top of page

Nee Enbathe Naanaga - 20

20 - ஊடல்


விடிந்ததும் மீனாவும் அன்புவும் இயல்புநிலைக்கு திரும்பிவிடுவார்களா என்று எதிர்பார்த்த ஜானவிக்கு ஏமாற்றமே மிச்சமானது.


எழுந்ததும் மீனா படுக்கையில் அமர்ந்து கொண்டு கன்னத்தில் கை வைத்து கொண்டிருந்தாள்.



"என்னடி? அப்படியே உட்கார்ந்திருக்க... எழுந்திருச்சு போய் பிரெஷ் பண்ணு... ஸ்கூலுக்கு கிளம்பணும்" என்று ஜானவி பரபரப்பாக சொல்ல,


"அம்மம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்ன இல்ல நீ" என்று அவள் இரவு கேட்டதை அப்படியே கேட்க ஜானவி அதிர்ச்சி நிலையில் மகளை பார்த்துவிட்டு


பின் இயல்பு நிலைக்கு திரும்பி, "அதெல்லாம் இப்ப முடியாது... கிளம்பு முதல்ல ஸ்கூலுக்கு" என்றாள் அழுத்தமாக.


ஆனால் மீனாவின் பிடிவாதத்தின் முன்னிலையில் ஜானவியின் வார்த்தைகள் கொஞ்சமும் எடுபடவில்லை.


அதுவும் செழியன் வேறு ஜானவியிடம் கோபம் கொண்டு மீனாவிடம் குரலை கூட உயர்த்த கூடாது என்று கண்டிப்போடு கூறியிருந்தான்.


இதனால் ஜானவிக்கு மகளை சமாளிக்க முடியாமல் கடுப்பேற, எத்தனை நேரம்தான் அவள் தன் பொறுமையை இழுத்து பிடித்து கொண்டிருப்பாள்.


ஒரு நிலைக்கு மேல் அவள் எரிச்சலாகி, "நான் சொல்றது கேட்க மாட்ட" என்று கத்த ஆரம்பிக்கும் போதே,


"ஜானவி" என்று செழியன் அழைத்தான்.


அவள் மகளிடம் சிக்கி தவித்து கொண்டிருந்ததை ஆரம்பத்திலிருந்தே அவனும் பார்த்து கொண்டுதான் இருந்தான். அவளால் சமாளிக்க முடியாத நிலையில் அவனாகவே முன்னே வந்து நின்று,


"அப்பா... நான் உங்களை அம்மம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்" என்றவன் சொல்ல, ஜானவி அவனை முறைத்து பார்த்தாள்.


'சும்மா' என்று செழியன் மனைவியிடம் பாவனை செய்துவிட்டு,


"ஆனா இப்போ போக முடியாது மீனு... ஸ்கூல் இருக்கு... டைமாகுது கிளம்புங்க" என்றான்.


மீனாவோ பிடிவாதமாக,


"உம்ஹும் இப்பவே" என்று மறுப்பாக தலையசைத்தாள்.


"இல்லடா செல்லம்... இன்னைக்கு ஸ்கூல் இருக்கு... போகலன்னா மிஸ் திட்டுவாங்க... நான் உங்களை ஸேட்டர் டே கண்டிப்பா கூட்டிட்டு போறேன்" என்றவன் சொன்ன நொடி மீனா சற்று அமைதியாகி,


"ஸேட்டர் டே எப்போ வரும்?" என்று அவனை கேள்வியோடு பார்த்தாள்.


"இன்னைக்கு தர்ஸ் டேன்னா... நாளைக்கு ப்ரை டே... நாளன்னைக்கு ஸேட்டர் டே... சீக்கிரம் வந்திரும்... சரியா" என்று அவன் பொறுமையாக தலையசைத்து மகளிடம் சொல்ல,


மீனா தீவிரமாக யோசித்துவிட்டு, "ஹ்ம்ம் சரி" என்று முகத்தை தொங்க போட்டு கொண்டு சம்மதம் தெரிவித்தாள்.


ஜானவியோ மீனாவிடம் செழியன் பேசிய விதத்தை ரசனையோடு கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருக்க,


"ஜானவி" என்று செழியன் அழைக்கவும் அவள் தன்னிலை மீட்டு கொண்டு அவனை பார்க்க,


"நீங்க மீனாவை குளிப்பாட்டி ரெடி பண்ணுங்க" என்றான்.