மாயா-9
முற்றிலும் யாமினியாகவே மாறிப்போயிருந்த மாதினியைப் பார்க்கவே சற்று கிலியாக இருந்தது ஜெய்க்கு.
"நீ என்ன பேசறன்னு புரிஞ்சுதான் பேசறியா மாதினி" எனக் கேட்டான் அவன்.
"ஏய்! சொல்றேன் இல்ல! என்ன மாதினின்னு கூப்பிடாதன்னு! நான் யாமினிடா!" என மறுபடியும் உறுமியவள், "நான் உன்னை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன் ஜெய்! அது மாதினிக்கா இருந்தாலும்!
முதல் முதலா உன் போட்டோவை பார்த்ததுமே அவளுக்கு உன்னை பிடிச்சு போச்சு!
இல்லன்னா அவ எடுத்த உடனே வேண்டாம்னு சொல்லியிருப்பா!
ஆனா எனக்கு உன்னை பிடிச்சிருக்குனு புரியவும் எனக்காக உன்னை அவ விட்டுக்கொடுத்தா.
அவ மனசு புரிஞ்சும் நான் கண்டுக்காத மாதிரி இருந்தேன். ஏன்னா எனக்கு உன்னை அவ்வளவு பிடிச்சிருந்தது” என அவள் சொல்லிக்கொண்டிருக்க, அதுவரை, எடுத்த எடுப்பில் தன்னை நிராகரித்தவள் என மாதினியின்மேல் அவனுக்கிருந்த சிறு குறையும் காணாமல் போனது.
அந்த சிறு நிம்மதியுடன் அவளது வார்த்தைகளில் கவனம் செலுத்தினான் ஜெய்!
“அப்ப விட்டுக்கொடுத்துட்டு இப்ப மட்டும் நீ வேணும்னு சொல்லுவாளா அவ!" எனக் கேட்டவள், “நம்ம கல்யாண நாளை எவ்வளவு எதிர்பார்த்துட்டு இருந்தேன் தெரியுமா?
அப்பதான் அந்த வீராவும் நந்தாவும் காலேஜுக்கு வந்தானுங்க!
அவங்க கண்ணுல பட்டதாலதான் எனக்கு பிரச்சனையே ஆரம்பிச்சுது!
அந்த பாவிங்க கண்ணுல படாம இருந்திருந்தா இந்த நேரம் நம்ம கல்யாணம் முடிஞ்சிருக்கும்.
அவனுங்க பண்ண அராஜகம் எனக்கு தெரியாம போயிருந்தா நான் உயிரோடவாவது இருந்திருப்பேன்!
இந்த மாதினி இப்படியெல்லாம் பேசி இருக்க மாட்டா!" என அழுகையுடன் புலம்பினாள் மாதினிக்குள் புகுந்திருக்கும் யாமினி!
அவளுடைய ஏக்கங்கள் அனைத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தது முடிவில் விலுக்கென்று எழுந்த அவளுடைய கேவல்.
அதிசய நிகழ்வாக ஒருவேளை யாமினியின் ஆன்மா மாதினியை ஆடிக்கொண்டிருக்கும் பட்சத்தில் நடந்த உண்மைகளை அவள் மூலமாகத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் எழுந்தது ஜெய்க்கு.
அவளுடைய இந்த நிலையை வீட்டில் இருப்பவர்கள் யாரும் பார்த்துவிடக்கூடாதே என்று வேறு இருந்தது அவனுக்கு.
ஏற்கனவே யாமினியின் பிரிவுத்துயரிலிருந்து கொஞ்சம்கொஞ்சமாக மீண்டுகொண்டிருப்பவர்கள் இவளது இந்த நிலை பற்றி அறிந்தால் மறுபடியும் நொறுங்கிப்போகக்கூடும்!
அவன் திரும்பிச் சுற்றும் முற்றும் பார்க்க, யாருமே வரவில்லை அங்கே.
மாதினியை ஏறிட்டவன் அவள் மனதைத் தன்வசம் திருப்பும் முனைப்புடன், "யாமினி!" என அழைத்தான் மென்மையாக!
அவனது அந்த அழைப்பில் அவள் முகம் பிரகாசிக்க, கண்கள் மின்ன, "ஆமாம்! இப்படித்தான்... இப்படித்தான் கூப்பிடணும்னு சொன்னேன்!" என்றாள் கரகரத்த குரலில்.
"சரி! நீ கொஞ்சம் அமைதியாகு யாமு! கூல்" என்றவாறு அவளை நெருங்கி அவளது கூந்தலை மென்மையாக வருட, அவனது அந்த 'யாமு!' என்ற அழைப்பில் உடைந்தவள், அப்படியே அவன் மீது சரிந்தாள்!
அவளுடைய அணைப்பு இறுகிக்கொண்டே போக, இரும்பு போல இருந்தது அவளது கரங்கள்.
சில நொடிகள் அமைதியாக இருந்தவன், மிக முயன்று அவளை தன்னிடமிருந்து பிரித்து, அருகிலிருந்த மேடையில் அவளை அமரவைத்து தானும் அருகில் அமர்ந்து கொண்டான்.
அவள் தன்னை மறந்த நிலையில் எங்கோ வெறித்திருக்க, அவள் தலை நிலையில்லாமல் ஆடிக்கொண்டே இருந்தது.
அதைக் கவனித்து மனம் தாளாமல் அவளது தலையை தன் தோளில் சாய்த்துக்கொண்டு, "சொல்லு யாமு! என்ன நடந்தது!
உன்னை யார் என்ன பண்ணாங்க!
நீ சொன்னாதான எனக்குத் தெரியும்" எனக் கேட்டான் அவன்.
சில நிமிடங்கள் மௌனமாக அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவள், "பொங்கல் ஹாலிடேஸ் முடிஞ்சதும் நான் காலேஜுக்கு போனேன்;
ஒரு வாரம் ரொம்ப நார்மலா போச்சு!
கிளாசஸ் இன்ட்ரெஸ்டிங்கா இருந்தது; அதெல்லாம் போன்ல பேசும்போது உங்க கிட்ட கூட சொல்லி இருக்கேன் இல்ல" எனக் கேட்டாள் அவள்.
"ம்.. நியாபகம் இருக்கு" என்றவன், "அப்பதான் அம்மா ஒரு மெடிக்கல் கான்ஃபரன்ஸ்காக லண்டன் போனாங்க!
நான் அவங்களுக்கு துணையா போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால கிளம்பிப் போனேன்!" என்றான் அவன்.
"ஏன் போனீங்க ஜெய்! என்னை தனியா விட்டுட்டு ஏன் போனீங்க!" என கோபமாக அவனுடைய சட்டையைப் பிடித்து உலுக்கியவாறு, "மாதினியும் ரொம்ப பிஸின்னு சொல்லிட்டு இருந்தா!
உங்க ரெண்டுபேர் கிட்டயும் என்னால எதையும் ஷேர் பண்ண முடியல!" என மூச்சுவாங்க கத்தியவள், தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தாள்!
***
பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் தெளிவாக சில தினங்கள் கடந்திருக்க, காலை கல்லூரி பேருந்திலிருந்து இறங்கி தன் வருகையைப் பதிவு செய்ய அலுவலக அரை நோக்கிப் போனாள் யாமினி.
அங்கே சுவரில் பதிக்கப்பட்டிருந்த வருகையைப் பதிவுசெய்யும் கருவியைச் சுற்றி கும்பலாக இருக்கவும் சற்றே ஒதுங்கி ஓரமாக நின்றிருந்தாள் அவள்.
சரியாக அதே நேரம் அவளைக் கடந்து தனது அலுவலக அரை நோக்கிப் போனான் நரேன்.
பார்வையால் அவளை அளவிட்டவாறே அவன் வேகமாக அங்கிருந்து சென்றுவிட வெகு சில நிமிட இடைவேளையில் அவளைக் கடந்து சென்றனர் வீராவும் நந்தாவும்.
அவளைப் பார்த்த நொடி வீராவின் கண்களில் சிறு மின்னல் வெட்ட, அவன் நந்தாவை ஒரு பார்வை பார்க்கவும், அவன் எதோ கிண்டலாகச் சொல்ல சிரித்துக்கொண்டே நரேனுடைய அறை நோக்கிப் போனவர்கள் அவனது அனுமதிக்காகக் கூட காத்திருக்காமல் அவனது அறைக்குள் சென்றனர்.
பின் தனது வருகையைப் பதிவுசெய்துவிட்டு வகுப்பறை நோக்கிப் போனாள் யாமினி.
அவர்கள் மூவரும் அவளைப் பார்த்த விதத்தில் சிறு பதட்டம் தொற்றிக்கொண்டது அவளுக்கு.
அன்றைய வகுப்புகள் தொடங்கியதும் அவளது கவனம் அதில் சென்றுவிடச் சற்று நிதானத்துக்கு வந்தாள் அவள்.
அவள் பாடம் நடத்திக்கொண்டிருக்க, இடையில் குறுக்கிட்டவாறு, தள்ளாட்டத்துடன் அவளை நோக்கி வந்த ஒரு மாணவி, "மேம் பீலிங் சிக்; என்னால க்ளாஸ்ல கான்சன்ட்ரேட் பண்ண முடியல; ஷெல் ஐ லீவ்!" எனக் கேட்க, என்ன பிரச்சினை என்பதை அறிந்துகொள்வதை விட, "இந்த நிலைமையில நீ எப்படி வீட்டுக்கு போவ!" என்று மட்டுமே கேட்கத் தோன்றியது யாமினிக்கு.
"மேம்! என்னோட கார் ட்ரைவரோட வைட்டிங்ல இருக்கு; ஸோ நோ ப்ராப்ளம்" என்று பதில் சொன்னாள் அவள் குளறலாக.
உடனே மற்றொரு மாணவியை அழைத்து, "ப்ரின்ஸிபல் சார் கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு, அவளை கார் கிட்ட கொண்டு போய் விட்டுட்டு வந்துடு!" எனப் பணித்து அவளுக்குத் துணையாக அனுப்பிவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தாள் அவள்.
எதையுமே எதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் யாமினிக்கு அந்த பெண்ணின் செய்கையில் எந்த சந்தேகமும் தோன்றவில்லை. உண்மையிலேயே அவளுக்கு உடல் நிலை சரி இல்லை என்றே எண்ணினாள்.
அப்பொழுதே அவள் கொஞ்சம் சுதாரித்திருந்தாள் என்றால் நிலைமை அவளது கையை மீறிச் சென்றிருக்காதோ?
***
அவ்வப்பொழுது எதாவது காரணம் சொல்லி அவளை தன் அலுவலக அறைக்கு அழைக்கும் நரேன், அவளது பணி நிமித்தமாக எதாவது கேள்விகளாகக் கேட்ட வண்ணம் இருப்பான்.
முதன்முதலாகப் பார்த்த பொழுது நரேனின் பார்வையிலிருந்த வக்கிரம் அதன் பின் இல்லாமல் கண்ணியமாகவே நடந்துகொண்டான் அவன்.
எப்பொழுதுமே அவனுடன் அந்த வீரா அங்கே இருக்க எப்பொழுதாவது நந்தாவும் உடன் இருப்பான்.
ஆனால் அவளுடைய கவனத்தைக் கவரும் விதமாக ஒரு அதிகப்படியான அலட்டல் வீராவிடம் தெரியும்.
அவர்களைப் பற்றி அதிகமாக அறிந்துகொள்ளும் ஆர்வம் அவளுக்கு இல்லாமல் போனாலும், உருண்டையான தோற்றத்தில் இருக்கும் அந்த நரேனின் பிரத்தியேக 'ஜிம்' பயிற்சியாளர்தான் அந்த நந்தா; அவனுக்கு சொந்தமான உடற்பயிற்சி கூடங்கள் சில சென்னையின் முக்கிய பகுதியில் உள்ளது.
வீரா என்பவன் அந்த நரேனுக்கு தூரத்து உறவினன்; அவனுடைய 'பினாமி' மேலும் நரேனுக்கு சொந்தமான உரிமம் பெறப்படாத சில கேளிக்கை விடுதிகள் அந்த வீராவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்கிற விஷயங்கள் மற்றவர் பேசுவதை வைத்து அவளுக்குத் தெரிய வந்தது.
நரேனின் அல்லக்கை என்கிற ஒரே ஒரு தகுதி இருப்பதாலோ என்னவோ, அவ்வப்பொழுது யாமினியை வழி மறித்து பல்லை இளித்தவாறு ஏதோ சொல்ல வருவான் வீரா.
ஆனால் அவன் முன் நின்று பேசவே அருவருத்தவளாக ஒரு செயற்கை புன்னகையுடன் அவனைக் கடந்து சென்றுவிடுவாள் அவள்.
இதுவே தினசரி வழக்கமாக இருக்க கல்லூரி முடிந்து மாலை வீடு வந்த பிறகு ஜெய்யுடன் கைப்பேசியில் காதல் பேசுவதும், வார இறுதியில் மாம்பலம் வீட்டில் போய் தங்கிக்கொண்டு கல்யாணத்திற்குத் தேவையான ஜவுளிகள் நகைகள் என வாங்குவதுமாக சில தினங்கள் சென்றது.
இதற்கிடையில் ஒருநாள் அவளை அழைத்த ஜெய், "ஒரு முக்கியமான விஷயம் மாது!" எனத் தயக்கத்துடன் சொல்ல, "எதாவது பிரச்சனையா ஜெய்!" எனக் கேட்டாள் அவள்.
"ஒண்ணும் இல்ல" என இழுத்தவன், "நெக்ஸ்ட் வீக் ஒரு கான்ஃபரன்ஸ்காக அம்மா லண்டன் போறாங்க! அப்பாவுக்கும் முக்கியமான சர்ஜரி ஒண்ணு இருக்கு.
அதனால நான் கூடப் போக வேண்டியதா இருக்கும்!" என விளக்கமாகச் சொன்னான் அவன்.
"ப்ச்... இவ்வளவுதானா! என்றவள் "இதுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்; அத்தைக்குத் துணையா போறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை?" என அவள் கேட்க, "திரும்பி வர நாலஞ்சு நாள் ஆகும். என்னால உன்கூட இப்ப மாதிரி போன்ல பேச முடியாதே! அதுதான் பிரச்சனை" என்றான் அவன் வருந்தும் குரலில்!
"ஜெய்! இதெல்லாம் ரொம்ப ஓவர்! நாலஞ்சு நாள்தான! பரவாயில்ல மேனேஜ் பண்ணிக்கலாம்!" என்றாள் அவள் கிண்டல் குரலில்!
அதன் பின் அவர்களுடைய வழக்கமான 'ஸ்வீட் நத்திங்ஸ்' தொடர நிறைந்தது அன்றைய நாள்!
அன்று பிப்ரவரி பதினான்கு!
இன்னும் ஒரே மாதம்தான் இருந்தது அவர்கள் திருமணத்திற்கு.
ஜெய் லண்டன் சென்று மூன்று நாட்கள் ஆகியிருக்க 'நாட்கள் நகராதோ! பொழுதும் போகாதோ!' என்கிற நிலையிலிருந்தாள் யாமினி.
கல்லூரிக்குச் செல்ல மனமே இல்லாமல் கிளம்பி அங்கே வந்திருந்தாள் அவள்.
தனது வருகையைப் பதிவு செய்து விட்டு அவள் திரும்ப, அவளை நோக்கி வந்த 'பியூன்' "மேடம் நீங்க வந்த உடனே சார் உங்களை வந்து பார்க்கச் சொன்னார்" எனச் சொல்லிவிட்டுப் போக, நரேனுடைய அலுவலக அறை நோக்கிப் போனாள் அவள்.
நரேன்தான் அவளை அழைத்திருக்கிறான் என்ற எண்ணத்தில் அவள் அங்கே செல்ல, வாயெல்லாம் பல்லாக 'ஈ'யென இளித்தவண்ணம் கையில் சிவப்பு நிற ரோஜா பூங்கொத்தை ஏந்தியவாறு நின்றிருந்தான் வீரா!
அவளைப் பார்த்ததும் கள்ளுண்ட மந்தி போல மதி மயங்கிப் போனவன், மேற்கத்தியப் பாணியில் அப்படியே ஒரு காலை மடக்கி மண்டியிட்டவாறு அந்த பூங்கொத்தை அவளிடம் நீட்டி, "ஐ லவ் யூ!?" என்றான் உல்லாசமாக!
பதட்டத்துடன் அவள் தன் பார்வையை அந்த அறை முழுவதும் சுழல விட, அவனைத் தவிர வேறு ஒருவரும் இல்லை அங்கே!
பயத்தில் தொண்டை அடைக்க முதலில் என்ன சொல்வது என்பது புரியாமல் அசைவற்று நின்றவள், கொஞ்சமாகத் தன்னை சமன் செய்துகொண்டு, "சாரி.. எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆயிடுச்சு" எனச் சொல்ல அவன் முகம் கண்டிறிபோனது.
"இன்னும் கல்யாணம் நடக்கல இல்ல! மொதல்ல அதை நிறுத்து!" என்றான் அவன் கட்டளையாக!
பயத்தில் உடல் சில்லிட்டுப்போக உறைந்து நின்றாள் யாமினி!
மிரட்டுவாள் மாயா!
Comments