top of page

Poove Unn Punnagayil - 23

அத்தியாயம் -23


தயக்கமேதும் இன்றி வெகு சகஜ பாவத்தில் சக்தி ஒருத்தி அங்கே அமர்ந்திருக்க, ஒட்டுமொத்த சங்கோஜத்தையும் குத்தகைக்கு எடுத்தவன் போல படக்கென்று சத்யா போய் கௌசிக்கின் அருகில் உட்காரவும், மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டு, அவனைக் கண்களால் சீண்டியவாறே சக்திக்கு அருகில் வந்து உட்கார்ந்தான் சந்தோஷ்.


'நீ இப்படி இருந்தா உனக்கு எந்த பொண்ணும் செட்டே ஆகாது மாமோய்!' என்ற செய்தி அதில் அப்பட்டமாக அடங்கியிருக்க,'மகனே, உதை வாங்கப்போற' என்பதாக அவனை பட்டும் படாமல் முறைத்து வைத்தான் சத்யா.


கூடவே எழுந்துபோய் அவர்களைத் தடுக்கக்கூடத் தோன்றாமல், பயத்தில் சிலையாகவே ஆகிவிட்டதுபோல அசைவின்றி அமர்ந்திருந்தாள் ஹாசினி, அங்கே பரவியிருந்த ஏசியின் குளிரிலும் வியர்த்து வழிய.


'ம்கூம்' எனத் தொண்டையை செருமி, "எப்படி இருக்கீங்க அத்தான்" என ஒரு இயல்பான உரிமையுடன் சந்தோஷ் விசாரிக்க, என்னதான் கோபம் இருந்தாலும் சத்யாவிடம் செய்வதுபோல் அந்த சிறியவனிடம் முகந்திருப்ப இயலாமல் போனது கௌசிக்குக்கு.


"நல்லா இருக்கேன்ப்பா, உன் ஸ்டடீஸ் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு"


"பைஃன் அத்தான்"


இப்படியாக அவர்கள் பேச்சு தொடர, "இவங்கதான் மிஸ்.சக்தி, லாயர்- இவர் எங்க அக்கா சன் சந்தோஷ்" என இருவரையும் பரஸ்பரம் அறிமுகம் செய்துவைத்தான் சத்யா.


"ஹாய்" என புன்னகைத்த சக்தியின் முகத்தை 'ஹலோ" என்றவாறே பார்த்தவன், 'அட, இவங்கள இதுக்கு முன்னால எங்கயோ பார்த்திருக்கோமே! அதுவும் நம்ம மாமா கூடவே! இவங்க ஃபுல் நேம் கூட மாமா பேர் மாதிரியே வருமே!' என அவன் தீவிரமாக யோசிக்கத் தொடங்கிவிட, 'அடப்பாவிங்க மாமா... இவங்களை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? அதான் அப்படி லுக்கு விட்டீங்களா?' என்பதாக அவனுடைய எண்ணப்போக்கு இருக்க, அது அப்படியே அவனுடைய முகத்தில் எழுதி ஒட்டாத குறையாகத் தெரியவும், அவனுடைய சிந்தனை செல்லும் தடத்தை ஊகித்தவனாக, கௌசிக் முன்பாக அவன் எதையாவது உளறி வைக்கக்கூடாதே என்கிற அவசரத்தில், “ஆமா நீ ஏன் என் பின்னாலயே வால் படிச்சிட்டு வந்த? உங்க அக்கா தனியா உட்கார்ந்து இருக்கா இல்ல, போ... போய் அவளுக்கு கம்பனி குடு" என அவனை அதட்ட,


"ஆவ்... மாமா, ஒரு மேஜரான பையன, அதுவும் ஒரு வருங்கால பிசினஸ் மேகனட்ட ஓவரா மிரட்டறீங்க, இது நல்லதுக்கில்ல... ம்கும்" என அவனைப் போலியாக முறைத்துக்கொண்டே தமக்கையின் அருகில் போய் உட்கார்ந்தவன் அவளிடம் எதையோ பேசத்தொடங்கிவிட்டான்.


முதலில் ஒரு வேகத்தில் மிஸ் சக்தி என்று சொல்லிவிட்டு ஒரு நொடிக்குள் உணர்ந்து மூண்ட சிரிப்பை அடக்கி, மற்றவர் அறியாமல் அவளைப் பார்த்து கண்களால் சிரித்தது, மருமகனிடம் போலியாகக் கோபத்தைக் காண்பித்தது, அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவனைப் புரிந்துகொண்டவனாக ஒரு வார்த்தை கூட மறுத்துப் பேசாமல் ஒரு இயல்பான கிண்டலுடன் சந்தோஷ் அங்கிருந்து அகன்ற விதம் என வந்த நோக்கமே மறந்துபோய் உதட்டில் உறைந்த புன்னகையுடன் அவனை ரசிக்கவே தொடங்கிவிட்டாள் சக்தி


அவள் உணர்ந்த அந்த சிறு விஷயம் கௌசிக்குக்குப் புரியாமல் போக, "உங்களுக்கு நார்மலாவே பேச வராதா? எல்லாரையும் இப்படி மிரட்டிட்டே இருப்பீங்களா நீங்க?" எனக் கடுப்புடன் கேட்டான் அவன்.


சத்யா அதற்கு பதில் சொல்வதற்குள், "என்ன மிஸ்டர் கௌசிக், இவர் சும்மாதான சந்தோஷை மிரட்டினார், அவரே அதை புரிஞ்சிட்டு ஜஸ்ட் லைக் தட் கலாய்ச்சிட்டு போறாரு. நீங்க ஏன் டென்ஷன் ஆகறீங்க? இவ்வளவு சென்சிட்டிவான விஷயம் பேசும்போது அவர் நடுவுல இருக்கணுமான்னு நானே நினைச்சேன்" என சக்தி முந்திக்கொள்ளவும் கப்பென்று வாயை மூடிக்கொண்டான் கௌசிக்.


"சரி அதை விடுங்க, இப்ப உங்க பிரச்சனைக்கு வருவோம்” என நேரடியாக விஷயத்திற்கு வந்தவன், “கத்தரிக்காய் முத்தி கடைத்தெருவுக்கும் வந்தாச்சு. இனிமேல் மூடி மறைச்சு பேசி பிரயோஜனம் இல்ல. என்ன நடந்ததுன்னு நீங்க கொஞ்சம் ஓப்பனா சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். ப்ளீஸ் கௌசிக்" என சத்யா தீவிரமாகச் சொல்ல,


"ஏன், உங்க குட்டியம்மா எதையும் சொல்லலியா" என அவன் குதர்க்கமாகக் கேட்கவே, "அவ சொல்றது இருக்கட்டும், உங்க பாயிண்ட் ஆஃப் வியூல இருந்து நீங்களே கொஞ்சம் சொல்லுங்க" என்றான் சத்யா விட்டுக்கொடுக்காமல்.


சத்யா போன வேகத்தில், ஹாசினி ஒரு பீதியுடன் அவர்களையே பார்த்திருக்க, அவன் சந்தோஷை வேறு அதட்ட, அவனும் உடனே இவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்துவிட, "அக்கா, உன்னோட வீட்டுக்கார மாமா இன்னைக்கு ஒரு கை பார்க்காம விடமாட்டார்னு நினைக்கறேன்" என தன் பங்கிற்கு அவன் வேறு அவளை மேலும் பயமுறுத்த, அதற்கேற்றாற்போல இருவரும் அக்னிநட்சத்திரம் பிரபு கார்த்திக் போல் முறைத்துக்கொண்டிருக்க, பதறி அடித்து அவர்களை நோக்கி வந்தாள் ஹாசினி.


அவளுடன் கிளம்பிய சந்தோஷை சக்தி கை காண்பித்து நிறுத்தியிருக்க, உண்டான படபடப்பில் தொய்ந்துபோய் சத்யாவுக்கு அருகில் தொப்பென உட்கார்ந்தாள் ஹாசினி.


நேருக்கு நேர் அவளைப் பார்க்கவும், அதுவரை ஒரு விரைப்புடன் முறுக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தவன் பட்டென்று தளர்ந்துபோனான் கௌசிக் தான் சொல்லவந்த விஷயத்தையே மறந்து. கோபம், அவமானம் இயலாமை என எல்லாம் கலந்து முகம் கருத்து போக, அவனுடைய கண்கள் கூட லேசாக கலங்கியதோ?


அவனுடைய பார்வை அவளிடமே இருக்கவும், "அவ கிடக்கறா, அவள ஏன் பார்க்கறீங்க, நல்லதோ கெட்டதோ இன்னைக்கே பேசி ஒரு முடிவுக்கு வந்துடுவோம், நீங்க சொல்லுங்க கௌசிக்" என சத்யா விடாப்பிடியாகச் சொல்ல,


"என்ன சொல்லணும், தெரியாமத்தான் கேக்கறேன் சொல்லுங்க, நான் என்ன சொல்லணும்? கல்யாணத்துக்கு மூணு வருஷம் டைம் கேட்டேன் இல்ல, நீங்கதான என்னை கார்னர் பண்ணி இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சீங்க, இப்ப வந்து என்னைக் கேள்வி கேட்கறீங்க, ஒரு கல்யாணம் ஆன பெண்ணுக்கான ரெஸ்பான்சிபிலிட்டியோட கொஞ்சமாவது நடந்துட்டாளான்னு உங்க பொண்ணை கேளுங்க முதல்ல?" என வெடித்தான் அவன்.


அதுவரை மாமாவிடம் இருக்கும் பயத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்தவள் கௌசிக் நேரடியாக அவளைக் குற்றம் சாட்டவும், "தப்பு பண்ணிட்டேன் மாமா, சுய புத்தியே இல்லாம நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். இவன் கொஞ்சம் கூட நான் நினைச்ச மாதிரி நடந்துக்கல. இப்ப என்ன மட்டும் குறைசொல்ல வந்துட்டான்" என்று அவள் வெகுண்டெழ,


கன்னத்தில் கையை முட்டுக்கொடுத்து 'ஐயோ' என்பதுபோல் சக்தி இதையெல்லாம் பார்த்திருக்க, "பல்லை தட்டிடுவேன் ராஸ்கல், எவ்வளவு தைரியம் இருந்தா என்னை வெச்சுட்டே மாப்பிளையை இப்படி அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசுவ? அதுவும் புதுசா ஒருத்தங்க முன்னால" என சத்யா சீறவும், கொஞ்சம் பம்மியவள், "கல்யாணத்து அப்பறம்தான் இவரோட நிஜமான முகமே எனக்கு தெரிஞ்சுது, முன்ன மாதிரி இல்ல, இப்பல்லாம் இவர் ரொம்பவே மாறிப்போயிட்டார் மாமா" என்றாள் அவள் உள்ளே போன குரலில், கண்களில் கண்ணீர் அணைகட்ட.


விழி விரித்து இப்பொழுது சத்யாவைதான் பார்த்திருந்தாள் சக்தி. தங்கள் வீட்டுப் பெண் என்பதால் அவளைப் பேசவிட்டு அவன் வேடிக்கை பார்க்கவில்லையே! உண்மையில் இருவருக்கும் பாலமாக இருக்கவே அவன் முற்படுகிறான் என்பது புரிய அவளுடைய பார்வையில் ஒரு மெச்சுதல் வந்திருந்தது.


"என்னவாம், இப்ப என்ன மாறிப்போயிட்டாங்களாம்? என் கிட்ட புதுசா அப்படி என்ன கண்டுபிடிச்சாங்களாம் மேடம்?" என கௌசிக் கூர்மையாகக் கேட்க, "ஆங், நீ..ங்க சரியான அம்மா பிள்ளைன்னு" என்றாள் அவள் கொஞ்சம் கூட யோசிக்காமல்.


"ஏன், அம்மா பிள்ளையா இருக்கறதுல என்ன தப்பு. நாளைக்கு உனக்கே ஒரு பிள்ளை பிறந்தா அது அம்மா பிள்ளையா இருந்தா வேண்டாம்னு சொல்லிடுவியா?" என நக்கலாகக் கேட்டவன், "முதல்ல கூட இப்படி இல்லைங்க, ஆனா நீங்க எனக்கு நெருக்கடி கொடுத்ததால அவங்களை எமோஷனல் ப்ளாக் மெயில் பண்ணி ஒரு இன்செக்யூர்ட் நிலைமையில கொண்டுவந்துதான் இந்த கல்யாணத்துக்கே சம்மதிக்க வெச்சேன். அதை அவங்க சொல்லிக் காமிக்காத நாளே இல்ல.


இன்னைக்கு சூழ்நிலையில நான் அவங்கள அட்ஜஸ்ட் பண்ணி விட்டுக்கொடுத்து போகலன்னா குடும்பம் உடைஞ்சு போயிடும். எனக்கு அவங்க முக்கியம் இல்லையா? நீங்க மட்டும் மூணு வருஷம் டைம் கொடுத்திருந்தீங்கன்னா பூஜா கல்யாணத்தை முடிச்சிருப்பேன். அவங்களும் செக்யூர்டா ஃபீல் பண்ணியிருப்பாங்க. இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது" என கௌசிக் தன் நிலையை விளக்க முற்பட, சத்யாவுக்கே ஒரு மாதிரி ஆகிப்போனது. 'அவனுடைய இடத்திலிருந்து, அவன் சொன்னதையும் கொஞ்சம் எண்ணிப்பார்த்திருக்கலாமோ?'


அவன் ஹாசினியின் முகத்தைப் பார்க்க எரிச்சல் மட்டுமே மண்டிக்கிடந்தது அங்கே. அவன் சொன்ன விஷயங்கள் துளியேனும் புரிந்திருக்குமா அவளுக்கு என்று கூட விளங்கவில்லை சத்யாவுக்கு.


"பத்தும் பத்தாததுக்கு, எப்ப பாரு வேலையை விடு, வேலையை விடு, இதேதான் பேச்சு. படிக்கும்போதே எனக்கு வாய்ப்பு கொடுத்த கம்பெனிங்க அது. கார், சொந்த வீடுன்னு இந்த அளவுக்கு ஜீவானந்தம் சார்தான் எனக்கு ஒரு நல்ல வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்தார். அதனால வேற கம்பெனிக்கு மாறணும்ங்கற பேச்சே வரக்கூடாது. அப்படியே அவரை விட்டு வந்தாலும் சொந்த பிஸினஸ்க்குதான் போவேன். அதுக்கும் கூட ஒரு அஞ்சு ஆறு வருஷம் ஆகும்னு கல்யாணத்துக்கு முன்னலயே இவ கிட்ட படிச்சு படிச்சு சொல்லியிருக்கேங்க, இப்ப வந்து எங்க அப்பா கம்பெனில ஜாயின் பண்ணுன்னு சொன்னா, உடனே நான் தலைய ஆட்டணுமா?" எனக்கேட்டான் அவன் நியாயமான கேள்வியாக.


"என்ன ஹாசினி இதெல்லாம்" என சத்யா அவளை முறைக்க, அதைக் கண்டுகொள்ளாதவள் போல, "ஒரு நேரம் காலமா வேலை செஞ்சா நான் ஏன் அப்படி சொல்லப்போறேன். ஒரு நாள் கூட வீட்டுக்கு சீக்கிரம் வந்ததில்ல, வெளியில கூட்டிட்டுபோனதில்ல, சமயத்துல சண்டே கூட வேலைக்கு போறான், ப்ச்... போறார். கேட்டா, வீட்டு லோன், கார் ஈஎம்ஐ, கல்யாண செலவுக்கு வாங்கின பர்சனல் லோன்னு சொல்லி காமிக்கவேண்டியது. இதையே காரணமா சொல்லி இவன்.. ம்கூம்... இவர்தான் எங்கயும் கூட்டிட்டு போறதில்ல, என் ப்ரெண்ட்ஸ் கூட வெளியில போனாலும் இவங்க பரம்பரைக்கே அது பிடிக்கமாட்டேங்குது. பின்ன, வேலையை விடுன்னு சொல்லமாட்டாங்களாமா? இதே அப்பா கம்பெனியா இருந்தா, நினைச்ச நேரத்துக்கு வரலாம் நினைச்ச நேரத்துக்கு போகலாம் இல்ல?" என அர்த்தமில்லாமல் பிதற்றிக்கொண்டே போனாள் அவள்.


'உங்க குட்டிம்மா லூசா என்ன?' எனக் கேட்கும் உந்துதலில் அவன் வாயை திறக்க, "லூசாடி நீ, உங்க அப்பா கம்பனினா வேலை செய்யாம சம்பளம் தந்துடுவாங்களா, நான் செய்யற வேலையை பார்த்ததே இல்லையா நீ? உங்க அப்பா அங்க ஓனர்தான? அவரே ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் வேலை செய்யராரே அது உனக்கு தெரியவே தெரியாதா?" என சத்யா அவளை போட்டுத்தாக்க, 'ஆ' என அவனை பார்த்திருந்தார்கள் மற்ற இருவரும்.


"அய்யய்யோ, இவரையா நாம வில்லன் ரேஞ்சுக்கு கற்பனை செஞ்சிட்டு இருக்கோம்” என கௌசிக்கே நினைத்தான் என்றால் அது மிகையில்லை.


"அதெல்லாம் எனக்கு தெரியாது, பர்ஸ்ட் கண்டிஷன் இவன் அப்பா கம்பெனில ஜாயின் பண்ணனும். அடுத்த கண்டிஷன் என்கூட தனிக் குடித்தனம் வரணும். அந்த வீட்டை வேணா அவங்க அம்மா அப்பாவுக்கே கொடுத்துடட்டும். எனக்கு அதை பத்தியெல்லாம் கவலையே இல்ல. நம்ம கெஸ்ட் ஹவுஸ் இருக்கு இல்ல, நாங்க அங்க இருந்துக்கறோம். இதுக்கு சம்மதிச்சா, இவன் என்னை அடிச்சத கூட மறந்துட்டு, இவன் கூட சேர்ந்து வாழ நான் தயாரா இருக்கேன்" என அவள் கொஞ்சம் அதிகப்படியாகவே பேசிவைக்க,


"நீங்களே பர்துட்டீங்க இல்ல மேடம். இவளுக்கு வயசுக்கு தகுந்த மெச்யூரிட்டியே இல்லன்னு புரியதா?" என சக்தியைப் பார்த்துக் கேட்டவன், "நான் அடிச்சதை பத்தியே சொல்லிட்டு இருக்கியே, ஒரு நிதானம் இல்லாம தள்ளாடிட்டு வந்து, அதுவும் உன் மேல அடிச்ச லிக்கர் ஸ்மெல்லுக்கு நீ குடிக்கவே இல்லன்னு சொன்னா அதை குழந்தை கூட நம்பாது. அதுக்கும் மேல போய் டைவர்ஸ் அது இதுன்னு பேசினது நீதான? அதோட நிறுத்தியிருந்தாலாவது பரவாயில்லையா இருந்திருக்கும். ஆனா எவ்வளவு தைரியம் இருந்திருந்தா அன்னைக்கு அப்படி ஒரு கேவலமான வார்த்தையை நீ என்னைப் பார்த்து சொல்லியிருப்ப! அது நியாயமா சொல்லு? அதைக் கூட மன்னிச்சு, மறந்து உன் கூட வாழ ஒரு சான்ஸ் எடுக்கறேன்னா அது உன்மேல இருக்கற காதலாலதான். அதை கொன்னுடாத" என்று கௌசிக் கண் கலங்கச் சொல்ல, உண்மையில் அன்று அவள் தள்ளாடிக் கொண்டு வந்த சமயம் அறைக்குள் அழைத்துச் சென்று அவளை ஷவருக்கு அடியில் நிறுத்தி போதையை தெளிய வைத்து அவளுக்கு இரவு உடை மாற்றி இத்தனையும் செய்திருந்தான் அவன். கமுக்கமாக அதைப்பற்றியெல்லாம் யாரிடமும் மூச்சுக் கூட விடவில்லை அவள். அதையும் சொல்லித் தொலைக்க போகிறானே என்கிற அவசரத்தில், "நீ ஒண்ணும் என்னை மன்னிக்க வேண்டாம், அன்னைக்கு நான் சொன்னதை நம்பினியா நீ? அது சரின்னா, நான் சொன்னதும் சரிதான்” என்று அவள் படபடவென்று பொரிய 'அந்த வார்த்தையை வெளிப்படையாகச் சொல்லக் கூட இவன் தயங்கும் அளவுக்கு அப்படி என்ன சொல்லித்தொலைத்தாள் இவள்?' என்ற கேள்வி எழப் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது சத்யாவுக்கு.


இது போல பல விசித்திர வழக்குகளை தினம் தினம் சந்திப்பதால் அவள் என்ன சொல்லியிருப்பாள் என சக்திக்கு புரிந்துவிட்டதால், கௌசிக்கை பரிதாபமாகப் பார்த்தவள், சத்யாவின் புறம் திரும்பி அவனை நன்றாக முறைத்துவைத்தாள். ஹாசினியை பார்க்கக்கூட பிடிக்கவில்லை அவளுக்கு.


"இது வேலைக்கே ஆகாது மேடம், இவங்க கூட கலந்து பேசி, நீங்க மியூச்சுவல் டிவேர்ஸ்க்கு பேபேர்ஸ் ரெடி பண்ணிடுங்க" என்று ஒரு வலியுடன் சொல்லிவிட்டு, "நான் பில் பே பண்ணிட்டு போறேன். நீங்க இருந்து சாப்பிட்டு முடிச்சிட்டு நிதானமா கிளம்புங்க. ரியலி சாரி" என்று கௌசிக் அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, "வெயிட், வெயிட், நானும் உங்க கூடவே வரேன். கார்ல வந்திருந்தீங்கன்னா என்னை பஸ் ஸ்டாண்ட்ல ட்ராப் பண்ணிடுங்க" என்றவள், "அப்பறமா எனக்கு கால் பண்ணுங்க. என்ன பண்ணலாம்னு சொல்றேன்" என சத்யாவிடம் சொல்லிவிட்டு அவனுடன் சென்றாள் சக்தி. அதற்கு மேல் அவனால் அங்கே இருக்கவே முடியவில்லை அதனால்தான் இப்படி பாதியிலேயே கிளம்பிவிட்டான் கௌசிக் என்பது நன்றாகவே புரிய வேதனையாக இருந்தது சத்யாவுக்கு.


"ஏன் ஹாசினி இப்படி இருக்க நீ, உன் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து உன்னை நல்லா குழப்பி விட்டிருக்காங்க, அதை கேட்டுட்டுதான் நீ இப்படி வியர்டா பிஹேவ் பண்றன்னு நினைக்கறேன். கௌசிக் ரொம்ப தெளிவா ப்ராக்டிகலாதான் இருக்கான், அவனை கொஞ்சமாவது புரிஞ்சிக்க ட்ரை பண்ணு" என ஒருவித சலிப்புடன் சிறு குழந்தையிடம் சொல்வதுபோல் அவன் நிதானமாகவே சொல்ல,


"உங்களுக்கு என்ன தெரியும் என் ப்ரெண்ட்ஸ் பத்தி. இவன்தான் சரியான ஈகோ பிடிச்சவன், எனக்காக கொஞ்சம் கூட அட்ஜஸ்ட் பண்ணமாட்டான்" என வெடுக்கென்று சொல்லவிட்டு அங்கிருந்து வேகமாக வெளிறினாள் ஹாசினி, பரிதாபமாக தனியே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சந்தோஷை பற்றிய நினைவு கூட இல்லாமல்.


துளி அளவு முன்னேற்றம் கூட இல்லாமல் ஒரே இடத்தில் நிற்பதுபோல் ஒரு ஆயாசத்துடன் தலையை பிடித்துக்கொண்டான் சத்யா.


'டிங்' என்ற சத்தத்துடன் அவனுடைய கைப்பேசியில் குறுந்தகவல் ஒன்று வந்து விழ, அனிச்சையாக அவன் அதை எடுத்துப்பார்க்கவும், 'ரொம்பல்லாம் கவலை படாதீங்க மிஸ்...ட்டர் சத்யா, உங்க பெண்ணுக்கு சின்னதா ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் குடுத்தா போதும், பிரச்சனை தானா சால்வ் ஆகிடும், சில்' என சக்திதான் அதை அனுப்பியிருந்தாள்.


அவனுடைய வருத்தம் அவளுக்குப் புரிந்திருக்குமோ? அது அவளை பாதித்தும் இருக்குமோ? அவனுக்கு ஆறுதல் சொல்லத்தான் விழைகிறாளோ அவள்? அம்மா அக்காவுக்கு அடுத்ததாக அவனுக்காக யோசிக்கும் ஒருத்தியா?!


அனைத்து சங்கடங்களையும் கடந்த ஒரு புன்னகை அரும்பியது சத்யாவின் முகத்தில்.

0 comments

Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação
© KPN NOVELS COPY PROTECT
bottom of page