top of page

Nee Enabthe Naanaga - 19

Writer: Krishnapriya NarayanKrishnapriya Narayan

19 - ஏக்கம்


அன்று விடிந்து சூரியன் அவர்கள் அறையின் ஜன்னல் வழியே எட்டி பார்க்க, அந்த வெளிச்சம் முகத்தில் பட்ட நொடி ஜானவி விழித்து கொண்டாள். படுக்கையில் அவள் எழுந்தமர்ந்து கொள்ள இரவு நடந்த விஷயங்கள் யாவும் அவள் நினைவுகளில் ஒன்றன்பின் ஒன்றாக தோன்றியது. அந்த நொடி அவளை வெட்கம் சூழ்ந்து கொள்ள, இப்போது நினைத்தாலும் செழியன் கொடுத்த முத்தம் அவளை போதைநிலைக்கு இழுத்து சென்றது.


மயங்கிய நிலையில் உறக்கத்திலிருந்த தன்னவனை பார்வையாலேயே வருடி கொண்டிருந்தவள், அவன் என்றுமில்லாத திருநாளாக அப்படி அசந்து தூங்குவதை கண்டு அதிசியத்தாள்.


அதுவும் விடுமுறை நாட்களிலும் கூட நேரத்தோடு எழுந்து கொள்ளும் அவன் இன்னும் விழித்து கொள்ளாதது ஆச்சரியமாகத்தான் இருந்தது அவளுக்கு!


‘நம்ம தூங்கின பிறகும் இவர் முழிச்சிட்டு இருந்திருப்பாரோ... இருக்கும்... ப்ச் பாவம் செழியன் நீங்க... உங்களுக்காகவாச்சும் எதாச்சும் நடந்திருக்கலல்ல்லாம்’ என்றவள் அந்த லாமை இழுக்க, அது அவள் மனதிலும் இருந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான்.


செழியன் அப்போது புரண்டு படுக்க, ‘முழிச்சிட்டாரோ... ஐயோ! நம்ம இவர் தூக்கத்தில பேசனா கூட கேட்டிடும்... உஹும் எதுவும் பேச கூடாது’ என்று சொல்லி கொண்டே அவசரமாக குளியலறைக்குள் புகுந்து முகத்தை அலம்பி கொண்டு அவள் வெளியே வர, அவன் படுக்கையில் இல்லை. எழுந்துவிட்டிருந்தான். ஆனால் அதை அவள் கவனிக்கவில்லை.


வெளியே வந்ததும் அவள் பார்வை நேராக கடிகாரத்தின் மீதுதான் விழுநத்து. ‘ஐயோ டைமாச்சு... டைமாச்சு’ என்றுஅந்த நொடியே அவள் பதட்டமாகி தலையில் அடித்து கொண்டு சமையலறைக்குள் நுழைய போக உள்ளே செழியன் நின்றிருந்தான்.


மேலே செல்லாமல் அவனை பார்த்து அப்படியே அவள் உறைந்து நிற்க செழியன் அவளை பார்த்து கல்மிஷ்மாக புன்னகைத்து, “என்ன... வேகமா வந்துட்டு ஸ்பீட் ப்ரேக்ல ஏறி இறங்கின கார் மாறி அப்படியே ஜெர்காகி நிற்கிறீங்க” என்று கேட்க,


“அது... நீங்க தூங்கிட்டுதானே இருந்தீங்க” என்றாள்.


“நீங்க எழுந்த சத்தம் கேட்டு எனக்கும் முழிப்பு வந்துடுச்சு... என்னைக்கும் இல்லாம இன்னைக்கு எழுந்திருக்க லேட்டாயிடுச்சு வேற” என்றவன் சொல்லவும்,


“ஆமா ஆமா லேட்டாதான் ஆயிடுச்சு” என்று அவள் அவன் வார்த்தைகளை அப்படியே ஆமோதித்தாள்.


“அதுக்கு நீங்கதான் காரணம்” என்றவன் கோபமாக சொல்ல, “நான் என்ன பண்ணேன்?” என்று பரிதபாமாக கேட்டாள்.


“என்ன பண்ணேனா? குட் நைட் சொல்லிட்டு மேடம் நிம்மதியா தூங்கிட்டீங்க” என்றவன் சொல்ல, அவள் இதழோரம் வந்த புன்னகையை அவள் சிரம்மப்பட்டு அடக்கி கொண்டாலும் செழியன் அதை பார்த்துவிட்டானே!


அவன் மெல்ல அவளை நெருங்கவும் அவள் பின்னே காலெடுத்து வைத்து,


“அத்தை வந்திற போறாங்க... நீங்க போங்க... வேலை இருக்கு... லேட் வேற ஆயிடுச்சு” என்று படபடப்பாக கூறினாள்.


அவன் சத்தமாக சிரித்து, “இப்போ என்ன பண்ணிட்டாங்க உங்களைன்னு இப்படி டென்ஷ்ன ஆகுறீங்க” என்றவன் திரும்பி ஒரு கோப்பையை எடுத்து அவள் கைகளில் வைத்து,


“உங்களுக்கு காபி போட்டேன்... அதை கொடுக்கலாம்னுதான்” என்று அவன் சொல்ல அவள் அசடு வழியும் புன்னகையோடு அவனை பார்த்தாள்.


செழியன் அவளிடம், “நீங்க நைட் வேற சாப்பிடவே இல்ல... காலையில எழுந்ததும் கிச்சனுக்குள் வந்த வேலை செய்ற டென்ஷன்ல ஒரு காபி கூட போட்டு குடிக்க மாட்டீங்க... அதான் நான் எழுந்து வந்து போட்டேன்... குடிச்சிட்டு பொறுமையா வேலையை ஸ்டார்ட் பண்ணுங்க... அப்புறம் அவசரம் அவசரமா லஞ்ச எல்லாம் ரெடி பண்ண வேண்டாம்... நான் மதியம் வந்து பசங்களுக்கும் எனக்கும் லஞ்ச் எடுத்துட்டு போறேன்” என்று சொல்ல,


“இதுவும் நல்ல ஐடியாதான்... ஆனா நீங்க எதுக்கு வெயில்ல வந்துக்கிட்டு... நானே ஸ்கூலில் வந்து கொடுத்திடுறேனே” என்றதும் அவளை பார்த்து முறைத்தவன், “நான் வரேன்னு சொன்னா வரேன்” என்று அதிகாரமாக சொன்னாலும் அந்த பார்வையில் விஷமம் இருந்தது.


அவனை குழப்பமாய் அவள் பார்க்க, “சரி நான் போய் பசங்கள ரெடி பண்றேன்” என்று சொல்லிவிட்டு அவன் செல்ல,


“உங்களுக்கு காபி போட்டுக்கலையா” என்று கேட்டாள்.


“நான் பிரஷ் எல்லாம் பண்ணிட்டு வந்து குடிக்கிறேன்”


“சரி நான் போட்டு வைக்கிறேன்” என்று அவள் சொல்ல, “அதெல்லாம் வேண்டாம்... நானே வந்து போட்டுக்கிறேன்” என்று சொல்லி கொண்டே அவன் சென்றுவிட,


அவள் அவன் போட்டு தந்த காபியை அருந்தி கொண்டே, ‘அதென்ன நானே வந்து போட்டுகிறேன்னு போறாரு... நான் போட்டு தர காபி அவ்வளவு கேவலமாவா இருக்கு... ஒருவேளை அப்படிதான் இருக்குமோ’ என்று அவள் தோள்களை குலுக்கி தீவிரமாக யோசித்து கொண்டிருந்த போது சந்தானலட்சுமி உள்ளே வந்து,


“டைமாச்சு டைமாச்சு... வெளிய போயிட்டு வந்ததுல அடிச்சி போட்ட மாறி தூங்கிட்டேன் ம்மா... இப்பதான் எழுந்து டைமை பார்த்தேன்” என்று அவர் பரபரக்க,


“டென்ஷன் ஆகாதீங்க அத்தை... டிபன் மட்டும் ரெடி பண்ணா போதும்... லஞ்ச் அவர் அப்புறமா வந்து எடுத்துட்டு போறேன்னு சொன்னாரு” என்று அவள் சொல்லவும் ஆசுவாசமாக மூச்சை விட்டவர்,


“அப்படியா நல்லதா போச்சு... ஆனா இதுக்குன்னு அவன் ஏன் மாங்கு மாங்குன்னு வரான்... நீ போய் குடுத்துட்டு வந்திர வேண்டியதுதானே” என்று அவர் சொல்ல அவளுக்கு சிரிப்பு வந்தது.


‘அதை சொன்னதுக்குத்தான் உங்க புள்ளை என்னை முறைச்சிட்டு போறாரே’ என்றவள் வாயிற்குள் முனக,


“என்னம்மா சொன்ன?” என்று சந்தானலட்சுமி அவள் முகத்தை பார்த்தார்.


“இல்ல அத்தை... உங்க புள்ளைக்கு எதாச்சும் வேலை இருக்குமாம்... அதான் வாராரு” என்று அவள் பூசி மொழுக அவர் தோளை குலுக்கி கொண்டு, “இருக்கும் இருக்கும்” என்றவர்,


“ஆமா அந்த வாண்டுங்க இரண்டும் நைட்டுஉங்க ரூம்ல வந்து படுத்துக்கிச்சா” என்று கேட்டார்.


“ஆமா அத்தை... உங்களை தூங்க வைச்சிட்டு அந்த வாலுங்க இரண்டும் இங்க வந்திருச்சு” என்று சொல்லி கொண்டே மாமியாருக்கு காபியை கலக்கியவள்,


“நீங்க காபி குடிங்க... வெறும் டிபன்தானே... நான் ரெடி பண்ணிக்கிறேன்” என்றாள் .


சந்தானலட்சுமி காபியை பருகி கொண்டு வெளியே வந்துவிட செழியன் அவரை பார்த்து, “ம்மா... காபி குடிச்சிட்டு பசங்கள எழுப்பி குளிப்பாட்டி விடுறீங்களா?” என்று கேட்க,


“நீ என்னடா பண்ண போற?” என்றார்.


“நான் காபி குடிக்க போறேன்... தலைவலிக்குது” என்றவன் சொன்னதும்,


“ஜானும்மா அன்புவுக்கு ஒரு காபி போட்டு கொடு... தலைவலிக்குதாம்” என்று ஊருக்கே கேட்பது போல் அவர் கத்த, “ஆ சரி அத்தை” என்று உள்ளிருந்தபடியே ஜானவியும் பதிலளித்தாள்.


அவன் எரிச்சலாகி, “இப்ப எதுக்கும்மா கத்திற... எனக்கு வேணும்னா நானே போய் கேட்டுக்க மாட்டேனாக்கும்” என்று சொல்லி கொண்டே அவன் சமையலறைக்குள் நுழைய ஜானவி அவனை பார்த்தும்,


“தலைவலிக்குதுன்னு சொல்லவே இல்லையே... இருங்க நானே காபி போட்டு தரேன்... நீங்க டிகாஷன் சக்கரை மட்டும் எவ்வளவுன்னு சொல்லுங்க... நான் கரெக்ட்டா போட்டுடிறேன்” என்று அக்கறையோடு சொன்னவளை ஆழ்ந்து பார்த்து இதழ்களை விரித்தவன்,


“எனக்கு வேண்டியதை கரெக்ட்டான அளவில நானே எடுத்துப்பேன்” என்று சொல்ல அவள் அவனை புரியாமல் பார்த்தாள்.


அவன் பார்வை வேறெதோ தொனியில் இருக்க அது என்னவென்று அவள் கணிப்பதற்கு முன்னதாக அவன் நினைத்ததை சாதித்திருந்தான்.


ஒற்றை கரத்தால் அவள் மெல்லிய இடையை தூக்கி அவள் இதழ்களில் முத்த மொழி பேசி கொண்டிருந்தான். அவன் கரம் அவளை விடும் வரை அவள் எந்தவித எதிர்வினையும் ஆற்றவில்லை.


அவனின் முத்தத்தில் அவள் மொத்தமாக மயங்கி கிறங்கி போன நொடி அவளை தன் கரத்திலிருந்து விடுவித்த போதே அவள் அதிர்ச்சியாக அவன் விழிகளை பார்த்தாள்.


காதல் லீலைகள் புரியும் கண்ணனின் கள்ளத்தனத்தோடு நெருங்கியவன் தம் உதடுகள் கொண்டு அவள் காதோரம் உரசி,


“என் காபி டேஸ்ட் எப்படின்னு புரிஞ்சுதா ஜான.. வி” என்று ஒருவிதமாக சொல்லி அவன் விலகவும் செங்கொழுந்தாக அவள் முகம் சிவப்பேறி இருந்தது. அதனை படுரசனையாக அவன் ரசித்து பார்த்து கொண்டிருக்க அவள் ரொம்பவும் கஷ்டப்பட்டு தன் வெட்கநிலையை மாற்றி கொண்டு,


“இதெல்லாம் ரொம்ப டூ மச்” என்று சொல்லி முறைத்தாள்.


“என்ன டூ மச்... ஒருவேளை காபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்துச்சோ... பிடிக்கலையா... வேணா ஸ்வீட்டா ஒன்னு ட்ரை பண்ணவா?” என்று கேட்டு அவன் நெருங்கவும் அவன் மார்பின் குறுக்கே கையை நிறுத்தி கொண்டு,


“என்ன நீங்க இப்படியெல்லாம்... போங்க ப்ளீஸ்” என்று கெஞ்சி கொண்டே அவனை தடுக்க அப்போது சந்தானலட்சுமி உள்ளே நுழைந்துவிட்டு,


“இன்னுமாடா காபி குடிக்கிற” என்று கேட்க இருவரும் சிரமப்பட்டு தங்கள் சிரிப்பை அடக்கி கொண்டனர்.


“குடிச்சிட்டேன் ம்மா” என்று செழியன் பதிலளிக்க,


ஜானவி சமையல்மேடை புறம் திரும்பி நின்று கொண்டு வெட்கப்பட்டு மௌனமாக சிரித்து கொண்டாள்.


சந்தானலட்சுமி மகனை பார்த்து, “காபி குடிக்கிறவன் வெளியே வந்து குடிக்க வேண்டியதுதானே டா” என்று கேட்க,


“காபி டேஸ்ட்டா இருந்துச்சா... அதான் இங்கேயே நின்னு அப்படியே” என்று அவன் சொல்ல ஜானவி தலையிலடித்து கொண்டாள்.


அடுத்த கேள்வியை சந்தானலட்சுமி கேட்பதற்கு முன்னதாக ஜானவி திரும்பி, “பசங்க எழுந்துட்டாங்களா அத்தை?” என்று பேச்சை மாற்ற,


“எங்கம்மா... இரண்டு பெரும் கும்பகர்ணீங்க மாறி தூங்குறாங்க... அதான் அன்புவை எழுப்ப சொல்லலாம்னு... அவளுங்க இரண்டு பேரும் அவங்க அப்பா குரலுக்குத்தான் எழுந்திருப்பாங்க” என்றார்.


ஜானவி அந்த வாய்ப்பை பிடித்து கொண்டு, “போங்க செழியன்... நீங்களே போய் பசங்கள எழுப்பி ரெடி பண்ணுங்க” என்று அவனை அங்கிருந்து துரத்தி விடும் எண்ணத்தில் அவள் சொல்ல அதனை புரிந்து கொண்டவன்,


“சரி சரி” என்று இயல்பாக சொன்ன அதேநேரம் அவன் அம்மா பார்க்காமல் அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு வெளியேற, வெட்கத்தில் தலையை தாழ்த்தி கொண்டாள்.


அவன் சென்ற பிறகும் கூட அவன் தந்த முத்தத்தின் சாரமும் போதையும் அவளுக்கு இறங்கியாபாடில்லை. ஏதோ குருட்டாம்போக்கில் சமைக்கிறேன் என்று அவளின் கைகள் வேலை பார்த்து கொண்டிருந்தாலும் மனம் அவனிடத்தில் மொத்தமாக சரண்புகுந்தது.


அத்தகைய மனநிலையிலும் எப்படியோ கணவனையும் மகள்களையும் பள்ளிக்கு அனுப்பிவைத்துவிட்டாள். இருந்தும் அவள் மனம் பந்தய குதிரையாக இன்னும் படபடத்து கட்டுகடங்காமல் ஓட, அவளின் செயல், எண்ணம் என்று அனைத்திலும் அவனே பிரதானமாக இருந்தான்.


பின் அவள் குளித்து முடித்து மதிய உணவை தயார் செய்துவைத்து விட்டு சரவணன் ரேஷ்மாவோட தம் வேலைகளில் ஈடுப்பட்டாலும் மனதில் அவனுக்கான தவிப்புகள்!


செழியன் அவளிடம் கோபித்து கொண்டதிலிருந்து ஜானவி அவளின் அலுவல் வேலைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டுவிட்டாள். சரவணனுக்கும் ரேஷ்மாவிற்கும் ஓரளவு தன் வேலைகளை பற்றிய நுணுக்கங்களை கற்று கொடுத்ததால் அவர்களே ஓரளவு எல்லாவற்றையும் கவனித்து கொண்டனர். அவர்களுக்கு தேவையான தகவல்களை பரிமாறுவது மற்றும் எப்படி எதில் முதலீடு செய்வது என்று யோசனைகள் கூறுவது மட்டுமே அவள் வேலையாக இருந்தது.


ஆனால் இன்று அந்தளவுக்கு கூட இல்லை. சுத்தமாக எதையும் கண்டுகொள்ளாமல் அவள் பாட்டுக்கு அமர்ந்திருந்தாள்.


அதுவும் செழியன் மதிய உணவிற்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு போனதால் நிமிடத்திற்கு ஒரு முறை கடிகாரத்தை பார்த்து கடுப்பானாள்.


“என்னாச்சு க்கா உங்களுக்கு?” என்று சரவணனும் ரேஷ்மாவும் கேட்குமளுவுக்காய் அவள் மனநிலை அப்பட்டமாக தெரிந்தது.


செழியன் வந்ததும் அவள் அங்கேதான் இருப்பாள் என்று யூகித்து நேராக வந்து கதவை தட்ட, அப்போது கதவை திறக்க எழுந்து கொண்ட சரவணனை அமர சொல்லிவிட்டு அவளே கதவை திறந்தாள்.


ஒருவரை ஒருவர் பார்த்த மாத்திரத்தில் இருவரின் முகமும் பிரகாசித்த அதேநேரம் சரவணன் வாசலை எட்டி பார்த்து, “ஒ! அப்போ சார் எப்போ வர போறாருன்னுதான் நீங்க டைம் பார்த்துக்கிட்டே இருந்தீங்களா?” என்று அப்படியே அவன் வத்தி வைக்க,


செழியன் முகம் மேலும் பிரகாசிக்க ஜானவி மாட்டி கொண்டதை காட்டி கொள்ளாமல் இருக்க, “அவன் உளறான்... நான் லண்டன் ஸ்டாக் மார்கெட் ஓபன் பண்ற டைமுக்காக பார்த்துட்டு இருந்தேன்” என்று சமாளிக்க, செழியன் அவளை பார்த்து புன்னகைத்தான். அவள் சொல்வது பொய்யென்று அவனுக்கு தெரியாதா என்ன?


ஜானவி அவனிடம், “லஞ்ச் எல்லாம் பேக் பண்ணி டேபிள் மேல வைச்சிட்டேன்” என்று அவள் சொன்ன நொடி, “ஏன் நீங்க வந்து எடுத்து தர மாட்டீங்களா?” என்று அவன் கேட்க,


“உள்ளே அத்தை இருக்காங்க... அவங்க எடுத்து தருவாங்க” என்று சொல்ல,


“வந்தவனுக்கு ஒரு காபி கூடபோட்டு தர முடியாதா?” என்றதும் அவள் அடக்கப்பட்ட புன்னகையோடு அவனை ஏறஇறங்க பார்த்து,


“மதிய வேளையில யாராச்சும் காபி குடிப்பாங்களா?” என்று கேட்டாள்.


“நான் குடிப்பேன்” என்றவன் அழுத்தி சொல்ல,


“அத்தை இருக்காங்க இல்ல... அவங்கள போட்டு தர சொல்லுங்க... என்னை விட நல்லா போட்டு தருவாங்க” என்று சொன்ன நொடி அவள் காலை மிதித்துவிட்டான்.


“ஆஆ...” என்ற அவள் கத்த அவன் கோபமாக அவளிடம், “போய் உங்க மார்க்கெட்டையே கட்டிக்கிட்டு அழுவுங்க” என்று சொல்லிவிட்டு அவன் திரும்பி தன் வீட்டிற்குள் புகுந்துவிட்டான். அப்போது அவள் கத்தியதை பார்த்து சரவணணும் ரேஷ்மாவும் என்னவென்று கேட்க,


ஒன்றுமில்லை என்று அவர்களிடம் சமாளித்துவிட்டு அவள் வீட்டிற்குள் நுழைய செழியன் மதிய உணவை எடுத்து கொண்டு வாசலை நோக்கி வந்தான். பாண்டியனும் சந்தானலட்சுமியும் முகப்பறையில் அமரந்திருக்க ஜானவி பார்வையாலேயே அவனிடம் மன்னிப்பு வேண்டினாள்.


அவளிடம் இயல்பாக தலையசைத்துவிட்டு அவன் வாசலுக்கு வர அவன் பின்னோடு அவள் வழியனுப்ப வெளியேவர


அவன் அவள் புறம் திரும்பி ஏக்கமாக, “இல்லன்னும் இல்லாம... இருக்குனும் இல்லாம இந்த ரெண்டும்கட்டான் பீல் இருக்கே... ரொம்ப அவஸ்த்தையா இருக்கு ஜானு” என்றான்.


“ஜானுவா?” என்று கேட்டு அவனை வியப்பாக அவள் பார்க்க, “நான் ஜானுன்னு உங்களை கூப்பிட கூடாதா?” என்று அவன் கேட்க,


“சேச்சே அப்படியெல்லாம் இல்ல... நீங்க கூப்பிடுங்க... நீங்க எப்படி கூப்பிட்டாலும் எனக்கு ஒகேதான்” என்று வெட்கப்பட்டு அவள் கூற அவன் முகம் மலர்ந்தது.


“இதே இடத்தில நின்னுதான் என்னை பேரை கூட சொல்லி கூப்பிட கூடாதுன்னு யாரோ சண்டையெல்லாம் போட்டீங்க” என்று செழியன் கிண்டலாக சொல்ல,


“இப்ப எதுக்கு அதையெல்லாம் ஞாபக படுத்தறீங்க” என்று அவள் முகம் சுருங்கினாள்.


“சரி நான் பேசல” என்றவன் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு, “நான் கிளம்பிறேன்... டைமாகுது... அப்புறம் லஞ்ச் பெல் அடிச்சிடுவாங்க” என்று சொல்லி கொண்டே படிக்கெட்டில் இறங்கினான்.


“நான் வேணாம் உங்களை டிராப் பண்ணிட்டு வரேனே” என்று ஜானவி இறங்கி செல்பவனை பார்த்து எட்டி நின்று சொல்ல,


“பிக் அப் பண்றேன்னு சொன்னா கூட ஒகே... டிராப் பண்றேன்னு சொல்றீங்களே ஜானவி” என்றவன் கேலி புன்னகையோடு அவளை நிமிர்ந்து பார்த்தான்.


“பிக் அப்பும் வேண்டாம் ட்ராபும் வேண்டாம்... நீங்க கால் நடையாவே போங்க” என்று அவள் கடுப்பாக சொல்ல அதனை கேட்டு சிரித்து கொண்டே அவன் சென்றுவிட்டான்.


காதிலில் காத்திருப்பும் கூட ஒரு சுகம்தான். அவனின் சின்ன சின்ன சீண்டல்களும் முத்தங்களும் அவளுக்கு ரசனையாக இருந்தது. அவனுடன் ஒன்றாய் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் அவளுக்கு புதுப்புது உணர்வுகளை புகுத்தியது.


வாழ்க்கை இத்தனை அழகா என்று அவனுடன் வாழ்ந்து பார்க்கும் போதுதான் அவளுக்கு புரிய வந்தது. கடந்த சில நாட்களாய் செழியனுக்கும் ஜானவி மீதான காதல் அபரிமிதமாய் பெருகியிருந்தது. ஆனால் அதனை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லத்தான் அவனுக்கு தனிமையும் சந்தர்ப்பமும் அமையவேயில்லை.


அன்று செழியன் மகள்களை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வர அன்புவும் மீனாவும் ஆளுக்கொரு திசையில் முகத்தை திருப்பி கொண்டு உள்ளே வந்தனர்.


ஜானவி அவர்கள் முகத்தை பார்த்துவிட்டு, “என்னாச்சு செழியன்?” என்று கேட்க,


“ஏதோ ஸ்கூலில கேம் வைச்சிருக்காங்க... அதுல மீனா அவ கிளாஸ்ல இருக்க வேற ஒரு பொண்ணோட சேர்ந்து விளையாடினாலாம்... அன்புவுக்கு அதனால மீனா மேல கோபம்” என்று அவன் சொல்லி முடிக்கும் போது அன்பு ஜானவியிடம்,


“மீனு அந்த பொண்ணு கூடத்தான் எப்பவும் பேசறா” என்று புகார் செய்தாள்.


மீனா உடனே, “தியா என் பிரெண்டு... நான் அப்படிதான் பேசுவேன்” என்றாள் அழுத்தமாக!


ஜானவி கோபமாகி, “அதுக்கு... நீ அன்புக்கிட்ட பேச மாட்டியா?” என்றுமிரட்ட, “இல்லம்மா நான் அன்புகிட்ட பேசுறேன்” என்று மீனா அம்மாவின் மிரட்டலில் பயந்தாள்.


“இல்ல பொய்” என்று அன்பு சொல்ல,


“வாயை மூடு அன்பு... நீ செய்றது தப்பு” என்று செழியன் மகளை அதட்ட அன்பு ஓடி வந்து ஜானுவின் காலை கட்டி கொண்டாள்.


ஜானவி செழியனை முறைத்து, “அன்பு என்ன தப்பு செஞ்சா?” என்று அன்புவிற்கு வக்காலத்து வாங்க,


“மீனா மட்டும் என்ன தப்பு செஞ்சா... அவ பிரெண்டோட பேசுனா... அவ்வளவுதானே” என்று செழியன் மீனாவிற்கு பரிந்து பேசினான்.


அப்போது பாண்டியன் அவர்கள் இடையில் வந்து, “குழந்தைங்க சண்டையெல்லாம் ஒரு விஷயமா... இதுக்கு போய் ரெண்டு பேரும் முறைச்சுக்கிறீங்க... போய் உங்க வேலையை பாருங்க... இன்னும் கொஞ்ச நேரத்தில அவங்களே சமாதானமாயிடுவாங்க” என்று சொல்ல ஜானவி மௌனமாக உள்ளே சென்றுவிட செழியனும் தன் அறையில் சென்று உடையை மாற்றி கொண்டு வந்தான்.


அன்புவிற்கும் மீனாவிற்கும் ஜானவி உடைகளை மாற்றிவிட்டு அருந்த பால் கொடுக்க, அப்போதும் கூட இருவரும் எதிரும் புதிருமாகத்தான் அமர்ந்திருந்தனர்.


ஜானவி அந்த காட்சியை செழியனிடம் காண்பித்து கண்ஜாடையில் அவர்களை சமாதானம் செய்ய சொன்னாள். அவனும் இமைகளை மூடி அவளிடம் ஆமோதித்துவிட்டு


அவர்களிடம் சென்று, “ஹம்ம் ஹ்ம்ம்... சீக்கிரம் பால் குடிங்க... நம்ம எல்லாம் கீழ பார்க்ல போய் விளையாடலாம்” என்று அவன் சொன்னதுதான் தாமதம்.


“ஐ!” என்று சொல்லி குதுகலித்து அவர்கள் பாலை குடிக்க ஜானவி பெருமூச்செறிந்தாள். அதன் பின் செழியனும் பாண்டியனும் அவர்களை அழைத்து கொண்டு பூங்காவிற்கு சென்று விட ஜானவி பால்கனியில் நின்று கொண்டு மகள்கள் விளையாடுவதை பார்த்தபடி நின்றாள்.


அதேநேரம் செழியன் குழந்தைகளோடு குழந்தையாக மாறி விளையாடுவதை பார்த்து கண்கொட்டாமல் ரசித்து கொண்டிருந்தாள். செழியன் மகனாக தந்தையாக கணவனாக காதலனாக... ஏன் நண்பனாக என்று எல்லாவற்றிலும் அவன் சிறப்பானவனாக திகழும் சூட்சமம் என்ன என்று அவள் மனம் ஆராய்ந்து கொண்டிருக்கும் போது பூங்காவிலிருந்த செழியனை காணவில்லை. அவள் சுற்றி சுற்றி தன் பார்வையை சுழற்றி தேட அப்போது அவள் பின்புறம்,


“யாரை தேடுறீங்க ஜானவி?” என்று வெகுஅருகாமையில் அவள் செவிகளை அவன் குரல் தீண்டியது.


அவள் துணுக்குற்று திரும்ப, “இங்க நீங்க என்ன பண்றீங்க செழியன்... குழந்தைங்க எங்க?” என்று கேட்க,


“கீழ அப்பா கூட இருக்காங்க” என்றான்.


“ஒ!” என்றவள் அவனை சந்தேகமாக பார்த்து, “இப்போ நீங்க ஏன் மேல வந்தீங்க?” என்று கேட்கவும்,


“நான் பசங்க விளையாட பால் கேட்டாங்க... அதை எடுத்துட்டு போலாம்னு வந்தேன்” என்றவன் சொல்ல அவனை நம்பாமல் பார்த்தவள்,


“அதுக்கு நீங்க ஏன் மேல ஏறி வரணும்... என்கிட்ட கேட்டு இருந்தா நான் மேல இருந்தே தூக்கி போட்டு இருப்பேன் இல்ல” என்றவள் சொல்ல,


“நான் ஃபோன் எடுத்துட்டு போலயே” என்றான் அவன்!


“எதுக்கு ஃபோன்... ஒரு குரல் கொடுக்க வேண்டியதுதானே... நான் பால்கனில நின்னு உங்களைதானே பார்த்துக்கிட்டு இருந்தேன்” என்றவன் சொன்ன நொடி அவளை நெருங்கி வந்தவன்,


“என்னைதான் பார்த்துக்கிட்டு இருந்தீங்களா?” என்று ஆழமான பார்வையோடு கேட்க அவள் உதட்டை கடித்து கொண்டு,


“நான் அப்படி சொல்லல... உங்க எல்லோரையும் பார்த்துக்கிட்டு இருந்தேன்” என்று அவள் சமாளிக்கும் போதே அவன் அவள் இடையை பற்றி அருகே இழுத்தான்.


“செழியன்” என்று அவள் சொல்லும் போதே அவன் உதடுகள் அவளை பதம் பார்க்க தொடங்கியிருந்தது. அவள் முகத்தில் முத்தத்தால் அவன் அர்ச்சனை செய்ய அவள் பதறி கொண்டு அவனை விலக்கி விட முயன்றாள். ஆனால் அது அவளுக்கு சற்றே அசாத்தியமான காரியமாக இருந்தது.


அந்த அளவுக்கு அவன் அவள் மீது மோகம் கொண்டிருந்தான். அவன் ஏக்கமும் தாபமும் ஒன்று சேர்ந்து கொள்ள அவள் கழுத்து வளைவில் இறங்கி கொண்டிருந்தன அவன் இதழ்கள்.


அவள் நாணத்தோடு, “செழியன்” என்று கொஞ்சம் தீவிரமாக அவனை விலக்க எத்தனிக்க அப்போது அவன் ஸ்டிக் கைகளில் இருந்து நழுவிவிட்டது.


அவன் தடுமாறிய சமயம் வேறுவழியின்றி ஜானவியே அவனை இறுக்கமாக அணைத்து கொள்ள நேரிட்டது. விஷமமாக யோசித்தவன் தானும் ஸ்டிக்கை எடுக்க எத்தனிக்காமல் அவளையும் எடுக்க விடாமல் தன் இரு கரங்களாலும் அவளையே சார்ந்துவிட, என்ன செய்வாள் அவள்?


“இப்போ தள்ளி விட்டுட்டு போங்க பார்ப்போம்?” என்றவன் கல்மிஷ்மாக கேட்ட தொனியில் அவள் பரிதபாமாக பார்த்து, “உஹுமம் மாட்டேன்” என்று அவள் தலையசைக்க,


அவன் உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டுவிட்டு அவளை பார்த்தவன், “நீங்க எப்பவும் என் கூடவே இருக்கணும் ஜானு... உங்களை நான் எதுக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன்” என்று சொல்லும் போதே அவன் விழிகளில் நீர் சூழ்ந்து கொண்டது. அவனின் முந்தைய இழப்பின் வலி அதில் அத்தனை ஆழமாக தெரிந்தது.


அவள் விழிகளிலும் நீர் கோர்க்க, “கண்டிப்பா நான் உங்களை விட்டு போக மாட்டேன்” என்றவள் உறுதியாக சொன்ன மறுகணம் அவன் இதழ்கள் அவள் இதழ்களிடம் தஞ்சம் புகுந்துவிட்டன.


தீரா தாபத்தோடு அவன் அந்த முத்தத்தை நின்று நிதானமாக அனுபவிக்க, ரஞ்சனி இல்லாமல் சூனியமாகி போன அவன் வாழ்க்கையின் அரிதினும் அரிதான தேடலாக அவனுக்கு கிடைக்கபெற்றவளை இழந்துவிட கூடாது என்ற அச்சமே இன்னும் இன்னும் அவளை தனதாக்கி கொள்ள வேண்டுமென்ற அவாவை அவனுக்குள் தூண்டியது.


அவள் அவனின் முத்தத்தில் கிறங்க அவளின் உணர்வுகளும் தேகமும் அவனிடம் மொத்தமாக சரணடைய விழைந்தது. மெல்ல மெல்ல அவனின் எல்லைமீறல்களை அவள் வெகுவாக ரசித்து கொண்டிருந்த நேரம் இருவருமே ஒரு சேர நிமிர்ந்து முகம் பார்த்தனர்.


“ஜானவி” என்று செழியன் அழைக்க,


“அன்புவும் மீனாவும் அழற மாறி கேட்குது இல்ல” என்று அவள் சொல்ல, செழியனும் ஆமோதித்தான். அவன் கரத்தை பிடித்து கொண்டே அவள் அவன் ஸ்டிக்கை குனிந்து எடுத்து தந்துவிட்டு முன்னே நடந்து அறையை விட்டு வெளியே வந்தாள்.


அப்போது பாண்டியன் அழுது கொண்டிருக்கும் அந்த வாண்டுங்களை சமாதானம் செய்ய பாடாய்பட்டு கொண்டிருக்க, “என்னாச்சு மாமா?” என்ற கேட்ட மீனா உடனே, “அன்பு என்னை அடிச்சிட்டா” என்றாள்.


செழியன் அவள் பின்னோடு வந்து நிற்க அன்பு தன் அப்பாவிடம் ஓடி சென்று, “நான் அடிக்கல இவதான்” என்று சொல்ல


“அன்புதான் என்னை முதல அடிச்சா?” என்று மீனா அன்புவை கை காட்ட,


“இல்ல மீனுதான்” என்று அன்பு மீனாவை சுட்டிக்காட்டினாள்.


“பொய்” என்று மீனா சொல்ல, “இல்ல இவதான்” என்று அன்பு மீண்டும் சொல்ல,


“வாயை மூடுறீங்களா இரண்டு பேரும்” என்ற ஜானவியின் அதட்டலுக்கு இரண்டு பேரும் கப்சிப்பென்று அடங்கிவிட்டனர்.


“போய் கம்னு உட்காருங்க” என்று அவள் சொல்ல இருவரும் சோபாவில் முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்து கொள்ள,


பாண்டியன் நடந்த விஷயத்தை உரைத்தார்.


“இரண்டு பேரும் நல்லாதான் விளையாடிட்டு இருந்தாங்க... அப்போ என் பிரெண்டு வந்தான்... அவன்கிட்ட பேசிட்டு திரும்பிறதுக்குள்ள இரண்டு பேரும் சண்டை போட்டு அடிச்சிக்க ஆரம்பிச்சிட்டாங்க” என்று அவர் நடந்தை சொல்ல சந்தானலட்சுமி கோபமாக,


“புள்ளைங்கள பார்த்துக்கிறதை விட அப்படியென்ன பொல்லாத பிரெண்டு உங்களுக்கு” என்று கணவனை கடிந்து கொண்டார்.


ஜானவி உடனே, “ஐயோ விடுங்க அத்தை... அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டா அதுக்கு மாமா என்ன பண்ணுவாரு” என்று அவள் மாமனாருக்காக பரிந்து பேச சந்தானலட்சுமி விடாமல் கணவனை முறை முறை என்று முறைத்து விட்டு பேத்திகளை சமாதனப்படுத்த முயல,


“ம்மா நான் அவங்கள பார்த்துக்கிறேன்... நீங்க போங்க” என்றான் செழியன்.


சந்தானலட்சுமி மீண்டும் கணவனை பார்த்து முறைத்து, “வாங்க உங்களுக்கு இருக்கு” என்று சொல்ல,


“நான் எதுவும் பண்ணல லட்சு” என்று மனைவியை சமாதானம் செய்ய அவர் பின்னோடு உள்ளே சென்றுவிட்டார்.


ஜானவி கணவனை பார்க்க செழியன் இருவரின் அருகிலும் அமர்ந்து,


“இரண்டு பேருக்கும் அப்படி என்ன சண்டை?” என்று நிதானமாக விசாரிக்க,


“அவதான் ப்பா ஜானும்மா உனக்கு அம்மா இல்ல... எனக்கு மட்டும்தான் அம்மான்னு சொன்னா” என்று அன்பு சொன்ன நொடி ஜானவி அதிர்ந்து மீனாவை பார்த்து, “ஏன்டி அப்படி சொன்ன?” என்று மிரட்ட,


“ஜானவி பொறுமையா இருங்க... நான் பேசிக்கிறேன்” என்றான் செழியன்.


அவள் மௌனமாக மகளை முறைக்க மீனா அழுத்தமாக அமர்ந்திருந்தாள்.


“மீனு” என்று செழியன் அவள் தோளில் கை போட அவள் வேகமாக ஓடிவந்து ஜானவி காலை கட்டி கொண்டு, “அன்புதான் முதல இது ஒன்னும் உங்க வீடில்லைன்னு என் வீடுன்னு என்கிட்ட சொன்னா... அப்புறம்தான் நான் அப்படி சொன்னேன்” என்றாள் மீனா.


ஜானவி அதிர்ச்சியில் பேச முடியாமல் நிற்க, “என்ன அன்பு நீ அப்படி சொன்னியா?” என்று செழியன் மகளை பார்க்க,


“அவதான் பா நீ எனக்கு வேண்டாம் போ... கா ன்னு சொன்ன” என்று அஞ்சி கொண்டே பதிலுரைத்தாள் அன்பு!


செழியன் நிதானமாக யோசித்துவிட்டு மீனாவிடம், “மீனு அப்பாகிட்ட வா” என்று அழைக்க,


“நீங்க ஒன்னும் எனக்கு அப்பா இல்ல... அன்புவுக்குதான் அப்பா” என்ற வார்த்தை கேட்டு செழியன் ஆடி போனான். கணவனின் வேதனையை துல்லியமாக கண்ட ஜானவி சீற்றமாகி, “என்னடி சொன்ன?” என்ற மகளை கோபத்தில் அடித்து விட்டாள்.


“ஜானவி” என்று செழியன் கோபமான அதேநேரம்,


மீனா சத்தமாக அழுது, “போ... நீ என்னை மட்டும் அடிக்கிற... அன்புவை ஒரு தடவயாச்சும் அடிசிருக்கியா?” என்று கேட்டுவிட, ஜானவிக்கு மேலும் அதிர்ச்சியானது. மீனா அவளை விட்டு விலகி சென்றாள்.


செழியனும் கோபம் பொங்க, “எத்தனை தடவை சொல்றது உங்களுக்கு... குழந்தை மேல கை ஒங்காதீங்கன்னு” என்று சொல்லிவிட்டு, “மீனா” என்று செழியன் மகள் அருகில் சென்றான்.


அதேநேரம் பாண்டியனும் சந்தானலட்சுமியும் என்னவோ ஏதோ என்று முகப்பறைக்கு ஓடி வந்தனர்.


மீனா பிடிவாதமாக செழியனிடம் வரமாட்டேன் என்று ஒதுங்கி கொள்ள அந்த பிஞ்சு உள்ளத்திற்கு தான் என்ன செய்கிறோம் என்று புரியவில்லை. மீனா வேகமாக சென்று படுக்கறைக்குள் புகுந்து கொள்ள அன்புச்செல்வி நடந்த நிகழ்வுகளை பார்த்து பயந்து தன் பாட்டி தாத்தாவிடம் ஓடிவிட்டாள்.


பிரச்னையின் தீவிரம் புரிந்து பாண்டியன் என்னவென்று விசாரிக்க, “நீங்க அன்புவை அழைச்சிட்டு உள்ளே போங்க” என்றவன் ஜானவியை பார்க்க அவள் அதிர்ச்சியில் நின்றகெதியில் அப்படியே சிலையாக நிற்க,


“ஜானவி... போய் மீனாவை சமாதானப்படுத்துங்க... ஆனா குழந்தையை எக்காரணம் கொண்டு அடிக்கவோ மிரட்டவோ செய்யாதீங்க” என்று சொல்ல அவளும் உள்ளே சென்று மீனாவிடம் பேசினாள்.


என்னதான் அடித்தாலும் மீனாவால் ஜானவியை ஒரு நாளும் விலகி இருக்க முடியாது. ஓடி வந்து தன் அம்மாவை அணைத்து கொண்டவள், “நம்ம இப்பவே அம்மம்மா வீட்டுக்கு போலாம்” என்று அடம் பிடிக்க, அவளுக்கு எரிச்சலானது. ஆனால் செழியன் சொன்ன ஒரு வார்த்தைக்காக மகளிடம் தன் கோபத்தை காட்டாமல் முடிந்தளவு பொறுமையாக இருந்தாள்.


“நாளைக்கு கூட்டிட்டு போறேன்” என்று மகளை சாப்பிட செய்து உறங்கவும் வைத்துவிட இன்னொரு புறம் அழுது கொண்டிருந்த அன்புவை சந்தானலட்சுமி சாப்பிட வைத்தார். அதன் பின் அவர்கள் நால்வரும் உணவு உண்ண அமர்ந்தார்கள். ஆனால் யாருக்குமே சாப்பாடு உள்ளே இறங்கவில்லை.


செழியன் தன்னறைக்குள் நுழைந்த போது மீனா உறங்கி கொண்டிருந்தாள். அவர்கள் திருமணமான நாள் முதற் கொண்டு இன்று வரை அன்புவும் மீனாவும் தனித்தனியாக படுத்து கொண்டதே இல்லை.


எந்த அறையில் படுத்து கொண்டாலும் இருவரும் ஒன்றாகவே படுத்து கொள்வதுதான் வழக்கம்.


அந்த சிந்தனையோடு செழியன் ஆழ்ந்த உறக்க நிலையிலிருந்த மீனாவின் அருகில் சென்று அமர்ந்து தலையை வருடி கொடுக்க உள்ளே வந்த ஜானவி,


“மீனா அப்படி பேசனதால ரொம்ப ஹார்ட்டாயிடீங்களா?” என்று கேட்டாள்.


அவன் அவள் முகம் பார்க்காமல், “நீங்க மீனாவை அடிச்சதாலதான் நான் ரொம்ப ஹார்ட்டாயிட்டேன்” என்றவன் மேலும், “யாரை கேட்டு நீங்க அவ மேல கை ஒங்கினீங்க” என்று அவளை உக்கிரமாக முறைத்தான்.


“அவ அப்படி உங்ககிட்ட பேசனதாலதான்” என்று ஜானவி தயங்கியபடி சொல்ல,


“தப்பு ஜானவி... கடைசில மீனா உங்களை பார்த்து என்ன சொன்னானு கேட்டீங்களா?” என்றவன் அவள் முகம் பார்த்து, “இந்த மாதிரி நீங்க அன்புவை அடிச்சிருக்கீங்களான்னு கேட்கிறா” என்றான்.


ஜானவி பதிலின்றி குற்றவுணர்வோடு நிற்க அவன், “குழந்தைங்க நாம சின்ன சின்னதா செய்ற ஒவ்வொரு விஷயத்தையும் கவனிச்சிட்டு இருப்பாங்க... அதுவும் மீனா ரொம்ப மெச்சூர்ட்... அதுவும் நீங்க இதுவரைக்கும் ஒருதடவை கூட அன்புவை அடிக்காததை அவ கவனிச்சிருக்கா” என்று சொல்லவும்,


“நான் எப்படி அன்புவை அடிக்க முடியும்” என்று எதார்த்தமாக கேட்ட ஜானவியை விழிகள் இடுங்க பார்த்து,


“இப்ப என்ன சொன்னீங்க ஜானவி” என்று கேட்டான்.


அவன் பார்வையின் தீவிரத்தை உணர்ந்த அப்படியே படுக்கையில் அமர்ந்து அவள் தலையை தாழ்த்தி கொண்டு, “அப்படி பார்க்காதீங்க செழியன்... நான் சத்தியமா அன்புவை என் மகளாதான் பார்க்கிறேன்” என்றாள்.


“அது எனக்கு நல்லா தெரியும்... ஆனா நீங்க ஏன் அன்புவை நடத்துற மாறி மீனாகிட்டயும் நடந்துக்க மாட்றீங்க” என்று கேட்ட நொடி அவள் அதிர்ச்சியாகி, “நான் மீனாகிட்ட எப்பவும் போலதான் நடந்துக்கிறேன்” என்றாள்.


“இல்ல ஜானவி... நீங்க அன்புகிட்ட நடந்துக்கிற மாறி மீனாகிட்ட நடந்துக்கல... அதுவும் மீனாகிட்ட காட்டிற கண்டிப்பை நீங்க அன்புகிட்ட காட்டிறதில்ல... ஒன்னு நீங்க அன்புகிட்ட நடந்திக்கிற மாறி மீனாகிட்ட நடந்துக்கோங்க இல்ல மீனாகிட்ட நடந்துகிற மாறி அன்புக்கிட்ட நடந்துக்கோங்க... அப்பதான் அவங்க இரண்டு பேருக்குள்ள எந்த பிரிவினையும் வராது” என்று அவன் தெளிவாக சொல்ல,


“இனிமே அப்படி நடந்துக்கிறேன்... ஆனா இப்போ இவங்க சண்டையை எப்படி சால்வ் பண்றது” என்றவள் பதட்டமாக கேட்டாள்.


“அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல... நான் பார்த்துக்கிறேன்... நீங்க படுத்துக்கோங்க” என்றவன் சொல்ல ஜானவி முகத்திலிருந்த அச்சமும் கவலையும் துளி கூட குறையவில்லை.


“என்னால முடியல... இந்த பசங்க சண்டை போட்டுக்கிட்டதை பார்த்ததில இருந்து மனசை போட்டு பிசையுது”


“குழந்தைங்க சண்டையை போய் சீரியஸா எடுத்துக்கிட்டு... விடுங்க ஜானு” என்றவன் சொன்ன சமாதானம் அவள் மூளையை எட்டவேயில்லை.


“இல்ல செழியன்... இந்த மாறி அவங்க இரண்டு பேரும் இதுவரைக்கும் சண்டை போட்டுக்கிட்டதே இல்லையே” என்றவள் படபடப்போடு சொல்ல அவனுக்கு அவள் மனநிலை ஓரளவு புரிந்து போனது. எங்கே அன்புவிற்கும் மீனாவிற்கும் இடையில் பிரிவினை வந்துவிடுமோ என்று எதிர்க்காலத்தை குறித்த அச்சம் அவளை தொற்றி கொண்டிருந்தது.


செழியன் எழுந்து அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டு, “ஜானு” என்று அவள் கன்னங்களை தழுவ, “ஹ்ம்ம்” என்று அவள் குரல் வராமல் அழுகைதான் வந்தது.


“நான் இருக்கும் போது நீங்க ஏன் பயப்டுறீங்க... நம்ம பசங்களுக்குள்ள பிரிவினை வர நான் விட்டுருவேணா?” என்றவன் சொல்லி கொண்டே அவள் கண்ணீரை துடைத்துவிட அந்த வார்த்தைக்கு மேல் அவளுக்கு வேறென்ன வேண்டும். அதுவே அவளுக்கு போதுமானது.


அவன் தோள் மீது அவள் தலை சாய்த்து கொள்ள செழியன் அவள் தலையை வருடி கொடுகத்தான். அத்தனை நேரம் இருந்த அவள் மனபாரமெல்லாம் லேசானது. அவள் அப்படியே அவன் மீது சாயந்து கொண்டே உறங்கியும்விட்டாள்.


மனைவியின் உறக்கம் கலையாமல் அவளை படுக்கையில் படுக்க வைத்து விளக்கை அணைத்தான். ஆனால் அவன் விழிகளை உறக்கம் தழுவவில்லை. அந்த பிரச்சனையை முடிப்பதற்கான நிரந்திர தீர்வை அவன் தீவிரமாக யோசித்தபடி இரவெல்லாம் விழித்திருந்தான்.

 
 

Komentarze

Oceniono na 0 z 5 gwiazdek.
Nie ma jeszcze ocen

Oceń
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page