Nee Enbathe Naanaaga - 11
11-அவமானம்
மீனாவின் பள்ளி ஆண்டுவிழா ரொம்பவும் பிரசித்தியாக நடந்து முடிந்தது. முதலாம் வகுப்புகளில் அன்புச்செல்வி கல்வியில் முதலிடம் பெற்று ஒரு கோப்பையை வாங்கி செழியனை சந்தோஷத்தில் ஆழ்த்திவிட்டாள். அவள் தன் தாயை இழந்த துயரத்திலிருந்து மீண்டு இந்த வெற்றியை பெற்றிருப்பது அத்தனை சாதாரணமான விஷயம் அல்லவே.
ஒரு சிறந்த தந்தைக்கான அங்கீகாரத்தை பெற்றுவிட்ட பெருமைமிகு தருணமாகவே அந்த வெற்றியை கொண்டாடினான் செழியன்.
அதே ஆண்டுவிழாவில் மீனா ஆடிய நடனமும் எல்லோரின் மனதையும் கொள்ளை கொண்டது. அவள் வயதிற்கு சற்றும் பொருத்தமில்லாமல் அத்தனை அசத்தலாக ஆடியிருந்தாள். அங்கே வந்த எல்லோரின் மனதிலும் மீனா ஒரு தனித்துவமான இடத்தை பிடித்திருந்தாள். எல்லோரும் மீனாகுட்டியின் திறமையை கண்டு வியந்து ஜானவியை பாராட்டி தள்ளினர்.
ஆனால் அவள் ஆடிய நடனத்திற்கும் இவளுக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை. எல்லாமே அவள் ஆசிரியர் கொடுத்த பயிற்சிதான். சொல்ல போனால் தன் மகளிடம் இப்படி ஒரு திறமை இருப்பதை ஜானவியே இப்போதுதான் கண்டுகொண்டாள் என்று சொல்ல வேண்டும்.
இப்படியாக அந்த ஆண்டுவிழா குதூகலமாக முடிந்து அந்த சின்ன வாண்டுகளுக்கு விடுமுறையும் வந்தது. இந்த நிலையில் ஜானவி சொல்லியும் கூட மீனாவிற்கு தன் அம்மம்மாவின் வீட்டிற்கு போக விருப்பமில்லை.
அன்புச்செல்வியோடு அந்த விடுமுறையை கழிக்கவே அவள் விருப்பப்ட்டாள். இருப்பினும் ஜானவி கட்டாயத்தின் பேரில் மீனாவை ஒரு பத்து நாள் கிரிஜா வீட்டில் தங்கவிட்டு வந்தாள். ஆனால் ஜானவி அப்போதும் கூட அந்த வீட்டின் வாயிலை மிதிக்கவில்லை.
இதற்கிடையில் மும்முரமாக ஜானவியின் தங்கை ஜமுனாவின் திருமணத்திற்காக பெண் பார்க்கும் படலங்கள் வேறு நிகழ்ந்து கொண்டிருந்தன. ஜானவி அதில் பெரிதாக தலையிட்டு கொள்ளவுமில்லை.
மீனாவும் அன்புச்செல்வியும் இரண்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்தனர். ஜானவி அந்த குடியிருப்பிற்கு வந்து ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஜானவிக்கு அவள் வேலையை கவனிக்கவும் மகளை கவனிக்கவுமே நேரம் சரியாக இருந்தது. அவளுக்கு கீழாக இரண்டு பேர் அவள் தொடங்கிய பங்குச்சந்தை நிறுவனத்தில் உதவிக்காக அமர்த்தப்பட்டனர். பெரிதாக இல்லாமல் அவள் வீட்டிலேயே அவர்களும் பணிபுரிந்தனர்.
எதிர்ப்பார்த்ததை விடவும் சொந்த முதலீடுகளில் பன்மடங்கு லாபம் பார்த்தாள் ஜானவி. அவளின் இந்த அபிரமிதமான வளர்ச்சியை பார்த்து அவள் குடும்பமும் கூட வியப்பில் ஆழ்ந்தது. அவள் குடும்பத்திற்கு வேண்டிய செலவுகளுக்கு என்றாவது பணம் கொடுப்பாள். அதுவும் அவர்களாக கேட்டால் மட்டுமே.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஜானவி செழியனின் நட்பு... வெறும் ஆண் பெண்ணின் சாரசரியான உணர்வுகளுக்கு அடிபணியாமல் இயல்பாகவும் அழகாகவும் தழைத்து ஓங்கி வளர்ந்திருந்தது. ஆனால் அவர்களின் அந்த அழகான நட்பு அவர்கள் வசிக்கும் குடியிருப்பில் உள்ளோர் பலரின் பார்வையிலும் உறுத்தி கொண்டிருந்தது. புரளி பேசுபவர்களுக்கு எல்லை கோடுகளே கிடையாது. அவர்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்க ஆரம்பித்தால் நாம் யாரும் வாழவே முடியாது.
ஆதலால் ஜானவியும் செழியனும் அரத்தமற்ற அவர்களின் அவதூறான பேச்சுக்களுக்கு மதிப்பு கொடுக்க விரும்பவில்லை. இந்த அல்ப காரணங்களுக்காக அவர்கள் தங்கள் நட்பை விட்டு கொடுக்கவும் விழையவில்லை.