top of page
Writer's pictureKrishnapriya Narayan

Maathini-Yaamini! Promo!


சென்னை புறநகர் பகுதி,


டிசம்பர் 14,


டிசம்பர் மாதத்தில் கூட வெயில் மண்டையை பிளந்து கொண்டிருக்க... மனித நடமாட்டமே இல்லாத அந்த முக்கிய நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் வேகமாக வண்டிகள் மட்டுமே பறந்து கொண்டிருக்கும் நண்பகல்வேளை... தன் பைக்கை செலுத்திக் கொண்டிருந்தான் நந்தா. ஏதோ ஒரு வாடை நாசியில் துளைக்க, வண்டி அவன் கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கி அதி வேகமாக பாய்ந்த நொடி கண்கள் இருட்டத் தொடங்க காட்சிகள் இரண்டிரண்டாக, அவன் பார்த்த அந்த உருவம்… அவளாஆஆஆ????



மருத்துவமனையில் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நண்பனைக் காண வந்தான் அவன், வீரா – வீரசெல்வன் . நல்ல உயரமும் மாநிறமும் சற்று பருமனான உடல்வாகுடன், அணிந்திருந்த உடை, கடிகாரம், ஷூ என அனைத்திலும் நிரம்பி வழியும் செல்வச்செழுமையுமாக அந்த அறைக்குள் நுழைந்தவன், நண்பனின் கை பற்றி, நந்தா! என்ன நடந்நதுடா என்று கேட்க.. அவசரமாக அவன் கைகளை தட்டிவிட்டவனின் கண்களில் அதீத மிரட்சி... உன்னால்தானே எனும் பார்வை.... துன்பத்துடன் அவன் இறுதியாக உச்சரித்த பெயர் வீராவை குலைநடுங்க வைத்தது. அது யாமினி!!


தன் நண்பனின் அகால மரணத்தால் அவன் மனம் உலைக்கலனாய் கொதித்துக் கொண்டிருந்தது. ஒரு மூன்று மணி நேரத்திற்கு முன் தன்னிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்றவன் இப்பொழுது சடலமாக... அந்த நேரம் அவனுக்குத் தெரியாது அது வெறும் ஆரம்பம்தானென்று.


மருத்துவமனையை விட்டு வெளியே வந்த வீரா அவசரமாக அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் செல்வத்தை தன் செல் போனில் அழைக்க அதை ஏற்றவர், “சாரி மிஸ்டர் வீரா, இப்பதான் ஹாஸ்பிடல்ல இருந்து தகவல் வந்தது. நந்தா கேஸ்தான் விசாரிச்சிட்டு இருக்கேன், முடிஞ்சா நாளைக்கு ஸ்டேஷன் வாங்க பேசலாம், அதுகுள்ள போஸ்ட்மார்டம் ரிபோர்ட்சும் வந்துடும்” என்று கூற, “சரி” என்று அழைப்பைத் துண்டித்தான் அவன்.


அடுத்தநாள் அவன் காவல்நிலையம் செல்வதற்கு முன்பே அவனை அழைத்த செல்வம், “உங்க ஃபிரண்டுக்கு ஏற்பட்டது ஆக்சிடண்ட்தான், போஸ்ட்மார்டம் ரிபோர்ட்ல அவர் டிரக் கன்ஸ்யூம்பண்ணியிருக்கார்னு வந்திருக்கு. போதைல வண்டி ஓட்டியிருக்கார். ஸோ எதபத்தியும் கவலைபடாதீங்க வீரா” என்று கூறவே மேற்கொண்டு ஏதும் பேசாமல் அங்கிருந்து சென்றான் வீரா.


***


அதே நேரம் வண்டலூர் உயிரியல் பூங்காவின் எதிர் புறமாக அமைந்திருக்கும் உணவகத்தின் முதல் தளத்தில் உட்கார்ந்து கண்ணடி தடுப்பின் வழியே ஜீ.எஸ்.டீ சாலையில் ஊர்ந்து செல்லும் போக்குவரத்தை எதோ யோசனையுடன் வெறித்தபடி தட்டிலிருந்த உணவை அளைந்து கொண்டிருக்கும் அவளின் நிலவு போன்ற முகத்தில் நிலைத்திருந்தன ஜெய்யுடைய கண்கள்!


"என்ன மாதி! இன்னும் என்ன யோசனை!


முதல் ஸ்டெப் பர்பெக்டா முடிச்சிட்டோம் இல்ல!


கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு!" என அவன் சொல்ல, "நோ ஜெய்! இதுக்குள்ள எல்லாம் என்னால ரிலாக்ஸ் ஆக முடியாது!


நாம நினைச்சதை மொத்தமா செய்து முடிச்சாதான் எனக்கு நிம்மதி!


அதுவரைக்கும் நான் இப்படித்தான் இருப்பேன்!


ப்ளீஸ் என்கூட சேர்ந்து நீங்களும் கஷ்டப்படாதீங்க!


நானே பார்த்துக்கறேன்!" என அவள் சொல்ல, "மாதினி!" எனக் கோபத்துடன் அழைத்தவன், "உன்னோட உளறலை இதோட நிறுத்திக்கோ!" என்றான் கடுமையாக.


"என்ன நான் சொன்னது உங்களுக்கு உளறலா தெரியதா!" என அவள் அதே கோபத்துடன் சீற, 'உருவத்துல வேணா இவ அவளை மாதிரி இருக்கலாம்! ஆனா குணத்துல இவ வேற!


இதே இப்படி குரலை உயர்த்தி பேசினா அவ அழுதே இருப்பா!' என்ற எண்ணத்துடன் அவளது முகத்தைப் பார்த்தவன், 'அவளோட கண்ணுல எனக்கான காதல் தெரியும்!


ஆனா இவளுக்கு அதுல ஒரு தீ இருக்கு!


அவளோட முகம் எப்பவுமே மென்மையை பூசி இருக்கும் இவளோடது மாதிரி இரும்பா இறுகி இருக்காது!


அவதான் என்னோட நிஜம்!


இவ அவளோட நிழல்!


ரெண்டுபேரும் என்னைக்குமே ஒண்ணா ஆக முடியாது' என்ற எண்ணத்துடன் விழிகளை மூடிக்கொண்டான் ஜெய்.


அவன் கண்களுக்குள் வந்து நிறைந்தாள் அவள் - அவனுடைய யாமினி!


(மிரட்டுவாள் மாயா!)

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Commenting has been turned off.
© KPN NOVELS COPY PROTECT
bottom of page