top of page

Azhage Sugamaa?! 3

Updated: 4 days ago

முகில்நிலவு 3


முகிலனுடைய குரலில் தூக்கம் நன்றாகக் கலைய, அவனுடைய முகத்தைக் கூர்ந்து பார்த்தவள், "ஆஆஆஆ!" என்று சத்தமாகக் கத்தியவாறு எழுந்து உட்காரவும், "ஷு! எதுக்கு இப்படிக் கத்தி எனர்ஜிய வேஸ்ட் பண்ற! வாய மூடு!" என்றான் அவன் அதட்டலாக.


"பூட்டி இருக்கற வீட்டுக்குள்ள எப்படி வந்தீங்க? ஏன் வந்தீங்க? ஒரு பொண்ணு தனியா இருக்கும் போது இப்படிச் செய்ய உங்களுக்கு எவ்ளோ தெனாவெட்டு இருக்கணும்? இதுல என்னை வேற மிரட்டறீங்களா நீங்க?" என எகிறத் தொடங்கினாள் நிலா.


"இதே மாதிரி கத்தி, கலாட்டா பண்ணிட்டு இருந்த வை, இங்கயே ஒரு சிறப்பான, தரமான சம்பவத்தை நீ பார்க்க வேண்டியதா இருக்கும்! அப்பறம் உன் இஷ்டம்!" என அவன் விஷமமாகச் சொல்ல, அதில் அதிர்ந்தாள் நிலா.


மேலும் அந்தத் தனிமை வேறு அவளை மிரட்டவும், "என்ன… என்ன... என்ன செய்வீங்க?" என உள்ளே போன குரலில் அவள் கேட்க,


'உன்னை வெச்சிட்டு, இப்ப ரொமான்ஸா பண்ண முடியும்?!' எனக் கடுப்புடன் மனதிற்குள் நினைத்தவன், "ஒரே அறை! அவ்வளவுதான்" என்றவன், "தெரியுமா? ரெண்டு மாசத்துக்கு முன்னால, ஏழு அடில ஒருத்தன், பக்கா ட்ரைன்ட் ஆர்மி ஆளூ, என் வேலைய முடிக்க விடாம டிஸ்டர்ப் பண்ணான், இந்தக் கையால ஒரே ஒரு அடிதான்!” எனத் தன் கையைத் தூக்கிக் காண்பித்தவன், “அப்படியே சுருண்டு விழுந்தவன், அதோட நான் சென்னை வர வரைக்கும் கூட எழுந்திருக்கலன்னு கேள்வி பட்டேன். எப்படி வசதி? நான் சொல்றத எதிர்த்து பேசாம கேட்ப இல்ல?” என மிரட்டலாகவே சொல்லிவிட்டு,


“டென் மினிட்ஸ் டைம் தரேன், அதுக்குள்ள ரெஃப்ரஷ் ஆகிட்டு வா! நோ மோர் ஆர்க்யூமென்ட்!" என முடிக்க, அவள் முகத்தில் பீதியின் சாயல் நன்றாகவே தெரிந்தது.


அவனுக்கே அவளைப் பார்க்கப் பாவமாகத்தான் இருத்தது. ‘ஆனாலும் உன்னை கரக்ட் பண்ண இந்த மாதிரி சர்ஜிகல் அட்டாக்ஸ் எல்லாம் தேவைதான் போடி!’ என எண்ணிக்கொண்டான் முகிலன்.


அவனுடைய மிரட்டல் கொஞ்சம் வேலை செய்ய, ஏதோ முணுமுணுத்துக்கொண்டே அவளது அறைக்குள் நுழைந்து, கதவைத் தாழிட்டுக்கொண்டாள் நிலா.


அவன் சொன்னது போல் சரியாக பத்து நிமிடத்தில், குளித்து, ஒரு ஷார்ட் டாப், லாங் ஸ்கர்ட், அணிந்து, மொத்த கூந்தலையும் தூக்கிக் கொண்டையாகப் போட்டவாறு, நெற்றியில் சிறிய பொட்டு வைத்து, முத்து முத்தாகத் தண்ணீர் முகத்தில் சொட்ட, அங்கே வந்த நிலா, தோரணையாகக் கால் மேல் கால் போட்டு, கைப்பேசியைக் குடைந்தவாறு, வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்திருந்த முகிலனை, கண்களாலேயே எரித்தவாறு, சமையல் அறை நோக்கிப் போனாள்.


எளிமையான அவளுடைய அழகில் சில நொடிகள் தன்னை மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், பின்பு அவளை பின் தொடர்ந்து போனான் முகிலன்.


அங்கே தயாராக இருந்த காலை உணவைப் பார்த்து விழி விரித்தவள், "நீங்களா செஞ்சீங்க!" என வியப்புடன் முகிலனைப் பார்த்துக் கேட்கவும், "பின்ன! உன்னை மாதிரி தூங்கு மூஞ்சியை கட்டிக்கப்போறவனுக்கு இது கூடச் செய்ய தெரியலன்னா அவனோட கதி என்ன ஆகும்!" என அவன் கேட்க, அதில் முகம் கசங்கியவள், "மரியாதையா வெளியில போயிடுங்க! இப்படியெல்லாம் பேசினா எனக்குப் பிடிக்காது!" என்றாள் காட்டமாக.