top of page

Nilamangai - 17

Updated: Mar 16

17. பயணம்

நிதரிசனத்தில்…


'போராட்டம் நிறைந்த இந்த வாழ்க்கை என்பது, நிரந்தரமில்லாதது! தன் அன்னைக்கு நேர்ந்தது போல மரணமானது எந்த வயதிலும் நேரலாம்! அப்படி அது தன் முன்னால் வந்து நிற்கும்போது மகிழ்ச்சியுடன் அதை அணைத்துக் கொள்ள வேண்டும்!' என தத்துவார்த்தமாக தன் மனதைத் தயார் செய்து வைத்திருந்தாள் நிலமங்கை.      


ஆனால் அன்றைய காலை, அந்த மரணமானது கண்ணெதிரில் தோன்றி சிறிதாக காண்பித்த ஒரு முன்னோட்டத்திற்கே அவளுடைய மனது பலமாக ஆட்டம்கண்டுதான் போய்விட்டது.


தனக்கொன்று நேர்ந்திருந்தால் கூட இந்தளவுக்குப் பாதித்திருக்காதோ என்னவோ? ஆனால், இந்த தாமோதரனுக்கு ஒன்று என்றால், அதுவும் தன்னால்தான் எனும் பொழுது, இந்தளவுக்குத் தன்னையே அவனிடம் விட்டுக்கொடுக்கும் அளவுக்கு தன்னை அது பாதிக்கும் என்பதை அவளே இன்றுதான் அறிந்து கொண்டிருக்கிறாள்.


'இந்த' தாமோதரனுடன் இதே மண்ணில் ஒரு நீண்ட வாழ்க்கையை இன்பமாக வாழ வேண்டும் என்கிற ஏக்கம் பல்கிப்பெருகியது.


இனி வரப்போகும் நாட்களை எப்படி கடக்கப் போகிறோம் என்கிற அச்சம் மனதை அலைக்கழிக்க, உடல் வேறு நொந்துபோய் வலி கொடுக்க, அரைகுறை உறக்கத்தில் புரண்டு கொண்டே இருந்தாள்.


அவளுடைய அலைப்புறுதலை உணர்ந்த அருகிலிருந்தவனின் கரம் நீண்டு அவளை அமைதிப்படுத்தும் விதமாக அம்மங்கையை இழுத்துத் தனக்குள் பொத்திக்கொண்டது.


அதில் உறக்கம் மொத்தமாக கலைந்துபோய், "மதியமும் இதுபோலதான செஞ்ச தாமு?" என அவள் நெகிழ,


"அப்படின்னா, அப்பவும் இதேபோல தூங்கற மாதிரி பாசாங்குதான் செஞ்சிட்டு இருந்தியா நீ?" எனக் கேலிப் பேசினான்.


"தாமு!" என மிஞ்சியவள், "பாசாங்கு செஞ்சது நீதான் நானில்ல" என்று சிணுங்க,


அந்த சிணுங்கலுக்கொரு முத்தத்தைப் பரிசளித்தவன், "அப்ப நான் செஞ்சது உனக்கெப்படி தெரிஞ்சுதாம்?" எனக் கேட்டுச் சிரிக்க,


"ப்ச்... அந்தத் தூக்கத்துல கூட நான் அதை ஃபீல் பண்ணேன் தெரியுமா?" என்று சொல்லிவிட்டு, "எந்த அளவுக்குன்னா" என்று தான் கண்ட கனவைப் பற்றிச் சொல்ல வந்து, 'அதை சொன்னால், இவன் இன்னும் அதிகம் தன் மேல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிடுவான். அது மேலும் மோசமாகத் தன் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும்' என்கிற எண்ணம் தோன்ற, அப்படியே பாதியில் விழுங்கினாள்.


"என்ன, இப்படி அரைகுறையா நிறுத்தற... சொல்ல வந்தத முழுசா சொல்லு" என்று விடாப்பிடியாக அதையே அவன் பிடித்துக்கொள்ள, "இல்ல, ஒண்ணும் இல்ல, நீ கருங்கல்லு இல்லனு அப்பதான் தெரிஞ்சிக்கினேன்" என மழுப்பலாகச் சொல்லிச் சமாளித்தவள், "ரொம்ப தல வலிக்குது தாமு, அதான் சரியா தூக்கம் வரல" என்றாள் நாசூக்காக.


"இராவுக்கு போட்டுக்க பெயின் கில்லர் கொடுத்திருந்தாங்களே, போட்டியா, இல்லையா?" என்று கேட்டுவிட்டு,


"மறந்துட்டேன், இப்ப வேணா போட்டுக்கவா?" என்ற அவளது நக்கலான பதிலில்,


ஏன் மறந்தாள் என்று புரிந்ததால் உண்டான உவகையில் மலர்ந்த புன்னகையுடன், "ஒன்னியும் தேவையில்லை, இன்னும் கொஞ்சம் இருந்தா பொழுதே விடிஞ்சுரும்,பிரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டு ஒரு வழியா காலைலயே போட்டுக்க" என்றபடி அவளைத் தன் தோளோடு அணைத்து, இதமாகக் கூந்தலை வருட, கொஞ்சம் கொஞ்சமாக உறக்கம் அவளைத் தழுவியது.


***


அடுத்த மூன்று நாட்களுக்கு வேண்டிய துணி மணிகளை எடுத்துப் பயணப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள் மங்கை.


ஒவ்வொன்றுமே தாமு அவளுக்காகப் பார்த்துப் பார்த்து வாங்கி வைத்திருந்தது. புடவைகளுக்குப் பொருத்தமாக, தேவி வடிவமைத்துத் தைத்துக் கொடுத்திருந்த இரவிக்கைகள் அவ்வளவு அருமையாக இருந்தன. முந்தைய தினம் அவள் வனாவுக்குச் செய்திருந்த ஒப்பனையும் கூட அப்படித்தான். முறையாகப் பயிற்சி எடுத்திருக்கிறாள் என்பது பார்க்கும்போதே புரிந்தது. அன்று பூங்காவனம் கிழவி அவளைப் புகழ்ந்ததில் கொஞ்சம் கூட மிகையில்லை என மனதிற்குள் தோழியை அதிகமாக மெச்சிக் கொண்டாள்.


அப்பொழுது, தண்ணீர் பாட்டிலுடன் ஒரு மாத்திரையைக் கொண்டு வந்து அவளுக்கு நேராக நீட்டினான் தாமோதரன். வலி குறையாமல் இருக்கவே மறுத்துப்பேசாமல் அதை வாங்கி உட்கொண்டவள், "நீ மாத்திரை போட்டியா தாமு?" எனக் கேட்டாள், அவன் கைகளில் இருந்த காயங்களை ஆராய்ந்தபடி.


"சின்ன சின்ன செராய்ப்புதான், அதான் டி டி வேற போட்டாங்க இல்ல. போதும், எனக்கு மாத்தரையெல்லாம் ஒன்னியும் தேவையில்ல" என அவளுக்குப் பதில் கொடுத்துக் கொண்டே கையில் வைத்திருந்த பஞ்சால் அவளது நெற்றிக் காயத்தைத் துடைத்து அதில் களிம்பைப் பூசினான். அவன் கைகளில் இருந்து பறித்து அவன் காயங்களிலும் அவள் தடவ, அவளைப் பார்த்து விஷமமாகப் புன்னகைத்தான்.


"போதுமே" என அவனுக்குப் பழிப்பு காண்பித்து இதழ் சுழித்தவளின் முகமென்னவோ சிவந்துதான் போனது.


வஞ்சனை இல்லாமல் அவளை இரசித்தவனாக, "ஒனக்கு இதெல்லாம் கூட வருமா மங்க" என்ன பகடி பேசியவனின் எதிரில் நிற்க கூட முடியாத அளவுக்கு நாணிப்போனாள்.


நல்ல வேளையாக அவனுக்குக் கைப்பேசியில் ஏதோ அழைப்பு வர, அவன் பேசிக்கொண்டே அங்கிருந்து அகன்றுவிடவும், "ஷ்… அப்பாடா!" என ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.


'ஆமா, ஊர்ல இன்னாடான்னா இவன என்னவோ அம்மாம்பெரிய ஸ்டாட்டர்ஜிஸ்ட்ன்னு சொல்லிக்கறாங்க!  நாம இங்க வந்ததுல இருந்து நம்ம பின்னாலயே சுத்திகினு கெடக்கானே, இவன் எப்பதான் அவன் வேலைய பாப்பான்?' எனத் தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்.


அவனுடன் இணக்கமாக இல்லாத பொழுதே அதீதமாக அவளை ஆக்கிரமிப்பவனைப் பற்றி இப்பொழுது சொல்லவா வேண்டும்?


அழைப்பைப் பேசி முடித்து திரும்ப வந்தவனின் முகம் தீவிர பாவத்துக்கு மாறியிருக்க, "மங்க, நீ ஒன்னியும் கும்பலோட பஸ்ஸுல போவ தேவையில்ல, கார்லயே போ! செல்வத்த ட்ரைவ் பண்ணிட்டு வரச்சொல்லிட்டேன். கூடவே அவம்பொண்டாட்டியையும் புள்ளைங்களையும் இட்னு வர சொல்லியிருக்கேன். ட்ரேவலிங்ல உனக்கு நல்லாவே பொழுது போவும்" என்றான் கட்டளையாக.


முதலில் பாதுகாப்பு குறித்து அவள் எதையுமே யோசிக்கவில்லையே தவிர, இப்பொழுது தாமு இப்படி சொல்லவும் தன்னால் செல்வம், தேவி மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற பயம் வந்தது.


மற்றவருடன் பேருந்தில் சென்றாலும் கூட இதே நிலைதான் என்பது மனதில் உரைக்க, பேசாமல் போகாமலேயே இருந்து விடலாம் என்று கூடத் தோன்றியது. ஆனால் அதுவும் சாத்தியப்படாது.


"இல்ல தாமு வேணாம். இந்த லக்கேஜ் மட்டும் கேசவன் கிட்ட கொடுத்து அனுப்பிட்டு, நான் என் ஃபிரெண்ட்ஸ் கூட நேரா அங்க போயிடலாம்னு இருக்கேன்" என்றாள் தயக்கத்துடன்.


"எந்த ஃபிரெண்ட்ஸ்?" எனக் கேட்டான் கூர்மையாக.


"நேத்து மகாபலிபுரத்துல பார்த்த இல்ல, அவங்கதான். அவங்களும் திருப்பதியில் சாமி தரிசனம் பண்ணனும்னு சொன்னாங்க. வனா கல்யாணம் முடிச்சுட்டு, அவங்கள இட்டுனு போயிட்டு வரலாம்னு இருக்கேன்" எனத் தட்டுத் தடுமாறி சொல்லி முடித்தாள்.


"இத பத்தி நீ ஏன் முன்னாலயே எங்கிட்ட சொல்லல?" என்று அவன் கேட்டதற்கு,


"பொறுமையா உக்காந்து எதையுமே பேசதான் நமக்கு நேரமே இல்லையே" என்ன பதில் கொடுத்தாள் பட்டென்று.


அதில் சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டு, "மத்ததெல்லாம் நல்லா வக்கனையா பேசு!" என்று கடிந்து, "ஆமா எப்படி போகறதா பிளான் பண்ணி இருக்கீங்க?" எனக் கேட்டான் குதர்க்கமாக.


"மெட்ராஸ் ஃபிரண்டு ஒருத்தங்க, அவங்களோட இன்னோவா எடுத்துட்டு வராங்க" என்றாள் அவன் கேட்ட அதே தொனியில். இது எல்லாமே அவர்கள் முன்பே முடிவு செய்து வைத்திருந்ததுதான். அவர்கள் இங்கே வந்திருக்கும் நோக்கம் வேராக இருந்தாலும், தங்கையின் திருமணத்திற்கு அவர்களை எல்லாம் அழைக்காமல் இருந்தால் மரியாதையாக இருக்காது என்கிற காரணத்தினால் அழைத்திருந்தாள்.


"இனிமே இப்படி எல்லாம் ஒன்ன தனியா அனுப்ப முடியாது மங்க, புரிஞ்சுக்க! நீ என் பொண்டாட்டின்னு கொஞ்சம் கொஞ்சமா வெளிய தெரிய ஆரம்பிச்சிருக்கு! மீடியாக்குப் போச்சுன்னா இப்ப இருக்குற மாதிரி கூட உன்னால ஃப்ரீயா நடமாட முடியாது" என்றான் கராராக.


அதிர்ந்து அவனைப் பார்த்தவள், "பயமா இருக்கு தாமு, நேத்து மாதிரி ஏதாவது நடந்துச்சுன்னா என்னால, தேவி குடும்பத்துக்கு எதுவும் கெடுதல் வந்துடக் கூடாது" என்றாள் அச்சம் மேலோங்க.


"லூசு மாதிரி ஒளராத மங்க, நேத்து நடந்த அட்டாக் என்ன குறிவெச்சு செஞ்சது. என் கூட இருந்ததுனால உனக்கு போஸ்ட் டிரமாடிக் ஸ்ட்ரெஸ் மாதிரி ஆயிடுச்சுன்னு நெனைக்கறேன். அதனாலதான் ஒன்ன மறந்து என்னென்னவோ செஞ்சுட்டு இருக்க! ஏதோ ஒரு விதத்துல இது எனக்கு அனுகூலமா போயிடுச்சுன்னு வெச்சுக்க" என்று ஒரு நொடிக் கிறங்கினாலும், "எனக்கு இப்ப வேலை இருக்கு, இல்லனா ஒன்ன இப்படி தனியா போக விடவே மாட்டேன்”


”எதுக்கும் பயப்படாத, செல்வம் கூட இருந்தா ஒரு படையே கூட இருக்கிற மாதிரி. அதனாலதான் அவங்கூட போவச் சொன்னேன். அதோட இல்லாம என்னோட பாடிகாட்ஸ் டீமும் உங்களை ஃபாலோ பண்ணுவாங்க.”


”உன் ஃபிரெண்ட்ஸ வேணும்னாலும், ஜாயின் பண்ணிக்க சொல்லு. ஆனா, நீ ஒன்னியும் தனியா போவ தேவையில்ல" என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டான். அவன் இவ்வளவு தூரம் செல்லும் பொழுது அதைக் கேட்பதைத் தவிர அவளுக்கும் வேறு வழி இல்லாமல் போனது.


குளித்து உடை மாற்றிக் கொண்டு பிறந்த வீட்டிற்குச் சென்றவள், எல்லோரையும் பார்த்துவிட்டு  மீண்டும் இங்கே திரும்ப வந்தாள்.


அந்த நேரம் தாமு அங்கே இல்லாமல் போனது அவளுக்கு வசதியாகிப்போனது. தன் கைப்பையில் இருந்த பேசிக் மாடல் ஃபோன் ஒன்றை எடுத்தவள், அதை ஆன் செய்து டாக்டர் முகிலாவின் எண்ணுக்கு அழைத்தாள்.. முந்தைய தினம் மகாபலிபுரத்தில் அவளுடைய நண்பர்களைச் சந்தித்த பொழுது, இவர்களுடைய தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்களுக்காக அவர் இவளிடம் கொடுத்த ஃபோன் இது.


"என்ன லீடர், தங்க கல்யாண பிஸில இந்த உலகமே மறந்து போச்சு போலிருக்கு. நேத்து மார்னிங் நாம மீட் பண்ணதுக்கு அப்பறம் எந்த மெசேஜும் இல்ல. நாம கால் பண்ணலாம்னு ட்ரை பண்ணாலும் சுவிட்ச்ட் ஆஃப்ன்னு வருது" என இதமாக என்றாலும் கண்டனமாகத்தான் ஒலித்தது முகிலாவின் குரல்.


அதில் நியாயம் இருக்கவே செய்ததால், "சாரி டாக்டரே, நேத்து வீட்டுக்கு வரும்போது ஒரு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு, என்னோட இணையர் வேற பக்கத்துலயே இருக்கவும் என்னால உங்களைத் தொடர்பு கொள்ளவே முடியல" என விளக்கம் கொடுத்தாள்.


"ஓ மை காட்" என அவர் பதறவும், "இதுக்கே டென்ஷன் ஆனா எப்படி? ஆக்சிடென்ட் இல்ல. தட்ஸ் எ மர்டர் அட்டெம்ப்ட்ன்னு சொன்னா! அதுவும்  நான் நம்ம டீம மீட் பண்ணிட்டு திரும்பும்போது இப்படி நடந்திருக்குன்னா, சம்திங் பிஷ்ஷி, இல்ல? நமக்குள்ளையே ஒரு கருப்பு ஆடு இருக்கோன்னு டவுட் வருமா வராதா, டாக்டர்?" எனத் தான் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லி முடித்தாள்.


எதிர்முனை மௌனம் காக்க, "டாக்டர்" எனக் குரல் கொடுக்க, "யா... மங்கை, யாருன்னு யோசிச்சிட்டு இருக்கேன். நம்ம டீம்ல எல்லாருமே ஒரு நோபிள் காஸ்க்காக உயிரைக் கொடுத்து பாடுபட்டுட்டு இருக்கும்போது, நாம யாரன்னு சந்தேகப்படமுடியும்?" என வருந்தியவர், "இப்ப நம்ம ஆளுங்களோட சேஃப்டிதான் முக்கியம்" என்றார்.


"அதனாலதான் டாக்டர் நான் அவசரப்பட்டு எதையும் சொல்லல. இதனால வேற யாருக்கும் ஆபத்து வந்துடக் கூடாது. அத விட இம்பார்ட்டன்ட், யாருக்கும் யார் மேலையும் சந்தேகம் வரக் கூடாது, அது குழப்பத்தை ஏற்படுத்தும். ஸோ, இத ரொம்ப கேர்ஃபுல்லாதான் ஹாண்டில் பண்ணனும்" என்றாள்.


"எஸ்... மங்க, நீ சொல்றது ரொம்ப கரெக்ட்" என்றவர், "உன் சிஸ்டர் மேரேஜுக்கு வரத பத்தி பேசலாம்னுதான் ஒன்ன கான்டாக்ட் பண்ண ட்ரை பண்னேன். பட், இந்த சிச்சுவேஷன்ல நாம் எல்லாரும் ஒரே இடத்துல கேதர் ஆகறது நல்லதில்ல. நம்ம பிளான நல்லபடியா எக்சிக்யூட் செய்ய எல்லாரும் சோஃபா இருக்கறது ரொம்ப முக்கியம். ஸோ, நாங்க யாரும் உன் சிஸ்டர் மேர்ஜ்க்கு வரல, ஓகே. நீ இதுக்காக ஃபீல் பண்ண மாட்டன்னு தெரியும்! ஆனாலும் சாரி!" என்றார் முகிலா.


"இட்ஸ் ஓகே டாக்டர். இனிமே இந்த ஃபோன சுவிட்ச் ஆஃப் பண்ண மாட்டேன். சைலன்ட்ல போட்டு கைலயே வெச்சுக்கறேன். ஸோ, எதுனாலும் மெசேஜ்ல கம்யூனிகேட் பண்ணிக்கலாம். யாரோ வர மாதிரி இருக்கு, கட் பண்றேன். பை" என அவசரமாக அழைப்பைத் துண்டித்துவிட்டு வெளியில் எட்டிப் பார்க்க, படியேறி அங்கே வந்துகொண்டிருந்தான் தாமோதரன்.        


 “எல்லா ஏற்படும் முடிஞ்சுதா, என்ன எதுன்னு கேசவனாண்டத்தான் பேசிட்டு வரேன். அவங்க எல்லாரும் பதனோரு மணிக்கா பொறப்படறாங்களாம், நீ அவங்க கூட வரலன்னு சொல்லிட்டேன். பரவால்லன்னுட்டான்! உந்தாத்தா கூட சரின்னு சொல்லிடுச்சு! வனாவ வேணா உங்கூடவே கார்ல அனுப்பறாங்களான்னு கேட்டேன். உஞ்சித்தி வேணான்னுடுச்சு!" எனத் தகவல் சொன்னான்.


"இதெல்லாம் சரிதான், ஆனா அப்பாவ நெனச்சாதான் வேதனையா இருக்கு தாமு. அதால கல்யாணத்த கண்ணால கூட பாக்க முடியாம போச்சே!" என வருந்தினாள் மங்கை.


"எல்லாம் லைவ் ஸ்ட்ரீமிங் பண்ணப்போறங்க! அதுல பார்த்துக்கும்! அதோட, நாலு நாளைக்கு உங்கப்பாவ பார்த்துக்க மேல் நர்ஸ் போட்டிருக்கேன். கூடவே நம்மூரு ஆளுங்க ரெண்டு பேரு தொணைக்கு இருப்பாங்க. நம்மூட்டுலே எல்லாருமே, விடிகாலைல பொறப்பட்டு, முகூர்த்தத்துக்கு மட்டும்தான் வரப்போறோம். அப்பப்ப யாரவது ஒருத்தர் போய் பார்த்துக்குவோம். சாப்பாடு கூட இங்க இருந்துதான் போவுது, கவலப்படாத" என்றான்.


அவனது அக்கரையில் கண்களில் கண்ணீர் முட்டியது. அதை உள்ளிழுத்தபடி, அவனது தோள்களில் சாய்ந்துகொண்டாள். அனிச்சையாக  அவனது ஒரு கரம் அவளை வளைக்க, மறு கரம் ஆறுதலாக அவளுடைய கூந்தலை வருடியது.


'இந்தக் காலம் என்பது ஒரு மனிதனை எப்படி தலை கீழாக மாற்றிப் போடுகிறது!' என்ற எண்ணம் தோன்ற, தன் மனம் அவன்பக்கம் இப்படி சரிந்து கிடப்பதின் காரணம் நன்றாக விளங்கியது மங்கைக்கு.


"சரி, நேரமாகுது, நீ எல்லாத்தையும் எடுத்து வெச்சிட்டு, அங்க போய் அவங்கள வழி அனுப்பிட்டு வா! செல்வத்த ஒரு மணிக்கா வரச்சொல்லியிருக்கேன். மதிய சாப்பாடு முடிச்சிட்டு, அவங்கூட கிளம்பு" என்று தாமு சொல்ல, மனமே இல்லாமல்தான் அவனிடமிருந்து பிரிந்து சென்றாள்.


ஊராரையும் உறவினர்களையும் அழைத்துச் செல்ல, இரண்டு பெரிய சொகுசுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


வீட்டில் சாமிக்கு விளக்கேற்றி வணங்கிவிட்டு, எல்லோரும் பேருந்தில் ஏற, "பார்த்து பத்திரமா வா, மங்க" என்று சொல்லிவிட்டு சந்தானமும் ஏறி அமர்ந்தார்.


"போயிட்டு வறேன்க்கா" என அவளைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டாள் வனா.


"போதும் வனா, நேரமாகுது பாரு, சீக்கிரம் வா" என அவளை அவசரப்படுத்திய மகேஸ்வரி, "கிளம்பறோம் மங்க" என்றபடி வனாவின் கைப்பற்றி இழுத்துக்கொண்டு பேருந்தில் ஏறி அமர, அவளுக்குக் கைக் காண்பித்துவிட்டு கடைசி ஆளாகப் போய் உள்ளே உட்கார்ந்தான் கேசவன். 'எவ்வளவு பொறுப்பா இருக்கான்! இதுக்கும் கூட தாமுதான் காரணமா இருக்கும்' என்ற எண்ணம்தான் தோன்றியது.


ஒரு தேங்காயின் மேல் கற்பூரத்தை வைத்துக் கொளுத்தி இரண்டு பேருந்துக்கும் சுற்றி உடைத்துவிட்டு ஓட்டுநர்கள் அவற்றைக் கிளப்ப, சக்கரத்துக்கு அடியில் நசுங்கிய எலுமிச்சைகளின் வாசம் மூளைக்குள் ஏறி ஒரு புத்துணர்வைக் கொடுத்தது.


பேருந்து அந்த வீதியிலிருந்து திரும்பிக் கண்ணை விட்டு மறையும் வரை அங்கேயே நின்றவள், பிறகு உள்ளே சென்று வேலுமணிக்கு அருகில் அமர்ந்தாள்.


தாமு சொன்ன ஆண் செவிலியரும், அவர்கள் ஊரில் வசிக்கும் செல்லம்மாவும் அவளுடைய கணவன் செந்திலும் துணைக்கு இருக்க, நிம்மதியாக உணர்ந்தாள்.     


வேலுமணியும் கூட தன் நிலையை மனதார ஏற்றுக்கொண்டுவிட்டான் போலும். தன் மனக்குறை எதையும் வெளிக்காண்பித்துக் கொள்ளாமல், மகளின் திருமணத்தை எண்ணி மகிழ்ச்சியுடனேயே காணப்பட்டான்.


நேரம் செல்லவும், அவனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பியவள், தாமுவின் வீட்டிற்குப் போய், மதிய உணவை முடித்துக்கொண்டு உடை மாற்ற மாடி அறைக்கு வந்தாள். வரவேற்பறையிலேயே உட்கார்ந்து ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தான் தாமு.


"இந்தப் பூமியும் பேராசைப் பிடித்த மனித இனமும், தமிழில் ஜெ.சாதனா! வாவ்... தாமு, இது உன் வெணம் எழுதின 'க்ரீடி ஹ்யூமன் வெர்சஸ் தி எர்த், புக்கோட தமிழாக்கம்தான? அதுக்குள்ள ரிலீஸ் ஆயிடுச்சா?" என அதீத வியப்புடன் கேட்டாள் மங்கை.


"அவங்க, என்னோட பேவரைட் ஆத்தர் அவ்வளவுதான். மத்தபடி எம்மங்க மட்டும்தான் எனக்கு! பேருக்குக் கூட அங்க யாரையும் கூட்டு சேர்க்காத, புரிஞ்சுதா" என்ற அவனது மிரட்டலில் உணர்ச்சிப் பிழம்பாகிப்போய், விழி விரித்து அவன் முகம் பார்த்தவளை இழுத்து தன் மீது சரித்து, முறையில்லாமல் பேசிய அவளது இதழ்களுக்குத் தண்டனைக் கொடுக்கத் தொடங்கினான் தாமோதரன்.


அந்த இரண்டு மூன்று நாட்கள் பிரிவைக் கூட தாங்கமாட்டாமல், இறுகிய அணைப்புகளும், நீண்டு கொண்டேபோகும் முத்தங்களும் முற்றுப்பெறும் தருணத்தை வெறுத்தவனாக பலவாறான தண்டனைகள் மூலம் அவளை ஒரு வழி செய்துவிட்டான்.


'இனி ஒரு பிரிவுக்கு இடங்கொடுக்கவே மாட்டேன்' என்கிற மனநிலையில் அவனிருக்க, எந்த நேரமும் ஏற்படக்கூடிய ஒரு நிரந்தரப் பிரிவை எதிர்நோக்கி தயாராக இருந்த மங்கைக்குத்தான் அவனை எண்ணிக் கவலை பிடித்துக் கொண்டது.


கெஞ்சியும் மிஞ்சியும் அவனிடமிருந்து தப்பித்து, ஒருவழியாகக் கிளம்பிக் கீழே வந்தாள். பெரிய இரக கார் ஒன்றில் அவளுக்காக தன் குடும்பத்துடன் காத்திருந்தான் செல்வம்.


கூடவே மற்றுமொரு வாகனத்தில் தாமுவின் பாதுகாவலர்கள் அமர்ந்திருப்பதையும் கவனித்தாள்.


வீட்டில் வேலை செய்யும் ஆட்கள் அவளுடைய பயணப் பொதிகளைக் கொண்டு வந்து காரில் வைக்க, வீட்டில் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு ஏறி உள்ளே உட்கார்ந்த மங்கை, முன்னிருக்கையில் பேரனுக்கு அருகில் ஒய்யாரமாக உட்கார்ந்திருந்த பூங்காவனம் கிழவியைப் பார்த்து வியந்தே + போனாள்.


அவளைப் பார்த்த நொடி உற்சாக மிகுதியில் கிழவி வளவளவெனப் பேசத் தொடங்க, அவருக்கு மேல் வாயாடினாள் நான்கே வயதான… தேவி, செல்வத்தின் இளைய மகள். மூத்தவளோ தேவியைப் போலவே அவ்வளவு சமர்த்துக் குட்டியாக இருந்தாள். பிள்ளைகள் இருவரும் அவளுடன் நன்றாக ஒட்டிக் கொள்ள, அந்தப் பயணம் இனிதாக அமைந்தது.


0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page