விருந்தினர் அனைவரும் உள்ளே நுழைய, அவர்களை வரவேற்று அமர வைத்தனர் தாமரை, சத்யா சந்தோஷ் மூவரும்.
பெண்களெல்லாம் ஒன்றாகப் போய் ஒரு பக்கமாக அமர, கருணாவின் அம்மாவும் அப்பாவும் அங்கே வரவும் அந்த இடமே களைகட்டியது.
பின் சீருடையிலிருந்த கேட்டரிங் ஊழியர்கள் சிலர் கையில் தட்டுடன் ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்து, காஃபி, டீ குழந்தைகளுக்கு பிரத்தியேக பானங்கள் எனப் பார்த்துப் பார்த்து உபசரிக்க, சில நிமிடங்கள் அதிலேயே கடந்து போயின.
"அத்தான் இவர்தான் கௌசிக்... இவங்க கௌசிக்கோட அப்பா" என அவர்களை முறையாக கருணாகரனுக்கு அறிமுகம் செய்துவைத்தான் சத்யா.
'வணக்கம்' என்பதுபோல் கௌசிக் கரம் குவிக்க, எழுந்து நின்று அவரது கரத்தைப்பற்றி குலுக்கினார் கௌசிக்கின் அப்பா, "சிவநேசன்" என தன் பெயரை சொல்லிக்கொண்டு.
பின் தூரத்தில் உட்கார்ந்திருந்த தன் மனைவி மற்றும் மகள் இருவரையும் அங்கிருந்தே கருணாகரனிடம் சுட்டிக்காட்டினார் அவர். பார்வைக்கும் சரி, நடந்துகொள்ளும் விதத்திலும் சரி மிகவும் பக்குவமான மனிதர் எனப் புரிந்ததால் அவரிடம் ஒரு மரியாதையை ஏற்பட்டது கருணாகரனுக்கு.
அதுவே, "இவங்கதான் என்னோட அம்மா. அப்பா... ஊர்ல வீடு நிலமெல்லாம் இருக்கு. விவசாயம் பார்த்துட்டு அங்கேயே இருக்காங்க. அப்பப்ப இங்க வந்து கொஞ்ச நாள் இருந்துட்டு போவாங்க" என அவரிடம் முகங்கொடுத்துப் பேசவும் வைத்தது.
"ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. நாங்க எப்பவோ ஊரை விட்டு வந்துட்டோம். ஆனா என்னோட பெரிய அக்கா மாமா இன்னும் ஊர்லதான் இருக்காங்க. அவங்களும் விவசாய குடும்பம்தான். சின்ன அக்கா இங்க வேளச்சேரில இருக்காங்க. மாமாவுக்கு கவர்மெண்ட் வேல. அங்க உட்கார்ந்து இருக்காங்க இல்ல அவங்க பெரிய அக்கா. இவங்க பெரியமாமா... தங்கச்சி... மாப்பிள்ளை"
தொடர்ந்து மைத்துனர்கள் இரண்டு பேர், அவர்களின் பிள்ளைகள் என ஒவ்வொருவராகக் கருணாகரனிடம் முறையாக அறிமுகப்படுத்தினார் அவர்.
எதுவும் கருத்தில் பதியாவிட்டாலும் ஒரு செயற்கை புன்னகையுடன் கருணாகரன் அவர்களிடம் ஓரிரு வார்த்தைகள் பேச, மகனைப் பார்வையாலேயே எரித்தார் பாபு, 'பார் அவர்கள் பக்க உறவினர்கள் எல்லோரும் வந்திருக்கிறார்கள், நீ உன் உடன் பிறந்தவர்களைக்கூட அழைக்கவில்லை' என்பது போல்.
கொஞ்சமும் சளைக்காமல், 'அதை பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை' என்பதாக ஒரு பதில் பார்வையை அவரிடம் வீசினார் கருணாகரன். முன்னொருகாலத்தில் மகனைப் பற்றிச் சரியான புரிதல் இல்லாமல், ஆணவத்துடன் அவர் செய்த சில அதிகப்படியான செயல்களே அவர்க்கு எதிராகத் திரும்புவது புரியவும் வேறு வழி இல்லாமல் பெரியவர்தான் விட்டுக்கொடுத்துப் பின்வாங்கவேண்டியதாக ஆகிப்போனது.
அப்பொழுது, ஒரு மலைப்புடன், "ஆத்தாடி... வீடே கல்யாண மண்டபம் கணக்கா எம்புட்டு பெருசா இருக்கு" என ஒரு மூத்த பெண்மணி சத்தமாகவே வாய் விட்டுச் சொல்ல, அவரது கையை பிடித்து அழுத்தி, "அண்ணி, பொண்ணோட அப்பா கட்டுமான தொழில்ல இருக்கறவராச்சே, இது கூட இல்லன்னா எப்படி?" என, 'இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?' என்பதுபோல் அவரது பேச்சுக்குத் தடை போட்டவர், "இவங்க என்னோட பெரிய நாத்தனார். அதாவது எங்க வீட்காரோட பெரிய அக்கா, இவங்க பேரு சரோஜா" என அவரை தாமரைக்கும் பாட்டிக்கும் பொதுவாக அறிமுகப்படுத்தினார் சங்கரி, கௌசிக்கின் அம்மா. கூடவே தம்பிகளின் மனைவிகளையும்.
உடனே, தொலைவில் உட்கார்ந்து தன் வயதை ஒற்ற ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்த அவர்கள் மகளை கை காண்பித்து அழைத்தவர், அவள் அருகில் வரவும், "இவதான் எங்க பொண்ணு பூஜா" என அவளை அறிமுகம் செய்ய, "வணக்கம் ஆன்டி" என பவ்வியமாக கரம் குவித்தாள் அந்த பெண்." &&& காலேஜ்ல பீ.ஈ-ஈ.சி.ஈ கடைசி வருஷம் படிக்கறா... &&& கம்பெனில கேம்பஸ்ல செலெக்ட் ஆகியிருக்கா. இந்த பேப்பரை சுருட்டி சுருட்டி செய்வாங்களே க்வில்லிங் ஜொல்லரி, அதுல டெர்ரகோட்டாலல்லாம் ஜிமிக்கி இன்னும் என்னென்னவோ செய்வா" எனத் தொடங்கி, இவள் இப்படி, இவள் அப்படி என ஒரு அம்மாவாக அவளைப் பற்றிய அருமை பெருமைகளை அடுக்கிக்கொண்டே போனாரவர்.
பொறுப்பானவளாக தெரியவும் அந்த பெண்ணை தாமரைக்கு மிகவும் பிடித்துப்போனது. "பொண்ணுங்கன்னா இப்படித்தான் ஏதாவது ஒரு ஃபீல்ட்ல திறமையை வளர்த்துக்கணும். ரியலி வெறி குட்" என தாமரை மனதிலிருந்து சொல்ல,
"ம்ம்... இவ கல்யாணத்தை முடிச்சிட்டுதான் பையனுக்கு முடிக்கணும்னு பார்த்தோம். அதுக்குள்ள என்னென்னவோ நடந்துபோச்சு. உங்ககிட்ட இதை சொல்லி என்ன பிரயோஜனம் இருக்கப்போகுது. நீங்களே உங்க தம்பிக்கு கல்யாணம் முடிக்காம பொண்ணுக்கு செய்யறீங்க" என ஒரு கொட்டு வைத்தார் சங்கரி. உடனே பூஜா வேறு ஒரு வித்தியாசமான பாவத்தை காண்பிக்க, ஏற்கனவே தம்பியைப் பற்றி மனதை அழுத்திக்கொண்டிருந்த பாரம் இன்னும் அதிகமாகக் கூடிப்போய் முகம் கருத்து போனது தாமரைக்கு. சட்டெனத் தன்னை சமாளித்துக்கொண்டவர், 'காஃபி சாப்டியாம்மா நீ" என அவளை விசாரிப்பதுபோல் அந்த பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.
பொறுத்துப் பொறுத்து பார்த்த சரோஜா அத்தை, "எங்க கௌசிக்கு வரப்போற பெண்டாட்டியை எங்க கண்ல காமிக்கவே மாட்டீங்களா" என ஆர்வம் தாங்காமல் கேட்டுவைக்க, சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கடுப்புடன் சங்கரி திணறுவது புரிந்தது.
"இதோ கூட்டிட்டு வரேன்மா" எனத் தாமரை அங்கிருந்து அகல, நாத்தனாரிடம் சங்கரி ஏதோ மெல்லிய குரலில் சிடுசிடுப்பது புரிந்தது.
வயிற்றுக்குள் ஒரு பயப்பந்து உருண்டது தாமரைக்கு, மகளின் வருங்கால மாமியாரை எண்ணி.
ஊர் வழக்கத்தில் மிகச்சிறிய வயதிலேயே அவருக்குத் திருமணம் முடிந்து பிள்ளைகளும் சீக்கிரமே பிறந்திருக்கவேண்டும். பார்க்க மிகவும் இளமையாகத் தெரிந்தார். மிக அகலமான கரை வைத்த பட்டுப்புடவை அணிந்து, வீட்டிலிருக்கும் நகைகள் முழுவதையும் அள்ளிப் போட்டுக்கொண்டு வந்திருந்தார் அவர்.
அவர் மட்டுமல்ல அங்கே வந்திருந்த பெண்கள் அனைவருமே அதே பாணியில் இருக்க, வெள்ளைவேட்டியுடன் அணிந்திருந்த வண்ணமயமான சட்டைகளில் அவர்களுக்கு டஃப் கொடுத்தனர் வந்திருந்த ஆண்கள் அனைவரும்.
இதில் கௌசிக், பூஜா இன்னும் இரண்டு மூன்று இளசுகள் மட்டும் விதிவிலக்கு.
கருணாகரன் - தாமரை இருவரின் குடும்பங்களுமே கிராம பின்னணியிலிருந்து வந்திருக்கவே, அவர்களுக்கு எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை. அதனால்தானோ என்னவோ பாபு மற்றும் மோகனாவாலும் கூட அவர்களுடன் இயல்பாக கலந்து பேச முடிந்தது. அவர்கள் உள்ளே நுழையும்பொழுது அவர்களிடம் தெரிந்த இறுக்கமும் கொஞ்சம் தளர்ந்திருந்தது வந்திருந்தவர்களிடம்.
சில நிமிடங்களிலெல்லாம் தாமரை ஹாசினியை அங்கே அழைத்துவர, எல்லோருடைய பார்வையும் அவளை நோக்கித் திரும்பியது.
வந்திருந்த மக்களைப் பார்த்ததும் ஹாசினியின் முகம் பேய் அறைந்ததுபோல் ஆக, உறைந்தே போனாள் அவள். கௌசிக்கை வைத்து, அவனுடைய சொந்தங்கள் என இதைப் போன்ற ஒரு நாட்டுப்புற கூட்டத்தை அவள் எதிர்பார்க்கவில்லை.
தாமரை அவளுடைய தோளில் கை வைத்து அழுத்தவும், ஒரு தயக்கத்துடன் அனைவர்க்கும் பொதுவாக கரம் குவித்து வணக்கம் தெரிவித்தவாறே பார்வையால் அவசர அவசரமாக கௌசிக்கை தேட, சோபாவில் சத்யாவுக்கு அருகில் உட்கார்ந்திருந்தான் அவன். ஆனால் மறந்தும் கூட அவளை நேர்க்கொண்டு பார்க்க முனையவில்லை. மாறாக அவனுடைய அம்மாவிடமே அவனுடைய கவனம் முழுவதும் இருப்பது புரிந்தது.
சட்டென தன் பார்வையைத் தழைத்துக்கொண்டாள் ஹாசினி அடுத்து என்ன செய்யவேண்டும் எனப் புரியாமல்.
அம்மா அதட்டி சொன்னதுக்கு இணங்கி, அவள் உடுத்தியிருந்த பட்டுப்புடவையிலும், மிதமான ஒப்பனையிலும் பாந்தமாக அவள் பொருந்தியிருக்க, அவளை பார்த்து அனைவரது முகத்திலும் ஒரு திருப்தி தெரிந்தது.
"சங்கரி, பொண்ண பாரேன், நம்ம பூஜா மாதிரி நம்ம வீட்டுக்கு தகுந்தாப்போலதான் டிரஸ் பண்ணியிருக்கு. எவ்வளவு அழகா இருக்கு இல்ல. அதான் இவளதான் கட்டுவேன்னு நம்ம கௌசிக் ஒத்த கால்ல நிக்கறான் போலிருக்கு" என வாயெல்லாம் பல்லாக அவனுடைய பெரிய அத்தை சொல்லவும்தான் கௌசிக் அவளைத் திரும்பியே பார்த்தான். அப்படி ஒரு மலர்ச்சி உண்டானது அவனது முகத்தில்.
அழகுநிலையத்திலிருந்தே ஒரு செல்பியை எடுத்து சுடச்சுட அவனுக்கு அனுப்பியிருந்தாள் ஹாசினி. பார்த்ததும் பக்கென்று ஆனது அவனுக்கு. அவன் அழைத்து வரும் கூட்டத்துக்கு அது ஒட்டாதே! குறிப்பாக அவனுடைய அம்மாவுக்கு. முதல் கோணல் முற்றிலும் கோணல் என ஆனால் என்ன செய்வது என்கிற பயம் அவனுக்கு. 'இது வேண்டாம்' என்பதுபோல் பட்டும்படாமல் அதையும் குறுஞ்செய்தியாகவே அவளுக்கு அனுப்பியிருந்தான். ஏதாவது சொல்லப்போய், இந்த நேரத்தில் அது வாக்குவாதத்தில் வந்து நின்றால் என்ன செய்வது என்கிற முன்னெச்சரிக்கையில். அவள் இப்படி வந்து நிற்கவும் 'அம்மாடி' என்கிற ஒரு பெருமூச்சு எழுந்தது அவனிடம்.
அன்று சத்யா அப்படி ஒரு நெருக்கடியை அவனுக்குக் கொடுத்துவிட்டுச் சென்ற பிறகு அம்மாவை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்றே புரியவில்லை, சங்கரியிடம் அப்படி ஒரு பயம் அவனுக்கு.
'இவ்வளவு பயமும் தயக்கமும் இருக்கும் உனக்கெல்லாம் காதல் ஒரு கேடா?' என அவனுடைய மனசாட்சியே அவனைக் காரி உமிழ்ந்தது எனலாம்.
தேவதை மாதிரி ஒரு பெண் அதுவும் தானாக வந்து காதலைச் சொல்லும்போது வேண்டாமென்று மறுத்து விலகுவது ஒன்றும் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை அவனுக்கு. ஹார்மோன்கள் செய்யும் மாயாஜாலம் மறுப்பே சொல்லாமல் உடனே தலை அசைக்க வைத்துவிட்டது அவனை.
நாட்கள் செல்லச்செல்ல அவள்தான் தன் வாழ்க்கையே எனும் அளவுக்கு அவள் மீதான போதை தலைக்கு ஏறிப்போனது என்பதுதான் உண்மை. இந்த மூன்று வருடங்களில் அவளுடன் சிறுசிறு சண்டைகள் ஏற்பட்டாலும் கூட கெஞ்சிக் கொஞ்சி எப்படியாவது ஒரு அளவோடு அதை கட்டுக்குள் கொண்டுவந்துவிடுவான்.
அவனிடம் அவள் காண்பிக்கும் ஆதிக்கம் அளவுகடந்துபோய் எரிச்சல் மூண்டாலும் கூட அப்படியே தன்னை அடக்கிக்கொள்வான் கௌசிக் அதிகம் பேசப்போய் பிரச்சனை பெரியதாகி எங்காவது அவள் தன்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போய்விடுவாளோ என்கிற பயத்தில்.
இப்பொழுதும் மறுத்து எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறான். காரணம் ஹாசினி அவனுக்குக் கட்டாயம் வேண்டும்! ஏதோ நிர்ப்பந்தத்தில் என்றாலும் இந்த கல்யாணம் எனும் முடிவு கூட ஒரு விதத்தில் நிம்மதியையும் ஒரு பாதுகாப்பு உணர்வையும் கொடுத்தது அவனுக்கு.
வெகுவாக தயங்கி எப்படியோ அவனுடைய அப்பாவிடம் தன் காதல் விஷயத்தை போட்டு உடைத்துவிட்டான் கௌசிக்.
அவரும் சற்று அதிகமாகவே மனைவிக்குக் கட்டுப்பட்ட மனிதர்தான் என்றாலும் பிள்ளைகள் என வரும்போது விட்டுக்கொடுக்கமாட்டார். சங்கரியிடம் அவர் சற்று பதமாக விஷயத்தைச் சொல்லப்போக, பூகம்பம் வெடித்தது அங்கே.
'பெரியவங்கன்னு கொஞ்சமும் மரியாதை இல்ல. அதான் தானா தேடிகிட்டான்...
தங்கச்சிய பத்தின நினைப்பு கொஞ்சமாவது இருக்கா இவனுக்கு?
எல்லாம் சம்பாதிக்கிற திமிரு வேற என்ன...
இன்னும் ரெண்டு வருஷத்துல அப்பா ரிட்டையர் ஆகிடுவாங்க, இவங்க பார்க்கற வேலைக்கு பென்ஷனும் கிடையாது, அப்பறம் இவங்க ரெண்டுபேரும் எல்லாத்துக்கும் நம்ம கைலதான வந்து நிக்கனும்னும் எகத்தாளம்.
வீடு வேற இவனோடது இல்ல... இவன் எப்ப வெளியில போன்னு சொன்னாலும் பொம்பளபுள்ளைய வெச்சிட்டு நாம நடுத்தெருவுலதான் நிக்கணும்.
எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு இவனை வளர்த்திருப்போம். இவங்க படிப்புக்கு செலவு பண்ணியே நாம இப்படி ஒண்ணுமில்லாம நிக்கறோம்'
இவ்வாறாக அடிமட்டத்துக்கு இறங்கி ஆடித் தீர்த்தர் சங்கரி, பூஜா வீட்டில் இருப்பதை பற்றி கூட கவலைப்படாமல். 'நான் அப்படி உங்களை விட்டுவிடமாட்டேன்' என அவன் பலவாறாகக் கெஞ்சிப் பார்த்தும் இறங்கி வரவே இல்லை அவர். கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் இதே கச்சேரிதான் தொடர்ந்தது வீட்டில்.
சிவநேசனால் அவரை சமாளிக்கவே இயலவில்லை. அதற்குள் ஹாசினி வேறு திரும்ப திரும்ப 'என்ன ஆச்சு' 'என்ன ஆச்சு' என அவனுக்கு நெருக்கடி கொடுக்கவும், கட்டுப்பாட்டை இழந்தான் அவன்.
"ஆமாம் என் இஷ்டத்துக்கு மதிப்பு கொடுத்து நீங்க இந்த கல்யாணத்தை நடத்தி வெச்சாதான் நீங்க என் கூட இருக்கலாம். இல்ல நீங்க சொல்றதுதான் நடக்கும்" என முதன்முதலாக அவனுடைய அம்மாவின் முன்பாக அவன் குரலை உயர்த்தவும், ஆடிப்போனார் சங்கரி.
முதலில் தந்தையை அதன்பின் கணவரை தொடந்து மகனை என ஆண்களைச் சார்ந்தே தங்கள் வாழ்க்கையை தகவமைத்துக்கொள்ளும் பெண்கள் பலருடைய நிலை இதுதான். ஒன்று அடங்கிப்போகவேண்டும் இல்லை அடக்கி ஆளவேண்டும். கணவரை அடக்கி ஆண்டுகொண்டிருப்பவர் இப்பொழுது மகனிடம் அடங்கிப்போகும் கட்டாயத்துக்கு ஆளானார். வேறு வழி இல்லாமல் அடங்கிப்போனார் சங்கரி, அதுவும் தாற்காலிகமாகத்தான். இப்படி பேசிவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி மகனுக்கு இருக்கிறது என்பதை நன்றாக உணர்த்தவராயிற்றே. இனி அதுவே அவருடைய ஆயுதம்.
சில நிமிடங்கள் இப்படியே கழிய, "தாமரை குட்டிம்மாவ உள்ளே கூட்டிட்டு போ, நாம மேற்கொண்டு பேசலாம்" என மோகனா பேத்தியின் நிலை உணர்ந்து சொல்லவும், விட்டால் போதுமென்று அங்கிருந்து அகன்றாள் அவள்.
"இங்க நாம பேசி முடிவு செய்ய என்ன இருக்கு. அதான் பிள்ளைங்களே எல்லா முடிவையும் எடுத்துட்டாங்களே. இதெல்லம் சும்மா ஒரு சம்பிரதாயத்துக்குத்தான" என சபை நடுவில் அப்படியே போட்டு உடைத்தார் சங்கரி.
'என்ன சொல்கிறாள் இவள்' என மோகனாவுக்கும் பாபுவுக்கும் மின்சாரம் தாக்கியது போல் இருந்தது. அப்படி ஒரு கோபம் கனன்றது இருவருக்கும் மகன் தங்களிடம் இதைப்பற்றி மறைத்ததை எண்ணி. அவர் உடன் பிறந்தவர்களை அழைக்காமல் தவிர்த்ததற்கான காரணமும் பிடிபட, அவர்களுடைய முகம் போன போக்கில், கௌசிக் ஒரு இயலாமையுடன் தந்தையைப் பார்க்க, 'அவ்வளவு தூரம் படித்துப் படித்துச் சொல்லி அழைத்துவந்தேனே. இப்படிச் செய்கிறாயே' என்கிற ஒரு பார்வையை மனைவியை நோக்கி வீசினார் சிவநேசன்.
'நான் என்ன ஆகாததை சொல்லிட்டேன்' என்பதாக அவரை அசராமல் பார்த்துவைத்தவர், "எங்க சனத்துக்கு நடுவுல எங்க பையன் படிச்சிருக்கற படிப்புக்கும் செய்யற வேலைக்கும் அம்பது பவுன் நகை, கட்டில், பீரோ, பைக்குனு செஞ்சு, ரொக்கமா அஞ்சு ரூபாவும் கொடுக்க எங்க சொந்தத்துலேயே ஆளுங்க தயாரா இருக்காங்க. என்னவோ அவன் காதல் கீதல்னு பிடிவாதம் பிடிக்கப்போய் மறுக்க முடியாம ஒத்துக்கிட்டோம்" என அவர் அளந்துவிட அவரை அடக்கும் வழி தெரியாமல் ஓய்ந்தேபோனார் சிவநேசன். நடுவில் ஏதாவது பேசப் போய் மனைவி காளிதேவி அவதாரம் எடுத்துவிட்டால் மகன் வாழ்க்கை பாதிக்கப்படுமே என்கிற கவலை அவருக்கு. ஏற்கனவே அரும்பாடு பட்டு அவரை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கவைத்திருக்கிறான். எனவே அவனுடைய அம்மாவிற்கு எதிராக ஒரு சுண்டுவிரலைக் கூட அசைக்க இயலாது கௌசிக்கால். அதனால் கண்டும் காணாமல் இருக்கவேண்டியதாக ஆகிப்போனது அவனுக்கு.
கீழ்க்கண்ணால் தந்தை மகன் இருவரையும் ஒரு எடைபோடும் பார்வை பார்த்தார் கருணாகரன்.
இங்கே இவர்கள் வீட்டைப் பொறுத்தமட்டில் ஆதிகாலம் தொட்டே பெண்கள் வாய் திறக்கும் வழக்கமே கிடையாது. அப்படியே ஏதாவது சொல்வதென்றாலும் தனியே அழைத்துச் சொல்லுவார்கள். ஆண்களின் குரல் மட்டுமே சபையில் ஒலிக்கும். ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது கருணாகரனுக்கு. 'இதெல்லாம் தேவையா? பேசாமல் வேண்டாம் என்று சொல்லிவிடலாமா?' என்று கூட எண்ணத் தொடங்கிவிட்டார்.
தாமரை அவரை இறைஞ்சுதலுடன் ஒரு பார்வை பார்க்க, "இங்க என்ன மாட்டு வியாபாரமா செய்யறோம். கல்யாணம்தான பேசறோம். நாங்களும்தான் எங்க பொண்ண இஞ்சினியரிங் படிக்க வெச்சிருக்கோம். அவளுக்கு எங்க கம்பெனில ஷேர் கூட இருக்கு. எங்க அந்தஸ்துது தகுந்த இடமா இவளுக்கு எங்களால பார்க்க முடியாதா என்ன? அவ லவ் பண்ணிட்டான்னு, ஒண்ணும் செஞ்சி குடுக்காம எங்க பெண்ணை கட்டின புடவையோட அனுப்பிடுவோம்னு நினைசீங்களா?" எனக் கருணா நறுக்கென்று பதில் சொல்ல, இந்த திடீர் தாக்குதலில் கொஞ்சம் அதிர்ந்தவர், "அது அப்படி சொல்ல வரல" என இழுத்தார் சங்கரி.
பெண் வீடு வசதி என்று தெரியும், ஆனால் இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே வீட்டைப் பார்த்து கொஞ்சம் மிரண்டு போயிருந்தார். யாரும் தங்களைக் குறைத்துச் சொல்லிவிடக்கூடாது என்கிற எண்ணத்தில் தங்கள் பெருமையைப் பறைசாற்றும் ரீதியில் மனதில் குடைந்துகொண்டிருந்தது அப்படியே வாயில் வந்துவிட்டது. கருணா இப்படிப் பேசவும் அதீத பயம் பீடித்துக்கொண்டது அவரை.
"அவளுக்கு யார் கிட்ட எப்படி பேசணும்னே தெரியாது. நீங்க தப்பா நினைக்காதீங்க. உண்மையிலேயே பெண்ணை நேர்ல பார்த்து கல்யாணத்துக்கு நாள் குறிக்க மட்டும்தான் வந்தோம் சம்பந்தி. வேற எந்த பேச்சு வார்த்தையும் வேண்டாம். உங்க பெண்ணுக்கு என்ன செய்யணுமோ அதை நீங்க செஞ்சுக்கோங்க. அதை பத்தி நாங்க சொல்ல ஒண்ணும் இல்ல" என சிவநேசன் தன்மையாகப் பேச, கொஞ்சம் தணிந்தார் கருணாகரன்.
"நீங்க கேக்கலன்னாலும் நானே சொல்லியிருப்பேன். அதுக்குள்ள உங்க வீட்டம்மா" என அத்துடன் நிறுத்திக்கொண்டவர், "ரொக்கம் கொடுக்கவேமாட்டேன். நூறு பவுன் போடறேன். நகையெல்லாம் அவளுக்காக ஏற்கனவே வாங்கி வெச்சுட்டோம். அவளோட தனிப்பட்ட உபயோகத்துக்கு கார் வாங்கி கொடுக்கறேன். மத்த பொருட்களெல்லாம் தாமரையும் அம்மாவும் பேசி முடிவுபண்ணி பிறகு சொல்லுவாங்க" என அவர் தன் கெத்தை காண்பிக்க, மகிழ்ச்சி ஏற்படுவதற்குப் பதிலாக உண்மையிலேயே திகில்தான் உண்டானது சிவநேசன், சங்கரி இருவருக்குமே, தங்கள் மகள் மீதான ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே அவர்கள் அளவுக்கு மீறி இவ்வளவு சீர்வரிசைகள் செய்வதாக தோன்றவும், ஒருவேளை இதனாலேயே மகன் மாமனார் வீட்டுடன் ஐக்கியமாகிப்போய் எதிர்காலத்தில் அவனுடைய ஆதரவு தங்களுக்கு இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது என்கிற பாதுகாப்பின்மையால்.
இத்தனைக்கும், மகளுக்கென்று அவர் வாங்கிப்போட்டிருக்கும் நிலத்தைப் பற்றி இப்பொழுது சொல்லவேண்டாம் என அவர் நிறுத்தியிருந்தார். அதைவேறு சொல்லியிருந்தால் சங்கரி மூர்ச்சையாகியிருப்பாரோ என்னவோ. இந்த திருமணத்தை நிறுத்திவிடலாம் என்ற முடிவுக்கு வந்தாலும் அதை செய்யவா முடியும் அவரால்? மகன்தான் மந்திரித்துவிட்டவன் போல இருக்கிறானே!
அதற்குள் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த புரோகிதர் வந்துசேர, இருவருக்கும் பெயர் ராசி பார்த்து திருமணத்திற்கு நாள் குறித்து தாம்பூலம் மாற்றிக்கொண்டனர்.
அதன்பிறகு தடபுடலாக சாப்பாட்டுப் பந்தி நடந்து முடிய, முறையாகத் தாம்பூலம் கொடுத்து அனைவரையும் வழி அனுப்பி வைத்தனர்.
மேடை ரகசியம்போல, "முறையா பொண்ணுவீட்டுக்காரங்கதான் முதல்ல எங்க வீட்டுக்கு வந்து பேசியிருக்கணும். இங்க எல்லாமே தலை கீழா நடக்குது. நீங்க ஒருநாள் முறையா எங்க வீட்டுக்கு வந்து கை நினைச்சிட்டு போயிடுங்க. இல்லன்னா எங்க சொந்தக்காரங்க மத்தியில எங்களுக்கு தலை குனிவா போயிடும்" என தாமரையிடம் குதர்க்கமாகச் சொல்லிவிட்டே அங்கிருந்து சென்றார் சங்கரி. 'இதெல்லாம் நமக்குத் தேவையா?' என்பதாக அவரை பார்த்துவைத்தார் அருகில் நின்ற மோகனா.
சொந்தபந்தம் அனைவரையும் அழைத்து விமரிசையாக நிச்சயதாம்பூலம் செய்யவில்லை என பாபு மனதிற்குள் குறைபட்டுக்கொண்டிருக்க, அதிக அவகாசம் கொடுக்க விரும்பாமல், ஒரே மாதத்தில் திருமணத்தை முடிவுசெய்திருந்தார் கருணாகரன் விடாப்பிடியாக.
பெற்ற கடனை - தன் கடமையை முடித்துக்கொள்ள வேண்டுமே!
****************
Comments