13. சதிவலை
3.பேரதிர்ச்சி
மயிரிழையில் உயிர் தப்பியதில் அதிர்ந்து போயிருந்தான் தாமு. சில நிமிடங்கள் எதைப் பற்றியும் சிந்திக்க முடியாத அளவுக்கு அவனது மூளை வேலை நிறுத்தமே செய்துவிட்டது.
நான்கு பெரிய இரக கார்கள் மற்றும் பத்து புல்லட்டுகளை நிறைத்திருக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட சிறப்பு பயிற்சிகள் பெற்ற மெய்காப்பாளர்கள் அடங்கிய பாதுகாப்புக் குழு ஒன்றை ஏற்படுத்தி வைத்திருக்கிறான் தாமோதரன்.
இவனுக்கு ஒன்றும் செல்வத்துக்கு ஒன்றும், மேலும் அவனது முக்கிய பாதுகாவலர் இருவருக்கும் என லைசன்ஸுடன் கூடிய துப்பாக்கிகளும் வாங்கி வைத்திருக்கிறான்.
எங்கு செல்வதாக இருந்தாலும் அவர்கள் இல்லாமல் அவன் செல்வதில்லை என்பதுதான் வழக்கமாக இருந்தது.
இவ்வளவு பெரிய கூட்டத்தை வைத்துக்கொண்டு நிலமங்கையுடன் சகஜமாக நடமாட முடியாது என்கிற ஒரே காரணத்துக்காக, என்று அவள் வெளிநாட்டிலிருந்து திரும்ப வந்தாளோ, அன்றே தன் கான்வாயைத் தவிர்துவிட்டு தன்னுடைய பாதுகாப்பு வளையத்தை மொத்தமாக தளர்த்திவிட்டிருந்தான்.
அவனுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பது தெரியும்தான். ஆனால் எதிரிகள் இவ்வளவு தூரம் கொலை செய்யும் அளவுக்கு இறங்குவார்கள் என அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. காரணம் அந்த அளவு தைரியம் இங்கே யாருக்கும் கிடையாது.
இதைச் செய்தது யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்து அவனது மூளையைக் குடைந்துகொண்டிருந்தது.
அருகில் நின்றவளைப் பாதுகாப்பாக தன் கைவளைவிற்குள்ளேயே வைத்தபடி பெரிய பெரிய மூச்சுக்களை எடுத்து தன்னை மீட்டுக் கொண்டவன், விக்ரமை அழைத்து தகவலைச் சொன்னான்.
"அறிவில்ல ஒனக்கு? எப்படிடா இவ்ளோ லதார்ஜிக்கா உன்னால இருக்க முடியுது? காலைல நீ தனியா டிரைவ் பண்ணிட்டு வந்துருக்கேன்னு சொன்ன பாரு, அப்பவே உள்ளுக்குள்ள ஏதோ நெருடிச்சு" என்று வகையாக அவனைக் கடிந்து கொண்டவன், "நீ அங்க நடுரோட்டுல தனியா நின்னுட்டு இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு இங்க பதைபதைச்சிட்டே இருக்கும், சரி ஜாக்கிரதையா இரு நான் பார்த்துக்கிறேன்" என்று சொல்லி அவனை மேற்கொண்டு பேசவே விடாமல் அழைப்பைத் துண்டித்து விட்டான்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் உட்பட சகல வசதிகளையும் உள்ளடக்கிய, சென்னையில் உள்ள மிகப் பிரபல மருத்துவமனையின் பெயரை தாங்கிய ஆம்புலன்ஸ் ஒன்று அங்கு வந்து நின்றது.
துரிதமாக இருவரையும் அதன் உள்ளே அழைத்துச் சென்று உட்கார வைக்க, "முதல்ல இவங்கள பாருங்க" என்றான் தாமு.
"இல்லல்ல, இவருக்கு தான் நிறைய காயம் இருக்கு அதனால இவர அட்டென்ட் பண்ணுங்க" என்று அவள் அவன் காயங்களைப் பார்த்து அக்கறையுடன் சொல்ல, இப்படி மாற்றி மாற்றி பேசிக் கொண்டே இருந்தால் தாமதமாகும் என்பதை உணர்ந்து, மறுத்துப் பேசாமல் சிகிச்சைக்கு ஒத்துழைத்தான்.
முதலில் தாமுவின் கையில் ஏற்பட்டிருந்த காயங்களைச் சுத்தம் செய்து ஆங்காங்கே பேண்டைட் போட்டுவிட்டு, அவளுடைய காயங்களுக்கும் மருந்து தடவி, நெற்றியில் பிளாஸ்டர் ஒட்டி, மருத்துவரும் செவிலியரும் இருவருக்கும் ஊசியையும் செலுத்தினர். போதும் போதாத குறைக்கு சில மாத்திரைகளை வேறு கொடுத்து உட்கொள்ள வைக்க, சர்… சர்… என வரிசையாக வந்து நின்ற வாகனங்களிலிருந்து இறங்கிய, சீருடை அணிந்த பாதுகாவலர்கள் பத்துபேர், அந்த ஆம்புலன்ஸை சூழ்ந்து கொண்டனர்.
அந்த நொடிவரைக்கூட தைரியமாக இருந்த நிலமங்கைக்கு இந்தக் கூட்டத்தைப் பார்த்ததும் ஒரு மாதிரி படபடப்பாகிப்போனது.
"டென்ஷன் ஆவாத, என் ஃபிரண்ட் விக்ரமோட கான்வாய்… எமர்ஜன்சிக்கு அனுப்பியிருக்கான்" என்றவன், 'பாத்தியா என்னோட பவர' என்பதுபோல கெத்தாக தன் மீசையை முறுக்கிவிட்டபடி மிதப்பாக அவளை ஒரு பார்வை பார்க்கவும், மிகவும் முயன்று தன்னை இயல்பாகக் காண்பித்துக் கொண்டவள், அவனுடைய கரத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டாள்.
அவளுடைய முகக் குறிப்பை பார்த்து, 'என்ன ரியாக்ஷன் இது, இப்படி நம்மள கன்ப்யூஸ் பண்றாளே?' என, என்னதான் நினைக்கிறாள் என்று எதையுமே அனுமானிக்க முடியாமல் தவித்தான் தாமோதரன்.
முதலில் வீடு போய் சேர்ந்தால் போதும் என்று தோன்ற, "முடிஞ்சுருச்சுதான டாக்டர்" என்று கேட்டான்.
"ஓவர், உங்களுக்கு எதுவும் டிஸ்கம்ஃபர்ட்ஸ் இல்லனா நீங்க வீட்டுக்குப் போகலாம். இல்லனா ஹாஸ்பிடல் போய் ஒரு ஒன் டே அப்சர்வேஷன்ல இருக்கீங்களா?" என அந்த மருத்துவர் கேட்க, "நோ… நோ… ஹைலி இம்பாசிபிள்" என்று மங்கையும், "நோ நீட் டாக்டர், வீ ஆர் பர்ஃபெக்ட் லி ஆல் ரைட்"என்று தாமுவும் ஒரு சேர சொல்லிவிட்டு ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அதைப் பார்த்து புன்னகைத்த மருத்துவர், "தென் ஃபைன்" என்று இங்கிதமாக ஒப்புக்கொள்ள, இருவரும் ஆம்புலன்ஸில் இருந்து கீழே இறங்க, அந்த வாகனம் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.
சரியாக அதே நேரம் அவர்களை நெருங்கி வந்து நின்றது அந்தப் பக்கமாக கடந்து போன காவல்துறையின் ரோந்து வாகனம்.
அங்கே ஓரமாக, விபத்துக்குள்ளான அவனது வாகனம் வேறு இருக்க, இந்தக் கொலை முயற்சியைப் பற்றி காவல்துறைக்கு எந்தத் தகவலும் செல்ல வேண்டாம் என முடிவு செய்தவன், காவல் துறை அதிகாரி வந்து கேள்வி கேட்டால் என்ன சொல்வது என்று யோசித்தபடி இருக்க, அந்த வாகனத்தில் இருந்து இறங்கி வந்த அதிகாரி அவனுக்கு பரிச்சயமானவராக இருக்கவும் அவனுக்கு வசதியாகப் போனது.
"ஹாய் மிஸ்டர் டீஜே, ஆக்சிடென்ட் மாதிரி இருக்கே, யாரோ என்னவோன்னு நெனச்சிட்டு வந்து பார்த்தா நீங்க நின்னுட்டு இருக்கீங்க. வண்டி பிரண்ட் சைடு ஃபுல்லா டேமேஜ் ஆகியிருக்கு. யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லையே" என்று சரமாரியாகக் கேள்விகளைக் கேட்ட அந்த அதிகாரியின் முகத்தில் அதிர்ச்சி ரேகை படர்ந்திருந்தது. அவருடைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதி என்பதால், இவனுக்கு[ பெரிதாக எதுவும் நடந்திருந்தால் மேலிடத்திலிருந்து அவரைக் குடைந்தெடுத்து விடுவார்கள் என்கிற பயம்தான் காரணம்.
"நத்திங் மிஸ்டர் செந்தில், நானும் என் வைஃபும் மட்டும்தான் வண்டியில இருந்தோம். ரெண்டு பேரும் சேஃப். ஒரு கன்டெய்னர் லாரிக்காரன் தட்டிட்டு, பயத்துல நிறுத்தாம போயிட்டான். ஹிட் அன்ட் ரன் கேஸ் தான். இன் ஃபேக்ட் இவங்க எல்லாருமே ஜஸ்ட் இப்பதான் வந்தாங்க" என்றான் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்.
"வண்டி நம்பர் எதுவும் நோட் பண்ணிங்களா?" எனக் கேட்டார் அந்த அதிகாரி.
"இல்ல, ஷாக்ல இருந்ததுனால நோட்டீஸ் பண்ணல. இந்த ரீஜின்ல ஏதாவது சர்வைலன்ஸ் கேமரா இருந்தா நீங்கதான் செக் பண்ணி சொல்லணும், அது கூட யார் என்னன்னு தெரிஞ்சுக்கதான் மத்தபடி நான் எதுவும் கம்ப்ளைன்ட் பண்ண விரும்பல, ஐ மீன் இத பத்தி எதுவும் எந்த ரெக்கார்ட்லயும் வரக்கூடாது. பிகாஸ் இதையெல்லாம் ஹேண்டில் பண்ற அளவுக்கு எனக்கு இப்ப டைம் இல்ல" என்றான்.
"புரிஞ்சுது சார், பட் இந்த ஆக்சிடென்ட் ஆன வெகிகிள்" என்று அந்த அதிகாரி இழுக்க, "ஹாங், நாங்களே ரெக்கவரி பண்ணிக்கிறோம், யூ நீட் நாட் பாதர்" என்று அவன் அழகாக அவருக்குப் பதில் கொடுக்க, வைத்த கண் வாங்காமல் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் நிலமங்கை.
இது கொலை முயற்சி என்று அவளுக்குதான் நன்றாகவே புரிகிறதே! தனக்கு விளங்கிய இந்த விஷயம் இவனுக்குப் புரியாமலா இருக்கும்? இருந்தும் ஏன் இப்படி சொல்லி வைத்தான் என்று அவளுக்குக் குழப்பமாக இருந்தது. ஒரு விதத்தில் இவன் இதைப் பெரிது படுத்தாமல் விட்டது அவளுக்கு ஒரு சிறு ஆசுவாசத்தைத்தான் கொடுத்தது.
இப்படி கண்டும் காணாமலும் விட்டதுபோல தோன்றினாலும், தனிப்பட்ட முறையில் அதற்கு பின்னால் இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களைத் தொங்கவிட்டு உரிப்பான் அவன் என்பதை அவள் அந்த நேரம் அறியவில்லை.
அதற்கு மேல் எந்தக் கேள்வியும் கேட்டுக் குடையாமல் அந்தக் காவல்துறை அதிகாரி விடைப் பெற்றுக் கிளம்பினார்.
இதற்கிடையில் ரெக்கவரி வாகனமும் வந்து, உடைந்து நொறுங்கி இருந்த அவனது காரை அள்ளிப்போட்டு எடுத்துச் செல்ல, அந்த இடமும் சூழ்நிலையும் இப்படி ஒரு பெரும் விபத்து நடந்ததற்கான ஒரு சிறு அடையாளம் கூட இல்லாமல் மாறிப் போனது.
மின்னல் வேகத்தில் இவ்வளவு துரிதமாக நடந்தேறிய ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து, இவனைப் பற்றி தான் அறிந்து வைத்திருப்பது கொஞ்சம்தான் அறியாதது அதிகம் எனப் பிரமித்துப் போய் நின்றிருந்தாள் நிலமங்கை.
"ஷெல் வீ மூவ் சர்" என அவனுடைய அந்தப் பாதுகாப்பு குழுவின் தலைமை அதிகாரி மிகப் பணிவுடன் கேட்கவும், "யா, ஷ்யூர்" என்றவன் அவர் காண்பித்த வாகனத்தில் அவளுடன் போய் அமர்ந்தான்.
இரண்டு பேருமே அவரவர் நினைவுகளில் மூழ்கியபடி, பொன்மருதம் நோக்கிப் பயணப்பட்டனர்.
அவர்கள் ஊரை விட்டுச் சற்று தள்ளி, முக்கிய சாலையின் மீதே, அவனுடைய அலுவலக ரீதியான பயன்பாட்டிற்காக ஒரு மிகப்பெரிய விருந்தினர் மாளிகையைக் கட்டி வைத்திருந்தான் தாமு.
அந்த எல்லை வரை மட்டுமே அவனது பாதுகாப்புப் படைக்கு அனுமதி. அவனுடைய ஊர் அவனுடைய கோட்டை என்பதால் அங்கே அவனுக்கு எதராக ஒரு சிறு துரும்பு கூட அசையாது என்பது அவனது அசைக்க முடியாத நம்பிக்கை.
எனவே, வழக்கம் போல அங்கே வந்து இறங்கிக் கொண்டவன், சில நிமிட ஓய்வுக்குப் பின் விக்ரமின் ஆட்களைத் திரும்ப அனுப்பிவிட்டன்.
அடுத்த வேலையாக அவனுடைய பாதுகாப்புக் குழு தலைமை அதிகாரிக்கு அழைத்து அவனது மெய்க்காப்பாளர்கள் அனைவரையும் அங்கே வந்துவிடும்படி சொல்லிவிட்டு துண்டிக்க, அடுத்த நொடி செல்வத்திடமிருந்து அழைப்பு வரவும், “சொல்லுடா” என்றபடி அதை ஏற்றான்.
“இன்னாண்ணா இப்படி ஆயிடுச்சு? நீ அம்மாந்தொலவு போவப் போறேன்னு ஒரு வார்த்த சொல்லிருக்கலாம் இல்ல?” என்று எதிர்முனையில் அவன் அங்கலாய்த்தான்.
“டேய் நீ வேற, யாரு விக்ரம் சொன்னானா?” என இவன் சலிக்க, “பின்ன, எப்புடி நீ அவுங்க ரெண்டு போரையும் இப்புடி தனியா போக வுட்டன்னு சொல்லி என்ன லெப்ட் ரைட்டு வாங்கிடுச்சு. ஏண்ணா இப்படி செஞ்ச?” என்று விடாமல் புலம்பினான் செல்வம்.
“அதான் பத்துரமா வந்து சேந்துபுட்டோம் இல்ல, வுட்ரா. தட்டிட்டுப் போனவன் யாரு என்னன்னு விசாரிக்க சொல்லியிருக்கேன். அத மட்டும் என்னனு கவனி” என்றவன், “இத பத்தி வூட்டுல யாருக்கும் எதுவும் தெரியக் கூடாது சொல்லிட்டேன்” என அவனை எச்சரித்தே அழைப்பிலிருந்து விலகினான்.
அதன் பின் மங்கையை அழைத்துக் கொண்டு தன் இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கிப் புறப்பட்டான்.
good going...waiting to know more about DJ
Damu evlo kd ah iruka da nee accident anathu kuda veetuku teriama maraichita da, yar dan pannathu accident matina avan gaali dan