top of page

Nilavin Desathil Naan - 2

வணக்கம் அன்பு தோழமைகளே!


இது புதிய கதையாக இருந்தாலும் நிலமங்கைக்கும் இந்த கதைக்கும் சில பொதுவான விஷயங்கள் இருக்கும் என்று சொல்லியிருந்தேன்.


Sorry மக்களே, இவ்வளவு break எடுத்துக்கொண்டு திரும்ப வந்து பதிவுகள் கொடுத்தால் முன்கதை யாருக்குத்தான் நினைவிலிருக்கும்.


நிலமங்கை படித்துவிட்டு 'நிலவின் தேசத்தில் நான்' முதல் எபிசொட் படித்தவர்களுக்கு ஒரு சிறிய நினைவூட்டல். நிலமங்கையின் முதல் எபிசோடிலேயே நீங்கள் விக்ரமை சந்தித்துவிட்டீர்கள். இதிலும், திருவும் அவனுடைய அம்மாவும் பேசிக்கொள்ளும் பகுதியில் தாமு எட்டிப்பார்ப்பான்.


திரு, விக்ரம், தாமு மூவருக்கும் என்ன சம்பந்தம் என்பது கதையின் போக்கில் புரியும்.


இன்றைய பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.


அடுத்த episode திங்களன்று பதிவிடப்படும்.


நட்புடன்,

KPN.


பிறை - 2


மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் விதமாக, அஷ்ட லட்சுமி கோவிலையும் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தையும் தன்னுள் அடக்கிய, பரந்து விரிந்த வங்காள விரி குடா கடற்கரையின் ஒரு பகுதி.


ஒரு பக்கம் மீரூர் ஆல்காட் மீனவர் குப்பம், மறுபக்கம் அதி ஆடம்பர சொகுசு பங்களாக்கள் என சமுதாயத்தின் இரு வேறு பரிமாணங்களை எடுத்துக் காட்டும் சென்னை மாநகரின் முக்கிய அடையாளம் - பெசன்ட் நகர்!


அங்கே அமைந்திருக்கும், 'மதி விலாசம்' எனப் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட 'கிரானைட்' பெயர்ப் பலகையைத் தாங்கி இருக்கும் ஒரு மாளிகை அது.


அன்றைய விடியலில்...


அதி சிறப்பான உள் அலங்கரிப்புடன், ஒரே நேரத்தில் இருநூறு பேர் கூடி களிக்கலாம் என்கிற அளவுக்கு மிகப் பிரமாண்டமாக விளங்கும் கூடத்தில் உடல் மொத்தமும் உள்ளே புதைந்து போகும் அளவிற்குச் சொகுசாக வடிவமைக்கப்பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்து தன் மடிக்கணினிக்குள் தலையை நுழைத்தவாறு சுற்றுப்புறம் மறந்திருந்தவனை, 'குட் மார்னிங் கலை!' என்ற அவனது தந்தை தனசேகரின் குரல் கலைத்தது.


அருகிலிருந்த சிறிய தேநீர் மேசையின் மேல் ஒரு குவளையில் நிறைந்திருந்த 'காஃபீ' ஆறிக்கொண்டிருக்க, "குட் மார்னிங் டாட்!" என்ற பதில் வாழ்த்துடன் நிமிர்ந்து அவரை பார்த்தான் கலை என அவரால் அழைக்கப்பட்ட கலைச்செல்வன்.


காலை நடைபயிற்சிக்காக 'ட்ராக் சூட்'டில் கிளம்பி வந்திருந்தார் அவர்.


அதைப் பார்த்துவிட்டு, 'காஃபீ?" என அவன் கேட்க, அவனுக்கு அருகில் உட்கார்ந்தவர், "மொதல்ல நீ குடி" என்று சொல்லிவிட்டு அந்த குவளையை எடுத்து அவன் கையில் திணித்துவிட்டு, அங்கே ஜாடியிலிருந்த 'காஃபி'யை மற்றொரு குவளையில் ஊற்றி ஒரு மிடறு சுவைக்க,


"வீட்டுக்குள்ளையே ட்ரெட்மில் பண்ணலாமில்ல! இந்த மார்கழி பனில வெளியில போகணுமா டாட்? அதுவும் ரெண்டு நாளா ரோடே தெரியாத அளவுக்குப் பனி மூட்டம் இருக்கு" என்றான் அவன் அக்கறையுடன்.


"என்ன பண்ண சொல்ற கலை! ஃப்ரெண்ட்ஸ், அப்பறம் கட்சி ஆளுங்க சில பேர் அஷ்ட லட்சுமி கோவில் பீச்ல வந்து ஜாயின் பண்ணிக்கறோம்னு சொல்லி இருக்காங்க! போய்தான் ஆகணும்" என்றவர்,


"நீ என்ன இந்த எர்லி மார்னிங்ல லேப்டாப்பும் கையுமா உட்கார்ந்துட்டு இருக்க" என அவர் வியப்புடன் கேட்க, "பூமி கிட்ட இருந்து கொஞ்சம் இம்பார்ட்டண்ட் மெயில்ஸ் வந்திருக்கு. அதையெல்லாம் படிச்சிட்டு இருக்கேன்" என்றான் அவன் கணினியின் திரையில் தன் பார்வையை பதித்து.


"அதானே பார்த்தேன்! பூமிக்கு பயந்து எழுந்து உட்கார்ந்திருக்க. இல்லனா உன்னைப் பொறுத்தவரைக்கும் இது மிட் நைட் ஆச்சே!" என்று சொல்லிச் சிரித்தவர், மேலும் ஏதோ சொல்ல வந்து, அவனது கவனம் மொத்தமும் அவர்கள் தொழில் சார்ந்த அந்த மின்னஞ்சலில் இருப்பது புரியவும், "சரி நான் கிளம்பறேன்! நீ உன் வேலையைக் கவனி" என்று சொல்லவிட்டு அவர் கிளம்ப, மறுபடியும் தலை நிமிர்த்து அவரை பார்த்தவன், "டாட்! பார்த்து போங்க" என்றுமட்டும் சொல்லவிட்டு மறுபடியும் கணினிக்குள் தலையை நுழைத்துக்கொண்டான் கலை.


அவரை பார்த்ததும் அவருடன் கிளம்பும் நோக்கத்துடன், அங்கே வராண்டாவில் படுத்திருந்த மிரட்சி அளிக்கும் தோற்றத்துடன் நன்கு வளர்ந்திருந்த இரண்டு ‘ராட்வைலர்’ வகை நாய்கள் எழுந்து நின்றன.


"ஹேய் ஹம்டி! டம்டி! நோ! இன்னைக்கு பனி ரொம்ப அதிகமா இருக்கு. ஸோ.. நீங்க ரெண்டுபேரும் என் கூட வரல ரைட்!" என்றவர், அவை இரண்டையும் அங்கே தொங்கிக்கொண்டிருந்த சங்கிலிகளில் பிணைத்துவிட்டு, "முருகா! அவுத்துட்டு வந்துடபோறானுங்க! நம்ம பூமி வேற இல்ல. இவங்கள கண்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டம்! பார்த்துக்கோ!" என்று சொல்லவிட்டு, 'சரி' என்பதுபோல் தலையை ஆட்டியவாறு அந்த முருகன் ஓடிவந்து பங்களாவின் மிகப்பெரிய 'கேட்டின்' ஒரு பகுதியை திறக்கவும் வெளியில் சென்றார் அவர்.


சில நிமிடங்கள் கூட கடந்திருக்காத நிலையில் அந்த வீதியில் கலவரமான சப்தங்கள் கேட்க, கட்டி வைக்கப்பட்டிருந்த நாய்கள் வேறு அபஸ்வரத்தில் குறைக்கவும் ஏதோ சரி இல்லை என்பதை உணர்ந்து பதறியவனாக வாயிற்புறம் வந்த கலை உறைந்துபோய் நின்றான்!


அந்த தெருவின் ஓரத்தில் அவர்கள் வீட்டுக் காவலாளி முருகன் ரத்தவெள்ளத்தில் துடித்துக்கொண்டிருக்க, அவசர அவசரமாக அங்கிருந்து பழைய கருப்பு நிற 'ஸ்கார்பியோ!' ஒன்று வேகமெடுத்துப் போவது தெரிந்தது.


வயிற்றில் பயம் பந்தாக உருள, அவன் பார்வையை சுழற்றி பார்க்கவும் சற்று தொலைவில் அவனது அப்பா தாறுமாறாக சரிந்துகிடப்பது தெரிந்தது..


தொண்டை வறண்டு போக அந்தப் பனியின் குளிரையும் கடந்து குப்பென்று வியர்த்தது அவனுக்கு. துணிவை வரவழைத்துக்கொண்டு வேகமாக அவருக்கு அருகில் சென்றவன் அவரை திருப்பிப் போட, அவரது கழுத்து, மார்பு வயிறு எனப் பல இடங்களில் வெட்டுப்பட்டு குருதி பெருகிக்கொண்டிருக்க அந்த சில நிமிடங்களுக்குள்ளாகவே அவனது கண் எதிரிலேயே அவரது உயிர் பிரிந்தது.


***


வழக்கமான பரபரப்புடன் சென்னையின் அறிஞர் அண்ணா பன்னாட்டு விமான நிலையம்...


அறுபதைக் கடத்த தோற்றத்துடன் அங்கே வருகை பகுதியில் காத்திருந்தார் ஜெயராமன்.


அவர் அணிந்திருந்த உடை, கை கடிகாரம், பொன்னிற 'ஃப்ரேமில்' பதித்த கண்ணாடி, அதைவிட அவருக்கு அருகில் சீருடையுடன் நின்றிருந்த 'கார்' ஓட்டுநரிடம் தெரிந்த அதிகப்படியான பணிவு என அனைத்தும் அவரது செல்வாக்கைச் சொல்லாமல் சொல்லியது.


சகோதரியின் கணவனுடைய இழப்பால் அவரது முகத்தில் சோகம் அப்பிக்கொண்டிருந்தது.


அவரது பார்வை அங்கே வந்துகொண்டிருந்தவர்களில் யாரையோ தேடிக் காத்திருந்தது.


சில நிமிட தேடுதலுக்குப் பின் அவரது கண்கள் கூர்மை பெற, அதை உணர்ந்த அந்த ஓட்டுநர் சுறுசுறுப்படைந்தான்.


ஐந்து அடியும் சில அங்குலமுமான அதீதமில்லா உயரத்தில், அவளுடைய மாலை வெயில் மஞ்சள் நிறத்தை எடுப்பாகக் காட்டும் 'பிங்க்' நிற 'டீ-ஷர்ட்' கொஞ்சமாகத் தெரியும்படியாக அதை மூடியிருந்த்து கருநீல 'கோட்'. அதே நிறத்தில் அவள் அணிதிருத்த 'பேண்ட்' அடர் 'ப்ரவ்ன்' நிற 'பார்மல் ஷூ'வை தொட்டிருக்க, 'போனி டைல்' போடப்பட்ட முதுகுவரை நீண்டிருந்த கூந்தலுடன், இரு காதுகளிலும் ஜொலிக்கும் சிறிய ஒற்றை கல் வைரத் தோடு, எடுப்பான கூர் நாசியில், அருகில் இருப்பவர் பார்வைக்கு மட்டுமே தெரியும் மிகச் சிறிய வைர மூக்குத்தி அணிந்து, நிலவின் பிறை போன்ற நெற்றியில் 'ஐ-லைனர்' கொண்டு எழுதப்பட்டிருந்த சிறிய பொட்டு முழு நிலவினை ஒற்ற, ஆனால் கொஞ்சமும் களங்கமே இல்லாத அவளது தெளிவான முகத்திற்கு மேலும் பொலிவு கொடுக்க, கண்கள் காட்டும் உணர்ச்சியை மறைத்திருக்கும் கொஞ்சம் பெரிய 'கூலர்' அவளுடைய முகத்தின் உணர்வுகளையும் மறைத்திருக்க, நிமிர்ந்த நன்நடையுடன் அங்கே வந்து கொண்டிருந்தாள் அவள்.


பூமிகா!


அவளுடைய உடைமைகளைத் தள்ளிக்கொண்டு அவளை பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்தான் அவளுடைய பிரத்தியேக காரியதரிசி ஹரீஷ்.


அவளைப் பார்த்ததும் வயிற்றுக்குள்ளிருந்து எழுந்த உணர்வைக் கட்டுப்படுத்தியவாறு 'நான் இங்கே இருக்கேன்' என்பதுபோல் தனது கையை தூக்கிக் காண்பித்தார் ஜெயராமன்.


அதைக் கவனித்துவிட்டு அவரை நோக்கி அவள் வரவும், "வாடா பூமி! ஆர் யூ ஓகே" என உணர்வற்ற குரலில் கேட்டவருக்கு, 'ஆமாம்' என்பதுபோல் தலை அசைவால் பதில் சொன்னவள், "எங்க மாமா! வீட்டுக்குத்தான போறோம்? இல்ல நேரா" 'சுடுகாடு' என அந்த வார்த்தையைச் சொல்லக்கூட மனம் இடங்கொடுக்காமல் அவள் தடுமாற அதை உணர்ந்தவராக, "ம்.. வீட்டுக்குதான் கண்ணா, உனக்காகத்தான் வெயிட்டிங்! கம் லெட்ஸ் கோ" என்றார் அவர் தழுதழுப்பாக.


அருகில் நின்றுகொண்டிருந்த ஓட்டுநர் அமைதியாக வந்து அவளது பயண பெட்டியை தன் கையில் தூக்கிக்கொண்டு அங்கிருந்து செல்ல, அவனைக் கவனித்துவிட்டுக் கேள்வியாக ஜெயராமனைப் பார்த்தாள் பூமிகா.


"மாப்பிளையோட புது ட்ரைவர் கம் பாடி-கார்ட்மா! பேர் திரு!" என்றார் அவர் அவளது பார்வைக்குப் பதிலாக.


'ப்ச்.. உருப்படியா இந்த கலையோட முழுசா மூணுமாசம் கூட ஒருத்தனும் குப்பை கொட்ட மாட்டான்! இவன் எத்தனை நாளைக்கோ?' என மனதிற்குள் சலித்துக்கொண்டாலும் அதை வெளியில் சொல்லாமல், "யார் அப்பாயிண்ட் பண்ணாங்க அங்கிள்?" என்று மட்டும் கேட்டாள் அவள்.


"பானுதான் கண்ணா! நல்லா விசாரிச்சுதான் அப்பாயிண்ட் பண்ணி இருக்கா! டோன்ட் ஒர்ரி" என்றார் அவர் அவளது கவலையை உணர்ந்து.


அதற்குள் அவர்களுடைய வாகனம் அருகில் வந்து நின்றது. அவர்கள் ஏறுவதற்கு வாகாக ஓட்டுநர் திரு காரின் பின் பக்க கதவைத் திறந்து விடவும் பூமிகாவும் ஜெயராமனும் அதில் ஏறி அமர்ந்தனர்.


அவளுடைய காரியதரிசி ஹரீஷ் முன் இருக்கையில் வந்து உட்காரவும் சீரான வேகத்தில் அந்த வாகனம் மதி விலாசத்தை நோக்கிப் பயணப்பட்டது.


***


தனசேகரின் மரணம் நிகழ்ந்து இரு தினங்கள் கடந்திருந்தன.


அவரது மரணம் நிகழ்ந்த அன்று மாலையே பிரேதப் பரிசோதனை முடிந்து அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.


சமுதாயத்தில் பன்முகங்களைக் கொண்டவர் தனசேகர்.


முதலில் அவர் ஒரு தொழிலதிபர். மேலும் அவர், உழைப்பாளர் நீதி கட்சி என்ற பிரபல கட்சியைச் சார்ந்த அரசியல்வாதி.


ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருக்கும் அந்த கட்சியின் தூண் போல விளங்குபவர்.


ஒரு முறை அந்த கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.


அந்த சமயம் அவர் சார்ந்திருக்கும் கட்சி ஆளும் கட்சியின் கூட்டணியிலிருந்ததால் மந்திரி பதவியும் அவரை தேடி வந்தது.


தற்சமயம் அவர் அந்த கட்சியின் நட்சத்திர வேட்பாளர்.


அதுமட்டும் இல்லாது அவருடைய மனைவி பானுமதி ஒரு மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கி அதைத் திறம்பட நடத்தி வருகிறார்.


அவருடைய சமுதாய அந்தஸ்து காரணமாக அவரது உடலுக்கு மரியாதை செலுத்த இந்தியாவின் பல பகுதியிலிருந்தும் முக்கிய புள்ளிகள் பலரும் வந்து சென்ற வண்ணம் இருக்க, கணிசமாகப் பொதுமக்களின் கூட்டமும் அவர்களுடைய வீட்டில் இருந்தது.


காவல் துறையின் சிறிய படையே பாதுகாப்பிற்காக அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்தது.


அந்த மாளிகைக்குள் நுழைந்த நொடி பூ மலைகளால் மூடப்பட்டிருந்த 'ஃப்ரீஸர் பாக்ஸ்'இன் உள்ளே இருந்த அவரது உடலில் சில நிமிடங்கள் பதிந்து பின் அதன் அருகில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அவளுடைய அன்னை பானுமதியிடம் போய் நிலைத்தது பூமிகாவின் பார்வை.


மகளைக் கண்டதும் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல், "பூமிம்மா!" என்றவாறு தேம்பியவரின் அருகில் போய் அவரை அணைத்துக்கொண்டவள், "ரிலாக்ஸ் மாம்! இப்படி அழுதா உங்க ஹெல்த் கெட்டுப்போகும்! வி ஷுட் அக்சப்ட் தி ரியாலிட்டி" என்றாள் பூமிகா அவரை அமைதிப்படுத்தும் வகையில்.


என்னதான் அவருக்கு ஆறுதல் கூறினாலும் அவளது கண்களும் கண்ணீரை உகுத்தன.


"சாரி பூமி, முதல்ல எங்க அப்பா! இப்ப உங்க அப்பா! எல்லாமே அந்த தயாளன் வேலைதான். அவனை நான் சும்மா விடமாட்டேன் பார்" என்றவாறு கழுகுக்கு மூக்கில் வியர்த்தது போல அவளுக்காகவே காத்திருந்தவன் வேகமாக அவளை நெருங்கி வந்து ஆறுதல் சொல்கிறேன் பேர்வழியே என்று அவளுடைய தோள்களை வளைத்தான் சக்கரவர்த்தி - அவர்களுடைய குடும்ப நண்பர் என்று சொல்லிக்கொள்ளும் லேட்-ராஜாமணியின் மகன்.


"ப்ச்... எல்லாத்துக்கும் காலம்தான் பதில் சொல்லணும் சக்ரா. நம்ம கைல எதுவும் இல்ல" என்றவாறு நாசூக்காக அவனிடமிருந்து விலகியவள் அன்னையின் முகத்தைப் பார்க்க, அப்படி ஒரு அசூயை படர்ந்திருந்தது அவரது முகத்தில். அதை அவருக்கு உணர்த்தும்பொருட்டு அவளுடைய பதிலில் எரிச்சலுற்றிருந்த சக்கரவர்த்தி அறியாமல் ஜாடை செய்தவள், தன்னை நிலைப்படுத்திக்கொண்டு தமையனின் அருகில் போய் நின்றாள் அவள்.


அவளுடைய வருகைக்காகவே காத்திருந்ததால், அவள் அங்கே வந்த சில நிமிடங்களில் தனசேகரின் இறுதிச் சடங்குகள் தொடங்கவே, உடனே அவளை நோக்கி வந்த ஜெயராமன், "கண்ணா, அப்பாவ எலெக்ட்ரிக்கல் க்ரிமேஷன் கிரௌண்டுக்கு கொண்டுபோக எல்லா ஏற்படும் பண்ணிட்டேன்! நம்ம சம்பிரதாயத்துல பொண்ணுங்க அங்க வர வழக்கம் இல்ல! நீ என்ன பண்ண போற?" என அவர் ரகசிய குரலில் கேள்வி எழுப்ப,


"வரேன் அங்கிள், அப்பா நல்ல ஹெல்தியா இருந்ததால நான் இதை எக்ஸ்பெக்ட் பண்ணல! இல்லனா நான் யூஎஸ் போயிருக்கவே மாட்டேன்! ஐம் கோயிங் டு மிஸ் ஹிம் அ லாட் அங்கிள்! ஸோ கிடைக்கற ஃப்யூ மினிட்ஸ், ஐ வாண்ட் டு பீ வித் ஹிம்" என்றாள் அவள் உறுதியுடன்.


சொன்னதுபோலவே அதன் பிறகு அவரது உடல் மயானத்திற்குக் கொண்டு சென்ற பொழுதும், அது எரியூட்டப்பட்ட பின்னரும், அதன் மிச்ச சொச்சங்களை வாங்கும் வரையிலும் அண்ணனின் கூடவே இருந்து, முடிந்ததும் அவனுடனேயே அங்கிருந்து கிளம்பினாள் அவள்.


இந்த முறை அவள் பள்ளி காலம் தொட்டு அவளுக்கு ஓட்டுநராக இருக்கும் லோகு அவளுடைய பிரத்தியேக காருடன் அந்த மயானத்தின் வாயிலில் காத்திருக்க, அவள் வாகனத்தை நெருங்கியதும் அதன் கதவைத் திறந்தவாறு, "சாரி பாப்பா! உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியல!" என்றார் அவர்.


"என்ன பண்றது லோகு அங்கிள்! நாம இதை கடந்துதான் ஆகணும்!' என அவருக்குப் பதில் சொல்வதுபோல் தனக்கு தானே சொல்லிக்கொண்டவள் உடன் இருந்த அவளுடைய அண்ணனிடம், "கலை! உன்னோட வண்டி இங்க வந்திருக்கா?" என்று கேட்க, "இல்லடா! நீ ஏர் போர்ட்ல இருந்து வந்ததுமே என் ட்ரைவரை அனுப்ப சொல்லிட்டேன்! ஸோ உன் கார்லதான் வரணும்" என்று அவன் சொல்லவும் அதைக்கேட்டுக்கொண்டே அங்கே வந்த ஜெயராமன், "ஏன் மாப்ள இப்படி செய்யறீங்க. நம்ம சுத்தி எதுவோ சரியில்லைன்னு தெரிஞ்சுதான பானு உங்களுக்காக பாடிகார்ட் அப்பாயிண்ட் பண்ணி வெச்சிருக்கா? அவளோட பயம் சரிதான்ங்கற மாதிரி இப்ப இப்படி வேற நடந்து போச்சு. உங்க அப்பாதான் அவ பேச்ச கேட்கல, நீங்களாவது கேட்கலாம் இல்ல. ஏன் திருவ அனுப்பினீங்க" என சற்று கடிவது போல் கேட்க,


"இப்பதான் சுத்தி இவ்வளவு போலீஸ் இருகாங்க இல்ல. அவன் வேற தேவையா. கொஞ்சம் கூட ப்ரீயா இருக்க முடியல" என சலித்தவன் வாகனத்தில் ஏறி அமர மேலும் சில கார்கள் பின்தொடர அவர்கள் இல்லத்தை அடைந்தனர் முவரும்.


அவள் குளித்து முடித்து வரவும் அவளைப் பார்த்துவிட்டு, "த்தை! பூமூத்தை!" என்றவாறு அவளை நோக்கி ஓடிவந்த மழலையை அள்ளி எடுத்துக்கொண்டவள், "உங்க அம்மா மாதிரிடி குட்டி நீ! என்னோட பேஸ்ட்டீடி நீ" என்றாள் ஆதூரத்துடன்.


மகளைப் பின்தொடர்ந்து ஓடி வந்தவள், அவளைப் பார்த்துவிட்டு, "ஸாரி பூமி! சடனா என்னென்னவோ நடந்துபோச்சு!" எனக் கண்ணீர் வடித்தாள் அவளது தோழியும் கலையின் மனைவியும் ஜெயராமனின் மகளுமான சாதனா!


அன்னை அழுவதைப் பார்த்துவிட்டு குழந்தையும் உதட்டைப் பிதுக்கவே, "ப்ச்.. சாதனா! கண்ட்ரோல் யுவர் செல்ப்! மதி குட்டி அழறா பாரு!" என்று தோழியைக் கடிந்துகொண்டு, "குட்டிம்மா! நாம போய் பாட்டியை பாக்கலாமா" என்று கேட்டுக்கொண்டே பானுமதியை நோக்கி போனாள் அவள்.


'இந்த வீடு இந்த இழப்பை அக்செப்ட் பண்ணிட்டு எப்படி இயல்புநிலைக்கு திரும்ப போகுதோ?" என்ற மிகப்பெரிய கேள்வி அவளது மனதிற்குள் எழுந்து அவளை மிரட்டியது.


அதே நேரம் புழல் சிறையில், "எனக்கு இப்பவே ஆகாஷை பார்க்கணும்! பார்த்தே ஆகணும்! அவனை உடனே மீட் பண்ண ஏற்பாடு பண்ணு ராம்!" எனக் கைப்பேசியில் உறுமிக்கொண்டிருந்தார் தயாளன்!


உழைப்பாளர் நீதி கட்சியிலிருந்து பலவந்தமாகப் பிடுங்கி எறியப்பட்ட பழைய உடைந்த தூண்!


***

© KPN NOVELS COPY PROTECT
bottom of page