Nee Enbathe Naanaaga - 6
6 - மோதல்
ஜானவி தன் கரத்தை பற்றியிருந்த அன்புச்செழியனை திரும்பி பார்த்து முறைத்து, “ஹலோ கையை விடுங்க” என்றதும் அவள் கரத்தை விடுவித்தவன் ,
“சாரிங்க... மீனுவை அடிச்சிற போறீங்களோன்னுதான் கையை பிடிச்சேன்” என்று அவன் தயங்கியபடி சொல்ல,
“என் பொண்ணை நான் அடிப்பேன்... உங்களுக்கு என்ன?” என்று கேட்டு அவனை கடுகடுப்பாக பார்த்தாள். அவனோ மேலே எதுவும் பேசாமல் மௌனமாக நின்றான்.
அவள் அதன் பின் தன் மகள் புறம் திரும்பி, “எதுக்குடி இங்கே வந்த? உன்னை எங்கெல்லாம்டி நான் தேடறது” என்று மீனாவின் கரத்தை பற்றி வெளியே இழுத்து கொண்டு போனாள்.
“இல்லம்மா... என் பிரெண்ட் அன்பு” என்று மீனா ஏதோ பேச வாய் திறக்க, “பேசாதே... பின்னிடுவேன் உன்னை” என்று தன் வீட்டிற்குள் அழைத்து கொண்டு அவள் செல்லும் போது, “ஜானவி ஒரு நிமிஷம்” என்று செழியனின் அழைப்பு அவளை திகைத்து போக செய்தது.
அவனை குழப்பமாய் திரும்பி, “என் பேர் எப்படி உங்களுக்கு தெரியும்?” என்று கேட்க,
“அது... மீனாதான் சொன்னா” என்றான்.
மகளை முறைத்து பார்த்தவள், “அவ சொன்னா நீங்க உடனே என்னை பெயரிட்டு கூப்பிட்டிட்டுவீங்களா? உங்களுக்கு கொஞ்சம் கூட மேனர்சே தெரியாதா?” என்று அவள் கத்த, “ம்மா... என் பிரெண்ட் அன்புச்செல்வியோட அப்பா ம்மா” என்று மீனா இடையில் புகுந்து பதிலளித்தாள்.
“பிரெண்டா?” என்று ஜானவி குழப்பமாக மகளை பார்க்க,
அப்போது செழியன், “ஆமா... என் பொண்ணும் உங்க பொண்ணும் பிரெண்ட்ஸ்தான்... ஸ்கூலில் ஒரே கிளாஸ்... அன் ஒரே ஸ்டேண்டர்ட்” என்று பதிலளித்தான்.
அவனை அவள் யோசனையாய் பார்க்க, “என் பொண்ணு அன்புதான் மீனாவை பார்த்துட்டு வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கா” என்றவன் மேலும் சொல்ல,
ஜானவி இப்போது மீனாவை முறைத்து பார்த்து, “கூப்பிட்டா மேடம் உடனே போயிடுவீங்களா... என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போகணும்னு தோணல... கொஞ்ச நேரத்தில பைத்தியகாரி மாறி இந்த அப்பார்ட்மென்ட் முழுக்க என்னை அலைய விட்டுட்ட... உன்னை” என்று மகளிடம் கொந்தளித்தாள்.
“ப்ளீஸ் ங்க மீனுவை திட்டாதீங்க... பாவம் அவளுக்கு என்ன தெரியும்... ஏதோ பிரெண்டை பார்த்த சந்தோஷத்தில உங்ககிட்ட சொல்லாம வந்துட்டா” என்று அவன் நிதானமாக எடுத்துரைத்தான்.
“போதும்... என் பொண்ணை நான் திட்டணுமா வேண்டாமான்னு எல்லாம் நீங்க சொல்ல வேண்டாம்... அவளை காணாம தேடின வலியும் கஷ்டமும் எனக்குதான் தெரியும்” என்று அவள் வெறுப்போடு சொல்லிவிட்டு,
“ஹ்ம்ம்... அட்வைஸ் எல்லாம் ஈசியா பண்ணிடுவாங்க... அவங்கவங்களுக்கு வந்தாதான் தெரியும்” என்று முனகி கொண்டே வீட்டிற்குள் தன் மகளை இழுத்து சென்றுவிட்டாள்.
இதற்கு மேல் அவளிடம் பேசுவது வீண் என்று அவனும் மௌனமாகிட உள்ளே சென்றவுடன் கத்த தொடங்கிய ஜானவி, “இனிமே அந்த வீட்டு பக்கம் போனே உன் காலை உடைச்சிடுவேன்” என்று மகளிடம் காட்டமாக உரைக்க அது அவன் காதிலும் விழுந்தது.
சந்தானலட்சுமி நடந்த நிகழ்வை பார்த்துவிட்டு, “என்னடா அந்த பொண்ணு வாசலில் நின்னு இப்படி கத்திட்டு போகுது... சரியான வாயாடியா இருப்பா போல” என்று மகனிடம் சொல்ல,
“விடுங்க ம்மா... ஏதோ பொண்ணை காணோமேங்கிற டென்ஷன்ல கத்திட்டு போறாங்க” என்று தன் அம்மாவை சமாதானப்படுத்தி கொண்டே உள்ளே வந்தான்.
“அதுக்கு ஏன்டா உன்னை கத்தணும்... இருந்தாலும் ஒரு பொண்ணுக்கு இவ்வளவு கோபம் இருக்க கூடாதுடா” என்றவர் சொல்ல,
“அப்போ ஆம்பளைங்களுக்கு இருக்கலாமா?” என்று தன் தாயிடம் எகத்தாளமாக எதிர்கேள்வி கேட்டான்.