Nee Enbathe Naanaaga - 4
4 - மரணவலி
அன்புச்செழியன் தன் அறையின் பால்கனி வழியாக நின்று மகளுக்கு இரவு உணவை ஊட்டிக் கொண்டிருந்தான். அப்போது அறைக்குள் நுழைந்த அவன் தாய் சந்தானலட்சுமி, “என்ன அன்பு நீ? அவ என்ன குழந்தையா... அவளே சாப்பிடுவா டா” என்று சொல்ல,
“இருக்கட்டுமே ம்மா... ஸ்கூலில்தான் அவளே சாப்பிடுறா இல்ல... இந்த ஒரு வேளை நான் ஊட்டுறனே!” என்று வாஞ்சையோடு சொன்ன மகனைத் தவிப்போடுப் பார்த்தார். மகன் மனதிற்குள் தேக்கி வைத்திருந்த துக்கத்தை எல்லாம் மொத்தமாய் தன் மகளிடம் அன்பாக காட்டிக் கொண்டிருந்தான் என்பதை அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
அதற்கு மேல் மகனை எதுவும் கேட்காமல் வெளியேறியவர் தன் கணவன் தோள் மீது சாய்ந்து கொண்டு, “அன்புவை என்னால இப்படி பார்க்கவே முடியலங்க? எப்படி துறுதுறுன்னு இருப்பான்...ஓரிடத்தில இருக்கவே மாட்டேனே... ஆனா இப்போ” என்று அவர் வார்த்தை வராமல் திக்கி அழவும்,
“அழாதே லட்சு... கொஞ்ச நாள் போனா எல்லாம் மெல்ல மெல்ல சரியாயிடும்” என்று மனைவியை சாமாதனம் செய்ய பாண்டியன் அவ்விதம் சொன்னாலும் அவருக்கே அந்த நம்பிக்கை இல்லை.
அந்த வீடு இந்த ஆறு மாதமாய் சோகமயமாகத்தான் இருந்தது. யாராலும் பழையபடி இயல்பாக இருக்க முடியவில்லை. எப்படி இருக்க முடியும்? ரஞ்சனியின் மரணம் ஒரு பக்கம், தாயில்லாமல் தவிக்கும் அன்புச்செல்வி மறுப்பக்கம், இவை எல்லாவற்றுக்கும் மேலாக மனைவியை இழந்த செழியனின் மனவலியோடு சேர்ந்து அவன் உடலில் ஏற்பட்ட குறை என்று அந்தக் கோர விபத்து அவர்கள் குடும்பத்தின் மொத்த சந்தோஷத்தையும் குழிதோண்டிப் புதைத்திருந்தது.
மகளிடம் முடிந்தளவு இயல்பாக இருக்க அன்புச்செழியன் முயன்றாலும் ஒரு நிலைக்கு மேல் அவனாலும் அந்த பொய்யான முகமூடியை போட்டிருக்க முடியவில்லை.
அன்புச்செல்வி தன் தந்தை கையால் சாப்பிட்டுக் கொண்டே, “ப்பா! அம்மா இனிமே வரவே மாட்டாங்களா?” என்று ஏக்கம் நிரம்பிய குரலோடு கேட்க, அவன் விழிகளில் நீர் நிரம்பி நின்றது.
எத்தனை முறை அவள் இந்த கேள்வியை கேட்பாளோ? அவனும் சலிக்காமல் ஏதாவது ஒரு பதிலை சொல்லி அவளை ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தான். ஆனால் இன்று அவனால் பதில் பேச முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது.
அன்புச்செல்வி விவரம் தெரிந்த குழந்தையாக இருந்தால் அவளிடம் தன் அம்மாவின் மரணம் குறித்து புரிய வைத்திருக்கலாம். விவரம் தெரியாத சிறு குழந்தையாக இருந்தாலாவது சுலபமாக மறக்கடித்துவிடலாம்.
ஆனால் அவளோ அந்த இரண்டு ரகமும் இல்லை. தன் அம்மாவின் மரணத்தைப் புரிந்து கொள்ள முடியாத வயது அவளுக்கு. அன்புசெல்வியின் கேள்வி அவன் மனதைப் பிசைய சில நொடிகள் மௌனம் காத்தவன் தன் விழிகளில் வழிந்த நீரை அவளிடம் காட்டிக் கொள்ளாமல் துடைத்துக் கொண்டே,
“உனக்கு ஒன்னு தெரியுமா குட்டிமா... நான் காலைல உன் பிரெண்ட் மீனாவைப் பார்த்தேனே!” என்று பேச்சை மாற்றினான்.
“எப்போ எங்க?” என்று அவள் ஆச்சரியமாக,
“பிரின்சிபால் ரூம்லதான்... அவங்க அம்மாவும் கூட இருந்தாங்க... அவ லேட்டா வந்ததால உங்க பிரின்சிபால் அவளைக் கூப்பிட்டு வார்ன் பண்ணிட்டு இருந்தாங்க”
“ஆமா! ஆமா அவ சொன்னா.... அவங்க அம்மாவைக் கூடத் திட்டினாங்களாமே” என்றவள் மேலும்,
“இன்னைக்கு இல்ல... எப்பவுமே மீனா லேட்டு” என்றாள்.
“ஏன் அப்படி?”
“அவங்க அம்மா அவளை லேட்டா லேட்டா கூட்டிட்டு வந்து விடுறாங்க” என்று மீனாவின் பதிலை அப்படியே ஒப்பித்தாள் அன்புச்செல்வி.
மகள் சொல்வதைக் கேட்டு செழியன் சிரித்தான். அம்மாவைப் பற்றிக் கேட்ட அன்புச்செல்வி மீனா என்றதும் மொத்தமாக தான் கேட்ட விஷயத்தை மறந்து அவளைப் பற்றியே பேச ஆரம்பித்துவிட்டாள்.