Nee Enbathe Naanaga - 12
12-அதிர்ச்சி
கரங்களை கட்டி கொண்டு செழியன் முகத்தை நேர்கொண்டு பார்க்க முடியாமல் நின்றிருந்தாள் ஜானவி. அவள் முகத்தையே உற்று பார்த்து கொண்டிருந்தான் செழியன். அவளிடம் என்ன கேட்பது எதை கேட்பது என்றே அவனுக்கு புரியவில்லை. முழுக்க முழுக்க குழப்பமான மனநிலையில் நின்றிருந்தான்.
அதுவும் மீனா வந்த உடனே, “அன்பப்பா... நீங்கதான் இனிமே எனக்கு அப்பாவா?” என்று கேட்ட நொடி அவன் அதிர்ந்துவிட்டான்.
இன்னொரு புறம் அன்புச்செல்வி தன் பாட்டியிடம், “இனிமே ஜானும்மாதான் என்னோட அம்மா” என்று சந்தோஷப்பட்டு சொல்லி கொண்டிருக்க, அந்த குழந்தைகளின் இந்த திடீர் மனநிலை அவனை குழப்பத்தில் ஆழ்த்தியது.
அவர்கள் ஏன் அப்படி பேசுகிறார்கள் என்று யோசித்தவன் மீனாவிடம் சென்ற இடத்தில் என்ன நிகழ்ந்தது என்று விசாரிக்க அவள், “அம்மாவை அம்மம்மா அடிச்சிட்டாங்க... பெரிம்மா திட்டிட்டாங்க” என்று அவள் மூளைக்கு எட்டிய வரை சொல்லி முடித்தாள்.
அதன் பின்னே செழியன் ஜானவியிடம் அது குறித்து கேட்டு தெரிந்து கொள்ள வந்தான். ஆனால் அவள் அவனை வீட்டிற்குள் அழைத்ததோடு சரி. அதன் பின் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
உணர்ச்சிகள் யாவும் வடிந்த நிலையில் வெறுமையான முகத்தோடு நின்றிருந்தாள். அழுகை, கோபம், சோகம், வெறுப்பு என்று எந்த உணர்ச்சிகளுமே அவள் விழிகளில் தென்படவில்லை.
அவர்களுக்கு இடையில் சஞ்சரித்த அந்த கனத்த மௌனத்தை செழியன் உடைத்தான்.
“ஜானவி ப்ளீஸ்... என்ன நடந்ததுன்னு கொஞ்சம் சொல்லுங்க... உங்களை இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றவன் சொன்னதுதான் தாமதம்.
ஜானவியின் பார்வை அவனை நேர்கொண்டு பார்த்தது. அவள் என்ன சொல்ல போகிறாள் என்று அவன் அவளை ஆவலாக பார்க்க, அவளோ பேச வார்த்தைகள் வராமல் திண்டாடி கொண்டிருந்தாள்.
தான் ஏன் அப்படி ஒரு முடிவை எடுத்தோம் என்றெல்லாம் அவள் சுயஅலசலில் ஈடுபடவில்லை. மாறாக செழியினிடம் இந்த விஷயத்தை எப்படி சொல்வது என்ற யோசனை மட்டுமே!
“செழியன்” என்றவள் ஆரம்பிக்க, “சொல்லுங்க ஜானவி!” என்று அவன் பரபரப்பாக கேட்டான்.
“நம்ம இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டா என்ன?” ஜானவி கொஞ்சமும் தயங்காமல் பளிச்சென்று கேட்டுவிட,
அவன் இப்படி ஒரு கேள்வியை அவளிடம் சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை.
“என்ன பேசுறீங்க ஜானவி? என்னாச்சு உங்களுக்கு?” என்று அவன் மாறாத அதிர்ச்சியோடு வினவ,
“நான் கேட்ட கேள்விக்கு முதல பதில் சொல்லுங்க செழியன்... ஏன் நம்ம கல்யாணம் பண்ணிக்க கூடாது... அன்புவுக்கு நான் அம்மாவா மீனாவுக்கு நீங்க அப்பாவா இருந்தா என்ன? நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு கணவன் மனைவியா இருக்க வேண்டாம்... ஒரு நல்ல அம்மா அப்பாவா இருக்கலாம்
முடியும் முடியாது... உங்க டெஸிஷனை சொல்லுங்க... அவ்வளவுதான்?” என்று ரொம்பவும் உணர்வுப்பூர்வமான ஒரு கேள்வியை அசாதாரணமனாக கேட்டுவிட்டு அவனிடம் பதிலை எதிர்ப்பர்த்த்தாள். அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அதிர்ச்சி மட்டுமே மேலோங்கியிருந்தது.
ஆனாலும் அவன் மனம் அவள் மனநிலையை கணித்தவாறு சற்று நிதானமாக யோசித்து, “நீங்க இப்படி எல்லாம் பேசற ஆள் இல்லயே ஜானவி... வேறேதோ நடந்திருக்கு... முதல அந்த விஷயத்தை சொல்லுங்க” என்று அவன் அழுத்தமாக கேட்க,
“அதெல்லாம் நான் அப்புறமா சொல்றேன்... நீங்க உங்க முடிவை சொல்லுங்க?” என்று ஜானவி மீண்டும் அதே இடத்தில் நின்றாள்.
அவளை ஆழ்ந்து பார்த்தவன், “சாரி ஜானவி... சத்தியமா நீங்க சொன்னதுக்கு என்னால ஒத்துக்க முடியாது... காதலும் கல்யாணமும் ஷேர் மார்கெட்ல பண்ற இன்வஸ்மென்ட் இல்ல... ஒரு கம்பனில போட்டு லாஸ் ஆகிட்டா... அப்புறம் வேற ஒரு கம்பெனில இன்வஸ்ட் பண்ணி லாபம் பார்க்கிறதுக்கு... இது லைஃப்” என்று அவன் தெளிவாகவும் தீர்க்கமாகவும் பதிலளிக்க,
அவள் கசந்த முறுவலோடு அவனை பார்த்து, “யாருமே இந்த உலகத்தில செகன்ட் மேரேஜே பண்ணிக்காத மாறியும் செகன்ட் டைம் லவ்வே பண்ணாத மாறியும் பேசாதீங்க... நீங்க பேசற பிலாஃசபிக்கும் பேஃக்டுக்கும் ரொம்ப தூரம்” என்றாள்.
“அது ஒவ்வொருத்தரோட மனநிலையை பொறுத்து... நான் இப்படித்தான்...”
“உங்க மனநிலையை நான் தப்பு சொல்லல செழியன்... ஆனா இப்ப நான் இருக்க சூழ்நிலையில எனக்கு கல்யாணம்ங்கிற ஒரு இமேஜ் தேவைப்படுது... திரும்பியும் யார் என்னன்னு தெரியாத ஆளோட என்னால ரிஸ்க் எடுக்க முடியாது... ஏன்னா இதுல என் பொண்ணோட லைஃப்பும் இருக்கு...”
செழியன் அவளை யோசனையாக பார்த்து, “ஒருத்தர் மேல ஒருத்தர் விருப்பம் இல்லாம எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்?” என்று கேட்க,