top of page

Inaiya Vazhi Sol! (intro)

Updated: Dec 2, 2019

இணைய வழி சொல்!

(முன்னோட்டம்)


'படைப்பவள் அவளே!

காப்பவள் அவளே!

அழிப்பவள் அவளே சக்தி!

அபயம் என்றவளைச் சரண் புகுந்தாலே...

அடைக்கலம் அவளே சக்தி!


ஜெய ஜெய சங்கரி! கௌரி மனோகரி!

அபயம் அளித்தருள்; அம்பிகை பைரவி!

சிவ சிவ சங்கரி! சக்தி மஹேஸ்வரி!

திருவருள் தருவாய் தேவி!


ரக்ஷ ரக்ஷ ஜெகன் மாதா!

சர்வ சக்தி ஜெய துர்கா!


ரக்ஷ ரக்ஷ ஜெகன் மாதா!

சர்வ சக்தி ஜெய துர்கா!


துலுக்கானத்தம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா விமர்சையாக தொடங்கியிருந்தது.


வெள்ளி; சனி; ஞாயிறு என மூன்று நாட்கள் இப்படித்தான் இந்த ஒலிபெருக்கி ஓயாமல் பக்தி கானங்களை செவிகளுக்குள் வலுக்கட்டாயமாகக் கொண்டு வந்து பாய்ச்சும்!


அதுவும் அவர்கள் அலுவலகத்தை ஒட்டி இருக்கும் தொலைப்பேசி கம்பத்தில் அதைக் கட்டி இருக்க, சத்தம் சற்று அதிகமாகவே இருந்தது.


செவிகளை இரு கைகளாலும் பொத்திக்கொண்டவள், "ப்பா... இந்த பாட்டுக்கெல்லாம் ஒண்ணும் நம்ம ஊர்ல குறைச்சல் இல்ல;


படைப்பவள்; காப்பவள்; அழிக்கப்படுபவள்னு மாத்திக்கலாம்! எங்க பார்த்தாலும் பெண்களைக் கொலை செஞ்சுட்டு இருகாங்க! அதைத் தடுக்க ஒரு தெய்வமும் இல்ல! ஒரு தேவதையும் வரல!" எனப் புலம்பினாள் அவள்!


அந்த ஒலிபெருக்கியைத் தாண்டி ஓங்கி ஒலித்த அவளுடைய குரலில், "அந்த ஸ்பீக்கரே தேவல!" எனப் புலம்பியவாறு தன் செவிகளை மூடிக்கொண்டான் மனோகர்!


"என்ன! என்ன! என்ன சொன்ன!" என அவள் எகிற, "இல்ல தல! பொண்ணுங்கல்லாம் உங்களை மாதிரி போல்டா இருக்கனும் சொன்னேன்" என்றான் அந்த மனோகர்.


"நிஜமா அப்படியா சொன்ன?" என இறங்கிய குரலில் அவள் கேட்க, அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு தலையை ஆட்டினான் அவன்!


***


கையில் வைத்திருந்த அழைப்பு அட்டையை சரிபார்த்து, 'மாயா டிடெக்ட்டிவ் ஏஜன்சி' என்ற பெயர்ப் பலகையைப் பார்த்துவிட்டு, உள்ளே நுழைத்தான் அந்த நெடியவன்.


சென்னை மாநகரின் ஒரு முக்கிய பகுதியில் அமைந்திருந்தது அந்த தனி வீடு! அதன் ஒரு பகுதியைத் தடுத்து சிறிய அலுவலகமாக மாற்றி இருந்தனர்.


அங்கே வாக்குவாதத்தில் ஈட்டுப்பட்டிருந்த அந்த இருவரையும் பார்த்து, 'இவங்கள பத்தியா சொன்னாங்க நம்ம மேம்! நம்ப முடியலயே! சின்ன புள்ள தனமா சண்டை போட்டுட்டு இருகாங்க' என எண்ணியவாறு அவன் 'எஸ்க்யூஸ் மீ!" என்று சொல்ல, அவனை கவனித்துவிட்டு, "வாங்க! நீங்க மிஸ்டர் மணிவண்ணன்தான! நீங்க வருவீங்கன்னு சிஸ்டர் போன் பண்ணாங்க! ப்ளீஸ் பீ ஸீட்டட்!" என்றாள் அவள்.


"இங்க மிஸ் யாமினின்னு!" என அவன் தயக்கத்துடன் இழுக்க, "நான்தான் அது! நீங்க இண்டஸ்ட்ரியலிஸ்ட் சீதாலக்ஷ்மி மேம்மோட பீ.ஏ தான!" என அவள் தெளிவாகக் கேட்க ஆமாம் எனத் தலை அசைத்தான் அவன்!


அவன் எதிர்நோக்கி வந்தது நடுத்தர வயதில் ஒரு பெண்மணியை! ஆனால் அங்கே இருப்பவள் இப்பொழுதுதான் கல்லூரியை விட்டே வெளியில் வந்தவள் போன்ற தோற்றத்தில் இருக்கிறாள்!