Nee Enbathe Naanaga - 14
14-முதல் நாள்
பாண்டியனும் சந்தானலட்சுமியும் சென்ற பிறகு அந்த வீடே அமைதி கோலம் பூண்டது. ஜானவி சோபாவில் அமர்ந்து கொண்டிருக்க, செழியன் டைனிங் ஹாலில் அமர்ந்திருந்தான். அவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமான அன்புவும் மீனாவும் இப்போது உறங்கி கொண்டிருந்தார்கள்.
இருவருக்குமே இயல்பாக முகம் பார்த்து பேசி கொள்ள என்னவென்று புரியாத சங்கடமான உணர்வு. அவர்களுக்கு இடையில் தனிமையோடு கூடிய வெறுமை உருவாகியிருந்தது.
அதுவும் இருவரும் இன்னும் அதே மணகோலத்தில்தான் இருந்தனர். தான் செழியனுக்கு மனைவியாகிவிட்டோம் என்று ஜானவியால் ஏற்க முடியாததை போல செழியனாலும் மனைவி என்ற ஸ்தானத்தில் ஜானவியை வைத்து பார்க்க முடியவில்லை.
அதுவும் இத்தனை நாள் நல்ல நண்பர்களாக மட்டுமே இருந்துவிட்டு திடீரென இந்த மாற்றத்தை ஜீரணித்து கொள்ள சற்று சிரமமாகவே இருந்தது. ஜானவி அவனிடம் திருமணத்திற்கு பின்னும் நாம் நண்பர்களாவே இருக்கலாம் என்று வார்த்தைகளால் சுலபமாக சொல்லிவிட்டாள். ஆனால் அது எதார்த்தத்தில் அடிவாங்கியது.
நண்பர்கள் கணவன் மனைவியாகலாம். ஆனால் கணவனும் மனைவியும் நண்பார்களாக மட்டுமே இருந்துவிட முடியாது. அதுவும் கணவன் மனைவி உறவு என்பது மற்ற எல்லா உறவுகளையும் விடவும் சற்றே ஆழமானது.
அந்த நொடி இருவருக்குமிடையில் சஞ்சரித்தது... மௌனம் மௌனம் மௌனம் மட்டுமே!
அன்று இருவரின் உணர்வுகளை புரிய வைத்து நண்பர்களாக மாற்றிய அதே மௌனம் இன்று இருவரையும் விலகி நிறுத்தி வைத்தது. எத்தனை நேரம் இந்த மௌனத்தை சுமந்து கொண்டிருப்பது என்று யோசித்த ஜானவி எழுந்து அவன் அருகில் வந்து, “என் டிரஸ் எல்லாம் அந்த வீட்டில இருக்கு... நான் போய் ட்ரஸ் சேஞ் பண்ணிட்டு மீனாவுக்கும் எனக்கும் இப்போதைக்கு கொஞ்சம் தேவையான டிரஸ் திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்திடுறேன்” என்றாள்.
செழியன் அவள் முகம் கூட பாராமல், “சரி” என்றான்.
ஜானவி அதன் பின் அவள் வீட்டிற்கு சென்றாள். சௌகரியமாக இருக்க வேண்டி ஒரு சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டு தேவையான துணிகள் யாவையும் ஒரு பெட்டியில் எடுத்துவைத்து அடுக்கினாள்.
அவள் பாட்டுக்கு அந்த வேலையை செய்து கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. நன்றாக இருட்டிவிட்டிருந்தது. வீட்டிற்கு வந்தால் மீனாவும் அன்புவும் உடையெல்லாம் மாற்றி கொண்டு தொலைகாட்சியில் ஐக்கியமாகி இருந்தனர்.
“என்ன? எழுந்ததுல இருந்து இரண்டு பேரும் டிவிதான் பார்த்துட்டு இருக்கீங்களா?” என்றவள் முறைப்பாக கேட்க,
மீனா உடனே, “உஹும்... எழுந்து மூஞ்சி கழுவி டிரஸ் மாத்தி படிச்சிட்டு... இப்பதான் டிவி பார்க்கிறோம்” என்றாள்.
“ம்ம்கும்... வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லடி உனக்கு... சரி எங்க உங்க அன்பப்பா?” என்று அங்கே செழியன் இல்லாததை கவனித்து கொண்டே மகளிடம் வினவினாள்.
“அன்பப்பா இல்ல... அப்பா” என்றாள் மீனா. இனி தன்னை அன்பப்பா இல்லை. அப்பா என்று அழைக்க வேண்டும் என்று செழியன் அவளிடம் சொல்லியிருந்தான். ஒருமுறை சொல்லிவிட்டால் அதை அப்படியே பிடித்து கொள்ளும் வழக்கம் மீனாவிற்கு!
அவள் அப்படி சொல்ல ஜானவி பல்லை கடித்து கொண்டு, “சரி அப்பா எங்கே?” என்று கேட்க,
“எனக்கு தெரியாது... நான் டோரா பார்க்கிறேன்... போம்மா” என்றாள் மீனா.
“உன்கிட்ட போய் கேட்டேன் பாரு” என்றவள் அன்புச்செல்வியிடம் திரும்ப ஜானவி கேட்பதற்கு முன்னதாகவே அவள், “அப்பா உள்ளே சமையல் செய்றாங்க ஜானும்மா” என்றாள்.
“சமையல் செய்றாரா?” என்றவள் வியப்பாக கேட்டுவிட்டு உள்ளே செல்ல பார்த்தவள் மீண்டும் திரும்பிவந்து, “அன்பும்மா... நாம உள்ளே போய் அப்பா என்ன சமைக்கிறாருன்னு பார்த்துட்டு வரலாமா?” என்று கேட்டாள். தனியாக அவள் மட்டும் உள்ளே போக என்னவோ சற்று தயக்கமாக இருக்க துணைக்கு அன்புவை அழைத்தாள்.
ஆனால் அன்பு முகம் சுருங்கி, “நானும் டோரா பா