top of page

Konchum Elil Isaiye - 3

தனது இடையைக் கட்டிக் கொண்டு வயிற்றில் முகம் புதைத்திருந்த இசையரசியின் தலையை ஆதூரமாய்க் கோதி, "என்னடா ஆச்சு! அப்பா ஞாபகம் வந்துருச்சா?" என வினவினான் எழிலரசன்.


அவளின் அழுகை தந்தைக்காகத் தான் இருக்கும் என அவனின் மனம் எண்ணியது.


அழுகையில் விசும்பிக் கொண்டே, "பயமா இருக்கு எழில்" என்றாள்.

தனது வயிற்றிலிருந்து அவளின் முகத்தை நிமிர்த்தித் தனது முகத்தைப் பார்க்கச் செய்தவன், "என்ன பயம்? எதுவும் கெட்டக் கனவு கண்டியா?" எனக் கேட்டான்.


நீர் நிறைந்த விழிகளுடன் தலையை இடம் புறம் அசைத்து இல்லை என்றவள்,


"காலைல குளிச்சிட்டு கீழே போனேனா... அத்தை" என்றதும்,

"அம்மா எதுவும் திட்டிட்டாங்களா? அப்படி எதுவும் செய்ய மாட்டாங்களே" என்றான்.


சற்றாய் அழுது ஓய்ந்து தெளிந்திருந்தவள், "இல்ல இல்ல திட்டல. காலைல என்னலாம் சமைக்கனும்னு சொன்னாங்க. எனக்கு அழுகை வந்துட்டு" அவனை விட்டு விலகி அமர்ந்தவள் கூற,

அதுக்கு ஏன் அழனும் என்று இவன் யோசித்துக் கொண்டே அவளருகில் அமர,


"இன்னிக்கு ஏதோ சிக்கன் ரெசிபி, சாம்பார், ரசம், மீன் வறுவல்லாம் செய்றாங்கலாம். எனக்குச் சுத்தமா சமைக்கத் தெரியாது எழில். அம்மா அத்தைகிட்ட என்ன சொல்லி வச்சாங்களோ தெரியலை" இவள் கூறி முடிப்பதற்குள், வாய்விட்டுச் சிரித்திருந்தான் எழில்.


"சமைக்கத் தெரியாததுக்கா இந்த அலப்பறை செஞ்ச" என்று கூறி மீண்டும் இவன் சிரிக்கவும்,

அவள் கண்களில் மீண்டும் நீர் உற்பத்தி ஆகியது.


"எனக்கு ரொம்ப இன்செக்யூர்டா ஃபீல் ஆகுது எழில்" அழுது கொண்டே அவள் கூற,


சட்டெனச் சிரிப்பை நிறுத்தியவன், "ஹே என்னமா... ஏன் அப்படித் தோணுது உனக்கு" அவள் கைகளைப் பற்றியவாறு கேட்டான்.


"புது வீடு! புது இடம்! புது ஆட்கள்! நான் என்ன செய்யனும் இங்க? ஏதாவது தப்பா செஞ்சிருவேனோ! இப்படிப் பலவிதமா யோசிச்சுப் பயம் ஆகுது. எனக்கு என்னமோ நான் ஒரு திக்கு தெரியாத காட்டுல மாட்டிக்கிட்ட ஃபீல். எனக்கு அப்பா வேணும்னு அழனும் போல இருக்கு"

கண்களின் நீரை துடைத்துக் கொண்டே அவள் கூற,


அவளின் முகத்தைத் தனது மார்பில் சாய்த்து அணைத்துக் கொண்டான்.

தனது மனத்தில் இருந்த இனம்புரியா கலக்கத்திற்கு, ஒற்றை ஆறுதலாய் அவனைப் பற்றிக் கொண்டு அழுது தீர்த்தாள் இசையரசி.


"உன் குழப்பம் உன் கவலை எனக்குப் புரியுதுடா! இன்னும் என்னை நீ இன்னொரு ஆளா தான் பார்கிறங்கிறது எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு. இங்க நானும் அம்மாவும் மட்டும் தான். அப்பா நான் வேலை சேர்ந்த ஒரு வருஷத்துல இறந்துட்டாங்க. அம்மா ரொம்ப ஜாலி டைப். நீ உன் வீட்டுல இருந்த மாதிரி உன் இஷ்டபடி இங்க இருக்கலாம் சரியா" அவள் முகத்தைக் கையில் ஏந்தி கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அவன் கூற, வெகுவாகவே ஆசுவாசமடைந்திருந்தது அவளின் மனது.


"தேங்க்ஸ்" என்றாள்.


அவள் நெற்றியில் இதழ் பதித்தவன், "தேங்க்ஸ் அக்செப்டட்(accepted)" என்றான் இதழ் விரிந்த புன்னகையோடு.

அவனின் முத்தத்தில் அவனை அவள் அதிர்வாய் நோக்க, இனி நீ தேங்க்ஸ் சொன்னா இப்படித் தான் நான் உன்னைக் காம்ப்ளிமெண்ட் செய்வேன் என்றான் அழகாய் சிரித்து.

அவள் ஏதும் கூறாது தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.


"சரி வா கீழே போவோம்" அவளை அழைத்துக் கொண்டு கீழே சென்றவன்,


"அம்மாஆஆஆஆ" எனக் கூவிக் கொண்டே நேராய் தனது அன்னையிடம் போய் நின்றான்.


"காலைலயிலேயே என் பொண்டாட்டிய அழ வச்சிருக்கீங்க நீங்க" என்று இவன் கூறியதும்,

கண்ணின் மணி கீழே விழுந்து விடும் அளவுக்குக் கண்களை விரித்தவள் மனமோ,


"இவர் ஏன் இப்படிச் சொல்லிட்டு இருக்காரு. அத்தை தப்பா நினைச்சிக்கிட போறாங்க" என்று வெகுவாய்ப் பதற,


அவசர அவசரமாக அவனது சட்டையைப் பிடித்திழுத்து முகத்தை நோக்கியவாறு இடம் வலமாய்த் தனது தலையை ஆட்டினாள்.


அவளின் பதற்றத்தை ரசித்துச் சிரித்தவன், "அம்மாஆஆஆ நான் இங்க என்ன சொல்லிட்டு இருக்கேன். நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கீங்க" ஆர்வமாய் வேலை செய்து கொண்டிருந்த ஜெயந்தியை மீண்டும் வம்பிழுத்தான்.


"ம்ப்ச் என்னடா வேணும் உனக்கு" எனச் சலித்துக் கொண்டே திரும்பி இருவரையும் பார்த்தவர், இசையரசியின் கலங்கிய விழிகளைக் கண்டு பதறியவராய் அவளின் தாடையைப் பற்றி,


"அழுதியாடா தங்கம்" எனக் கேட்டார்.

எழிலின் கைகளை உதறிவிட்டு இவரின் கைகளைப் பிடித்துக் கொண்ட இசையரசி, "அதெல்லாம் ஒன்னுமில்லை அத்தை" என்றாள்.

அவளின் செயலில் சிரித்தவன், "அம்மா, இசைக்கு சமைக்கத் தெரியாதுமா. நீதான் சொல்லிக் கொடுக்கனும்"


"அதுக்காமா அழுத! நம்ம வீட்டுல வேலை செய்ய ஆளிருக்கு. அவங்க கூடமாட உதவி செய்வாங்க. இருந்தாலும் சமையல் நம்ம தான் செய்யனும். என் கூட இருந்து கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கோமா" அவள் கன்னம் தடவிக் கூறியவராய்,


"வா முதல்ல நான் உனக்குக் காபி போட சொல்லி தரேன். உன் புருஷனுக்குக் காலைல காபி இல்லாம இருக்க முடியாது" என்றார்.

"டேய் நீ போய் உட்காருடா. உன் பொண்டாட்டிக்கு சூப்பரா காபி போடறது எப்படினு நான் சொல்லி கொடுக்கப் போறேன்" என்றவர் கூறியதும்,


"இன்னிக்கு நான் இசைக்குக் காபி போட்டு தரேன்" என்றவனாய்

"இசை உனக்குக் காபி பிடிக்கும் தானே" எனக் கேட்டான்.


ஆமெனத் தலையசைத்தவள், "உங்களுக்குச் சமைக்கத் தெரியுமா?" ஆச்சரியமாய்க் கேட்டாள்.


"ம்ம்ம் கொஞ்ச நாள் வெளியூர்ல வாழ்ந்த பேச்சலர் லைஃப்ல கத்துகிட்டேன்" என்றவன் அவளிடம் பேசிக் கொண்டே, தனது தாய்க்கு, மனைவிக்கு, தனக்குமென மூவருக்குமாய்க் காபியைக் கலந்தவன், வாங்க எல்லாரும் சேர்ந்து குடிப்போம் எனக் கூறி வரவேற்பறையில் அமர வைத்து காபிக் கோப்பையை அவரவர் முன்பு வைத்தான்.


ஒரு மிடரு பருகியவளின் வாய் தானாய் வாவ் என்று அசைக்க, "காபி ரொம்ப அருமையா இருக்கு எழில்" பாராட்டினாள்.


"தேங்க்யூ தேங்க்யூ" என்றான்.


அவன் தேங்க்ஸ் என்றதும், தேங்க்ஸ்கான அவனின் முந்தைய செயல் அவளுக்கு நினைவு வர முகம் செம்மையுற்றது.


அவளின் செம்மையில் வெம்மையானவன், "நான் மட்டுமில்லை நீ கூடக் காம்ப்ளிமெண்ட் செய்யலாம் இசை. நான் வேண்டாம்னு சொல்ல மாட்டேன்" அவள் காதினில் உரைத்தான்.


அவனின் கூற்றில் கூச்சங்கொண்டு நாணியவளாய் அங்கிருந்து அகன்றாள் இளமயில்.


அன்றிரவு எழில் தனது திருமணத்திற்காக வெளியூரிலிருந்து வந்திருந்து தனது மாமா வீட்டில் தங்கியிருந்த விருந்தினர்களை ரயிலில் ஏற்றி விட, ரயில் நிலையம் சென்றிருக்க, இசையரசி அவர்களது அறையில் தனித்து அமர்ந்திருந்தாள்.

அவளின் மனம் எழிலைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. 


'அவர் பக்கத்துல இருக்கும் போது எல்லாக் கவலையையும் மறக்கடிச்சிடுறார்ல'


காலையில் இசையரசி, தான் பாதுகாப்பற்ற மனநிலையில் இருப்பதாய் உரைத்த நேரத்திலிருந்து, அவளின் ஒவ்வொரு செயலையும் கவனித்து அவளுடனே இருந்து அவ்விடத்தை அவளுக்கு வெகு பரிட்சையமான இடமாக, அவளுக்கு வசதியான, மனத்திற்கு இதமான, ஆறுதலான இடமாக மாற்ற தேவையானவற்றைச் செய்து கொண்டிருந்தான் எழில்.


தனக்காக அவன் பார்த்துப் பார்த்துச் செய்யும் ஒவ்வொரு செயலும் வெகுவாய்ப் பிடித்திருந்தது அவளுக்கு.


எழிலை எண்ணி ஏகாந்த மனநிலையில் இருந்தவளுக்கு, அதைக் குலைக்கும் விதமாய் வந்தது அந்த அழைப்பு.


யாரெனக் காணாது எழில் தான் அழைக்கிறானென எண்ணி ஆசையாய் ஆர்வமாய் அக்கைப்பேசியை எடுத்தவளுக்கு, மறுபுறத்திலிருந்து வந்த குட்டிம்மா என்ற சொல் பழைய விஷயங்களை நினைவு படுத்த,


"நான் தான் உங்ககிட்ட பேச விரும்பலைனு பல முறை சொல்லிருந்தேன்ல" கூறிக் கைப்பேசியை அணைத்திருந்தாள்.

தனு தந்தையிடம் இவ்வாறு பேசியதே ஒரு புறம் மனத்தை வதைக்க, மறு புறமோ அனந்தனின் நினைவுகள் வந்து சூழ,


"எனக்கு யாரும் வேண்டாம். யாரும் என் மேல பாசமா இருக்க வேண்டாம்" கட்டிலில் படுத்து அழவாரம்பித்தாள்.

தன்னைத் தேற்றிக் கொண்டு எழுந்து அமர்ந்தவள், தனது பொருட்கள் அடங்கிய பையைத் திறந்து அதிலிருந்த தனது கையேட்டினை எடுத்தாள்.


மனத்தின் பாரம் தாங்கவியலாது, அதை எவரிடமேனும் பகிர்ந்து கொள்ள அவளின் மனம் வெகுவாய் துடிக்க, கையேட்டினை எடுத்து எழுத ஆரம்பித்தாள்.


அவள் கையேட்டிலிருந்து...


அப்பா எப்பவும் எந்த ஆம்பளை பசங்களையும் நம்பாதனு சொல்லி வளர்த்தனாலயே அப்பாவைத் தவிர வேறெந்த ஆண்கள்கிட்டயும், உறவினர்கள், சொந்ததிலிருக்க அண்ணன் தம்பிகள்னு யாரு கிட்டயும் நெருங்கி பழகாத நான், எப்படி இவன் கிட்ட பழகினேங்கிறது எனக்கே புரியாத புதிர் தான்.


ஆனா அவனோடு பேச பேச அப்பாவை போல் ஒருவன்ங்கிற எண்ணத்தை என் மனசுல விதைச்சான். அவ்ளோ நம்பிக்கை அவன் மேல வந்தது.


இவன் என் வாழ்வில் வந்தது கடவுளின் அருளாசினு நான் நினைச்சு பூரிக்காத நாளில்லை. 

முதன் முதலாய் அவனை நான் மீட் செஞ்சது பஸ் ஸ்டாப்ல காலேஜ் பஸ்காக அப்பாவோட வெயிட் செஞ்சிட்டிருந்த நேரத்துல தான்.


எங்க காலேஜ் பஸ் வந்ததும், நான் பஸ்ல ஏறுறதுக்காகப் பஸ் கிட்ட வந்த டைம்ல, இவனும் என் பின்னால வந்து நின்னான். 


நான் பஸ்ல ஏறினதும், அவனும் பின்னாலயே ஏறினான். சீட்ல உட்காரும் போது தான் அவன் முகத்தை முழுசா பார்த்தேன்.

'ஃபர்ஸ்ட் இயர் ஆர் செகண்ட் இயரா இருக்கும் போலனு' மனசுல நினைச்சிக்கிட்டேன்.


அன்னிக்குச் சாயங்காலம் நான் இறங்கும் போது அவனும் கூடவே இறங்கினான். 


அப்பா எப்பவும் போல என்னை கூட்டிட்டு போக எனக்காக வெயிட் செஞ்சிட்டு இருந்தாங்க.

அவன் இறங்கி நடந்து போய்ட்டான்.

அதுக்கப்புறம் அவனைப் பெரிசா நான் கவனிச்சது இல்லை. ஆனா ஆறு ஏழு மாசம் கழிச்சி என் காலேஜ் ஃப்ரண்ட் நித்யாகிட்ட அவனைப் பத்தி பேசிட்டு இருந்தேன்.


"என் ஸ்டாப்ல என் கூட ஒரு பையன் பஸ்ல ஏறுவான் நித்யா. ரொம்ப நல்ல பையன்டி" நான் சொன்னதும் ஆச்சரியமா என்னைப் பார்த்தாள்.


"நீ பசங்களைப் பத்திலாம் பேச மாட்டியே? நீ ஒரு பையனைப் பத்தி பேசுறது ஆச்சரியமா இருக்கு"

"நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கலை. அதுக்குள்ள உனக்கென்ன ஆச்சரியம்"


"சரி யாரெந்த பையன்? என்ன பேரு?"


"எதுவும் தெரியாது"


"எதுவுமே தெரியாத ஒரு பையனை எப்படி நல்லவன்னு சொல்ற? அநியாயத்துக்குக் குழப்புறியேடி"


"ஹ்ம்ம் அவனைப் பத்தி எதுவும் தெரியாது. ஆனா அவன் ரொம்ப நல்ல பையன்"


"அடியேய் கொல்ல போறேன் உன்னை. ஒழுங்கா முழுசா சொல்லி தொலை"


"நான் பஸ் ஏறும் போது ஒரு சமயம் அவன் முன்னாடி ஏறட்டும்னு நான் ஏறாம இருந்தேன்டி. ஆனா அந்தப் பையன் நான் ஏறனும்னு என்னையவே பார்த்துட்டு இருந்தான். நான் சேஃப்பா ஏறனும்னு நினைக்கான்னு புரிஞ்சுது. ஏன்னா நாங்க இரண்டு பேரு தான் அந்த ஸ்டாப்ல ஏறுவோம். அவன் ஏறின பின்னாடி நான் ஏறினா உடனே டிரைவர் பஸ்ஸை எடுத்துடுவாரு. இதுவே நான் முதல்ல ஏறினா பஸ் எடுக்கிறதுக்கு முன்னாடி நான் ஆல்மோஸ்ட் சீட் கிட்ட போய்டுவேன்.

அதே மாதிரி இறங்கும் போதும் அவன் முன்னாடி இறங்கி, வண்டி எதுவும் நான் இறங்கும் போது க்ராஸ் செய்யாத மாதிரி கை காமிச்சு நின்னுப்பான். 


ஒரு தடவை ரொம்ப மழை பெஞ்சப்ப, டிரைவர் கிட்ட பஸ் ஸ்டாப் நிழற்குடைக்கு நேரா பஸ்ஸ நிறுத்த சொல்லி, அவன் முதல்ல இறங்காம என்னை இறங்க சொல்லி வழி விட்டான்.


ஆனா இது வரை அவன் என் முகத்தைக் கூட நேரா பார்த்ததில்லை.  இது நான்னு இல்லை. இந்த இடத்துல யாரா இருந்தாலும் அவன் இப்படித் தான் செய்வான். நம்ம கூட ஒரு பொண்ணு இருக்கு. அவளோட சேஃப்டிய நம்ம பார்த்துகிடனுங்கிற உயர்ந்த குணம் அது. 


ஆனா இது வரை அவனோ நானோ ஒரு வார்த்தை பேசிக்கிட்டது இல்ல.  ஆனா இந்தக் காலத்துல இப்படி ஒரு பையனானு ஆச்சரியபடாம இருக்க முடியலைடி"


"ஹ்ம்ம் ஆச்சரியமா தான் இருக்கு.  இப்படி நீ வாயார ஒரு பையனை புகழுறதை பார்த்து எனக்கு ரொம்பவே ஆச்சரியமா தான் இருக்கு. யார்னு விசாரிச்சிடலாம்"


"அய்யோ அதுலாம் ஒன்னும் தேவையில்லை. அவன் என் வாழ்க்கையில் வரனும்னு இருந்தா எப்படினாலும் வாழ்க்கை நம்மளை அவனுக்கு அறிமுகம் செய்து வச்சிடும். அப்படி நடந்தா பாத்துக்கலாம்"னு சொல்லிட்டு அதோட இதை மறந்தே போய்ட்டேன்.

ஆனால் வாழ்க்கை மறவாது அவனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது.


*****


எழிலரசன் அறைக்குள் நுழைந்ததும் தனது கையேட்டினை மூடி வைத்தவள், அவனை நோக்கி மென்மையாய் சிரித்தாள்.


"என்ன செஞ்சிட்டிருந்தடா இசை? நான் இல்லாம போர் அடிச்சிதா?"

கேட்டுக் கொண்டே அவளை நோக்கி வந்தவன் அவளின் கையிலிருந்த கையேட்டினைப் பார்த்து,


"ஓ உனக்கு டைரி எழுதுற பழக்கம் இருக்கா? வெரி குட் ஹேபிட்" என்றான்.


அதற்கும் அமைதியாய் அவள் சிரிக்க, "சாப்பிட்டியா இசை?"  என்று கேட்டான்.


"ஹ்ம்ம் உங்க கூடத் தானேங்க சேர்ந்து சாப்பிட்டேன்" என்றாள்.


"சரி தூங்கலாமா இல்ல கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாமா?" எழில் கேட்க,


"உங்க விருப்பம்" என்றாள்.


"சரி உட்கார்! நான் ரிஃபெரஷ் ஆகிட்டு வந்துடறேன்" என்றவன் பட்டெனச் சென்று சட்டெனத் திரும்பி வந்தான்.


"ஹ்ம்ம் நீ புடவைல ரொம்ப அழகா இருக்க! உனக்கு புடவை கட்டிறது அவ்ளோ கம்ஃபெர்ட் இல்லனா உனக்கு எது விருப்பமோ அப்படி நீ இருக்கலாம். காலைலயே உன்னை புடவைல பாரத்ததும் சொல்லனும்னு நினைச்சேன்"


அவன் பேசிக் கொண்டே போக, "அது ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் வாரத்துல டூ ஆர் த்ரீ டேஸ் சேரி கட்டிக்கிறேன். எனக்குப் புடவை கட்ட ரொம்பப் பிடிக்கும்" என்றாள்.


"ஓகே ஆஸ் யுவர் விஷ் (as your wish)"

"சரி நாளைக்கு நாம குல தெய்வம் கோயிலுக்குப் போகனும். அதுக்கு இங்கிருந்து 12 மணி நேரம் டிராவல் பண்ணனும். அதனால சீக்கிரம் தூங்குவோம்"


அவள் விட்டால் போதுமெனப் படுத்துவிட, விட்டத்தை நோக்கி படுத்திருந்தவன்,


"உனக்கு என்கிட்ட கேட்க எதுவுமே இல்லையா இசை?" என்றான்.


கட்டிலின் ஓரமாய்ச் சுவற்றை நோக்கிப் படுத்திருந்தவள் சட்டெனத் திரும்பி இவனைப் பார்த்தாள்.

'அவன் மனம் கலங்குகிறானோ' இவ்வெண்ணம் இவளின் இதயத்தில் நச்சென ஒரு வலியை உண்டு செய்ய,


அவன் முகத்தை நோக்கித் திரும்பிப் படுத்தவள், அவன் முக உணர்வைப் படிக்க முயன்றாள்.


அவளை நோக்கி திரும்பிப் படுத்தவன், "சொல்லு இசை! என்கிட்ட கேட்க உன்கிட்ட ஒன்னுமே இல்லையா?"


அவளின் மூளையில் ஒரு மணியடிக்க, "ஏன் இல்ல! இருக்கே... நான் கேட்டா கொடுத்துடுவீங்களா?" அவள் குறும்பு முகப் பாவனையில் துடுக்காய்க் கேட்க,


பழைய இசையரசி திரும்பி வருவதாய்த் தோன்றியது அவனுக்கு.

அதுவே பெரும் நிம்மதியை அளிக்க,

"என் பொண்டாட்டி என்ன கேட்டாலும் நான் கொடுப்பேன்" என்றவனாய் சட்டென எழுந்து அமர்ந்தவன், "அம்மா தாயே அதுக்காக மௌன ராகம் மோகன் மாதிரி டிவோர்ஸ் வேணும் கேட்டுடாதம்மா" பதற்றமாய் உரைக்க,


அவனின் இவ்வார்த்தையில் ஹா ஹா ஹா வெனச் சிரித்துக் கொண்டே எழுந்து கால் முட்டியை கட்டிக் கொண்டு அமர்ந்தவள்,


அவன் தாடையைப் பிடித்து "இந்தக் குட்டி தாடி வேணும்" என்றாள்.

இவன் பேவென முழிக்க, மீண்டும் வாய்விட்டு சிரித்தவள், "எனக்குக் குறுந்தாடி பிடிக்காது. அதனால தான் சொன்னேன்" என்றாள்.


ஓ வென ஒற்றை வார்த்தையில் பதிலளித்தவன், "எடுத்துட்டா போச்சு" என்றான்.


"நிஜமா" விழிகளை விரித்துக் கேட்டாள்.


அவளின் கொழு கொழு கன்னத்தைப் பிடித்து ஆட்டியவன், "என் புஜ்ஜிம்மா கேட்டு செய்யாம இருப்பேனா? அதுவும் முதன் முதலாகக் கேட்டதாச்சே" என்று கூற,


"சரி நான் தூங்குறேன்" நெடு நாட்களுக்குப் பிறகு மிகுந்த நிம்மதியான துயிலுக்குள் மூழ்கினாள் இசையரசி.


எழிலரசனுக்குத் தான் தூக்கம் கண்களை எட்டாதிருந்தது.


'இவளுக்கு என்ன பிரச்சனையா இருக்கும்? என்னோட தொடுகை அவளுக்குப் பிடிக்காத மாதிரியும் தெரியலை. அவளும் ரொம்பவே கேஷ்யூலா எடுத்துகிட்டு தான் பேசுறா, பழகுறா! ஆனா நான் ஆபிஸ்ல முதன் முதலா பார்த்த அந்த இசை இல்ல இப்ப! அப்ப எப்பவும் சிரிச்சிக்கிட்டே, மனசுல துளி கவலையும் இல்லாம மனசுல பட்டதெல்லாம் பேசுகிட்டு துள்ளி திரிஞ்சிக்கிட்டு இருந்தாளே! அந்த இசையைத் தானே நான் காதலிச்சேன். ஆனா இப்ப எதுக்கெடுத்தாலும் அழுதுகிட்டு சோகமாகிட்டுல இருக்கா! இவ பிரச்சனையைக் கண்டுபிடிச்சி இவளை முன்னை போலக் கொண்டு வரனும். அது தான் புருஷனா என்னுடைய முதல் வேலை'

மனத்தோடு எண்ணிக் கொண்டவன் திரும்பி இசையைப் பார்க்க, ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் அவள்.


'ஆமா அவ பிரச்சனை என்னனு நீயே அவகிட்ட நேரடியா கேட்டா என்ன?' இவன் மனசாட்சி இவனிடம் கேள்வி கேட்க,


'கரெக்ட் தான். ஆனா யூ சீ...  நான் 90ஸ் கிட்! என்னை மாதிரி 90ஸ் கிட்க்குலாம் ஒருத்தங்க பிரச்சனையை என்னனு சொல்லுங்கனு அவங்க கிட்டயே கேட்டு நச்சரிக்கத் தெரியாது. அது அவங்க பர்சனல்ல மூக்கை நுழைக்கிற ஃபீல் வரும். இல்லனா அவங்க மறந்திருக்கப் பிரச்சனையைத் திரும்பக் கிளறி விடுற ஃபீல் வரும்'


அவனை முறைத்த அவனின் மனசாட்சி, 'ஆனா கிடைக்குற கேப்லலாம் ரொமேன்ஸ் பண்றியே மேன் நீ. 90ஸ் கிட்ஸ்க்கு தான் பொண்ணுங்களைக் கரக்ட் பண்ண தெரியாதுனு பொதுவா பேசிப்பாங்களே! ஆனா நீ தான் செம்மயா பெர்ஃபார்ம் பண்றியே' கிண்டலாய் கூற,


'ஹலோ 90ஸ் கிட்ஸ்க்கு தெரியாத பொண்ண தான் கரெக்ட் பண்ண தெரியாது. பொண்டாட்டியை எப்படிக் கரெக்ட் பண்றதுனு நல்லாவே தெரியும்' இவன் மனசாட்சிக்கு பதிலுரைக்க,


"பாரத்துடா அவளா அவ பிரச்சனையைச் சொல்லட்டும்னு கிழவனாகிட போற நீ"


'அதெல்லாம் நாங்க பார்த்துப்போம்.  நீ ஒன்னும் கவலைப்படத் தேவை இல்லை' மனசாட்சியை மனதிற்குள் பூட்டி வைத்தவன்,


இவளை பற்றிய பழைய நினைவில் மூழ்கிப் போனான்.


அன்றைய அலுவலக நாளுக்குப் பிறகு மறுநாள் அவளைக் காண வெகு ஆர்வமாய்ச் சென்றவனுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.

மறுநாள் காலை விரைவாக அலுவலகத்திற்குச் சென்றவன், அவளின் வரவிற்காகக் காத்திருந்தான்.


காலை பத்து மணியளவிலும் அவள் வராதிருக்க, அதற்கு மேல் பொறுமை காக்க முடியாது அவள் முந்தைய நாள் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று அவளுடைய க்ளைண்ட் மேனேஜரிடமே நேரடியாய் கேட்டு விட்டான்.


அவனை மேலும் கீழுமாய்ப் பார்த்த அந்த மேனேஜர், முதலில் கூற மறுக்க, இவன் அவளைத் திருமணம் செய்யவிருப்பதைக் கூறிக் கேட்ட பிறகே கூறினார்.


அவளது லீட் பாலாஜிக்குத் தற்போது க்ளைண்ட் அலுவலகத்திற்கு வர இயலாத நிலையாதலால் அவர்கள் இந்த வாரம் வர மாட்டார்கள் என்றும், அடுத்த வாரம் வர வாய்ப்பிருப்பதாகவும் கூறினாரவர்.


காலை அவன் முகத்தில் இருந்த உற்சாகம் முழுதாய் வடிந்த நிலையில் அவன் வந்து தனது பணியிடத்தில் அமர, அவனது அலுவலகத் தோழமைகள் அவனைச் சூழ்ந்துக் கொண்டனர்.


"என்னடா நடக்குது இங்க? நேத்து எங்க கூடச் சாப்பிடவும் வரலை. இப்ப என்னடானா அந்தப் பொண்ணோட மேனேஜர் கிட்டயே போய் அந்தப் பொண்ணைக் கட்டிக்கப் போற பொண்ணுனு சொல்லிருக்க" அவன் சகாக்கள் கேட்கவும் அவர்களை ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தவனாய்,


"அடேய்களா! இப்ப தானேடா அவர்கிட்ட பேசிட்டு வந்து உட்காருறேன். அதுக்குள்ள உங்களுக்கு எப்படி நியூஸ் வந்துச்சு" எனக் கேட்டான்.


"ஆல் டீடெய்ல்ஸ் வீ நோ(All details we know)" கோரசாய் கூவினர் அனைவரும்.


"அய்யோ இனி என்னை கிண்டல் பண்ணியே சாவடிப்பாங்களே!" இவன் மைண்ட்வாய்ஸ்ஸில் கதற,

"அரசன் அரசியைத் தேடி போன கதை தெரியுமாடா உனக்கு" என்று ஒருவன் ஆரம்பிக்க,


"அய்யய்யோ ஆரம்பிச்சிட்டாய்ங்களே" வடிவேலு மாடுலேஷனில் கூறியவன்,


"போய் வேலையைப் பாருங்கடா" அனைவரையும் அனுப்பி வைத்தான்.

அன்றிலிருந்து அனுதினமும் இசையை நினைக்காது அவன் இரவும் முடிந்ததில்லை பொழுதும் விடிந்ததில்லை. 


அவளுடன் அவன் கல்லூரியில் வினவிய சிறு சிறு நினைவுகளையும் சிந்தையில் மறுபதிப்புச் செய்து ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தான்.


நாட்கள் நகர நகர அவனின் அலுவலகத்திற்கு அவள் வராது போயினும் அவனின் இதயத்தில் சட்டமாய் அமர்ந்துக் கொண்டாள்.


அவளைப் பற்றிப் பல கனவுகளை மனதிற்குள் உருவாக்கிக் கொண்டான்.


அவளில்லாது வோறொருவரை திருமணம் செய்வது என்பது அவனுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் என்றளவிற்கு அவனின் மனம் அவளின் நினைவில் சுழன்றிருந்தது.


ஒரு மாதமான நிலையில் தனது தாயிடம் சென்றவன்,

"அம்மாஆஆஆ எனக்கு இசையரசியைக் கட்டி வைக்கிறியா மா" மனத்தின் ஆசையைத் தாயிடம் இவ்வாறாக உரைத்திருந்தான்.

"என்னடா! ஆட்டையும் மாட்டையும் தொழுவத்துல கட்டி வைக்கிற மாதிரி கேட்கிற" கேலியாய்க் கேட்டாராவர்.

"அம்மாஆஆஆ இசையை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குமா. அவ இல்லாத வாழ்க்கைனு யோசிக்க முடியலைனுலாம் சொல்ல மாட்டேன். ஆனா அவ தான் என் மனைவியா வேணும்னு மனசு ரொம்பவே கனவு கோட்டை கட்டி கற்பனை குதிரைல பறக்க ஆரம்பிச்சிட்டுமா. இது இப்படியே போனா காதலா உருமாறி ரொம்ப வலியை குடுக்க ஆரம்பிச்சிடும். இப்பவே அவ எனக்கில்லனு தெரிஞ்சா, மனதுக்குப் பெருத்த ஏமாற்றமா தான் இருக்கும்" இவன் தீவிரமாய்த் தனது விருப்பத்தை ஜெயந்தியிடம் கூறிக் கொண்டிருக்க,


அவனின் தீவிரமான முகப் பாவனையைச் சற்றாய் நோக்கியவர், பாச மிகுதியில் அவனின் தலை முடியைக் கலைத்துக் கொண்டே,


"நான் பாகுபலி சிவகாமியம்மா இல்லடா... இவ தான் உன் மனைவினு வாக்கு கொடுத்து, இதுவே என் கட்டளை! என் கட்டளையே சாசனம்னு அந்தப் பொண்ணை அடிமைப் போல நினைச்சி, அவ உணர்வுக்கு மதிப்பளிக்காம இருக்கிறதுக்கு" ஒரு நொடி புரியாது முழித்தவன்,


மறுநொடி "அம்மாஆஆஆ" எனச் சிணுங்கலாய் கூறிச் சிரிக்கவாரம்பித்தான்.


அவனின் சிரிப்பில் இணைந்து சிரித்தவர், "நான் விளையாட்டுக்கோ இல்ல உன்னை கிண்டல் செய்றதுக்கோ சொல்லலைடா. உனக்குப் பிடிச்சிருந்தாலும், அந்தப் பொண்ணுக்கு உன்னை பிடிச்சிருக்கனும்லடா. அவங்க வீட்டிலயிருந்து எந்தத் தகவலும் இன்னும் வரலையே. மாமாவை அவங்க கிட்ட சீக்கிரம் பேச சொல்றேன். நீயே தெளிவா தான் இருக்க! இருந்தாலும் சொல்றேன் காதல் அளவுக்கு வளரவிடாம இரு! அப்புறம் அது வலியை தான் கொடுக்கும்" என்றார்.


தாயின் மடியில் தலை சாய்த்துப் படுத்தவன், "ஹ்ம்ம் புரியுது மா. ஐ வில் டேக் கேர்" என்றான்.


இரண்டு வாரங்கள் கழித்து இவனின் தாய் இசையரசியின் வீட்டில் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், மறுநாள் பெண் பார்க்க அழைத்திருப்பதாகவும் கூற, ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தவன், அந்த மனநிலையிலேயே அலுவலகத்திற்குச் சென்றான்.


அலுவலகத்தில் படிக்கட்டில் இசையரசி பற்றிய கனவில் உலாவிக் கொண்டே பொறுமையாய் இவன் ஏறிக் கொண்டிருக்க, படிக்கட்டில் மேலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்த எழிலரசனின் அலுவலகத் தோழன், "அரசன் சார்! உங்க அரசி இன்னிக்கு ஆபிஸ் வந்திருக்காங்க" கூறிக் கொண்டே சென்று விட்டான்.


"வாவ்" என உற்சாகத்தில் துள்ளியவன்,


அவளைக் காணும் ஆவல் பொங்க இரு இரு படிக்கட்டுகளாய் தாவிச் சென்றான்.


அங்கு அவன் கண்டது முதன் முறை துள்ளமும் குறும்புமாய் இருந்த இசையரசியின் எதிர்பதமாய்ச் சோகமே உருவாய் அமர்ந்திருந்த இசையரசியைத் தான்.


-- தொடரும்

1 comment

1 comentario

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
Invitado
21 feb
Obtuvo 5 de 5 estrellas.

ஏன் சோகம்?

Me gusta
© KPN NOVELS COPY PROTECT
bottom of page