Nee Enbathe Naanaga - 15
15-கரிசனம்
கண்ணும் கருத்துமாக கடமை உணர்வோடு மூன்று நாட்கள் கழிந்து செல்ல, அதுவரை சுமுகமாகத்தான் அவர்கள் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.
ஆனால் செழியனக்குத்தான் அவன் தந்தை தாய் இல்லாமல் வீடு என்னவோ போலிருந்தது.
அன்புவுக்கும் மீனாவுக்கும் விடுமுறை அன்று. ஆனால் மேல் வகுப்புகளுக்கு பள்ளி இருந்ததால் அவன் மட்டும் பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பினான்.
மாலை நேரம் வீட்டிற்கு திரும்பிய செழியன் தன் கைபேசியில் உரையாடி கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்.
"என்ன நினைச்சிட்டு இருக்கீங்க மனசுல... இரண்டு நாள் மூணு நாள்னு ஒரெடியா நாளை கடத்திட்டு இருக்கீங்க... நீங்க சாமி எல்லாம் பார்த்தவரைக்கும் போதும் ஒழுங்கா வீடு வந்து சேர்ற வழியை பாருங்க... சொல்லிட்டேன்" என்று கண்டிப்பாக தன் தாயிடம் பேசி கொண்டே உள்ளே வந்தான்.
செழியனின் வருகையை பார்த்து அன்புவும் மீனாவும் உற்சாகமாய் துள்ளி குதித்து கொண்டு, "அப்பா" என்று அவன் காலை கட்டி கொண்டனர்.
வாஞ்சையாக தம் மகள்களை பார்த்து புன்னகை புரிந்தவன் இருவரின் தலையை கோதி கொண்டே, தன் பேசியில் உரையாடலை தொடர்ந்தான்.
"வீட்டுக்கு வந்துட்டேன் ம்மா... உங்க பேத்திங்க கிட்ட பேசுறீங்களா?" என்று கேட்டுவிட்டு,
"இந்தாங்க... பாட்டி தாத்தா கிட்ட பேசுங்க" என்று தன் பேசியை அவர்களிடம் கொடுக்க இருவரும் ஆர்வம் பொங்க அதனை வாங்கி,
நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு பேசினர். அதுவும் இவர்கள் பாட்டுக்கு நடந்த கதையெல்லாம் ஒன்றுவிடாமல் அளந்து கொண்டிருக்க,
செழியன் அவர்கள் பேசுவதை பார்த்து சிரித்து கொண்டே தன் அறைக்கு போக ஜானவி டைனிங் ஹாலில் அமர்ந்திருந்தாள்.
ரேஷ்மாவும் சரவணனும் அவளிடம் சரமாரியாக திட்டு வாங்கி கொண்டிருந்தனர். அதிலும் சரவணனுக்குத்தான் அதிக பட்ச திட்டு!
ஜானவி செழியன் உள்ளே வருவதை பார்த்து, "என்ன செழியன்... இன்னைக்கு ஸ்பெஷல் க்ளேஸா... ரொம்ப நேரம் ஆகிடுச்சு?" என்று கேட்க,
"க்ளேஸ் இல்ல... டீச்சர்ஸ்கெல்லாம் மீட்டிங்" என்றான் அவன் சோர்வோடு!
"உங்க பிரின்சிபால் ரம்பம் போட்டிருப்பாங்களே?" என்று கேட்க,