top of page

Nilavin Desathil Naan - 1

நிலவின் தேசத்தில் நான்!


பிறை-1


இங்கே பிறப்பெடுத்திருக்கும் ஒவ்வொரு ஜீவராசியும் பிழைக்க, பேதமின்றி வளங்களை அள்ளி அள்ளி கொடுக்கும் இந்த பூமியையும், இந்த பூமியை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு உயிர்வாழும் தாவரங்களையும், பறவைகளையும், விலங்குகளையும், ஊர்வன... பறப்பன... பூச்சிகள்... கடல் வாழ் உயிரினங்கள் பலவற்றையும், சக மனிதர்களையும் உயிரில் உயர்ந்தவை தாழ்ந்தவை என்கிற எந்தவித பாகுபாடுமின்றி ஒன்றுபோல நேசிக்கத் தெரிந்த, தன் சுயலாபத்திற்காகக் காற்று தண்ணீர் என அனைத்தையும் மாசுபடுத்தி, இயற்கையை, சக உயிரினங்களை அழிக்க முற்படும் பேராசை பிடித்த மனிதர்களை எதிர்த்து நிற்கும் துணிவுள்ள நல்லவர்களின் குருதியால் இந்த பூமி நனையுமாயின், அதையும் கையாலாகாமல் வெறும் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சமுதாயம் உருவாகுமாயின், மனித இனத்தின் அழிவு மிக அருகில் நெருங்கிவிட்டது என்பதை நாம் அறியலாம்.


அதைத்தான் பறைசாற்றிக்கொண்டிருந்தது அந்த சிற்றோடையில் தண்ணீருடன் கலந்து நீர்த்துப் போய் பெருகிக்கொண்டிருந்த அன்பானந்தனின் குருதி.


யாரை எண்ணி தன் இறுதி மூச்சை இழுத்துப் பிடித்திருந்தாரோ, அவன் மூச்சிரைக்கத் தன்னை நோக்கி ஓடி வருவது அவரது விழிகளில் மங்கலாகத் தெரிய, மிக முயன்று, குருதி நனைத்த தன் கையை அவர் தூக்க, "அப்பா!" என அலறிக்கொண்டு ஓடிவந்தவன், அவருடைய தலையை தன் மடியில் தங்கினான் அவரது அருமை மகன்.


பாதி மூடிய விழியால் அவனைப் பார்த்து, 'கண்ணா! திரு!" என தன் ஜீவனையெல்லாம் திரட்டி மகனை அழைத்து, "அம்மாவையும்... நிலா குட்டியையும் பத்திரமா பார்த்துக்கோ கண்ணு" என்று மொழிந்ததுடன் அவர் அதிகம் நேசித்த இந்த மண்ணுடனான தன் பந்தத்தை முறித்துக்கொண்டார் அன்பானந்தன்.


தன் கழிவுகளால், அந்த ஊரின் நீராதாரத்தையும், மண்ணின் வளத்தையும், தன் உற்பத்தியால் இந்த மண்ணின் மைந்தர்களையும், பாழ் படுத்தி பயனற்று போகச் செய்துகொண்டிருந்த அங்கே புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த சாராய தொழிற்சாலைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய அறச்சீற்ற உணர்வுள்ள சிறு கூட்டத்தின் பிரதிநிதி என்ற ஒரே காரணத்தினால் அவருக்கு ஏற்பட்ட நிலை இது.


அவர் உயிர் பிரிவதைத் தடுக்க இயலாமல்... கடந்துபோன நிமிடங்களை மறுசீரமைக்க இயலாமல்... உயிருள்ள ஒரு மனிதன் சடலமாக மாறிப்போன அந்த நொடிக்குள் மூளை மறத்துபோய் உறைந்து கிடந்தான் அந்த பதினைந்து வயது சிறுவன்.


***


பதினைந்து வருடங்களுக்குப் பிறகு...


காணி நிலம் வேண்டும் - பராசக்தி


காணி நிலம் வேண்டும், - அங்கு


தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்


துய்ய நிறத்தினதாய் - அந்தக்


காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை


கட்டித் தரவேண்டும் - அங்கு


கேணியருகினிலே - தென்னைமரம்


கீற்று மிளநீரும்.


என்ற பாரதியின் வரிகளை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருந்தது 'நிலவு தேசம்' என்ற பெயர் கொண்ட அந்த தோப்பு வீடு.


நடந்து வந்த களைப்பி