்வதி. அனைத்திற்கும் சிரிப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்தவன் அவளை அழைத்துக் கொண்டு சென்ற இடம் அவர்கள் முதலில் குடியிருந்த வீட்டுப் பகுதி. அந்த வீடு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பாக மாறியிருக்க, அவர்களுக்காக அதன் வாயிலிலேயே காத்திருந்தார் முன்பு அவர்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர் புஷ்பா. அதாவது கவிதா அம்மா. அவர்களைப் பார்த்ததும் ஓடிவந்து, "வா கோகுலு வா வா! வாடா ஜில்லு எப்படி இருக்க? கோமு நீ எப்படி இருக்க கண்ணு? இவதான் உங்க பாப்பாவா? உன் பேர் என்ன செல்லம்" எனத் தனது உபசரிப்பால் அவர்களை நனைய வைத்தார் புஷ்பா. "என் பேர் பவித்ரா பாட்டி!" எனக் குழந்தை அவருக்கு மறுமொழி சொல்ல, அவளை அப்படியே அள்ளி அணைத்துக்கொண்டார் அவர். எதிர்பாராமல் அங்கே வந்திருந்ததால் உண்டான அதிர்ச்சியிலிருந்து மீண்ட சரஸ்வதியின் கண்கள் அவரது அன்பைக் கண்டு குளமானது. "நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் கவிதாம்மா! நீங்க எப்படி இருக்கீங்க! கவிதா கணேஷ் எல்லாரும் எப்படி இருக்காங்க?" என கோகுல் எதார்த்தமாக கேட்க, "எல்லாரும் ரொம்ப நல்லா இருக்கோம் கண்ணு! கவி இப்ப மலேஷியால இருக்கா! கணேஷ் லண்டன்ல! எல்லாரும் பிள்ளைகுட்டின்னு நல்ல படியா செட்டில் ஆகிட்டாங்க! அதான் வீட்டை ஜாயிண்ட் வெஞ்சருக்கு கொடுத்துட்டோம். நான் இங்கேயும் அங்கேயுமா இருப்பேன்!" என்றார் அவர். பேசிக்கொண்டே முதல் தளத்தில் இருக்கும் அவர்கள் வீட்டிற்கு எல்லோரும் வந்துவிட, வேலை செய்பவர் மூலம் குளிர்பானத்தை அவர்களுக்குக் கொடுத்து உபாசித்தார் புஷ்பா! பின் கோமதியிடம் கோகுல் ஏதோ ஜாடை செய்யவும், தனது கைப்பையிலிருந்து ஒரு கட்டு பணத்தை எடுத்து தமக்கையின் கையில் கொடுத்தவள், அதை புஷ்பாவிடம் கொடுக்குமாறு கோமு ஜாடை செய்ய, கோகுலையும் தங்கையையும் பார்த்துக்கொண்டே அனிச்சை செயலாக அந்த பணத்தை அவரிடம் நீட்டினாள் சரசு. அதைக் கொடுத்தவளுடைய கையை காட்டிலும் வாங்கிய கரங்கள் நடுங்க, அவர் நெஞ்சிலிருந்த ஈரம் கண்களில் வழிந்தது. "இதுல ஒண்ணரை லட்சம் இருக்கு கவிதாம்மா! வட்டின்னு பார்த்தால் இன்னும் நிறைய வரும்! இப்போதைக்கு எங்களால முடிஞ்சது!" என கோகுல் சொல்ல, "இந்த காலத்துல இப்படி ஒரு பிள்ளைங்க! அசலை கொடுத்தால் அதுவே பெருசு கண்ணு! நான் இதை எதிர்பார்க்கவே இல்ல!” எனச் சொல்லியவாறே புறங்கையால் தன் கண்களைத் துடைத்துக்கொண்டவர், அங்கே தயாராக இருந்த ஒரு 'பார்சலை' எடுத்து சரசுவின் கையில் கொடுக்க, "அதை பிரிச்சி பாரு சரசு!' என கோகுல் சொல்ல, அதிலிருந்த காகிதத்தை உருவியவள், அதைப் படித்துப்பார்க்க, அவளது கண்களில் வழிந்த கண்ணீர் அவளுடைய அம்மாவின் பெயரிலிருந்த அந்த மனை பத்திரத்தில் பட்டுச் சிதறியது.

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page