top of page

Nee Enbathe Naanaga - 8

Writer's picture: Krishnapriya NarayanKrishnapriya Narayan

8 - மௌனம்


மகளை இழுத்து கொண்டு வீட்டிற்குள் வந்த ஜானவி செழியன் மீதிருந்த மொத்த கோபத்தையும் தன் மகளிடம் காண்பித்துவிட்டாள்.


“மூஞ்சி முகரை தெரியாதவாங்க கிட்ட பேச கூடாதுன்னு உன்கிட்ட நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்... யார் என்னன்னு தெரியாம அந்த ஆள் கையை பிடிச்சிக்கிட்டு நிற்கற... அப்படியாடி உன்னை நான் அடிச்சிட போறேன்” என்று பொரிந்து தள்ளி கொண்டே ஜானவி மீனாவை அடித்துவிட்டாள்.


அந்த ஒரு வாரமாக ஜானவிக்கு இருந்த டென்ஷனும் செழியன் மீதிருந்த அளவுகடந்த கோபமும் மகளிடம் அப்படி முரட்டுத்தனமாக அவளை நடந்து கொள்ள வைத்தது. ஆனால் ஜானவி என்றுமே இந்தளவு மோசமாக மகளிடம் நடந்து கொண்டதில்லை.


எப்போதும் மீனாவை அச்சுறுத்த அடிப்பது போல பாவனைதான் செய்வாள். என்றாவது கோபத்தில் ஜானவி மகளை கண்டிக்க வேண்டி ஓரடி அடிப்பாள். அவ்வளவுதான். ஆனால் இன்று கட்டுபடுத்த முடியாத கோபத்தில் ஜானவியும் மீறி கொண்டு மீனாவிற்கு பலமாகவே இரண்டு மூன்றடிகள் விழுந்துவிட்டன.


மீனா தேம்பி தேம்பி அழ ஆரம்பிக்க, அதன் பின்னே ஜானவிக்கு தன் கோபத்தில் செய்த அறிவீனமான செயல் புரிந்தது. அவளுக்கு மகளின் அழுகையை பார்த்து மனம் தாங்கவில்லை. அவள் வழிகளிலும் நீர் ஊற்றாக பெருகியது. அதன் பின் ஜானவியே மகளை சமாதானம் செய்தாள். அதுவும் பெரும்பாடுப்பட்டு!


மீனாவும் ஒருவாறு அம்மாவின் சமாதான வார்த்தைகளில் இயல்பு நிலைக்கு வந்துவிட, ஜானவிக்கு எப்போதும் மகளுக்கு ஊட்டும் வழக்கம் இல்லை. ஆனால் இன்று அவளே மகளுக்கு உணவு கொடுத்து உறங்கவும் வைத்தாள்.


மீனா உறங்கிவிட்ட போதும் ஜானவிக்கு உறக்கமே வரவில்லை. மகளை அடித்துவிட்ட குற்றவுணர்வில் மீனாவின் அருகில் அமர்ந்து உண்ணாமல் உறங்காமல் இரவெல்லாம் அழுது கொண்டே இருந்தாள்.


மகளை உடலால் காயப்படுத்தியதில் இவள் மனதால் மருகி துடித்து கொண்டிருந்தாள். மீனாவின் வலியை விட மகளை அடித்துவிட்டோமே என்ற ஜானவியின் மனவலிதான் பெரிதாக இருந்தது.


ஜானவியின் மோசமான கடந்து காலம் மற்றும் ஓய்வில்லா வேலையென்று எல்லாம் அவளை அப்படி மகளிடம் நிதானமற்று நடந்து கொள்ள வைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் மீனா மட்டுமே தனக்கு ஒரே துணை என்று மகள் மீது அவள் கொண்ட அதீத பாசமே உரிமையாகவும் கோபமாகவும் வெளிப்பட்டுவிட்டது.


ஜானவியின் மனநிலை அந்தளவு பலவீனமாக இருந்தது. ஆனால் அவளோ மகளிடம் அப்படி நடந்து கொண்டதற்கு செழியன்தான் காரணம் என்று எண்ணி கொண்டிருந்தாள். இயல்பான மனித குணத்தில் ஒன்று. தான் செய்யும் தவறுகளுக்கு பிறரை குற்றவாளிகளாக்கி தன் பலவீனத்தை மறைத்து கொள்வது.


மீனாவுக்கு அடுத்த நாள் விடுமறைதான். ஜானவி விடிந்ததும் மகளை வெளியே அழைத்து கொண்டு சென்று அவளுக்கு பிடித்தமான உடை, விளையாட்டு பொருள், உணவு என்றுவாங்கி கொடுத்து மகிழ்வித்தாள்.


இதெல்லாம் மீனாவிற்காக அல்ல. அவள் அம்மாவின் கோபத்தை மறந்து நேற்றே சமாதான நிலைக்கு வந்துவிட்டாள். குழந்தைகளுக்கு கோபங்களையும் பகைமையையும் சுமக்க தெரியாது. ஜானவி தன் குற்றவுணர்வை போக்கவே மகளை அழைத்து கொண்டு அன்று முழுக்க வெளியே சுற்றி திரிந்தாள். அப்போதைய அவளின் வேதனைக்கு தீர்வாக அவள் பார்த்தது மகளின் முகத்தில் மலரும் கள்ளங்கபடமற்ற புன்னகைதான்.


மீனா களிப்போடு இருந்ததை பார்க்க ஜானவியின் மனஉளைச்சல் மற்ற கவலைகள் யாவும் மாயமாகி அவள் மனம் ஒருவாறு லேசானது. இறுதியாக, “வீட்டுக்கு போலாமா மீனு?” என்று ஜானவி கேட்க,


“அம்மம்மா வீட்டுக்கு போலாம் ம்மா” என்றாள் மீனா!


ஜானவியின் முகம் மாறியது. இருந்தும் அந்த நொடி மகளின் வார்த்தையை மறுக்க மனமில்லாமல், “சரி போயிட்டு உடனே வந்துடணும்” என்று மகளிடம் கண்டிப்பாக சொல்லியே அழைத்து கொண்டு சென்றாள்.


ஜானவி வீட்டின் வாயிலிற்கு வந்ததுமே உள்ளே தன் தமக்கை ஜோதி அவள் குடும்பத்தோடு வந்திருப்பதை பார்த்தாள். ஜானவி இருந்தவரை ஜோதி அந்த வீட்டு பக்கமே எட்டிபார்க்கவில்லை. ஆனால் இன்று அவள் வந்திருக்கிறாள் எனில் ஜானவியால் தாங்க முடியவில்லை. அதற்கு மேல் ஜானவியின் ஈகோ அவளை அந்த வீட்டின் வாயிலை தாண்டவிடவில்லை. அவள் அப்படியே வாசலில் நின்றுவிட, மீனாவோ விட்டால் போதுமென தன் அம்மம்மாவை பார்க்க உள்ளே ஓடிவிட்டாள்.


கிரிஜா மீனாவை பார்த்த மாத்திரத்தில் பாசத்தில் கட்டியணைத்து முத்தமிட அப்போது ஜமுனா வெளியே நின்ற ஜானவியிடம், “உள்ளே வா க்கா” என்று அழைத்தாள்.


“நான் வந்தா... உள்ளே இருக்கிறவங்க வெளியே போயிடுவாங்க... எதுக்கு வம்பு... நான் வெளியவே இருக்கேன்” என்றாள் வீம்புடன்!


“அப்படி எல்லா இல்ல க்கா... நீ உள்ளே வா” என்று ஜமுனா அவள் கரத்தை பிடிக்க,


“கையை விடு ஜமுனா... சுயமரியாதை கௌரவம் எல்லாம் அந்த அம்மாவுக்கும் மட்டும்தான் இருக்கா... எனக்கும் இருக்கு... நான் இந்த வீட்டில இருக்க வரைக்கும் இந்த வீட்டு வாசப்படியே மிதிக்க மாட்டேன்னு சவால் விட்டு போனவங்கதானே அந்த மேடம்... இப்ப அவங்க வந்திருக்கும் போது... நான் மட்டும் உள்ளே வரணுமா?” என்று ஜானவி பிடிவாதமாக சொல்வதை கேட்டு கொண்டே கிரிஜா அங்கே வந்து நின்றார்.


“என்னடி பேசுற நீ? ரெண்டு பேரையும் ஒரே வயத்திலதானேடி பெத்தேன்... ஒன்னாதானேடி வளர்ந்தீங்க” என்றவர் சொல்லி கொண்டிருக்கும் போதே,


“ஆமா ஒரே வயத்துலதான் பொறந்தோம்... ஒன்னதான் வளர்ந்தோம்... ஆனா இரண்டு பேருக்கும் வாழ்க்கை ஒரே மாறி அமையலயே” என்றாள்.


“ஜானு?”


“உங்க பொண்ணு ஜோதி மாறி நானும் தலைநிமிர்ந்து ஒரு நாள் வாழ்வேன்... அன்னைக்கு திமிரா இந்த வீட்டுக்குள்ள நான் வருவேன்” என்று ஜானவி சவாலாக சொல்ல, கிரிஜா அப்படியே திகைத்து நின்றுவிட்டார்.


“என்னடி பேச்சு இதெல்லாம்?” என்று கிரிஜா வேதனையாக கேட்க,


“ஐயோ! அக்கா அப்படி எல்லாம் சொல்லாதே” என்று ஜமுனாவும் ஜெகனும் அவளிடம் இறங்கி வந்து பேசி கொண்டிருக்க,


ஜோதியோ தங்கை வந்ததை பார்த்தும் பார்க்காதவளாக உள்ளேயே இருந்தாள். அவள் கணவன் விக்னேஷ் அப்போது, “போய் ஜானுவை உள்ள கூப்பிடு ஜோதி” என்றான்.


“எதுக்கு நான் கூப்பிடணும்? அவ என்ன விருந்தாளியா? வந்தவ நேரா உள்ளே வர வேண்டியதுதானே... என்னவோ பெரிய இவளாட்டும் சீன் போட்டிட்டு இருக்கா” என்றாள். இப்படி அக்கா தங்கைகள் வீம்பாக இருந்தால் விக்னேஷும் என்ன செய்வான். அதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை.


ஜானவியோ வாசலில் நின்றபடி, “மீனு உங்களை எல்லாம் பார்க்கணும்னு சொன்னா.... அதான் கூட்டிட்டு வந்தேன்... சரி மீனுவை அனுப்பிவிடுங்க... நான் கிளம்பணும்” என்றவள் சொல்ல,


“என்னடி இப்படி பன்ற?” என்று வேதனையுற்ற கிரிஜா மேலும்,


“அதுவும் வந்த உடனே பிள்ளையை கூட்டிட்டு போறேன்னு வேற சொல்ற” என்று வருத்தம் கொள்ள, மீனாவும் அதற்கேற்றார் போல் வரமாட்டேன் என்று தன் அம்மம்மாவின் கால்களை பிடித்து கொண்டு முரண்டுபிடித்தாள்.


“வரும் போதே நான் என்ன சொன்னே மீனு?” என்று ஜானவி மகளை கோபமாக முறைக்க, “நீதான் பிடிவாதம் பிடிக்கிற... குழந்தையாவது இங்க இருக்கட்டுமே” என்று மகளிடம் கெஞ்சலாக கேட்டார் கிரிஜா!


“நாளைக்கு அவளுக்கு ஸ்கூல் இருக்கு ம்மா”


கிரிஜா அப்போதும் விட்டுக்கொடுக்காமல், “மீனுவை காலையிலேயே குளிப்பாட்டி ஜெகி கூட அனுப்பி விட்டுடேறேன்டி” என்று சொல்ல, ஜானவிக்கு விருப்பமே இல்லை. அவள் மீனாவின் முகத்தை பார்க்க, மீனாவோ பாவம் போல தன் அம்மாவை ஏக்கமாகவும் கெஞ்சலாகவும் பார்த்தாள். மகளை அடித்த குற்றவுணர்வில் ஜானவி மனமிறங்கி சம்மதித்துவிட்டாளே ஒழிய அவளுக்கு மகளை விட்டு வர மனமே இல்லை.


மாலை நேரத்தில் வீட்டை அடைந்தவளுக்கு மகள் இல்லாத அந்த தனிமை பிடிக்கவில்லை. தன் வீட்டின் பால்கனியில் நின்றபடி அந்த குடியிருப்பின் முன்புள்ள பார்க்கில் குழந்தைகள் விளையாடுவதை பார்த்திருக்க மனதின் பாரம் லேசாக இறங்கியது.


அதேநேரம் செழியன் அன்புச்செல்வியோடு விளையாடி கொண்டிருந்தான். அவனால் சரியாக நடக்க முடியாத பட்சத்திலும் மகளுக்காக அவன் செய்யும் ஒவ்வொன்றையும் பார்க்க அவளுக்கு உண்மையிலேயே வியப்பாகத்தான் இருந்தது.


அவளையே அறியாமல் அவள் பார்வை அவனையே பின்தொடர்ந்தது. அவன் தன் மகளோடு விளையாடுவதை அவள் விழி எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.


அந்த நொடி செழியன் எதச்சையாக மேலே பார்த்தான். அதவும் நேராக அவன் பார்வை அவள் மீதுதான் விழுந்தது. அதுவும் அவள் அவனையே பார்த்து கொண்டிருக்கும் சமயம். அவள் நிலைதடுமாறி தன் பார்வையை திருப்பி கொண்டிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அவள் அவன் பார்த்த மாத்திரத்தில் அந்த பால்கனி கதவை மூடி கொண்டு தன் வீட்டிற்குள் வந்து அமர்ந்து கொண்டாள்.


அப்பாவாக தன் மகளுக்காக அவன் எடுத்து கொள்ளும் மெனக்கெடல்களும் அதேநேரம் அவன் கொண்ட பொறுப்புணர்வையும் வியப்பை தாண்டிய ஒரு உணர்விற்குள் அவளை இழுத்து சென்று அவனை பார்க்க வைத்தது. பிடிக்காத ஒருவனை தான் ஏன் அப்படி பார்த்துவைக்க வேண்டும். ஏதோ பெரிதாக தவறு செய்துவிட்டார் போல் அவள் மனம் குற்றவுணர்வு கொண்டது.


மூடிய வீட்டிற்குள் அப்படியே எத்தனை நேரம் தனிமையில் இருப்பது. மூச்சு முட்டிய உணர்வு. அதேநேரம் வெளியே வந்தால் செழியனை பார்க்க நேர்ந்துவிடுமோ என்ற அர்த்தமில்லாத சிந்தனை வாட்டியது.


அந்த குடியிருப்பில் எத்தனையோ பேர் இருந்தும் செழியனை சுற்றியே அவள் சிந்தனை சுழல்வது அவளுக்கு எரிச்சலாக இருந்தது. யாரிடமிருந்து அவள் விலகி நிற்க நினைக்கிறாளோ அவனை பற்றிய எண்ணமே அவளை துரத்த அதற்கு மேல் வீட்டிக்குள் அடைப்பட்டு இருக்க பிடிக்காமல் அவள் மேல் மாடிக்கு சென்றுவிட்டாள்.


அப்போதும் அவள் மனம் ஒருநிலைப்பட்டதா என்றால் அதுதான் இல்லை. தனிமை படுத்தும் பாடு. அதுவும் இளமையில் தண்டனையாக வரும் தனிமை அத்தனை கொடுமை. பெண்ணவள் அதை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் திண்டாடி கொண்டிருந்தாள்.


வான்வீதியில் வரிசையாக நட்சத்திரங்கள் படையெடுத்து கொண்டிருந்தது. இருள் சூழ்ந்த போதும் அங்கிருந்து அவள் நகரவில்லை. அந்த இருள் அவளுக்கு பிடித்திருந்தது. அவள் உணர்வுகளை அழுகையை... யாரிடமும் காட்டிவிடாத அந்த இருள். தன் மீது தானே இறக்கம் கொள்ளும் ஒருவித சுயபச்சாத நிலை!


அவள் மனம் லேசாக ஆசுவாசப்பட்டு கொண்டிருந்தது. அந்த நேரம் அவள் இருளையும் தனிமையும் அமைதியையும் அங்கு ஒலித்த ஒரு பாடல் குலைத்தது.


“போ நீ போ...


போ நீ போ...


தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ...”


அந்த பாடலின் முதல் இரண்டு வரிகளோடு சத்தம் நின்று போக, “நான் அப்புறம் கூப்பிடுறேன்” என்றது அவன் குரல்.


ஒரு சில முறைகள் கேட்டாலும் அது செழியனின் குரல் என்பது ஜானவிக்கு பிடிப்பட்டது.


“இங்கேயும் வந்துட்டனா? என் நிம்மதியை கெடுக்க”


முனகி கொண்டே அவள் சுற்றும் முற்றும் தேடலாய் பார்க்க அவன் அவள் எதிரே நடந்து வந்து கொண்டிருந்தான். அந்த இருளில் அவன் முகம் தெரியாமல் போனாலும் அது அவன்தான் என்பதை அவள் அடையாளம் கண்டு கொண்டாள். அதேநேரம் அவன் தன்னை நோக்கித்தான் வருகிறான் என்பதை கணித்தவள் துணுக்குற்றாள்.


இனி தான் இங்கே இருக்க கூடாது என்று அவள் விரைவாக அவனை கண்டும் காணாமல் கடந்து செல்லவும், “பெயரும் சொல்லி கூப்பிட கூடாது... அப்புறம் நான் உங்களை எப்படிதா ங்க கூப்பிடறது” என்றதும் அவள் போகாமல் கோபமாக திரும்பி நிற்க, அவனுமே அவள் எதிரே வந்து நின்றான்.


அவள் பேசுவதற்கு முன்னதாக அவனே முந்தி கொண்டு, “நீங்க ஏன் மிஸ்டர் என்னை பேர் சொல்லி கூப்பிடணும்... ஏன் இப்படி என்னை டார்ச்சர் பண்றீங்க... உங்களுக்கு எனக்கும் என்ன சம்பந்தம்? அதானே சொல்ல போறீங்க” என்று அவள் வசனத்தை அவனே பேசிவிட, அவள் கொஞ்சம் குழப்பமானாள்.


அவன் மேலும், “நான் உங்களை தேடித்தான் வந்தேன்... அது உங்க கிட்ட ஒரு டூ மினிட்ஸ் பேசணும்... பெர்மிஷன் எல்லாம் கேட்கல... கண்டிப்பா பேசியே ஆகணும்” என்று பிடிவாதமாக அதேநேரம் அதிகாரமாக உரைத்தான்.


அவள் அந்த நொடி உச்சபட்ச எரிச்சலோடு, ‘முடியாது’ என்று சொல்வதற்கு முன்னதாக,


“முடியாதுன்னு சொல்ல போறீங்களா? இல்ல நான் எதுக்கு மிஸ்டர் உங்ககிட்ட பேசணும்னு கேட்க போறீங்களா?” என்றவன் இம்முறையும் அவளை பேச விடாமல் செய்துவிட்டான்.


ஜானவியால் பொறுக்க முடியவில்லை. அவன் வேண்டுமென்றே தன்னை கடுப்பேற்றி பார்க்கிறான் என்ற எண்ணத்தோடு அவனை நிராகரித்துவிட்டு அவள் செல்லலாம் என்று திரும்பி நடக்க,


“என் பொண்ணு அன்பு அழுகிறதை என்னால பார்க்க முடியல... ப்ளீஸ் மீனுவை அன்புகிட்ட பழையபடி பேச சொல்லுங்க” என்றவன் சொன்ன வார்த்தை அவள் காதில் விழுந்ததும் மேலே செல்லாமல் அவன் புறம் திரும்பி நின்றாள்.


“உங்க பொண்ணு அழுதா உங்களால தாங்கிக்க முடியுமா?” என்றவன் கேட்க, அப்போது அவள் அடித்து மீனா அழுததும் பள்ளியில் அன்புச்செல்வி அழுததும் அவள் கண்முன்னே மாறி மாறி தோன்றி மறைந்தது. அந்த இரு குழந்தைகளின் அழுகையையும் வலியையும் அவளால் வேறு வேறாக பார்க்க முடியவில்லை.


ஜானவி மௌனமாக நின்றிருக்க, “நான் உங்ககிட்ட எதாச்சும் தப்பா பேசி இருந்தா ஐம் சாரி... எக்ஸ்டிரிமிலி சாரி... எங்கம்மா பேசனதுக்கும் சேர்த்து நானே மன்னிப்பு கேட்கிறேன்” என்றான். அவளால் அவன் வார்த்தைகளுக்கு பதில் பேசவே முடியவில்லை. கோபத்திற்கு எதிர்வாதம் செய்யலாம். முற்றிலுமாக இறங்கிவந்த ஒருவனிடம் என்ன பேசுவது.


செழியன் மேலும், “என் மேல இருக்கிற கோபத்தை நீங்க என் பொண்ணுகிட்ட காட்டிறதும்... மீனாவை அவ கூட பேச கூடாதுன்னு சொல்றதும் நியாயமே இல்லை... உங்களுக்கு தெரியுமா?


அன்புவுக்கு உங்க மீனான்னா அவ்வளவு இஷ்டம்... உங்க பொண்ணு கூட அவ பிரெண்டா இருக்கிறதாலதான்... அன்பு தன்னோட அம்மாவோட இறப்பில இருந்தே மீண்டு வந்திருக்கா?” என்ற போது ஜானவி அதிர்ந்துவிட்டாள்.


அன்புவிற்கு அம்மா இல்லையென்ற விஷயமே அவளுக்கு இப்போதுதான் தெரியும். அந்த உண்மை அவளை திக்குமுக்காட செய்ய ஜானவியின் விழிகளில் கண்ணீர் பெருகிற்று. ஆனால் அந்த இருளில் செழியன் அவள் கண்ணீரை பார்த்திருக்க வாய்பில்லை. அதே போல் செழியனின் வேதனையை ஜானவியும் பார்த்திருக்க முடியாது. ஆனால் இருவருமே ஒருவர் மனநிலையை ஒருவர் உணர்ந்தார்கள்.


அதனாலேயே அந்த நொடி இருவருக்கும் இடையில் ஓர் கனத்த மௌனம் குடியேறியது.


வார்த்தைகள் அவர்களுக்கு இடையில் தேவையற்றதாகி போனது. இருவருமே மேலே எதுவும் பேசி கொள்ளவில்லை. அதற்கு மேல் பேச வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. இருவரும் வெவ்வேறு குணம் கொண்டவர்கள்தான். ஆனால் விதியின் வசத்தால் ஒரே மாதிரியான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டவர்கள். அதற்கு மேல் இருவரின் உணர்வுகளையும் வேதனைகளையும் புரிந்து கொள்ள வார்த்தைகள் வேண்டுமா என்ன? மௌனமே போதுமானது.


பல்லாயிரம் வார்த்தைகள் செய்ய முடியாததை அந்த மௌனங்கள் செய்துவிட்டது.


ஜானவிக்கு செழியன் மீதிருந்த மனத்தாங்கல் மொத்தமும் அந்த நொடி வடிந்து போனது.


மன்னிப்பிற்கும் விட்டு கொடுத்தலுக்கும் இருக்கும் சக்தி வேறு எதற்கும் கிடையாது. ஆனால் அதை யார் முதலில் செய்வது என்ற ஈகோவில்தான் பல பிரச்சனைகள் தீர்வில்லாமலே கிடக்கின்றன. செழியனுக்கு அத்தகைய ஈகோ என்றுமே இருந்ததில்லை. ஆதலாலேயே அவன் ஜானவியின் கோபத்தை கணநேரத்தில் போக்கிவிட்டான்.

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page