பகுதி - 5
அந்தக் கல்வி ஆண்டின் இறுதியிலிருந்தனர் அனைவரும். ஹரி, படிப்பு தொழில் என்று இரட்டை குதிரைகளில் பயணம் செய்துகொண்டிருக்க, சூழ்நிலை மிகவும் கடினமாகத்தான் இருந்தது.
ஆனால் அதை விரும்பியே செய்யத் தொடங்கியிருந்ததால் இரண்டிலிருந்துமே பின்வாங்க அவன் விரும்பவில்லை. அது அவனுக்குப் பழக்கமும் இல்லை.
புதிய இயந்திரங்களை வாங்கத் தந்தையை முன் வைத்து வங்கி கடனுக்காக வேறு முயன்று கொண்டிருந்தான். அதனால் அவ்வப்பொழுது கல்லுரியில் விடுப்பு எடுக்க என்று இருந்தது.
அப்படியே கல்லூரிக்கு வந்த நாட்களிலும் மதிய இடைவேளையில்கூட, அடுத்துச் செய்ய வேண்டியனவற்றைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்ததால் அவனது கலகலப்பு தொலைந்து போயிருந்தது.
பாலுவுக்கு ஓரளவுக்கு அவன் செயல்பாடுகள் தெரிந்தே இருந்ததால் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அவன் நிலை தெரியாத பெண்கள் இருவரையும் அது அதிகம் பாதித்தது, முக்கியமாக ஸ்வேதாவை.
எவ்வளவு சமாதானம் சொன்னாலும் புரிந்து கொள்ளாமல், அவனிடம் நேரடியாகக் கேட்கவும் தயங்கி, "ஹரிக்கு எதாவது உடம்பு சரியில்லையா?" என அவள் பாலுவைத் துளைத்தெடுக்க அவன் ஹரியிடம் வந்து புலம்பியிருந்தான்.
அவளது அந்தச் செயல் அவன் மனதை எந்த அளவிற்குக் குளிர்வித்தது என்பதை அவன் மட்டுமே அறிவான். அவனது குடும்பத்தில் ஒருவருக்கொருவர் கொள்ளும் அக்கறையை அவளிடமும் கண்டதில் உண்டான உவகை அது. அவளது மனநிலை புரிந்தாலும் முன்பு போலக் கலகலப்புடன் அவளுடன் நேரம் செலவிடவும் இயலவில்லை.
நாம் ஏதாவது ஒன்றை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் சமயத்தில்தான் நாட்கள் நத்தையின் வேகத்தில் நகரும்.
ஹரியும் அந்த செமெஸ்டர் விடுமுறைக்காகக் காத்திருந்ததாலும் வங்கிக் கடன் வேறு தாமதமாகிக் கொண்டிருந்ததாலும் ‘நாட்கள் இன்னும் வேகமாகச் செல்லாதா?’ என்று சற்று ஆயாசமாக இருந்தது அவனுக்கு.
அப்பொழுதுதான் ஒரு வெள்ளிக்கிழமை மதிய உணவு உண்ணும்பொழுது வர்ஷினி, "என்ன சுவீட்டா மேடம், பர்த்டே ட்ரீட் உண்டுதான? நந்து அண்ணா வேற எர்ன் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அதனால நீ எஸ் ஆகவே முடியாது” என்று அவளை மிரட்டிக்கொண்டிருந்தாள்.
உடனே பாலுவோ, "அட ஆமா, அடுத்த சாட்டர்டே சுவீட்டோட பர்த்டே இல்ல? இந்தச் சாப்பாட்டுராமிக்கு எப்பவும் ட்ரீட் பத்தி மட்டும்தான் நினைப்பு" என்று நக்கலாகச் சொல்லிவிட்டு,
"சொல்லு சுவீட் உனக்கு என்ன கிஃப்ட் வேணும்?" என்று கேட்டான்.
"நான் எப்பவோ அவளுக்கு பிடிச்ச கிஃப்ட்டா பார்த்து வாங்கி வச்சுட்டேன், உங்களை மாதிரியா?" என்று கெத்தாகச் சொன்ன வர்ஷினி, என்கிட்டயேவா என்ற பார்வை பார்த்து வைக்க,
அதற்கெல்லாம் அசராத பாலுவோ, "எனக்குத் தெரியுமே! பத்து ரூபாய்க்கு ஒரு ஜெல் பென் வாங்கியிருப்ப, அதுக்கே இந்த பில்ட் அப்" என்று அவளை வாற,
அவள் மொத்தமாகக் காண்டாகிப்போய் அங்கே கிடந்த குச்சியால் அவனை அடிக்கத் துரத்தவும், ஓடியவன் கவனிக்காமல் அங்கே வந்த வசுதாவின் மீது மோதி நின்றான்.
அவளோ அரண்டுபோய் மிரட்சியுடன் அவனைப் பார்க்க, "சாரி" என்றவன் அவளை முறைத்தவாறே நகர்ந்து சென்றுவிட்டான்.
அதற்குள் மலை இறங்கியிருந்த மாரியம்மாவிடம், "ஏற்கனவே என்ன பூச்சாண்டி ரேஞ்சுக்கு பார்ப்பா இவ. இப்ப கேட்கவே வேண்டாம்" என்று சொல்லிவிட்டு, "நாம என்னடான்னா அவளோட பர்த்டேவை பிளான் பண்ணிட்டு இருக்கோம். இப்ப இந்த ஸ்வேதா நம்ம கேட்டதுக்கெல்லாம் பதில் சொல்லாம அவ கூட கிளம்பிப் போயிடுவா பாரேன்" என்றான் காண்டாக.
ஆனால் ஸ்வேதாவோ, "பரவால்ல பாலுண்ணா! எனக்கு எந்த கிஃப்ட்டும் வேண்டாம். நீங்கல்லாம் இப்ப இருக்கற மாதிரியே வாழ்நாள் ஃபுல்லா என் கூடவே இருந்தா போதும்" என்று மனதாரச் சொல்லிவிட்டு,
“ஓகே... பை!” என்று கிளம்ப எத்தனிக்க, பாலுவும் வர்ஷினியும் உள்ளுக்குள் சலித்தவாறே அவளை முறைத்துக் கொண்டிருந்தனர்.
அதுவரை அனைத்தையும் ஒரு பார்வையாளரைப் போல அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் ஹரி.
ஏற்கனவே தன் வேலை மும்முரத்தில் அவளுடைய பிறந்தநாளை மறந்துவிட்டோமே என்ற எரிச்சலில் இருந்தவனுக்கு அவளுடைய இந்தச் செயல் மேலும் கோபத்தைக் கொடுத்தது.
"ஸ்வேதா! ஒரு நிமிஷம் நில்லு!" என்று அவளைத் தடுத்தவன், "இப்ப எதுக்கு அவசரமா கிளம்பற, அவள வேணா நம்மகூட வந்து உட்காரச் சொல்லு" என்று காட்டமாகக் கூற,
அவனுடைய குரலிலிருந்த எரிச்சலை உணர்ந்து, "இல்ல ஹரி, அவ யாரோடயும் மிங்கிள் ஆக மாட்டா, அவளோட இயல்பே அதுதான், ரொம்ப பாவம்பா அவ, ப்ளீஸ்! நான் அவளோட போறேனே" என்று ஸ்வேதா தன்மைகவே பதில் சொல்ல, அதற்கு மேல் அவன் ஒன்றும் சொல்லவில்லை என்பதால் அவளும் கிளம்பிச் சென்றாள்.
"ஸ்வேதா இப்படித்தான் சொல்வான்னு எங்களுக்குத் தெரியும் ஹரி, அதனாலதான் அவளை ஒண்ணுமே சொல்றதில்ல, ஆனா ஏன் இப்படி செய்யறான்னுதான் புரியவே மாட்டேங்குது" என்றான் பாலு வருத்தத்துடன்.
அவளின் இந்தச் செயலில் அவனுக்குமே வருத்தமிருப்பினும், “சரி விடு” என்ற ஹரி மனதிலே அவளது பிறந்தநாளை திட்டமிடத் தொடங்கிவிட்டான்.
***
அடுத்து வந்த இரண்டு நாட்களும் விடுமுறையென்பதால் திருவள்ளூர் சென்றான் ஹரி.
விஜயா தோசை வார்த்துக் கொண்டிருக்க, சமையற்கட்டின் மேடையில் உட்கார்ந்தவாறு அதைச் சாப்பிட்டுக்கொண்டே, "அம்மா நாளைக்கு என்கூட வந்து ஒரு புடவை செலக்ட் செஞ்சு கொடுக்க முடியுமா?” என்று கேட்க,
தனது காதுகளை அவராலேயே நம்ப முடியவில்லை. அதிசயித்தவாறே, "ஆஹான்! ஹரிப்பா யாருக்குப்பா புடவை?" என்று குதூகலித்தார் விஜயா.
"எல்லாம் உங்க டில்...லுக்குத்தான்" என்று சர்வச் சாதாரணமாகக் கூற,
"என்ன டில்லியா?" என்றவருக்கு என்ன சொல்கிறான் என்பதே புரியவில்லை.
"டி.ஐ.எல், டில்..னா டாட்டர் இன் லா மா, உங்க மருமகளுக்குத்தான்" என்று நீட்டி முழக்கிச் சொன்னவனின் தலையில் கொட்டு வைத்தவர்,
"இன்னும் நீ படிச்சே முடிக்கல, அதுக்குள்ள எனக்கு மருமகளைக் கொண்டு வரப்போறியா? போடா!" என விழிகளை உருட்டி எச்சரித்தார் மகனை.
"ப்ச்... எல்லாம் உங்க வீட்டுக்கார் பிடிவாதம், நான் இன்னும் ஸ்டூடண்டாவே இருக்கேன்! இல்லன்னா இந்த நேரத்துக்கு வேலைல ஜாயின் பண்ணி, சிக்ஸ் டிஜிட்ல சம்பளம் வங்கியிருப்பேன்" என்றான் ஹரி கெத்தாக.
"இப்ப மட்டும் என்ன குறைச்சலாம்? அதான் அப்பா பிஸினஸ்ல ஹெல்ப் பண்ண ஆரம்பிச்சுட்டியே! அதுல உனக்கு இன்கம்மும் வருதில்ல" என அவனை மெச்சியவர்,
“ஏய் சொல்லுடா! யாருக்குடா புடவை” என்று ஆர்வமாகக் கேட்கவும்,
"நம்ம ஸ்வேதாவுக்குதான் மா, அடுத்த வாரம் அவ பிறந்தநாளுக்கு கிஃப்ட் பண்ணத்தான்" என்றான் ஹரி.
அவன் சொன்ன ‘நம்ம ஸ்வேதா’விலும், அவனுடைய முக பாவனைகளிலும், ‘பையன் உண்மையாவே நமக்கு மருமகளைத் தயார் செஞ்சுட்டான் போலிக்கே!’ என மனதில் எண்ணிய விஜயா அவனை ஒரு சந்தேக பார்வை பார்க்க,
“அம்மா, அவ வெறும் ஃப்ரெண்டு மட்டும்தான், நீங்கத் தேவையில்லாத கற்பனையெல்லாம் பண்ணாதீங்க" என்று கடுகடுத்தான் அவன் அவரிடம் மேலும் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்கும் பொருட்டு.
இதற்குமேல் அவனிடம் எதுவும் கேட்டால் ஏடாகூடமாக ஏதாவது சொல்வான் என்று உணர்ந்த விஜயா, "சரி சரி, நாளைக்குப் போகலாம்" என்று அத்துடன் பேச்சை முடித்துக்கொண்டு தூங்கச் சென்றுவிட்டார்.
அடுத்தநாள் அவரை அண்ணாநகரில் இருக்கும் ஒரு பிரபல துணிக்கடைக்கு அழைத்துச் சென்றான் ஹரி. குதூகலமாக அவனுடன் சென்ற விஜயா, "சொல்லு ஹரி, எந்த மாதிரி சாரீ வாங்கணும்?" என்று கேட்க,
அதற்கு ஸ்வேதா வாட்ஸ் ஆப் முகப்புப் படமாக வைத்திருந்த அவளது போட்டோவைக் காண்பித்து, “இவளுக்கு சூட் ஆகற மாதிரி நீங்களே பார்த்து எடுங்கம்மா” என்றான்.
அவளுடன் ஃபோனில் மட்டுமே பேசியிருக்கிறார். அவள் படத்தை முதன் முதலில் பார்த்தவர், ‘ஆஹான் இவ மருமகளா வந்தா நல்லாத்தான் இருக்கும், ரொம்ப அழகா இருக்கா’ என்று மனதில் நினைத்தவாறே,
"என்ன விலைல வாங்கணும்?" என்ற அடுத்த கேள்வியை கேட்டார் விஜயா.
"ரொம்ப காஸ்ட்லியால்லாம் வேண்டாம்மா, அப்பறம் அவ அதை வாங்கிக்கவே மாட்டா. நார்மல் ரேட்லயே வாங்குங்க" என்றான் ஹரி.
‘பரவாயில்லையே, இந்த காலத்துல இப்படி ஒரு பெண்ணா?’ என்று வியந்தவர் ‘அதனாலதான் எம்பிள்ள கிஃப்ட் கொடுக்கற அளவுக்கு வந்திருக்கான்’ என்று நினைத்தவாறே பிங்க் நிறத்தில் வயலட் பார்டரிட்ட அழகிய ஆர்ட் சில்க் புடவை ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்.
பெண்களுக்கே உண்டான இயல்பில் ‘மகன் தனக்கும் ஒரு புடவை எடுத்துக்கொள்ளச் சொல்லுவான்!’ என்று அவர் எதிர்பார்த்திருக்க, அவனோ தேர்ந்தெடுத்த புடவைக்கான பணத்தைச் செலுத்திப் புடவையைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து அவரை அழைத்துக் கொண்டு வெளியில் வந்துவிட்டான்.
காரைச் செலுத்திக்கொண்டே அன்னையின் முக மாறுதலைக் கவனித்தவன், ‘செல்ல அம்மா’ என மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.
அதன்பின் பார்க்கிங் தேடி வண்டியை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு அவன் அவரை அழைத்துச் சென்ற இடம் ஒரு செல் ஃபோன் ஷோரூம்.
"யாருக்குடா ஃபோன் வாங்க போற?" என்று விஜயா கேட்க,
"உள்ள வாங்கம்மா சொல்றேன்" என்றவன், பல மாடல் ஃபோன்களை அவருக்குக் காண்பிக்க, அவருக்குப் பிடித்த நிறத்தில் அவர் அதைத் தேர்ந்தெடுக்க, "அம்மா புடவையை செலக்ட் பண்ணற மாதிரியே போனையும் செலக்ட் செய்யறீங்களே!” என்று கிண்டல் செய்து அவன் சிரிக்க,
"இதைப் பத்தி எனக்கு என்ன தெரியும், போடா?" என்று நொடித்துக் கொண்டார் அவர்.
"சரி சரி, இந்தப் ஃபோன் உங்களுக்குப் பிடிச்சிருக்குத்தான?” என்று கேட்டவனிடம்,
"எனக்கு பிடிச்சு என்ன ஆகப் போகுது? யாருக்கு இத நீ வாங்கறியோ அவங்களுக்குப் பிடிச்சா போறாதா?” என்றார் கடுப்புடன்.
"அதனாலதான் உங்ககிட்ட கேட்டேன்" என்றவனை வியந்து பார்த்தவர், "நிஜமாவாடா சொல்ற? இவ்ளோ காஸ்ட்லியான ஃபோன் நீ அப்பாவுக்குத்தான் வாங்கறியோன்னு நினைச்சேன்" என்று சிறுபிள்ளைபோல் குதூகலத்துடன் விஜயா கூற,
அதைக் கேட்டு சிரித்த ஹரி அந்தப் ஃபோன்னை வாங்கிக்கொண்டு அன்னையுடன் வீடு வந்து சேர்ந்தான்.
"உங்ககிட்ட இல்லாத புடவையாமா? அதனாலதான் உங்களைப் புடவை வாங்கிக்க சொல்லல. ஆனா பேசிக் மாடல் ஃபோன்தான வச்சிருக்கீங்க. அதனாலதான் இத வாங்கினேன். இந்த ஃபோன்ல நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்க அக்கா கூட வீடியோ கால்ல பேசலாம். இனிமே என்னையோ அப்பாவையோ இதுக்கு எதிர்பார்க்க வேண்டாம். இப்ப சந்தோஷம்தான?" என்று கேட்க,
‘மகன் தன்னைக் கண்டு கொண்டானே!’ என்று மனதிற்குள் வெட்கப்பட்டுச் சிரித்துக் கொண்டாலும் அவனை நினைத்துப் பெருமை கொண்டவர், "ரொம்ப சந்தோஷம் ஹரிப்பா!" என்று சொல்லிக்கொண்டே அவர்களுக்கான உணவைத் தயார் செய்யத் தொடங்கினார்.
அவனுடைய அப்பாவும் அங்கே வந்து சேர, மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டே உண்டு முடித்த பின் கணவரிடம் அந்தப் ஃபோன்னைக் காட்டிப் பெருமைப்பட்டுக் கொண்டவர், தந்தையும் மகனும் அவரைக் கண்டு ஓடி ஒளியும் அளவிற்கு, ஃபோன்னை உபயோகிப்பதைப் பற்றிய சந்தேகங்களைக் கேட்டு அவர்களைப் பாடாய் படுத்தி எடுத்துவிட்டார்.
அதே மகிழ்ச்சியுடன் அந்த நாளைக் கடந்து அடுத்த நாள் கல்லூரிக்குச் சென்றான் ஹரி.
***
காலையிலேயே வர்ஷினியை அழைத்து அவளிடம் அந்தப் புடவையைக் கொடுத்துவிட்டு, "இது ஸ்வேதாவுகு பர்த்டே கிஃப்ட். நானே வாங்கிட்டேன். இதுக்கு மேட்சா என்ன வாங்கணுமோ வாங்கிடு. நாம சேர்ந்தே கொடுத்திடலாம்" என்று சொல்லி ஹரி தனது ஏ.டீ.எம் கார்டை நீட்ட,
புடவையைப் பிரித்து பார்த்தவள், "புடவை செம்மயா இருக்கு ஹரிண்ணா! எல்லா ஆக்ஸஸரிஸும் வாங்க இன்னைக்கே ஷாப்பிங் போயிடமாட்டேன்?" என்று குதூகலித்தவாறு,
"நானே வாங்கிடறேன், இந்த கார்டெல்லாம் வேண்டாம்" என்று மறுத்து வகுப்புக்குச் சென்றுவிட்டாள்.
அன்றைக்கே பாலுவின் துணையுடன் சென்று அந்தப் புடவைக்கு மேட்சாக ரெடிமேட் ப்ளௌஸ் எளிய ஃபாஷன் ஜிவெல்லரி அனைத்தையும் வாங்கிவிட்டாள் வர்ஷினி. பாலு அதற்கான தொகையை அவளுடன் பகிர்ந்துகொள்ளவும் தவறவில்லை.
இதுவே அவர்கள் ஒருவரை ஒருவர் எந்த ஒரு சிறிய விஷயத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதற்கு ஒரு சரியான சான்று. இது அவர்களுடைய வாழ்நாள் முழுதும் தொடரும் என்பதுதான் உண்மை.
***
வெள்ளியன்றே அழகாக பேக்கிங் செய்யப்பட்ட அந்தப் பரிசுப்பொருட்களை, தான் வாங்கி வைத்திருந்த ஹாண்ட்பேக்குடன் சேர்த்து மூவரின் சார்பாகவும் ஸ்வேதாவிடம் கொடுத்த வர்ஷினி, "நாளைக்குக் காலை ஏழு மணிக்கு ரெடியா இரு. பாலு அண்ணா உன்னை பிக்கப் பண்ண வருவாங்க. உன் அப்பா அம்மாகிட்ட நாங்களே சொல்லிட்டோம்" என்று சொல்ல ஸ்வேதாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்.
அனைவரிடமும் ஸ்வேதா நன்றி தெரிவிக்க, "தேங்க்ஸாடி சொல்ற" என்ற வர்ஷினி கையில் வைத்திருந்த புத்தகத்திலேயே அவளை மொத்தி எடுக்க, அதற்கெல்லாம் அடங்காத ஸ்வேதா, "ரெயின் ரெயின் கோ அவே.. கம் அகைன் அனதர் டே" என்று ராகம் போட்டுப் பாடி இன்னும் இரண்டு அடிகளை அவளிடம் வாங்கிக்கொண்டாள்.
"ஹேய் வர்ஷி! பாவம் என் தங்க, பர்த்டே பேபி வேற, விட்டுடு" என்று பாலு அவளுக்குப் பரிந்து வர,
"நீங்க சொல்றதால போனாப்போகுதுன்னு விடறேன்" என்று ஸ்வேதாவுக்குப் பழிப்புக் காட்டி வர்ஷினி சிரிக்க, இதையெல்லாம் மெளனமாகப் பார்த்து உள்ளுக்குள்ளே மகிழ்ந்தாலும் இந்த நிலையில் ஸ்வேதாவிடம் தன் மனதை வெளிப்படுத்த விரும்பாமல் தன் காதலை தன் மனதின் ஆழத்தில் புதைத்துக்கொண்டிருந்தான் ஹரி.
***
コメント