பகுதி -12
ஸ்வேதா பி.ஈ. படிப்பின் முதலாம் ஆண்டிலும், நந்தகுமார் மற்றும் பாலசரவணன் இருவரும் நான்காம் ஆண்டிலும் அதே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தனர்.
அன்றும் அதே சரக்கொன்றை மரத்தின் கீழே உட்கார்ந்திருந்தனர் ஸ்வேதா, வர்ஷினி, பாலா மற்றும் ஸ்வேதாவின் அண்ணா நந்தா நால்வரும்.
ஸ்வேதாதான் அவளது அண்ணனிடம், "அண்ணா ப்ளீஸ்டா, என்னையும் நாளைக்கு உன்னோட அழைச்சிட்டுப் போடா அண்ணா" என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
"ஏய் இப்படி மரியாதையே இல்லாம் பேசற இல்ல! அதனாலேயே உன்னை அழைச்சிட்டுப் போகக் கூடாதுன்னு தோனுது ஸ்வேதா" என நந்தா முறுக்கிக்கொள்ள,
"அண்ணாங்க! அண்ணாங்க! என்னை உங்க கூட கூட்டிட்டுப் போங்க அண்ணாங்க!" என்றவள்,
"இந்த மரியாதை போதுமா அண்ணாங்க?" எனப் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்கவும் நந்தா அவளைக் கொலைவெறியுடன் முறைக்க மற்ற இருவரும் சிரித்து வைக்க, அவர்களையும் சேர்த்து முறைத்தான் நந்தா.
அடுத்த நாள் நடக்கவிருந்த ஒரு இன்டர் காலேஜ் ஃபெஸ்டிவலில், அவர்களது கல்லூரி சார்பில், நடன நிகழ்ச்சியில் நந்தா அவர்கள் குழுவினருடன் கலந்துகொள்ளவிருக்கிறான்.
அங்கே வேடிக்கை பார்க்கச் செல்வதற்காகத்தான் ஸ்வேதா அவனிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள்.
வர்ஷினியும் “ஆமாம் நந்தா அண்ணா, எங்களையும் கூட்டிட்டு போங்க ப்ளீஸ்" என நந்தாவிடம் கோரிக்கை வைக்க,
"பாலுண்ணா, நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்களேன், இன்னைக்கு நடந்த சிம்போஸியத்துலதான் எங்களால பார்ட்டிசிபேட் பண்ண முடியல" என ஸ்வேதா பாலுவைத் துணைக்கு அழைக்க,
"போனாப் போகுது நந்தா, இவங்களையும் அழைச்சிட்டு போலாம்டா, அதான் இவ்வளவு கெஞ்சறாங்க இல்ல?" என பாலு அவர்களுக்குப் பரிந்து வந்தான்.
"நீ சொல்றதால ஒத்துக்கறேன். நீ எந்த ஈவன்ட்ஸ்லயும் பார்ட்டிசிபேட் பண்ணல இல்ல, அதனால நீதான் ப்ரொக்ராம்ஸ் முடியற வரைக்கும் இவங்க ரெண்டு பேருக்கும் பாடிகார்ட் வேலை பார்க்கணும், ஓகேவா?" எனக் கேட்க பாலாவும் கட்டை விரலைத் தூக்கிக் காண்பித்து தனது ஒப்புதலைத் தெரிவித்தான்.
மறுநாள் அந்தக் கல்லூரிக்கு நான்கு பேருமே வந்திருந்தனர்.
நந்தா நிகழ்ச்சிக்குத் தயாராவதற்காகச் சென்றுவிட மற்றவர் மூவரும் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்தனர்.
அங்கே பல கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் வந்து குவிந்திருந்ததால் அந்த அரங்கமே நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அங்கேதான் ஸ்வேதா ஹரியை முதன் முதலில் பார்த்தது.
அந்தக் கல்லூரியில்தான் பி.ஈ. நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான் ஹரி. அங்கே அவனைத் தெரியாதவர்களே இல்லை எனும் அளவிற்குப் பிரபலமாக இருந்தான் அவன்.
அதுவும் முந்தைய தினம் அங்கே நடந்த சிம்போஸியதில் அவன் முதல் பரிசும் பெற்றிருக்க எங்கேயும் ஹரி! ஹரி! என்ற பெயரே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.
ஸ்வேதா, வர்ஷினியை நோக்கி, "ஓவர் பில்டப்பா இருக்கே யாருடி இந்த ஹரி?" எனக் கேட்க,
"எனக்கு மட்டும் அவனைத் தெரியுமா என்ன?" என வர்ஷினி பதில் கொடுக்க அதே நேரம் நிகழ்ச்சிகளும் ஆரம்பிக்க, அவளுடைய கேள்வியின் நாயகனே மேடையில் தோன்றினான் அந்த விழாவின் ஒருங்கிணைப்பாளராக.
மிகத் தெளிவான ஆங்கிலத்தில், வசீகரத்துடன் அவன் வரவேற்புரையை வாசிக்கத் தொடங்கவும், ஹரி! ஹரி! ஹரி! என்ற மாணவர்களின் உற்சாகக் குரல் அந்த அரங்கமெங்கும் உயர்ந்து ஒலித்தது.
அவனைக் கண்ட அவளது விழிகள் இமைக்க மறந்தது.
பிறகு வர்ஷினி அவளை அழைக்கவும்தான் தன் நினைவிற்கு வந்தவள் நிகழ்ச்சிகளைக் கவனிக்கத் தொடங்கினாள்.
இவர்களுடைய கல்லூரியின் சார்பில் 'மடை திறந்து ஆடும் நதி அலை நான்’ ரீமிக்ஸ் பாடலுக்கு நந்தாவின் குழுவினர் ஆடிய நடனம் அங்கே குழுமியிருந்த எல்லா இளவட்டங்களையும் ஆட்டம் போட வைத்திருக்க, நிகழ்ச்சியின் நிறைவாக ஒரு பாடலைப் பாடுவதற்காக ஹரியை மேடைக்கு அழைத்தனர்.
‘பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும் விழி நான் உனக்கு.
தோயும் மது நீ எனக்கு, தும்பியடி நான் உனக்கு.
வாயுரைக்க வருகுவதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம்,
தூய சுடர் வானொளியே சூரையமுதே கண்ணம்மா...’
கூட்டத்தின் குதூகல ஆர்பரிப்புடன், தன் இனிய குரலால் அனைவரையும் கிறங்கடிக்கத் தொடங்கினான் ஹரி குறிப்பாக ஸ்வேதாவை.
ஸ்வேதாவிற்கு பாரதியின் பாடல்கள் என்றால் மிகவும் விருப்பம். அதுவும் சில பாடல்கள் அவளது உயிரினில் கலந்திருப்பது போல் தோன்றும். அப்படி ஒரு பாடல் தான் இது.
ஹரியின் குரலின் இனிமையிலும் அந்தப் பாடலின் வரிகளிலும் தன்னை மறந்து சுற்றுப்புறம் மறந்து கரைந்துகொண்டிருந்தாள் ஸ்வேதா.
அந்தப் பாடலை அவன் பாடி முடிக்கவும் அந்த அரங்கமே மாணவர்களின் கர ஒலியினால் அதிர்ந்தது. அப்பொழுதுதான் தான் இருக்கும் சூழலே நினைவில் வந்தது ஸ்வேதாவிற்கு.
அவனைப் ஏனோ பார்த்த உடனேயே பிடித்துப் போனது அவளுக்கு.
அது ஒரு ஈர்ப்போ அல்லது காதலோ என்றெல்லாம் இல்லை. ஆனால் அவனது அந்த ஆளுமை அவளை மிகவும் கவர்ந்திருந்தது அவ்வளவுதான்.
சொல்லிக்கொண்டே போனாள் ஸ்வேதா.
ஆச்சர்யத்துடன் அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ஹரி, "அப்படியா! என்னை அப்பவே பார்த்திருக்கியா?" என்றவன், "நான்தான் அன்னைக்கு உன்னை மிஸ் பண்ணிட்டேனா?" என அங்கலாய்க்க,
"ஆஹான்... நான் என்ன உங்கள மாதிரி செலிப்ரிட்யா என்ன? அவ்வளவு பெரிய கூட்டத்துல நீங்க என்னைப் பார்த்திருக்கறதுக்கு" என்ற ஸ்வேதா ஏதோ நினைவு வந்து பதறிவளாக,
"ஐயோ! நான் கிளம்பி வந்து ரொம்ப நேரமாயிடுச்சு ஹரி! இங்க வந்ததைப் பத்தி இன்னும் வீட்டுல யார்கிட்டயும் சொல்லலையே" என்றவாறே தனது கைப்பேசியை தேட, அதை அவளது ஹாண்ட்பேக்குடன் வீட்டிற்குள்ளேயே வைத்துவிட்டது அவளுக்கு நினைவில் வந்தது.
அதை எடுக்க வேண்டும் என உள்ளே செல்ல எத்தனித்து எழுந்தவளை இழுத்துத் தன்னுடன் இருத்திக்கொண்டு, "எவ்ளோ சீக்கிரமா உனக்கு ஞாபகம் வந்துடுச்சு ஸ்வேதா!" எனக் கிண்டலாகச் சொன்ன ஹரி,
"உன் மொபைல்ல இருந்து, நந்தாவுக்கு, நீ வரக் கொஞ்சம் லேட் ஆகும்னு மெசேஜ் பணணிட்டேன். அண்ட் ஸ்கூட்டியை விடப் போன என்னோட டிரைவர் நீ என் கூட வந்ததா அவன்கிட்ட சொல்லியிருப்பார், கூல்" எனச் சொல்லவும்,
"ஐயோ! எப்ப என் ஃபோனை எடுத்தீங்க" என ஸ்வேதா கொஞ்சம் கோபமாகவும், கொஞ்சம் வியப்புடனும் கேட்க,
"அது நீ நம்ம கார்ல உட்கார்ந்த உடனேயே" என்ற ஹரி,
"அதைக் கூட கவனிக்காம இருந்துட்டு நீ இவ்வளவு கோபப்பட்றது ரொம்ப தப்பு ஸ்வீட்..டா" என்று அவளை வார,
அவன் சொன்ன விதத்தில் அவனை முறைத்துக்கொண்டே சிரித்தவள், "நீங்க பக்கத்துல இருந்தா வேற எதையுமே என்னால கவனிக்கவே முடியலையே" எனறாள் முணுமுணுப்பாக.
அவள் சொன்னது புரிந்தாலும், அவனுக்குப் புரியாததை போலவே, "என்ன சொன்ன? என்ன சொன்ன?" என ஹரி கேட்க,
"ம்ம்க்கும்... இப்படி அப்பாவி ரீயாக்ஷன் கொடுக்கறதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல" என நொடித்துக்கொண்டவள்,
"ம்... ஏர்லி மார்னிங்கே கிளம்பி கோவிலுக்குப் போறேன்னு சொல்லிட்டு வந்தவளை இங்க கடத்திட்டு வந்து வெச்சுக்கிட்டு, இப்படி பட்டினி போடுறீங்களே! இந்தக் கொடுமையைக் கேக்க ஆளே இல்லையா?" என அவள் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு புலம்பலாகச் சொல்லவும்,
பட்டென, "சாரிடீ! எனக்கு இருந்த கோவத்துல எல்லாமே மறந்து போச்சு" என்றவன் ஃபோனில் யாரையோ அழைத்துப் பேசிவிட்டு வந்தான்.
சிறிது நிமிடங்களிலேயே அவர்களுக்கான உணவை, அங்கேயே அவர்கள் சாப்பிடுவதற்கு ஏதுவாக ஒரு ட்ராலியில் வைத்து, அவனது பணியாளர் ஒருவர் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றார்.
"வீட்டுக்குள்ள கொஞ்சம் வுட் ஒர்க் செஞ்சிட்டு இருகாங்க. ரொம்ப டஸ்ட்டா இருக்கும். இங்கயே சாப்பிடலாம்" என அவன் சொல்லவும்,
"நம்ம காலேஜ்ல படிக்கும்போது அங்க லஞ்ச் சாப்பிடுவோம் இல்ல, அந்த ஞாபகம் வருது ஹரி" என்றவாறே அங்கே வந்திருந்த உணவை ஆராய்ந்தவள், அவனுக்குப் பரிமாற தொடங்க, "ஹேய், நீதான பசிக்குதுன்னு சொன்ன. நீ முதல்ல சாப்பிடு" என்றான்.
இருவருமாக உண்ணத் தொடங்கினர்.
மிக எளிமையான சிற்றுண்டியும் கூடவே சில பழங்களும் அதிலிருந்தன. அதில் இருந்த சிகப்பு நிற கொய்யப் பழத் துண்டுகளை அவளது தட்டில் வைத்த ஹரி, "உனக்கு கொய்யாப்பழம்னா ரொம்ப பிடிக்கும் இல்ல, நம்ம தோட்டத்து மரத்துல இருந்து இறக்கினது" என்று சொல்லிவிட்டு,
"இந்த இளநீர் கூட இங்க இருக்குற மரத்தில இருந்து இறக்கினதுதான். சாப்பிட்டுப் பார். செம்ம டேஸ்ட்டா இருக்கும்" என்று ஒரு கண்ணாடிக் குவளையிலிருந்த இளநீரை அவளை நோக்கித் தள்ளிவிட்டுத் தானும் ஒன்றை எடுத்துக்கொண்டான்.
அந்த இளநீரை விட அவன் பேச்சு அவ்வளவு இனித்தது ஸ்வேதாவிற்கு.
அனைத்தையும் ஒரு கைப் பார்த்துக் கொண்டே, "இப்ப சொல்லு ஸ்வேதா இன்டர் காலேஜ் மீட்ல பார்த்ததற்குப் பிறகு நம்ம காலேஜ்லதான் நீ மறுபடியும் என்னைப் பார்த்தியா?' என்று கேட்டான் ஹரி.
"ம்ம் ஆமாம், ஆனா அதுக்கு முன்னால ஒரு தடவ நான் பாரதியார் சாங்ஸ் எல்லாம் யூடியூப்ல தேடிட்டு இருந்தப்ப நீங்க அந்த இன்டர்காலேஜ் மீட்ல பாடியிருந்த அந்த வீடியோவ அதுல அப்லோட் பண்ணி இருந்தாங்க இல்ல அதைப் பார்த்தேன். அன்னைல இருந்து டெய்லி ஒரு தடவையாவது அதைப் பார்த்துடுவேன்" என அவள் பதிலுரைக்கவும்,
அவன் மீதான அவளது ரசனையில் அவன் மனம் நெகிழ்ந்துதான் போனது.
அதன் பின் அவளே தொடர்ந்தாள், "ஹரி! ஹரின்னு பாலுண்ணா தினமும் சொல்லிடடு இருந்த ஹரி நீங்கதான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல! இந்த பாலு அண்ணவாவது அதை சொல்லி இருக்கலாம்!" என குறைபட்டுக்கொண்டவள், "ஆனா அந்த வைரம் டீவியோட செலக்ஷன்க்கு போன அன்னைக்குத்தான் முதல் முதலா நம்ம காலேஜ்ல உங்களைப் பார்த்தேன்! நீங்க இங்கேயே வந்து படிப்பீங்கனனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல தெரியுமா?
அதுவும் நீங்க என் ஃப்ரெண்டா ஆனது எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?” என்று அவள் கேட்டுக்கொண்டே போக,
"ஓ அதனாலதான் புதுசா பழகற மாதிரி இல்லாம, அன்னைக்கு ரொம்ப கம்ஃபர்டப்ளா என் கூட அங்க வந்தாயா?" என அவன் கேட்கவும்,
"ம்ம்... ஆனா பாலு அண்ணா சொன்னதும் ஒரு காரணம்" என ஒப்புக்கொண்டாள் ஸ்வேதா.
"ஆனா நான் அதுக்கு முன்னாலயே உன்னைப் பார்த்துட்டேன் தெரியுமா?" என்ற ஹரி அவளை முதன்முதலாகக் கல்லூரி வளாக வாகன நிறுத்தத்தில் அவளேப் பார்த்ததை அவளிடம் சொல்ல விழி விரிய அவனைப் பார்த்த ஸ்வேதா "ஓ" என அதிசயிக்க,
"இதுக்கே இப்படி இந்தக் கோழி முட்டைக் கண்ணை விரிச்சுப் பார்த்தன்னா" என்று அவள் நெற்றியில் முட்டி,
"நான் அன்னைக்கே டோட்டலா ஃப்ளாட் ஆயிட்டேன்னு சொன்னா!? நான் எப்பவுமே உன்னை ஒரு ஃப்ரெண்டா மட்டும் நினைச்சதில்ல, நீதான் என் லைஃபேன்னு ஃபிக்ஸ் ஆயிட்டேன்னு சொன்னா!?" என்றவனின் கேள்வியில் அவளது கண்கள் கலங்கிப்போனது,
"நான்தான் உங்களை சரியா புரிஞ்சுக்கல" என்றாள் ஸ்வேதா வருத்தத்துடன்.
"இல்ல ஸ்வேதா! நானும் ஒரு காரணம்தான். உன் படிப்பு முடியற வரைக்கும் மனச குழப்பக் கூடாதுன்னு நான் நினைச்சதாலதான் எதையும் உன் கிட்ட வெளிப்படையா காட்டிக்கல" என்றான் ஹரி.
தனது மீதான அவனுடைய அக்கறை அவளது இதயம் முழுவதும் தித்திக்க, "அப்படியெல்லாம் சொல்ல முடியாது சாரே! நீங்க சொல்லாமலேயே உங்க மனசுல இருந்ததை நான் கண்டு பிடிச்சிட்டேன் தெரியுமா? என் பர்த்டே அன்னைக்கு" எனக் களிப்புடன் ஸ்வேதா சொல்லவும்,
"வாட்? அப்படியா?" என வியந்தான் ஹரி.
"ஹ்ம்! நீங்க் சொல்லலன்னா என்ன? உங்க மனசை உங்க கண்ணே என் கிட்ட சொல்லிடுச்சே!" பெருமை பொங்கச் சொன்னாள் ஸ்வேதா.
அன்று எனக்காகவே நீ தந்த பரிசு!
அன்று எனக்காகவே நீ அழகாக்கிய இந்த உலகம்!
அன்று எனக்காகவே நீ பாடிய பாடல்!
எனக்காவே நீ சிறப்பாக்கிய அந்த நாள்!
அன்று எனக்காகவே உன் பார்வை சிந்திய காதல்!
எனக்கானவன் நீதான் என்று
சொல்லாமல் சொன்னது!
எனக்குமட்டுமே நீ என்று
இன்றுதான் நான் உணர்ந்தேன்!
உனக்கு மட்டுமே நான் என்றாகும்
அன்நாளும் என்நாளோ?
எனக்காகவே நீ சொல்வாய்...
எனக்கே எனக்கான என்னவனே!!!
(ஸ்வேதா)
Comments