top of page

Thookanam Kurivikal-6

கூடு-6


வீடு கட்ட தொடங்கியபிறகு ஒவ்வொரு நாள் செல்வதும் ஒரு யுகம் செல்வதுபோல் அவ்வளவு கடினமாக இருந்தது சரஸ்வதிக்கு. அவனுடைய அலுவலக வேலை முடிந்ததும் நேரே அந்த கட்டிடப் பணி நடக்கும் இடத்திற்கும் சென்று அதை ஒரு முறை பார்த்துவிட்டு பிறகுதான் வீட்டுக்கு வருவான் அவன். இடையிடையே விடுப்பு எடுத்துக்கொண்டு எங்கெங்கோ அலைந்துக்கொண்டு வேறு இருந்தான் அவன். சில நாட்கள் கௌசிக்கும் அவனுடன் இணைந்துகொள்வான். கட்டுக்கட்டாக காகிதங்களும் ஏதோ பத்திரங்களின் நகல்களுமாக நிரம்பி வழிந்தது அவனது அலமாரி. சில சமயம் விடிய விடிய அவற்றைப் புரட்டிக்கொண்டிருப்பான். இடையிடையே 'கூகுள்' செய்து எதாவது குறிப்பு எழுதிக்கொள்வான் அவன். அதுபற்றி கேட்டால் சரியான பதிலே இருக்காது அவனிடம். கொஞ்சம் அழுத்திக் கேட்டாலும், "அபிஷியல் டாக்குமண்ட்ஸ் ஜில்லு. உனக்கு எதுக்கு இந்த தலைவலி எல்லாம்" என்பான் அவளிடம். நாட்கள் இப்படியே போக கோகுலுடன் அதிக நேரம் செலவிட இயலாமல் திண்டாடிப்போனாள் சரசு. அது தாங்காமல் அவளுடைய நாளேட்டில் அவள் எழுதியிருக்கும் அவளது மனக்குறைகளைப் படித்தாலும் துளி அளவு மாற்றமும் இல்லை அவனது செயல்பாடுகளில். ஒரு நாள் அதில் அவளது புலம்பல் அதிகமாக இருக்க, 'பொறுத்தார் பூமி ஆள்வார்! கொஞ்சம் பொறுத்துக்கோ ஜில்லு" என அதில் பதிலுக்குக் கிறுக்கி இருந்தான் அவன். அதன்பின் 'டைரி' எழுதுவதையே விட்டுவிட்டாள் சரஸ்வதி. அதுவும் முதல் தளம் 'ரூஃப்' அமைத்த பிறகு, 'எந்த கோர்ட் நோடீசும் ஸ்டே ஆர்டரும் வந்துடக்கூடாது கடவுளே' என்ற ப்ரார்தனையே அவள் மனதில் மேலோங்கி இருந்தது. அந்த வேலை முடித்த பிறகும் அவள் பயந்தது போல் எந்த தடங்கலும் வராமல் இருக்கக் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது அவளுக்கு. இடையில் அவளுடைய சீ.ஏ இறுதி பரீட்சைகள் வேறு தொடங்க அவளுடைய கவனம் முழுவதும் மகளிடமும் புத்தகங்களிடமும் மாறி மாறி இருக்கவே அவளுடைய மனப்போராட்டங்கள் கொஞ்சம் மரத்துப்போயிருந்தது. ஒருவாறாக வெற்றிகரமாக பரிட்சைகளை முடித்தாள் அவள். அந்த நேரத்தில்தான் இரண்டாவது தளத்திற்கான மேல் கூரை அமைக்கும் பணிக்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தனர். *** ஒரு நாள் மாலை மனைவியை மட்டும் தனியே அழைத்துக்கொண்டு 'எலியட்ஸ் பீச்' வந்திருந்தான் கோகுல். அவளுடைய அம்மா அப்பாவுடன் பல முறை அங்கே வந்து கடல் அலைகளில் விளையாடி மகிழ்ந்திருந்ததை நினைவு படுத்துவதாலோ என்னவோ அவளுக்குச் சென்னையிலேயே மிகவும் பிடித்த இடம் அது. கடலை பார்த்தபடி ஒரு இடத்தில் இருவரும் அமர, கோகுல் ஏதோ சொல்ல வந்து தயங்குவது புரிந்தது அவளுக்கு. "என்னோட வியாதி உங்களுக்கும் ஒட்டிக்கிச்சா?" எனக் கேட்டுப் புன்னகைத்தாள் சரசு. "ப்ச்.. இல்ல ஜில்லு! நான் இந்த விஷயத்தை ரொம்ப நாளாவே எதிர்பார்த்து காத்திருந்ததால எனக்கு இது அதிர்ச்சியா தெரியல! ஆனா நீ இதை எப்படி எடுத்துக்குவியோன்னுதான் பயமா இருக்கு" என்றான் கோகுல் தயக்கம் விலகாமல். "என்ன கோகுல்; அந்த சம்பந்தம் மறுபடியும் எதாவது பிரச்சனையை ஆரம்பிச்சுட்டானா?" என சரஸ்வதி கேட்கவும், வியப்பில் அவன் புருவங்கள் மேலே உயர்ந்தன. அவன் பதிலை எதிர்பார்க்காமல், "நானும் இதை எதிர்பார்த்துட்டேதான் இருக்கேன் கோகுல். ஆனா இப்ப என் மனசுல கொஞ்சம் தெளிவு ஏற்பட்டிருக்கு. நீங்க ஏதோ ஒரு திட்டம் இல்லாம இதுல இறங்கி இருக்க மாட்டீங்க. இல்லனா கோமு; கௌசிக் எல்லாரும் கண்ணை மூடிட்டு உங்க பின்னால நிக்க மாட்டாங்க இல்ல?!" என்றவள், "இருந்தாலும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு" என்றவாறு அவனது கையை இறுகப் பற்றிக்கொண்டாள். அவளை இழுத்து தன் தோளில் சாய்த்தவன், "அந்த சம்பந்தம் மறுபடியும் ஒரு கோர்ட் நோடீஸ் அனுப்பி இருக்கான்!" என மூச்சை இழுத்துப்பிடித்து அவளிடம் சொல்லியேவிட்டான். ஆனால் அவன் பயந்த அளவுக்கு இல்லாமல் இயல்பாகவே அவள் அதை ஏற்றுக்கொள்ளவே, "வந்து பத்து நாள் ஆச்சு. ஒரிஜினல் கேஸ் என்னன்னு நமக்கு தெரியப்படுத்தாமலே கேஸ் போட்டு இன்டெரிம் ஆர்டரா அந்த ஸ்டேவை வாங்கியிருக்கான் அவன்" என கோகுல் சொல்ல, அது எப்படிங்க முடியும்?" எனக் குழப்பமாக சரசு கேட்க, செஞ்சிருக்காங்களே! எப்படியும் நம்ம லாயர் அதை விளக்கமா சொல்லுவாங்க" என்றவன், "போனவாரம் பேங்க்குக்காகன்னு சொல்லி உங்கிட்ட கையெழுத்து வாங்கினேன் இல்ல அது இந்த கேஸை ஹாண்டில் பண்ணத்தான். லாயர் மூலமா கோர்ட்ல வக்காலத்து ஃபைல் பண்ணி அந்த ஸ்டேவுக்கு எக்ஸ்ப்ளனேஷன் வாங்கினோம். நேத்துதான் ஃபுல் டீடைல்ஸ்க்கும் கிடைச்சது. நான் இதை முதல்லயே எதிர்பார்த்ததால நம்ம லாயர்ஸ் கூட பேசி சில முன்னேற்பாடுகள் செஞ்சுவெச்சிருக்கேன். அதை பத்தி பேசத்தான் இப்ப நம்மை கூப்பிட்டிருக்காங்க! இப்ப நாம நேர்ல போய் அவங்கள மீட் பண்ணனும்" என்றவன், "நீ தைரியமா இருந்தால் போதும் ஜில்லு! நான் என்ன வேணா பண்ணுவேன். நம்ம பக்கம் உண்மை இருக்கும்போது நாம ஏன் விட்டுக்கொடுக்கணும்?" என அவன் கேட்க, ஆமோதிப்பாகத் தலையை ஆட்டினாள் அவன் மனைவி. "இது மனசுல இருந்து வருதா; இல்ல இன்னைக்கு நைட் டைரி எழுதுவியா?" என அவன் கிண்டலாகக் கேட்க, அவனுடைய கண்களை நேராகப் பார்த்துக்கொண்டே, "நீங்க எப்பவும் என் கூடவே இருந்தால் போதும்! எனக்கு வேற ஒண்ணும் வேண்டாம்! மத்தபடி நீங்க என்ன செஞ்சாலும் எனக்குக் கவலை இல்ல" என முடித்தாள் அவள். "சரி வா கிளம்பலாம்" என்றவன் அவளை நேரே வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு அழைத்துவந்தான். அவர்களுக்கு முன்பாகவே அங்கே வந்து காத்திருந்தனர் கோமதியும் கௌசிக்கும். "தீயா வேலை செஞ்சிருக்கீங்க மிஸ்டர் கோகுல்! ப்பா... சான்ஸே இல்ல! நாங்க கேட்டதுக்காக என்ன ஏதுன்னு கேள்வி கேக்காம, கிட்டத்தட்ட எழுபது எண்பது வருஷத்துக்கு முன்னால இருக்கற பத்திரங்களையெல்லாம், ஒவ்வொரு சப் ரெஜிஸ்ட்ரார் ஆபீஸா போய் தேடி கண்டுபிடிச்சு எடுத்திருக்கீங்க. அதுக்கு பீஸே எக்கச்சக்கமா பே பண்ணியிருப்பீங்களே" என அவனைப் புகழ்ந்து தள்ளினார் மூத்த வழக்கறிஞர் கோதண்டராமன். 'இவ்வளவு நாளா ராப்பகலா இதைத்தான் செஞ்சிட்டு இருந்தியா?' எனக் கேள்வியாக வியப்புடன் சரஸ்வதி கணவனைப் பார்க்க, "இல்ல சார்! எங்களுக்கு அதைப் பத்தி ஒண்ணும் தெரியாது. நீங்க கொடுத்த கைடன்ஸ்தான்! கூடவே என் கோ பிரதர் மிஸ்டர் கௌசிக்கும் நிறைய ஹெல்ப் பண்ணார்; தேங்க்ஸ்!" என்றான் கோகுல் மனதிலிருந்து. புன்னகையுடன், "அந்த டாகுமெண்ட் காபிஸ் எல்லாம் படிக்கறதுக்குள்ள ஒரு வழி ஆயிட்டோம் தெரியுமா. ஏன்னா எல்லாமே கையால எழுதின பத்திரங்கள். அதுல இருக்கற தமிழ் எழுத்துக்கள் கூட சிலது இப்ப புழக்கத்துலயே இல்ல. மாதினியோட தாத்தா அட்வகேட் சிவராமன், அந்த காலத்து மனுஷர் அவர் மட்டும் இல்லன்னா கொஞ்சம் கஷ்டமாகி இருக்கும். அவர்தான் அதையெல்லாம் படிக்க ஹெல்ப் பண்ணார்" என நெகிழ்ந்த கோதண்டராமன், "இந்த பத்திரங்கள்தான் ஸ்டேவை உடைக்க ரொம்ப ரொம்ப அவசிய தேவை நமக்கு. ஏன்னா ஒரு பத்திரத்துல ஏதோ ஒரு மூலைல இருக்கற சின்ன டீட்டைல வெச்சுதான் இன்னொரு பத்திரம் நம்ம கேஸுக்கு ரிலேட்டடா இருக்குனு தெரியவருது. அதை தேடி போனா புதுசா எதாவது ஒரு தகவல் கிடைக்குது. அதனாலதான் இவ்வளவு டாகுமெண்ட்ஸ் தேடி எடுக்கவேண்டியதா போச்சு. ஒரு நல்ல விஷயம் என்னன்னா இந்த பத்திரங்களில் இருந்து முக்கியமான ஒரு குறிப்பு கிடைச்சிருக்கு. பார்ப்போம் அது எவ்வளவு தூரம் நமக்கு ஹெல்ப் பண்ணுதுன்னு” என்று சொல்லிவிட்டு, “இதை பத்தின டீடைல்ஸ் எல்லாத்தையும் மாதினி உங்களுக்கு எக்ஸ்பிளைன் பண்ணுவாங்க" என முடித்தார். அவர்களை தன் 'கேபின்'னுக்கு அழைத்துவந்த மாதினி, "இதை லீகல் டெர்ம்ஸ் போட்டு எக்ஸ்பிளைன் பண்ணா உங்களுக்கு தலை சுத்திரும்; ஸோ அதை ஒரு கதை மாதிரி சொல்றேன்! கவனமா கேட்டுக்கோங்க; எதாவது டவுட் இருந்தா லாஸ்ட்டா கேளுங்க எக்ஸ்ப்ளைன் பண்றேன்" என்று சொல்லவிட்டு ஒரு வரைபடத்தைக் காண்பிக்க, அந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் பற்றிய விவரங்கள் ஒரு, 'ஃப்ளோ சார்ட்'ஆக அதில் வரையப்பட்டிருந்தது. "ஒரு ஈஸி அண்டர்ஸ்டாண்டிங்காக இது" என்றாள் மாதினி.
© KPN NOVELS COPY PROTECT
bottom of page