top of page

Nee Enbathe Naanaga - 21

21 - அன்பு


ஜானவி எங்கே வந்திருக்கிறோம் என்று இறங்கி பார்க்க, செழியன் காரின் பின் கதவை திறந்து மகள்கள் இருவரையும் இறங்க செய்தான்.


"எங்கப்பா வந்திருக்கோம்?" என்று அன்பு கேட்க,

"வாங்க சொல்றேன்" என்று மகள்கள் இருவரையும் அழைத்து கொண்டு அவன் அந்த பெரிய வாயிலிற்குள் நுழைந்தாள்.


ஜானவி அப்படியே நின்றுவிட்டாள்.


அந்த இடம் ஆதரவில்லா குழந்தைகளுக்கான ஆசிரமம் என்பதை அறிந்து கொண்ட நொடி அவள் செழியனை பார்க்க,


அப்போது 'அன்பு' என்று அழைத்து கொண்டு ஒரு பெரிய பட்டாளமே அவனை சூழ்ந்து கொண்டது. அவர்கள் பேசிய விதத்திலேயே அவர்கள் எல்லோரும் அவனின் கல்லூரி தோழர்கள் என்பது புரிந்தது.


அதற்கு மேல் முன்னே செல்ல முடியாமல் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு ஜானவியை ஆட்கொள்ள,


அவள் தயக்கமாகவே அவ்விடம் நோக்கி நடந்தாள.


அவனின் நண்பர்களோ ஆர்வமாக மீனாவிடமும் அன்புவிடமும் இறங்கி, "ஸோ க்யூட்" என்று ஆசையாக கொஞ்சி கொண்டிருந்தனர்.


அப்போது செழியன் ஜானவி எங்கே என்று தேடலாக திரும்பி பார்த்துவிட்டு,


அவள் அருகே வந்தவன், "என்னாச்சு ஜானவி... வாங்க" என்று அழைக்க,


"எல்லோரும் உங்க காலேஜ் பிரண்ட்ஸா செழியன்?" என்று கேட்டாள்.


"ஹ்ம்ம் ஆமா" என்றவன் உற்சாகமாக பதிலளிக்க,


"அப்படின்னா எல்லோருக்கும் ரஞ்சனியைதானே தெரியும்" என்றவள் தவிப்போடு சொல்லி அவன் முகம் பார்த்தாள்.


"அவங்க எல்லோருக்கும் உங்களையும் தெரியும் ஜானவி" என்றவன் அவள் கரத்தை கோர்த்து கொண்டு உள்ளே அழைத்து செல்ல,


ஜானவிக்கு அவன் எப்படி தன்னை அவர்களிடம் அறிமுகப்படுத்த போகிறான்... எப்படி அவர்கள் அதனை எடுத்து கொள்வார்கள் என்ற தவிப்பு ஏற்பட்டது.


அவள் கால்கள் வேகமாக நடக்க முடியாமல் தயங்கின.


அவளின் எண்ணத்தை புரிந்து கொண்ட செழியன் நின்று அவள் முகம் பார்த்து, "எதுக்கு இவ்வளவு எம்பேரஸிங்கா பீல் பன்றீங்க ஜானவி" என்று கேட்க அவள் பேச எத்தனிக்கும் முன்னரே அவன் முந்தி கொண்டு,


"ரஞ்சு என் பாஸ்ட்... இப்போ ஜானுதான் என் பிரஸன்ட் பீயூச்சர்... இன்னும் கேட்டா எல்லாம்" என்று அவன் தெளிவாக சொல்லி அந்த நொடி அவள் மனதில் ஏற்பட்ட இன்ப உணர்விற்கு அளவுகோளே இல்லை.


"வாங்க ஜானவி" என்று மீண்டும் செழியன் அவளை முன்னே அழைத்து செல்ல,


அவனின் நண்பர்கள் எல்லோரும் அவளை பார்த்த நொடி, "நீங்கதான் ஜானவியா?" என்று ஆவல் ததும்ப கேட்கவும் அவளுக்கு ஆச்சர்யாமாகி போனது.


செழியன் உடனே, "நாங்க எல்லோரும் இன்னும் டச்லதான் இருக்கோம்... நம்ம மேரேஜ் போட்டோவை கூட எல்லோருக்கும் ஷேர் பண்ணி இருக்கேன்" என்று அவளிடம் உரைத்தான்.


அவர்கள் நண்பர் பட்டாளத்திலிருந்த ஓரு பெண், "ஆமா ஆமா பார்த்தோம்... ஸிம்பிளா ரொம்ப அழகா இருந்தீங்க ஜானு" என்று சொல்ல ஜானவியின் முகம் இயல்பாக மலர்ந்தது.


"தேங்க்ஸ்" என்றாள்.


அதோடு அவன் நண்பர்களில் இன்னொருவன், "நீங்க ஷேர் மார்க்கெட்ல இன்வஸ்ட் பண்றதுல பயங்கர எக்ஸ்ப்பட்டாமே... எங்களுக்கும் அதை பத்தின ஐடியாஸ் எல்லாம் சொன்னா நல்லா இருக்கும்" என்ற போது அங்கிருந்த மற்றவர்களும், "ஆமாங்க" என்று சொல்ல,


ஜானவி மலர்ந்த முகத்தோடு எல்லோரிடமும் தலையசைத்தாள்.


"சரி சரி... எல்லோருக்கும் ஜானவியை வைச்சு ஷேர் மார்க்கெட் இன்வஸ்டிங் பத்தி தனியா கிளாஸ் எடுக்க சொல்றேன்... இப்ப எல்லோரும் உள்ளே போலாம் வாங்க" என்று செழியன் கிண்டலாக சொல்ல,


ஜானவியோடு சேர்த்து மற்ற எல்லோருமே சிரித்துவிட்டனர்.


செழியன் அதன் பின் தன் நண்பர்களை உள்ளே அனுப்பிவிட்டு தம் மகளோடு கை கோர்த்து நடந்து கொண்டே, "இவங்க எல்லோரும் யார் தெரியுமா?" என்று கேட்க,


"எல்லோரும் உங்க பிரெண்ட்ஸ்தானே ப்பா" என்று மீனா பதிலளித்தாள்.


"ஆமா எல்லோரும் என் பிரெண்ட்ஸ்... இவங்க மட்டும் இல்ல.... அப்பாவுக்கு இன்னும் நிறைய நிறைய பிரெண்ட்ஸ் இருக்காங்க?" என்று சொல்லி கொண்டே அவன் அன்புவின் முகத்தை பார்த்து,


"நீங்களும் அப்பாவை போல எல்லோர் கூடயும் பிரெண்ட்லியா இருக்கணும்... அதுதான் நல்ல பசங்களுக்கு அழகு" என்றான்.


அன்புவின் குறுகிய மனப்பான்மையை மாற்ற அவன் எடுத்து கொண்ட முயற்சி என்பது ஜானவிக்கு புரிந்த அதேநேரம் அந்த அறிவுரைகள் தனக்கும் பொருத்தமானது என்றே தோன்றியது. ஒருவகையில் அவளுடைய வட்டமும் பார்வையையும் கூட குறுகியதுதான்.


இவ்விதம் அவள் யோசித்து கொண்டிருந்த போது செழியன் அவன் நண்பர்களோடு சேர்ந்து கொண்டு அந்த அசிரமத்திலுள்ள குழந்தைகளுக்கு தேவையான புத்தகம் எழுதுகோல் மற்றும் துணி என்று ஏனைய பொருட்களை கொடுப்பதற்காக வாங்கி வைத்திருந்தான்.


ஜானவி அவனின் செய்கைகளை வியப்படங்காமல் பார்த்து கொண்டிருக்க, அவன் நண்பர்கள் கூட்டமோ நொடிக்கு நொடி அன்பு அன்பு அன்பு என்று அவனின் பெயரையே ஜபமாக படித்து கொண்டிருந்தனர்.


ரொம்பவும் உயர்வாக அவன் நட்பை அவர்கள் கொண்டாடுகிறார்கள் என்பது நன்றாகவே தெரிந்தது. அவளுக்கு ஒரு வகையில் அது பெருமையாகவும் இருந்தது.


தன் அன்பின் மூலமாக அவன் பெரிய வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தான் என்பதை அவள் உணர்ந்து கொண்டிருந்தாள். அதேநேரம் அங்கே அவன் செய்து கொண்டிருந்த ஒவ்வொன்றையும் ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தாள்.


அங்கிருந்த குழந்தைகளிடம் செழியன் அன்பாக பேசிய அதேநேரம் தம் மகள்களிடமும் அவர்களை பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தான். அவர்களோடு மீனாவையும் அன்புவையும் விளையாட வைத்து ஊக்குவித்து கொண்டிருந்தான்.


அதுவும் மகள்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் அவன் பதில் சொல்லும் விதம்தான் அழகோ அழகு!


"ஏன் ப்பா நாம அவங்க எல்லோருக்கும் இதெல்லாம் கொடுக்கிறோம்" என்று மீனா கேட்க செழியன் அதற்கு,


"நம்ம கொடுக்கல மீனு... நம்மகிட்ட தேவைக்கு அதிகமா இருக்கு... அதை நம்ம அவங்ககிட்ட ஷேர் பண்ணிக்கிறோம்... எப்பவுமே நாம... எனக்கு நமக்குன்னு இல்லாம எல்லாத்தையும் எல்லோர்கூடயும் பகிர்ந்துக்கணும்... அதுதான் உண்மையான சந்தோஷம்" என்றான்.


அந்த ஆசிரமத்தில் அன்றைக்கான உணவுக்கும் அவனும் அவன் நண்பர்களும்தான் ஏற்பாடு செய்திருந்தன. அந்த உணவை அவர்கள் எல்லோருக்கும் பரிமாறுவது அல்லது கொடுப்பதாக இல்லாமல் தங்களும் சேர்ந்து அவர்களோடு ஒருத்தராக உண்ண வேண்டும் என்பதே அவன் எண்ணம்!


ஆதலால் அந்த ஹாலில் தானும் தன் நண்பர்கள் குழந்தைகளோடு அமர்ந்து கொண்டு உண்ண ஆயுத்தமானான் செழியன்.


அவனின் ஒவ்வொரு செய்கையிலும் அன்பின் வெளிப்பாடு அப்பட்டமாக தெரிந்தது.


அந்த சமயம் அன்புச்செல்வி அங்கே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த குழந்தைகளை பார்த்து, "இவங்கெல்லாம் அவங்களே சாப்பிடுவாங்களா ப்பா... யாரும் ஊட்ட மாட்டாங்களா?" என்று கேட்க அவன் மென்னகையோடு,


"இத்தனை பேருக்கும் எத்தனை பேர் ஊட்டுவாங்க அன்பும்மா... அதுவும் இல்லாம உங்கள மாதிரி இந்த பாப்பாங்களுக்கெல்லாம் பாட்டி தாத்தா அம்மா அப்பா எல்லாம் இல்லயே" என்றவன் மேலும் தொடர்ந்தான்.


"ஆனா உங்களுக்கு எல்லோரும் இருக்காங்க... அதுக்காக நம்ம கடவுளுக்கு எப்பவும் நன்றி சொல்லணும்" என்று அழுத்தமாக கூறினான்.


செழியனின் ஒவ்வொரு செய்கையை கண்டு வியந்து கொண்டிருந்தவள் உணவு முடிந்ததும் அங்கிருந்த ஒரு மரத்தடியில் அமைக்கப்பட்ட கல்மேடையில் தனிமையில் வந்து அமர்ந்து கொண்டாள்.


ஆனால் அவள் பார்வையும் எண்ணமும் செழியனை மட்டுமே சுற்றி கொண்டிருக்க, அவன் தன் நண்பர்களோடு சந்தோஷமாக உரையாடி கொண்டிருந்தான்.


மீனாவும் அன்புவும் சந்தோஷமாக அந்த குழந்தைகளோடு கலந்து விளையாடி கொண்டிருந்தனர்.


அவற்றை பார்க்கவே அவள் மனதிற்கு அத்தனை நிறைவாக இருந்தது.


அப்போது அவளை நோக்கி வந்த செழியனின் தோழி, "ஏன் ஜானு இங்கே தனியா உட்கார்ந்திட்டிருக்கீங்க?" என்று கேட்க,


"இல்ல... சும்மாதான்... குழந்தைங்க விளையாடறத பார்த்துக்கிட்டு இருந்தேன்" என்றாள்.


"ஓ... பை திவே ஐம் அனிதா" என்று சொல்லி அந்த பெண் அறிமுகம் செய்து கொண்டு அவள் அருகில் அமர,


"ஆன்... செழியன் சொன்னாரு" என்றாள்.


அவளை வியப்பாக பார்த்த அனிதா, "அவனுக்கு எல்லோரும் தன்னை அன்புன்னு கூப்பிட்டாதான் பிடிக்கும்... அப்படிதான் கூப்பிடவும் சொல்வான்... ஆனா நீங்க மட்டும்" என்று அவள் இழுக்க,


"என்கிட்டயும் அப்படிதான் கூப்பிட சொன்னாரு... ஆனா நான்தான் வேணும்டே அவர் சொன்னதை கேட்க கூடாதுங்கிற எண்ணத்தில செழியன்னு கூப்பிட்டேன்... அப்புறம் அதுவே பழகிடுச்சு" என்றாள்.


"ஓஓ... இது கூட நல்லாதான் இருக்கு" என்று அனிதா சொல்லி கொண்டே, "நீங்க அன்பு வாழ்க்கையில வந்தது நல்லதா போச்சு... எங்க நாங்க எல்லாம் பழைய அன்புவை இனி பார்க்கவே முடியாத போயிடுமோன்னு பயந்தோம்...


ஆரம்பத்தில அவன் அவ்வளவு துருதுருப்பா இருப்பான்... அப்புறம் ரஞ்சனி" என்று ஆரம்பித்தவள் அந்த வார்த்தையை தவிர்த்துவிட்டு,


"காலேஜ்ல செழியன் கலந்துக்கிட்டு வின் பண்ணாத காம்பீட்டீஷனே கிடையாது தெரியுங்களா... ஸ்போர்ட்ஸ் படிப்பு மத்த எல்லாம் எக்ஸ்ட்ரா கரிக்குலர்னு அவன் அவ்வளவு டேலன்டட்" என்று அனிதா அவனை புகழ்ந்துரைத்து கொண்டிருக்கும் போதே செழியன் பின்னோடு வந்து,


"ஏய் அனி... போதும்டி... ஓவரா இருக்கு" என்றான்.


"உண்மையைதானே சொன்னேன் அன்பு" என்றவள் சொல்ல,


"அதெல்லாம் இப்போ உன்னை யாராச்சும் கேட்டாங்களா?" என்று செழியன் சொல்லி கொண்டே,


"போ... உன் டார்லிங் உன்னை கூப்பிடிட்டு இருக்கான்" என்றதும் அவள் அவனை ஏறஇறங்க பார்த்து,


"பொய் சொல்லாதே... உன் டார்லிங் கூட உனக்கு தனியா பேசணும்... அதுக்குதானே என்னை துரத்தி விடுற" என்றாள்.


ஜானவி இந்த வார்த்தைகளை கேட்டு சங்கடமாக நெளிய,


"புரிஞ்சிக்கிட்டா சரி" என்று தன் தோழியை அனுப்பிவிட்டு தன்னவள் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டான்.


"என்ன நீங்க?" என்று சொல்லி ஜானவி தள்ளி அமர்ந்து கொள்ள,


"பக்கத்தில கூட உட்கார கூடாதா?" என்று கடுப்பானான்.


"பொது இடத்தில கணவன் மனைவியாகவே இருந்தாலும் டீஸன்ட்டா நடந்துக்கணும்... இதெல்லாம் நான் சொல்லி உங்களுக்கு தெரியணுமா... அதுவும் நாம இப்போ இரண்டு குழந்தைங்களுக்கு அம்மா அப்பா" என்றவள் சொல்ல,


அவள் முகம் பார்த்தவன், "அப்படி பார்த்தா புருஷனாவே இருந்தாலும் இப்படி பொது இடத்துல அப்பட்டமா சைட் அடிக்கிறதெல்லாம் மட்டும் தப்பில்லையா ஜானவி?" என்று அடக்கப்பட்ட புன்னகையோடு கேட்க


அவள் அதிர்ச்சியாகி, "சைட் அடிச்சேனா?!" என்றாள்.


"என் பிரெண்ட்ஸ் எல்லாம் பயங்கரமா ஓட்டிறாங்க... உங்க கண்ணு என்னை தவிர வேறெங்கயும் திரும்ப மாட்டேங்குதாமே" என்றவன் சொல்ல,


அது உண்மை என்பது போல் அவள் மௌனமாக தலையை கவிழ்ந்து கொண்டாள்


சில நொடிகள் அவர்களுக்கிடையில் அழகான மௌனங்களோடு கழிய ஜானவி மெல்ல கணவன் புறம் திரும்பி, "இப்படி கேட்கிறேனேன்னு தப்பா எடுத்துக்க கூடாது செழியன்" என்று தயங்கியவள்,


"உங்க பிரெண்டை நீங்க உரிமையா வாடி போடின்னெல்லாம் கூப்பிட்டு பேசறீங்க... இவ்வளவு நாள் ஆகியும் என்னை மட்டும் மரியாதையா வாங்க போங்கன்னு பேசறீங்க" என்றவள் கேட்டு முடிக்கும் போது அவள் முகத்தில் புன்னகை அரும்பியது.


"உங்களை பார்த்த நாள்லயே என் மனசுல தோன்றின மரியாதை ஜானவி அது... தனி மனுஷியா ஒரு பெண் குழந்தையோட நீங்க வாழ்க்கையை எதிர்கொண்ட விதம் இருக்கே... நீங்க எப்பவும் எனக்கு மரியாதைக்குரிய நபர்தான்... என்னால அந்த விஷயத்தை மாத்திக்க முடியாது... நான் மாத்திக்கவும் விரும்பல"


"அதில்ல செழியன்... மத்தவங்க முன்னாடி"


"யாருக்காகவும் நம்மல மாத்திக்க வேண்டாமே... என் ஜானவி எப்பவும் எனக்கு மரியாதைகுரியவங்கதான்" என்றவன் தீர்க்கமாக சொல்ல,


அவள் முகம் விகசித்தது.


மீனாவும் அன்புவும் விளையாடுவதை பார்த்து கொண்டே ஜானவி அவனிடம், "நீங்க பசங்ககிட்ட இப்ப சொல்றதெல்லாம் அவங்களுக்கு புரியுமா செழியன்?" என்று சந்தேகமாக கேட்க,


"நல்ல விஷயங்களை பசங்க மனசுல நம்ம விதைச்சுக்கிட்டே இருக்கணும்... அது முளைக்கும் போது முளைக்கட்டும்... ஆனா நம்ம விதைக்கிறதை மட்டும் நிறுத்தவே கூடாது" என்றான்.


ஜானவி அவனை வியப்போடு பார்த்து, "நீங்க நல்ல மகன்... நல்ல கணவன் நல்ல நண்பன் இது எல்லாத்தையும் விட ரொம்ப ரொம்ப நல்ல அப்பா... " என்று சொல்லி முடிக்க,


"ஜானவி போதும்... என்னால முடியல" என்றான் செழியன் சிறுபுன்னகையோடு!


அதன் பின் செழியனை பார்த்து அங்கு வந்து ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர், "எப்படி இருக்க அன்பு?" என்று நலம் விசாரிக்க,


"நல்லா இருக்கேன் ஐயா!" என்று சொல்லி கொண்டே ஜானவியிடம் திரும்பி, "இவர்தான் இந்த அசிரமத்தை நடத்திட்டு இருக்காரு" என்று சொல்லிவிட்டு ஜானவியை தன் மனைவி என்று பரஸ்பரம் அவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான்.


அவர்கள் பேசி கொண்டே அலுவலக அறைக்கு சென்றுவிட அவர் அன்புவிடம்,


"உங்களாலதான் உங்க பிரெண்ட்ஸும் இங்க அடிக்கடி வராங்க... ரொம்ப நாள் கழிச்சு நீங்க எல்லோரும் சேர்ந்து வந்ததை பார்க்க சந்தோஷமா இருக்கு" என்றார்.


செழியன் புன்னகைத்து, "எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றவன் தன் பர்ஸை எடுத்து ஒரு ஐயாயிரம் ரூபாயை கொடுத்து,


"போன மந்த் கொடுக்க முடியல... கொஞ்சம் டைட்டா இருந்துச்சு" என்று சொல்லி கொண்டே அந்த பணத்தை கொடுக்க, "செழியன் ஒரு நிமிஷம்" என்று அழைத்தாள் ஜானவி.


"இருங்க பணத்தை கொடுத்துட்டு வந்துடுறேன்" என்று அவன் சொல்ல,


"ப்ளீஸ் கொஞ்சம் வாங்க" என்று அழுத்தமாக அழைத்தாள்.


"இதோ வந்திடுறேன்" என்று சொல்லி எழுந்து வந்த செழியன், "ஜானவி நீங்க பன்றது சரியில்ல... இது என் பெர்ஸன்ல் ஸேவிங்ஸ்" என்று சொல்லி கொண்டிருக்கும் போதே,


அவள் தன் செக் புக்கை எடுத்து அதில் நிரப்பிவிட்டு அவனிடம் நீட்டினாள்.


"நீங்க வேற நான் வேற இல்லன்னா நீங்க இதை வாங்கி அவர்கிட்ட கொடுங்க" என்றாள்.


இத்தனை நாளில் ஒரு முறை கூட செழியன் அவள் சாம்பத்யத்தை வாங்கியதில்லை. அவளாக கொடுத்தால் கூட அது நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு இருக்கட்டும் என்று சொல்லிவிடுவான்.


அவளாக தரும் போது அதனை மறுக்க முடியாமல் செழியன் அந்த செக்கை வாங்கிவிட்டு அவள் முகத்தை அதிர்ச்சியாக பார்த்தான்.


"இதுல டூ லேக்ஸ் எழுதி இருக்கீங்க ஜானவி" என்றதும் அவள் ஆம் என்று தலையசைத்து,


"மணி இஸ் நாட் எவிரித்திங்... லவ்... லவ் இஸ் எவிரித்திங்... நீங்க சொன்னதுதான்... அதை நான் இப்போ அக்ஸ்ப்ட் பண்ணிக்கிறேன்" என்றாள்.


செழியன் அதிசயத்து அவளை பார்க்க ஜானவி அவன் முகத்தை பார்த்து, "பணம் பணம்னு நான் பணம் பின்னாடி ஓடினதுக்கு காரணம் எனக்கு லைஃபல ஏற்பட்ட இன்ஸெக்யூரிட்டி பீலிங்தான்... ஆனா இப்போ எனக்கு அதில்ல... என் அன்பு என் கூட இருக்கும் போது இந்த பணமெல்லாம் ஒண்ணுமே இல்ல" என்றாள்.


"என்ன சொன்னீங்க... அன்பு வா?!" என்று செழியன் ஆச்சர்யமாக கேட்க,


"உம்ஹும்... அன்புன்னு சொல்லல... என் அன்புன்னு சொன்னேன்" என்றவள் அழுத்தி சொல்ல அவன் முகத்தில் புன்னகை வழிந்தோடியது.


அவன் அந்த செக்கை அவரிடம் சென்று பெருமையாக கொடுத்துவிட்டு ஜானவியை பார்த்து நெகிழ்ச்சியாக புன்னகைத்தான். அந்த கணம் அவள் மனமும் சந்தோஷத்தில் திளைத்தது.


அதன் பின் செழியன் அவன் நண்பர்கள் மற்றும் அந்த அசிரமத்தின் குழந்தைகளையும் ஒன்றிணைத்து விளையாட்டு அரட்டை ஆட்டம் பாட்டம் என்றிருக்க, அந்த இடமே அதகளப்பட்டு கொண்டிருந்தது.


மீனாவும் அன்புவும் அந்த தருணத்தை சந்தோஷமாக கொண்டாட, அங்கிருந்த குழந்தைகளும் கூட இன்பமாக உணர்ந்தனர்.


அதுவும் அவர்களின் தனிப்பட்ட திறமைகள் ஆசைகளை கேட்டு அவர்களை ஊக்குவித்து கைத்தட்டி பாராட்டி அதை செய்ய வைத்து மகிழ்வித்தனர்.


மீனா அப்போது ஒரு பாட்டுக்கு ஆடி காண்பிக்க, அங்கே கைதட்டல் ஒலி அதிர்ந்தது. அன்புவோ தன் கொஞ்சும் குரலில் ஏதோ பாட, எல்லோரும் ஆசையாக அதை கேட்டு ரசித்தனர்.


அப்போது செழியனின் நண்பர்கள், "ஏ மச்சான்! நீ ஒரு பாட்டு பாடேன்டா" என்றதும்,


"அதெல்லாம் காலேஜ் டேஸ்ல... இப்பெல்லாம் உம்ஹும்" என்று தவிர்த்தான்.


"ப்ளீஸ் அன்பு... பாடு" என்று அனிதா கேட்க ஜானவி அனிதாவை பார்த்து,


"அவர் பாட்டெல்லாம் பாடுவாரா?" என்று வியப்போடு கேட்டு வைத்தாள்.


"உங்களுக்கு தெரியாதா? பயங்கரமா பாடுவான்... நாங்க போரடிக்கும் போது அவனை பாட சொல்லிதான் கேட்போம்... செம ரொமேன்டிக் வாய்ஸ்" என்று சொல்ல ஜானவி அவன் முகத்தை பார்த்து,


"அப்படின்னா பாடுங்க செழியன்... நானும் கேட்கணும்" என்றாள்.


"அதெல்லாம் காலேஜ் டேஸ்ல... இப்போ டச் விட்டுபோச்சு ஜானு" என்று அவன் மறுக்க அவள் முகம் சுருங்கி போனது. அதற்கு பிறகு அவன் மறுக்க மனமில்லாமல்,


"சரி... நான் பாடுறேன்... ஆனா என் கூட ஃபீமேல் வாய்ஸ் யாராச்சும் பாடணும்" என்று அவள் முகம் பார்த்து சொல்ல,


"நீங்க பாடுங்க ஜானவி" என்று அவன் நண்பர்கள் உரைத்தனர்.


"சேகர் செத்துருவான்... சத்தியமா என்னால முடியாது" என்று திட்டவட்டமாக அவள் மறுக்க செழியன் சிரித்துவிட்டு,


"சரி... அனி... நீ பாடு" என்று அனிதாவை பார்த்தான்.


கொஞ்ச நேரம் யோசித்தவள் செழியன் காட்டிய பாடல் வரிகளை பார்த்து, "ஹ்ம்ம்... ஹ்ம்ம்... இதை யாருக்காகடா பாட போற" என்று தலையசைத்து கேட்க,


செழியன் அவளை முறைத்து வைக்கவும் அந்த பாடல் வரிகளை படித்துவிட்டு, "ஓகே ஓகே... பாடுறேன்" என்றாள்.


ஜானவி மலர்ந்த முகத்தோடு அவன் பாட போகும் பாடலை கேட்க ஆர்வமாக அமர்ந்திருந்தாள்.


செழியன் பார்வை நிதானமாக எல்லோர் மீதும் படர்ந்துவிட்டு இறுதியாக ஜானவியிடம் நிலை கொண்டது.


அவளை பார்த்து கொண்டே பாட தொடங்கினான்.


'நீ என்பதே நான் தான டி

நான் என்பதே நாம் தான டி...'


என்ற வரிகளை பாடிய நொடி அவள் விழிகள் அவன் விழிகளோடு கலந்தன. ஆழமான காதல் உணர்வோடு அவன் பாடல் அவள் செவிகளை தீண்ட, அவன் விழிகளோ அவளை ஆழமாக ஊடுருவியது.


'ஒரு பாதி கதவு நீயடி

மறு பாதி கதவு நானடி

பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்

சேர்த்து வைக்க காத்திருந்தோம்


ஒரு பாதி கதவு நீயடா

மறு பாதி கதவு நானடா

தாழ் திறந்தே காத்திருந்தோம்

காற்று வீச பார்த்திருந்தோம்'


அனிதா தன் பேசியில் வரிகளை பார்த்து கொண்டே பாட செழியன் தன்னவளை பார்த்து கொண்டே பாடினான். அவளை நாணம் சூழ்ந்து கொண்டது.


'ஒரு பாதி கதவு நீயடி

மறு பாதி கதவு நானடி...


இரவு வரும் திருட்டு பயம்

கதவுகளை சேர்த்து விடும்


ஓ... கதவுகளை திருடி விடும்

அதிசயத்தை காதல் செய்யும்


இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது

இடையில் பொய் பூட்டு போனது


வாசல் தல்லாடுதே

திண்டாடுதே கொண்டாடுதே


ஒரு பாதி கதவு நீயடி

மறு பாதி கதவு நானடி... ஈ...


ஓ... இடி இடித்தும் மழை அடித்தும்

அசையாமல் நின்றிருந்தோம்


ஓ... இன்றேனே நம் மூச்சும்

மென் காற்றில் இணைந்து விட்டோம்


இதயம் ஒன்றாகி போனதே

கதவே இல்லாமல் ஆனதே


இனி மேல் நம் வீட்டிலே

பூங்காற்று தான் தினம் வீசுமே'


அவனின் குரல் அவள் மனதை வருடி அவள் உணர்வுகளோடு சதிராடியது. பாடல் முடிந்த பின்னும் அவளால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை.


அவளின் ஒவ்வொரு செல்லிலும் அவன் பாடிய பாடலே ரீங்காரமிட, அவளின் உணர்வுகள் மொத்தமும் அவனிடத்தே சரணடைந்தது.


அவள் அவளாக இல்லை.


அந்த கொண்டாடங்கள் முடிந்த பின் எல்லோரும் களிப்போடு செழியனை கட்டியணைத்து கொண்டு புறப்பட தயாராக,


"நான் கூப்பிட்டதும் எல்லோரும் உடனே புறப்பட்டு வந்துட்டீங்க... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல" என்று அவன் நன்றிகலந்த உணர்வோடு தன் நண்பர்களை பார்த்தான்.


"நீ கூப்பிட்டு நாங்க எல்லாம் வராம இருப்போமா டா? அதுவும் இப்படி ஒரு சேன்ஸை மிஸ் பண்ணுவோமா" என்றனர்.


இறுதியாக, "நம்ம எல்லோரும் இந்த மாதிரி அடிக்கடி ஒரு மீட் போடணும்" என்று அனிதா சொல்ல,


"கண்டிப்பா" என்றான் செழியன்.


பேசி முடித்த பின் ஒவ்வொருவராக கிளம்ப செழியன் இறுதியாக மகள்களை காரில் ஏற்றிவிட்டு,


"ஜானவி நீங்களும் கார்ல ஏறுங்க" என்ற நொடி அவள் அந்த இடத்தை சுற்றும் முற்றும் ஒருவிதமாக பார்த்தாள்.


"என்ன ஜானவி?" என்றவன் கேட்கும் போதே,


ஜானவி அவனை நெருங்கி அவனின் இதழ்களில் தம் இதழ்களை சேர்த்து அவசரமாக ஒரு முத்தத்தை பதித்துவிட்டு, எதுவும் நடக்காதது போல் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.


என்ன நடந்தது என்று கிரகிக்கவே செழியனுக்கு சில நொடிகள் பிடித்தது.


அவன் காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டு ஜானவியை பார்த்து, "இதுக்கு பேர்தான் இன்ஸ்டன் காபியா ஜானவி" என்று கேட்க,


"காரை எடுங்க" என்று நாணத்தோடு முகத்தை வேறுபுறம் திருப்பி கொண்டு உரைத்தாள்.


அவன் காரை இயக்கிவிட்டு, "ஹ்ம்ம்... நான் பக்கத்தில உட்காரவே பப்ளிக் பிளேஸ்னு சீனெல்லாம் போட்டுட்டு" என்று இழுக்க,


"அதெல்லாம் யாரும் பார்க்காமதான் கொடுத்தேன்" என்றாள்.


"ஆஹான்" என்று செழியன் நக்கலாக அவளை பார்க்கவும் அவள் நாணத்தோடு,


"உண்மை சொல்லணும்னா நீங்க பாடினதை கேட்க கேட்க" என்று அவள் தன் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளை தேடினாள்.


"நான் பாடினது அவ்வளவு பிடிச்சிருந்துதா ஜானு"


"நீங்க வெறும் பாட மட்டுமா செஞ்சீங்க" என்றவள் ஓரப்பார்வை பார்க்க அமைதியாக சிரித்து கொண்டவன்,


"சீக்கிரமா வீட்டுக்கு போகணும்" என்றான் ஏக்கபெருமூச்சோடு!


ஜானவி விழிகளில் வெட்கம் மின்னி கொண்டிருக்க,


மீனா அப்போது அவர்கள் காதல் நிலையை கலைத்து, "அப்போ இன்னைக்கு அம்மம்மா வீட்டுக்கு போகலயா?" என்று கேட்க,


செழியனும் ஜானவியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அதிர்ந்தனர். ஜானவி முகத்திலிருந்த சந்தோஷமெல்லாம் அந்த வார்த்தைகளில் மொத்தமாக விலகி போயிருந்தது.


அவள் முகம் கோப நிலைக்கு மாறிவிட செழியன் தயக்கத்தோடு, "மீனா கேட்கிறா... பேசாம கூட்டிட்டு போயிட்டு" என்றவன் தயங்கிபடி சொல்ல,


"செழியன்" என்று அவள் உக்கிரமாக பார்த்தாள்.


"மீனாவுக்காக ஜானு" என்றவன் கெஞ்சலாக கேட்க,


"முடியவே முடியாது" என்று தீர்க்கமாக உரைத்தாள்.


"நான் என் பொண்ணுகிட்ட சொன்ன வார்த்தையை காப்பத்தணும்"


"அப்போ என் வார்த்தைக்கும் என் உணர்வுக்கும் மதிப்பில்லையா?"


"நீங்க வர வேண்டாம்... நான் மட்டும் கூட்டிட்டு போயிட்டு உடனே கூட்டிட்டு வந்திடுறேன்"


அதற்கு பிறகு ஜானவிக்கு செழியனுக்கும் இடையில் வாக்குவாதம் வளர இருவருமே விட்டு கொடுக்க தயாராக இல்லை. மகள் கேட்டதை செய்தாக வேண்டும் என்று செழியன் முடிவாக இருக்க, ஜானவி அந்த வீட்டு பக்கம் கூட போக விழையவில்லை.


கடைசியாக செழியன் தன் மனைவியிடம்,


"ஜானவி போதும்... இதுக்கு மேல பேசனா தேவையில்லாத அர்க்யூமன்ட்ஸ் வளரணும்... நம்ம பசங்க முன்னாடி நாம சண்டை போட்டுக்க வேண்டாம்னு நினைக்கிறேன்... ஸோ ப்ளீஸ்" என்று செழியன் கறாராக சொல்லி அவள் வாயையடைத்துவிட்டான்.


ஜானவிக்கு மேலே பேசும் சந்தர்ப்பமே கொடுக்கவில்லை.


அதன் பின் செழியன் காரை சங்கரன் வீட்டு வாசலிற்கு கொஞ்சம் முன்பாக நிறுத்தினான். ஜானவி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.


செழியன் மட்டும் இறங்கிவிட்டு, "மீனா வா..." என்று அழைக்க,


"நானும் வர்றேன்" என்று அன்பு உரைத்தாள்.


"அன்பு நீ போக வேண்டாம்... நீ அம்மாகிட்ட வா" என்று அன்புவை கட்டாயப்படுத்தி தன் மடியில் அமர்த்தி கொண்டாள். செழியன் மீனாவை அழைத்து கொண்டு சென்றுவிட்டான்.


"நான் ஏன் போக வேண்டாம்?" என்று அன்பு குழந்தைத்தனமாக ஜானவியிடம் கேட்க,


"மரியாதை தெரியாதவங்க வீட்டுக்கு நம்ம எப்பவுமே போக கூடாது" என்று ஜானவி தீர்க்கமாக மகளிடம் உரைத்தாள்.


"அப்போ மீனாவும் அப்பாவும் போறாங்க" என்று அன்பு கேட்க,


"போயிட்டு வரட்டும்... அப்புறம் இரண்டு பேருக்கும் வைச்சுக்கிறேன் கச்சேரி" என்று கடுப்பாக உரைத்தாள்.


செழியன் மீனாவை அவர்கள் வீட்டின் வாயிலில் நிறுத்த சங்கரன் அவனை பார்த்துவிட்டு சந்தோஷமாக,


"வாங்க மாப்பிள்ளை வாங்க" என்று உற்சாகமாக வரவேற்றார்.


"ஆமா ஜானு எங்கே?" என்றவர் கேட்க, அப்போது கிரிஜாவும் வாசலுக்கு வந்தார்.


சங்கரன் செழியனை அறிமுகம் செய்விக்க மீனா கிரிஜாவை பார்த்த சந்தோஷத்திலே உள்ளே சென்று, "அம்மம்மா" என்று கட்டி கொள்ள அவளை வாரி அணைத்து முத்தமிட்டவர், "உள்ளே வாங்க மாப்பிள்ளை" என்றார்.


"சாரி அத்தை... என்னை தப்பா எடுத்துக்காதீங்க... ஜானவி வராம நான் உள்ளே வர விரும்பல... மீனா உங்களை எல்லாம் பார்க்கணும்னு ஆசைப்பட்டா... அதான் கூட்டிட்டு வந்தேன்... கிளம்பணும்" என்றான்.


சங்கரனும் கிரிஜாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்துவிட்டு,


"அப்போ ஜானு வர மாட்டாளா?" என்று ஏமாற்றத்தோடு கேட்க,


"அம்மாவும் அன்புவும் கார்ல இருக்காங்க அம்மம்மா" என்றாள் மீனா!


அவர்கள் உடனே, "நாங்க போய் ஜானுகிட்ட பேசி பார்க்கிறோம்" என்று வெளியே செல்ல,


"போகாதீங்க... அவ பேச மாட்ட... உங்களுக்குதான் கஷ்டம்" என்றவன் வார்த்தைகளை கேட்காமல் சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிச்சமானது.


ஜானவி கார் கதவை பூட்டியபடி அவர்கள் பேச வந்த வார்த்தைகளை கேட்க கூட கேட்காமல் பிடிவாதமாக உள்ளேயே அமர்ந்து கொண்டாள்.


இறுதியாக மீனா மட்டும் தன் அம்மம்மா தாத்தா மாமா சித்தி எல்லோரிடமும் பேச, செழியன் வெளியேவே காத்திருந்தான். அவர்களுக்கு ரொம்பவும் சங்கடமாகி போனது.


கிரிஜா செழியனிடம், "நான் செஞ்சது பெரிய தப்புதான்... அதுக்கு நான் எவ்வளவு தடவை வேணா உங்ககிட்டயும் ஜானுகிட்டயும் மன்னிப்பு கேட்கிறேன்" என்க,


"ஐயோ! மன்னிப்பெல்லாம் வேண்டாம் அத்தை" என்று அவன் உரைத்தான்.


"ஜானுதான் நாங்க சொல்றதை கேட்க மாட்டிறான்னா... நீங்களும் இப்படி உள்ளே வராமலே போறீங்களே!" என்று சங்கரன் ஆதங்கமாக கேட்டார்.


"கண்டிப்பா இன்னொரு சமயம் வருவேன் மாமா... ஜானவியையும் அழைச்சுக்கிட்டு" என்றவன் மகளிடம்


"போலாமா மீனு" என்று கேட்க,


"போலாம் ப்பா" என்று அவளும் சமத்தாக தந்தையின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு புறப்பட்டுவிட்டாள்.


அதற்கு பின் செழியன் காரில் வந்து அமர ஜானவி முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்திருந்தாள்.


அவர்கள் கார் அவர்கள் குடியிருப்பின் வாசலில் இறங்கிவிட்டு அன்புவின் கையை பிடித்து கொண்டு விறுவிறுவென படிக்கெட்டு ஏறி சென்றுவிட்டாள்.


"அம்மா... நம்ம மேல ரொம்ப கோபமா இருக்காங்க மீனு" என்று செழியன் சொல்லியபடி மகளை அழைத்து கொண்டு மேலே வர,


"இப்ப நாம என்ன பண்றதுப்பா?" என்று கேட்டாள் மீனா!


"அப்பா சொல்ற மாறி பண்ணா அம்மாவை சமாதானப்படுத்திடலாம்" என்றவன் மகளிடம் இறங்கி சொல்ல, "என்ன?" என்று அவள் சைகையோடு கேட்டாள்.


"நீயும் அன்புவும் சமத்தா இன்னைக்கு ஒரு நாள் தாத்தா பாட்டி ரூம்ல படுத்துக்கணும்... ஓகேவா?" என்று சொன்னதும் அவள் செழியனை பார்த்து,


"அப்படி படுத்துக்கிட்டா அம்மா சமாதானமாயிடுவாங்களா?" என்று கேட்டாள்.


"அப்பா பேசி எப்படியாச்சும் சமாதானப்படுத்திடுவேன் இல்ல" என்று அவன் சொன்ன நொடி,


"ஒகே ஒகே" என்று மீனா ஜோராக தலையசைத்து தந்தையிடம் சம்மதம் தெரிவித்தாள்.

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page