top of page

Thookanam Kuruvikal-1

கூடு-1

'சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத! வாசனை பாட்டொன்று கேளு கண்ணம்மா!!' கைப்பேசி இசைக்க, வியர்வை சொட்டச் சொட்ட வந்து அதை எடுத்தவன், "சொல்லுடா ஜில்லு!" என மூச்சுவாங்கக் கேட்க, எதிர்முனையிலிருந்துகொண்டு, "என்ன கோகுல் இது; என்ன செஞ்சிட்டு இருக்கீங்க; ஏன் இப்படி மூச்சுவாங்குது!" என பதறினாள் அவனால் 'ஜில்லு' என அழைக்கப்பட்ட சரஸ்வதி! "ஒண்ணுமில்லடா ஜில்லு! ஃபிரிட்ஜ லாரில ஏத்த ஹெல்ப் பண்ணேன்! அதான்!" என கோகுல் சொல்ல, "ப்ச்! எதுக்கு இந்த தேவையில்லாத வேல! அதையெல்லாம் அந்த பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் ஆளுங்களே கவனிச்சுப்பாங்க இல்ல! பழக்கமில்லாத வேலையெல்லாம் ஏன் செய்யறீங்க!" அவள் அக்கறையுடன் கடிந்துகொள்ள, "உண்மையிலேயே அவங்க மூவர்ஸ் தாண்டா! வெறும் மூணு பேர்தான் வந்திருக்காங்க! என்ன இருந்தாலும் நம்ம பொருள் இல்லையா! சும்மா வேடிக்கை பார்க்க முடியல" என்ற கோகுல், "சொல்லு எதுக்கு கூப்பிட்ட" எனக் கேட்க,


“அதை மறந்துட்டேன் பாருங்க!" என்றவள், "என்னோட டைரியை மறந்து அங்கேயே வெச்சிட்டு வந்துட்டேன்! அதை லாரில போடாம உங்க லேப்டாப் பேக்ல வெச்சு எடுத்துட்டு வாங்க என்ன?" என அவள் தீவிரமாய் சொல்ல, அதற்கு முன்பாகவே அவன் அவளது பொக்கிஷத்தை பத்திரப்படுத்தியிருக்க, "டன் ஜில்லு!" என்று சொல்லிவிட்டு, "பவி குட்டி கிட்ட போனை கொஞ்சம் குடு!" என்று சொல்ல, கைப்பேசி அவனுடைய மகளின் கைக்குப் போனது. பின் அவளது கொஞ்சல்கள், கேள்விகள், தேவைகள் அனைத்தும் முடிந்தபிறகு அவனுடைய அம்மா அப்பாவிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் கோகுல் இதழில் மலர்ந்த சிரிப்புடன். *** நல்ல சம்பளத்தில் மத்திய அரசில் வேலை அவனுக்கு. எனவே மூன்று வருடத்துக்கு ஒருமுறை கட்டாய இடமாற்றம் தவிர்க்க முடியாதது. வேலைக்குச் சேர்ந்த பிறகு அவனுக்கு இது மூன்றாவது இடமாற்றம். இந்த முறை சென்னைக்கே கிடைத்தது ஒரு மிகப்பெரிய ஆறுதல். மூன்றுவருட மும்பை வாசம் ஒருவழியாக முடிவுக்கு வந்த மகிழ்ச்சியுடன் மும்பையிலிருந்து சென்னை நோக்கி இதோ 'சென்னை எக்ஸ்பிரஸ்' ரயிலில் அவனது பயணம். அவனுடைய அண்ணன் கவுதமும் அண்ணி கலாவதியும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்துகொண்டிருக்க, 'லோன்' மூலம் தாம்பரம் பகுதியில் ஒரு 'பிளாட்' வாங்கியிருந்தனர். அவனுடைய வீட்டிற்குப் பக்கத்திலேயே ஒரு 'பிளாட்' காலியாக இருக்க, அதையே வாடகைக்கு எடுத்திருந்தான் கோகுல். 'எம்.காம்' முடித்துவிட்டு 'கிண்டர்கார்டன்' பயிற்சி எடுத்திருந்த சரஸ்வதி, இந்தியா முழுவதும் தன் கிளைகளைப் பரப்பியிருக்கும் 'சீ.பீ.எஸ்.ஈ' பள்ளி ஒன்றில் வேலையில் இருக்கிறாள். கூடவே அவனது வற்புறுத்தலின் பெயரில் அவனுடைய வழிகாட்டுதலுடன் 'சீ.ஏ இன்டர்' வரை தேறி மேற்கொண்டு படித்துக்கொண்டிருக்கிறாள் அவள். அவர்கள் மகள் பவித்ராவையும் அவள் வேலை செய்யும் பள்ளியிலேயே சேர்த்திருக்கின்றனர். தாம்பரத்தில் உள்ள அந்த பள்ளியின் கிளைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு மகளுடன் சரஸ்வதி ஒரு மாதம் முன்பாகவே அங்கே சென்றிருக்க, மும்பையில் தன் பணியை நிறைவுசெய்துகொண்டு அவனுடைய மொத்த குடும்பத்தையும் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறான் கோகுல். நிரந்தர கூடு இல்லாமல் பறந்துகொண்டே இருக்கும் காரணத்தால் இதுவரை சொந்த வீடு என்ற எண்ணம் இல்லாமல் இருந்தவன் அதற்கான காலம் வந்துவிட்டதாகத் தோன்றவும் அதைப் பற்றி அவனுடைய ஜில்லுவிடம் பேசி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டான். இந்த எண்ணம் அவளுடைய மனதை அதிகம் துன்பப்படுத்தக்கூடும் என்று வருத்தமாக இருந்தது அவனுக்கு. 'ஆனாலும் செய்துதான் ஆகவேண்டும்; வேறு வழி இல்லை புரையோடிப்போயிருக்கும்காயத்திற்குச்சிறு அறுவை சிகிச்சை தேவைதான்' என எண்ணிக் கொண்டான் அவன். சில நிமிடங்களை முகபுத்தகத்தில் விரயம் செய்ய, ஒரு நிலைக்கு மேல் அது அலுப்புத் தட்டவும், எதாவது புத்தகம் படிக்கலாம் எனத் தோன்ற, பாதி படித்துவிட்டு வைத்திருந்த 'வன்முறைக்கு அப்பால்' புத்தகத்தின் நினைவு வந்தது அவனுக்கு. அதை எடுக்கலாம் என்று அவனது 'லேப்டாப்' பைக்குள் கையை விட அவனுக்குத் தட்டுப்பட்டது அவனுடைய 'ஜில்லு'வின் 'டைரி' புன்னகையுடன் அதை அவன் வெளியில் எடுக்க, 'படிக்கலாமா? வேண்டாமா?' என்ற எண்ணம் எழுந்தது அவனுக்கு. திருமணமான இந்த ஆறு ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். ஒவ்வொரு வருடமும் அவளுடைய 'நாட்குறிப்பு' வேண்டுமானால் புதிது புதிதாக மாறலாம்! ஆனால் அதில் அவள் எழுதும் அந்த கதை மாறவே மாறாது. அவள் மனதில் வேரூன்றிப் போன அவளது சொந்த கதை. கொஞ்சம் சோகமான கதையும்தான். அந்த கதை அவனுக்குப் புதிதான கதையுமில்லைதான்! இருந்தாலும் அவன் அதைப் படிக்க நினைப்பதற்கு ஒரு காரணம் உண்டு! அது அதன் நடுநடுவே அவள் சிதறவிட்டிருக்கும் அவளது 'காதல்!' அவனுக்கு மட்டுமே சொந்தமான அவளது 'காதல்!' அந்த காதல் 'டைரியை படி!' என அவனைத் தூண்ட அதைப் பிரித்தான் கோகுல்! முத்து முத்தான கையெழுத்தில், 'கூடு தேடும் ஒரு குருவியின் கதை!' என அழகாக வார்த்தைகளைக் கோர்த்திருந்தாள் அவனுடைய 'ஜில்லு' என்னும் சரஸ்வதி! அந்த நாளேட்டில் அவள் வாழ்ந்து வடித்திருக்கும் கதையை தொடர்ந்து படிக்கத்தொடங்கினான் கோகுல். *** எனக்கு பாரதியார் கவிதைகள் நிரம்பப் பிடிக்கும். ஒரு உண்மையைச் சொன்னால் பல வருடங்கள் எனக்குத் துணையாய் நின்றது அவரது கவிதைகளும் ஒரு சில திரை இசை பாடல்களும்தான். பாரதியாரின் கவிதையில் 'காற்று' என்றொரு வசன கவிதை உண்டு. அதில் ஒரு பந்தலில் இரண்டு கயிறுகள் தொங்கிக்கொண்டிருக்கும். ஒன்று சாண் மற்றொன்று முக்கால் சாண் என்ற அளவிலிருந்ததாக பாரதி சொல்லுவார். ஆணும் பெண்ணுமாக உயிர் கொடுத்து அவற்றுக்குப் பெயர்களையும் சூட்டி மகிழ்ந்திருப்பர் பாரதி! ஆண் கயிற்றைக் கந்தன் என்றும் பெண் கயிற்றை வள்ளியம்மை என்றும் சொல்லுவார் அவர். ஆணின் காதலையும் பெண்ணின் நாணத்தையும் அதில் அழகாகப் புனைந்திருப்பர் பாரதி. அதைப் படிக்கும்போதெல்லாம் என் அம்மா அப்பாவின் நினைவுதான் வரும் எனக்கு. அவ்வளவு அன்னியோன்னியம் தெரியும் இருவரிடமும். அம்மாவின் சொல்லுக்கு அப்பா இல்லை என்ற வார்த்தையைச் சொல்லியே நான் கேட்டதேயில்லை. அந்த விஷயத்தில் மட்டும் கோகுல் அப்படி இல்லை. நல்லவேளை அப்படி இல்லை! சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவர். அதனால் எல்லாவற்றிற்கும் தலையாட்டும் வழக்கம் அவரிடம் கிடையாது. கோகுலுக்கு என்மீது அத்தனை அன்பு! அப்பாவுக்கு அம்மாவின்மேல் இருந்ததை போல! 'ஆரம்பிச்சுட்டா!' என்ற எண்ணத்துடன் புன்னகைத்துக்கொண்டான் கோகுல். அப்பா கோபால்! சுருக்கமாகக் கோபி! எதோ ஒரு தனியார் கம்பெனியில் சொற்ப சம்பளத்தில் வேலையிலிருந்தார். அதுவும் நிரந்தர வேலை என்றெல்லாம் கிடையாது. என்னுடைய கோகுலிடம் இருப்பது மாதிரி ஒரு கம்பீரம் அவரிடம் இல்லை என்றாலும் அப்பா ரொம்ப அன்பானவர். மறுபடியும் ஒரு புன்னகை கோகுலிடம்! அம்மா வத்சலா! ஒரு 'ஹோம் மேக்கர்' ஒடிசலான தேகத்துடன் சந்தன நிறத்தில் அழகாக இருப்பாள்! அப்பாவின் வருமானத்தில் அப்பாவுடன் சேர்த்து என்னையும் தங்கையையும் நன்றாகவே பார்த்துக்கொண்டாள். குட்டி தங்கை கோமதி! நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்பொழுது பிறந்தவள். மாம்பலத்தில் ஒரு ஒண்டுக்குடித்தனத்தில் குறைந்த வாடகையில் ஒரு புறாக்கூண்டில் எங்கள் வாழ்க்கை. கோமதியை பள்ளியில் சேர்த்த பிறகு செலவுகள் நீளவும் அதுவரை தனியார்ப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நான் ஐந்தாம் வகுப்பிற்குப் பிறகு அரசுப் பள்ளிக்கு மாற்றப்பட்டேன்! அதன் காரண காரியமெல்லாம் ஆராயும் வயது அப்பொழுது எனக்கு இல்லை! இப்பொழுது இருப்பதுபோல் இல்லாமல் அரசுப்பள்ளிகளுக்கு மக்களிடம் நல்ல மரியாதை இருந்த காலம் அது. எனவே எனக்கு எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. ஓரளவிற்கு எங்கள் சின்னசின்ன ஆசைகளை அம்மாவும் அப்பாவும் நிறைவேற்றி விட அந்த எளிமையான வாழ்க்கையே இன்பம் கொடுப்பதாக இருந்தது எனக்கு. தெளிந்த நீரோடை போல எங்கள் வாழ்க்கை அமைதியாகச் சென்றுகொண்டிருந்தது சென்னையின் புறநகர்ப் பகுதியில் ஒரு மனையை அம்மாவின் பெயரில் எழுதிவிட்டு தாத்தா இறந்துபோகும் வரை. தாத்தா இறந்து அவருக்கு செய்யவேண்டிய அந்திம காரியங்கள் முடிந்த கடைசி தினம்தான் அவர் அப்படி ஒரு உயிலை எழுதி இருந்ததே எல்லோருக்கும் தெரிந்தது. தாத்தா தன் சுய சம்பாத்தியத்தில் கட்டிய வீட்டை என் மாமாவுக்குக் கொடுத்துவிட்டு அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் அவர் வாங்கி போட்டிருந்த மனையை அம்மாவின் பெயரில் எழுதியிருந்தார். அன்று மாமா அம்மாவிடம் போட்ட சண்டையில் அந்த மனையை அம்மாவுக்குக் க