Nee Enbathe Naanaga - 9
9 - நட்பின் பயணம்
ஜானவியின் சிந்தனையில் முழுக்க முழுக்க அன்புச்செல்விதான் நிறைந்திருந்தாள். தாயில்லாத அந்த குழந்தையின் மனதை தான் வேதனைப்படுதிவிட்டோமே என்று அவள் மனம் கலங்கியது. அதே நேரம் தான் செய்த தவறை தானே சரி செய்துவிட வேண்டும் என்று முடிவு செய்தாள்.
கிரிஜா சொன்னது போலவே காலையிலேயே மீனாவை ஜெகனுடன் அனுப்பிவிட்டிருந்தாள். அதன் பின் ஜானவி மகளுக்கு பள்ளி சீருடை அணிவித்து, தன்னுடைய மற்ற வேலைகளையும் முடித்துவிட்டு மகளை பள்ளிக்கு அழைத்து செல்ல தயார் நிலையில் இருந்தாள்.
அதேநேரம் செழியனும் அன்புச்செல்வியை பள்ளிக்கு அழைத்து செல்ல வேண்டி தன் வீட்டிலிருந்து வெளியே வர, ஜானவியும் தன் மகளை அழைத்து கொண்டு வெளியே வந்தாள்.
அன்புச்செல்வியின் முகத்தில் ஒருவித சோர்வு படர்ந்திருந்தது. அதேநேரம் மீனாவிற்கோ அவர்கள் இருவரும் மீண்டும் சண்டை போட்டு கொள்ள போகிறார்களோ என்ற ஆர்வம், அச்சம் இரண்டுமே மிகுந்தது.
ஆனால் செழியனுக்கு எந்தவித சிந்தனையும் இல்லை. அவன் தன் மகளை பள்ளிக்கு அழைத்து செல்வதில் மட்டுமே கவனமாக இருந்தான். அதுவும் நேற்று ஜானவி அவன் பேசியதற்கு எதவுமே பதிலுரைக்காத காரணத்தால் அவள் மனதில் என்ன இருக்கிறது என்று அவனுக்கு பிடிப்படவில்லை.
ஆதலால் செழியன் எந்தவித எதிர்பார்ப்புமின்றி தன் மகளை அழைத்து கொண்டு படிகெட்டில் இறங்க போக அவர்கள் கடந்து செல்வதற்கு முன்னதாக ஜானவி முந்தி கொண்டு, “ஒரு நிமிஷம்” என்று அவனை தடுத்து நிறுத்தினாள்.
மீனாவோ, “நிச்சயம் சண்டை கன்ஃபார்ம்” என்று எண்ணி கொண்டாள்.
ஆனால் நடந்தது எல்லாம் அவள் எண்ணத்திற்கு முற்றிலும் நேர்மார். செழியன் நின்று ஜானவியை பார்க்க அவளோ அன்புச்செல்வியிடம் மண்டியிட்டு, “ஐம் சாரிடா கண்ணா... இனிமே எப்பவும் நான் மீனாகிட்ட... உன் கூட பேச கூடாதுன்னு சொல்ல மாட்டேன்” என்று அவள் மன்னிப்பு கேட்கும் பாணியில் காதுகளை பிடித்து கொண்டு கெஞ்சலாக சொல்ல, மீனா தன் அம்மாவின் செய்கையை அதிசயித்து பார்த்து கொண்டிருந்தாள்.
அன்புச்செல்வியோ சந்தோஷ மிகுதியில், “நிஜமாவா?” என்று கேட்க,
“நிஜமா” என்று அழுத்தி கூறிய ஜானவி, “இனிமே நீங்க எப்பவுமே பிரெண்ட்ஸ்... ஓகே தானே?” என்று சொல்லி மீனாவை அன்புவின் அருகில் நிறுத்தினாள்.
அந்த குழந்தைகள் இருவரின் முகத்திலும் அத்தனை சந்தோஷம் பூரிப்பு. ஜானவி அப்போது, “ரெண்டு பேரும் இப்ப இல்ல... எப்பவுமே பிரெண்ட்ஸாதான் இருக்கணும்... யாருக்காகவும் எதுக்காகவும் சண்டை போட்டுக்க கூடாது... ஓகே... இப்ப கை குடுத்துக்கோங்க” என்றாள்.
அவர்கள் இருவரும் ஆர்வமாக கைகுலுக்கி கொண்டனர். ஜானவி அவர்கள் இருவரின் கன்னங்களிலும் முத்தம் பதித்தாள். அந்த காட்சியை பார்த்து கொண்டிருந்த செழியனுக்கு வார்த்தைகளே வரவில்லை. ஜானவியின் இந்த மாற்றம் செழியனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதேநேரம் மகளின் களிப்பு அவனை இன்பத்தில் திளைக்க செய்தது. அவனும் இதைதான் எதிர்பார்த்தான். அவன் முகத்திலும் புன்னகை அரும்பியது.
ஜானவி அதன் பின் எழுந்து நின்று செழியனை பார்க்க, அவனுக்கு அந்த நொடி அவளிடம் என்ன பேசுவதென்றே புரியவில்லை.
“செழியன்” என்ற அவளின் இயல்பான அழைப்பு அவனை மீண்டும் வியக்க செய்தது.
“சாரி... நான் உங்ககிட்ட ரொம்ப ஹார்ஷா” என்று அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே, “சாரி எல்லாம் வேண்டாம்... நீங்க இப்போ செஞ்ச விஷயமே போதும்... அன் தேங்க்ஸ் டூ... என்னை செழியன்னு கூப்பிட்டு பேசனதுக்கு” என்றான்.
“இனிமே நீங்களும் என்னை ஜானவின்னே கூப்பிடலாம்” என்றாள் அவள் மலர்ந்த முகத்தோடு!
செழியன் அவள் சொன்னதை கேட்டு புருவங்களை நெரித்து, “ஷுவரா?” என்று கேட்க, ஜானவியின் இதழ்கள் இயல்பை விட கொஞ்சம் அதிகமாக விரிய அவள், “ஹ்ம்ம” என்றபடி தலையசைத்து சிரித்தாள்.
இந்த கண்கொள்ளா காட்சியை பார்த்து அந்த இரண்டு குட்டி வாண்டுகளும் ரசித்து லயித்த அதேநேரம் மீனா அவர்கள் இடையில் வந்து நின்று, “அப்போ நீங்க இரண்டு பேரும் இனிமே சண்டை போட்டுக்க மாட்டீங்களா?” என்று கேட்டாள்.
ஜானவி சிரித்துவிட செழியன் மீனாவை பார்த்து, “சண்டை எல்லாம் போட்டுக்க மாட்டோமா தெரியல... ஆனா இப்போதைக்கு பிரெண்ட்ஸ் ஆயிட்டோம்” என்க,
“நிஜமாவா ம்மா” என்று மீனா தன் அம்மாவிடம் உறுதிப்படுத்தி கொள்ள கேட்டாள்.
“ஆமா” என்று ஜானவி மகளிடம் சொல்ல, “அப்போ ரெண்டு பேரும் கை குடுத்துக்கோங்க” என்று ஜானவி சொன்ன வாக்கியத்தை அவளுக்கே மீனா அச்சுபிசகாமல் உரைத்தாள்.
ஜானவி முகத்தில் புன்னகை மறைந்து அவள் செழியனை திகைப்பாக பார்த்து கொண்டு நிற்க அன்புச்செல்வியும் மீனவோடு சேர்ந்து கொண்டு, “கை குடுங்க ப்பா” என்றாள் செழியனை பார்த்து.