En Manathai Aala Vaa-42
Updated: Nov 6, 2022
மித்ர-விகா-42
முந்தைய இரவு ஷூட்டிங் காரணமாக நெடுநேரம் கழித்துதான் வீட்டிற்கே வந்திருந்தான் மித்ரன்.
விழிப்பு வந்த பிறகும் எழுந்திருக்க மனதில்லாமல் அவன் படுத்திருக்க, "நான் ரெடி ஆயிட்டேன். நீங்க போய் குளிச்சிட்டு கிளம்பி வாங்க" என்றவாறு 'ட்ரெஸ்ஸிங் ரூம்' கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள் மாளவிகா.
ஆங்காங்கே தங்க நிற ஜரிகையாலான படகுகள் போட்ட, தங்க நிற பார்டருடனான கேரளா புடவை அணிந்து மிகப்பெரிய குடை ஜிமிக்கி காதில் நடனமாட, கூந்தலை அழகாகப் பின்னலிலிட்டு, அழகிய வட்ட மெரூன் நிற போட்டு மட்டும் வைத்து வேறு ஒப்பனைகள் இல்லாமல் நின்றவளிடமிருந்து பார்வையை அகற்றவே முடியவில்லை அவனால்.
"கிளாசிக் பியூட்டி” என முணுமுணுத்தவன், கொஞ்சம் ரசனையான பார்வை வேறு விதமாக மாறிப்போகக்கூடாது என மனதிற்குக் கடிவாளமிட்டு, அவசரமாக எழுந்து குளிக்கச் சென்றான் மித்ரன்.
"மித்து. அந்த ஸ்டோன் வாஷ் ஷர்ட் போட்டுக்கோங்க" என அவள் குரல் கொடுக்க, 'என்னை நல்லா வெச்சு செய்யறடீ நீ' என்ற எண்ணம் தோன்றி அவனைப் புன்னகைக்க வைத்தது.
அவளுடைய அந்த இயல்பான 'மித்து' என்கிற அழைப்பு ஒரு நிறைவைக் கொடுக்க, "ஆகட்டும் மஹாராணி! உத்தரவு" என்ற அவனது பதிலில் புன்னகை எட்டிப் பார்க்க, காஃபி கலப்பதற்காகச் சென்றாள் மாளவிகா.
அன்று மதுவுக்குச் சீமந்தம். மித்ரனும் மாளவிகாவும் அவனுடைய வீட்டிற்குச் சென்றிருந்த சமயமாக அங்கேயே வந்து மதுவுடைய மாமனார் மாமியார் இருவரும் அவர்களை முறைப்படி அழைத்திருக்க, அதற்காகதான் கிளம்பிக்கொண்டிருந்தனர் இருவரும்.
கௌதமுக்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்க, பரமேஸ்வரன் தமக்கைக்குத் துணையாக அங்கே இருக்கவும், தீபாவும் தர்ஷினியும் நேராக மண்டபத்திற்கு வருவதாகச் சொல்லியிருந்தனர்.
அவள் சொன்ன சட்டையையே போட்டுக்கொண்டு வெளியில் வந்தவன், "எப்படி இருக்கு?" என்பதுபோல் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே உணவு மேசையில் காபியுடன் உட்கார்ந்திருந்தவளை நோக்கிப் போனான்.
அவனுடைய காஃபி கோப்பையை அவன் புறம் தள்ளியவளாக, புருவம் உயர்த்தி, விரல் மடக்கி, "பிரமாதம்” என்றவள், ஒவ்வொரு மிடறு காபியுடனும் சேர்த்து அவனையும் பார்வையால் பருகிக்கொண்டிருந்தாள், அவன் அவளைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான் என்பதைப் பற்றியெல்லாம் கவலையேபடாமல்.
இப்பொழுது கூடுதலாக அவள் கூந்தலில் குடியேறியிருந்த மல்லிகை இன்னும் அவளைப் பேரழகியாகக் காண்பிக்க, "ஜெகன் மோகினி" என முணுமுணுத்தான் அக்னிமித்ரன் மனதைக் கட்டுப்படுத்த இயலாமல்.
***
நல்லபடியாக நடந்து முடிந்தது அந்த சீமந்த விழா.
மித்ரன் வந்திருக்கவே அங்கே வந்த அனைவருடைய பார்வையும் அவர்களிடமே இருந்தது. அது மட்டுமே சிறு சங்கடத்தைக் கொடுத்தது மாளவிகாவுக்கு.
மற்றபடி சொன்னது போல தீபா மூத்த மருமகளுடன் வந்திருந்து, மரியாதை நிமித்தம் விழா முடியும் வரை இருந்து, சின்ன மகன் மருமகளுடன் உட்கார்ந்து உணவருந்திவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டார்.
உறவினர்கள் எல்லாம் ஒவ்வொருவராகக் கிளம்பிக்கொண்டிருக்க, மண்டபம் காலியாக இருந்தது. மாளவிகா கிளம்பலாம் என்று பார்த்தால், "கொஞ்ச நேரம் இரு. ரிலாக்ஸா பேசிட்டு போகலாம்" என மது கெஞ்சலாகச் சொல்ல, சாத்விகாவும் அதையே சொல்ல அங்கேயே இருந்தாள் மாளவிகா. அதனால் மித்ரனும்.
அன்பு, சாத்விகா இருவரும் அவனுடன் இயல்பாக வாயடித்துக் கொண்டிருக்க, மித்ரனும் அங்கே சகஜமாகப் பொருந்திதான் போனான். அங்கே நிலவிய சுமுகமான சூழலில் அவ்வளவு நிம்மதியாக இருந்தது மூர்த்திக்கும் துளசிக்கும்.
சரவணனை மட்டும் நேருக்கு நேர் பார்க்கத் தயக்கமாக இருந்தது மாளவிகாவுக்கு. அது அவர்கள் வீட்டு விழா என்பதால் ஓடி ஓடி எல்லாம் செய்து கொண்டிருந்தவன் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு ஓரமாக உட்கார்ந்திருந்தான்.
மாளவிகா மதுவுக்கு உதவியாகச் சென்றிருக்க, மித்ரனுடன் பேசிக் கொண்டிருந்தவள், சரவணன் தனியாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும், "மாம்ஸ், இருங்க இதோ வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு அவனை நோக்கிச் சென்றாள் சாத்விகா.
சரவணனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தவள், "என்ன சின்ன மாம்ஸ், ஆன் சைட் போறீங்கன்னு கேள்விப்பட்டேன்" என அவள் பேச்சைத் தொடங்க, "ஆமாம், அண்ணி சொன்னாங்களா?" எனக் கேட்டான் அவன் தயக்கத்துடன்.
"பின்ன... நீங்களா என் கிட்ட சொல்ல போறீங்க" என அவள் நொடித்துக் கொள்ள, 'என்ன இவ இப்படி பேசறா?' என்பது போல் அவளைப் பார்த்தான் அவன். அவனைத் தலை சாய்த்து ஒரு பார்வை பார்த்தவள், "பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?" என்று வேறு கேட்க, தூக்கிவாரிப் போட்டது அவனுக்கு.
"நானும் பார்க்க மாளவிகா மாதிரிதானே இருக்கேன்?" என்று வேறு அவள் கேட்கவும், "நீ இப்ப என்ன சொல்ல வர?" எனத் தடுமாறினான் அவன். "ப்ச்..” எனச் சலித்தவள், "எனக்கு உங்களைப் பிடிச்சிருக்குன்னு சுத்தி வளைச்சு சொல்றேன். இது கூடவா புரியல? " என்றாள் அவள் நேரடியாக.
அதில் அதிர்ந்து யாராவது தங்களைப் பார்க்கிறாளா எனச் சுற்றும் முற்றும் பார்த்தவன், "என்ன இது லூசு மாதிரி உளர்ர" என்றான் சரவணன் கடுமையாக.
"உளறலாம் இல்ல. எப்பவுமே எனக்கு உங்களைப் பிடிக்கும். மாளவிகா மித்ரன் மாமாவை லவ் பண்றான்னு தெரிஞ்சுதான் நீங்க வேணாம்னு சொன்னீங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன். இப்ப லயன் கிளியர் இல்ல அதான்" என அவள் சொல்ல, அவன் பார்வை மித்ரனிடம் சென்று மீண்டது.
மித்ரனால் அவனுடைய தன்மானம் வெகுவாக அடிவாங்கியிருக்க, அந்த வலி இருந்துகொண்டேதான் இருந்தது சரவணனுக்கு. அதன் பிரதிபலிப்பால் அவனுடைய அண்ணியிடம் அவன் சரியாகப் பேசுவது கூட இல்லை. இதையெல்லாம் வெளியில் சொல்லவும் முடியாது அவனால்.
"எனக்கு மேரேஜ் பத்தி இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்ல. அதுக்கெல்லாம் எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்" என்றான் அவன்.
"நீங்க ஆன் சைட் போயிட்டு வர வரைக்கும் டைம் எடுத்துக்கோங்க. இல்ல என் படிப்பு முடியற வரைக்கும் டைம் எடுத்துக்கோங்க. அதுக்கு மேல வேண்டாம்" என்றவள் நேராகச் சென்று மித்ரனுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டாள்.
அதற்குள் மாளவிகாவும் அங்கே வர, 'என்ன நடக்குது அன்பு இங்க?" என மித்ரன் சாத்விகாவைக் கேள்வியாகப் பார்க்க, மாளவிகாவும் 'என்ன?' என்பதுபோல் பார்க்க, அவள் சரவணனிடம் பேசியதை அப்படியே சொல்லிவிட்டாள் சாத்விகா.
மாளவிகா, "அடிப்பாவி” என்று சொல்லிவிட, "அக்கா நம்ம அப்பாவுக்கு நாம மட்டும்தான். உனக்கும் மது அக்காவுக்கும் டெர்ம்ஸ் சரி இல்லாததால அவங்க எவ்வளவு வருத்தப்படறாங்கன்னு உனக்கு தெரியாது?" என்றவள், "இப்படி நடந்தா பிரச்சனை சால்வ்ட்" என்று 'இதெல்லாம் சாதாரணமப்பா' என்பதுபோல் சொல்ல, "அடிப்பாவி. இது என்ன பிசினஸ் டீல் மாதிரி பேசற" என மாளவிகா மறுபடியும் அதிர, "அக்கா எனக்கு சின்ன மாம்ஸை ரொமபவே பிடிக்கும். அதுவும் காரணம்” என்றாள் சாத்விகா கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல்.
"சாவி. உங்க அம்மா வராங்க. நீ சொன்னதையெல்லாம் கொஞ்சம் அவங்க கிட்டயும் சொல்லேன்" என அன்பு இடை புக, "மவனே ஏதாவது வெளிய வந்துது. சேதாரத்துக்கு கம்பெனி பொறுப்பில்லை" என அவள் சொல்ல, "ஐயோ அண்ணா. என்னைக் காப்பாத்துக்கங்க" என்றான் அன்பு அக்னிமித்ரனிடம்.
சரவணனைப் பற்றிய சிந்தனையிலிருந்ததால் இவர்களுக்கு நடுவில் புகுந்து என்ன பஞ்சாயத்து செய்வதென்றே புரியவில்லை அவனுக்கு. அதற்குள் சாத்விகாவைத் துளசி அழைக்க அவள் அவருடன் செல்லவும், அன்புவும் கிளம்பிவிட, ஒரு முடிவுடன் மாளவிகாவின் கையைப் பற்றி அழைத்துக்கொண்டு சரவணனின் அருகில் போய் உட்கார்ந்தவன், ஒரு இழுத்துப் பிடித்த புன்னகையுடன் சரவணன் அவனைச் சங்கடத்துடன் பார்க்கவும், "சாரி சரவணன். நான் அன்னைக்கு செஞ்சது உங்க மனசை எவ்வளவு புண்படுத்தியிருக்கும்னு அப்ப நான் யோசிக்கல” என நேரடியாகவே சொல்லிவிட்டு, "நான் பண்ண அந்தத் தப்புதான் மாளவிகாவை அவ்வளவு மோசமான நிலைமைக்குக் கொண்டு போய் விட்டது. நான் அதை நல்லாவே ரியலைஸ் பண்ணிட்டேன். ரியலி சாரி” என்றான் மித்ரன் கொஞ்சம் கூட தயங்காமல்.
அப்படி ஒரு தவறை அவன் செய்யாமல் இருந்திருந்தால் அதைக் காணொளியாக மாளவிகா பார்க்காமலிருந்திருந்தால் அன்றே அவனுடைய காதலை அவள் ஏற்றுக்கொண்டிருப்பாள்.
அதன் பின் அத்தனை பிரச்சனைகளுக்கு இடமே இல்லாமல் போயிருக்கும். அவன் சொன்னது நன்றாகவே புரிந்தது மாளவிகாவுக்கு. மாளவிகாவை வைத்துக்கொண்டே அவன் மன்னிப்பு கேட்கவும் ஆடிதான் போனான் சரவணன். மாளவிகாவுமே.
ஆனாலும் அது நியாயமாகத் தோன்றவும் இடையில் குறுக்கிடாமல் அவள் அமைதியாக இருக்க, "பரவாயில்ல சார். நடந்தது நடந்து போச்சு. மறந்துடுவோம்" என்று அத்துடன் முடித்துவிட்டான் சரவணன்.
***
துளசி, மூர்த்தி, சாத்விகா மூவரையும் அவர்களுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு அங்கே சிறிது நேரம் இருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பவே மாலை மங்கி இருள் கவிழத் தொடங்கியிருந்தது.
ஒரு இலகுவான மனநிலையில் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான் அக்னிமித்ரன். வழக்கத்திற்கு மாறாக ஏதோ சிந்தனையுடன் மௌனமாக உட்கார்ந்திருந்தாள் மாளவிகா.
அவளுடைய இந்த மோனநிலை மனதை ஏதோ செய்ய, “ஹேய் அஜூபா. ஏன் இப்படி இருக்க? வாட் இஸ் டிஸ்டர்பிங் யூ” எனக் கேட்டான் மித்ரன்.
“எப்படி மித்ரன் இவ்வளவு ஈசியா சரவணன் கிட்ட சாரி கேட்டீங்க?” என நெகிழ்ச்சியுடன் கேட்டாள் அவள். அவனது அந்தச் செயல் அவளை மொத்தமாக அவன் பக்கம் வீழ்த்தியிருந்தது எனலாம்.
“தப்பு பண்ணேன். சாரி கேட்டேன். அதோட முடிஞ்சது” என அவன் சொன்ன தொனியே ‘இதற்கு மேல் நீ இதைப் பற்றி கேள்வி கேட்காதே’ என்று கட்டளையாகச் சொல்லிவிட, கார் கியரைப் பற்றியிருந்த அவனுடைய கைக்குள் தன் கையைக் கோர்த்துக்கொண்டு அப்படியே அவன் தோளில் தலை சாய்த்தாள் மாளவிகா.
நம்ப முடியாமல் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளது அந்தத் தீண்டலில் கரைந்து கொண்டே காரைச் செலுத்தினான் அக்னிமித்ரன். அவர்கள் வீடு வந்து சேரும் வரை கூட பேச்சே இல்லை இருவருக்குள்ளும்.
கதவைத் திறந்து கொண்டு இருவரும் உள்ளே நுழையவும் சண்முகம் இரவு உணவைத் தயார் செய்து வைத்துவிட்டுப் போய்விட்டாரா என்று பார்க்க உணவு மேசை வரை சென்றவள் எல்லாம் தயாராக இருப்பதைப் பார்த்துவிட்டு அவர்களது அறைக்குள் வர அதற்குள்ளாகவே உடை மாற்றச் சென்றிருந்தான் மித்ரன்.
காதில் அணிந்திருந்த கனமான பெரிய ஜிமிக்கி அவஸ்தையைக் கொடுக்க ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் உட்கார்ந்து அதைக் கழற்றியவாறே மெல்லியதாக ஒரு பாடலை அவள் சீழ்க்கை அடிக்க, கதவைத் திறந்து கொண்டு வந்தவன் அவளை ஒரு பார்வை பார்த்தவாறே கட்டிலில் போய் படுத்துக் கொண்டு அந்தப் பாடலைப் பாடவும் சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்தவள், “ஹேய் நாங்களும் இந்த மாதிரி விளையாடுவோம்” என்றாள் குதூகலத்துடன்.
“என்ன?” என அவன் அவளை ஒரு பார்வை பார்க்க, “அது சாவிக்கு விசில் அடிக்க வராதா. அதனால நான் ஏதாவது பாட்ட விசிலடிச்சா, அந்தப் பாட்டை கண்டுபிடிச்சு அவ பாடுவா. இது எங்களுக்கு ஒரு கேம்” என்று அவள் விளக்கமாகச் சொல்ல, “ஆமாம்… ஆமாம்… இன்டர்நேஷனல் கேம்தான் போ” எனக் கிண்டலாகச் சொன்னான் மித்ரன்.
அதில் அவளுக்கு ரோசம் பொத்துக் கொண்டு வர, “என்ன சொன்னீங்க? அப்படின்னா நான் விசிலடிக்கற பாட்டைக் கண்டுபிடிங்க பார்க்கலாம்” என அவள் சவால்விட, அவனுக்கும் அது பிடித்துப் போகச் சரி என்று சொல்லி விட்டான்.
அவளுக்குப் பிடித்த பாடல்களை ஒவ்வொன்றாக அவள் சீட்டியடிக்க அவனும் கண்டுபிடித்துச் சொல்லிக்கொண்டே வர, ஒரு பாடலை அவள் சீட்டியடிக்கவும் அதன் வரிகள் தெரியாமல் அவன் அதை ஹம் செய்ய, போலியாக அவனை முறைத்துக்கொண்டே அவனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தவள், “செல்லாது செல்லாது… வேர்டிங்ஸோட பாடணும்” என்றாள் கறாராக.
தன்னை மறந்து அவளுடைய மடியில் தலை வைத்துப் படுத்தவன், அவளுடைய பளிங்கு முகத்தைப் பார்த்துக்கொண்டே கைப்பேசியின் துணையுடன் கூகுளில் ஆராந்து அந்தப்பாடலை ஒலிக்க விட்டான்.
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூபோலே
தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்.
அவன் செய்து வைத்த வேலையால் உண்டான படபடப்பை மறைக்க, அவள் அந்தப் பாடலைக் கூடவே சேர்ந்து பாட ஆரம்பிக்க அதன் வரிகளில் ஆழ்ந்து போனவனுக்கு அவளை முதன்முதலாகச் சந்தித்த நினைவு வர, தன்னையும் மீறி அவளை இரசிக்கத் தொடங்கியிருந்தான் அக்னிமித்ரன்.
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன் வாடுதே
என் மெத்தை தேடும் போர்வையாவும் சேலையாகாதோ
வாராதோ அந்நாளும் இன்றே ஹா
அந்த வரிகளைக் கேட்டவன் விஷமமாக மறுபடியும் அதைப் பாடவிட அப்பொழுதுதான் அவனுடைய பார்வையின் மாற்றத்தை உணர்ந்தவள் முகம் சிவந்து போனாள்.
அந்த முகச் சிவப்பு ‘அந்த நாள் இன்றேதான்.’ என அவனுக்குச் செய்தி சொல்ல, அவளது அந்த இணக்கத்தில், அவன் அதுவரைப் பிடித்துக் கட்டி வைத்திருந்த அவனது கட்டுப்பாடெல்லாம் உடைந்து தூள் தூளாகிப்போக, விசில் சத்தம் பாட்டுச் சத்தம் எல்லாம் நின்று போய் அங்கே முத்தங்களின் சத்தம் மட்டுமே கேட்கத் தொடங்க அந்த முத்தங்களும் சத்தமில்லாமல் மாறிப்போக, ஜீவராசிகளெல்லாம் தொன்றுதொட்டு தன் உயிரை இந்தப் பூமியில் தக்க வைத்துக்கொள்ளும் சூட்சுமத்தைப் பொத்தி வைத்திருக்கும் புதையலைத் தேடி ஒரு புதையல் வேட்டை ஆரம்பமானது அங்கே அவர்களுடைய அனுமதியே இல்லாமல்.