top of page

Poove Unn Punnagayil - 22

அத்தியாயம் - 22


நான் படிக்கும் மோகனமே


நான் படைச்ச சீதனமே


தேன் வடிச்ச பாத்திரமே


தென்மதுர பூச்சரமே


கண்டது என்னாச்சு


கண்ணீரில் நின்னாச்சு


முந்தைய இரவின் தாக்கம் இன்னும் மீதம் இருக்க, ஹெட் போனை காதில் மாட்டி கண்ணோரம் ஈரம் கசிய இளையராஜாவின் இசையில் ஆறுதல் தேடிக்கொண்டிருந்தான் சத்யா.


கதவைத் தட்டும் சத்தம் கேட்கவும், 'ஆங்' என்றவாறு அவன் பாட்டை நிறுத்த, "குட் மார்னிங் மாம்ஸ்... வர சொல்லி மெசேஜ் போட்டிருந்தீங்க?" என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தான் சந்தோஷ்.


"இன்னைக்கு நீ ப்ரீயா?"


"சண்டேதான மாம்ஸ்... கொஞ்சம் அசைன்மென்ட்ஸ் எழுதணும், மத்தபடி முக்கியமான வேலை எதுவும் இல்ல"


"நல்லதா போச்சு... நான் சொல்றத கவனமா கேளு" என்றவன், சின்னவனின் பார்வை கூர்மை பெறவும், "எதையாவது சொல்லி, உன் உடன்பிறப்பை ஒரு லவன் தர்ட்டி டுவெல்க்கு வண்டலூர் ஜூ தாண்டி ஒரு ஸ்டார் ஹோட்டல் இருக்கு இல்ல, அங்க கூட்டிட்டு வா, எதேச்சையா அந்த பக்கம் வந்த மாதிரி நானும் வந்து ஜாயின் பண்ணிக்கறேன்" என சத்யா சொல்ல, "ஏன் மாமா, அத்தான் அங்க வரங்களா?" என விஷயத்தை அப்பட்டமாக கணித்தான் சந்தோஷ்.


ஒரு நொடி அதிர்ந்தாலும், இவன் அளவுக்கு ஹாசினிக்கு சூட்சமம் போதாது என்பதால் ஆசுவாசம் அடைந்தவன், "நீ புத்திசாலிதான் போ" எனக் கிண்டலாக என்றாலும் மருகனை மெச்சிக்கொண்டு, "அவகிட்ட எதையாவது உளறி வைக்காத, அங்க போன பிறகு தெரிஞ்சா கூட பிரச்சனை இல்ல" என்று சொல்லிவிட்டு, "இப்ப வேலை ஏதாவது இருந்தா போய் பாரு போ" என அவனை அங்கிருந்து அனுப்பினான் சத்யா. கை பாட்டிற்கு கைப்பேசியை இயக்க,


நீரு நிலம் நாலு பக்கம்


நான் திரும்பி பாத்தாலும்


அந்தப்பக்கம் இந்தப்பக்கம்


அத்தனையும் நீயாகும்நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற


நாடியிலே சூடேத்தி நீதான் வாட்டுறஆலையிட்ட செங்கரும்பா


ஆட்டுகிற எம் மனச


யாரவிட்டு தூதுசொல்லி


நான் அறிவேன் உம் மனசஉள்ளமும் புண்ணாச்சு


காரணம் பெண்ணாச்சுகாத்திருந்து காத்திருந்து


காலங்கள் போகுதடி


பூத்திருந்து பூத்திருந்து


பூவிழி நோகுதடி


நேத்துவரை சேர்த்துவச்ச


ஆசைகள் வேகுதடி


நீ இருந்து நான் அணைச்சா


நிம்மதி ஆகுமடி...எனப் பாதியில் நின்ற பாடல் தொடரவும், அந்த வரிகள் வாஸ்தவமாக தேனுவை நினைவுபடுத்தி அவனுடைய மனதைக் குத்தி கிழித்திருக்க வேண்டும், ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஒரு போலி கோபத்துடன் அவனை முறைத்துக்கொண்டு அவன் முன் தோன்றினாள் சக்தி, சுழித்த உதட்டுக்குள் மறைத்த புன்னகையுடன்.


அவனையும் அறியாமல் மனதிற்குள் ஒரு இதம் பரவ, 'அடங்குடா... ஏற்கனவே ரெண்டு தடவ பட்ட சூடு பத்தாதா? அறிவே இல்லையா சத்யா உனக்கு? நல்ல வேள, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் மாதிரி அந்த நடுவால வந்து காணாம போனவளோட முகம் கூட நினைவுல இல்ல, இல்லன்னா அந்த தொயரத்த வேற தூக்கி சுமந்திருக்கணும் நீ' எனத் தன்னை தானே திட்டிக்கொண்டவன், ‘இந்த இளையராஜாவை சொல்லணும், எல்லாருக்கும் காதல் பைத்தியம் முத்தி போனதுக்கு அவர்தான் முக்கியமான காரணம்’ என மனதிற்குள் அவருடன் செல்ல சண்டையே போட ஆரம்பித்தான் சத்யா.


இடையில் புகுந்து அந்த சண்டையை விலக்கிவிடுவதைப் போன்று கைப்பேசி, குறுந்தகவல் வந்ததற்கான ஒலியை எழுப்ப, அவசரமாக அவன் அதை எடுத்துப் பார்க்கவும், 'இன்னைக்கு ஓகே..வா? எங்கன்னு சொல்லுங்க கௌசிக்கை வரச்சொல்லிடறேன்" என முந்தைய இரவு அவன் கேட்ட கேள்விக்கு பதிலையும் கேள்வியாகவே அனுப்பியிருந்தாள் சக்தி 'சாரி, உங்க மெசேஜை இப்பதான் பார்த்தேன்' என்பதைப் பின்தொடர்ந்து.


இன்று இப்படி ஒரு சந்திப்பு முடிவாகிறதோ இல்லையோ, வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் ஹாசினியை கொஞ்சம் வெளியில் இழுக்கலாம் என்கிற எண்ணத்தில்தான் அவன் சந்தோஷை அழைத்துச் சொன்னது.


அதற்கேற்றார்போல் இவளும் இப்படிக் கேட்க, கொஞ்சமும் தாமதிக்காமல், 'டபுள் ஓகே வக்கீலம்மா' என பதில் அனுப்பினான் அவன், நேரம் இடம் என அனைத்தையும் கூடவே குறிப்பிட்டு. தக்காளி போல் சிவந்த முகமொன்று டப்பென வந்துவிழ, 'ஓகே பை' என்ற வாசகத்துடன் வடிவேலு ஸ்டிக்கர் ஒன்றை அனுப்பிவிட்டு,


ஆலையிட்ட செங்கரும்பா


ஆட்டுகிற எம் மனச!


யாரவிட்டு தூதுசொல்லி


நான் அறிவேன் உம் மனச?


என முணுமுணுத்தவனின் முகம் அப்படியே புன்னகையைப் பூசிக்கொண்டது.


எதிர் முனையில் அதைப் பார்த்தவளின் முகத்திலும் இதேபோன்றதொரு புன்னகை அரும்பியிருக்குமோ?


***


சத்யா குறிப்பிட்ட அந்த நட்சத்திர விடுதியின் உணவகத்திற்குள் நுழைந்தனர் ஹாசினியும் சந்தோஷும். அங்கே வேலை செய்பவர் பவ்வியமாக வரவேற்று அவர்களை அமரவைக்க, உணவக பணியாளர்கள் தவிர வேறு ஒருவரும் இல்லாமல் வெறிச்சோடி போயிருந்தது அந்த பகுதியே.


"இங்க பஃபே செம்மயா இருக்கும், அதையே சாப்பிடலாமா இல்ல தனியா ஆர்டர் பண்ணிக்கலாமா?' என சந்தோஷ் கேட்க, "ப்ச்... ஏதோ ஒண்ணு, ரசிச்சு சாப்பிடற அளவுக்கு எனக்கு மூட் இல்ல, நீ கம்பல் பண்ணியேன்னுதான் வந்தேன்" என்றாள் அவள் சுரத்தே இல்லாமல்.


"உன் கிட்ட போய் சஜஷன் கேட்டேன் பாரு, பஃபேவே சொல்லிடறேன்" என்றவன் உணவக மேற்பார்வையாளரை அழைத்து விசாரிக்க, "சாரி சார் இப்பதான் லெவன் தர்டி ஆகுது, பஃபே ரெடி ஆக இன்னும் ஒரு ஹாப் அன் ஹவர் ஆகும். அதுவரைக்கும் வெயிட் பண்றீங்களா இல்ல அலகாட் போறீங்களா?" என பவ்வியமாகக் கேட்க, "பரவாயில்லை வெயிட் பண்றோம்" என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டான் அவன்.


கொஞ்சம் சீக்கிரமே வந்தால் அங்கே அதிக கூட்டம் இருக்காது, நிதானமாகப் பேசிமுடிக்க ஏதுவாக இருக்கும் என்றுதானே இந்த நேரத்தில் அவர்கள் அங்கே சந்திக்கவே ஏற்பாடு செய்திருக்கிறான் சத்யா. அது கூடவா புரியாமல் இருக்கும் சந்தோஷுக்கு.


"ப்ச்... லைட்டா எதையாவது சொல்லியிருக்கலாம் இல்ல, எதுக்கு அவ்வளவு நேரம் வெயிட் பண்ணனும்" என ஹாசினி அவனிடம் எரிந்து விழ, "எதுக்கு நேரா போய் உன் ரூம் குள்ள புகுந்துக்கணுமா? எப்..படி இருந்த நீ இப்படி ஆயிட்ட... போ...க்கா" என அவன் சலித்துக்கொள்ள, அவள் கடுப்புடன் அவனைப் பார்க்கவும், அதற்குள் ஏதோ பழரசம் ஒன்றைக் கொண்டு வந்து வைத்தார் பேரர் ஒருவர்.


அவர் அகன்றதும் அவன் அதை எடுத்துச் சுவைக்க, அவளோ, தன் சிந்தனை மொத்தத்தையும் வேறெங்கோ வைத்துக்கொண்டு ஒரு தீவிரமான முகபாவத்துடன் அதைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருக்கவும், "ப்ச்... செந்தில் பல்லி விழுந்த டீயை பார்த்துட்டு இருக்கற மாதிரி அதை மொறைச்சிட்டு உட்கார்ந்திருக்க, எடுத்து குடிக்கா, நல்ல டேஸ்ட்ல இருக்கு” என்று சொல்லிவிட்டு, “மாமா இந்த ஏரியால தான் சுத்திட்டு இருப்பாங்க, எப்படியும் லஞ்ச் ரெடி ஆக கொஞ்சம் டைம் ஆகும்னு சொன்னாங்க இல்ல? அவங்களையும் நம்ம கூட ஜாயின் பண்ணிக்க சொல்லலாம்” என்றவன் அடுத்து மறுப்பாக அவள் ஏதும் பேச அவகாசமே கொடுக்காமல் கைப்பேசியில் சத்யாவை தொடர்புகொண்டு அவனை அங்கே வரச்சொல்லி அழைப்பு விடுக்கவும், உடனே அவனும் வருவதாகச் சொல்லிவிட, இது முன்பே திட்டமிட்டது என்பதை அறியாமல், "ப்ச், இப்ப எதுக்குடா அவங்கள இங்க வரச்சொன்ன? இந்த மாமாவுக்கு என்ன பார்த்தாலே போதும், உடனே அட்வைஸ் பண்ணியே கொல்ல ஆரம்பிச்சுடுவாங்க" என்று சிடுசிடுத்தாள் ஹாசினி.


மாமா ஏன் தானே அவளை இங்கே அழைத்து வராமல் அவன் மூலம் இதையெல்லாம் செய்கிறார் என்கிற காரணம் புரிந்தது சந்தோஷுக்கு.


உணவின் சூடு குறையாமல் இருக்க மெல்லிய கீற்றாய் எரியும் அடுப்புடன் இணைந்திருந்த கொள்கலன்களில் உணவுப்பொருட்களை ஒவ்வொன்றாக நிரப்பத் தொடங்கியிருந்தனர் அந்த உணவக பணியாளர்கள்.


அதை வேடிக்கை பார்த்துக் கொண்டே அவர்கள் உட்கார்ந்திருக்க சத்யாவும் வந்து சேர்ந்தான், “என்னடா திடீர்னு லஞ்சுக்கு வந்திருக்கீங்க?!” என வியப்புடன் கேட்பதுபோல் பாவலா செய்துகொண்டே.


‘உலக நடிப்புடா சாமி!’ என்பதாக மாமனை கண்களாலேயே சந்தோஷ் எரிக்க, இருந்த இடத்தை விட்டு அசைய மாட்டேன் என்பதாக உட்கார்ந்திருந்தாள் ஹாசினி. இருவருமாகப் போய் சூப்புடன் சேர்த்து சில ஸ்டார்டர்களையும் எடுத்து வந்தார்கள் அவளுக்கும் சேர்த்து.


நிதானமாக அவர்கள் அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்க, திருத்தமாக உடுத்திய பருத்தி புடவையும் எளிமையாகத் தூக்கிக் கட்டிய தலைமுடியும் கண்களைக் கொஞ்சமும் உறுத்தாத மிக மெல்லிய ஒப்பனையுமாக நடையில் ஒரு கம்பீரத்துடன் அங்கே நுழைந்தாள் சக்தி.


அவர்களிருவரும் அங்கே வருவதை அறிந்துகொள்ள வசதியாக அந்த உணவகத்தில் நுழைவாயிலைப் பார்த்தபடி போடப்பட்டிருந்த இருக்கையில் சத்யா உட்கார்ந்திருக்க, அவனுக்கு எதிர் இருக்கையில் உட்கார்ந்திருந்தான் சந்தோஷ், பக்கவாட்டில் ஹாசினி.


அவளைக் கண்களில் கண்ட மாத்திரம் மயங்கி கிறங்கி மனதிற்குள்ளேயே அவன் விட்ட ஜொள்ளை முகத்தில் காண்பிக்காமல் இருக்க அவன் வெகுவாக போராடிக்கொண்டிருக்க, அதையும் மீறி அது முகத்தில் வெளிப்பட்டுவிட, அதனை நன்றாக உள்வாங்கிக்கொண்டான் சந்தோஷ்.


மாமனின் பார்வையை அவன் பின்தொடர, அது சக்தியிடம் நிலைத்திருக்க, அவளுடைய பார்வையும் சத்யாவின்மேல் இருக்க, அவளை முன்பே ஒரு முறை பார்த்ததெல்லாம் அவன் நிலையிலேயே இல்லாமல் போயிருக்க, 'என்னடா நடக்குது இங்க, இந்த மாம்ஸ் நம்ம அக்காவை அவளோட பார்ட்னரோட சேர்த்துவைக்க இந்த ஏற்பாட்டை பண்ணாருன்னு பார்த்தா, இங்கயே அவர் நமக்கு ஒரு மாமியை இன்ஸ்டன்ட்டா கரக்ட் பண்ணிடுவார் போலவே!' என்பதாக வியப்புடன் அவன் சத்யாவைப் பார்த்துவைக்க, அதெல்லாம் சத்யாவின் கருத்திலேயே பதியவில்லை.


"ம்கூம்..." என அவன் செருமவும் மருகனுடைய முகத்தில் கொப்பளித்த குரும்பை பார்த்து அந்த மாநிறத்தவனுடைய முகமே கூட சிவந்துதான் போனது.


அதற்குள் அவர்களுக்கு அடுத்ததாகப் போடப்பட்டிருந்த மேசையை ஒட்டிய இருக்கையில் போய் உட்கார்ந்திருந்தாள் சக்தி.


தட்டிலிருந்த எதையோ மண்ணோ கல்லோ என்பதுபோல் ஸ்பூனால் துழாவிக்கொண்டிருந்தவளின் பார்வையில் இதெல்லாம் பதியவேயில்லை.


தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களைக் கூர்ந்து உணரும் திறன் இருந்திருந்தால்தான் இந்த ஹாசினி தன் வாழ்க்கையில் இப்படிப்பட்ட சிக்கல்களை இழுத்துவிட்டிருக்க மாட்டாளே.


சக்தி வந்ததைத்தான் கவனிக்கவில்லை என்றால் இவளையும் சத்யாவையும் கண்களாலேயே எரித்தபடி அந்த உணவகத்திற்குள் நுழைந்து சக்திக்கு எதிரில் போய் கௌசிக் உட்கார்ந்ததை கூட கவனிக்கவில்லை அவள்.


"ஐயையோ, என்ன மாமா, இந்த அத்தான் உங்க ஆளுகிட்ட போய் உட்கார்ந்துட்டாங்க?” என சந்தோஷ் தன்னை மறந்து சொல்லவும்தான் படக்கென்று விழிகளைச் சுழற்றி பார்த்தாள் ஹாசினி.


கணவனை கண்டதும் வியப்பு, ஏக்கம், ஏமாற்றம், கோபம் எனக் கலவையான பாவங்களை சில நொடிகளுக்குள்ளாகவே அவளுடைய முகம் காண்பிக்க, சந்தோஷின் 'உங்க ஆள்' எனச் சொன்ன வார்த்தையில் பேருவகை உண்டானாலும் அதை காண்பித்துக்கொள்ளாமல், "உன் பொத்தான் எதுக்குடா இப்ப இங்க வந்திருக்காங்க?" என சத்யா கிண்டலாகவே கேட்க, "யாருக்கு தெரியும், ஏதாவது பிசினஸ் மீட்டா இருக்கும்" என்றான் சந்தோஷ் வேண்டுமென்றே.


அவனிடம் கண்களால் ஜாடை செய்தவாறு, "எதுவா இருந்தா என்ன, வா... 'எவ்வளவு தைரியம் இருந்த எங்க குட்டிம்மா சொன்ன எதையும் நம்பாம அவளை அடிச்சி மண்டைய உடைச்சிருப்ப'ன்னு நாம ரெண்டுபேரும் போய் அவனோட சட்டையை பிடிச்சு கேட்கலாம்" என்றவாறு எழுத்து நின்ற சத்யா, தன் சட்டையின் கையை மடித்துவிட, 'ஒரு கை பார்த்துவிடலாம்' என்பதாக சந்தோஷும் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அவனுடன் செல்ல ஆயத்தமாக, “ஐயோ, வேணாம் மாம்ஸ், பப்ளிக் பிளேஸ்ல அசிங்கமா போயிடும்" எனப் பதறினாள் ஹாசினி.


அதைக் காதிலேயே வாங்காதவர்கள் போல கௌசிக் சக்தி இருவரையும் நோக்கி ஆவே(ஷ)சமாக போனார்கள் மாமன் மருகன் இருவரும்

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page