top of page

Azhage Sugamaa? 1

Updated: 4 days ago




முகில்நிலவு - 1


சிலுசிலுவென வீசும் மார்கழி மாத குளிர் காற்றில் நிலமங்கை சில்லிட்டுப் போயிருக்க, அவளது தோழியான நிலவழகி, முகில்களுக்குள் மறைந்திருந்து அவளுடன் கண்ணாம்மூச்சி விளையாடிக் கொண்டிருந்தாள்.


இயற்கையின் வனப்பையெல்லாம், நகர மயமாக்கல் எனும் தன் கோரப்பசிக்கு இரையாக்கி நாளுக்கு நாள் விரிந்து கொண்டிருக்கும் சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருபது தளங்களைத் தொட்டு வளர்ந்திருந்தது ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு.


அதன் மொட்டை மாடியிலிருந்து பார்க்க, தொலைவில் தெரிந்த குன்றுகளெல்லாம் நிலமடந்தை வாரி வழங்கிக் கொண்டிருந்த கடுங்குளிரைத் தாங்கமாட்டாமல் பச்சைப் போர்வையால் தம்மை முழுவதுமாகப் போர்த்தியிருந்தன.


அந்த முன்னிரவு நேரத்திலும் கூட வினோதமாகக் குரல் எழுப்பியபடி உயரப் பறந்து எங்கோ சென்றது பெரிய உருவம் கொண்ட நீர் வாழ் பறவை ஒன்று. மின்சாரத்தை விழுங்கி, இரவைப் பகலாகச் சித்தரித்து விளக்குகள் சிந்திக்கொண்டிருந்த செயற்கை ஒளியில், பாவம் அது குழம்பிப்போயிருக்கக் கூடும். அங்கே சூழ்ந்திருந்த அமைதியைக் கிழித்ததுப் படபடக்கும் அதன் சிறகின் ஓசை.


ஆனால் இவை எதையுமே கருத்தில் கொள்ளாமல், ஏறெடுத்தும் பாராமல், இரசிக்கவும் மனமின்றி கண்களை இறுக மூடிக்கொண்டு, இருபதாம் தளத்தில் அமைந்திருந்த அந்த மொட்டைமாடியின் கைப்பிடி சுவரின் மேல், தன் உயிரை இழுத்துப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள் அந்த நிலவினைப் போன்ற அழகி! நம் நாயகி நிலவழகி.


ஒவ்வொரு விரலாய் நீட்டி எண்ணியவாறே, அவள் மனதிற்குள், 'த்ரீ! டூ! ஒன்! ஜம்ப்!' என்று சொன்ன அடுத்த நொடி தடால் என்ற சத்தத்துடனும் ‘ஆஆஆஆ!’ என்ற அலறலுடனும் கீழே விழுந்திருந்தாள்.


அடுத்த விநாடியே, 'உயிர் போற அளவுக்கு வலிக்கும்னு நினைச்சோம்! அட! அவ்வளவா வலிக்கலையே! ஈவன் ஹார்ட் சர்ஃபேஸ்ல விழுந்த மாதிரி கூட தெரியல! மெத்துமெத்துன்னு சாஃப்டா இல்ல இருக்கு! நாம உண்மையிலேயே செத்துட்டோமா? இல்ல உயிரோட இருக்கோமா?' எனப் பல விதமான ஐயங்கள் மனதைக் குழப்ப, பயத்தில் கண்களையும் திறவாமல், அப்படியே விழுந்த நிலையிலேயே அவள் கிடக்கவும், தன்னைச் சமாளித்துக் கொண்டு, தன்னுடன் சேர்த்து அவளையும் தூக்கி நிறுத்தியவாறு, தானும் எழுந்து நின்றான் கார்முகிலன் என்ற பெயர் கொண்ட வசீகர இளைஞன் - நமது நாயகன்.


நிலவொளியில் அவளது முகம் பொன்னென ஜொலிக்க, அவனுக்கு மிக அருகில் கண் மூடி நின்றிருந்த அவளது தோற்றம், கல்லில் செதுக்கிய சிற்பமாக அவன் மனதில் பதிந்து போனது.


'லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்னு சொல்லுவாங்களே, இவளைப் பார்த்த உடனே அப்படி ஒரு ஃபீல் வந்துதே எப்படி?' என்ற யோசனையில் அவன் நிற்க, முதலில் ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தவள், எதிரில் நின்று கொண்டிருந்த நெடியவனைக் கண்டதும், விழிகளை முழுவதுமாக விரித்து, பயத்தில் அரள மிரள நிற்கவும், அவளது நிலை கண்டு எழுந்த சிரிப்பை அடக்கியவனாக, அவளைப் பார்த்துக் கேட்டான், "ஆர் யூ ஓகே பேபி?!"


அவள் வெளிப்புறமாகக் கீழே விழுவதற்குப் பதிலாக, உட்புறமாக, அதுவும் அவன் மேலேயே விழுந்திருந்தது புரியவும், அதுவும் அவளை அவன்தான் இழுத்துத் தள்ளியிருக்கிறான் என்பது சர்வ நிச்சயமாக அவளுக்கு விளங்கவும், தான் இன்னும் சாகவில்லை, உயிருடன்தான் இருக்கிறோம் என்கிற மமதையில், "அறிவில்ல! மேனர்ஸ் இல்ல! ஒரு பொண்ணு கஷ்டப்பட்டு சாக ட்ரை பண்ணா, இப்படித்தான் வந்து உயிரை வாங்குவீங்களா? யாரு சார் நீங்க? இந்த உலகத்தையே காக்க வந்த மார்வெல் அவெஞ்சர்னு உங்களுக்கு நினைப்பா?!" எனக் குஷி பட ஜோதிகா பாணியில் அவனிடம் அந்த நிலா முகத்தழகிப் பொரிந்து தள்ளவும்,


"எனக்குப் புரிஞ்சு போச்சு; யூ ஆர் நாட் அட் ஆல் ஓகே! யூ ஆர் மேட்! கம்ளீட்லி மேட்! அண்ட் அஃப்கோர்ஸ் அ லவ்வபுல், பியூட்டிஃபுல் மெஸ்மரைசிங் மேட்! ஐ லைக் யூ பேபி!" என்று சொல்லிக்கொண்டே, அதுவரை மிக முயன்று அடக்கி வைத்திருந்த சிரிப்பெல்லாம் பீரிட்டுக் கிளம்ப, சத்தமாகச் சிரிக்கத் தொடங்கினான் முகிலன்.