மித்ர-விகா 44
“என்னோட பாஸ்ட் பத்தி உங்களுக்கு எப்படி தெரியும்?” என எந்த கேள்வியை ஒரு பயத்துடன் எதிர்நோக்கிக் காத்திருந்தானோ அக்னிமித்ரன் அதையே அவனிடம் கேட்டாள் மாளவிகா.
எது எப்படி இருந்தாலும் அவளிடம் மனம் திறந்து அனைத்தையும் சொல்லி விடும் முடிவில்தான் இருந்தான் அவன். எனவே சிறு தயக்கம் கூட இல்லாமல் நடந்த அனைத்தையும் அவளிடம் சொல்லிவிட்டான் அக்னிமித்ரன், அன்பு ரஞ்சனி விஷயங்கள் உட்பட.
ஏற்கனவே அவனைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தாலும் கொஞ்சம் அதிர்ச்சியாகதான் இருந்தது அவளுக்கு. சிலைபோல உட்கார்ந்திருந்தாள் மாளவிகா. அப்படி ஒரு மௌனம் அவளிடம்.
தன்னால் தன்னைச் சேர்ந்தவர்கள் துன்பப்படுவதை அவள் ஒரு பொழுதும் சகிக்கமாட்டாள் என்பது புரிய, “எப்பவுமே எந்த விஷயத்தையும் நேரடியா அணுகி மட்டும்தான் எனக்குப் பழக்கம். உன் விஷயத்துல மட்டும் நான் ஏன் இப்படி செஞ்சேன்னு எனக்கே புரியல. ப்ளீஸ் மாளவிகா இதையெல்லாம் அப்படியே மறந்திடு. இனிமேல் வாழப்போற வாழ்க்கையில இந்த மாதிரி சறுக்கல்கள் வரவே வராது” என அவன் உருக்கமாகச் சொல்ல, அப்படியுமே அவளுடைய முகம் தெளியவில்லை.
“உங்க காலேஜ் கல்ச்சுரல்ஸுக்கு வந்த அன்னைக்கு அங்க இருந்த பெண்கள் கூட்டத்துக்கு நடுவுல அழகான ஒரு பெண்ணைப் பார்த்தேன். முகமெல்லாம் கலர் பவுடரைப் பூசிட்டு நின்னா. அவளோட கையில கழுத்துல எல்லாம் சாமந்திப்பூவோட பெட்டல்ஸ் ஒட்டிட்டு இருந்துது. தலை கூட கலைஞ்சுதான் இருந்தது. ரொம்ப ரொம்ப சாதாரணமான ஒரு டிரஸ்ல கூட ஒரு ஓவியம் போல அவ்வளவு அழகாயிருந்தா அவ.
அப்ப, உள்ள போகும் போது திரும்பி திரும்பி அவ என்னைப் பார்த்த பார்வையில இருந்த ஏதோ ஒண்ணு என்னை அப்படியே அவ கூடவே இழுத்துட்டுப் போச்சு" என்றான் அவன் ரசனையுடன்.
'ஐயோ அப்படியா பார்த்து வெச்சோம்' என ஒரு எண்ணம் தோன்றி அவளை நாணச்செய்ய, அதில் கொஞ்சம் இளகினாள் மாளவிகா.
'ஆமாம்' என்பது போல கண்களை மூடி திறந்து, "அந்தப் பார்வைக்காகதான் அஜூபா நான் ஏங்கிட்டு இருந்தேன்" என்றவன், "உன்னோட டான்ஸ்கு அனௌன்ஸ்மென்ட் வந்தப்ப அங்க பசங்க எல்லாரும் என்ன ஆர்ப்பாட்டம் பண்ணாங்கன்னு ஞாபகம் இருக்கா? மாலு... மாலுன்னு. ஓ மை காட்" என அதிசயித்தவன், யாருடா அந்த மாளவிகான்னு பார்த்தா, அட நம்ம ஆளு” என்றவன், "என்ன?" என அவள் அவனை ஒரு பார்வை பார்க்கவும், "ஆமாம் லயன்னஸ். எனக்கு அப்படித்தான் தோணிச்சு. முதல்ல பார்த்த இல்ல, அப்படி ஒரு பார்வை உன் கிட்ட இருந்து மறுபடியும் வருமான்னு எதிர்பார்த்தேன். ஆனா நீ என்னைக் கொஞ்சம் கூட கண்டுக்கல" எனக் குற்றம் சாட்டுவது போலச் சொன்னவன், "அந்தக் கோவத்துலதான் ஒரு நாள் நீ அந்த டான்ஸ் பத்தி சொன்னதுக்குகூட உன்னைத் தெரியாத மாதிரியே, 'க்ரூப்ல ஆடினியா'ன்னு கேட்டேன்" என அவன் சொல்ல முறைத்தாள் மாளவிகா.
"அது அன்னைக்கு இருந்த மனநிலை. முறைக்காத" எனக் கோபத்தில் சிவந்த அவளுடைய மூக்கில் மெல்லியதாக இதழ் பதித்தவன், "ஆனா அந்த டான்ஸ்.. அதுலதான் நான் டோட்டலா உன் மேல பைத்தியம் ஆனேன்" என்று சொல்லிவிட்டு, "அன்னைக்கு டெல்லிக்குப் போயிட்டு வரும்போதுதான் ஃப்ளைட்ல மறுபடியும் அதே மாதிரி ஒரு பார்வையைப் பார்த்த. உடனே நான் உன் கிட்ட ப்ரப்போஸ் பண்ணேன்” என்று முடித்தான் அவன்.
அந்தச் சூழ்நிலையின் கனம் தாங்காமல் அவள் சாலையை வேடிக்கை பார்க்க, அங்கேயும் அவனேதான் இருந்தான் விளம்பரப் பலகையை முழுவதுமாக நிறைத்து. அன்று அவள் கண்ட அந்த கனவு வேறு மனதில் தோன்றி அவளையும் அறியாமல் அவள் பார்வையில் அந்த இரசனை நிறைந்துபோகச் சட்டென நிழலிலிருந்து நிஜத்திற்கு அவள் தன் பார்வை திருப்ப, அவளை உணர்ந்தவன், உல்லாசமாகச் சீழ்க்கை அடித்தவாறே, "இதோ இந்தப் பார்வையைதான் சொன்னேன் அஜூபா" என்றான் கிறக்கமாக.
அதில் கொஞ்சம் நஞ்சம் இருந்த வருத்தமும் கரைந்துபோக வெட்கத்துடன் புன்னகைத்தாள் மாளவிகா. அதில் அவன் மனம் லேசாக, "சாரி லயன்னஸ். எல்லாத்தையும் உன் கிட்ட கன்ஃபஸ் பண்ணாதான் இனிமேல் நம்மளோட இந்த வாழ்க்கையை நிம்மதியா வாழ முடியும்னு தோணிச்சு. சொல்லிட்டேன். நீயும் எல்லாத்தையும் மறந்துடு... பீளீஸ்" என்றான் அவன் இறைஞ்சுதலாக.
அவளை சார்ந்தவர்களின் சிறு வருத்தம் கூட மாளவிகாவை அதிகம் பாதிக்கும். கூடிய வரையில் விட்டுக் கொடுத்துப் போய்விடுவாள். அதுவும் மித்ரனைப் பொறுத்த வரையில் கடந்து போன விஷயங்கள் எதையும் தூக்கிச் சுமக்க அவள் தயாராக இல்லை.
தெளிவான அந்த மனநிலைதான் திருமணம் என்ற மிகப்பெரிய பந்தத்துக்குள் முழு மனதுடன் அவளை நுழைய வைத்தது. அதுவும் அவன் எதையும் மறைத்து வைக்க முயலாமல் அனைத்தையும் சொல்லியிருக்க, ஒரு பரிபூரண நிம்மதியை உணர்ந்தாள் அவள்.
அப்படி முழுமனதுடன் அவனை ஏற்றுக்கொண்டவளை அவனுடைய அந்த குரல் ஏதோ செய்ய, "போதுமே" என்று அந்தப் பேச்சுக்கு மொத்தமாக ஒரு முற்றுப் புள்ளி வைத்தாள் மாளவிகா.
தீபலக்ஷ்மி டவர்ஸும் வந்திருந்தது.
வாகனத்தை நிறுத்திவிட்டு இருவருமாக மின்தூக்கிக்குள் நுழைய,
'சரசர சாரக்காத்து வீசும் போதும்
சார பாத்து பேசும்போதும்
சாரப்பாம்பு போல நெஞ்சு சத்தம்போடுதே
இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க
ஒத்தப்பார்வை பார்த்து செல்லு
மொத்த சொத்தை எழுதித்தாரேன் மூச்சு உட்பட' என்ற வரிகள் மனதில் சுழல, வழக்கம் போல கண்ணாடியைப் பார்த்து தன் கூந்தலை சரி செய்தவாறே, இதழ்களைக் குவித்து அவள் சீழ்க்கை அடிக்கத் தொடங்கினாள் அவனுடைய அஜூபா.
எப்பொழுதுமே தன்னைத் தொலைக்கும் அவளுடைய அந்தப் பாவனையில் தன் வசமிழந்து போனவன், அதுவரை கற்பனைத் திரையில் அவன் ஓட்டியதை உண்மையில் நடத்திப் பார்க்கக் கிடைத்த சிறு சந்தர்ப்பத்தைத் தவறவிட மனமில்லாமல் அப்படியே இடையுடன் சேர்த்து அவளைத் தன்னிடம் இழுத்தவன், சட்டென நினைவு வந்தவனாக தன் கைப்பேசியால் அங்கே பொருத்தப் பட்டிருந்த கேமராக்களை செயலிழக்கச்செய்து, அவள் என்னவென்று உணரும் முன்னமே அவள் சீழ்க்கையை நிறுத்தினான் தன் இதழ்கொண்டு.
நொடிகளாக மாறிய சில நிமிடங்களுக்குள் அவர்களது அலுவலக தளம் வந்திருக்க, முகம் சிவக்க அவனைப் பற்றியபடி கிறங்கியிருந்தவளின் நிலை புரிய, தன்னை சமன் படுத்திக்கொள்ள அவனுக்கும் சிறிது அவகாசம் தேவைப்பட, மறுபடியும் கீழே செல்லும் பொத்தானை அழுத்த, அவள் அவனை முறைக்கவும், "ஏய்... உன் கற்பனை குதிரையை ஓட விடாத. நேப் ரூம் போய் ஜஸ்ட் ஒரு டென் மினிட்ஸ் ரெஸ்ட் எடுத்துட்டுப் போகலாம்.
மீட்டிங்கை கேன்ஸல் பண்ற மூட்ல நான் இப்ப இல்ல. ஈவினிங் ஃபோட்டோ ஷூட் வேற இருக்கு" என அவளுக்கு ஒரு நீண்ட விளக்கத்தைக் கொடுத்தான் மித்ரன்.
'அப்பாடா' என்பது போல் ஒரு பெருமூச்சு எழுந்தது அவளிடம். அதில் அவன் அவளைப் பார்த்து விஷமமாகப் புன்னகைக்க, அவள் அவனைப் பார்த்து முறைக்கவென இருவருமாக அவர்களுடைய பிரத்தியேக ஓய்வு பகுதிக்குள் வர, நேராகச் சென்றவன் ஃப்ரிட்ஜிலிருந்து பழரச டின்களை எடுத்து ஒன்றை அவளிடம் நீட்ட, முன்பு ஒரு முறை அதை 'வைன்' என்று சொல்லி அவன் அவளைத் திணற அடித்தது நினைவில் வந்து சிரிப்பை வரவழைத்தது அவளுக்கு.
அவளுடைய அந்த சிரிப்பிற்கான காரணம் புரியவும், "இது நிஜமாவே வைன்தான் அஜூபா” என அவன் அவளைச் சீண்டிப்பார்க்க, "நம்...பிட்டேன்" என்றாள் அவள் ராகம் போட்டு.
தொடர்ந்து மற்ற நிகழ்வுகளும் அவளது நினைவில் வர, அன்றைய தினத்துக்கு பிறகுதான் அவன் அவளை லயன்னஸ் என அழைக்கத் தொடங்கினான் என்பதையே உணர்ந்தாள் மாளவிகா.
தான் எந்த ஒரு சூழ்நிலையிலும் தன் நிலை பிறழவில்லை, அதோடில்லாமல் பெண்களைப் பொறுத்தவரை எந்த ஒரு மேன்மையான அபிப்பிராயமும் இல்லாத அக்னிமித்ரன் போன்ற ஒருவனையே அவ்வளவு மதிப்புடன் தன்னைப் பார்க்க வைத்திருக்கிறோம் என்ற எண்ணமே அவளுக்கு ஒரு கர்வத்தைக் கொடுக்க, அதில் கண்களில் நீர் கோர்த்தது அவளுக்கு.
அவன் அறியாமல் வேகமாகப் போய் சோஃபாவில் அமர்ந்தவள், அவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்தவனின் தோளில் அப்படியே ஓய்வாக சாய்ந்து கொண்டாள்.
அவனுடைய கை வாகாக அவளை வளைத்து தன்னுடன் இறுக்கிக்கொள்ள, ஒவ்வொரு சொட்டாக ரசித்து ருசித்து காஃபியைப் பருகிய பிறகு வேறெதையும் சாப்பிடாமல் சில நிமிடங்கள் அந்தச் சுவையை நாவில் தேக்கி வைத்திருப்பது போன்ற ரசனையான நிமிடங்களில் இருவருமே கரைந்து கொண்டிருந்தனர்.
***
வழக்கம்போல சாமிக்கண்ணு அய்யாவின் அருகில் உட்கார்ந்து உற்சாகமாக அவருடன் வளவளத்துக் கொண்டிருந்தாள் மாளவிகா.
அவருடைய கலைக்கூடத்தின் மாணவர்கள் எல்லாரும் அவளைச் சூழ்ந்து நின்று கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். அமைதியாக கண்ணம்மாவுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு அவர்களைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அக்னிமித்ரன்.
அவர்களுடைய அட்டவணைப்படி சாமிக்கண்ணு ஐயாவைச் சந்திக்கும் நாள் இல்லைதான். இருந்தாலும் மாலை அலுவலகத்திலிருந்து கிளம்பும் சமயம், “மித்து எனக்கு ஐயாவைப் பார்க்கணும் போல இருக்கு. நீங்க ஸ்டூடியோக்கு போங்க. நான் அய்யாவை போய் பார்த்துட்டு வீட்டுக்கு வந்துடறேன்” என்று அவள் சொல்ல, அவளுடைய மன நிறைவான அந்தத் தருணத்தில் அவருடன் சில நிமிடங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற ஆசையில்தான் கேட்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது.
அந்த நிமிடங்களைத் தானும் அவளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, அவனுடைய ஃபோட்டோஷூட்டைக் கூட ரத்து செய்துவிட்டுத் தானே அவளை அங்கே அழைத்து வந்திருந்தான் மித்ரன்.
பிள்ளைகள் எல்லாரும் அவளைச் சிலம்பம் சுற்றச் சொல்லி வேறு கேட்க, உற்சாகம் பொங்க கையில் சிலம்பத்துடன் பம்பரமாகச் சுழன்றாள் அவள். அவளுடனான ஒவ்வொரு நொடிகளையும் இன்றியமையாதவையாக மாற்றிக்கொண்டிருந்தாள் மித்ரனுக்கு.
பின்பு நேரமாகவும் இருவருமாக அவர்களிடம் விடை பெற்றுக் கிளம்ப, மாளவிகா அக்னிமித்ரன் இருவரின் முகத்திலும் வெளிப்படையாகத் தெரிந்த பொலிவு அவர்கள் வாழும் வாழ்க்கையைப் பிரதிபலிக்க, சாமிக்கண்ணு ஐயாவுக்கும் கண்ணம்மாவுக்கும் அவ்வளவு மன நிறைவைக் கொடுத்தது.
“என்கிட்ட நிறைய பசங்க சிலம்பப் பயிற்சி எடுத்துட்டாலும் எனக்கு தெரிஞ்ச அத்தனையும் முழுசா கத்துட்ட ஒரே ஆள் மாளவிகா மட்டும்தான். அன்பு பையனைக் கூட இப்படிச் சொல்ல மாட்டேன்” என்றவர், இவதான் என்னோட ஒரே வாரிசு. எனக்குப் பிறகு எதிர்காலத்துல இந்தக் கலைக் கூடத்தை இவதான் எடுத்து நடத்தணும். அதுக்கு நீங்கதான் பொறுப்பு” என அக்னிமித்ரனிடம் நெகிழ்ந்தார் சாமிக்கண்ணு ஐயா.
இடுப்பில் கையை வைத்துக்கொண்டு அவரை முறைத்தவாறே, "அய்யா” எனச் சலுகையாக அழைத்தவள், "அதை நீங்க என் கிட்டதான் சொல்லணும். இவர் என்ன நமக்கு நடுவுல" என அவள் கோபம் போலச் சொல்லவும், அதில் அவன் என்ன நினைத்துக் கொள்வானோ என அதிர்ந்த கண்ணம்மா, "பாப்பா, என்ன நீ இப்படி சின்ன புள்ள தனமா பேசற" என உண்மையாகவே கோபப்பட,
"அவ சொன்னதுல தப்பே இல்லம்மா. அவளுக்குதான் அய்யா கிட்ட எல்லா உரிமையும் இருக்குங்கற பொஸசிவ்னெஸ்ல அப்படி சொல்லிட்டா” என்று புன்னகை மாறாமல் சொல்லிவிட்டு, "உன் கிட்ட சொன்னா என்ன என் கிட்ட சொன்னா என்ன... நம்ம ரெண்டு பேருமே ஒண்ணுதான?" என்றவன் சிறு இடைவெளி விட்டு, "பா..ப்பா" என்று சொல்லி யாரும் அறியாவண்ணம் அவளைப் பார்த்துக் கண்ணடிக்க, அதில் உண்டான கோபத்தைக் கூட அவனிடம் காண்பிக்க இயலவில்லை. அவனை முறைக்க மட்டுமே முடிந்தது மாளவிகாவால்.
"உணமையிலேயே உங்களுக்குள்ள இருக்கற பாண்டிங்கைப் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சொல்லி அவர்களை மேலும் மேலும் நெகிழ வைத்து பின் அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கிளம்பினான் மித்ரன் மாளவிகாவுடன்.
Comments