top of page

Azhage Sugamaa?!9

Updated: Mar 27, 2023

முகில்நிலவு 9


மூன்று மாதங்களுக்கு முன்,


நரம்பியல் அறுவை சிகிச்சை சம்பந்தமான மேற்படிப்பில் நிலாவுக்கு ஒன்றரை ஆண்டு கடந்திருந்த நிலையில்…


இடியும் மின்னலும் கோலாகலப் படுத்திக் கொண்டிருந்த ஒரு மழை நாளில், முன்னிரவு எட்டு மணி வாக்கில், தூறலில் நனைந்து உடல் சிலிர்த்தவாறு மருத்துவர்களுக்கான ஓய்வறைக்குள் நுழைந்தவள், அவள் எடுத்து வந்திருந்த கைப்பையை அங்கே இருந்த அலமாரியில் வைத்துவிட்டு துப்பட்டாவால் முகம், கைகள் எனத் துடைத்துக் கொண்டு, வெண்ணிற 'கோட்'டை எடுத்து அணிந்து கொண்டாள் நிலா.


சானிடைஸரை வலது உள்ளங்கையில் ஊற்றி இரண்டு கைகளிலும் தேய்த்து சுத்தப்படுத்திக் கொண்டு, அவளது ஸ்டெதஸ்கோப்பைக் கழுத்தில் சூட்டிக்கொள்ள, அங்கே வந்த அவளது தோழி, சக மாணவி சரண்யா அவசரமாக அவளுடைய கையைப் பிடித்து இழுத்துச் சென்றவாறே, "வா! வா! தல நம்ம ரெண்டு பேரையும் அர்ஜென்டா கூப்பிடறாங்க!" என்றவாறு ஒட்டமும் நடையுமாகச் செல்ல, அவளுடைய இழுப்பிற்குச் சென்றாள் நிலா.


அவர்களுடைய அகராதியில் 'அர்ஜன்ட்' என்ற சொல் மட்டுமே உண்டு. அதன் எதிர்ப்பதம் புழக்கத்திலேயே கிடையாது. அதுவும் மழைக்கால இரவுப்பணி என்றால் அந்த அவசரத்தின் பொருள் பன் மடங்கு கூடிப்போகும்.


நரம்பியல் அறுவை சிகிச்சை பகுதியை அடைந்தவர்கள், அங்கே இருக்கும் மருத்துவர்கள் பணி அறையை நோக்கிச் செல்ல, உள்ளே உட்கார்ந்திருந்தார் கைத்தேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சத்யபாமா, அவர்களுடைய ஆசான், அவர்களுடைய ஹீரோ! முன்மாதிரி! எல்லாமும்!


அங்கே அனைவருக்குமே அவரிடம் ஒரு பயம் கலந்த மரியாதை இருக்கும். அவருடைய தகுதியும் தோற்றமும் அப்படி.


தனியார் மருத்துவமனையால் கைவிடப்பட்ட நோயாளிகளைக் கூட, பிழைப்பதற்குக் கொஞ்சமே கொஞ்சம் வாய்ப்பிருந்தாலும் அதைப் பயன்படுத்தி உயிர்ப்பிக்கச் செய்யும் மாயத்தை தன் கைகளில் கொண்டிருக்கும் திறமைசாலி.


வெள்ளை வெளேர் என்றிருந்த அவரது கைகளைப் பார்க்கும் போதே தெரிந்தது, ஏதோ அறுவை சிகிச்சை முடிந்து கை உறைகளை அப்பொழுதுதான் கழற்றி இருக்கிறார் என்று.


"பொண்ணே, எமர்ஜன்சில... ப்ரெயின் இஞ்சுரி கேஸ் ஒண்ணு வந்திருக்காம். உடனே வரச் சொன்னாங்க. போய் அட்டண்ட் பண்ணுடா!" என அவர் பொதுவாகக் கட்டளை பிறப்பிக்க,


செல்ல எத்தனித்த சரண்யாவைத் தடுத்து, "இரு பொண்ணே! நேத்து சர்ஜரிஸ்ல நீதான என் கூட இருந்த. அந்த கேசஸ் பத்தி கொஞ்சம் இன்ஸ்ட்ரக்ஷன் குடுக்கணும்" என்று சொல்லிவிட்டு, "நிலா! நீ போய் அட்டண்ட் பண்ணுடாம்மா!" என்றார் அதிகாரம் தொனிக்கா ஒரு கட்டளையாக.


நிலாவின் விதிதான் சத்யபாமா வடிவில் அவளை அங்கே அனுப்பியதோ?


நிலா அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பகுதிக்கு வர, அரை மயக்க நிலையில் ஸ்ரக்சரில் ஒரு பெண் படுக்க வைக்கப்பட்டிருந்தாள்.


“ஹெட் இஞ்சுரி கேஸ்ப்பா! நீங்க பார்த்து சொன்னா சீ.டி இல்லன்னா எம்.ஆர்.ஐக்கு அனுப்பலாம்” என அங்கு பணியிலிருந்த பயிற்சி மருத்துவர் பரிந்துரைக்க, அந்தப் பெண்ணுடைய முதல்கட்ட மருத்துவ அறிக்கையைப் படித்துவிட்டு பின் நிலா அவளை ஆராய, அவளது உடலில் ஆங்காங்கே சிறு சிறு சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கத் தலையின் ஒரு பகுதியில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.


அந்தக் காயத்தை ஆராய்ந்தவள், பின்பு டார்ச் மூலம் அந்தப் பெண்ணின் கண்களின் அசைவைக் கவனித்து, பின் சில பரிசோதனைச் செய்துவிட்டு, நிலா சில மருத்துகளைப் பரிந்துரைக்க, அவை ட்ரிப்ஸ் மூலம் அந்தப் பெண்ணுக்குச் செலுத்தப்பட்டது.


உடனிருந்த அந்த மருத்துவரிடம், "எம்.ஆர்.ஐ இஸ் பெட்டர் டாக்டர். அனுப்பிடலாம்" என்று சொல்லிவிட்டு அதை அந்த அறிக்கையிலும் எழுதிக் கையெழுத்திட்டு, பின் அங்கேயே நின்றாள் நிலா.


வேறு வழியில்லை. ஸ்கேன் முடிந்து அந்த அறிக்கைகள் வந்து அந்தப் பெண் அடுத்தகட்ட மருத்துவத்திற்குச் செல்லும் வரை, சில சமயங்களில் அதன் பிறகும் கூட நிலா அவளைத் தொடரத்தான் வேண்டும்.


அவசர நிலையில் பல நோயாளிகள் வரிசைக்கட்டிக் காத்திருக்க, ஒரு மணிநேரத்திற்கு பிறகே அந்தப் பெண்ணை ஸ்கேனிங் செய்ய அழைத்துச் சென்றனர்.


இதற்கிடையில் அவள் கொஞ்சம் சுய நினைவு பெறவும் அவளைப் பற்றிய தகவல்களை நிலா விசாரிக்க எண்ணி, "உங்க பேர் என்ன?" என்று கேட்க,


"ம்! நிலமங்கை! அஃபிஷியல் நேம் நிலா!" என்றாளவள் தெளிவில்லாத குரலில். தன்னுடைய பெயரையே அவள் கொண்டிருக்கவும், அவள் பால் ஒரு தனிப்பட்ட அக்கறை தோன்றிவிட்டது நிலாவுக்கு.


அதன் பின் மேலும் அவளைப் பற்றி அறிய, நிலா அவளிடம் பேச்சுக்ச்கொடுக்க, "என் ஹஸ்பன்ட் பேர் பிரபா! அவரைக் கொஞ்ச நாளா காணும்! உங்களால அவரை எப்படியாவது கண்டுபிக்க முடியுமா?" எனக் கேட்டாள் நிலமங்கை தனக்குக் கிடைத்திருக்கும் ஒரே பற்றுக்கோலாக அவளைப் பற்றிக்கொண்டு!


அவளுடைய குரல் நிலாவை ஏதோ செய்யவும், அவள் பேசுவது தலையும் புரியாமல் வாலும் புரியாமல் போனாலும் மறுத்து ஏதும் பேச மனமின்றி அந்த நேரத்தில் அந்தப் பெண்ணிற்கு தன்னால் கொடுக்க முடிந்த சிறிய நம்பிக்கையை வார்த்தைகளாகக் கோர்த்து, "ம். கண்டிப்பா கண்டுபிடிக்கலாம்! நீங்க நார்மல் ஆனதும் அவரைப் பார்க்கலாம், அதுக்கு முன்னால உங்களைப் பத்தின டீடைல்ஸை சொல்லுங்க?" எனக் கேட்டாள் கனிவாக.


முதல் முறை முகிலன் நிலவழகி தங்கி இருந்த வீட்டிற்கு வந்த அன்று, 'எங்க ஊர் மதுரை. அப்பா பேங்க் எம்பிளாயீ' எனத் தொடங்கி, 'திரும்ப வரும்போது, அந்த கார் ஒரு ட்ராக் மேல மோதிடுச்சு' என முடிய அவனிடம் சொன்னவற்றை, வார்த்தைகள் ஒன்று கூட மாறாமல் அப்படியே நிலாவிடம் சொல்லி முடித்தாள் நிலமங்கை.


பின் அவளுடைய பெற்றோருடைய முகவரியை, கைப்பேசி என்னுடன் அவள் சொல்ல, நிலா அதனைத் தனது கைப்பேசியில் பதிய வைத்துக்கொண்டாள்.


"என்னோட நிலைமையைச் சொல்லி, எங்க அப்பா அம்மாவை இங்க வரச்சொல்ல முடியமா? ஒரு வேளை இங்க வந்தாலும் வருவாங்க!" என நிலமங்கை நிலாவிடம் கோரிக்கை விடுக்க அதற்கும் பணிந்தாள் இறக்கத்துடன்.


உடனே அந்தப் பெண் ஸ்கேனிங் செய்ய அழைத்துச் செல்லப்பட, அதன் அறிக்கைகளைப் பார்த்து வருந்தினாள் நிலா.


அவளுடைய மண்டை ஓட்டின் எலும்பில் விரிசல் ஏற்பட்டிருக்க, மூளை தசைகள் கொஞ்சம் விரிவடைந்திருப்பது புலப்பட்டது. உடனே கொஞ்சம் சிக்கலான அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டாகி இருந்தது.


அதை அறிந்த அடுத்த நொடி, நிலமங்கையின் வீட்டிற்குக் கைப்பேசியில் அழைத்து நிலா விவரத்தைச் சொல்ல, அவர்களிடமிருந்து நல்லவிதமான பதில் ஏதும் அவளுக்குக் கிடைக்காமல் போக, மனம் நொந்துபோனாள்.


"உங்களுக்கு ஸ்கல் போன்ல சின்ன விரசல் ஏற்பட்டிருக்கு, இரத்த கசிவும் இருக்கு. ப்ரைன் யூசுவல் சைஸ விட கொஞ்சம் என்லார்ஜ் ஆகியிருக்கு. இதுக்கு ஓரு சர்ஜரி தேவை படுது.


ஸ்கல்-லோட ஒரு பார்ட்டை சேஃபா எடுத்து, டெம்பரரியா அதை உங்க வயித்துல வெச்சு தெச்சிடுவோம். பிறகு மூளையில இரத்த கசிவைச் சரி செய்ய ட்ரீட்மெண்ட் பண்ணுவோம். இரண்டு மூணு மாசத்துல ப்ரைன் நார்மல் ஸ்டேஜ்கு வந்திடும்.


தென் மறுபடியும் சர்ஜரி செஞ்சு, அந்த ஸ்கல் போனை அதே இடத்தில் வச்சு பொருத்திடுவோம்! கொஞ்சம் பெரிய ஆப்பரேஷன்தான். பட் பயப்பட வேண்டியதில்லை.


நான் அன் அஃபிஷியலா உங்க பேரன்ட்ஸ் கிட்ட பேசி பார்த்துட்டேன். பட் நோ யூஸ். நீங்க சம்மதிச்சா சொந்தக்காரங்கள ஐடென்டிஃபை பண்ண முடியலன்னு சொல்லி, பர்மிஷன் வாங்கி சர்ஜரி செஞ்சுடலாம். இல்ல நீங்க வேற எங்கயாவது ட்ரீட்மெண்ட் பார்துக்க விருப்பப்பட்டா டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம். சாய்ஸ் இஸ் யுவர்ஸ்!" என நிலமங்கையுடைய நிலையை அவளுக்கு விளக்கினாள் நிலா, டாக்டர் சத்யபாமாவின் முன்னிலையில்.


"இங்கயே ஆப்பரேஷன் பண்ணிக்கறேன் டாக்டர். பிரச்சனை இல்லை! பட்?" தயக்கம், பயம், எதிர்பார்ப்பு, ஏக்கம் எனக் கலந்து, நடுக்கத்துடன் ஒலித்த குரலில், "உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே?" என வேகமாகத் தெறித்தது நிலமங்கையின் கேள்வி.


நீண்ட நாட்கள் உயிர் வாழ வேண்டும் என்கிற ஆசையை அவளுடைய குரல் தாங்கி இருந்தது. நிலா மூத்த மருத்துவரின் முகத்தைப் பார்க்க, 'பேசு!' என்பது போல அவளை ஊக்கப்படுத்தினார் அவர்.


"நத்நிங் டு ஒரி மிசர்ஸ் நிலமங்கை! உங்க உயிருக்கு எந்த ஆபத்தும் வராது! அதுக்கு நான் உத்தரவாதம்! உண்மையிலேயே நீங்க ரொம்ப லக்கி தெரியுமா? பிரைன் ரைட் சைடுல பட்டிருக்கற இந்த அடி, லெப்ட்ல பட்டிருந்தா, பெரலைஸ்ட் ஆகியிருப்பீங்க. கடவுள் உங்க பக்கம்தான் இருக்காரு. பயப்படாதீங்க!" என்றாள் நிலா நம்பிக்கையுடன், அந்த நம்பிக்கையை அவளுக்குள்ளும் செலுத்தியவாறு.


அந்த நம்பிக்கை அவளது செவிவழி புகுந்து, மூளையை அடைந்து அவளது கண்களில் வழிந்து, திரும்பவும் நிலாவிடமே வந்து சேர்ந்த்து. 'இவள் இந்த நிலையை எளிதில் கடந்து வருவாள்!' என எண்ணிக்கொண்டாள் நிலா.


***


நேரம் கடத்தாமல், அறுவை சிகிச்சைக்கு அவளைத் தயார்ப்படுத்தும் வேலைகளை தொடங்கினர். சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவளுடைய கூந்தல் மழிக்கப்பட்டு, அதன் பின் மயக்கவியல் மருத்துவர் வந்து அவளைப் பரிசோதனை செய்தார்.


என்னதான் துணிவுடன் இருக்க முயன்றாலும், அச்சம் எழத்தான் செய்தது நிலமங்கைக்கு. அவளைப் பரிசோதிக்க அங்கே வந்த நிலாவுடைய கையைப் பிடித்துக்கொண்டவள், அங்கே ஓரமாக இருந்த அவளது லேப்டாப் பேக்கைக் காண்பித்து, "இதுல எங்க வீட்டுப் பத்திரம், சாவி எல்லாம் இருக்கு. எனக்கு ஏதாவது ஆகிட்டா இதையெல்லாம் பிரபாகிட்ட..." என அவள் சொல்லி முடிப்பதற்குள் அவளைத் தடுத்த நிலா, "அதெல்லாம் ஒண்ணும் ஆகாது, ப்ளீஸ் இப்படியெல்லாம் பேசாதீங்க!" என்று சொல்ல,


கண்களில் கண்ணீர் கோர்க்க, "எனக்கு என்னோட அம்மா, அப்பா, கூட பிறந்தவ எல்லாருமே இருக்காங்க! எனக்கு என் பிரபா கூட ரொம்ப நாள் வாழணும்னு நிறைய ஆசை! ஆனா அவர் எங்க இருக்காருன்னே தெரியல! நான் இப்ப அனாதையா இருக்கேன்!" என அவள் வருந்த,


"நீங்க கவலைப்படாதீங்க நிலா! உங்க அம்மா அப்பாவ நேர்ல போய் பார்த்து, அவங்கள இங்க அழைச்சிட்டு வரேன்! நீங்க கண் விழிக்கும் போது, அவங்க உங்க கண் முன்னால நிப்பாங்க பாருங்க. அதுக்கு நான் காரன்டீ!" என ஆதரவுடன் சொன்னாள் நிலா.


அந்த வார்த்தைகளை நிரப்பிக்கொண்டு அறுவை சிகிச்சைக்குச் சென்றாள் நிலமங்கை.


டாக்டர் சத்யபாமாவின் பணி நேரம் முடிந்து ஒரு மணிநேரம் கடந்திருந்தது. அவர் வீட்டிற்குச் செல்ல முனைய, நிலமங்கைக்கு அந்த அறுவை சிகிச்சையைச் செய்யும் திறனும் அனுபவமும் அன்று பணியிலிருந்த எவருக்குமில்லை. அந்த நிலையில் ஒரு உயிரை விட்டுச்செல்ல அவருக்கும் மனமில்லை. எனவே தானே அந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.


சில மணிநேரங்கள் தொடர்ந்த அவரது பணியை வழக்கம் போல வெற்றிகரமாக முடிக்கவும் செய்தார்!


நிலாவும் உடனிருந்து அவருக்கு உதவி செய்தாள். தலையிலிருந்து எடுக்கப்பட்ட அந்த மண்டையோட்டின் பகுதியை வயிற்றில் வைத்து, அதைத் தைத்து கடைசி தையலைப் போட்ட நொடி, இரத்தக்கறை படிந்த கையுறையுடன் கட்டை விரலை நிமிர்த்திக் தன் வெற்றியைப் பகிர்ந்தார் சத்தியபாமா. உண்மையிலேயே மெய் சிலிர்த்துதான் போனது நிலாவுக்கு.


அறுவை சிகிச்சை அறைக்குள் அணியும் தொப்பி, அங்கி, முகத்தை மூடிய முகக்கவசம் என அனைத்தையும் அணிந்து, அவரது கண்கள் மட்டுமே தெரிந்தது. அதில் அளவுகடந்த பெருமிதம் நிரம்பி வழிந்தது.


'எந்தவித சுய லாபம் எதிர்ப்பார்க்காம, வியாபாரமா இல்லாம, ஒரு உயிரை காக்கும் கடமையா நினைச்சு சக்ஸஸ்ஃபுல்லா நாம செஞ்சு முடிக்கும் ஒவ்வொரு ஆப்பரேஷனும் கடவுளுக்குப் பக்கத்துல நம்மள கொண்டுபோய் நிறுத்தும்!'


அவர் எப்பொழுதும் உள்ளத்திலிருந்து சொல்லும் வார்த்தைகள், அந்த நொடி அவளது செவிகளில் ஒலிப்பதுபோல் தோன்றியது. நிறைவாக உணர்ந்தாள் நிலவழகி.


***


சத்யபாமா வீட்டிற்குக் கிளம்பிவிட, மற்ற நோயாளிகளைக் கவனிக்கத் தொடங்கினாள் நிலா.


விடியற்காலை ஐ.சி.யுவிற்கு மாற்றப்பட்டாள் நிலமங்கை. பணி நேரம் முடிந்ததும், வென்டிலேட்டரில் மயக்க நிலையிலிருந்தவளை வந்து பார்த்துவிட்டு, அவள் நல்ல உடல் நிலையுடன்தான் இருக்கிறாள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அங்கிருந்து தனது ஸ்கூட்டியில் கிளம்பி நிலமங்கையின் வீட்டை நோக்கிச் சென்றாள் நிலா, அவளிடம் சொன்ன சொல்லைக் காப்பாற்ற.


ஆனால் அவளைப் பெற்றவர்கள், கொஞ்சமும் இறங்கி வராமல் போகவே, அந்தத் தோல்வியுடன் வீட்டிற்குப் போக விரும்பாமல், அந்தப் பெண் கண் விழிக்கும்போது அங்கே அவளுக்கு அறிமுகமான தான் ஒருத்தியாவது உடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மருத்துவமனைக்கே திரும்பினாள் நிலா.


சூறைக் காற்றுடன், இரவு முழுதும் கொட்டித் தீர்த்த மழையின் காரணமாக, அந்தப் பகுதி முழுவதும் பலமணி நேரமாக மின்சாரம் தடைப் பட்டிருந்தது.


மின்தூக்கியைப் பயன்படுத்த இயலாமல், ஐந்தாவது தளம் வரை நடந்தே படிகளைத் தாண்டியவள், நரம்பியல் மருத்துவத்திற்கான சிறப்பு அவசர சிகிச்சைப் பிரிவை அடைந்தாள்.


நிலமங்கையை வைத்திருந்த வென்டிலேட்டரை நெருங்க நெருங்க, மூளைக்குள் அடித்த அபாய மணியில் அவளது வயிற்றில் பய அமிலங்கள் சுரந்தன.


அருகிலிருந்த மற்ற வென்டிலேட்டர்கள் எல்லாம் அதன் 'பேக் அப்' உதவியுடன் இயங்கிக் கொண்டிருக்க, நிலமங்கையைப் படுக்க வைக்கப்பட்டிருந்த வெண்டிலேட்டர் மட்டும் தனது கடமை தவறி மொத்தமாகச் செயல் இழந்துபோய் மரணித்திருந்தது, அதிலிருந்தவளையும் கொன்று?!


சுக்கல் சுக்கலாக உடைந்துபோனாள் நிலா!


அதற்குள் விவரம் அறிந்து அங்கே ஓடிவந்தார் பணிக்கு வந்திருந்த சத்யபாமா, இன்னும் சில மருத்துவர்கள் மற்றும் சில நிர்வாக அலுவலர்கள் பின்தொடர.


நிலாவை அங்கே கண்டு அதிர்ந்தவர், அந்த வென்டிலேட்டரை நெருங்கி அதன் உண்மை நிலையை உணர்ந்துகொண்டார்.


அதிர்ச்சியிருந்து தன்னை மீட்டுக்கொண்ட நிலா, "மேம்! திஸ் இஸ் அன் ஃபேர்! இது இங்க இருக்கறவங்க அலட்சியத்தால நடந்த கொடூரம்!" எனக் கோபத்துடன் கத்தவும்,


அவளை இழுத்துக்கொண்டு அருகிலிருந்த செவிலியர் அறைக்குள் சென்றவர், "நிலா! இப்ப நீ எதுவும் பேசாதடா! இந்த ஒரு வெண்டிலேட்டர் மட்டும்தான் ஃபெயில் ஆகியிருக்கு. ஆனா ட்ரீட்மெண்ட் பலனில்லாம இன்னும் நாலு டெத் நடந்திருக்கு. இதை எப்படியோ தப்பா புரிஞ்சிட்டு, அவங்க சொந்தக்காரங்க எல்லாரும் சண்டைக்குக் கிளம்பிட்டாங்க! நிலைமை கை மீறிப் போய்ட்டு இருக்கு! நீ பேசாம வீட்டுக்குப் போ! பிரச்சன வராம நான் பார்த்துக்கறேன்!" என்றார் அவர் நிலாவிடம் விளக்கமாக.


"மேம்! எப்படி உங்களால இந்த மாதிரி பேச முடியுது! நீங்கதான அந்தப் பொண்ணுக்கு சர்ஜரி பண்ணீங்க? அவ சாக வேண்டியவளே இல்லயே! உங்களுக்கே அது தெரியும் இல்ல! அந்த வெண்டிலேட்டர் மெயின்டெனன்ஸ் சரியில்லாததாலதான அவ செத்துப்போனா? அதைத் தினமும் சரியா செக் பண்ணலதான! என்னால தாங்க முடியல! அவளோட சாவுக்கு நியாயம் கிடைக்கணும் மேம்! நாம இதை மூடி மறைக்க கூடாது!"


கதறினாள் நிலா!


இன்னும் சில வருடங்களில் பணி ஓய்வு பெரும் நிலையில் இருக்கிறார் சத்யபாமா! விரைவில் 'டீன்' பதவி வேறு அவருக்குத் தயாராக இருக்கிறது.


இந்தப் பிரச்சனையில், அவர்களுடைய நிர்வாகத்திற்கு எதிராகச் செயல்பட்டால், அது அவருக்கு மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்


மேலும் அவருடைய திறமையை முன்னிறுத்தி, பல தனியார் மருத்துவமனைகள் அவருக்குச் சிவப்புக்கம்பளம் விரித்துக் காத்திருக்கின்றன. பணத்திற்காக இல்லை என்றாலும் கூட, அவர் கொண்ட தொழில் பக்தி அவரை இதிலிருந்து வெளியேற விடாது.


அவர் இந்த விஷயத்தில் நிலா சொல்வதுபோல் நடந்தால், அவருடைய கடந்த காலத்தில் அவர் பெற்ற நற்பெயரும், நிகழ்கால நிம்மதியும், எதிர்கால நம்பிக்கையும் சின்னாபின்னமாகிப்போகும். அரசியல் சுழலில் சிக்கி அவர் அவமானங்களைச் சந்திக்க நேரும்.


அவர் உயிராக நேசிக்கும் மருத்துவ பணியையே கூட செய்ய முடியாமல் போனாலும் போகும். கிட்டத்தட்ட நிலாவின் நிலைமையும் அதேதான்.


தன் சூழ்நிலையை விளக்கியவர், "நான் இதுபோல நிறைய பார்த்துட்டேன், நிலா! ப்ளீஸ்டாம்மா! புரிஞ்சிக்கோ! நான் உன் நன்மைக்காகவும் தான் சொல்றேன்! கொஞ்ச நாள் லீவ் போட்டுட்டு வீட்டுல இரு! இந்தப் பிரச்சினைகளை மறந்துட்டு மறுபடியும் ஜாயின் பண்ணு!" என அவளிடம் கெஞ்சலுடன் மன்றாடினார் அந்தக் கம்பீரமான பெண்மணி!


"சத்தியமா என்னால முடியாது! என் மனசாட்சியே என்னைக் கொன்னுடும்!" சொல்லிக்கொண்டே கதறிய நிலாவைத் தேற்றும் வகை அறியாது திகைத்தவன், அவளை இழுத்து, அவளது முகத்தைத் தன மார்பினில் அழுத்தி, ஆதரவாக அவளை அணைத்துக் கொண்டான் முகிலன்!


அவளுடைய கண்ணீர் அவனுடைய இதயத்தை நனைத்தது!



0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page