top of page

Konchum Elil Isaiye - 1

மருத்துவமனை வளாகத்தில் வந்து நின்றது அந்த மகிழுந்து.


"மெதுவா, பார்த்து இறங்குடா! இல்ல வெயிட் பண்ணு நான் வந்து டோர் ஓபன் பண்றேன்"


அந்த மகிழுந்தின் ஓட்டுனர் இருக்கையிலிருந்து பின்னே திரும்பிப் பார்த்தவனாய் மனைவியிடம் கூறியவன், தனது இருக்கையிலிருந்து எழுந்து வந்து பின்னிருக்கை கதவைத் திறந்து அவளின் கைப் பிடித்து மெதுவாய் இறங்க வைத்தான்.


அந்த வாகனத்திலிருந்து இறங்குவதற்குள்ளாகவே அவளுக்குப் புசு புசுவென மூச்சிறைக்க, "காருல இருந்து இறங்குறதுக்குள்ளயே இவ்ளோ மூச்சு வாங்குதே உனக்கு! முதல்ல இதை பத்தி டாக்டர்கிட்ட கேட்கனும்" என அவளிடம் பேசிக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றான்.


அவனின் பேச்சிற்கு "ம்" கொட்டிக்கொண்டே மெலிதாய் சிரித்துக்கொண்டே அவனுடன் மெல்லமாய் நடந்து வந்தாள் அவள்.


"ஹே எழில்"


தனது மனைவியுடன் நடந்து சென்றவனின் பின்னிருந்து குரல் கேட்க, யாரெனத் திரும்பிப் பார்த்தான்.


அவனுடன் அவளும் திரும்பிப் பார்க்க, இவர்களினருகில் வந்து கொண்டிருந்தான் ரஞ்சன்.


"எழில் எப்படி இருக்க? காலேஜ் டேஸ்ல பார்த்தது. பத்து வருஷம் இருக்கும்ல" பூரிப்பாய்க் கேட்டு கைக் குலுக்கினான் ரஞ்சன்.


"ரொம்ப நல்லா இருக்கேன். ஆமா பத்து வருஷம்கிட்ட ஆகுதுல நம்ம காலேஜ் முடிச்சி" புன்னகையுடன் எழிலரசன் கூறவும்,


"எங்கே வேலை செய்ற? மேரேஜ் ஆகிட்டா? எத்தனை குழந்தைங்க?"


வெகு நாட்கள் கழித்து கல்லூரித் தோழனைப் பார்த்த பரவசத்தில் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனவன், எழிலரசனின் அருகிலிருந்த பெண்ணைப் பார்த்து,

"ஹோ இவங்க தான் உன் மனைவியா?"


சற்றுத் திரும்பி அவள் முகத்தைப் பார்த்தவன் பார்வையில் அவளின் நிறைமாத வயிறே கண்ணுக்குப் புலப்பட,


"ஹே கன்சீவ்வா இருக்காங்களா? கங்ராட்ஸ்டா(congrats da)" எனக் கூறிக் கொண்டே அவளின் முகம் பார்த்தவன் பேரதிர்ச்சிக்குள்ளானான்.


"அரசி நீயா?"  என்றவன்,


"என்னடா ஷாக்கிங் ஸப்ரைஸா நிறைய நடக்குது இன்னிக்கு" என ஆனந்த அதிர்ச்சியில் கேட்டான்.


"நம்ம கூட காலேஜ்ல படிச்ச அரசி தானே! நீங்க இரண்டு பேரும் லவ் பண்ணீங்களா? காலேஜ்லேயே லவ் பண்ணீங்களா? கூடவே இருந்த என்கிட்ட கூடச் சொல்லவே இல்லையேடா" உற்சாகத்தில் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான் ரஞ்சன்.


"அடேய் என்னை கொஞ்சம் பேச விடு"


மனைவி இடையில் கை வைத்துக் கொண்டு மூச்சு வாங்க நின்றதைப் பார்த்தவனாய் கூறிய எழிலரசன்,


"அவ ரொம்ப நேரம் நின்னா கால் வலிக்கும். நான் அவளை உட்கார வச்சிட்டு டாக்டர் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிட்டு எவ்ளோ பேர் எங்களுக்கு முன்னாடி வெய்ட் செய்றாங்கனு பார்த்துட்டு வந்து பேசுறேன். அது வரைக்கும் வெய்ட் பண்ணுவ தானே"

ரஞ்சனிடம் கூறிக் கொண்டே அந்த மருத்துவமனையின் வரவேற்பறையில் தனது மனைவி அமர ஏதுவான இடம் பார்த்துக் கொண்டிருந்தான்.


"கண்டிப்பா  வெய்ட் பண்றேன்டா.  நீங்க எப்படி எங்க லவ் செஞ்சி கல்யாணம் பண்ணீங்கனு எனக்கு தெரிஞ்சே ஆகனும்"  ரஞ்சன் கூற,


அங்கிருந்த நாற்காலியில் மனைவியை அமர வைத்த எழிலரசன், "அவ்ளோ வெட்டியாவாடா இருக்க நீ?"  சிரித்துக் கொண்டே கேட்டான்.


அந்நேரம் சிகிச்சை முடிந்து வந்த ரஞ்சனின் தாய் அவனருகில் வந்து கிளம்புமாறு கூற,


"டேய்  எனக்கு பக்கத்துல தான் வீடு! அம்மாவ வீட்டுல விட்டுட்டு வந்துடுவேன். டாக்டரைப் பார்த்துட்டுப் போய்டாதே! வெயிட் பண்ணு! நான் வந்துடுவேன். முதல்ல உன் ஃபோன் நம்பர் கொடு. அதெப்படி யார் கூடயும் கான்டாக்ட்ல இல்லாம இருந்தீங்க இரண்டு பேரும். நம்ம காலேஜ் வாட்ஸப் க்ரூப்ல முதல்ல உன்னைச் சேர்த்து விடுறேன்" கூறிக் கொண்டே எழிலிடம் கைப்பேசி எண்ணை வாங்கிப் புலனத்தில் இருந்த கல்லூரிக் குழுவில் சேர்த்து விட்டான் ரஞ்சன்.


ரஞ்சன் சென்றதும் "ஹப்பாடா" என ஆசுவாசமானாள் இசையரசி.


"ஹப்பா மழை பெஞ்சி ஓஞ்சா மாதிரி இருக்குல" அரசியின் அருகில் அமர்ந்து கொண்டே எழிலரசன் கூற, மென்னகைப் புரிந்தாள் இசையரசி.


"இன்னிக்கு நம்ம காலேஜ்மெட்ஸ் எல்லாரும் நம்மளை பத்தி தான் பேசப் போறாங்க பாரேன்" எழிலரசன் கூறவும்,


"ஆமாமா! ஆனா இது எந்த மாதிரி நடந்த மேரேஜ்னு தெரியாம லவ் மேரேஜ்னு பல கதைகள் இந்நேரம் கிரியேட்டாகி உலாவிட்டிருக்கும்" எழிலரசனின் முகம் பார்த்துச் சிரித்துக் கொண்டே கூறிய இசையரசி,


"ஆஆஆஆ" வயிற்றைப் பிடித்துச் சன்னமாய் அலற,


"என்னடா? என்னாச்சு? வலி வந்துடுச்சா?" அவளின் காலருகில் மண்டியிட்டுப் பதட்டமாய் வயிற்றைத் தொட்டுப் பார்த்தவாறு கேட்டான்.


"அய்யோ இல்லப்பா! நீங்க ரொம்ப தான் அவசரப்படுறீங்க. இன்னும் ஒரு வாரம் டைம் கொடுத்திருக்காங்களே டாக்டர்! நீங்க தான் சிரிச்சா வலிக்குது மூச்சுவிட்டா வலிக்குதுனு சொல்றேன்னு இங்கே கூட்டிட்டு வந்து உட்கார வச்சிருக்கீங்க" 


இருக்கையில் சற்று முன் சாய்ந்து, கீழமர்ந்திருந்த அவனின் மீசையை முறுக்கிக் கொண்டே கன்னத்தைக் கிள்ளிக் கொண்டே குற்றம் சாட்டுவது போல் அவனின் அக்கறையை இவ்வாறாய் கூறினாள் இசையரசி.


அவளின் செயலிலும் கூற்றிலும் அசட்டுச் சிரிப்பு சிரித்தான் எழிலரசன்.


"சரி நான் போய் நமக்கு முன்னே டாக்டரைப் பார்க்க எத்தனை பேரு இருக்காங்கனு பார்த்துட்டு டோக்கன் வாங்கிட்டு வரேன்" கூறியவன் சற்று தள்ளியிருந்த வரவேற்பாளரிடம் சென்றான்.


சுற்றும் முற்றும் வேடிக்கைப் பார்த்திருந்த இசையரசியின் கண்களுக்கு ஒரு பிம்பம் தெரிய, "இது அவன் தானே! அவனே தான்" மனம் கூக்குரலிட, சட்டென இருக்கையை விட்டெழுந்தாள் இசையரசி.


தூரத்திலிருந்து ஒருவன் இவளருகே வருவதைப் பார்த்திருவளின் மனம் படபடவென அடித்துக் கொள்ள, கண்களில் நீர்க் கோர்த்துக் கொள்ள, கைகள் சில்லிட,


"எழிலப்பாஆஆஆ" அலறியவள் மயங்கிச் சரிந்தாள்.


அவளின் அலறல் குரலில் திரும்பிப் பார்த்த எழில் தாவி ஓடி வந்து அவளைக் கைகளில் தாங்கிக் கொண்டான்.


*****


ஒரு பக்கம் மாந்தோப்பும், மறுபக்கம் வயலும், முன்னால் முருகன் கோவிலும் இருக்க, இதன் மத்தியில் அழகாய் வீற்றிருந்தது அந்த வீடு.


வீட்டின் முன் விசாலாமாய் வெட்ட வெளி திண்ணை அமைந்திருக்க, அதன் முன்பு நின்றிருந்தது அந்த ஃபார்சூனர் மகிழுந்து.


தட தட தட வென புல்லட் பைக்கில் வந்து அந்த மகிழுந்தினருகில் இறங்கினார் அந்த மீசைக்காரர் கணேசன்.


திண்ணையில் நான்கைந்து நபர்கள் இவரிடம் பேசவெனக் காத்திருக்க, அவர்களினருகில் அமர்ந்தவர், வீட்டினுள் நோக்கி "ஏம்மா தங்கம்! வந்தவங்களுக்கு குடிக்க ஏதாவது கொடுத்தியாம்மா?" எனக் குரல் கொடுத்தார்.


"அதெல்லாம் அக்கா கொடுத்தாங்கய்யா" என அருகிலிருந்தவர்கள் கூறுவதற்கும்,


"வந்ததுமே காபிப் போட்டு கொடுத்துட்டேனுங்க" கூறிக் கொண்டே தங்கம் கணேசனின் அருகில் வந்தமர்வதற்கும் சரியாக இருந்தது.


அவர்கள் தாங்கள் கூற வந்த பிரச்சனையை விலாவரியாய் விளக்கினர்.


இத்தகைய எழில்மிகு இடம் செங்கல்பட்டில் தான் இருந்தது.


கணேசன் இவ்வூருக்கு சொந்த வீடு கட்டி வந்து பதினாறு வருடங்கள் ஆகிவிட்டதாலும், இவ்வூரின் பஞ்சாயத்துத் தலைவராய் சில காலமும் அதன்பின் மன்ற உறுப்பினராய் (கவுன்சிலராய்) சில காலமும் பதவியில் இருந்ததாலும் அந்த ஊரில் அனைவருக்கும் பரிச்சயம் இவர்.


மிகவும் நேர்மையான மனிதராகையால் தங்களது பிரச்சனையைக் கூறி தீர்வுக் காண மக்கள் இவரின் வீட்டிற்கு எப்பொழுதும் வந்த வண்ணம் இருப்பர்.


வந்தவர்களின் குறையை கேட்டு, அதற்குரிய அதிகாரிகளிடம் கைப்பேசியில் பேசியவராய், விரைவில் பிரச்சனையைச் சரி செய்து விடலாம் என நம்பிக்கைக் கூறி அனுப்பி வைத்து விட்டு வீட்டினுள் நுழைந்தார்.


"குட்டிம்மா குடிக்க தண்ணீர் எடுத்துட்டு வாம்மா" தனது பெண்ணைக் காணும் ஆவலில் அழைத்தார்.


"பொண்ணு வேலைக்குப் போய்ட்டானு மறந்துட்டீங்களா? நீங்க தானே காலைல அவளை ஆபிஸ் பஸ்ல ஏத்தி விட்டுட்டு வந்தீங்க" பெண்ணைக் காணும் ஆவலில் ஆர்வமாய் இருந்தவருக்கு தங்கத்தின் இந்தப் பதில், ஏமாற்றத்தில் சட்டென முகத்தைச் சுருங்கச் செய்தது.


"இரண்டு நாள் பொண்ணு வீட்டுல இருந்துடக் கூடாது. அவ நினைப்புலயே தான் வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கிறது" கண்ணில் பொறாமையும் பெருமிதமும் போட்டிப் போட உரைத்தார் தங்கம்.


"ஆமா இரண்டு நாளா எந்நேரமும் கூடவே பார்த்துட்டு, அந்த ஞாபகத்துல கூப்பிட்டுட்டேன்" சோர்வாய் அவர் கூறிய நொடி,


வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….


மகள் இசையரசியின் அழைப்பொலியாய் இப்பாடல் ஒலித்து அலறச் செய்தது அவரின் கைப்பேசியை.

முகத்தில் சந்தோஷம் பொங்க அழைப்பையேற்று, "அரசிம்மா" அன்புப் பொங்க அழைத்தார்.


"மிஸ் யூப்பா" அலுவலகத்தில் இருந்து தந்தையின் நினைவு வந்த நொடி அழைத்து உரைத்திருந்தாள் அரசி.


"ஷப்ப்பா! அவ ஆபிஸ் போய் இன்னும் முழுசா அஞ்சு மணி நேரம் கூட ஆகலை. அதுக்குள்ள இங்கப் பொண்ணைத் தேடி சோர்ந்து போய் அப்பா உட்காருறாராம். அங்கிருந்து பொண்ணு போன் செஞ்சி மிஸ் யூனு சொல்லுதாம். உங்களுக்கே இது ஓவரா தெரியலை" தங்கம் இருவரையும் கிண்டல் செய்து சிரிக்க,


ஒலிபரப்பியிலிருந்த (ஸ்பீக்கரில்) கணேசனின் கைப்பேசி தங்கத்தின் இந்த வஞ்சபுகழ்ச்சியை அப்படியே இசையரசிக்குக் கடத்த,


"அம்மா எங்க பாசம் உனக்கு வேஷமா தெரியுதா?" எனப் பொங்கினாள்.


"ம்ம் வேஷமா இல்ல! விஷமா தெரியுது" தங்கம் வயித்தெரிச்சலில் பொரிந்து தள்ள,


"அப்பா! அம்மாக்கு நம்ம மேல பொறாமை. அவங்களை விட என்னைத் தான் நீங்க அதிகமா லவ் பண்றீங்கனு பொறாமை" களுக்கெனச் சிரித்துக் கொண்டே கூறினாள் இசையரசி.


"என்னடி பக்கத்துல இல்லனு வாய் நீளுதா? அடி பின்னிடுவேன். நாளை பின்ன உன்னைக் கட்டிக் கொடுத்துட்டு இப்படித் தான் பொண்ணு பக்கத்துல இல்லனு கவலைப்பட்டுட்டு இருப்பாராமா! நீயும் வேற எரியுற தீயில எண்ணை ஊத்துற மாதிரி மிஸ் யூவாம் மிஸ் யூ... உனக்கும் கல்யாணம் செஞ்சிக்கிற ஐடியா இல்ல! அவருக்கும் கட்டிக்கொடுக்கிற ஐடியா இல்ல! வயசென்ன வருதா போதா?"

தங்கம் தனது கணவனை முறைத்துக் கொண்டே கூற,


"எதுக்கு நீ குட்டிம்மாவ திட்டுற?"  என கணேசனும்,


"எதுக்கு இப்ப நீ என் கல்யாணத்தையும் அப்பாவையும் சேர்த்து வச்சு முடிச்சுப் போட்டு பேசுற?"  என இசையரசியும் ஒரே நேரத்தில் பொங்க,


"நீயாச்சு உன் அப்பாவாச்சு! என் பேச்சை எப்ப கேட்டீங்க நீங்க இரண்டு பேரும்" எனக் கோபமாய் உரைத்து அவ்விடத்தை விட்டு அகன்று சென்றார் தங்கம்.


கணேசன் ஒலிபரப்பியை அணைத்து கைப்பேசியை எடுத்துக் காதில் வைக்க,

"என்னப்பா! அம்மா கோவிச்சிக்கிட்டு போய்ட்டாங்களா?" வருத்தமாய் கேட்டாள் இசையரசி.


"அதெல்லாம் நான் பாரத்துக்கிறேன்மா. நீ கவலைப்படாம வேலையைப் பாரு" என்றார் கணேசன்.


"இல்லப்பா நான் தானே இருபத்தஞ்சு வயசுக்கு மேலே கல்யாணம் செஞ்சிக்கிறேன, அதுவரை வேலை பார்க்கிறேன்னு சொன்னேன். அது தெரியாம உங்களை திட்டுதேனு தான் கொஞ்சம் குரலை உசத்திட்டேன். அம்மாகிட்ட சாரி கேட்டேனு சொல்லுங்கப்பா" வருத்தமாய் உரைத்தாள் இசையரசி.


"அப்பா என்னிக்கும் உனக்கு விருப்பமில்லாத எந்த விஷயமும் செய்யமாட்டேன்மா" கணேசன் இங்கே கூறியிருந்த நொடி அங்கு இசையரசியின் அருகில் ஏதோ ஆண் குரல் கேட்க,


"யாரும்மா அது பக்கத்துல, உன் கிட்ட ரொம்ப உரிமையா பேசுறான் அந்தப் பையன். குட்டிம்மா, பசங்ககிட்டலாம் பார்த்து பழகுமா! எவனையும் நம்பாத! பசங்க ஃபிரண்ட்ஷிப்லாம் நமக்கு வேண்டாம்" தனது அறிவுரையை அவர் தொடர்ந்து கொண்டே போக,


"அய்யோ அப்பா போதும்! உங்களை மீறி உங்களுக்குப் பிடிக்காத எந்த விஷயமும் நான் செய்ய மாட்டேன் போதுமா! போங்க! போய் உங்க தங்கத்தை சமாதானம் செய்ங்க! நான் போய் என் வேலையை பார்க்கிறேன்" என்றுரைத்து கைப்பேசியை அணைத்தாள்.


தங்கத்திற்கு தனது பெண்ணிற்கு இன்னும் திருமணம் நடக்கவில்லையே என்ற கவலையென்றால்,

கணேசனுக்கோ தனது மகள் எந்த ஆடவனையும் நம்பி ஏமாந்துவிடக் கூடாதே என்ற பயம். 


தனது வாழ்நாளில் பலவிதமான பஞ்சாயத்துகளை பார்த்திருந்தவருக்கு இக்காலத்து இளசுகள் மீது ஏனோ நன்மதிப்போ நல்லெண்ணமோ அறவேயில்லை. 


ஆக அரசிக்கு அத்தனை சுதந்திரமளித்து வளர்த்திருந்தாலும் ஆண்களிடம் எவ்வித நட்பும் உறவும் வைத்திருக்கக் கூடாது என்பதை ஒரு கட்டளையாகவே வைத்திருந்தார். 


இசையரசியும் தந்தைக்கேற்ற மகளாய் அவரின் சொல்லைக் கேட்டு வளர்ந்திருந்தாள். இதை நிலைக்கவிடவில்லை அவளின் விதி.


*****


அத்திருமண மண்டபத்தில் கணேசனும் தங்கமும் தங்களது மகளின் திருமணத்திற்கு அங்குமிங்கும் ஓடியாடி வேலைப் பார்த்துக் கொண்டிருக்க,

வாடிய முகமும் கலங்கிய கண்களுமாக மணக்கோலத்தில் திருமண மேடையில் வந்தமர்ந்தாள் இசையரசி.


அவளினருகில் திருமணப் பூரிப்பின் மினுமினுப்பை முகத்தில் தாங்கி, கன்னக்குழிச் சிரிப்புடன் மணக்கோலத்தில் அமர்ந்திருந்தான் எழிலரசன்.


சுபமுகூர்த்தம் நெருங்கிய நேரம், இரு தரப்பு பெற்றோர்களும் உறவினர்களும் அந்த மேடையை சூழ்ந்து நிற்க,


"கெட்டிமேளம் கெட்டி மேளம்" ஐயரின் குரலில் நாதஸ்வர ஓசை திக்கெங்கும் பரவ, மழையாய்ப் பொழிந்த மலர் தூவலினிடையில் இசையரசியின் மணிக்கழுத்தில் மங்கல நாணை வெகு ஆசையாய் மனம் நிறைந்த விருப்பமுடனும் பூரிப்புடனும் கட்டினான் எழிலரசன்.


குனிந்த தலையுடன் கண்களை மறைத்த நீருடன், 'இந்த வாழ்க்கையை நான் மனதார ஏற்று இன்பமாய் வாழ வழி செய்யனும் எம்பெருமானே' கடவுளை மனதார வணங்கி அம்மாங்கல்யத்தை ஏற்றுக் கொண்டாள் இசையரசி.

தாலிக் கழுத்தில் ஏறிய மறுகணம் இருவரும் தத்தமது பெற்றோரிடம் ஆசிகளைப் பெற்றிட எழுந்தவர்களாய், எழிலரசனின் அன்னை ஜெயந்தியின் காலில் விழுந்து வணங்கினர்.


மகளுக்கு திருமணத்தை முடித்த சந்தோஷமும், அவள் தங்களை விட்டு செல்லவிருக்கிறாள் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள இயலாது வந்த துக்கத்தினையும் கலந்து சிரிப்பும் அழுகையுமாய் கணேசனும் தங்கமும் நிலைக்கொள்ளாது தங்களது மகளைப் பார்த்திருக்க,


அவர்களினருகில் வந்த இசையரசி, துளியும் சிரிப்பை உதிர்க்காது முகத்தை இறுக்கமாக வைத்திருந்தவளாய் அவர்களின் காலில் விழுந்து வணங்கி எழுந்தவளின் மனம் வெகுவாய் கனக்க, தந்தையின் முகத்தை நிமிர்ந்தும் கூட காணாது, ஆறாய் வழிந்த கண்ணீரைத் துடைத்து தாயைக் கட்டியணைத்து அழவாரம்பித்தாள்.


தாய் தந்தையின் பிரிவினை எண்ணி கலங்குகிறாளென நினைத்த எழிலரசன், அவளை ஆறுதல்படுத்தும் பொருட்டு தாயின் தோளில் சாய்ந்திருந்த அவளின் கையைப் பற்ற, தோளில் சாய்ந்திருந்தபடியே ஒரு கணம் அவளின் பார்வை அவன் மீது படிய, சற்றாய் கண்ணசைத்துத் தலையசைத்து 'நான் இருக்கேன்' என்று வாயசைத்தான் எழிலரசன்.


அவளின் இதழில் லேசாய் முறுவல் தோன்றி மனத்தின் கனத்தை சற்றாய் குறைத்தது.


மகளின் கலக்கத்திற்கான உண்மைக் காரணத்தை உணர்ந்த அந்தத் தாய், "உன் நல்ல மனசுக்கு நீ நல்லா வாழுவடா குட்டிம்மா!" மகளை ஆர தழுவி ஆதூரமாய் உரைத்தார்.


"குட்டிம்மாஆஆஆ" கணேசனின் அழைப்பிற்கு சற்றும் செவிமடுக்காது, ஐயர் அடுத்த சாங்கியம் செய்ய அழைத்த அழைப்பிற்குச் செல்வது போல் பாவனைச் செய்து அங்கிருந்து அகன்றாள் இசையரசி.


"எங்கே திருமணத்தை நிறுத்திவிடுவாளோ?" என்ற பயத்தினால் தாலிக் கழுத்திலேறும் நேரம் வரை அவளிடம் கடுமையாய் நடந்து கொண்டவரால் தற்போது அவ்வாறு இருக்க இயலவில்லை.


மகள் தன்னை வெறுத்து விட்டாளோ என்ற எண்ணம் மனதில் தோன்றிய நொடி தலைப் பாரமாய் வலிக்க, "தங்கம், குட்டிம்மா என்னை வெறுத்துட்டாளா?" அங்கே ஐயர் கூறியதைச் செய்து கொண்டிருந்த மகளை நோக்கியவாறே தங்கத்திடம் அவர் வினவ,


"நீங்க செஞ்சி வச்சிருக்க வேலைக்கு அவ உங்களை மீறி எப்பவோ போயிருக்கலாம். ஆனா உங்களை மதிச்சி தான்ங்க இப்பவும் இந்த வாழ்க்கையை ஏத்துகிட்டா! அவளால எப்பவும் உங்களை வெறுக்க முடியாது!  இப்ப கோபத்துல இருக்கா, போகப் போக சரியாயிடும்.  இன்னும் நீங்க பேசினதை நினைச்சிட்டு தான் இப்படி இருக்கா! நம்ம மாப்பிள்ளை எல்லாத்தையும் சரி செஞ்சிடுவாருங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. நீங்க கவலைப்படாம இருங்க" கணவரின் துயர்த் தீர்க்கும் வார்த்தைகளைக் கூறினார் தங்கம்.


-- தொடரும்

1 comment

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Feb 21
Rated 5 out of 5 stars.

Nice starting

Like
© KPN NOVELS COPY PROTECT
bottom of page