top of page

Thookanam Kuruvikal-2

கூடு-2

வீட்டைக் கட்டி பார்! கல்யாணத்தைச் செய்து பார்! என்பது பழமொழி. அன்றைக்கு இருந்த நிலைமையில் அம்மாவுக்கோ அல்லது அப்பாவுக்கோ நல்லவை தீயவை சொல்லப் பெரியவர்கள் என்று யாரும் இல்லை. பெரியவர்களுடைய ஆலோசனையையோ அல்லது அனுமதியையோ கேட்டே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால்தானோ என்னவோ வீடு கட்ட வேண்டும் என்ற அவ்வளவு பெரிய முடிவை நிமிட நேரத்திற்குள் எடுத்தாள் அம்மா. எதையும் யோசிக்காமல் அதற்குத் தலை அசைத்தார் அப்பா. முடிவு எடுத்ததும் நாட்கள் கடத்தாமல், நல்ல ஒரு சுப முகூர்த்த நாளில் எளிமையாகப் பூஜை போட்டு, கடகால் எடுத்தனர். எங்கள் பக்கத்துக்கு 'போர்ஷன்'னில் குடி இருக்கும் கோகுல், கௌதம் அண்ணா, காவேரி அத்தை, மாமா, கவிதா அம்மா, கவிதா என எல்லோரும் அங்கே வந்திருந்தனர். அம்மாவின் சொந்த அண்ணனான கணேஷ் மாமாவும், அவர் மனைவி சங்கரி அத்தையும் கூட வந்தனர். அவர்கள் பிள்ளைகள் வீட்டிலேயே இருந்த போதிலும் அங்கே எட்டி கூட பார்க்கவில்லை. அவர்கள் முகத்தில் கூட மகிழ்ச்சிக்கான சாயல் கொஞ்சமும் தெரியவில்லை. அது எனக்கு பெரியதாகப் படவில்லை. ஏனென்றால் கோகுல் மற்றும் கவிதா உடன் இருந்ததே எனக்கு போதுமானதாக இருந்தது. கிட்டத்தட்ட பத்து வருடங்களாக நாங்கள் ஒரே குடும்பமாக வசிப்பதால், எங்களுக்குள் பிணைப்பு அதிகம். அன்று பூஜை முடிந்து நாங்கள் ரயில் மூலம் மாம்பலம் வந்தோம். பின்பு 'தொடங்கிய காரியம் நன்றாக முடிய வேண்டும்' என்ற பிரார்த்தனையுடன் கோதண்டராமர் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்துவிட்டு, அங்கே இருக்கும் கல் யானை மேல் சிறிதுநேரம் உட்கார்ந்து விளையாடிவிட்டு வீட்டிற்குப் போனோம். இப்பொழுது இருப்பது போல், 'மொபைல் போன்' வசதி அப்பொழுதே இருந்திருத்தல் புகைப்படங்களாக எடுத்து தள்ளி சொற்பமான எங்கள் மகிழ்ச்சிகளைச் சேமித்து இருந்திருக்கலாம். *** 'காண்ட்ராக்டர்' மூலமாகச் செய்யாமல் தாங்களே பொருட்களை வாங்கி கொடுத்து, மேஸ்திரி ஒருவர் மூலமாக சில தினங்களிலேயே வேலையைத் தொடங்கினார்கள் அம்மாவும் அப்பாவும். அம்மாவின் நகைகள் எல்லாம் வீட்டின் அஸ்திவாரமாகவும், சுவர்களாகவும் எழும்பி நிற்க, அதுவும் போதாமல் மேற்கொண்டு செலவுகளுக்குப் பணம் தேவைப்படவும்தான் பிரச்சினை ஆரம்பித்தது. அப்படி ஒரு சூழ்நிலை உருவாகும்போதுதான் நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் கவிதா அம்மாவிடம் போய் உதவி கேட்டனர் அம்மா அப்பா இரண்டு பேரும். அன்று கூடவே நானும் இருந்ததால் எனக்கு ஓரளவிற்கு இதெல்லாம் தெரிந்தது. கவிதா அம்மா கணவனை இழந்த இளம் விதவை. எங்கள் குடியிருப்பில் குடித்தனம் இருப்பவர்களுடைய சிறு சிறு தேவைகளுக்கு அவ்வப்பொழுது குறைந்த வட்டியில் பணம் கொடுத்து உதவுவார் அவர். அவ்வளவு பெரிய தொகையை அம்மா மொத்தமாகக் கேட்கவும், அவர் அதிகம் தயங்கவே, "நாங்க சொந்த வீட்டுக்கு போனா இங்க கொடுக்கற வாடகை மிச்சம்தான கவிதா அம்மா. கோமுவும் இப்ப வளந்துட்டா இல்ல, தாம்பரம் 'மெப்ஸ்'ல எதாவது கம்பெனில வேலைக்கு போகலாம்னு இருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா வட்டியோட கடனை கொடுத்துடுவேன் பயப்படாதீங்க. ஒரு நம்பிக்கைக்காக வேணா இந்த பத்திரங்களை நீங்களே வெச்சுக்கோங்க!" என அம்மா சொல்ல, மனை பத்திரங்களை வாங்கி வைத்துக்கொண்டு இரண்டு நாட்களிலேயே அந்த பணத்தைக் கொடுத்தார் கவிதா அம்மா. அந்த பணம் அம்மா அப்பா கட்டிக்கொண்டிருக்கும் வீட்டிற்குத் தளம் போடவென 'சிமெண்ட்' ஜல்லி, கம்பிகள் எனப் பொருட்களாக மாறியது. அப்பா சில தினங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு எங்களைக் கவனித்துக்கொள்ள அந்த பொருட்களைப் பாதுகாக்க அம்மா மாமாவின் வீட்டிலேயே தங்கினாள். நாளை 'ரூஃப்' போடப்போகிறோம் என்கிற நிலைமையில், மிகப்பெரிய மோசடியைச் சுமந்துகொண்டு எங்களுக்கு ஒரு 'ரெஜிஸ்டர் போஸ்ட்' வந்தது. அதிலிருந்த 'கோர்ட் நோட்டிஸ்'ஸை பிரித்துப் படித்ததும் அப்பாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அதை எடுத்துக்கொண்டு எங்கள் பக்கத்துக்கு 'போர்ஷன்'னில் குடியிருக்கும் கௌதம் அப்பாவிடம் போய், "இதுல 'ஸ்டே ஆர்டர்னு' போட்டிருக்கு. அங்க தொடர்ந்து வீடு கட்டக்கூடாதுனு யாரோ சம்பந்தம்ங்கறவர் ஸ்டே வாங்கி இருக்கார்.” எனச் சொல்லிக்கொண்டு பதட்டத்துடன் அதை காண்பிக்க, அதைப் படித்துப்பார்த்த கோகுல் அப்பா, "ஆமாம் ஜில்லுப்பா (அங்கே எல்லோருக்குமே நான் ஜில்லுதான்) இது ஸ்டே ஆர்டார்தான்!" என்றார். பெரும்பாலும் அங்கே வசிப்பவர்களுக்கு நிலம், வீடு சொத்து என எதுவும் இருக்க வாய்ப்பில்லை. எல்லோருமே வேலைக்குப்போய் வருமானம் ஈட்டி வாழ்க்கையை நடத்தும் கீழ் நடுத்தர மக்கள்தான். 'கோர்ட்' 'கேஸ்' இதெல்லாம் கதையிலும் சினிமாவிலும் மட்டுமே பார்த்து வழக்கம். அந்த சூழலை எப்படிக் கையாளுவது என்ற வழிகாட்டுதல் பெரும்பாலும் எங்களைப் போன்றவர்களுக்கு உடனடியாக கிடைக்க வாய்ப்பில்லை. கௌதம் மற்றும் கோகுலுடைய அப்பா எங்கள் அப்பாவை அழைத்துக்கொண்டு எங்கெங்கோ சுற்றினார். அதுவரை நானும் கோமுவும் காவேரி அத்தையின் பாதுகாப்பில் கோகுலுடனும் அந்த குடியிருப்பில் இருக்கும் மற்ற நண்பர்களுடனும் விளையாடிக்கொண்டிருந்தோம். கவுதம் அண்ணா பன்னிரண்டாம் வகுப்பில் இருக்க, கோகுல் அப்பொழுது பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது ஒரே 'ஏஜ் க்ரூப்'பில் இருவருமே இருந்ததால், அவனை கோகுல் என்றுதான் நான் அழைப்பேன். வாடா போடா எல்லாம் அப்பொழுது வெகு சகஜம். அவனுக்கு சமயத்தில் அந்த டா கோபத்தை கூட கொடுக்கும். என்னுடன் பேசாமல் இரண்டு மூன்று நாட்கள் இருப்பான். பிறகு சமாதானம் ஆகும். இந்த... 'ங்க... ர்...' எல்லாம் திருமணத்திற்குப் பிறகு அத்தைக்காகவும் மாமாவுக்காகவும் வந்து ஒட்டிக்கொண்டு நிரந்தரமாகிப்போனவை. யாரும் இல்லாத நேரத்தில் மட்டுமே நான் அவருக்கு ஜில்லு... அவர் எனக்கு கோகுல்' *** அந்த செய்தியை அறிந்து பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்தாள் அம்மா! அப்பா அந்த 'நோட்டிஸ்'ஸை கையில் வைத்துக்கொண்டு யார் யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தார். 'அதைச் சரி செய்யப் பெரிய வழக்குரைஞராகப் பார்க்க வேண்டும்; அதற்கு அதிக செலவாகும்' என்பதைத் தாண்டி எனக்கு ஒன்றும் விளங்கவில்லை அந்த வயதில். அம்மா அப்பா, எங்கள் இரண்டுபேரையும் அழைத்துக்கொண்டு பெருங்களத்தூர் போக, "நீ இருக்கற நிலைமையில உனக்கு இந்த வீடு தேவையா! ஏற்கனவே அந்த சம்பந்தம் ஒரு வில்லங்கமான ஆளு. ஒரே ஊர்க் காரனை பகைச்சிட்டு என்னால இங்க நிம்மதியா வாழ முடியாது. இந்த நிலத்தை எனக்கே கொடுத்திடு, எதாவது ஒரு அமௌன்ட் கொடுக்கறேன்னு சொல்லலாம்னு இருந்தேன் . நல்ல வேளை! அதுக்குள்ள நீ வீடு கட்ட ஆரம்பிக்கவும் விட்டுட்டேன். நீ வேணா போய் அவன் கைல கால்ல விழுந்து கேட்டு பாரு!" என மாமா அம்மாவைத் திட்டித்தீர்க்க, அப்பா தயக்கம் மேலிட அவரை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாமல் நின்றார். கண்களில் வழிந்த கண்ணீரை துடைக்கக்கூட தோன்றாமல் அம்மா நிற்க, அப்பாவின் தோள்களில் தொங்கிக்கொண்டிருந்த கோமு எழும்பி அம்மவின் கண்ணீரை தன சின்ன கைகளால் துடைத்தாள். அதனால்தான் கொதி தாங்காத அரிசியாக கோகுல் யாரிடமாவது சண்டைக்குக் கிளம்பினால் கூட நான் அதை ரசிப்பது. என்று எழுதி இருந்தவள் அதன் முடிவில் கண்களில் நட்சத்திரம் மின்னும் ஒரு 'இமோஜி'யை வரைந்திருநதாள். அடுத்த பக்கத்தை திருப்ப கைகள் நடுங்கியது கோகுலுக்கு. *** மாமா வீட்டில் விட்டுவிட்டுச் செல்ல மனமின்றி எங்களையும் அழைத்துக்கொண்டு அதே ஊரிலேயே குடி இருக்கும் சம்பந்தம் என்பவனின் (என்பவரின் என எழுதி அதை அடித்து என்பவனின் என மாற்றி எழுதியிருந்தாள் சரசு.) வீட்டிற்கு சென்றனர் அம்மாவும் அப்பாவும். திறந்தே இருந்த அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டுக் காத்திருக்க, நாற்பதைக் கடந்த தோற்றத்தில் உடல் நன்றாக பருத்துப்போயிருந்த பெண்மணி ஒருவர் வெளியில் வர, "இங்க சம்பதுன்னு ஒருத்தர்" என அப்பா தயங்கிச் தயங்கி சொல்ல, ஒரு ஏளனப் பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றார் அவர். அவருடைய கொண்டையும் இரண்டு மூக்கிலும் அவர் பெரியதாக அணிந்திருந்த மூக்குத்தியும் பார்க்கவே எனக்கு மிரட்சியாக இருந்தது. அழவே தொடங்கிவிட்டாள் கோமு. அவளைச் சமாதானம் செய்யும் பொருட்டு, நான் கோமுவை சற்று தள்ளி அழைத்துச்சென்றுவிட, அங்கே சுற்றித்திரிந்த கோழியையும் அதன் குஞ்சுகளையும் பார்த்து சற்று சமாதானம் ஆனாள் கோமு. அங்கே நெடுநெடுவென வளர்ந்த ஒருவன் எங்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே நிற்கவும் அச்சத்துடன் என் உடையை பிடித்துக்கொண்டாள் கோமதி. அதேநேரம் அங்கே உரத்து ஒலித்த குரல்களில் கலவரமாகிப்போய் நான் அவளை இழுத்துக்கொண்டு ஓடி வந்து தூரமாகவே நின்றவாறு பார்க்க, நெடிய உயரத்துடன், மா நிறமும் வழுக்கை விழுந்த தலையுமாக, மிகப்பெரிய தொப்பையுடன் வேட்டியை மடித்துக்கட்டி, ஒரு துண்டை தோளில் போட்டுக்கொண்டு மனதில் இருக்கும் குரூரம் முகம் முழுதும் பொங்கி வழிய ஏதோ மிரட்டிக்கொண்டிருந்தார்... கொண்டிருந்தான் அந்த சம்பந்தம். ஒரு பக்கம் கோமுவை பிடித்துக்கொண்டே அங்கே செல்ல தயங்கி நான் நிற்க, கண்களில் கண்ணீரும், முகத்தில் ஏமாற்றமுமாக அம்மா திரும்பி வர. அப்பாவின் கண்களும் கலங்கி இருந்தது அவமானத்தால். ரயிலில் பயணம் செய்த நேரம் முழுதும், "ஐயோ அந்த ஆளு கேஸை வாபஸ் வாங்க ஒரு லட்சம் கேக்கறானே! அவ்வளவு பெரிய தொகைக்கு நாம எங்கங்க போவோம்! வீடு கட்டற ஆசை அப்டியே போயிடுமா. ரூப் போட்ட பிறகு இருக்கற பணத்தை வெச்சி பூசுவேலை முடிச்சிட்டு இங்க குடி வந்துடலாம்னு ஆசையா இருந்தேனே. எல்லாமே போயிடும் போல இருக்கே!" எனப் புலம்பிக்கொண்டே வந்தாள் அம்மா. அப்பா அதற்கு மௌனத்தையே பதிலாகக் கொடுக்க, அதற்கும் கோபம்தான் வந்தது அம்மாவுக்கு. "இப்படி கையாலாகாத மனுஷனா இருக்கீங்களே" என எரிந்து விழுந்தாள் அவரிடம். அதற்கும் அவரிடம் இயலாமையுடனான ஒரு மௌனமே பதிலாகக் கிடைத்தது. அன்று இரவு முழுதும் அழுகையில் கரைந்தவள், காலை ஏனோதானோவென ஒரு சமையலைச் செய்து எங்களைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினாள் அம்மா. அப்பாதான் அன்று கோமுவை பள்ளிக்கு அழைத்துச்சென்றார். நான் வழக்கம்போல கோகுல் கவிதா என என் நட்பு பட்டாளங்களுடன் பள்ளிக்குச் சென்றேன். மதிய இடைவேளைக்கு இன்னும் சில நிமிடங்கள்தான் எனும் தறுவாயில், பள்ளியில் வேலை செய்யும் 'பியூன்' என் வகுப்புக்கு வந்து தலைமை ஆசிரியர் அழைப்பதாகச் சொல்லிவிட்டுச் செல்ல, அதில் பயந்துபோய் ஒரு நடுக்கத்துடன் நான் 'ஹெச்.எம்' அறை நோக்கிச் சென்றேன். ஒரு கையில் கோமுவை பிடித்துக்கொண்டு, அவளது பையைத் தோளில் மாட்டிக்கொண்டு அங்கே நின்றிருந்தார் ஈஸ்வர் மாமா. அதாவது கோகுலின் அப்பா. அவர் முகத்தில் படிந்திருந்த சோகம் என் மனதில் கலவரத்தை மூட்ட, "என்ன ஆச்சு மாமா!" என நான் கேட்க, "வீட்டுக்கு வா கண்ணு சொல்றேன்!" எனச் சொல்லிவிட்டு தலைமை ஆசிரியருக்கு நன்றி சொல்லி எங்களை அங்கிருந்து அழைத்துச்சென்றார் மாமா. அன்று எங்கள் ஹெச்.எம் என்னைப் பார்த்த பரிதாப பார்வை நான் கோகுலை மணக்கும் வரை என்னைத் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. நான் வீட்டிற்கு வர, எங்கள் தெருவே அங்கே கூடி இருந்தது. கவிதா அம்மா, காவேரி அத்தை இன்னும் சில பெண்மணிகளும் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருக்க, நாங்கள் குடி இருந்த வீடு அங்கங்கே எரிந்து புகை மண்டி கிடந்தது. அங்கே வீசிய துர்நாற்றம் வயிற்றைப் புரட்ட, "அம்மா எங்க மாமா!" என நான் கேட்க, என் குரல் என் செவிகளுக்கே எட்டவில்லை. மிக முயன்று தன் அழுகையை மாமா அடக்குவது புரிந்தது. அத்துடன் அம்மா ஏதோ விபரீதமாகச் செய்துவிட்டாள் என்பதும் புரிந்தது. அங்கே எல்லோரும் பேசிக்கொண்டதை வைத்து, நான் பள்ளிக்குச் சென்றதும் அம்மா மண்ணெண்ணெய்யை ஊற்றி தன்னை எரித்துக்கொள்ள, கோமுவை விட்டுவிட்டு வந்த அப்பா அம்மாவைக் காப்பாற்ற முயலும் போது அவரும் தீக்கிரையானார் என்பது புரிந்தது. அங்கே எல்லோரும் அழுவதைப் பார்த்து எனக்கும் அழுகை வர என்னைப் பார்த்து கோமுவும் அழத் தொடங்கினாள். காவேரி அத்தை அவளை அணைத்து ஆறுதல் படுத்த, கோகுல் என் கைகளைப் பிடித்துக்கொண்டு, "பயப்படாத ஜில்லு! நாங்க எல்லாரும் இருக்கோம் உனக்கு" என்றான் அழுகையுடன். அந்த வார்த்தையை அவன்... அவர்! இன்று வரை மறக்கவில்லை என்பது அவருடைய ஒவ்வொரு செயலிலும் எனக்குப் புரிகிறது. சில மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு துணியால் சுற்றிய இரண்டு கரிக் கட்டைகளை எங்களைப் பெற்றவர்கள் என என்னிடம் காட்டினார் அவர்களைச் சுமந்துவந்த அமரர் ஊர்தியை பின் தொடர்ந்து 'ஆட்டோ'வில் வந்து இறங்கிய என் சித்தப்பா. 'ஓ' என்று ஒப்பாரி வைத்தனர் உறவுமுறை அத்தைகள் இருவரும். மாமா கடமையே என வந்துபோனார். ஏற்கனவே பாதி எரிந்தவர்களை மொத்தமுமாகத் தகனம் செய்து, அனைவரும் வீடு வர, எங்களுடன் ரத்த சம்பந்தம் உள்ளவர்கள் என்று ஒருவர் கூட மிஞ்சவில்லை அங்கே. பின்னங்கால் பிடரியில் பட ஓடி ஒளிந்திருந்தனர். ஒரு லட்சத்தையும் கொடுத்து, அது திரும்ப வரவே வராது என்று ஆன பின் அம்மா செய்த வேலையால் துர்மரணம் நிகழ்ந்த வீடு என்ற பெயரையும் அடைந்து நஷ்டத்துக்குள்ளான கவிதா அம்மாதான் அவை எதையும் பொருட்படுத்தாமல் எங்கள் இருவருடைய எதிர்காலம் குறித்து யோசித்தார். வார்த்தையால் கூட எங்களை காயப்படுத்தவில்லை. என்னதான் உயிருக்கு உயிராகப் பழகினாலும், நல்ல மனம் இருந்தாலும் இரண்டு பெண் குழந்தைகளை எடுத்துக் காப்பாற்றும் அளவுக்கு அங்கே யாருக்கும் வசதி வாய்ப்பு இல்லாமல் போக, எங்கள் இருவரையும் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க முடிவு செய்தனர் எல்லோரும். அன்று கோகுலும் கவிதாவும் அழுத அழுகையை இன்றளவும் என்னால் மறக்க முடியாது. அதன் பின் வந்த நாட்களில் ஈஸ்வரன் மாமாதான் எங்கெங்கோ அலைந்து யார் யாரையோ சந்தித்து சென்னை புறநகரில் அமைத்திருக்கும் ஒரு தொண்டு நிறுவனத்தில் என்னையும் கோமுவையும் சேர்த்து விட்டார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோகுலும் அவரும் எங்களை அங்கே வந்து பார்த்துவிட்டுச் செல்வார்கள். அவர்கள் வந்து பார்ப்பதே மன நிறைவைக் கொடுக்க அதற்கு மேல் எந்த கற்பனையையும் வளர்த்துக்கொள்ளவில்லை நான். படிப்பு ஒன்றே எங்கள் வாழ்வின் கலங்கரை விளக்கமாகத் தோன்ற அதை நோக்கி மட்டுமே எங்கள் பயணம் இருந்தது. நான் நல்ல மதிப்பெண்களுடன் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற, உபகார தொகை பெற்று கல்லூரியில் சேர்ந்து என் 'பி.காம்' படிப்பை முடித்தேன். கோமுவுக்காக அந்த விடுதியிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலையால் அங்கே அவர்களுக்கு உதவி செய்துகொண்டே நான் 'எம்.காம்' படிப்பில் அடி எடுத்து வைத்த சமயம் என்னைத் தேடிவந்த கோகுலும் காவேரி அத்தையும் கவுதம் அண்ணாவுக்குத் திருமணம் ஏற்பாடாகி இருக்கும் நல்ல செய்தியைச் சொல்லவிட்டு திருமணத்திற்கு வந்து எங்கள் இருவரையும் அழைத்துப்போவதாகச் சொல்லிவிட்டுப் போனார்கள். திருமணத்திற்கு முந்தைய தினம் கோகுல்தான் எங்களை வந்து அழைத்துச்சென்றார். திருமணம் நன்றாக நடந்தேறியது. எங்கள் உறவாக மாறிப்போன உடன் குடியிருந்த மக்கள் எல்லோரும் கவிதா அம்மா உட்பட அங்கே வந்திருக்க, ஒரே கோலாகலமாக இருந்தது அந்தத் திருமண விழா. கோமுவுக்கு பலரை நினைவில் இல்லை. சொல்லப்போனால் அம்மா அப்பாவையே அவள் மறந்துபோயிருந்தாள். ஆனால் என் மனம் அந்த கூட்டத்தில் என் அம்மாவைத் தேட, எனக்காக கோகுல் மட்டுமே இருப்பதுபோன்ற ஒரு உணர்வு என் மனதில் எழ, மிரண்டே போனேன் நான், அது நடைமுறைக்குச் சாத்தியப்படுமா என்று? ஆனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அது சாத்தியம்தான் என நிரூபித்தார் கோகுல் என் மனதில் அது போன்ற நினைவுகள் தலைதூக்காமல் நான் வெகு ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்ட போதும். அதன் பின் நாட்கள்; வாரங்களைக் கடந்து முழுதாக இரண்டு வருடங்கள் கடந்திருக்க, கோகுலிடமிருந்தோ அவர்கள் குடும்பத்திடமிருந்தோ எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருந்தது. ஒருவாறாக நான் எம்.காம் படிப்பை முடித்து ஒரு வேலைக்குத் தேர்வாகி இருந்தேன். கோமதியும் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணில் தேர்வாக, உதவித்தொகையுடன் மூலம் மேற்கொண்டு படிக்க ஒரு பொறியியல் கல்லூரியில் அவளுக்கு இடமும் கிடைத்தது. தங்கி இருந்த இல்லத்திலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்திலிருந்த நான் காவேரி அத்தையைத் தொடர்புகொண்டு, அந்த தகவலைச் சொல்லிவிட்டு, நாங்கள் இருவரும் தங்க ஒரு வீட்டை ஏற்பாடு செய்துதரும்படி கேட்க, கட்டாயம் செய்வதாகச் சொன்னார் அத்தை. நாட்கள் நகர, அவர் அப்படி ஒரு ஏற்பாடு செய்ததாகவே தெரியவில்லை. நாங்கள் அந்த இல்லத்திலிருந்து கிளம்பவேண்டிய தினம் அத்தை, மாமா, கௌதம் அண்ணா, அண்ணி என அனைவரும் அந்த இல்லத்திற்கு வர, எங்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது. கோகுல் வராமல் போனதால் என் மனதில் பரவிய ஏமாற்றத்துடன் நானும் கோமுவும் அவர்களுடன் கிளம்பினோம். கௌதம் அண்ணா வாங்கி இருந்த புதிய 'பிளாட்'ட்டுக்கு அவர்களுடன் சென்றோம் இருவரும். எங்களுக்கான வீட்டைப் பற்றிக் கேட்டதற்கு, 'கோகுல் நாளைக்கு வந்துடுவான். பிறகு அதைப் பத்தி பேசலாம்' என அத்தை சொல்ல, அதன் பிறகு அமைதியானேன் நான். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது கோகுல் ஒரே முயற்சியில் சீ.ஏ தேர்ச்சி பெற்றதும் அதன் பின் அவருக்கு மத்திய அரசில் வேலை கிடைத்ததும். "இப்ப அவன் புனால போஸ்டிங்கில இருக்கான்மா" என அத்தை சொல்லவும் ஆனந்தமாகவும் இருந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது. அவர்மேல்... அவன்மேல் கோபமும் வந்தது. அவன் வந்தவுடன் சண்டை பிடிக்கவேண்டும் என எண்ணிக்கொண்டேன் நான். ஆனால் வாழ்நாள் முழுமைக்கும் கோகுலுடன் சண்டை என்பது இந்த டைரியில் மட்டும்தான் என்பது எனக்கு பிறகுதான் புரிந்தது. அவனை நேரில் பார்த்தால் என் கோபமெல்லாம் கரைந்து ஆவியாகிப் போவதுடன் காதல் மட்டுமே அங்கே மிஞ்சி இருக்கிறதே என்ன செய்ய? *** அடுத்த நாள் சனிக்கிழமை என்பதால் எல்லோரும் விடுமுறையில் இருக்க அங்கே கோகுலும் வந்து சேர்ந்தார். ஒருவர் மாற்றி ஒருவர் அங்கே இருந்துகொண்டே இருக்க, கோகுலுடன் சண்டை போட எனக்கு வாய்ப்பே அமையவில்லை. அன்று மதியம் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு ஓய்வாக அமர்ந்திருக்க, "உனக்கு ஒரு பையனை பார்த்திருக்கோம் சரசு! சீக்கிரமே கல்யாணத்தை முடிச்சிட்டா எங்களுக்கும் நிம்மதியா இருக்கும். இனிமேலும் உன்னைத் தனியா விட எங்க மனசு இடம் கொடுக்கல!" என ஈஸ்வரன் மாமா சொல்ல, அரண்டே போனேன் நான். என் பார்வை என்னையும் அறியாமல் கோகுலிடம் செல்ல அவன் கண்களில் ஒரு நொடி மின்னல் வெட்டியது போல் இருந்தது. எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை! கோமுவை பற்றி எண்ணிப் பார்த்தேன், அம்மா அப்பா எனக்காக விட்டுப்போன ஒரே உறவு. அவர்கள் இறந்த பிறகு பல வருடங்கள் அவளை என் கைகளுக்குள்ளேயே பொத்தி பாதுகாத்திருக்கிறேன். என்னிடமிருந்து அவளைத் தனியே பிரிக்கும் எந்த ஒரு நிலையையும் என்னால் ஏற்க முடியாது. குறைந்த பட்சம் அவள் ஒரு நல்ல நிலையை எட்டும் வரையாவது எனக்கு அவளும் அவளுக்கு நானுமாக இருக்க வேண்டும். எனவே திருமணம் என்ற பெயரில் ஒரு 'ஆசிட் டெஸ்ட்' செய்ய விரும்பவில்லை நான். கோமுவின் கையை பிடித்துக்கொண்டு மிரட்சியுடன் நான் அவளுடைய முகத்தை ஏறிட, அங்கேயும் குழப்பத்தின் ரேகைகள் படர்ந்திருந்தது. நா வறண்டு போகக் கொஞ்சம் தண்ணீரை எடுத்துப் பருகிவிட்டு, "மாமா! எனக்கு இப்ப கல்யாணமெல்லாம் வேணாம்; நாங்க ரெண்டு பேரும் தங்க ஒரு வீடு பார்த்து கொடுங்க போதும்" என்றேன் நான். "ஏம்மா இப்படி சொல்ற?" என அத்தை கேட்க, "இல்ல ..த்தை! அது சரியா வராது; கடைசியில கோமுவை நட்டாத்துல விட்ட மாதிரி ஆயிடும்!" என்றேன். "அதெல்லாம் ஒண்ணும் ஆகாது; நீ சரின்னு சொல்லு" என அத்தை சொல்ல, "இல்ல அத்தை; புதுசா வர ஒருத்தரை எப்படி நம்ப முடியும்?" என நான் கேட்க, "புதுசா இல்லாம ஆரம்பத்துல இருந்தே உன் கூட இருக்கறவன்னா நம்புவியா?" என மாமா கேட்க, நான் அதிர்ந்து அவரை பார்க்கவும், "கோகுலை நீ முழுசா நம்பலாம்!" என்றார் மாமா. நம்பவே முடியாமல் நான் ஒவ்வொருத்தருடைய முகத்தையும் பார்க்க, நான் எப்படியும் சம்மதம் சொல்லிவிடுவேன் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது எல்லோர் முகத்திலும். அதன் பின் கோகுலை தலை நிமிர்ந்து பார்க்கும் துணிவே இல்லை எனக்கு. பின் மிக முயன்று நிமிர்ந்து நான் அவர் முகத்தை பார்க்க, என்னைப் பார்த்து அர்த்தமாய் புன்னகைத்தார் கோகுல், 'இதுதான் என்னோட விருப்பம்' என்பதுபோல். கௌதம் அண்ணா திருமணத்தைப் போலவே வெகு விமரிசையாக நடந்தது எங்கள் திருமணம். ஓடிப்போன என் சொந்தங்களைத் தேடித் தேடி பத்திரிகை வைத்திருந்தார் கோகுல் குறிப்பாக மாமாவுக்கு. "எங்களைத் தனியா தவிக்க விட்டு ஓடி போனவங்கள அவசியம் கூப்பிடணுமா?" எனச் சிறுபிள்ளைத் தனமாக நான் கேட்டதற்கு, "அவசியம் கூப்பிடனும் ஜில்லு! அவங்க விட்டுட்டு போனாலும் நீ நல்லா படிச்சு நல்லபடியா வேலைக்கு போயிட்டு இருக்க; உனக்கு க்ராண்டா கல்யாணம் நடக்குதுன்னு அவங்களுக்கு தெரிய வேண்டாமா?" என கோகுல் பதிலுக்குக் கேட்க, மவுனமாகிப்போனேன் நான். கூப்பிட்ட முறைக்கு மாமாவும் அத்தையும் கல்யாணத்திற்கு வந்து தாய்மாமன் சீர் செய்துவிட்டுப் போனார்கள். அவர்களிடமும் சிறு மாற்றம் ஏற்பட்டிருப்பது புரிந்தது. இதற்கு நடுவில் கலா அக்கா தாய்மை அடைய, வருண் பிறந்தான். சில மாதங்களிலேயே பவித்ரா பிறந்தாள். என் அம்மாவை அச்சு அசலாக உரித்து வைத்து அவள் பிறக்கவும் அம்மாவைத் தேடி அலைந்து கொண்டிருந்த என் மனதிற்கு ஒரு நிறைவைக் கொடுத்தாள் என் மகள். அந்த சிறு வெற்றிடமும் என் மகளாக வந்த என் அம்மாவால் நிறைந்து போனது. நான் கோகுலுடன் ஹைதராபாத் மும்பை எனப் போய்க்கொண்டிருக்க, அத்தை மாமாவுடன் இருந்த கோமு 'கோல்டு மெடலு'டன் 'பீ.ஈ' படிப்பை முடித்தாள். அதிக சம்பளத்தில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் அவளுக்கு வேலையும் கிடைத்துவிட, இதோ திருமணமும் நிச்சயித்து விட்டோம். பழைய நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக அதன் வீரியத்தைக் குறைத்துக்கொள்ள, என் மனம் அமைதியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. அனைத்திற்கும் காரணம் என் கோகுலும் அவருடைய... என்னுடைய குடும்பமும்தான். இப்படிப் பட்ட சொந்தங்களைக் கொடுத்ததற்கு நான் கடவுளுக்கு என் நன்றியைத் தினம் தினம் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்! கோகுல் அந்த 'டைரி'யை வாசித்து முடிக்கவும் உறக்கம் அவனை ஆட்கொள்ள, ரயிலின் சத்தம் தாலாட்டும் இன்னிசையாக மாறிப்போக அப்படியே உறங்கிப்போனான் கோகுல். ***

0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page