17 - கண்ணாமூச்சி
சங்கரன் வீட்டிற்குள் நுழைந்ததும் கிரிஜா கணவருக்கு குடிக்க சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க, அதனை ஆவேசமாக தட்டிவிட்டார் அவர்.
கிரிஜா அதிர்ந்துவிட, சங்கரன் கொந்தளிப்பாக மனைவியை முறைத்து கொண்டு நின்றார்.
அந்தளவுக்கு கோபத்தை கணவனிடம் கிரிஜா இதுவரை ஒரு முறை கூட பார்த்ததேயில்லை.
அப்படியே திகைத்து போய் கிரிஜா நிற்க, "என்னாச்சு ப்பா?" என்று மகள் ஜமுனா ஓடிவந்தாள்.
அவர் பதிலேதும் சொல்லாமல் சோபாவில் அமர்ந்து கொண்டுவிட, அவர் விழிகளில் கண்ணீர் தடம்.
"என்னங்க என்னாச்சு?" என்று படபடப்பாக கணவன் அருகில் வந்த கிரிஜாவிடம்,
"பேசாதே... கொன்னுடுவேன்" என்று சீற்றமானார்.
அவரின் வார்த்தை மேலும் கிரிஜாவை அதிர்ச்சிக்குள்ளாக்க, "என்னதான் ப்பா ஆச்சு?!" என்று ஜெகன் பதட்டமாக கேட்டு கொண்டே உள்ளே வந்தான்.
மகனை எரிப்பது போல் சங்கரன் ஒரு பார்வை பார்க்க, அவன் புரியாமல் அம்மாவையும் தமக்கையையும் என்னவென்று கண்ஜாடை செய்தான்.
அவர்களும் ஒன்றும் புரியாமல் குழம்பியபடி நிற்க, யாருக்கும் பதில் சொல்லும் நிலைமையில் சங்கரன் இல்லை.
சுவற்றில் மாட்டியிருந்த மகள்களும் மகனும் ஒன்றாக இருந்த புகைப்படத்தில் ஜானவியின் வெள்ளந்தியான புன்னகை அவர் மனதை குற்றவுணர்வில் ஆழ்த்தியது.
உடைந்து போன மனநிலையில் அவர் அமர்ந்திருக்க, விழிகளில் நீர் தளும்ப அவர் உள்ளம் அன்று மகளுக்கு செய்த அவமானத்தை எண்ணி ஊமையாக அழுதது.
கிரிஜாவிற்கு ஒன்றும் புரியவில்லை. கணவனின் கண்ணீரை பார்த்தவர் படபடப்போடு,
"என்னதாங்க நடந்தது... ஏதாச்சும் சொன்னாதானே எங்களுக்கும் புரியும்" என்று குழப்பமாக வினவ,
"தப்பு செஞ்சிட்டோம் கிரிஜா... ஜானு மனசை நம்ம ரொம்ப நோகடிச்சிட்டோம்" என்று கண்களில் கண்ணீர் பெருக உரைத்தார்.
கிரிஜா முகம் சிவக்க, "அவ பெயரை கூட சொல்லாதீங்க... குடும்ப மானத்தையே வாங்கிட்டா... படுபாவி" என்று சொல்லி முடிக்கும் போதே சுரீலென்று ஒரு அரை விழுந்தது அவர் கன்னத்தில்.
மகளை நிந்தித்ததை தாங்க முடியாமல் சங்கரன் மனைவியை அடித்துவிட,
"அப்ப்ப்ப்ப்ப்பா" என்று ஜமுனாவும் ஜெகனும் ஆங்காரமாக கத்திவிட்டனர்.
"யாராச்சும் ஜானுவை பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசனீங்க" என்று எச்சரிக்கையாக எல்லோரையும் பார்த்து தீவிரமாக சொன்ன சங்கரன் அப்படியே சோபாவில் அமர்ந்தார்.
கிரிஜா கன்னத்தில் கை வைத்து கொண்டு அதிர்ச்சியாக கணவனை பார்த்து கொண்டு நின்றிருந்தார்.
அங்கே ஒரு கனத்த மௌனம் ஆட்கொள்ள, கணவனின் கோபம் தணிந்ததும் கிரிஜா அவரிடம் பொறுமையாக என்னவென்று பேச்சு கொடுத்தார்.
சங்கரன் மனமுடைந்த நிலையில்,
"பாவம்! அந்த பொண்ணுக்கு இருக்க கஷ்டமெல்லாம் போதாதுன்னு... பெரியவ சொன்னதை கேட்டு அவளை நாம சந்தேகப்பட்டு அசிங்கப்படுத்திட்டோம்... தப்பு பண்ணிட்டோம் கிரிஜா... பெரிய தப்பு பண்ணிட்டோம்" என்று வேதனையோடு உரைத்து நடந்த விஷயம் அனைத்தையும் நிதானமாக சொல்லி முடித்தார்.
கிரிஜா இடிந்து போய் தரையில் அமர்ந்து கொண்டு, "அய்யோ!" என்று கண்ணீர்விட்டு கதற,
"வார்த்தையை கொட்டிட்டு இப்ப அழுது என்ன கிரிஜா பிரயோஜனம்... யார் என்ன சொல்லி இருந்தாலும் நாம நம்ம பொண்ணை சந்தேகப்பட்டிருக்க கூடாது" என்று அழுத்தமாக உரைத்தார் சங்கரன்!
"இல்லைங்க... ஜோதிதான்" என்று கிரிஜா அழுது கொண்டே பேச,
"அவ சொன்னா நமக்கு எங்கடி போச்சு புத்தி... என்ன ஏதுன்னு நிதானமா விசாரிக்காம அந்த பொண்ணை என்னவெல்லாம் பேசிட்டோம்" என்று உடைந்து அழுதார் சங்கரன்.
"இல்லப்பா அக்கா தங்கி இருந்த ப்ளேட்ல" என்று ஜெகன் இடையில் பேச,
"பேசாதடா நன்றி கெட்டவனே... அந்த பொண்ணுதானேடா நீ காலேஜ் சேர்ந்த நாள்ல இருந்து உனக்கு பீஸ் கட்டிட்டு இருக்கா... அவ பேர்ல போய் அபாண்டமா பழி போடுறியே... மனசாட்சி இருந்தா அக்காவை பத்தி தப்பா பேசி இருப்பியா டா" என்று சங்கரன் ஆவேசமாக குரலையுயர்த்த ஜெகனுக்கு ஈட்டியாக பாய்ந்தது அந்த வார்த்தைகள்!
நடந்த சம்பவத்தை நினைக்க நினைக்க சங்கரனின் மனம் வெதும்பியது.
"சந்தோஷமா வந்த புள்ளைய நாம அழ வைச்சி அனுப்பிட்டோமே... எவ்வளவு மனசொடைஞ்சி போயிருப்பா" என்று கண் கலங்கி அவர் சொல்ல கிரிஜாவிற்கு தாரை தாரையாக கண்ணீர் பெருகிவந்தது.
எல்லோருமே இப்போதுதான் தங்கள் தவறின் ஆழத்தை உணர ஆரம்பித்தனர்.
"ஜானுவை போய் பார்த்தீங்களா ங்க?" என்று கிரிஜா கேட்க,
"அவ என் முகத்தை கூட பார்க்க விரும்பல கிரிஜா" என்று வருத்தமாக உரைத்தார்.
"அப்புறம் எப்படிங்க" என்று கேட்கவும் சங்கரன் செழியனின் அம்மா அப்பாவை கோவிலில் பார்த்தது முதல்
அவர்கள் வீட்டிற்கு சென்றது வரை
முழுமையாக சொல்லி முடித்தவர்,
"அவங்க ரொம்ப நல்ல குடும்பமா இருக்காங்க கிரிஜா... மாப்பிள்ளை கூட ரொம்ப நல்ல மாதிரி பேசுனாரு... ஆனா ஜானுதான் ஒரு வார்த்தை கூட என்கிட்ட பேசல... என்னை பார்த்ததும் முகத்தை திருப்பிட்டு போயிட்டா" என்று அவர் கண்கள் கலங்க சொல்ல கிரிஜாவின் விழிகளிலும் நீர் கோர்த்தது.
சில நொடி அமைதிக்கு பின் கிரிஜா, "ஜானுவை பார்த்து மன்னிப்பு கேட்கணும்ங்க" என்று சொல்ல,
"நம்ம என்ன மன்னிக்கிற மாறியான தப்பா செஞ்சிருக்கோம்" என்று சங்கரன் தீவிரமாக உரைத்தார்.
"அவ மன்னிக்கலன்னா கூட பரவாயில்லை... அவளை நேர்ல போய் பார்த்துட்டு" என்று கிரிஜா சொல்லி கொண்டிருக்க,
"வேண்டாம் கிரிஜா... அவ இப்பதான் சந்தோஷமா இருக்கா... அதை கெடுக்க வேண்டாம்... இனிமேயாச்சும் அவ நிம்மதியா இருக்கட்டும்" என்று தீர்க்கமாக சங்கரன் சொல்ல கிரிஜாவால் மறுத்து பேச முடியவில்லை. ஆனால் ஜானவியை அவமானப்படுத்தியதால் ஏற்பட்ட குற்றவுணர்வு சங்கரனோடு சேர்த்து அவர்கள் வீட்டில் உள்ள எல்லோரையும் வாட்டி வதைத்தது.
அவள் முகத்தில் கூட விழிக்க தகுதியில்லாமல் அவர்கள் தவிப்பில் கிடந்தனர்.
இவர்கள் மனநிலை இப்படியிருந்தாலும் ஜானவி பழைய விஷயங்களை எல்லாம் மெல்ல மெல்ல மறந்து சந்தோஷகரமான ஒரு வாழ்க்கையை வாழ தொடங்கியிருந்தாள்.
பாண்டியனும் சந்தானலட்சுமியும் அவளை பெற்ற மகள் போலதான் பார்த்து கொண்டனர். அதே போல மீனாவும் அன்புவும் அவள் வாழ்வில் ஒர் அங்கமாகவே மாறிவிட அக்கறைக்கும் அன்பிற்கும் அவளுக்கு ஒரு குறைவுமில்லை.
ஆனால் காதலென்ற உணர்வு மட்டும் செழியன் ஜானவிக்கு இடையில் கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருந்தது.
இருவருக்குமே ஒருவர் மீது ஒருவர் விருப்பமிருந்தாலும் அதை வெளிப்படுத்தி கொள்ள முடியாத தடையும் தயக்கமும் இருந்தது.
ஜானவிக்கு ரஞ்சனி மீது செழியன் கொண்ட அழகான காதலை கலங்கப்படுத்த விருப்பமில்லை. அதேபோல் செழியனுக்கு ஜானவி தன் மீது நண்பன் என்று கொண்டிருந்த நம்பிக்கையை குலைக்க மனம் வரவில்லை.
இருவருமே ஒரே மாதிரியான மனநிலையில் வெவ்வாறான காரணங்களால் தள்ளி இருந்தனர்.
மூன்று மாதம் இப்படியே ஓடி போனது.
மகனின் மனதை பாண்டியன் ஓரளவு புரிந்து கொண்டுவிட்டார். அன்புச்செல்வியையும் மீனாவையும் பூங்காவிற்கு விளையாட அழைத்து வந்த செழியனோடு உடன் வந்த பாண்டியன், "உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும் அன்பு" என்று சொல்ல,
"சொல்லுங்க ப்பா" என்றான்.
அவர் தயக்கமாக, "நீயும் ஜானவியும் இன்னும் விலகிதான் இருக்கீங்களா?" என்று கேட்டுவிட அவன் தந்தையை அதிர்ச்சியாக பார்த்தான்.
அவனால் பதிலேதும் உரைக்க முடியவில்லை.
"ஜானவியை உனக்கு பிடிச்சிருக்குதானே?" என்றவர் அடுத்த கேள்வியை வைக்க,
"அப்பா" என்று அவன் பேசும் முன்னரே,
"நட்பு அது இதுன்னு மழுப்பாம... நேரடியா எனக்கு பதில் சொல்லு... ஜானவியை நீ மனைவியா ஏத்துக்க உனக்கென்ன தயக்கம்?" என்று கேட்டார்.
சில நொடிகள் யோசித்த செழியன்,
"ஜானவியும் நானும் எங்க குழந்தைகளுக்காகதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்" என்று சொன்ன வார்த்தையில் தெரிந்த தடுமாற்றத்தில் மகனின் மனம் புரிந்தது பாண்டியனுக்கு!
"அப்போ நீங்க இரண்டுபேரும் அம்மா அப்பாவா இருப்பீங்க... ஆனா கணவன் மனைவியா இருக்க மாட்டீங்க... அப்படிதானே?!" என்று கேட்கவும் செழியன் மௌனமாகவே நின்றான்.
பாண்டியன் மேலும், "நல்ல கணவன் மனைவியாலதான் நல்ல அம்மா அப்பாவாகவும் இருக்க முடியும் அன்பு... அதுக்கு நானும் உங்க அம்மாவும்தான் உதாரணம்" என்க,
செழியன் உதட்டில் மெல்லிய புன்னகை தவழ பாண்டியன் அவன் தோளை தொட்டு, "நீ ஜானவியை நேசிக்கிறதானே?" என்று கேட்டதும் அவன் தன்னையறியாமல் தலையசைத்துவிட்டான்.
பாண்டியன் முறுவலிக்க செழியன் தவிப்போடு, "நான் தொலைச்ச சந்தோஷத்தை எல்லாம் எனக்கு தேடி தந்தவாங்க ப்பா ஜானவி... நானும் அவங்கள சந்தோஷமா பார்த்துக்கணும்னு நினைக்கிறேன்" என்று தன் மனதை வெளிப்படையாக தந்தையிடம் சொல்லியவன்
"ஆனா ஜானவி மனசுல" என்று தயக்கமாக நிறுத்த பாண்டியன் முகத்தில் புன்னகை அரும்பியது.
"நீ ஜானவிக்கிட்ட மனசை விட்டு பேசு அன்பு" என்று அவர் உரைக்க செழியன் நொடித்து கொண்டு,
"ஈஸியா சொல்லிட்டீங்க... ஆனா அது எவ்வளவு கஷ்டம் தெரியும்மா?" என்றான்.
"இஷ்டப்பட்டது கிடைக்கணும்னா கொஞ்சம் கஷ்டப்பட்டுதான்டா ஆகணும்" என்று பாண்டியன் கிண்டலாக சொல்ல செழியன் முகம் மலர்ந்தது.
அவன் மனமும் அவர் வார்த்தையை ஆமோதித்தது.
ரஞ்சனியை அவனால் மறக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை ரஞ்சனியால் செழியன் வாழ்வில் உண்டான வெற்றிடத்தை முழுவதுமாக ஜானவி நிரப்பியிருந்தாள் என்பது!
தன் தந்தை சொன்னதை ஆழமாக யோசித்தவனுக்கு ஜானவியிடம் பேசி பார்த்துவிட்டால் என்ன என்று தோன்றியது.
அன்று மாலை வீட்டிற்கு திரும்பியதும் ஜானவியிடம் பேச எண்ணியிருந்தான்.
ஜானவி அவள் முன்பு தங்கியிருந்த வீட்டில்தான் சரவணன் ரேஷ்மாவோடு தம் அலுவல்களை மேற்கொண்டிருந்தாள்.
அவள் வேலை முடிந்து திரும்ப இரவாகியிருந்தது. வந்தவள் லேப்டாப்பை வைத்து கொண்டு தம் வேலைகளில் தீவிரமாக மூழ்கிவிட்டாள்.
இரண்டு நாட்களாக இப்படியே தொடர்ந்து கொண்டிருக்க, செழியனுக்கு ஜானவியிடம் பேசவே சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
அன்று எப்படியாவது பேசிவிட வேண்டுமென்று எண்ணி கொண்டுதான் செழியன் பள்ளியிலிருந்து வீடு திரும்பினான்.
செழியன் தம் மகள்கள் இருவரையும் அமர வைத்து பொறுமையாக வீட்டுப்பாடம் சொல்லி கொடுத்து முடிக்கும் போது மணி இரவு எட்டாகியிருந்தது. ஆனால் ஜானவி வீட்டிற்கு திரும்பியபாடில்லை.
அவன் மனம் அவள் வருகைக்காக காத்திருந்த அதேநேரம் சந்தானலட்சுமி, "மணி எட்டாச்சே! ஜானு இந்த நேரத்துக்கு வந்திடுவா... இன்னைக்கு இன்னும் வரலயே" என்று ஆரம்பிக்க,
"வேலையா இருப்பாங்க ம்மா... வந்திருவாங்க" என்ற செழியன் உரைத்தாலும் அவன் மனமும் ஜானவி எப்போது வருவாள் என்று ஏக்கமாக காத்திருந்தது.
மணி ஒன்பதை தொட்ட போதும் ஜானவி வராத காரணத்தால் சந்தானலட்சுமி பேத்திகளுக்கு உணவு கொடுத்துவிட்டு மகனுக்கும் கணவனுக்கும் பரிமாறிவிட்டு அவரும் உணவருந்தினார்.
ஆனால் ஜானவி வராதது எல்லோர் மனதையும் உருத்தி கொண்டுதான் இருந்தது.
"அவங்க ஏதோ பிஸியா இருக்காங்க போல... டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்" என்று செழியன் சொன்னதால் யாரும் ஜானவியை பற்றி பேசி கொள்ளவில்லை.
பாண்டியன் சந்தானலட்சுமியிடம் அவர்கள் அறையிலேயே குழந்தைகளை உறங்க வைத்து கொள்ள சொல்லிய செழியன், முகப்பறையில் ஜானவி வேலை முடித்து வருவதற்காக காத்திருந்தான்.
இந்த மூன்று மாதத்தில் அவள் செய்யும் வேலையினால் அவளுக்கு ஏற்படும் மனஉளைச்சலை அவன் கவனித்து கொண்டுதான் இருந்தான். அவளிடம் அது குறித்து அவன் இதுவரை எதுவும் கேட்டு கொண்டதில்லை.
ஆனால் இந்த மூன்று நாளாக அவள் ஒரெடியாக வேலையென்று அதில் மூழ்கியிருப்பது அவன் மனதை வருத்தியது.
அதுவும் இன்று இயல்பை விடவும் நேரம் கடந்து போய் கொண்டிருக்க செழியன் தன் பொறுமையிந்து ஜானவியை காண சென்றான்.
அப்போது ஜானவி சரவணனையும் ரேஷ்மாவையும் வெலுத்து வாங்கி கொண்டிருந்தாள்.
"என்னாச்சு ஜானவி? இன்னும் சரவணனையும் ரேஷ்மாவையும் வீட்டுக்கு அனுப்பல" என்று செழியன் அதிர்ச்சியாக கேட்க,
அவன் முகத்தை பார்த்து ஒருவாறு அமைதி நிலைக்கு வந்தவள் சரவணன் ரேஷ்மாவை பார்த்து, "சரி இப்போ கிளம்புங்க... ஆனா நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்திருங்க" என்று சொல்ல,
அவர்கள் இருவரும் புறப்பட்டுவிட்டனர்.
"சரி வாங்க போலாம்" என்று செழியன் ஜானவியை அழைக்க,
அவள் தன் லேப்டாப்பை கையிலெடுத்து கொள்ள செழியன் கோபமாகி,
"இவ்வளவு நேரம் வேலை செஞ்சது போதாதா? அதை வீட்டுக்கு வேற தூக்கிட்டு வரணுமா... இங்கயே வைச்சிட்டு வீட்டை பூட்டிட்டு வாங்க... சாப்பிடலாம்" என்று உரைத்தான்.
அவன் குரலில் தெரிந்த அதிகாரத்தை அவள் அதிர்ச்சியாக பார்த்தாள். அப்படியே சிலையாக நின்றிருந்தவளிடம், "வாங்க ஜானவி" என்று அவன் அழுத்தமாக அழைக்க,
"எனக்கு வேலை இருக்கு... நான் பார்த்தே ஆகணும்" என்று பிடிவாதமாக சொல்ல செழியன் அவளை முறைப்பாய் பார்த்தான்.
"வேலை வேலை வேலை... என்னங்க அப்படி பெரிய வேலை... காலையில செஞ்சிக்க கூடாதா?"
செழியன் கடுப்பாக கேட்க, "என் வேலையை நான்தான் செஞ்சாகணும்... வேற யாரும் செய்ய முடியாது... புரிஞ்சுக்கோங்க" என்று அவளும் விறைப்பாக பதில் கூறினாள்.
"வேலை செய்யுங்க... வேண்டாம்னு சொல்லல... ஆனா அதுக்குன்னு இப்படியா.... எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு" என்றான்.
"நான் வேலை செய்றதுல உங்களுக்கு என்ன பிரச்சனை செழியன்?" என்று ஜானவியும் கோபமாக கூற,
"எனக்கு என்ன பிரச்சனை... உங்க மேல இருக்க அக்கறையிலதான் கேட்டேன்" என்று தயங்கியவன் இடைவெளிவிட்டு,
"இப்படி சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க... இவ்வளவு ஸ்ட்ரெஸ் டென்ஷன் இருக்க வேலை உங்களுக்கு தேவைதானா?" என்று கேட்டுவிட்டான்.
ஜானவிக்கு அதிர்ச்சியும் கோபமும் ஒரு சேர தோன்ற, "என் வேலையை பத்தி பேசாதீங்க செழியன்" என்றவள் சூடாக பதில் கொடுத்துவிட்டாள்.
"ஓ! அப்போ உங்க விஷயத்துல என்னை தலையிடாதீங்கன்னு சொல்றீங்க" என்றவன் புருவங்களை சுருக்கி கேட்டான்.
"இல்ல... நான் அப்படி சொல்லல" என்று ஜானவி பதறி கொண்டு மறுக்க செழியன் அவள் பேசியதை கவனியாமல் வெளியேறிவிட்டான்.
'ஏன் இப்போ இவ்வளவு கோபப்படுறாரு?' என்று அவள் முனகி கொண்டே அவனை தேடி கொண்டு அறைக்குள் நுழைய அவன் மட்டுமே படுக்கையில் படுத்திருந்தான். அதுவும் முதுகை காட்டி திரும்பி படுத்திருக்க,
மெதுவாக படுக்கையில் அவளும் படுத்து கொண்டு, "செழியன் சாரி" என்றாள்.
அவனிடம் எந்த அசைவும் இல்லை. பதிலும் இல்லை.
"செழியன்" என்றவள் அழைக்க,
"உங்க சாரியும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்" என்று காட்டமாக பதிலளித்தான்.
"என் பக்கம் கொஞ்சம் திரும்புங்க... உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றவள் நிதானமாக உரைக்க,
"நானும் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்னுதான் மூணு நாளா ட்ரை பன்றேன்... ஆனா நீங்கதான் எதையும் கேட்கிற நிலைமையில இல்லையே" என்றவன் அவள் முகத்தை பாராமலே சொல்ல,
"என்ன பேசணும்?" என்று கேட்டாள்.
"அதை நான் இப்போ சொல்ற நிலைமையில இல்லை... நீங்களும் கேட்கிற நிலைமையில இல்லை விடுங்க"
ஜானவி என்னவென்று புரியாமல் யோசித்து கொண்டே,
"சொல்லுங்க... நான் கேட்கிறேன்" என்றாள்.
"வேண்டாம்" என்று செழியன்
மறுக்க, அவளுக்கு கடுப்பானது.
'ரொம்பத்தான் ஓவரா பன்றாரு' என்று ஜானவி வாய்க்குள்ளேயே முனக, அது அவன் செவிகளில் விழுந்தது.
அவன் அவள் புறம் திரும்பி படுத்து, "யாரு நானா ஓவரா பன்றேனா?" என்று கேட்டு முறைத்தான்.
"ஆமா நீங்கதான்... ஏதோ நான் வேலை டென்ஷன்ல பேசிட்டேன்... அதுக்கு போய் இப்படி மூஞ்ச தூக்கி வைச்சுக்கிட்டா எப்படி?!" என்றவள் நொடித்து கொண்டு கேட்க,
"அந்த டென்ஷன்தான் வேண்டான்னு சொல்றேன்... வாழறதுக்குதான் வேலை செய்யணுமே தவிர வேலையே வாழ்க்கையாகிட கூடாது... பணம்தான் எல்லாமா?" என்றவன் படபடவென பொறிந்து தள்ளினாள்.
"உங்க பிலாஃசபி எல்லாம் பேச வேணா நல்லா இருக்கலாம்... ஆனா நடைமுறைக்கு ஓத்துவராது... நீங்க ஒத்துக்கிட்டாலும் ஓத்துகலனாலும் இங்க பணம்தான் எல்லாம்... அதில்லாம எதுவும் பண்ண முடியாது" என்று அவள் கடுப்பாக பதிலுரைக்க,
அவளின் வார்த்தைகள் செழியனை ரொம்பவும் காயப்படுத்தியது.
"கரெக்ட்... உங்களுக்கு பணம்தான் எல்லாம்... நான்தான் தேவையில்லாம ஏதேதோ யோசிச்சுட்டு இருக்கேன்...
எந்த காலத்துலயும் என் பிலாஃசபி உங்களுக்கு ஒத்துவராது... அதுவும் இல்லாம நம்மிரண்டு பேரும் ஹஸ்பெண்ட் வொய்ஃப் எல்லாம் இல்லயே... இது வெறும் கமிட்மென்ட்தானே" என்று மனதிலிருந்த ஆதங்கத்தை வார்த்தைகளாக அவளிடம் கொட்டிவிட்டு அவன் மீண்டும் முதுகை காட்டி படுத்து கொண்டான்.
'என்னாச்சு இவருக்கு? திடீர்னு ஏன் இப்படியெல்லாம் பேசறாரு?' என்று மனதில் குழம்பி கொண்டவளுக்கு அதற்கான விடைதான் தெரியவில்லை.
இருவரும் வெவ்வேறு மனநிலையில் தங்கள் மனதை வெளிப்படுத்தி கொள்ள முடியாத இயலாமையில் இருந்தனர்.
எப்போது உறங்கினோம் என்று தெரியாமலே இருவரும் உறங்கிவிட என்றுமில்லாமல் ஜானவிக்கு அன்று முதலில் விழிப்பு வந்தது.
விழிகளை திறந்த மறுகணம் துணுக்குற்றாள். அவள் செழியன் அருகில் நெருங்கி படுத்திருந்தாள். உறக்கத்தில் உருண்டு வந்துவிட்டோமா என்று யோசிக்கும் போதே அவன் முகம் அவள் முகத்தருகே இருப்பதை பார்க்க அவள் மனம் ஏதோ செய்தது.
விழிகள் மூடியிருந்த அவனின் வதனத்தை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது.
அவன் அருகிலிருக்கும் அந்த உணர்வை அவள் மனதார விரும்பினாள்.
அதுவும் நேற்று அவன் கோபமாக பேசியதை யோசித்த போது அவள் மனம் கனத்தது.
'யாரு என்கிட்ட கோபப்பட்டாலும் நீங்க என்கிட்ட கோபப்படாதீங்க செழியன்... என்னால அதை தாங்க முடியல...
இந்த கல்யாணத்தை பண்ணிக்கும் போது நான் கமிட்மன்டாதான் நினைச்சு பண்ணிக்கிட்டேன்... ஆனா இப்போ அப்படி இல்லை... நான் உங்களை நேசிக்கிறேன்' என்று மெல்லிய குரலில் அவன் உறங்கி கொண்டிருப்பதாக எண்ணி பேசி கொண்டிருந்தாள்.
அப்போது செழியன் மூடிய கருவிழிகள் அசைவதை பார்த்து,
அவன் விழித்து கொள்ள போகிறான் என்ற அச்சத்தில் அவசரமாக விலகி படுத்து கொண்டாள்.
Comments