2 - அன்புச்செழியன்
சந்தன நிற ஜீன்ஸ், கருப்பு நிற டாப்ஸ் அணிந்து கொண்டு கண்ணாடியைப் பார்த்து தன்னுடைய கூந்தலை ஜானவி பின்னலிட்டுக் கொண்டாள். அது அவள் தோள்பட்டையில் இருந்து சிறிது கீழ் இறங்கியிருந்தது. அவ்வளவுதான் அதன் நீளமே!
கூந்தலைப் பார்த்துப் பார்த்து கவனிக்கும் அளவுக்கு அவளுக்குப் பொறுமையும் இல்லை. நேரமும் இல்லை. அதற்காக வேண்டியே அதனைக் கத்தரித்து விடுவாள். அப்படி கத்தரித்து கத்தரித்து இப்போது அவளின் கூந்தலின் நீளம் அந்தளவில் இருந்தது. அது எப்போது பாய் கட்டாக மாறுமோ?!
ஆனால் அவள் செய்யும் வேலைக்கு இந்தளவுக்கு முடி அடர்த்தியாக இருப்பதே பெரிய விஷயம். இதில்லாமல் ஒரு பவர் கிளாசை அவள் தன் கண்களில் போட்டுக் கொண்டாள். அதிகமாக உற்று உற்றுப் பார்த்துக் கணக்கு போட்டே அவள் கண்களுக்குக் கிட்ட பார்வை வந்துவிட்டது.
இவற்றை எல்லாம் தாண்டி அவளின் முகதோற்றத்தில் பிரத்யேகமாக சில அமைப்புகள் இருந்தது. சினிமா நடிகைகள் இதழ் மேல் புள்ளியாக வைத்துக் கொள்ளும் மச்சம், அவளுக்கு இயல்பாகவே உதட்டின் மேல் ஒர் அழகான கரும்புள்ளியாக இருந்தது.
அதேநேரம் பெண்களுக்கு இருக்கும் மெலிதான புருவங்கள் போல் அல்லாது அவளுக்குக் கத்தி போல் அடர்த்தியான புருவம். கூர்மையாக அவள் நெற்றியில் வரைந்து வைத்தார் போல் இருக்கும். அதுவும் அவள் முக அமைப்பிற்கு இன்னும் எடுப்பாக தனியாகத் தெரியும். அந்தக் கூர்மையான புருவங்களுக்கு மத்தியில் அலட்சியமாக ஒரு சிறு கரும் பொட்டு. ஏதோ இருக்க வேண்டும் என்பதற்காக ஒட்ட வைத்துக் கொண்டாள்.
ஜானவி திருமணம் ஆன போது ஒல்லியாக இருந்தது போல் இப்போது இல்லை. அவள் கன்னங்கள் எல்லாம் கொஞ்சம் பூசி அவள் உயரத்திற்கு ஏற்ற உடல் வாகில். அந்த வகையில் பார்க்க அவள் கொஞ்சம் கெத்தாகவே இருப்பாள்.
கூடவே ஜானவிக்கு இந்த ஒரு வருடமாக தான் சுயமாக இருக்கிறோம் என்ற ஒரு கர்வம். அது அவள் பார்வையிலும் நிமிர்விலும் செயலிலும் மிளிர்வதுதான் சராசரியான பெண்களிடத்தில் இருந்து அவளை முற்றிலுமாய் தனித்துக் காட்டியது.
ஜானவி அலுவலகத்திற்குத் தயாராகி சோபாவில் அமர்ந்து கொண்டு பரபரப்பாய் அந்த தோசையை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள்.
அவள் வந்து அமர்ந்ததுமே, “நான் வெளியே போயிட்டு வர்றேன் கிரிஜா!” என்று எப்போதும் போல் எழுந்து சென்று விட்டார் சங்கரன்.
மகள் முகத்தைப் பார்ப்பதற்கு அவருக்கு ஒருவிதமான குற்றவுணர்வு. படித்துக் கொண்டிருந்த மகளை இப்படி திருமணம் முடித்து அவள் வாழ்க்கையை நாமே அழித்துவிட்டோமே என்று!
அந்த மனநிலையோடு மகளை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. அதேநேரம் அவள் ஒரு தனி பெண்ணாக தன் குடும்பத்தின் செலவுகளைப் பார்த்துக் கொள்கிறாள் என்பதில் அவருக்கு ஒருவித சங்கடம். அதை ஒரு குடும்பத் தலைவனாக அவரால் மட்டுமே உணர முடியும் வலி.
அதுவும் அவள் வந்து அமர்ந்துவிட்டால் செய்தித் தாளும் ரிமோட்டும் அவள் கைவசம் வந்துவிடும். செய்தித் தாளில் அன்றைய பொருளாதாரப் பக்கங்களைப் புரட்டி பார்த்துக் கொண்டே தொலைக்காட்சியில் அன்றைய மார்க்கெட் நிலவரத்தையும் பார்த்துக் கொள்வாள். அவள் வேலையைப் பொருத்தவரை ஒவ்வொரு நாளும் ஒரு புது தொடக்கம். புதுவிதமான ரிஸ்க். அதனைக் கையாள அனுபவத்தை விட புத்திக் கூர்மையும் விரல் நுனியில் அன்றைய தேதி நிலவரங்களை துல்லியமாக வைத்திருக்கும் திறமையும் வேண்டும். அது அவளிடம் நிரம்பவே இருந்தது.
ஜானவியின் கவனம் முழுக்க அதிலிருந்ததால் அவள் எதை உண்கிறோம் என்பது கூட தெரியாமல் உண்டு கொண்டிருந்தாள். அதே நேரம் அவள் தன் பேசியைப் பார்த்து நேரத்தைக் குறித்து கொண்டே திரும்பிப் பார்க்க கிரிஜா மீனாவிற்கு ஊட்டிக் கொண்டிருந்தார்.
“இப்ப எதுக்கும்மா அவளுக்கு ஊட்டுற... அவளே சாப்பிட மாட்டாளாக்கும்” என்று ஜானவி தன் அம்மாவை முறைக்கவும், “அவளே சாப்பிட்டா ஸ்கர்டெல்லாம் ஆயிடும்டி” பேத்திக்கு ஊட்டுவதற்கு கிரிஜாவிற்கு இது ஒரு சாக்கு!
இதெல்லாம் பாட்டிக்களோடு வளரும் குழந்தைங்களுக்கு மட்டும் கிடைக்கும் சிறப்பு சலுகைகள். அந்த வகையில் மீனாகுட்டி அதிர்ஷ்டசாலிதான்.
ஜானவிக்குதான் இதெல்லாம் பிடிப்பதில்லை. “சமாளிக்காதம்மா... ஸ்கூல்ல அவளே சாப்பிடல... வீட்டுல மட்டும் என்ன? நீ இருந்தாலும் அவளுக்கு ரொம்ப செல்லம் கொடுக்குற” என்று தன் அம்மாவைத் திட்டிக் கொண்டே தட்டை எடுத்து கை அலம்ப சமையலறைக்கு சென்றால், அங்கே அவளை எதிர்ப்பட்டு நின்றாள் ஜமுனா!
“அக்கா” என்று அவள் தயங்கி அழைக்கவும் அவள் முகத்தைக் கூட நிமர்ந்து பாராமல், “என்னடி... எதாச்சும் காசு வேணுமா?” என்றாள்.
“ஆமா க்கா”
“எதுக்கு?” என்று தங்கையிடம் வினவ,
“ஃபிரெண்ட் கல்யாணத்துக்கு கிஃப்ட் வாங்கணும்” என்று அவள் இழுக்க, “அம்மா கிட்ட கேட்டியா?” என்ற போது ஜானவி அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தாள்.
“அது... நூறு ரூபாதான் கொடுத்தாங்க... அதுல அம்பது ரூபா போற வர செலவுக்கே சரியாயிடும்”
தன் தங்கையை ஏறஇறங்கப் பார்த்தவள், “ஓ!” என்று யோசித்துவிட்டு, “சரி தனியா போறியா இல்ல ஃபிரென்ட்ஸோடவா?” என்று கேட்டாள்.
“ஃபிரெண்ட்ஸோடதான்”
“எத்தனை பேர் போறீங்க?” என்று ஜானவி அடுத்த கேள்வி கேட்க, “நாங்க ஆறு பேர் போறோம்” என்றாள்.
“எல்லோரும் ஒண்ணா மீட் பண்ணிதானே போறீங்க?”
“ஆமா”
“அப்புறம் என்ன? ஆளுக்கு அம்பது ரூபா போட்டு ஒரு முன்னூறு ரூபாய்க்கு ஒரே கிஃப்ட் வாங்கிக் கொடுத்திருங்க... பெருசா குடுத்த மாதிரியும் இருக்கும்... சீப்பாவும் முடியும்” என்றவள் சொல்ல ஜமுனாவிற்குக் கடுப்பானது.
ஜானவி சென்றதும், ‘இவளுக்கு அம்மா எவ்வளவோ பரவாயில்ல’ என்றவள் புலம்பிக் கொண்டாலும் அக்காவின் யோசனையைப் பரிசீலனையும் செய்தாள்.
“இருந்தாலும் அக்கா சொன்ன ஐடியா நல்லாத்தான் இருக்கு... ஃபிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி பார்ப்போம்”
அதன் பின் ஜானவி தன் ஸ்கூட்டியில் மகளை ஏற்றிவிட்டாள். அதன் பின்தான் மகளுக்கும் அம்மாவுக்கும் ஐடி கார்ட் செல்போன் இதெல்லாம் நினைவுக்கு வரும். பல நாட்கள் அவர்கள் பாதி தூரம் சென்றுவிட்டு எதையாவது மறந்துவிட்டுத் திரும்பி வருவார்கள். இவர்கள் இருவரையும் அனுப்புவதற்குள் கிரிஜாவிற்குப் போதும் போதும் என்றாகிவிடும்.
ஒருவழியாக இந்த அலப்பறைகளை எல்லாம் முடிந்து ஜானவி மீனாவைப் பள்ளி வாயிலில் கொண்டுவந்து விட, காவலாளி அவளை ஏறஇறங்க வித்தியாசமாய் பார்த்தான்.
9.10 மணிக்கு தொடங்கும் பள்ளிக்கு ஒன்பதே முக்காலுக்கு வந்து சேர்ந்தால் வேறு எப்படி பார்ப்பானாம். அவன் பார்வையைக்் கண்டும் காணாமல் ஜானவி மீனாவை இறக்கிவிட்டுட்டு அவள் பேகை மாட்டிவிட்டு லஞ்ச பேகையும் கையில் கொடுத்து வாசலில் நின்று வழியனுப்பிவிட்டு அவள் தன் வாகனத்தைருப்பும் போது, “மேடம்” என்று ஒரு குரல் ஒலித்தது.
“உங்களை உள்ள கூப்பிடுறாங்க” என்று அந்த காவலாளி சொல்ல, ஜானவி தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு தயங்கினாள்.
“மேடம் உங்களைத்தான்” அவளுக்கு என்னவோ காது கேட்காதது போல் அந்த காவலாளி அழுத்தி சொன்னான்.
அவள் ஸ்டேன்ட் போட்டு விட்டு இறங்கவும், “மேடம் இங்க வண்டியை நிறுத்தக் கூடாது” என்றதும் அவள் கொஞ்சம் தள்ளி நிறுத்தப் போக, "அங்கேயும் நிறுத்தக் கூடாது... சார் வந்தா திட்டுவாரு... நீங்க தள்ளி அந்த பக்கமா நிறுத்துங்க” என்றான்.
அந்தக் காவலாளியை ஜானவி தன்னால் முடிந்தளவுக்கு முறைத்தபடி வண்டியை நிறுத்திவிட்டு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தாள். பள்ளி கட்டிடம் முன்பு இருந்த அந்த பரந்து விரிந்த விளையாட்டுத் திடலில் மீனாவை நிற்க வைத்து ஒருவர் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அவர் உடையைப் பார்த்தால் அனேகமாய் அவர்தான் அந்தப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் என்பது தெரிந்தது.
ஜானவி எப்படி சமாளிப்பதென்று யோசித்துக் கொண்டே முன்னே வர அவளைப் பார்த்து, “இவ்வளவு லேட்டா வந்தா எப்படி மேடம்... ஃபர்ஸ்ட் பீரியடே முடிஞ்சிருக்கும்” என்று அந்த பிடி சார் தன்மையாகவே சொன்னாலும் இவளுக்குக் கடுப்பேறியது.
“இல்ல இன்னைக்குத்தான்...”
“நேற்று கூட” என்றவர் சொல்லவும், “நேத்து சீக்கிரம் வந்துட்டோம்” என்று மீனாவைப் பார்த்தாள்.
“அப்படியா?” என்றவர் யோசித்துக் கொண்டே மீனாவின் ஸ்கூல் டைரியை புரட்ட,
“இன்னைக்கு விட சீக்கிரம்னு சொல்ல வந்தேன்” என்ற ஜானவி சமாளிக்க அந்த பிடி ஆசிரியர் இவளை அழுத்தமாய் பார்த்தான்.
“இனிமே இப்படி லேட் ஆகாது சார்” என்று அவள் எப்படியாவது சமாளித்துவிட்டு ஓடிவிடலாமா என்று இருக்க, அவனோ முறைத்துப் பார்த்து மீனாவின் பள்ளி டைரியை நீட்டினான்.
தாமதமாக வந்தால் குறித்து வைக்கும் பக்கம் போல.
“பார்த்தீங்களா? இதுல எழுதுறதுக்கு கூட இடம் இல்லை... உங்க பொண்ணு அவ்வளவு நாள் லேட்டா வந்திருக்கா” என்றவர் இப்போது தீவிரமாய் கேட்க,
“இன்னொரு பேஜ் பிரிண்ட் பண்ணி இருந்தா இடம் இருந்திருக்கும்” என்று ஜானவி சொன்ன பதிலைக் கேட்டு அந்த பி.டி ஆசிரியர் அதிர்ந்துவிட்டார்.
“நீங்க போய் பிரின்ஸ்பலை மீட் பண்ணுங்க மேடம்” என்று சொல்ல, “ஐயோ சார்... இதுக்கெல்லாம் எதுக்கு பிரின்ஸ்பல்... இனிமே மீனா லேட்டா வர மாட்டா” என்று சொல்லிக் கொண்டே ஜானவி மீனாவைப் பார்க்க, ‘நானாவா லேட்டா வரேன்’ என்று அம்மாவையே குற்றம் சாட்டும் பார்வை பார்த்து வைத்தாள் அவள்.
ஆனால் அந்த பிடி ஆசிரியர், ‘நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்’ என்ற ரேஞ்சுக்கு பள்ளி முதல்வரை பார்த்தே தீர வேண்டும் என்ற முடிவோடு மீனாவின் டைரியைக் கையோடு எடுத்து சென்றுவிட, “என்னடி இது?” என்று ஜானவி மீனாவை பரிதாபமாகப் பார்த்தாள். ஆனால் மீனாவிற்கு உள்ளூர சந்தோஷமாக இருந்தது என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது.
“தினமும் நான் மட்டும் வாங்குறேன்... இன்னைக்கு நீயும் வாங்கு” என்று மீனா சொல்ல, “உன்னை அப்புறம் வைச்சுக்கிறேன்” என்று கடுப்பாய் சொல்லிவிட்டு மகளின் கையைப் பற்றிக் கொண்டு முதல்வர் அறை வாசலுக்கு சென்றாள்.
அங்கே அந்த பிடி முதல்வரிடம் மீனாவின் டைரியையும் கொடுத்துவிட்டு மொத்த தகவலையும் ஒப்பித்துக் கொண்டிருந்தான். “போச்சு செத்தோம்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“டிஸ்சிப்லின் டிக்னிட்டி டெக்கோரம்” என்று மீனா சம்பந்தே இல்லாமல் பேச, “என்னடி உளற?” என்று கேட்டுக் கொண்டே மகளை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
அந்தப் பெண் முதல்வர் ஜானவியைப் பார்த்தது விறைப்பாக, “எங்க ஸ்கூலோட மோட்டோ வே டிஸ்சிப்லீன் டிக்னிட்டி டெக்கோரம்” என்று மீனா சொன்ன வார்த்தையை அச்சு பிசகமால் சொல்ல ஜானவிக்கு உதடு வரை வந்த புன்னகை வெளியே எம்பிக் குதிக்க வந்தது. ஆனால் சிரமப்பட்டு அந்த சிரிப்பை வெளிவராமல் அவள் அடக்கிக் கொண்டு நிற்க, அந்த முதலவர் தன் அறிவுரைப் படலத்தை நிறுத்தாமல் வாசித்துக் கொண்ருந்தார்.
“இனிமே இப்படி லேட் ஆகாது மேடம்” என்று ஜானவி ஒரு நிலைக்கு மேல முடியாமல் அவரிடம் கெஞ்சாத நிலையாக சொல்ல, “ஓகே... ஒரு லெட்டர் எழுதிக் கொடுத்துட்டு போங்க” என்று அவர் சொல்லவும்,
“லெட்டரா?” என்று கடுப்பாய் பார்த்தாள்.
“எஸ்... லெட்டர் கொடுத்துத்தான் ஆகணும்... இனிமே உங்க பொண்ணு லேட்டா வர மாட்டான்னு” என்று அந்த பெண் முதல்வர் கண்டிப்பாக சொல்லி தன் காரியதரிசியைப் பார்க்க, அவர் உடனே ஒரு வெள்ளைத் தாளைக் கொடுத்தார்.
இது அவர்கள் பள்ளிகூடத்தில் எப்போதும் வழக்கம் போல. ஜானவியும் வேறு வழியில்லாமல் அதனை வாங்கி அந்த அறையின் ஓரமாய் இருந்த மேஜையின் மீது வைத்து எழுதத் தொடங்கினாள்.
அதற்குள் அந்த முதல்வரைப் பார்க்க காத்திருந்த நபர் உள்ளே நுழையவும், “வாங்க மிஸ்டர் அன்புச்செழியன்!” என்று புன்னகையோடு அழைத்தார்.
“குட் மார்னிங் மேடம்...” என்று ஆரம்பித்தவன், “என்னை நீங்க ஷார்ட்டா அன்புன்னே கூப்பிடலாம் மேடம்” என்றான்.
“ஓகே... உட்காருங்க அன்பு!”
அப்போது மீனா தன் அம்மாவின் டாப்பை பிடித்து இழுத்து, “ம்மா... என் ஃபிரெண்ட்... அன்புச் செல்வியோட அப்பா” என்றாள்.
“ரொம்ப முக்கியம்... வாயை மூடிட்டு இருடி... இருக்குற கடுப்பில” என்று வேகவேகமாய் அந்த லெட்டரை முடித்து அவள் அருகிலிருந்து முதல்வரின் காரியதரிசியிடம் ஒப்படைக்க, அந்த பெண் அதைப் பிரித்து கூடப் பார்க்காமல் ஒரு ஃபைலிற்குள் திணித்தாள்.
ஜானவி மீண்டும் அந்த முதல்வர் அருகில் வரவும், “இவங்க லெட்டர் கொடுத்துட்டாங்களே!” என்று தன் காரியதரிசியிடம் கேட்க, “எஸ் மேம்” என்று அந்தப் பெண்ணிடம் இருந்து பதில் வந்தது.
“சரி நீங்க போகலாம்... இனிமே இப்படி லேட்டா வர கூடாது” என்றவர் கண்டிப்பாக சொல்ல, அவள் சரியென்று தலையாட்டிக் கொண்டே தன் கைகடிக்காரத்தைப் பார்த்தாள்.
அப்போது மீனா அங்கே இருக்கையில் அமர்ந்திருந்த அன்புவிடம் ஊமை பாஷையில் புன்னகையோடு பேசிக் கொண்டிருந்ததை ஜானவியும் முதல்வரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை.
ஜானவியோ விட்டால் போதுமென அங்கிருந்து சென்றுவிட்டாள். அப்படி ஒரு சூழ்நிலையில் அவளின் வருங்கால நாயகன் அருகிலேயே இருந்தும் அவள் பார்வை அவனைக் கவனிக்காததில் வியப்பில்லை. அதுதான் வாழ்க்கையின் சுவாரசியமே!
ஜானவி வெளியேறிவிட முதல்வர் எதிரே அமர்ந்திருந்த அன்புவை,
“உங்க அப்பாயின்மென்ட் ரெடிதான் மிஸ்டர் அன்பு... இருந்தாலும் லெவண்த் அன்ட் ட்வல்த் எல்லாம் மூணாவது மாடி... உங்களுக்கு ஏறி போக சிரமமா இருக்காதா?” என்றவர் கேட்க,
“அதெல்லாம் இல்ல மேடம்... ஐ கேன்... லெஃப்ட் லெக்ல சப்போர்ட் பண்ணி நிற்க முடியாது... அவ்வளவுதானே ஒழிய மற்றபடி மாடி ஏறிப் போறதெல்லாம் ஒரு மேட்டர் இல்ல” என்றான்.
“ஓ ஓகே...” என்றவர் யோசனையோடு அவனைப் பார்த்து, “எப்படி உங்க கால் இப்படி ஆச்சு... தெரிஞ்சுக்கலமா?” என்று கேட்டதும் அவன் இயல்பாய் பார்த்து,
“ஆறு மாசத்துக்கு முன்னாடி நானும் என் வொய்ஃவும் பைக்ல போயிட்டு இருக்கும் போது ஒரு அக்சிடென்ட்... வலது காலில மல்டிப்பல் ஃபிரேக்ச்சர்... அப்ப இருந்துதான்” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் முகம் அவனை இரக்கமாய் பார்த்தது.
“அந்த அக்சிடென்ட்லதான் உங்க மனைவி” என்றவர் மேலும் கேட்க தயங்க, அவன் மௌனமாய் ஆமோதித்தான். அவன் முகத்திலிருந்த வலியை அவரால் உணர முடிந்தது.
“சாரி மிஸ்டர் அன்பு” என்றவர் சொல்ல,
“இட்ஸ் ஓகே மேடம்” என்றான் மீண்டும் தன் முகத்தை இயல்பு நிலைக்கு மாற்றிக் கொண்டான்.
வலிகளைத் தாண்டி அதை காட்டிக் கொள்ளாமல் அவன் இதழ்களில் தவழ்ந்த புன்னகையை கண்டு வியப்படைந்த முதல்வர், “உங்க எக்ஸ்ப்பீரியன்ஸ் செர்ஃட்பிகேட் பார்த்தேன் அன்பு... நல்ல பெரிய கம்பனில வொர்க் பண்ணி இருக்கீங்க... நல்ல பே வாங்கி இருக்கீங்க... ஆனா இங்க அவ்வளவெல்லாம் கிடைக்காது” என்றார் தயக்கத்தோடு!
“தெரியும் மேடம்... எனக்கு இப்போ நல்ல இயர்ன் பண்றதை விட என் பொண்ணோட இருக்குறதுதான் முக்கியம்னு நினைக்கிறன்”
“ஒ! அப்போ வீட்டுல உங்க பொண்ணு கூட”
“என் பேரண்ட்ஸ் இருக்காங்க... இருந்தாலும் இந்த மாதிரி சூழ்நிலையில என் பொண்ணுக்கு என்னோட தேவை அவசியம்னு நினைக்கிறன்... அவ அவங்க அம்மாவை ரொம்ப மிஸ் பண்றா”
அவனை பெருமிதமாகவும் வியப்பாகவும் பார்த்தவர், “கரெக்ட்தான் அன்பு... நான் அப்பாயின்மென்ட் உடனே ரெடி பண்ண சொல்றேன்... நீங்க வாங்கிட்டுப் போங்க” என்றதும் அவன், “தேங்க்ஸ் மேடம்” என்று சொல்லித் தன் வலது கரத்தில் ஸ்டிக்கைப் பிடித்து எழுந்து நின்று கொண்டான்.
சிலரின் கம்பீரம் உடலில் இருப்பதில்லை. அவர்கள் செய்கையிலும் மனதிலும் இருக்கிறது. ஊன்று கோல் வைத்து நின்றாலும் அன்புச்செழியன் முகத்தில் நம்பிக்கையும் மனோதிடமும் துளியளவும் குறையவில்லை. அதேநேரம் அவனின் உயரத்திலும் உடலைமைப்பிலும் சிறு குறைவுமில்லை. இவற்றை எல்லாம் விட பிறரின் பார்வையில் அவனை ஆளுமையாகக் காட்டியது அவனின் ஒளி பொருந்திய விழிகளோடு கூடிய அவன் தேஜஸ் நிரம்பிய புன்னகைதான். அதுதான் அன்புச்செழியனின் தனி அடையாளம்!
Comments