top of page

Nilavin Desathil Naan - 4

பிறை-4


சிறைச்சாலையிலிருந்து வெளியில் வந்தவன், தயாராக அவனுக்காகக் காத்திருந்த காரின் பின் கதவைத் திறந்து உள்ளே உட்கார்ந்தான் ஆகாஷ்.


வாகனம் வேகமெடுக்கவும், அவனுக்காகவே அதன் உள்ளே காத்திருந்த பூமிகாவை சலிப்புடன் ஒரு பார்வை பார்த்தவிட்டு, தன் முகத்தைத் திருப்பி வெளியில் வேடிக்கை பார்க்கத்தொடங்கிவிட,


"ஆகாஷ்" என அதிகாரமாக அவனை அழைத்தவள், "எந்த ஒரு விஷயத்துக்காகவும் யார் கிட்டயும் கெஞ்சிட்டு இருக்கறது எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு நல்லாவே தெரியும் இல்ல? அனாலும் உனக்கு எக்ஸ்ப்ளனேஷன் கொடுக்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னா அது நம்ம ஃப்ரெண்ட்ஷிப்க்கு மதிப்பு கொடுத்துதான். எந்த ஒரு சூழ்நிலையிலையும் நீ பிரேக் ஆக கூடாதுங்கிற அக்கறை இருக்கவேதான்" என்றவள், "நீ இப்படி முகத்தை தூக்கி வெச்சிருந்தா, சாரி... ஐ காண்ட் ஹெல்ப் யூ" என்றாள் சிறு குற்ற உணர்ச்சியுடன்.


மன உளைச்சல் மேலோங்கி, விழிகளை மூடி இருக்கையில் சாய்ந்தவாறு தன் இயலாமையை வெளிப்படுத்தியவன், "உங்க அண்ணன் என்னடான்னா, கொஞ்சம் கூட யார் என்னங்கற முன் யோசனையே இல்லாம மீடியால கண்ட படி பேசி வெச்சு, என் அப்பாவை இந்த நிலைக்கு ஆளாக்கி வெச்சிருக்கான். நீ வந்து கூலா சமாதானம் பேசரியா? அட்லீஸ்ட் எங்க அம்மாவை பத்தியாவது யோசிச்சானா அவன்" என ஆகாஷ் சீறவும், அவனை முறைத்தவாறு அவனுடைய செவியின் அருகில் குனிந்து, "இடம் பொருள் ஏவல் தெரியாதா உனக்கு?” என மெல்லிய குரலில் அவனை எச்சரித்தவளின் பார்வை வாகனத்தை ஒட்டிக்கொண்டிருந்த ட்ரைவரிடம் சென்றது.


அக்மார்க் கிராமத்தான் என்பது அவனுடைய தோற்றத்திலும் நிறத்திலும் நன்றாகவே தெரிந்தது.


சிறிய ரக கார்களிலெல்லாம் இயல்பாக உட்கார்ந்து ஓட்ட இயலாது எனும்வண்ணம் நன்கு ஓங்கி வளர்ந்திருந்தான்.


அந்தக்காலத்துத் தியாகராஜ பாகவதர் பாணியில் வளர்ந்திருந்த தலைமுடி சீராக வெட்டப்பட்டு கழுத்து வரை நீண்டிருந்தது. முன் உச்சி முடி முகத்தில் விழுந்து புரளாமல் இருக்க, ஆண்கள் அணியும் போ(bow) மூலம் அதை நன்கு படிய வைத்திருந்தான்.


இன்றைய இளைய தலைமுறையின் அடையாளமான ட்ரிம் செய்யப்பட்ட தாடி கூர்மையாக முடிந்திருந்தது. கியரை அழுந்த பற்றியிருந்த முறுக்கேறிய கையில் வெள்ளியால் ஆன காப்பு அணிந்திருந்தான். அவனுடைய முகத்தின் பக்கவாட்டு தோற்றம், அவன் கடமையே கண்ணாயினனாக இருப்பதைச் சொல்லாமல் சொல்லியது.


பின்னால் அமர்ந்திருப்பதால் நல்லவேளையாக அவனுடைய விழிகளை மட்டும் நேருக்கு நேராகப் பார்க்கும் சூழல் ஏற்படவில்லை.


எப்பொழுதுமே அவளுக்கு முன் அவனது பார்வை தழைந்தே இருந்தாலும் கூட நீலம் பூத்த அவனுடைய விழிகள் ஊழிப் பேரலையாக அதனுள் தன்னை சுருட்டி இழுத்துச் செல்வது போல ஏதோ ஒரு விதத்தில் அவளை அச்சப்படுத்தும்.


“இவன் கலையோட ட்ரைவர். ஆல்சோ பாடி கார்ட். லேகு அங்கிள் லீவ்ங்கறதால இவன் வந்திருக்கான். யார் கண்டது, இவன் அண்ணா இல்லன்னா அம்மாவோட ஸ்பையாக்கூட இருக்கலாம். எதையாவது பேசி பிரச்னையை பெருசாக்காத" என அவள் கிசுகிசுக்க அதை ஆமோதிப்பதுபோல் மௌனமாக கைப்பேசியை குடையத்தொடங்கினான் ஆகாஷ்.


சில நிமிடங்களில் கடற்கரைச் சாலையிலிருந்த ஒரு சொகுசு பங்களாவுக்குள் அந்த வாகனம் நுழைந்தது.


"டிரைவர்! இன்னும் ஒரு ஹாஃப் அன் ஹார்ல அண்ணாவை வேந்தன் டிஸ்டில்லரீஸ் பேக்டரில இருந்து பிக் அப் பண்ணணும். நீ உடனே கிளம்பு" எனத் திருவுக்கு உத்தரவு பிறப்பித்தவள் அவனைத் திரும்பியும் பார்க்காமல் அந்த பங்களாவுக்குள் சென்று மறைந்தாள் பூமிகா ஆகாஷுடன்.


அவனையும் அறியாமல், 'மிஸ்டர் திரு!' என மரியாதையுடன் அழைத்துப் பேசும் கலையுடைய மனைவியின் நினைவுதான் வந்தது திருவுக்கு.


வானத்திலிருந்து குதித்ததை போன்று, இதே போன்றதொரு அலட்சிய பாவம்தான் இருக்கும் கலைச்செல்வனிடமும். ஏன் இறந்துபோன தனசேகரும் கூட அப்படிதான்.


இவனிடம் மட்டுமில்லை, வீட்டில் அலுவலகத்தில் என வேலை செய்யும் அனைவருமே ஒரு இரண்டாந்தர குடிமக்கள்தான் என்கிற முதலாளித்துவ மனநிலைதான் இவர்களுக்கெல்லாம்.


இந்துமதி அணுகக் கொஞ்சம் கடினமானவர்தான். ஆனால் இந்த அலட்சிய பாவம் இருக்காது அவரிடம்.


ஜெயராமன் சற்று வேறுமாதிரி. அனைவரிடமும் இயல்பாகக் கலந்து பழகுவர். அதனால்தானோ என்னவோ அவர் மகளும் அதே போன்று இருக்கிறாள்.


அனைத்தையும் நினைத்தபடி பூமிகா குறிப்பிட்ட அந்த தொழிற்சாலையை நோக்கி காரை கிளப்பிக்கொண்டு சென்றான் திரு.


***


வீட்டிற்குள் நுழைந்த பூமிகா ஆகாஷ் இருவரும் அங்கே வரவேற்பறையில் போடப்பட்டிருந்த 'சோபா'வில் போய் உட்கார, அவர்களை நோக்கி ஓடி வந்த அவர்கள் வீட்டின் 'கேர் டேக்கர்' கனகராஜ், "சாப்பிட எதாவது எடுத்துட்டு வர சொல்லட்டுங்களா தம்பி" எனப் பவ்யமாகக் கேட்க, "அம்மா வீட்டுலதான் இருக்காங்களா கனகு" என அவரிடம் வினவினான் ஆகாஷ்.


"ஆமாம் தம்பி, அம்மாதான் இப்பல்லாம் அதிகமா வெளியிலயே போறதில்லயே" எனக் குறைபட்டுக்கொண்டார் அவர்.


பத்து வருடங்களுக்கு மேலாக அவர்களிடம் வேலை செய்பவர். அந்த உரிமையில், உண்மையான அக்கறையில்தான் அவர் சொல்கிறார் என்பது புரிந்தாலும், அதை விரும்பவில்லை ஆகாஷ்.


எனவே கண்டும் காணாதவன் போல பூமிகாவை நோக்கி பார்வையைத் திருப்பியவன், "பூமி, காஃபி சொல்லட்டுமா' எனக் கேட்டான் அவன்.


"ஓகே... பட் நல்ல ஸ்ட்ராங்கா" என்று அவள் பதில் கொடுக்க, "அம்மாவுக்கும் சேர்த்து மூணு காஃபியா சொல்லிடுங்க' என்று கனகராஜிடம் சொல்லிவிட்டு, "அலெக்சா... கால் மாம்" என்று தன் 'டிஜிட்டல்' குரல் உதவியாளரிடம் கட்டளை பிறப்பித்தான் அவன்.


உடனே "காலிங் மாம்" என்று இனிமையான பெண் குரலில் பதில் கொடுத்தவண்ணம் அவனுடைய அம்மாவின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தது அந்த கருவி, 'சொல்லு ஆகாஷ்" என அவரும் அந்த அழைப்பை ஏற்க, "மாம்... கீழ ஹால்லதான் இருக்கோம். உங்களால இங்க வர முடியுமா" என அவன் கேட்கவும், 'இரு வரேன்" என்று அந்த அழைப்பிலிருந்து விலகினார் அவர்.


அதற்குள் கனகராஜ் அங்கிருந்து சென்றிருக்க, அதுவரை அவள் எதிர்பார்த்திருந்த தனிமை கிடைக்கவும், "உனக்குத்தான் கலையைப் பத்தி தெரியும் இல்ல ஆகாஷ். அவனுக்கு எப்பாவுமே சொந்த புத்தியே கிடையாது. அவனை யார் வேணா ஈஸியா ஆபரேட் பண்ணலாம்.


நான் ஊருல இல்லாததை யூஸ் பண்ணிட்டு அவனை இப்படியெல்லாம் பேச வெச்சிருக்காங்க. அது யாருனு உனக்கும் தெரியும். எய்தவன் இருக்க அம்பை மட்டும் ப்ளேம் பண்றதுல எந்த பிரயோஜனமும் இல்ல. அதுவும் நீ என்னை ப்ளேம் பண்றது ஹைலி இடியாடிக்" என அவள் அவசரமாக தான் சொல்ல வந்ததை எரிச்சலுடன் சொல்ல, "நல்லா உங்க அண்ணனுக்கு சப்பை கட்டு கட்ற பூமி" என அவன் நக்கலுடன் தொடங்கி மேலும் ஏதோ பேச எத்தனிக்கவும், படிக்கட்டுகளில் இறங்கி வந்துகொண்டிருந்தார் சாரதா... ஆகாஷின் அம்மா.


நேராக அங்கே இருந்த ஒற்றை 'சோஃபா'வில் வந்து உட்கார்ந்தவரைப் பார்த்ததும் மனம் கனத்தே போனது பூமிகாவுக்கு.


எப்பொழுதுமே பொலிவுடன் உற்சாக பந்தாகக் காட்சியளிப்பவரின் தோற்றம் மூன்று மாதங்களுக்குள்ளாகவே தலைகீழாக மாறிப்போயிருந்தது. உடல் மெலிந்து கண்களுக்குக் கீழ் கருவளையம் உண்டாகி, சோபையிழந்து காணப்பட்டார் சாரதா.


கணவர் தயாளனைப் பற்றிய மன உளைச்சல்தான் அந்த அளவுக்கு அவரை நிலைகுலைய வைத்திருந்திருக்கிறது என்பது அவளுக்குப் புரிந்தது.


அனிச்சையாக எழுத்து அவருக்கு அருகில் சென்றவள் அந்த இருக்கையின் கைப்பிடியில் அமர்ந்து அவருடைய தோளைத் தழுவியவாறு, "நீங்க நம்ம கம்பெனிக்கு கூட வரதில்லையாமே. ஜெயராமன் மாமா சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாங்க. சாரி ஆன்ட்டி... ரியலி சாரி" என்றாள் பூமிகா குற்ற உணர்ச்சி மேலோங்க."இதுல நீ சாரி சொல்ல என்ன இருக்கு கண்ணா! நாம விதைச்சதுதான நமக்கு திரும்ப கிடைக்கும்" என உணர்வற்ற குரலில் சொன்னவர், "வயசு திமிறுல கண்ணுக்கு சரியா தெரிஞ்சதெல்லாம் காலம் போன காலத்துலதான் தப்புன்னே புரியுது' என்றவர், "அதை விடு. இந்து எப்படி இருக்கா. அவளைப் பார்த்து ஒரு மாசத்துக்கு மேல ஆயிடுச்சு. கலை பண்ண குளறுபடியால உங்க அப்பாவோட பியூனரலுக்கு கூட எங்களால வர முடியல. அவ என்னைப் பத்தி என்ன நினைக்கறாளோ" என வருத்தத்துடன் முடித்தார் அவர்.


"அம்மா எப்பவுமே உங்களை தப்பா நினைக்கவே மாட்டாங்க. அது உங்களுக்குத் தெரியாதா ஆன்ட்டி? கால் பண்ணா கூட நீங்க எடுக்கமாட்டேங்கறீங்கன்னுதான் ஃபீல் பண்ணிட்டு இருக்காங்க. ஸோ... போனதை பத்தி வொர்ரி பண்ணிக்காதிங்க ஆன்ட்டி. அங்கிளை சீக்கிரமே இந்த பிரச்சனைல இருந்தெல்லாம் வெளியில கொண்டுவந்துடலாம்" என அவள் விளக்கமாகச் சொல்ல, "யாரையும் பேஸ் பண்ற மனநிலைல நான் இல்ல கண்ணா. குறிப்பா இந்துவ, அவ வாயில இருந்து எதாவது ஒரு வார்த்தை நெகட்டிவா வந்தா கூட அதை என்னால தாங்க முடியாது" என அவர் கலங்க, அதுவரை அமைதியாக அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஆகாஷ் அவளை ஒரு குற்றம் சாட்டும் பார்வை பார்த்துவைத்தான்.


அதைக் கவனித்துவிட்டு, "கலை செஞ்ச வேலைக்கு இவ என்ன பண்ணுவா ஆகாஷ். இவளை ஏன் முறைக்கற” என்றவர், "இனிமேலும் என்னால நம்ம கம்பெனிக்கு வர முடியும்னு தோணல... ஸோ நீதான் கொஞ்சம் கவனிச்சுக்கணும் பூமி" என அவர்களது மென்பொருள் நிறுவனத்தைக் குறித்து கட்டளையாகச் சொன்னார் சாரதா.


எப்பொழுதுமே மகனைக் காட்டிலும் ஒரு படி நம்பிக்கை அவளிடம் அதிகம் உண்டு அவருக்கு. அது இந்த நிலையிலும் கூட மாறாமல் இருப்பதைக் கண்டு அவளது கண்களில் நீர் கோர்த்தது.


"எல்லாம் ஒரு நாள் சரியாகும் ஆன்ட்டி, அன்னைக்கு நீங்க நம்ம கம்பெனிக்கு வருவீங்க. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு" என்றவள், "ஈவினிங் வேந்தன் டிஸ்டிலரீஸ் சம்பந்தமா பேச ஒரு அன் அபிஷியல் மீட்டிங்க்கு இளா அண்ணா கால் பண்ணியிருக்காங்க. அது உனக்குத் தெரியுமா?" என சாரதா ஆகாஷ் இருவருக்கும் பொதுவாக பூமிகா கேட்க, சாரதா முகத்தில் அசூயை படரவும், அதை உணர்ந்தவனாக, "தெரியும், இளவேந்தன் அண்ணாவே நேரடியா அம்மாவுக்கு போன் பண்ணியிருந்தாங்க. அவங்க டோனே சரியில்லையாம். இந்த மீட்டிங்க நான் அட்டென்ட் பண்ணியே ஆகணும்னு சொல்லி, ஒரு மாதிரி மிரட்டியிருப்பார் போலிருக்கு. அதனால போகலாமா வேண்டாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்" என ஆகாஷ் சொல்ல, "இல்ல ஆகாஷ், ஏற்கனவே நிறைய பிரச்சனை போயிட்டு இருக்கு. நாம மேஜர் ஷேர் ஹோல்டர்ஸ் வேற. போகாம இருந்தா சரியா வராது" என அவள் அவனுக்குப் புரிய வைக்க முயல, "கலை போக போறானா, இல்ல நீ போக போறியா பூமி" என அவன் அவளுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டே கூர்மையாகக் கேட்கவும், "கலையை பத்திதான் உனக்கு நல்லாவே தெரியுமே. அவனை விட்டா சொதப்பிடுவான். ஸோ, நான்தான் போகப்போறேன். ஒருவேளை மாமா கூட வந்தா வரலாம். எனிவேஸ் ஹரீஷ் வருவார்" என்றாள் அவள்.


"அப்படினா அந்த சக்ரவர்தியும் அங்க வருவான் இல்ல" என அவன் பற்களைக் கடித்துக்கொண்டே கேட்க, "இளாவோட மாஸ்டர் பிரைனே அவன்தான? அவன் இல்லாமயா?" என பூமிகா அலட்சியமாகச் சொல்லவும், அவனுடைய முகம் இருண்டு போனது.


செந்தமிழ் வேந்தனுடைய மகன்தான் இளவேந்தன். ஆரம்பத்தில் எல்லோருமே ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தவர்கள்தான். உட்கட்சி பூசல்களால் ஏற்கனவே விரிசல் உண்டாகியிருக்க, தயாளன் கட்சி மாறிய பிறகு கொஞ்சம் நஞ்சம் இருந்த சுமுக நிலையும் மாறிப்போய் அவர்களுக்குள் ஜென்ம பகை என்கிற அளவுக்கு வந்துவிட்டது.


உண்மையில் இந்த குளறுபடிக்கெல்லாம் மூல கரணம் ராஜாமணியும் தனசேகரும்தான். அது சாரதாவுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் இந்துமதியை மனதில் கொண்டு அதை பிரகடன படுத்தியதில்லை அவர்.


இந்துமதி, ஜெயராமன் மற்றும் சாரதா மூவருமாகச் சேர்ந்து தொடங்கிய மென்பொருள் நிறுவனம் அவர்களுக்கான பாலமாக இருக்க, தயாளனுக்கும் தானாவுக்கும் இருக்கும் கருத்து வேறுபாடுகளுக்குள் சிக்காமல், அவர்களுடைய நட்பு எந்த மாற்றமும் இன்றி இது வரை தொடர்கிறது.


மற்றபடி ராஜாமணி குடும்பத்துடன் இவர்களுக்கு ஒட்டுமில்லை உறவுமில்லை என்ற நிலைதான்.


தனசேகர் அதே கட்சியில் தொடருவதால் சிறு சிறு கருத்துவேறுபாடுகள் மூண்டாலும், அவர்களுக்குள் ஓரளவுக்கு சுமுக நிலைதான் இருந்துவருகிறது.


ஆனால் வெவ்வேறு தீவுகளாக தனித்திருந்தாலும், இவர்களை பொறுத்தவரை ஒருவர் குடுமி ஒருவர் கையில் என்பதுபோல அனைவரையும் ஒரே கயிற்றில் கட்டி வைத்திருக்கிறது 'வேந்தன் டிஸ்டில்லரீஸ் அன்ட் பிவரேஜஸ் லிமிடெட்' எனும் மதுபான தொழிற்சாலையும் அது சார்ந்த வணிகமும்.


இது அனைத்தையுமே நன்றாகப் புரிந்துவைத்திருப்பவராதலால், பூமிகா சொல்வது போல் இவர்கள் சார்பாக யாராவது ஒருவர் அந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்றால் அது பல சிக்கல்களுக்கு வழி வகுக்கும் என்பது புரிய, "பூமி சொல்றதுதான் சரி. யார் அங்க வந்தா நமக்கென்ன ஆகாஷ். நீயும் அந்த மீட்டிங்க அட்டென்ட் பண்ணு. இல்லனா அப்பாவுக்குத்தான் சிக்கல்' என்றவர், "ஒரு வேள, அந்த கம்பெனியோட ஷேர்ஸ அவங்க பேருக்கு மாத்தி தர சொல்லி டிமாண்ட் பண்ணாங்கண்ணா, கொஞ்சம் கூட யோசிக்காம மாத்தி கொடுக்க ஒத்துக்கோ. அப்பாகிட்ட நானே பேசறேன். இத்தோடயாவது நம்மள பிடிச்ச கெட்ட காலமெலாம் தொலையட்டும்" என அவர் ஒரு கோரிக்கையாகவே சொல்ல, "ஓகே... வேற வழி" என அதற்கு ஒப்புக்கொள்வதுபோல் சொன்னான் ஆகாஷ் அவருக்காக.


எப்பேர்ப்பட்ட இக்கட்டான சூழலிலும் கூட அந்த பங்குகளை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல், ஒரு பிடிவாதத்துடன் அதைத் தன்வசம் வைத்திருக்கிறார் தயாளன். ஒரு சிறு துரும்பைக் கூட அவருக்கு எதிராக அசைக்கமாட்டான் ஆகாஷ். அப்படியிருக்க அவ்வளவு சுலபமாக அதை விட்டுக்கொடுப்பானா அவன்?


பொறுத்திருந்து பார்ப்போம்!


***


ஒரு முறையான சந்திப்பு கூட்டமென்றால், அது அவர்களுடைய முக்கிய அலுவலகத்தின் கருத்தரங்கு கூடத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஆனால் அது ஒரு ரகசிய கூட்டமென்பதால் வேந்தனுக்கு சொந்தமாக இருக்கும் கடற்கரை விடுதியின் 'பார்ட்டி ஹால்'லில் நடக்கிறது.


சாரதாவுக்காக அந்த 'மீட்டிங்'கில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டவன், அவர்கள் வீட்டிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு, பின்பு தயாராகி பூமிகாவை அவளுடைய வீட்டிற்கு அழைத்துவந்தான்.


அதன் பின் ஆகாஷ் இந்துமதியிடம் சென்று நலம் விசாரிக்க, மகனை குறித்து அவனிடம் வருந்தினார் அவர். அவளுடைய அண்ணன் குழந்தை மதி வேறு, 'அத்தை... அத்தை...’ என பூமிகாவை தொற்றிக்கொண்டு அங்கே இங்கே நகரவிடாமல் செய்யவும், அவளை உறங்கவைத்துவிட்டு ஒரு வழியாக அவள் தயாராகி வெளியில் வரவே நெடுநேரமாகிவிட்டது.


பொதுவாகவே ஜெயராமனுக்கு அந்த சாராய வியாபாரிகளின் கூட்டங்கள் அலர்ஜியை கொடுக்கும். பூமிகாவுடன் ஆகாஷும் செல்லவே 'அப்பாடா தப்பிச்சோம்!' என்கிற ரீதியில் கழன்றுகொண்டார் அவர். பொதுவாக கலைச்செல்வனைக் குறித்து இருக்கும் கவலை பூமிகாவிடம் இல்லை அவருக்கு, அவள் அனைத்தையும் இலகுவாக சமாளிப்பாள் என்ற நம்பிக்கை இருப்பதால்.


அவர்கள் இருவருமாக அந்த அரங்கத்திற்குள் வரும்போது குறித்த நேரத்தை விட அதிக தாமதமாகியிருந்தது.


பூமிகாவின் காரியதரிசி ஹரீஷ், முன்னமே அங்கே வந்து அவளுக்காகக் காத்திருந்தான். அங்கே அவளது தாமதத்தைக் குறித்து எழுந்த பேச்சுக்களை அவன் முகத்தில் குடிகொண்டிருந்த பதட்டம் அவளுக்கு படம்பிடித்துக் காட்டியது.


மூத்தவரான செந்தமிழ்வேந்தனும் அவருடைய மகனும் முதன்மையாக போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தனர், முகம் முழுதும் அப்பிய கலவரத்துடன்.


மற்றபடி அங்கே குழுமியிருந்த இருபதுக்கு மேற்பட்டவர்களும் கூட அவர்கள் சொல்லுமிடத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டுக் கொடுப்பதை வாங்கிச்செல்லும் அவர்களுடைய மாமன் மச்சான் வகையறா பினாமிகளும் அல்லக்கைகளும்தான், சக்கரவர்த்தி ஒருவனைத் தவிர.


'மைக், தண்ணீர் பாட்டில்கள்' சகிதம் மிகப்பெரிய மேசை போடப்பட்டிருக்க, அதைச் சுற்றி போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர் அனைவரும்.


இருக்கையின் பின்புறம் அச்சடித்து ஒட்டப்பட்டிருந்த பெயர்களைப் பார்த்ததும், அது 'நீ இங்கேதான் உட்காரவேண்டும்' என அனைவரையும் நிர்ப்பந்திப்பதுபோல தோன்றவே, எரிச்சலை கிளப்பியது பூமிகாவுக்கு.


காரணம் அவளது இருக்கை அந்த வரிசையில் முதலாவதாக இருக்க, அதற்கு அடுத்ததாக இருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்தான் சக்ரவர்த்தி. அதுவும், அவன் எதையோ பெரியதாக சாதித்துவிட்டதைப் போன்ற பார்வையை ஆகாஷை நோக்கி வீச, அதில் உச்சபட்ச கடுப்பாகிப்போய் ஆகாஷ் பூமிகாவை முறைக்கவே, 'கூல்' என உதட்டை அசைத்தவள், 'நான் பார்த்துக்கறேன்' என்பதுபோல கண்களை மூடி திறந்தாள் அவள்.


ஆகாஷுக்கான இருக்கை பூமிகாவுக்கு நேர் எதிரில் இருக்க, ஆத்திரத்துடன் அங்கே போய் உட்கார்ந்தான் அவன்.


"இங்க எல்லாரும் வந்து தேவுடு காத்துட்டு இருக்கோம். ஆடி அசைஞ்சிட்டு வரீங்க ரெண்டுபேரும். உங்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட பயமே இல்ல..ல்ல" என உச்ச ஸ்தாயியில் ஆரம்பித்தார் செந்தமிழ்வேந்தன் அதிகார தோரணையில்.


விட்டிருந்தால் அதே தொனியில் எதாவது பதில்கொடுத்து தொடக்கத்திலேயே கைகலப்புக்கு வழிவகுத்திருப்பான் ஆகாஷ். எனவே அவனை முந்திக்கொண்டு, "சாரிங்க அய்யா! ஸ்ட்ரேஞ்லி இந்த மீட்டிங்க சிட்டியை விட்டு ரொம்ப தள்ளி வெச்சிருக்காங்க இல்ல அதான் லேட் ஆயிடுச்சு. மோர் ஓவர், இது ஒரு சாதாரண மீட்டிங்காதான் இருக்கும்னு நினைச்சோம். ஸோ... இதுலல்லாம் நீங்க கலந்துபீங்கன்னு நாங்க எதிர்பார்க்கல" என சிறு புன்னகையுடன் அவள் பதில்கொடுக்க, அதில் 'இதுவே ஒரு முறையில்லாத மீட்டிங்... இதுல கேள்வி வேற கேட்பீங்களா' என்கிற உள்குத்து அடங்கியே இருக்கவே, என்ன சொல்வது என்பது புரியாமல் வாயடைத்துப்போனவர், பின் வார்த்தைகளைத் தேடி பிடித்து, "நீ நினைக்கற மாதிரி இது ஒண்ணும் சாதாரண மீட்டிங் இல்ல. வாழ்வா சாவா பிரச்சனை, தெரியமா?" என சீற்றத்துடனேயே சொன்னவர், "ஆகாஷ்... உங்க பேமிலி மெம்பெர்ஸ் பேர்ல இருந்த நம்ம கம்பெனி ஷேர்ஸ் எல்லாத்தையும் யாரைக் கேட்டு உங்கப்பன் அந்த விக்ரமுக்கு மாத்தி கொடுத்தான்" என அவர் நேரடியாக அவனிடம் கேள்வி கேட்க, அதிர்ந்துதான் போனான் ஆகாஷ். அப்படி நடந்திருக்க வாய்ப்பே இல்லை எங்கிற நம்பிக்கையில், "இல்லைங்க அய்யா. அப்படி எதுவும் நடக்கல" என அவன் பதட்டத்துடன் பதில் சொல்ல, "அப்படினா இதெல்லாம் என்ன?" என்றவாறு சக்ரவர்த்தி அது தொடர்பான காகிதங்களின் நகலை அவனுக்கு முன் போட, அவற்றை மேலோட்டமாக படித்தவனுக்குத் தலையே சுற்றிப்போனது.


எப்படிப்பட்ட ஆப்பத்துக்குள் அவன் சிக்கிக்கொண்டிருக்கிறான் என்பது புரிய, அவனுடைய பதட்டத்தை உணர்ந்தவளாக, "என்னாச்சு ஆகாஷ்" என பூமிகா கேட்க, அவற்றை அவளிடம் நீட்டினான் அவன்.


அவள் தன் கைகளில் வாங்கி அவற்றைப் புரட்ட முற்படுகையில், இளவேந்தன் குரோதத்துடன் சக்ரவர்த்தியை பார்த்து ஜாடை செய்யவும், அவளுடைய கையை பிடித்துக்கொண்டு, "இதையெல்லாம் படிச்சு நீ என்ன பண்ணப்போற. இனிமேல் இவனையும் சரி தயாளனையும் சரி யாராலயும் காப்பாத்த முடியாது' என மரியாதையை எல்லாம் கைவிட்டவனாக சக்கரவர்த்தி பேசிக்கொண்டிருக்க, கொதி நிலைக்கு போய்க்கொண்டிருதான் ஆகாஷ். பூமிகாவுமே.


சமயத்தில் பார்வை எல்லை மீறினாலும், கையை பிடிக்கும் அளவுக்கு போகிற துணிச்சலெல்லாம் இதுவரை வந்ததில்லை அவனுக்கு. அது சிறு அதிர்ச்சியைக் கொடுக்க, "என்னன்னு நேரடியா சொல்லுங்க சக்ரவர்த்தி. அதை விட்டுட்டு இப்படி மிரட்டற வேலையெல்லாம் வேண்டாம்" என்றவாறு தன் கையை அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டு எழுந்து நின்றாள் பூமிகா அவனுக்கு அருகில் உட்கார பிடிக்காமல்.


சரியாக அப்பொழுது மூடிவைக்கப்பட்டிருந்த அந்த கூடத்தின் கண்ணாடிக் கதவு படபடவென்ற சத்தத்துடன் திறக்கப்பட, வெளிப்புறம் வேறு சலசலப்பும் தள்ளுமுள்ளுமாக இருந்தது .


அனைவரின் பார்வையும் அங்கே திரும்ப, சீருடை அணிந்த இரண்டு பாதுகாவலர்கள் பின்தொடர உள்ளே நுழைந்தான் விக்ரம்.


உள்ளே நுழைய விடாமல் அந்த விடுதியின் காவலாளிகள் அவனை தடுத்திருக்க வேண்டும். அதனால்தான் அந்த தள்ளுமுள்ளு என்பது புரிந்தது.


அவன் யார் என்ற குழப்பத்துடன் பூமிகாவும் ஆகாஷும் பார்த்திருக்க, பதட்டம் சூழ்ந்தது சக்ரவர்த்திக்கும் இளவேந்தனுக்கும். செந்தமிழ்வேந்தனின் முகமோ காற்று போன பலூனாக சுருங்கிப்போனது.


விக்ரம் அவனை நெருங்கிவருவது தெரியவும், "ஹேய்... ஹேய்... உனக்கு எப்படி இந்த மீட்டிங் பத்தி தெரியும். நீ எப்படி இங்க வந்த" என நடுக்கத்துடன் கேட்டுக்கொண்டே,அனிச்சை செயல் போல் தன்னை மறந்து எழுந்து நின்றான் சக்கரவர்த்தி.


சொடக்கிட்டு, அங்கே இருந்த ஒரு காலியான இருக்கையை கண்களால் சுட்டிக்காண்பித்தவன், "பொடிநடையா நடந்தா வருவாங்க? எல்லாம் கார்லதான் வந்தேன்! ஊருக்கு ஒதுக்கு புறமா இப்படி ஒரு ரெசார்ட்ல ஓடி வந்து ஒளிஞ்சிட்டு லூசுத்தனமா கேள்வியெல்லாம் கேட்காத என்ன. நான் கொஞ்சம் முக்கியமா பேசணும். சைலன்ட்டா நீ அங்க போய் உட்காரு ஓகே..." என அவன் தோரணையாகச் சொல்ல, இளவேந்தன் வேறு 'போ' என்பதுபோல் தலையசைக்கவும் மறுக்கமுடியாமல் அங்கிருந்து நகர்ந்தான் சக்கரவர்த்தி.


அவனுடைய பெயரை சரக்கென்று கிழித்தவாறே இருக்கையில் உட்கார்ந்தவன், "நீ ஏன் நின்னுட்டே இருக்க? ப்ளீஸ் பீ சீட்டட்" என மரியாதை பன்மையெல்லாம் கைவிட்டு பூமிகாவை பார்த்துச் சொல்ல, அவன் சொன்ன 'ப்ளீஸ்' என்ற வார்த்தைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் அதிகாரமாக ஒலித்தது விக்ரமின் குரல்.


கோபத்தில் சிவந்துபோனது பூமிகாவின் முகம்.

© KPN NOVELS COPY PROTECT
bottom of page