top of page

Konchum Elil Isaiye - 2

அத்தியாயம் 2


திருமண நாளின் சடங்குகள் அனைத்தும் முடிந்து அன்றைய அவர்களுக்கான இரவில், அவனது அறையினுள் சாளரத்தின் வழியாய் நிலவினை நோக்கியவாறு நின்றிருந்தாள் இசையரசி.


திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் மனத்திற்குள் முட்டி மோத, இன்றைய இரவின் கனவைச் சுமக்க வேண்டியவளின் கண்களில் வலி நிறைந்த நீர் வழிந்தோடின. அதையும் உணராது கண்கள் வெறிக்க நிலவினைப் பார்த்திருந்தாள்.


'நீ எப்படி இருக்கடா அன்னு? எங்கயிருக்கடா? எப்படிலாம் என் கல்யாணம் நடக்கனும்னு கனவு கண்டுட்டிருந்த நீ! இப்ப எப்படி நடந்து முடிஞ்சிருக்கு தெரியுமா!' மனத்தோடு அனந்தனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.


'உன்னை நினைக்கும் போதே மனசெல்லாம் வலிக்குதேடா! அப்பா என்னைப் புரிஞ்சிக்காம போய்ட்டாங்களேடா' மனத்தின் வலி கண்ணில் மேலும் நீரை உற்பத்திச் செய்ய,


தானிருக்கும் இடத்தைச் சுற்றிப் பார்த்தவள், தன்னைச் சற்றுச் சுதாரித்து நிதானித்துக் கொண்டு கண்களைத் துடைத்தவள், அங்கிருந்த கட்டிலில் சென்று அமர்ந்தாள்.


அன்றைய இரவின் பயனை, அவளின் மனம் அவளுக்கு உணர்த்த முனைய அப்பொழுது தான் அங்கிருக்கும் அலங்காரம் அவளின் கண்களை எட்டியது.


அவளின் மனம் எழிலைப் பற்றி எண்ணத் துவங்கிய நேரம், அவ்வறையின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான் எழிலரசன்.


இருபத்து எட்டு வயது ஆண்மகனான அவனுக்கு விடலைப் பருவ பையனின் பயம், காதலை முதன் முதலாய் உரைக்கும் நேரம் ஏற்படும் தவிப்பு, படபடப்புயென அனைத்தும் அவனை இன்று சூழ்ந்திருந்தன.


அவன் நுழைந்ததும் அவளின் உள்ளம் நடுங்க உள்ளுக்குள் படபடப்பு ஏற்பட, தலைக் கவிழ்ந்து அமர்ந்து கொண்டாள்.


அவளருகில் அமர்ந்தவன் அவளின் கையைப் பாந்தமாய்த் தன் கைக்குள் வைத்து வருட, இவள் சற்றாய் நெளிந்து உட்கார, அவளின் நெளிதலில் மென்னகைப் புரிந்து கையை இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டவன், மனத்தின் படபடப்பைப் புறந்தள்ளிப் பேசவாரம்பித்தான்.


"நேத்து நைட்லருந்து உன்னை பாடாப் படுத்துறாங்கல்ல! நேத்து எங்கேஜ்மெண்ட்! அது முடிஞ்சு தூங்குறதுக்குள்ள, விடியற்காலைல கல்யாணம்னு எழுப்பி விட்டு அலங்காரம் செஞ்சி, கல்யாணத்திற்குப் பிறகு ரிசப்ஷன்னு அரை நாள் நிக்க வச்சி, இப்ப இங்க வந்து இப்படி உட்கார வச்சிருக்காங்க. ரெஸ்ட்டே இல்லாம அவ்ளோ அலங்காரத்துலயும் உன் கண்ல அவ்ளோ சோர்வு தெரிஞ்சது இசை. இன்னிக்கு தான் இது நடக்கனும்னு இல்ல" 


அவன் இவ்வார்த்தையைக் கூறிய நொடி அவள் உடலின் இறுக்கம் தளர்வதை, அவளின் கைகளில் உணர்ந்த எழில்,


"ரிலாக்ஸ்டா! நீ உனக்குப் பிடிக்குது பிடிக்கலை எதுனாலும் என்கிட்ட ஃப்ரேங்கா சொல்லலாம். உனக்குப் பிடிக்காத விஷயத்தை எனக்குப் பிடிக்குதேங்கிற காரணத்துக்காக நீ செய்யனும்னு எந்த அவசியமும் இல்ல சரியா" என்றவன் கூறியதும் அவளின் முகம் சற்றாய்த் தெளிவதைக் கண்டவன் மேலும் தொடர்ந்தான்.


"உனக்கும் உங்கப்பாக்கும் இடையில ஏதோ சண்டைனு உங்களைப் பாரத்ததுலயே தெரிஞ்சிது இசை"


சட்டெனத் தலை நிமிர்த்தி அவன் முகத்தை அவள் பார்க்க,


அவளின் விரிந்த விழி பார்வையில் மென்னகைப் புரிந்தவன், "அதான் சீக்கிரம் கல்யாணம் செய்யலாம்னு உங்கப்பா சொல்லவும் நான் ஒத்துக்கிட்டேன். எப்படியும் நம்ம இரண்டு பேரும் தான் கல்யாணம் செய்துக்கப் போறோம்னு முடிவாகிட்டு. அது ஒரு வாரத்துல நடந்தா என்ன, ஒரு மாசத்துல நடந்தா என்னனு தான் ஒத்துக்கிட்டேன். அதுவுமில்லாம இந்தச் சூழல்ல உனக்கு நான் ஆறுதலா இருக்கனும்னு தோணுச்சு. நீ என்கிட்ட உன் பிரச்சனையைப் பத்தி எப்ப சொல்லனும்னு நினைக்கிறியோ அப்ப சொல்லலாம். நான் கம்பெல்லாம் செய்ய மாட்டேன்"


இன்னும் அவனது கை அவளின் விரல்களை வருடி விளையாடிக் கொண்டிருந்தது.


'நம்ம பிரச்சனைய இவரிடம் சொல்லிடலாமா' என்றவள் எண்ணிய நேரம், 'அப்பாவே என்னை என்நிலையைப் புரிஞ்சிக்கலை! இவர் புரிஞ்சிப்பாருனு எப்படி நான் நம்புறது' அவளின் மூளை உரைக்க,


அவளின் முகத்தில் கலவையான உணர்வினைக் கண்டவன், "ஏதாவது பேசு இசை. நீ என்ன நினைக்கிறியோ அதைத் தாராளமா என்கிட்ட சொல்லலாம்" என்றான்.


அவனின் கண்களை நேராய் கண்டவள், "தேங்க்ஸ்" என்றாள். 

அவன் சட்டெனப் புருவத்தை உயர்த்தி எதற்கென வினவ,


"என் மனசு இப்ப கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிருக்கு. தேங்க்ஸ் ஃபார் யுவர் கைண்ட் வேர்ட்ஸ்(Thanks for your kind words)" உணர்ந்து உரைத்தாள்.


அவனின் முகம் சட்டெனச் சுருங்கி போனது.


"நான் உன் ஹஸ்பண்ட் இசை. No thanks and sorry between us. அப்படி என்னை compliment செய்யனும்னு நினைச்சீனா அதை வேறு பலவிதமா எனக்கு நீ உணர்த்தலாம்" குறும்பாய் சிரித்து அவனுரைக்க,


அவளின் மனத்தில் கிலிப் பிடிக்க, "நான் தூங்குறேன்" என்றவள் படுக்கப்போக,


"ஹே டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு படு" என்றான்.

"இல்ல பரவாயில்ல" என்றவள் படுத்ததும் உறங்கியும் போனாள்.


அவளினருகில் படுத்திருந்தவனுக்கோ உறக்கம் கண்களைத் தீண்டாதிருக்க, பின்னோக்கிச் சென்றது அவனின் மனம்.


சில மாதங்களுக்கு முன்பு...


பரபரப்பாய் அலுவலகத்திற்குக் கிளம்பிக்கொண்டிருந்த எழிலரசனிடம் வந்து நின்றார் அவனின் அன்னை ஜெயந்தி.


"அம்மா அம்மா! அந்த லேப்டாப் சார்ஜரை எடுத்து தாங்களேன்.  அப்படியே அதைப் பேக்லயே வச்சிடுங்களேன்" அங்குமிங்குமாய்த் தன்னறைக்குள்ளேயே ஓடியாடிக் கிளம்பியவன், தனது காலில் காலுரை அணிந்து கொண்டே தாயிடம் உரைத்தான்.


"அடேய் நான் என்ன சொல்ல வந்தேனு கூடக் கேட்காம நீ என்னை வேலை வாங்கிட்டு இருக்க" அவனை முறைத்தவாறு அவர் உரைக்க,


"சரி அதை எடுத்து வச்சிட்டே சொல்லுவீங்களாம்! நான் கேட்பேனாம். என் செல்ல அம்மால்ல" 


அவன் கொஞ்சலில் சிரித்தவர், "இப்படி ஐஸ் வச்சே என்னை ஏமாத்து" அவன் தலை முடியைக் கலைத்து விட, "மாஆஆஆ ஆபிஸ் போகும் போது கலச்சி விட்டுகிட்டு" தலையை அவன் மீண்டும் கோத,


"நான் அப்படித் தான் கலச்சி விடுவேன்" மீண்டும் மீண்டுமாய்க் கலைத்து விட்டார்.


எழிலரசனின் தலையைக் கலைப்பது அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம். எழிலிற்கு அறவே பிடிக்காத விஷயம். அவனை வெறுப்பேற்ற சில நேரம், பாசமிகுதியில் பல நேரமென அவ்வப்போது இதைச் செய்வார் ஜெயந்தி.


"அம்மா தாயே! நீங்க என்ன விஷயத்தைச் சொல்ல வந்தீங்களோ சொல்லுங்க. நான் பொறுமையா கேட்டுட்டே ஆபிஸ்க்கு போறேன்" 


அவரின் கைகளைப் பற்றிக் கட்டிலில் அமர வைத்தவன், தானும் அவரருகில் அமர்ந்து கொண்டான்.


"உன் மாமா, அதான் என் தம்பி இருக்கானே, அவன் உனக்கு ஒரு பொண்ணு பார்த்திருக்கானாம்.  இந்தா பாரு பொண்ணு போட்டோ! இப்ப தான் வாட்ஸப்ல அனுப்பினான்" அவர் புகைப்படத்தைத் தனது கைபேசியில் காண்பிக்க, பார்த்திருந்தவனின் முகம் ஆச்சரியத்தில் மின்னியது.


"ம்மா! இது... இந்தப் பொண்ணு... எனக்குத் தெரியும்மா" ஆச்சரியமாய் உரைத்தவன், "such a small worldல" எனக் கூற, ஜெயந்தி பேவென இவனைப் பார்க்க, அவரின் முகப் பாவனையில் சிரித்தவன்,


"என் கூடக் காலேஜ்ல படிச்ச பொண்ணுமா இது"


"ஹை அப்ப சூப்பர்டா. உனக்கு தான் அப்ப பொண்ணு பத்தி எல்லாமும் தெரிஞ்சிருக்குமே! பொண்ணு வீட்டுல ஓகேவானு கேட்க சொல்லவா" ஜெயந்தி ஆர்வமாய்க் கேட்க,


"ஆனா அம்மா, இந்தப் பொண்ணு ரொம்ப சைலன்ட்மா. நல்ல பொண்ணு தான் ஆனா ரொம்பப் பேசாது. எனக்கு கலகலனு பேசுற மாதிரி பொண்ணு தான் பிடிக்கும். அந்தப் பொண்ணு இருக்க இடம் எப்பவுமே சிரிப்பும் சந்தோஷமாய் இருக்கனும். அப்ப தான் நம்ம வாழ்க்கைல எது நடந்தாலும் காமெடி பண்ணிட்டு ஈசியா ஹேண்டில் பண்ணிட்டுப் போக முடியும்" அவன் மனத்தின் ஆசையை உரைக்க,


அவனை மேலும் கீழுமாய்ப் பார்த்த ஜெயந்தி, "அதான்டா உன்ன மாதிரி 90ஸ் கிட்ஸ்க்குலாம் இன்னும் கல்யாணம் ஆகாம சுத்திட்டு இருக்கீங்க" கிண்டலடிக்க,


"அம்மாஆஆஆ… என் ஆசை உனக்குக் கிண்டலா இருக்கா" பல்லை கடித்துக் கொண்டு கேட்டான்.


"பின்ன என்னடா! உன்கிட்ட இல்லாததுலாம் அவகிட்ட இருக்கனும்னு எதிர்பார்க்கிறது இல்ல வாழ்க்கை. இரண்டு பேரோட பாஸிட்டிவ் நெகட்டிவ் இரண்டையும் அக்செப்ட் பண்ணி அட்ஜஸ்ட் செஞ்சிட்டு வாழுறது தான் வாழ்க்கை"


"ம்ம்ம், சரி உன் விருப்பம்மா! அந்தப் பொண்ணுக்கு முதல்ல என்னை பிடிச்சிருக்கானு கேளுங்க. என் மேல அந்தப் பொண்ணுக்கு காலேஜ்ல என்ன அபிப்ராயம் இருந்துச்சோ தெரியலை. இப்பவும் அதை வச்சி தானே யோசிப்பாங்க" என்றவன்,


"சரிம்மா எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆகிட்டு. நான் கிளம்புறேன். நீங்க புரோசீட் பண்ணுங்க" என்றுரைத்து விட்டுக் கிளம்பினான்.


அந்தக் கண்ணாடிக் கட்டிடத்தின் நுழைவாயிலில் அணுகல் அட்டையைக் காண்பித்து, வழி விட்டதும் உள்நுழைந்தான் எழிலரசன்.


வரவேற்பறையைக் கடக்கும் நொடியில் சத்தமாய்ச் சிரிக்கும் ஒரு பெண்ணின் குரல் அவனின் செவியைத் தீண்ட, "எப்பவும் அமைதியா இருக்க இடத்துல என்ன இங்க சத்தம்" எண்ணிக் கொண்டே திரும்பியவன் கண்களுக்கு ஆச்சரியத்தை அளித்தாள் இசையரசி.


"ஹே இது அந்தப் பொண்ணு தானே.  காலைல போட்டோல பார்த்த பொண்ணு தானே! இந்த க்யூபிட்(cupid) ஆரோ(arrow) விட்டு இந்தப் பொண்ணு தான் நமக்கு லைப் பார்ட்னர்னு காமிக்கிறாரா? இந்தப் பொண்ணு எப்படி நம்ம ஆபீசுக்கு வந்தா?" என்றவன் பலவித எண்ணங்களில் மூழ்கிக் கொண்டே அவளின் பின்னே செல்ல,


அங்குத் தன்னுடன் பணிபுரியும் இரண்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டே மின் தூக்கியினுள் நுழைந்தாள் இசையரசி.


அவளுடன் சேர்ந்து இவனும் உள்நுழைய, அந்நேரம் அவனைக் கண்ட இசை, நெற்றிச் சுருக்கி அவனையே பார்த்திருந்தவள்,


"ஹே நீங்க!!  உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்" என்று தன் தலையைத் தட்டிக் கொண்டே எழிலிடம் கேட்டவளாய்,


'காலேஜ்ல சைலன்ட்டா யாருகிட்டயும் பேசாம இருந்த பொண்ணா இது! பார்த்தவுடனே என்கிட்டயே வந்து பேசுது' இவன் ஆச்சரியத்தில் கண்கள் விரிய அவளைப் பார்த்து, "எழிலரசன்" என்றான்.


"ஹே எழில், என் கூடக் காலேஜ்ல படிச்சவங்க தானே நீங்க" 

புன்னகைத்தவனாய் ஆமாம் என்றான்.


மின் தூக்கி இவர்கள் இறங்க வேண்டிய தளத்திற்கு வந்து நிற்க,


"சூப்பர்! இங்க தான் வேலை பார்க்கிறீங்களா? எப்படி இருக்கீங்க? எவ்ளோ நாளா இங்க வேலை பார்க்குறீங்க?"  என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே மின்தூக்கியிலிருந்து வெளி வந்தாள்.


"டேய் அவங்களைப் பேச விடுடா! நீயே பேசிட்டு இருக்க" அவளுடன் பணிபுரியும் மத்திம வயதையுடைய பாலாஜி கூற,


"அய்யோ பாலா! அப்படியா நான் பேசிட்டு இருக்கேன். கேப் கிடைக்கும் போது அவரும் பேசிக்க வேண்டியது தானே" எனச் சிரித்தாள்.


இவர்களின் சம்பாஷனையைக் கேட்டுக் கொண்டிருந்த எழிலரசன், "எவ்ளோ ஜேஞ்சஸ் உன்கிட்ட!  எனக்கு அதிர்ச்சில பேச்சே வரலனா பார்த்துக்க" சிரிப்பாய் உரைக்க,


"நல்ல விதமான ஜேஞ்சஸ்னு சொல்றீங்களா? இல்ல எப்படி" என்று மீண்டும் கேள்வியாய் அவனை அவள் கேட்க,


"ஹா ஹா ஹா" வாய்விட்டு சிரித்தவன்,


"நிஜமாவே ரொம்ப நல்ல மாற்றம் தான் இது இசை" என்றான்.


அழகாய் சிரித்தவள் தன்னுடன் இருந்தவர்களை எழிலிடம் அறிமுகம் செய்ய எண்ணி, "இவங்க என்னோட கலீக்ஸ். இவர் பாலாஜி என் லீட், அப்புறம் இவன் பிரபா, குட்டிப் பையன்" என்று பிரபாவை பார்த்துச் சிரிக்க,


"ஏன்க்கா என்னை டேமேஜ் செய்றீங்க?" என்றவாறு இசையரசியைப் பார்த்து முறைத்த பிரபா,


"இந்த அக்கா எப்பவும் இப்படித் தான். அதுவா எதுவாவது பேசிட்டு இருக்கும். நீங்க கண்டுக்காதீங்க" என்றவன்,


"இது எங்களுக்கு க்ளைண்ட் ஆபிஸ் அண்ணா. ஒரு வேலைக்காக இங்க வாரத்துல இரண்டு நாளுனு ஒரு மாசம் வந்துட்டு போவோம். நீங்க இங்கேயே தான் வேலை செய்றீங்களா?" என்றான்.


"ஆமா பிரபா. நாலு வருஷமா இங்க தான். அதுக்கு முன்னாடி வேற கம்பெனில வர்க் பண்ணேன். ஓகே கைஸ். சி யூ ஆல். கேட்ச் யூ லேட்டர்" எழிலரசன் கிளம்ப எத்தனிக்க,


"எழில் லன்ச் எங்க கூட ஜாய்ன் செய்றீங்களா? புது ஆபிஸ்! இன்னிக்கு தான் முதல் தடவையா வரோம்! கேன்டீன் எங்க இருக்கு? என்ன ஏதுனு காமிக்க, கூட ஒரு ஆளு இருந்த நல்லா இருக்கும்" இசையரசி கேட்க,


"கண்டிப்பாக இசை. எனக்கு கால் பண்ணு" என்றான்.


"என்கிட்ட உங்க நம்பர் இல்லயே! நம்பர் தான்ங்க. நான் வாட்ஸப் செய்றேன் இல்லனா கால் பண்றேன்" அழைப்பு எண்ணை வாங்கிக் கொண்டாள்.


தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்த எழிலரசனுக்கு லெகின்ஸ் குர்தி அணிந்து குதிரை வால் முடி அங்குமிங்கும் அசைய தற்போது தன்னிடம் பேசிய அவளின் பிம்பமே கண் முன்னே வந்து நின்றது.


கல்லூரியிலிருந்த இசைக்கும் இப்பொழுதிருக்கும் இசைக்கும் இருக்கும் வித்தியாசத்தை மனம் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்தது.


நடை உடை அனைத்திலும் ஒரு நேர்த்தி, மனத்திலுள்ளதை படபடவெனப் பேசினாலும் உள்பூச்சு இல்லாத வெள்ளந்திப் பேச்சாய்த் தோன்றியது எழிலுக்கு.


மதிய நேரம் அனைவரும் ஒன்றாய் கூடி ஒரு மேஜையில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டே உணவருந்திக் கொண்டிருந்தனர்.


எழிலரசனின் மனது அவனேயறியாது இசையரசியின் ஒவ்வொரு அசைவுகளையும் துல்லியமாய்க் கவனித்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது.


"டேய் அந்த ஃபோனை ஓரமா வைடா! சாப்பிடும் போதே என்ன மெசேஜ் செஞ்சிக்கிட்டு இருக்க" பாலாஜி இசையரசியிடம் உரைக்க,


"ஃப்ரண்டுக்கு மெசேஜ் செஞ்சிட்டு இருந்தேன் பாலா. இதோ ஓரமா வச்சிட்டேன்" கைப்பேசியை ஓரமாய் வைத்து இவர்களின் அரட்டையில் ஐக்கியமானாள்.


"ஆமா அதென்னணா, எல்லாரும் அக்காவை அரசினு கூப்பிடும் போது, நீங்க இசைனு கூப்பிடுறீங்க? அக்காக்கு அவங்களை யாராவது இசைனு கூப்பிட்டாலே பிடிக்காது! அரசினு தான் அவங்களே அவங்களை அறிமுகம் செஞ்சிப்பாங்க. ஆனா உங்களை மட்டும் எப்படி இசைனு கூப்பிட விட்டாங்க" முக்கிய வினாவாய் பிரபா எழிலிடம் கேட்டான்.


"அதுக்கொரு பெர்ர்ர்ர்ரிய கதை இருக்கு பிரபா" ராகமாய் இழுத்து அரசி கூற,


"ஆமா இந்தக் கதைய எப்படி மறந்தேன். அப்பவே கடவுள் இவ தான் எனக்குனு முடிவு செஞ்சி என்னோட இணைச்சி பேச வச்சிட்டாரோ" எழிலின் எண்ணங்கள் எங்கெல்லாமோ பயணித்துக் கொண்டிருக்க, அரசி அக்கதையைக் கூறலானாள்.


"காலேஜ்ல எங்க க்ளாஸ்ல ஐ மீன் ஈசிஈ டிபார்மெண்ட்ல, ஆல்பெபடிக்கல்(alphabetical) ஆர்டர் பிரகாரம் எழிலரசன் அடுத்த நேம் என் நேம் தான். இடையில ஒருத்தரும் இல்ல. அதுவும் எல்லாப் பீரியட்ஸ்லயும் அட்டெண்டன்ஸ் எடுப்பாங்க தானே! சோ எவ்ரி ஆப் அன் அவர்(half an hour) எழிலரசன் இசையரசினு எங்க பெயர் ரைமிங்கா வரதப் பார்த்து, எழில் என்னை அரசினு கூப்பிட்டாலே, 'அரசன் அரசன் உங்க அரசி உங்களைக் கூப்பிடுகிறார்கள்னு' எழிலை அவரோட ஃப்ரண்ட்ஸ் ஓட்ட ஆரம்பிச்சிட்டாங்க. அது பிடிக்காம நான் தான் எழில் கிட்ட போய் என்னை இசைனு கூப்பிடுங்க.  இப்படிக் கிண்டல் பண்ற வேலைலாம் வேண்டாம்னு உங்க ஃப்ரண்ட்ஸ் கிட்ட சொல்லுங்கனு வார்ன்(warn) பண்ணிட்டு வந்தேன்"

'என்னது வார்ன்னா(warn na) அழாத குறையா என்கிட்ட வந்து சொல்லிட்டு போச்சு இந்தப் பொண்ணு. இப்ப என்னா பில்டப் கொடுக்குது' என்றெண்ணிக் கொண்டே, 'அடிப்பாவி' என்ற வாயசைப்போடு எழில் அவளைப் பார்க்க,


அவள் எழிலை நோக்கி கண்ணைச் சுருக்கி, தலையையாட்டி, சொல்லாதே என்பது போல் செய்கை செய்து கொண்டே இக்கதையைக் கூறி முடித்தாள்.


எழிலும் அவளின் பேச்சில் செய்கையில் மதி மயங்கி தான் போனான். வெகுவாய் பிடித்துப் போனது அவளை. 


அவள் மீண்டும் தனது கைப்பேசியில் எவருக்கோ குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருக்க,


கடுப்பான அவளின் லீட் பாலாஜி, "அரசி ஃபோனை புடுங்க போறேன் பாரு" என்றார்.


"அக்கா யாரையாவது லவ் பண்றீங்களா? எப்ப பார்த்தாலும் ஃபோனும் கையுமாவே இருக்கீங்க" பிரபா இசையைக் கேட்ட நொடி, எழிலின் இதயம் எகிறி குதித்து அடங்கியது. 


சரியாய் அந்நேரம் அவர்களின் க்ளைண்ட் மேனேஜர் ஃபோன் செய்து இவர்களை அழைக்க, இதற்கான விடையைக் கூறாமலேயே சென்று விட்டாள் இசையரசி.


அன்றிரவு படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தும் உறக்கம் வரவில்லை எழிலுக்கு. 


மனம் முழுவதும் இசையே வியாபித்திருக்க, "அவ வேற யாரையோ லவ் பண்றாளோ! பதில் சொல்லாம போய்ட்டாளே!" மனம் அவளைப் பற்றிய சிந்தனையிலேயே உழன்றிருக்க,


"நாளைக்குக் கண்டிப்பா இதை அவகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கனும்" எண்ணியவாறே உறங்கிப் போனான்.


***


முதலிரவின் மறுநாள் காலை விழித்துப் பார்த்த எழிலரசன், தன்னருகில் இசையரசி இல்லாததைப் பார்த்து தன்னறையைச் சுற்றும் முற்றும் தேடியவன், கீழே சென்றிருப்பாள் என்றெண்ணிக் கொண்டவனாய் குளியலறைக்குள் புகுந்தான்.


துவளையினால் முகத்தைத் துடைத்துக் கொண்டே வெளிவந்தவன் கட்டிலில் அமர்ந்து இருந்த இசையைக் கண்டான்.


"ஹே இசை எங்க போயிருந்த? எப்ப எழுந்த?" கேட்டுக் கொண்டே அவளருகில் செல்ல,


தலையைக் குனிந்து அமர்ந்திருந்தவளின் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது.


அவள் கண்ணீரில் பதறியவன், அவள் தலையைத் தடவியவாறே, "ஹே என்னடா... என்னாச்சு?" என்று கேட்டான்.


அவனின் கனிவில் மேலும் கண்ணீர் பெருக அவனிடையைச் சுற்றி வளைத்தவள் வயிற்றில் முகம் புதைத்து விசும்பவாரம்பித்தாள்


0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page