top of page

En Manathai Aala Vaa 43

Updated: Nov 8, 2022

மித்ர-விகா-43


ஆதவனின் கிரணங்கள் ஜன்னலில் பதித்திருந்த கண்ணாடியை ஊடுருவி அவர்களுடைய அறை முழுவதும் மஞ்சள் நிற ஒளிக் கற்றைகளை வாரி இறைக்க, அதன் இளம் சூடு அந்த அறை முழுவதும் ஆக்ரமித்திருந்த ஏசி யின் குளிரில் கரைந்து கொண்டிருந்தது.


முதலில் கண்விழித்த மித்ரன், பூனைக் குட்டி போல அவனது கை வளைவுக்குள் சுருண்டிருந்த அவனுடைய அஜூபாவை உணரவும் அவனது இதழ்களில் ஒரு மந்தகாச புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.


பல முறை கடுப்புடன் நினைத்திருக்கிறான் 'இப்படி சிங்கம் மாதிரி சிலுப்பிட்டு நிக்கறவள இந்த அன்பு ஏன் இப்படி பப்பி பப்பின்னு கொஞ்சறான்?' என்று.


இப்பொழுதுதான் உணர்ந்தான் அவன் எதிரிலிருப்பவரை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி அவளென்று. நாம் என்ன கொடுக்கிறோமோ அதை அப்படியே நமக்குத் திருப்பி கொடுப்பவள் அவள் என்று.


அவளை அப்படியே மென்மையாகத் திருப்பியவன் ஆவலுடன் அவளது முகத்தைப் பார்க்க, ஆழ்ந்த உறக்கத்திலிருத்தலும் அன்றலர்ந்த புது மலர் போல் அவ்வளவு மென்மையுடன் தெளிவாக இருந்தது அவளது முகம்.


மருத்துவமனையில் மயக்கத்திலிருக்கும் பொழுது, கண்களுக்குக் கீழ் கருவளையம் சூழ்ந்திருக்க, வேதனையின் சாயல் மண்டிக் கிடந்த அவளுடைய முகம்தான் நினைவில் வந்தது அவனுக்கு.


இப்பொழுது முற்றிலும் மீண்டிருப்பதாகவே தோன்றினாலும் ஓரத்தில் கொஞ்சமாக ஒரு பயம் தோன்றி அவனது நெஞ்சை அடைத்தது. டாக்டர் அகிலாவிடம் அவ்வளவு வீராப்பாகப் பேசிவிட்டு, கட்டுப்பாடுகளை இழந்து இப்படிச் செய்துவிட்டோமே என்றுதான் உறுத்தலாக இருந்தது அவனுக்கு.


என்னதான் அவள் இசைந்து கொடுத்தாள் என்றாலும் தான் அவசரப்பட்டிருக்க வேண்டாமோ என்றுதான் தோன்றியது அவனுக்கு. இவ்வளவு தூரம் போராடி அவளுடன் இப்படியான ஒரு இனிமையான வாழ்க்கையை அமைத்துக்கொண்டது ஒன்றும் பெரிதில்லை, நண்பன்... காதலன்... கணவன்... இந்தப் பரிமாணங்களையெல்லாம் தாண்டி சாமிக்கண்ணு அய்யாவைப்போல அன்புவைப்போல அவளது அப்பாவைப்போல அவளுடைய மதிப்பிற்குரிய ஆண்மகனாகவும் இருக்க வேண்டும் என அவனுடைய நெஞ்சம் அடித்துக் கொண்டது.


அவளை அவனுக்குப் பிடித்திருக்கிறது என்பதினால் இல்லை, அவனை அவளுக்குப் பிடித்திருக்கிறது என்கிற ஒரே காரணத்தினால் தன்னை விட்டுக்கொடுக்க இயலாமல்தான் திரும்ப சரிசெய்ய இயலாத தன் தவறுகளையெல்லாம் மறந்து அவள் தன்னை ஏற்றுக்கொண்டிருக்கிறாள் என்பது தெளிவாக மனதிற்குப் புரிய, அவள் வாழ்க்கையில் தான் இன்றியமையாதவனாக இருக்க வேண்டும் என்கிற வெறியே உண்டானது அவனுக்கு


அவளிடம் பேசினால்தான் மனம் கொஞ்சம் தெளிவடையும் என்று தோன்ற, போய் பல் துலக்கி முகம் அலம்பிக்கொண்டு வந்தவன், இன்னும் அவள் உறக்கம் தெளியாமல் இருக்கவும் அவளுடைய மென் பஞ்சு கன்னத்தில் அழுந்த தன் இதழைப் பதித்தான் மித்ரன்.


கன்னம் உணர்ந்த ஈரத்தைப் புறங்கையால் துடைத்தவள், கொஞ்சமும் அசராமல் தன உறக்கத்தைத் தொடர, அவளை வம்பிழுக்கும் நோக்கத்துடன் தன் கைப்பேசியை இயக்கினான் அவன்.